வேங்குழல் 29

அருவி அதிர்ந்து போய் தன் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்து, மின்னல் வேகத்தில் தன் முன்னால் இருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“யார் இவன்? எங்கோ பார்த்தது போலிருக்கே?” என்று யோசித்தாள்

 

முரளி கிருஷ்ணா சிலையாகும் போது யாதவனின் நிறத்தில் இருந்ததாலும் கருமை நிறத்தில் கற்சிலையாக இருந்ததாலும், இப்போது அவனின் சிவந்த நிறம் அவளை குழப்பியது. சிலையாக இருந்தவன் தன் மணாளனாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டியவளுக்கு தன் முன்னால் சிலையாக இருந்தவன் சிவந்த நிறத்தில் இருப்பதால் அவளால் இனங்காண முடியவில்லை.

 

“யார் நீங்க? எதுக்கு என் கழுத்துல தாலி கட்டினீங்க?” என்று ஆத்திரத்துடன் வெடித்தாள்.

 

முரளி கிருஷ்ணா அமைதியாக அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான். அவனை பார்த்து அவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு இப்போது குழப்பம். மாரியும் அவன் சகாக்களும் பிரச்சனை செய்த அன்று அவள் அவனுடைய சிலையை அணைத்து ஆதரவு தேடியது அந்த நேரத்துக்கு தேவைப்பட்ட ஆறுதலா? நான் அவசரப்பட்டு விட்டேனா?  செஞ்ச பாவத்தை எப்படி தீர்க்க போகிறேனா தெரியல, மறுபடியும் என்னோட அவசரத்தால இன்னொரு பாவத்தை சுமக்கணுமா?

 

செல்விக்கு வேணி போன் செய்து விஷயத்தை சொன்னதும், அவர் வேலுவையும் வெற்றிவேந்தனையும் அழைத்து விஷயத்தை கூறி, உடனே அலுங்காநல்லூர் போக வேண்டும் என்றார். தூக்க கலக்கத்தில் இருந்த முரளிக்கு செல்வி பேசியது அரைகுறையாக காதில் விழுந்தது. அலங்காநல்லூரில் அருவியை பற்றி செல்வி பேசவும் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

 

தலையில் கைவைத்துக் கொண்டு ‘அருவியை எப்படி மறந்தேன்? நான் சிலையா இருந்த ஒன்றரை வருஷத்தை கொஞ்சமாவது உயிர்ப்புடன் கடக்க காரணமா இருந்தது அவ தானே? அவளுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்’ என்று யோசித்தபடி எழுத்து ஹாலிற்கு வந்து செல்வியிடம் விசாரித்தான்.

 

“செல்விம்மா, என்ன பேசிட்டு இருக்கீங்க?”

 

“முரளி, என்னோட உயிர்தோழி பொன்னியோட மகளுக்கு பிரச்சனை, அவ பேரு அருவி” என்று ஆரம்பத்திலிருந்து  தொடங்கி சற்று முன் வேணி பேசியது வரை சொல்லி முடித்தார்.

 

முரளிக்கு மனம் துணுக்குற்றது. ஒரு வேளை என்னை தேடி சுடுகாட்டுக்கு போயிருப்பாளோ? அதனால எதாவது பிரச்சனையாகி இருக்குமோ என்று சரியாக கணித்தான்.

 

“அம்மா இருங்க நானும் வரேன்” என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

 

முரளி தானாக முன்வந்து வருவதாக சொன்னதால் அவனை யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. வெற்றிவேந்தன் வேலு, செல்வி இவர்களை காரில் அமர வைத்து முரளி கிருஷ்ணாவே வண்டியை வேகமாக செலுத்தினான். அருவிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது, சிலையாக இருந்த போது தான் அவளை காப்பாற்ற முடியவில்லை. இப்போது தான்  அவனால் அவளை காப்பாற்ற முடியுமே என்று யோசித்தபடி காரை செலுத்தினான்.

 

வரும்வழியிலேயே செல்வி அருவியின் திருமணத்தை பற்றி புலம்பிக் கொண்டே வந்தார். “அவளை அப்பவே கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேன், என் பேச்சை கேட்டிருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா?”

