அருவி தன் மூத்தமகனை தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாத செல்வி அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“எனக்கு எதுவும் சொல்ல தெரியல அத்தே, நான் கேக்கிற மாதிரி மாப்பிள்ளையை உங்களால கொண்டு வரமுடியாது” என்றாள் மெல்லிய குரலில்
“அப்படி யாருடி எங்களால கொண்டு வர முடியாத மாப்பிள்ளை? முன்னாடினா இந்த அத்தையால எதுவும் செஞ்சிருக்க முடியாது தான். ஆனா உங்க மாமா, அதான் என் புருஷன் ஜில்லா கலெக்டரையும் மந்திரியையும் கூட உனக்கு மாப்பிள்ளையாக்கிடுவாரு. என் மூத்த மகன் கல்யாணத்தை தான் பாக்க முடியல. உன் கல்யாணத்தையாவது செஞ்சு வச்சு கண்குளிர பாக்கணும்னு தோணுது. சொல்லு உனக்கு யார் மாப்பிள்ளையா வேணும்? டாக்டரா, இன்ஜினியரா, கவர்மென்ட் வேலை பாக்கறவரா, இல்ல அமைச்சரே வேணுமா சொல்லுடி, யாரு வேணும் சொல்லு”
‘இவங்க யாரும் வேணா சுடுகாட்டுல இருக்கற சிலை தான் மாப்பிள்ளையா வேணும்னு சொன்னா பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுவாங்களோ? ஏற்கனவே பெத்த பிள்ளைய பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்லி ஆளுங்கள வரவழைச்சதா வேலு அப்பா சொன்னாங்களே’ என்று பலமாக யோசித்தாள்.
“என்ன யோசிக்கிற அருவி, பதில் சொல்லும்மா” என்றார் வெற்றிவேந்தனும்
“எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க நான் யோசிச்சு சொல்றேன்”
“சரி இரண்டு மாசம் உனக்கு டைம், அதுக்கப்புறமா வருவோம், நீயே யாரையாவது கட்டிக்கறதா இருந்தா சொல்லு, கட்டி வைக்கிறோம். இல்லனா நாங்க சொல்றவனை கட்டிக்கணும், புரியுதா?”
அருவி குழப்பத்துடன் எல்லா பக்கமும் தலையசைத்தாள்.
“இங்கே பாரு அருவி, உன் அம்மா உயிர விடும்போது கண்டிப்பா என்னைய மனசுல நினைச்சிருப்பா, நான் உன்னை பாத்துப்பேன்னு தான் நிம்மதியா போயிருப்பா, நீயும் கொஞ்சம் அவளோட இழப்பில இருந்து மீண்டு வரட்டும்னு தான் ஒரு வருஷமா உன்னை தொல்லை செய்யாம விட்டேன். இனி அப்படி விட முடியாது. உண்மையிலேயே என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கறதா இருந்தா, நான் சொல்றமாதிரி நடந்துக்கோ” என்று அழுத்தத்துடன் செல்வி கூறவும் மனமே இல்லாமல் தலையாட்டினாள்.
அவர்கள் சென்ற பின்பும் அப்படியே அமர்ந்திருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த வேணி, “என்ன அருவி, செல்வி அம்மா வந்துட்டு போனாங்களா? நான் தான் அவங்களுக்கு போன் பண்ணேன்” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.
அருவி பதில் ஏதும் பேசாமல் இருக்கவும், “ஏன்டி ஒரு மாதிரி இருக்கே”
“அத்தை இரண்டு மாசம் டைம் கொடுத்துட்டு போய் இருக்கு, அதுக்குள்ள நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமாம்” என்றாள் வருத்தமான குரலில்
“இதுக்கு ஏன்டி முகத்த இப்படி வச்சிருக்கிறவ, கட்டிக்க வேண்டியது தானே?”
“அக்கா எனக்கு புடிக்க வேண்டாமா?”
“நான் சொல்ற மாதிரி கேக்கறீயா? புடிச்சமாதிரி மாப்பிள்ளை கிடைக்கும், ”
“சொல்லு” என்றாள் சுரத்தே இல்லாமல்
“உனக்கே தெரியும் என் மாமனுக்கும் எனக்கும் கல்யாணம் கட்டி வைக்காம எங்க வீட்ல எவ்வளவு பிரச்சனை பண்ணாங்க, நான் போனவருஷம் நம்ம அழகர் கோயில்ல வேண்டிக்கிட்டேன், எங்களுக்கு கல்யாணமும் ஆகிடுச்சு, அடுத்த மாசம் கள்ளழகர் கோயில்ல சித்திரை திருவிழா வரப்போகுது, அதுக்கு போகலாம்னு இருக்கோம். நீயும் வேணும்னா ஒரு மண்டலம் விரதம் இருந்து உனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை வேணும்னு வேண்டிக்கோ” என்ற வேணியின் கரத்தை ஆர்வத்துடன் பற்றிக் கொண்டு
“வேணிக்கா நிசமாத்தான் சொல்றீயா?”