 

“செல்வி, இப்போ எதுவும் ஆகிடல. அருவியை நம்ம கூடவே அழைச்சிட்டு போயிருவோம்” என்று சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.

 

நால்வரும் காரில் இருந்து இறங்கும் போது தான் நாட்டாமைக்காரர் அருவியை விசாரித்துக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் சுடுகாட்டுக்கு எதுக்கு போனே என்று விசாரித்ததும், அதற்கு வேணி சொன்ன பதிலையும் கேட்டு முரளிக்கு இது தன்னால் வந்த பிரச்சனை தான் என்று உறுதியானதும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

 

அதே சமயம், அவளை பைத்தியம் என்றும் ஊரை விட்டு துரத்த வேண்டும் என்று ஆளாளுக்கு பேசவும், அவர்கள் வாயை தன் செய்கையால் அடக்க வேண்டும் என்று அந்த கணம் அவனுக்கு தோன்றியது. அருவியை கட்டிப்போட்டிருந்த அரசமரத்தில் கீழே வரிசையாக நாகம்மன் சிலையும் அதில் மஞ்சளோடு கட்டியிருந்த தாலியும் கண்ணில் பட்டது. ஏதோ ஒரு விசை அவனை செலுத்தியது போல இருந்தது.

 

நேராக அவள் எதிரே சென்றவன், அந்த சிலையின் முன்னே குனிந்து அதன் மேலிருந்த தாலியை கையில் எடுத்தான். அப்போது தான் பேசிக்கொண்டிருந்த ஊர்மக்கள் அனைவரும் பேச்சற்று ஸ்தம்பித்து போய் அவனை பார்த்திருந்தனர். வெற்றிவேந்தனுக்கும் வேலுவுக்கும் கூட குழப்பம். தலையை கவிழ்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அருவி அங்கே நிலவிய அசாதாரண அமைதியை கண்டு நிமிர்ந்து பார்த்து சுதாரிக்கும் முன்னரே அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்.

 

அவனுக்கு அவள் மேல் பரிவும் பாசமும் இருந்தது, ஆனால் அது காதலா என்று தெரியாது. அவளுக்கும் அவன் மேல் விருப்பமா என்று உறுதியாக தெரியாது. ஆனால் ஏதோ ஒரு விசை அவனை செலுத்தியது போல இருந்தது. தாலிக் கட்டிவிட்டு அவளின் எதிர்வினையை பார்த்த போது தான் நிதர்சனம் உறைத்தது.

 

‘யார் நீனு கேக்கறாளே, என்னை யார்னு அவளுக்கு அடையாளம் தெரியலையா? ஒரு வேளை என்னை பற்றிய முழுவிவரமும் தெரிந்தால் இன்னும் என்னை வெறுத்து விடுவாளே, அதற்குள் எதற்கு அவசரப்பட்டு அவள் கழுத்தில் தாலி கட்டினேன், யாரோ என்னை ஆட்டுவித்தது போல இருந்ததே’ என்று யோசித்தான்.

 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்.

 

என்று புல்லாங்குழலை தன் கன்னத்தில் தட்டியபடி மாய புன்னகை உதிர்த்தான் அந்த மாயோன். தன் இளம் வயது தோழிக்கு பிரச்சனை என்றதுமே அப்போதே அந்த யாதவன் மாயவனாக அங்கே ஆஜராகி இருந்தான்.

 

முரளியிடம் பதில் இல்லாமல் போகவும் அருவி மீண்டும் கோபமாக “ஐயா நாட்டாமைக்காரரே இவ்வளவு நேரம் என்னை ஒரு பொண்ணுனு கூட பார்க்காம ஊர் மத்தியில கட்டிப்போட்டு நியாயம் பேசின பெரியவரே, இப்போ உங்க எல்லார் முன்னாடியும் இந்த ஆள் வந்து என் கழுத்துல தாலிய கட்டி இருக்காரு, இதுக்கென்ன தீர்ப்பு சொல்ல போறீங்க” என்று கத்தினாள்.

 

அதற்குள் செல்வி கூட்டத்தில் நுழைந்து உள்ளே வந்து அருவியின் எதிரே வந்தார். “முரளி அருவியை கட்டிப்போட்டிருக்கிற கயிற அவுருப்பா மொதல்ல” என்றவர் அவளை அழுத்தமாக பார்த்து, “அருவி, நான் உன்கிட்ட சொல்லிட்டு போனது நினைவிருக்கா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு உனக்கு இரண்டு மாசம் டைம் தந்தேன். அப்படி இல்லனா நான் கொண்டு வர்ற மாப்பிள்ளையை தான் நீ கட்டணும்னு சொன்னேன். 

 

மூணு மாசமாகியும் உன்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல, அதனால என் மூத்த மகனை உனக்கு கட்டலாம்னு வந்தோம். இங்கே நடக்கிற பிரச்சனையை பார்த்து என் மவன் உன் கழுத்துல இப்பவே தாலி கட்டிட்டான். எனக்கு உன் வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமை இருக்குனு நீ நினைச்சா இந்த கல்யாணத்தை ஏத்துக்கோ. அப்படியெல்லாம் இல்லனா நீயே உன் கழுத்துல இருக்கிற தாலிய கழட்டி வீசிட்டு உன் வழியில போ, நான் தடுக்க மாட்டேன்” என்ற செல்வியை அதிர்ந்து பார்த்தது அருவி மட்டுமல்ல முரளிகிருஷ்ணாவும் தான்.

 

கடைசி நிமிஷம் வரை அவன் தாலிகட்ட போவது அவனுக்கே தெரியாத போது, செல்வி என்னவோ ஏற்கனவே பேசி முடிவு செய்தது போல பேசுகிறாரே என்று யோசனையாக பார்த்தான் முரளிகிருஷ்ணா. செல்வி கண்களால் அவனை பேசாதே என்று சைகை செய்தார். நிலைமையை சமாளிக்க இப்படி செய்கிறார் என்று புரிந்தது.

 

அருவியால் இப்போது செல்வியை எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அவள் ஆசைப்பட்டது நடக்கவில்லையே, அந்த கள்ளழகன் என்னை ஏமாற்றி விட்டான் என்று அழுது கரைந்தாள். அவன் தான் கள்ளசிரிப்புடன் அங்கே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறானே.

 

அருவி யாதவனை விரும்பியதை புல்லாங்குழலோடு லயித்திருந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்துக் கொண்டான், தன் இளம் பருவத்தில் தோழியாக இருந்தவளுக்கு தன்னால் துணையாக முடியவில்லையானாலும், தன் அண்ணனாவது கணவனாகட்டும் என்று தான் முரளியின் சிலையை அலங்காநல்லூரில் வைக்க ஏற்பாடு செய்தான். சென்ற பிறவியில் கிருஷ்ணா, ராதையை திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் தன் தோழிக்கு தன் நிழலுருவமான அயனை ராதையின் கணவனாக்கி இருந்தான். அது போல தான் இப்பிறவியின் தோழியான அருவிக்கு தன் அண்ணனை கணவனாக்க திட்டமிட்டான். அருவியின் தாய் இறப்பது ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்று, அதிலிருந்து அருவிக்கும் முரளிக்கும் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியிருந்தான்.

 

பெற்றவளின் வேண்டுதலுக்காகவும் கட்டியவளின் சாபத்தையும் மீறாமல் எந்த இரத்த பந்தமும் இல்லாத அருவியின் மனதில் முரளி என்ற சிலை மேல் ஈர்ப்பை கொடுத்தான். அவனுக்காக அவளை வேண்டிக் கொள்ளவும் செய்தான். அவள் வேண்டுதலுக்கு வரம் கொடுப்பது போல மலரை அவள் கையிலும் விழச்செய்தான். ஆசையை கொடுத்தவனும் அவனே, அந்த ஆசை நிறைவேற தன்னை நினைத்து வேண்ட செய்தவனும் அவனே, அதை நிறைவேற்றி கொடுப்பவனும் அவனே!

 

கள்வனின் சூது அறியாத அருவி அழுது கரைந்தாள், முரளிக்கோ அது இன்னும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவளை பார்த்துக் கொண்டே அவளை கட்டியிருந்த முடிச்சுக்களை அவிழ்த்தான். மனதை அழுத்திய குற்ற உணர்வில் அவனால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை.