“என்னடி நீ கேக்கற தினுச பார்த்தா ஏற்கனவே ஆள் ரெடி போல, யாருடி அவன்?” என்றாள் வேணி ஒற்றை புருவம் உயர்த்தி.
“அது வந்து நான் சொன்னா நீ திட்டுவ, வேணாம் விடு” என்றாள் தலையை குனிந்துக் கொண்டு
“அப்படி என்னடி சொல்ல போறவ?”
“நான் சுடுகாட்டுல பார்த்தேனே அந்த சிலையை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன்” என்றவளை பார்த்து அதிர்ச்சியுடன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள் வேணி.
“டி அருவி, உனக்கெதுவும் புத்தி கித்தி கலங்கிருச்சா? ஏன்டி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே? என்கிட்ட சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லிடாதடி. எவனும் உன்னைய கட்ட மாட்டான்”
“உன் கள்ளழகருக்கு உண்மையாவே சக்தி இருந்தா, என்னையும் அந்த சிலையில் இருக்கறவனையும் கட்டி வைக்கிறாரானு பாக்கலாம்” என்றவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் வேணி.
“இன்னொருக்கா சுடுகாட்டு பக்கம் போனே நானே உன் காலை உடைச்சிடுவேன்” என்றாள் கோபமாக
“இப்போதைக்கு போக மாட்டேன், ஒரு மண்டலம் விரதம் இருந்து, கள்ளழகர் ஆத்துல இறங்கறத பாத்துட்டு அப்புறமா போய் தான் அந்த சிலையை பாப்பேன். அந்த கடவுளுக்கு உண்மையாவே சக்தி இருந்தா அதுக்கப்புறம் நான் விரும்பற சிலைக்கு உயிர் வரட்டும், நான் அவரையே கட்டிக்கறேன்”
“முதல்ல விரதத்தை முடி. அந்த கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கறாரானு பாக்கலாம்” என்று சலிப்பாக சொல்லிக் கொண்டு வெளியேறினாள் வேணி.
******
அடுத்த நாளே அருவி, வீட்டை சுத்தம் செய்து, தலைக்கு குளித்து தன் விரதத்தை தொடங்கினாள் அருவி. ஒவ்வொரு நாளும் விளக்கேற்றி, சிலையாக இருப்பவன் யார் என்றே தெரியாமல் அவனே தனக்கு கணவனாக வரவேண்டும், அந்த சிலைக்கு உயிர்வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்
முரளி கிருஷ்ணா சுடுகாட்டில் அருவியின் வரவை எதிர்ப்பார்த்தான். முந்தைய நாள் இரவு அவள் சொல்லி சென்றது போல, இனி சுடுகாட்டிற்கு வரமாட்டாள் என்று அவனுக்கும் தோன்றியது, தனக்கு விதித்தது இது தான் என்று இப்போது இதயத்தையும் கல்லாக்கிக் கொண்டான்.
நாட்கள் கடந்தது, நாற்பத்தி எட்டு நாள் கள்ளழகரை நினைத்து விரதம் இருந்தவள், சித்திரை திருநாள் அன்று வேணியுடன் தயாராகி கோயிலுக்கு சென்றாள். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கள்ளழகர் தயாராகி உற்சவமூர்த்தியாக திருவீதிகளில் உலா வந்துக் கொண்டிருந்தார். கண்களை மூடி மனமுருகி வேண்டிக் கொண்டிருந்த அருவியின் கைகளில் அழகர் மேல் இருந்த மலர்மாலையிலிருந்து ஒரு மலர் வந்து விழுந்தது. விரிந்த கைகளில் வந்து விழுந்த மலரைப் பார்த்து சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றவள், அதை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு, தலையில் சூடிக் கொண்டாள்.
அப்போதே அவளுக்கு முரளியின் சிலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலாங்கியது. இப்போது போனால் அந்த சிலைக்கு உயிர் வந்து விடும் என்று உறுதியாக நம்பினாள். வேணியிடம் சொன்னால், அவளை போக விடமாட்டாள் என்பதால், அவளிடம் சொல்லாமல் கூட்டத்திலிருந்து விலகி, அவசரமாக பஸ்பிடித்து அலங்காநல்லூர் சென்றாள். அவள் பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் கள்ளழகரை காண சென்று விட்டதால் ஊரே வெறிச்சோடி போய் இருந்தது.