 

வேலு பேச ஆரம்பித்தார், “ஒரு பொம்பளை பொண்ணை இப்படியா முச்சந்தில கட்டி அவமானப்படுத்துவீங்க? அவளுக்குனு யாருமில்லனு நினைச்சிட்டீங்களா? என்ன ஏதுனு விசாரிக்காம நீங்களே முடிவெடுத்தா எப்படி? அப்படியே அவ மேல சந்தேகம் இருந்தா, போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டியது தானே? அவளை கட்டி வைக்கிற அதிகாரம் உங்களுக்கு யாரு கொடுத்தா?” என்றார் குரலை உயர்த்தி

 

“வேலு விஷயம் என்னான்னு தெரியாம பேசாதே, இந்த பொண்ணு சுடுகாட்டுல இருக்கறத நானே என் கண்ணால பாத்தேன், என்னவோ சித்து வேலை செய்யறானு தோணுது, இத போலீஸ்ல சொன்னா நம்புவாங்கா?” என்றார் நாட்டாமைக்காரர்.

 

“அவ சித்து வேல செஞ்சதா எதை வச்சு சொல்றீங்க? நீங்களே கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க. சுடுகாட்டுக்கு போறது அப்படி என்ன கொல குத்தமா? பொன்னி இறந்த பின்னாடி தானே போக ஆரம்பிச்சா, கொஞ்ச நாள் போனா அவளே இது தான் நிஜம்னு வாழ தொடங்கியிருப்பா. அவ வயக்காட்டுக்கு நெருப்பு வச்சத நீங்க பாத்தீங்களா?” என்றார் வேலு கடுப்புடன்.

 

“நான் பாக்கல, ஆனா இந்த மாரியும் மாடசாமியும் பாத்து இருக்காங்க, என்ன மாரி பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? நடந்ததை சொல்லு”

 

“ஆமாங்க ஐயா, இந்த பொண்ணு வயக்காட்டுலயும், கொடவுன்லயும் நெருப்பு வச்சத நாங்க பாத்தோம்” என்றனர் கோரசாக, மாரிக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. ‘எவனோ காரில் இருந்து வந்தவன் பார்க்க சினிமா ஹீரோ போல செவப்பா இருக்கான், இவன் இந்த கருப்பி கழுத்துல தாலிய கட்டிட்டானே’ பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிந்தது.

 

“இல்ல அவன் பொய் சொல்றான்” என்றாள் அருவி சத்தமாக

 

“சரி வேலு சொன்னது போல போலீசையே வரவச்சு விசாரிக்க சொல்லுவோம்” என்று நாட்டாமைக்காரர் சொல்லிவிட இப்போது மாரியும் மாடசாமியும் திருதிருவென விழித்தனர்.

 

அதற்குள் வெற்றிவேந்தன் முன்வந்து, “எதுக்கு வீணா பிரச்சனை? யார் யாருக்கு எவ்வளவு நஷ்டமாச்சுனு கணக்கு கொடுங்க, எல்லாருக்கும் நானே செட்டில் பண்ணிட்டு போறேன்” என்றவர் வேலுவிடம் திரும்பி, “செல்வி, அருவி, முரளியை அழைச்சிட்டு இங்கிருந்து கிளம்பி போய் அழகர் கோயில்ல இரு, நான் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வர்றேன்” என்றார்.

 

முரளிகிருஷ்ணா அருவி என்ன சொல்ல போகிறாளோ என்று அவளையே பார்த்திருந்தான். வேலு அவளருகே சென்று, “ஆத்தா அருவி, கிளம்புத்தா, போகலாம்” என்றார்.

 

அவள் இறுக்கமான முகத்துடன் முடியாது என்பது போல பலமாக தலையசைத்தாள்.

 

முரளி தொண்டையை செருமிக் கொண்டு முதன் முறையாக அவளிடம் பேசினான், “உன்னை காப்பாத்தணும்னு ஒரு வேகத்துல உன் கழுத்துல தாலிய கட்டிட்டேன். உனக்கு பிடிக்கலனா இப்பவே கழட்டி போட்டுடு. நான் உன்னைய தொல்லை பண்ண மாட்டேன். இப்போதைக்கு நீ இங்கே இருக்க வேண்டாம். நானும் அப்பா கூடவே இருக்கேன். நீயும் செல்விம்மாவும் வேலு மாமா கூட போங்க” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

 

“தாலி கட்டிட்ட பின்னாடி அதுக்கு ஒரு காரணத்தை சொன்னா உடனே நான் ஏத்துக்கணும் இல்லனைா அதை கழட்டி போட்டுடுனு சுலபமா சொல்வீங்க, நானும் அதை கழட்டி போடணுமா?” என்று அவனை நேராக பார்த்து கேட்டாள். முதல் முறையாக ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான் முரளி. அந்த நேரத்திலும் அவளுடைய தைரியமான பேச்சு அவனை அசர வைத்தது. அம்மா இறந்து ஒத்தையில இருந்துட்டு எவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசறா?

 

அவனுடைய மெச்சுதலான பார்வையை கண்டு கொள்ளாமல், “நான் வரமாட்டேன்னு சொன்னது அதுக்காக இல்ல. என் மேல இப்படி ஒரு பழி போட்டு இருக்காங்க. இந்த பழியோட நான் இங்கிருந்து வரமாட்டேன்” 

 

உடனே முரளி திரும்பி மாரியிடம் வேகமாக சென்று அவன் சட்டைக் காலரை பிடித்து தலைக்கு மேலே உயர்த்தினான். “டேய் என்ன நடந்ததுனு உண்மையை சொல்லு, இல்லனா இங்கேயே உன் சங்கை அறுத்துறுவேன்” என்றான் உறுமலாக

 

உடனே மாடசாமி ஆர்பரித்தான், “ஹலோ யாருங்க நீங்க இடையில? எந்த ஊர்ல இருந்து வந்து, இங்க அதிகாரம் பண்றீங்க? அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து ஹீரோ ஆகறதுனா ஆகிட்டு போங்க, அதை நாங்க யாரும் கேக்கல. அதுக்காக எங்க ஊர்காரனை அசலூர்காரன் வந்து கைய வச்சா நாங்க சும்மா இருக்க மாட்டோம். என்னல சொல்றீங்க” என்று இளவட்டங்களை பார்த்து கேட்டான்.

 

உடனே அந்த ஊர் இளைஞர்கள் எல்லாம் ஆளாளுக்கு குரல் கொடுக்க, நாட்டாமையும், “தம்பி மொதல்ல மாரியை கீழே இறக்கி விடுங்க. சாட்சி சொன்னவனையே அடிச்சு மிரட்டுனா எப்படி?” என்று அவரும் பேச, வேலுவும் வெற்றிவேந்தனும் அவன் அருகில் வந்து “முரளி அவனை விடுப்பா பேசிக்கலாம்”

 

“அப்பா அவன்கிட்ட பேசினா எல்லாம் உண்மை வெளியே வராதுப்பா” என்றபடி தன் உயரத்துக்கும் மேலே தூக்கினான் முரளி.

 

“முரளி சொன்னா கேளு, பிரச்சனையை பெரிசாக்காதே, முதல்ல அவன் மேல இருந்து கையை எடு” என்று அதட்டினார் வெற்றிவேந்தன்.

 

எப்போதும் தந்தை பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவன், இப்போது வெற்றியின் அதட்டலில் தன்னிச்சையாக மாரியின் மேலிருந்த கையை எடுத்தான். வெற்றி முரளியின் கரத்தை பற்றி இழுத்து, “நீ அருவியை கூட்டிட்டு கிளம்பு, நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்”

 

“அதுக்கு முன்னாடி என்னைய கீழே இறக்கி விட்டுட்டு போய்யா” என்று அலறினான் மாரி.

 

அப்போது தான் தந்தை மகன் இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். முரளி தலைக்கு மேல் அவனை தூக்கி நிறுத்திய உயரத்தை விட, இன்னும் அதிக உயரத்தில் இருந்தான் மாரி.

 

“தம்பி என்ன பண்ணீங்க அவனை, கீழே இறக்கி விடுங்க” என்றார் நாட்டாமைக்காரர் அதிர்ச்சியுடன்

 

“நான் எதுவும் பண்ணல, இங்கே பாருங்க” என்று தன் இருகைகையும் உயர்த்தி காட்டினான் முரளி.