ஓட்டமும் நடையுமாக சுடுகாட்டிற்கு ஓடினாள். சிலையாக இருப்பவனுக்கு உயிர் வருமா? வந்தால் அவன் எப்படி இருப்பான்? என்னை ஏற்றுக் கொள்வானா? மூளை பரப்பரப்பாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க, இதயம் அதைவிட வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவனை பார்க்க போகிறோம் என்று உறுதியாக நம்பிக் கொண்டு, வேகமாக சுடுகாட்டை நோக்கி ஓடினாள்.
வழக்கமாக அந்த சிலை இருக்கும் புதர் அருகே சென்றவளுக்கு அதிர்ச்சி, அங்கே முரளியின் சிலை இல்லை!
முரளியின் சிலையை காணாததால் அருவி தன் கண்களை கசக்கி பார்த்தாள், ஒவ்வொரு புதர்செடிகளுக்கும் இடையே சென்று அந்த முட்செடிகளை விலக்கி விலக்கி பார்த்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டாள். கடந்த ஒன்றரை மாதமாக அவள் இந்த பக்கமே வரவில்லை. சிலை எப்படியும் அங்கே தான் இருக்கும் என்று நான் எப்படி நினைச்சேன்? அசைக்க கூட முடியாமல் இருந்த அந்த சிலையை யார் கொண்டு போய் இருப்பாங்க? ஒருவேளை அதுக்கு உயிர் வந்து இங்கே இருந்து போயிடுச்சோ?
அவளுக்குள் எழுந்த எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. கடவுள் தரிசனத்தை பார்த்துவிட்டு துள்ளிக் கொண்டு வந்தவள் இப்போது மனசோர்வுடனும் தளர்ந்த நடையுடனும் அழுதுக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
அருவி சுடுகாட்டிலிருந்து வந்துக் கொண்டிருப்பதை பார்த்த மாரியும் அவன் சகாக்களும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “மச்சி இவ இந்த சுடுகாட்டுல என்னவோ பன்றாடா, அது என்னனு தான் புரியல” என்றான் மாரி.
“ஆமாடா இதப்பத்தி நாம ஊர் நாட்டாமை காதுல போட்டு வைக்கணும்” என்றான் மாடசாமி.
*******
அழகர் கோயிலில் அருவியின் கைகளில் மலர் விழுந்த அதே நேரம், சுடுகாட்டில் இருந்த முரளி கிருஷ்ணா தன் பழைய உருவத்தை அடைந்தான்.
“என்ன நடக்குது? என்னாச்சு? நான் மறுபடியும் எப்படி மனுசனா மாறினேன்?” அவனுக்கு எதுவுமே புரியவில்லை. இது நிஜம் தானா? என்று தன்னையே கிள்ளி பார்த்தான், அந்த காடு முழுவதும் நடை பழகினான், என்னால் நடக்க முடியுது, ஓட முடியுது, பேச முடியுமா? என்று நினைத்தவன் ஓ என்று அந்த காடே அதிரும்படி கத்தினான். பின்பு என்ன நினைத்தானோ, அம்மா என்றான், அம்மா என்றதும் அவன் நினைவில் முதலில் வந்தது செல்வி தான். “செல்வி அம்மா” என்ற போது அவன் குரல் வெகுவாக குழைந்து விட்டது.
செல்வியிடம் எவ்வளவோ வெறுப்பை காட்டியிருக்கிறான், உதாசீன படுத்தியிருக்கிறான், பைத்தியம் போல நாடகமாடிக் கொண்டிருந்த தன்னை பார்த்து தன் நிலையை எண்ணி எப்படி எல்லாம் அழுதாங்க? ராஜா மாதிரி இருந்தானே என் மகன் என்று செல்வி அழுது கரைந்தது இப்போது அவன் மனக்கண்ணில் வந்தது. வெற்றிவேந்தனுக்கு அவன் மேல் இருந்தது, பெற்ற பாசம். ஆனால் செல்விக்கு? நான்கு வயதிலிருந்தே அவனை பெற்ற பிள்ளைக்கும் மேலாக பாசம் காட்டி வளர்த்தாளே, அவளுக்கென்று யாதவ் பிறந்த பின்பும் அவள் பாசம் ஒரு துளிக்கூட குறையவில்லை.
எனக்காக யாதவனை விட்டுக் கொடுத்திருக்கிறாரே தவிர, என்னை எப்போதும் விட்டுக் கொடுத்தே இல்லை. இந்த சுடுகாட்டில் எத்தனை பேர் தன் தாயை இழந்து கதறி அழுததை பார்த்திருக்கிறான். தாயின் அருமையை அவர் இருக்கும் போதே போற்றி கொண்டாடாமல் விட்டுவிட்டு, அப்புறம் இறந்த பிறகு தாயின் இழப்பை எண்ணி வருந்துவதில் என்ன பயன்?
அந்த கணமே செல்வியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. எப்படியும் அவர் வெற்றிவேந்தனோடு சென்னையில் தான் இருப்பார் என்று தோன்ற அப்போதே அந்த இடத்தை விட்டு கிளம்பினான். வழியில் சென்ற லாரியில் லிப்ட் கேட்டு சென்னையை நோக்கி புறப்பட்டான்.
*******
செல்வி தன் வேலையை எல்லாம் முடித்துவிட்டு எப்போதும் வாசலில் அமர்ந்து கொண்டு, தன் இரு மகன்களில் யாராவது வரமாட்டார்களா என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பார். அன்று வெற்றியும் வேலுவும் தொழிற்சாலை சென்று விட்டிருக்க, தனியாக இருக்க பிடிக்காமல் வாசல் அருகே தலை சாய்த்து வெளிப்புற கேட்டில் பார்வையை செலுத்தியபடி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று தன் மூத்த மகன் முரளி வந்து நிற்க மாட்டானா? என்று ஏக்கமாக இருந்தது. அவன் வந்தாலும் அவரை உதாசீனப்படுத்துவான் தான், பரவாயில்லை, அவன் திரும்பி வந்தால் போதும், நாம் பழையபடி அலங்காநல்லூருக்கே சென்று விடலாம் என்று ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தவர் தன்னையும் அறியாமல் உட்கார்ந்த நிலையில் சற்றே கண்ணயர்ந்தார்.
முரளி லாரியில் இருந்து இறங்கியதும், வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல கூட அவனிடம் பணம் இல்லை. யாரிடமாவது போன் வாங்கி தந்தைக்கு அழைக்கலாமா? என்று யோசித்தான். பின்பு வேண்டாம் என்று நினைத்தவன் நடந்தே வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்தான். எத்தனையோ முறை அதே தெருக்களில் விலை உயர்ந்த சொகுசு கார்களில் சென்றிருக்கிறான். பக்கவாட்டில் செல்லும் மனிதர்களை கூட அவன் பார்த்து இல்லை. இன்று நடந்துக் கொண்டே பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை நிலையை கவனித்துக் கொண்டே சென்றான்.
நன்றாக யோசித்து பார்த்தால், செந்தாழினி அவனுக்கு கொடுத்தது தண்டனை அல்ல, பாடம் அதுவும் வாழ்க்கை பாடம். அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று தெரியவில்லை, ஆனாலும் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டு தானே ஆக வேண்டும்? என்று பலவாறு எண்ணிக் கொண்டு வீட்டை அடைந்தான்.
கொஞ்சமாக திறந்திருந்த கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவனை பார்த்த செக்யூரிட்டி பதட்டத்துடன் ஓடி வந்து அவன் நெஞ்சில் கைவைத்து நிறுத்தி “யார் நீங்க? அப்படியே உங்க வீடு போல நேரா போனா எப்படி?” என்றான். அவனால் எளிதில் முரளியை இனம் காண முடியவில்லை. வருடக்கணக்காக மழிக்கப்படாத தாடியும் பரட்டை தலையுமாக இருந்தவனை ஏற இறங்க பார்த்தான்.
முரளி தன் கண்களை இறுக மூடினான். இதே பழைய முரளியாக இருந்திருந்தால் அவன் நெஞ்சில் கைவைத்த செக்யூரிட்டியை எட்டி உதைத்திருப்பான். பழைய முரளியின் வேகமும் ஆத்திரமும் வந்தாலும், நிதானித்தான், பொறுமையாக செக்யூரிட்டியை பார்த்தபடி, முகத்தை மூடியிருந்த தன் தலைமுடியை நெற்றிக்கு மேலே உயர்த்திக் காட்டி, “நான் முரளிகிருஷ்ணா” என்றான்.
செக்யூரிட்டிக்கு தொண்டைக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு, “சார், சாரி சார், ப்ளீஸ் சார், என்னைய மன்னிச்சிடுங்க சார்” என்றபடி சல்யூட் வைத்தான். முரளி கிருஷ்ணா மெல்லிய புன்னகையோடு அவன் தோளில் தட்டிக் கொடுத்து, “இட்ஸ் ஓகே” என்று விட்டு உள்ளே சென்றான்.