 

இப்போது மாடசாமியும் தானாக மெல்ல காற்றில் பறப்பது போல மாரிக்கு நிகராக மிதக்க தொடங்கினான். என்ன நடக்கிறது என்று அனைவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

ஆனால் முரளி கிருஷ்ணா மட்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். யாதவ் இங்கே வந்திருக்கிறானா? என்று யோசித்தவனின் உதடுகள் மெல்ல  “யாதவா” என்று அவன் பெயரை உச்சரிக்கவும் செய்தது.

 

அருவி, அழுவதை நிறுத்தி விட்டு ஆகாயத்தில் மிதந்துக் கொண்டிருந்த இருவரையும் பார்த்தாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் அருவியையும், மேலே தொங்கி கொண்டிருந்தவர்களையும் மாறி மாறி பார்த்தனர்.

 

மாரியும் மாடசாமியும் அதி வேகத்துடன் ஆகாயத்தை நோக்கி பறந்தனர், அதே வேகத்தில் கீழ் நோக்கி வீசப்பட்டனர். அந்த வேகத்தில் கீழே விழுந்தால் உடம்பு சுக்குநூறாக சிதறிவிடுமே என்று அனைவரும் அச்சம் கொண்டு காதுகளை தன் இரு கைகளால் மூடிக் கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டனர். கொஞ்ச நேரம் கடந்த பின்னரும் எந்த சத்தமும் வராததால் அனைவரும் கண்திறந்து பார்த்தனர்.

 

அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்கவில்லை, இருவரும் தரைக்கு சற்று உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் பயத்தில் உறைந்து போய் இருந்தார்கள். 

 

“இப்பவாவது உண்மையை சொல்லுங்க, நான் விட்டாலும் அவன் உங்கள விட மாட்டான்” என்றான் முரளி அழுத்தமான குரலில்.

 

“யாரு” என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்

 

முரளி கிருஷ்ணா தன் இருகைகளின் பெருவிரலையும் சுண்டு விரலையும் சேர்த்து புல்லாங்குழல் போல சமிக்கை செய்து யாதவ் கிருஷ்ணா என்று சொல்லாமல் சொல்ல அங்கிருந்த யாருக்கும் அவன் சொல்வது புரியவில்லை.

 

‘எனக்கு முன்னாடி பொறந்தவன் மூர்க்கனா இருந்தாலும், புத்திசாலியா தான் அதை மறுக்க முடியாது’ என்று முரளி கிருஷ்ணாவை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்த யாதவ், மாரியிடம் தன் சித்து விளையாட்டை தொடங்கி விட்டான். அவர்கள் அதி வேகமாக சுத்தும் ரங்கராட்டினத்தில் இருப்பது போல மேல போவதும் கீழே வருவதுமாக சுழன்று கொண்டிருந்தனர்.

 

ஒரு வழியாக அவர்களுக்கு நிதர்சனம் புரிந்து போக, “நாங்க உண்மையை சொல்லிடுறோம், எங்களை இறக்கி விடுங்க” என்று கத்தினர்.

 

அதன் பிறகு தான் அவர்கள் தரையை அடைந்தனர். பெரிய மூச்சுகளை அவசரமாக எடுத்து விட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர்கள் பேச தொடங்கினார்கள். “நாங்க சொன்னது எல்லாம் பொய், வயக்காட்டுக்கு நெருப்பு வச்சது நாங்க தான். அருவி சுடுகாட்டுக்கு போனதை பாத்துட்டு அவ மேல பழி போட தான் இப்படி செஞ்சோம். எல்லாரும் எங்களை மன்னிச்சுடுங்க”

 

நாட்டாமைக்காரர் எழுந்து விட்டார், இருவரின் சட்டையை இருகைகைளாலும் பிடித்துக் கொண்டு, “அடப்பாவிங்களா என்னடா சொல்றீங்க? உங்க பேச்சை கேட்டு நான் அந்த பொண்ணை இப்படி முச்சந்தில நிக்க வச்சிட்டேனேடா. அவளே பாவம் அம்மாவை தொலைச்சிட்டு அநாதையா இருக்கா, அவ மேல உங்களுக்கு என்னடா பகை, எதுக்கு அவளை பழிவாங்க நினைச்சீங்க?” என்றார் கோபத்துடன்.