செக்யூரிட்டிக்கு வந்தது முரளி தானா என்று நம்பவே முடியவில்லை. ஒரு வேளை யாதவ் சாரா இருக்குமா? முரளியா இருந்தால் அவன் நெஞ்சில் கைவைத்ததற்கு இந்நேரம் கன்னம் பழுத்திருக்குமே! கன்னத்தை தடவியபடி தன் போனை எடுத்து வெற்றிவேந்தனுக்கு அழைத்தான்.
முரளிகிருஷ்ணா வாசல் அருகே சென்றான், அங்கே செல்வி சாய்ந்தபடி தூங்கி கொண்டிருப்பது தெரிந்தது. “அம்மா” என்றான்.
மெல்ல கண்திறந்த செல்வி மீண்டும் கண்களை மூடிக் கொண்டார், “முரளி நான் கண்ணை திறந்துட்டா நீ போய்டுவ, அதனால இன்னும் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டே உன்னை பாத்துக்கறேன்” என்றவரின் தோள்களை பற்றிக் கொண்டு “செல்விம்மா, நான் உன் மகன் முரளி கிருஷ்ணா, உண்மையாவே வந்திருக்கேன். கண்ணை திறந்து பாருங்க” என்றான்.
அந்த குரலில் திடுக்கிட்டு கண்விழித்த செல்வி, எதிரில் இருந்தவனை பார்த்து பேந்த பேந்த விழித்தார்.
“என்னம்மா பாக்குற, உன் மகன் முரளி கிருஷ்ணா வந்திருக்கேன்”
முரளி வந்ததையே அவரால் நம்ப முடியவில்லை. அதில் சாதாரணமாக பேசும் இவனை முரளி என்றே அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகவே, “யாதவா” என்றார் சந்தேகமாக.
“ஏன்மா இப்பவும் யாதவனை கேக்கறே? நானும் உன் மகன் தாம்மா” என்றான் கண்களில் வலியுடன்
“முரளி” என்றார் செல்வி நா தழுதழுக்க
“ஆமாம் செல்விம்மா, நான் உன் மூத்தமகன் முரளி தான்” என்றதும், செல்வி அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதுவிட்டார். “எத்தனை வருஷம் ஆச்சு, நீ என்னை அம்மானு கூப்பிட்டு” என்றவர் அவசரமாக எழுந்து அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
“நான் செஞ்சதுக்கெல்லாம் என்னை மன்னிச்சுடுங்கம்மா, இந்த ஒரு வார்த்தையால இழந்த உங்க வாழ்க்கையை என்னால திருப்பி தரமுடியாதுனு எனக்கு தெரியும், ஆனா எனக்கு இத தவிர வேற வழிதெரியல” என்றபடி முரளி அவர் காலில் விழப்போக செல்வி பதறிக் கொண்டு அவனை தடுத்தார். இந்த காட்சியை பார்த்துக் கொண்டே வெற்றிவேந்தனும் வேலுவும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“முரளி, எப்படிப்பா வந்தே, இத்தனை நாளா எங்கிருந்தே?” என்று தெரியாத மாதிரி கேட்டார் வெற்றிவேந்தன். அவன் பொய் சொன்னால் இன்னும் மாறாமல் இருக்கிறான் என்று அர்த்தம் என்று எண்ணிக் கொண்டார்.
ஆனால் முரளிகிருஷ்ணா, ஆரம்பத்தில் இருந்து நடந்தது அனைத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தான். “சுடுகாட்டுலயே என் வாழ்க்கை முடிஞ்சுடும்னு நினைச்சேன். ஆனா திடீர்னு என்னோட உருவம் எனக்கு திரும்ப கிடைச்சிடுச்சு, மறுபடியும் வாழறதுக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை மறுஜென்மமா பாக்கறேன். முழுசா நல்ல மனுஷனா வாழ நினைக்கறேன்ப்பா, நீங்களும் என்னைய மன்னிச்சுடுங்க, வேலு மாமா நீங்களும்” என்றபடி அவரை நோக்கி கைகூப்பினான்.
“அய்யோ சார், வேலைக்காரன் கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு” என்ற வேலுவை கட்டிக்கொண்டான், “மாமா உண்மையில என்னை நீங்க மன்னிச்சதா இருந்தா இனி சார்னு என்னை கூப்பிடக் கூடாது பேர் சொல்லியோ மருமகன்னோ தான் கூப்பிடணும்” என்றான் அவர் தோளில் முகத்தை புதைத்தபடி
முற்றிலும் புதிய மனிதனாக வந்திருக்கும் முரளி கிருஷ்ணாவை பார்த்து மூவருக்கும் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. “சரிங்க மருமகனே, வாங்க போய் முடிவெட்டி முகசவரம் பண்ணிட்டு வருவோம், அம்மா அதுக்குள்ள சமைச்சு வைக்கட்டும்” என்ற வேலுவை பார்த்து புன்னகையுடன் “சரிங்க மாமா, வாங்க போகலாம்” என்றான்.
அவர்கள் சென்றதும் செல்விக்கு தலைகால் புரியவில்லை. தன் மூத்தமகனுக்காக விருந்து சமைத்துக் கொண்டிருந்தார். வெற்றி அவர் அருகில் வந்து, “செல்வி உனக்கு ஒரு விஷயம் நியாபகம் இருக்கா?” என்றார்.
“என்னங்க ஐயா அது? என் மகன் திரும்பி வந்த சந்தோஷத்துல எனக்கு வேற எதுவும் நியாபகம் இல்ல”
“நம்ம மருமகள் சொன்னாளே, முரளி முழுசா மனம் திருந்தினாலும் ரத்த சம்பந்தம் இல்லாதவங்க அவன் திரும்பி வரணும்னு நினைச்சு வேண்டிக்கிட்டா தான் அவன் மனுஷனா மாறுவான்னு சொன்னாளே நினைவிருக்கா”
“அட ஆமாங்க, அதை மறந்துட்டேனே. முரளியும் அதைப்பத்தி எதுவும் சொல்லலையே. அவனுக்காக யாரு வேண்டியிருப்பா?” என்றார் செல்வி யோசனையுடன்
“எல்லாத்தையும் மறைக்காம சொன்னவன் இதைப்பத்தி சொல்லலைனா அது அவனுக்கும் தெரியாதுனு தான் நினைக்கிறேன். அவன் திரும்பி வரணும்னு யார் நினைச்சிருந்தாலும் அவங்க நல்லா இருக்கட்டும்” என்றார் வெற்றி வேந்தன் மனதார
******
அலங்காநல்லூர் ஊர்பஞ்சாயத்தில் ஊர்மக்கள் முன்னிலையில் நின்றிருந்தாள் அருவி
நாட்டாமைக்காரர், “என்ன மாரி, அருவியே பாவம் ஆத்தாளை இழந்துட்டு ஒத்தையில இருக்கா, அவ மேல என்ன பகை உனக்கு?”
“ஐயா, எனக்கு எதுவும் பகை இல்லைங்க, ஊருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு தானுங்க பிராது கொடுத்திருக்கேன். இந்த பொண்ணு அருவி சரியில்லங்க, எப்போ பார்த்தாலும் சுடுகாட்டுல தான் இருக்கா, எனக்கென்னவே ஏதோ சூனியம் செய்யறானு தோணுதுங்க. அவங்க அம்மா பொன்னி நல்லா தானே இருந்துச்சு, திடீர்னு எப்படி செத்திரும், இவ தான் ஏதோ பண்ணி, பலி கொடுத்தாளோனு சந்தேகமா இருக்குங்கு ஐயா” என்றான் மாரி
“மாரி சொல்றதும் கரெக்ட் தாங்க. நாங்க நாலு பேருமே பார்த்தோம். ஒருநாள் நடுராத்திரி இந்த பொண்ணு மட்டும் தனியா சுடுகாட்டுக்கு போய்ட்டு இருந்துச்சு. என்னான்னு பாக்க போன எங்களையும் பலி கொடுக்க பாத்தா, கையில இருந்த கத்தியால எங்கள குத்தறதுக்கு வந்தா. எப்படியோ தப்பிச்சு வந்துட்டோம். அப்போ அவ எங்க கையில கத்தியால கிழிச்ச காயம் கூட இருக்கு பாருங்க” என்ற மாடசாமி தன் முழங்கையை நாட்டாமைக்காரரிடம் காட்டினான்.
“அப்பவே சொல்லாம இப்போ எதுக்கு சொல்றீங்க” என்றார் அருவியின் பெரியப்பாவான ஒருவர், அவரை பார்த்து முறைத்தான் மாரி.
“பொம்பளை கையால அடிவாங்கினத பெருமையா சொல்லிட்டு திரிவாங்களா? போகட்டும்னு விட்டுட்டோம். ஆனா இவ எப்போ பார்த்தாலும் சுடுகாட்டுல தான் இருக்கா. ஊருக்கு எதுவும் ஆகிடக் கூடாதேனு ஒரு நல்ல எண்ணத்துல சொல்ல வந்தோம். இதுக்கப்புறம் உங்க இஷ்டம். மாடசாமி வாடா நாம போகலாம்” என்றான் மாரி
நாட்டாமைக்காரர் இப்போது அருவியிடம் திரும்பி, “இதுக்கு நீ என்னம்மா சொல்றே?”