 

“அது வந்து முதல்ல அருவிய கல்யாணம் கட்டிக்க கேட்டேன், என்னை வேணாம்னுட்டா, அப்புறம் அவளை நாங்க நாலு பேரும் அடைய முயற்சி பண்ணோம், எங்களை அடிச்சு துரத்திட்டா. அதான் இப்படி பண்ணோம்’ என்றவர்களின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் நாட்டாமைக்காரர். உடனே போலீசுக்கு போன் செய்து அவர்களை வரச்சொன்னார்.

 

செல்வி எதுவோ சொல்ல வருவதை உணர்ந்தவர், “செல்வி, எனக்கும் பொம்பளை புள்ளைங்க இருக்குது. இவனுங்க மேல வயக்காட்டுல நெருப்பு வச்ச கேஸ் இன்னும் வேறெந்த கேஸ் எல்லாம் இருக்கோ அதை போட சொல்றேன். அருவியை இந்த விஷயத்துல இழுக்க மாட்டேன்” என்றார்.

 

“இல்லைங்க ஐயா, நானே இவனுங்க மேல கம்ளெய்ண்ட கொடுக்கறேன், எனக்கு எதுவும் அவமானம் இல்ல. என்கிட்ட தப்பா நடக்க வந்த அவனுங்க தான் அசிங்கப்பட்டு களங்கப்பட்டு நிக்கணும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று அருவியின் வாயிலிருந்து நறுக்கு தெறித்தாற் போல வார்த்தைகள் வந்து விழ, முரளிக்கு கன்னத்தில் அறைந்தாற் போல வலித்தது. அந்த இடத்தில் இப்போது தானும் மாரியுடன் நிற்பதை போல உணர்ந்தான். அவனுக்கும் அவர்களுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்? உண்மை தெரிந்தால் அருவி அவனை ஏற்றுக் கொள்வாளா?

 

‘இத இப்ப யோசிச்சு என்ன பண்றது? ஒரு தப்பை செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். நடந்ததை மாத்த முடியாது தான் ஆனா நடந்தது எல்லாம் ஒரு காரணத்துக்காக தான். புல்லாங்குழலையும், யாதவ்விற்குள்ளே இருந்த யாதவனையும் வெளிக் கொண்டுவர முரளி கிருஷ்ணா என்பவன் ஒரு துருப்புச்சீட்டு. ஆனா அந்த துருப்பு கொஞ்சம் அதிகமாவே துள்ளிடுச்சு, அதுக்கான தண்டனையும் கொடுத்தாச்சு. இனியாவது புரிஞ்சு நடந்துக்குவேனு நம்பிக்கை இருக்கு’ என்று யாதவனின் குரல் முரளியின் காதிற்குள் அசரீரயாக கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் முரளி.

 

யாதவனின் மேலிருக்கும் மலரின் சுகந்ததையும் அதன் நறுமணத்தையும் அவனால் உணரமுடிந்தது. அவனை நேரடியாக பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் அதற்குள் மாயோன் மாயமாகி போயிருந்தான்.

 

போலீஸ் அதிகாரிகள் வந்ததும் அருவியும் கம்ளெய்ண்ட் எழுதி தந்தாள். மாரி, மாடசாமியுடன் இருந்த மற்ற இருவரையும் அரெஸ்ட் செய்து போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு செல்லும் வரை அந்த ஊரே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

 

கண்முன்னால் நடந்த அதிசயத்தை பார்த்த ஊர்மக்கள், அருவியை ஏதோ பெண் தெய்வமாகவே நினைத்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “அருவி உடம்புல அந்த காளியாத்தா வந்து இறங்கியிருக்கா, அதனால தான் அவ சுடுகாட்டுக்கு போயிருப்பா, அவ மேல பழிபோடவும் உக்கிரமாயிட்டா” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. கொஞ்ச முன்னாடி சூனியக்காரி என்று சொன்ன அதே வாய் தான் இப்போது அவளை காளியாத்தா என்று சொல்லிக் கொண்டிருந்தது.