“நான் என் ஆத்தாவை பாக்க தான் போனேன்”
“அவ செத்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும், இன்னுமே அங்கே போய்ட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்டவருக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“இனிமே நீ அந்த பக்கம் போக கூடாது. மீறி நீ போனா, ஊருக்குள்ள எந்த பிரச்சனையும் வந்தாலும் அதுக்கு நீதான் பொறுப்பு” என்றார். அருவி சம்மதமாக தலையாட்டினாள்.
நாட்டாமைக்காரரின் பேச்சு மாரிக்கும் மாடசாமிக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. இருவரும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
*******
முரளி கிருஷ்ணா தான் இழந்ததை எல்லாம் பெற்றுவிடும் முனைப்பில் செல்வியின் தவப்புதல்வனாக நடந்துக் கொண்டான். எப்போதும் தாய் மடியில் படுத்து உறங்கினான். அவரையே ஊட்டி விட சொன்னான். வெற்றிவேந்தன் ஆசைப்பட்டபடி மூத்தமகனாக மாறிவிட்டிருந்தான்.
அவர் யாதவ் கிருஷ்ணாவிற்கு போன் செய்து அங்கே நடந்துக் கொண்டிருக்கும் அதிசயத்தை கூறினார். “யாதவ் நீயும் வந்துட்டா நல்லா இருக்கும்பா”
“அப்பா நானும் அவனும் ஒரே இடத்தில் இருக்கிறது ஒரு உறையில இரண்டு கத்தி வைக்கறதுக்கு சமம். நாங்க தனித்தனியா இருக்கறது தான் விதி. ஆனா நானும் ராதியும் கூடிய சீக்கிரம் வர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போ வரேன்” என்றான்.
********
அலங்காநல்லூரில் அருவி தன் வீட்டின் மேற்கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். அவளுக்கு சுடுகாட்டில் இப்போது அந்த சிலை அங்கே இருக்கிறதா இல்லையா என்று மீண்டும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீறி சென்றால், அது வேறு பிரச்சனையில் கொண்டு போய் விடும். செல்வி சொல்லிச் சென்ற இரண்டு மாதம் கெடு முடிந்து மேலும் ஒரு மாதம் ஆகி விட்டது.
திடீரென்று யாரையாவது கல்யாணம் செய்துக் கொள் என்று செல்வி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது? கடைசி முயற்சியாக சிலையை பார்த்து விட்டு வருவோமா? அப்படி அந்த சிலை அங்கே இருந்தால், அதற்கு உயிர் வரவேண்டிய தேவை எல்லாம் இல்லை. ஊரறிய அந்த சிலை தான் இனி என் கணவர் என்று ஊருக்கு சொல்ல வேண்டும். அதற்கு அந்த சிலை அவர்கள் கண்களுக்கு தெரிய வேண்டுமே? என்று பலவாறு யோசித்தவள், நள்ளிரவு நேரத்தில் ஊரடங்கிய பின்பு கையில் லாந்தருடன் சுடுகாட்டை நோக்கி சென்றாள்.
இதற்காகவே காத்திருந்ததை போல மாரியும் மாடசாமியும் அவளை பின் தொடர்ந்து சென்றார்கள். அவள் சுடுகாட்டிற்குள் நுழைவது வரை சென்று அவர்கள் வைத்திருந்த போனில் அவளுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்டனர். அவள் அந்த பக்கம் சென்றதும் இவர்கள், வயக்காட்டின் பக்கம் சென்று அங்கே அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களுக்கு தீ வைத்தனர். அதுமட்டும் இல்லாமல் நெல் சாகுபடிக்கு எடுத்து செல்ல வைத்திருந்த கூட்டுறவு கோடவுனிலும் தீயை வைத்துவிட்டு, நாட்டாமைக்காரர் வீட்டை நோக்கி ஓடினார்கள்.
“ஐயா, ஐயா” என்ற குரலை கேட்டு வந்த நாட்டாமைக்காரர் மாரியையும் மாடசாமியையும் பார்த்து, “என்னப்பா இந்த நேரத்துல வந்திருக்கீங்க?”
“நாங்க சொன்னப்போ நீங்க அதை லேசில விட்டுட்டிங்க, இப்போ பாருங்க ஊரே எரிஞ்சுட்டு இருக்கு” என்று தூரமாக தெரிந்த நெருப்பை காட்டினார்கள்.