 

அவர்கள் சென்றதும் நாட்டாமைக்காரர் அருவியிடம் கைக்கூப்பி மனதார மன்னிப்பு கேட்டார். “ஐயா, பரவாயில்லை விடுங்க, உங்க இடத்துல யாரா இருந்தாலும் அப்படி தான் நடந்திருப்பாங்க” என்று அவரை சமாதானம் செய்தாள் அருவி.

 

“அருவி, வீட்ல எதாவது முக்கியமானது இருந்தா எடுத்துக்கோ கிளம்பலாம்” என்றார் செல்வி.

 

“எங்கே அத்தே” 

 

“என்னடி தெரியாத மாதிரி கேக்கறே, நீ தான் என் மருமகளா வரணும்னு உங்கம்மா ஆசப்பட்டா. எப்படியோ அவளோட ஆசிர்வாதத்தால இப்ப தானாவே நிறைவேறி இருக்கு. கிளம்பு என்னோட” என்று செல்வி உரிமையுடன் அதட்டினார்.

 

மனம் சுணங்கினாலும் தனக்கு விதித்தது இது தான் என்று அமைதியாக வீட்டிற்கு சென்று, தன் உடைமைகளையும், அவள் அம்மாவின் போட்டோவையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். முரளி கிருஷ்ணா அவள் கையில் இருந்த பொருட்களை வாங்க அவளிடம் கையை நீட்டினான். 

 

அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் கொண்டு போய் வேலுவிடம் கொடுத்தாள். வேணியும் அருவியின் மற்ற தோழிகளும் அவளை கட்டிக் கொண்டு அழுதனர். ஒருவாறாக அனைவரும் சமாதானம் ஆகும் வரை முரளியின் குடும்பம் காத்திருந்தது. 

 

“அருவியும் நீயும் பின்னாடி அம்மா கூட உட்கார்ந்துக்கோங்க. நான் வண்டி ஓட்றேன்” என்று சொல்லி வேலு முரளியிடம் சாவியை வாங்கிக் கொண்டார்.

 

வெற்றிவேந்தன் முன்சீட்டில் அமர்ந்துக் கொள்ள, செல்விக்கும் முரளிக்கும் நடுவில் அருவி அமர வேண்டியதாயிற்று. முரளியின் தோள்கள் லேசாக அருவியின் தோள்களை உரசவும், அவள் உடனே தனக்குள் ஒடுங்குவதை பார்த்த முரளி சற்று அவளிடமிருந்து விலகி முன்பக்கமாக அமர்ந்து கொண்டான். கார் நேராக அழகர் கோயிலுக்கு சென்றது. வேலு கீழே இறங்கி இரண்டு முகூர்த்த மாலைகளை வாங்கி வந்தார். 

 

கோயிலுக்கு உள்ளே சென்றவர்கள் அங்கே கள்ளழகர் சன்னிதானத்தில் மீண்டும் முரளிகிருஷ்ணாவிற்கும் அருவிக்கும் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். அருவி கண்களில் வழியும் கண்ணீரை துடைக்காமல், கள்ளழகரை பார்த்து உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள். இறைவன் காலடியில்  இருந்த பூவை கொண்டு வந்து பூசாரி அவளிடம் நீட்ட, அவளுக்கு சித்திரை திருவிழா அன்று கையில் பூ வந்து விழுந்தது நியாபகம் வந்தது. சிலையாக இருப்பவன் எனக்கு கணவனாக வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டால் நீ யாருக்கோ என்னை கல்யாணம் செஞ்சு வச்சிட்டியே என்று தன் கோபத்தை அடக்க முடியாமல், வரம் கொடுத்தவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

கள்ளழகர் சிலை கள்ள சிரிப்புடன் அருவியை பார்த்துக் சிரிப்பது போல இருந்தது. முறுக்கிக் கொண்டு திரும்பி பார்க்காமல் கோயிலுக்கு வெளியே சென்று நின்றுக் கொண்டாள். அவள் முதுகுக்கு பின்னால் அந்த கள்வனின் கள்ளசிரிப்பு மேலும் விரிந்ததோ?

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top