“ஐயோ நீங்க என்னப்பா சொன்னீங்க, நான் என்ன லேசில விட்டேன்? எப்படி வயக்காட்டுல நெருப்பு புடிச்சது” என்றார் பதட்டத்துடன்
“வயக்காட்டுல நெருப்பு வச்சது அருவி தாங்க, நீங்க அவ்வளவு சொல்லியும் அந்த பொண்ணு சுடுகாட்டு பக்கமா போச்சு, என்னனு பின்னாடியே போய் பாத்தா, வழியில இருக்கற நிலத்துக்கு எல்லாம் தீ வச்சுட்டு போயிட்டு இருந்தா, கிட்ட போய் தடுக்கறதுக்கு எங்களுக்கு பயமா இருந்துச்சு” என்றபடி தன் கையிலிருந்த போனை எடுத்து நாட்டாமையிடம் நீட்டினான்.
அதில் அருவி கையில் லாந்தர் விளக்குடன் சுடுகாட்டிற்குள் செல்வது தெரிந்தது. யோசிக்க நேரமில்லை என்று அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார். “எல்லாரும் உடனே போய் அந்த நெருப்பை அணைச்சுடுங்க, இல்லனா பக்கத்துல இருக்கற வீடுங்களும் எரிஞ்சு உயிருக்கு ஆபத்தா போயிட போகுது” என்று எல்லாரையும் விரட்டினார். அப்படியே தீயணைப்பு நிலையத்திற்கும் போன் செய்து விட்டு, வேட்டியை மடித்துக் கொண்டு, “இப்போ எங்கடா அந்த பொண்ணு அருவி?” என்றார் ஆத்திரத்துடன்.
“அவ இன்னும் அங்கே தான் இருப்பானு நினைக்கிறோம், எங்க கூட வாங்க” என்றனர் மாரியும் மாடசாமியும். நாட்டாமைக்காரர் அவர்களுடன் தன்னுடைய ஜீப்பில் சுடுகாடு இருந்த பக்கம் சென்றார்.
அருவியோ, அந்த இடம் முழுவதும் முரளியின் சிலை இருக்கிறதா, ஒரு வேளை யாராவது தள்ளிவிட்டு கீழே விழுந்து கிடக்குமா என்று, தான் வைத்திருந்த விளக்கு வெளிச்சத்தில் புதர்களின் நடுவே சிலையை தேடிக் கொண்டிருந்தாள். திடீரென்று முகத்தில் பளிச்சென்று ஒரு வெளிச்சம் பரவவும் நிமிர்ந்து பார்த்தாள்.
ஜீப்பின் லைட் வெளிச்சம் என்று உணர்ந்தவள், அவளுக்கு ஊர் கட்டுப்பாடடு விதித்திருந்ததை நினைத்து ஒளிந்து கொள்ள முயன்றாள். அதுவே நாட்டாமைக்காரருக்கு அவளை குற்றவாளியாக நினைக்க வைத்தது.
“டேய் மாரி, மாடசாமி ஓடி போய் அவளை புடிங்கடா” என்றார் கர்ஜனையோடு
ஊர்கட்டுப்பாட்டை மீறி வந்ததற்காக தான் பிடிக்கிறார்கள் என்று அருவியும் பயந்து நடுங்க, அதற்குள் இருவரும் அவளை பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள்.
“ஐயா, நான் உங்க பேச்சை மீறி வந்தது தப்பு தான். என்னைய மன்னிச்சுடுங்க, இனி இங்கே வரமாட்டேன்” என்று கைகூப்பினாள்.
“கதிர் அறுக்கறத்துக்கு தயாரா இருக்கிற நிலம், பிரசவத்துக்கு தயாரா இருக்கற தாய் மாதிரி. அந்த நிலத்துல உனக்கு எப்படி நெருப்பு வைக்க மனசு வந்துச்சு? ஊரையே பலியாக்கிடனும்னு முடிவு பண்ணிட்டியா?” என்றார் நாட்டாமைக்காரர் கோபத்துடன்
“ஐயா என்ன சொல்றீங்க, நான் எதுவும் பண்ணலியே” என்று அருவி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மாரி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ஏற்கனவே பலவீனமாக இருந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவள் கண்விழிக்கும் போது ஊர் முச்சந்தியில் இருக்கும் அரசமரத்தில் அவளை கட்டிப்போட்டிருந்தார்கள். ஊர்மக்கள் அனைவரும் கூட்டம் கூடி இருந்தனர்.
“பொன்னி மகளா இப்படி எல்லாம் செய்யறா? பொன்னி இருந்த வரைக்கும் இருக்கற இடம் தெரியாம வாழ்ந்துட்டு போனா, அவ பொண்ணு என்னடான்னா, இப்படி எல்லாம் பண்றா” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டு இருந்தனர்.
வேணிக்கு அன்று இரவே அவள் கணவன் மூலம் அருவியின் மேல் இருந்த குற்றச்சாட்டு தெரிந்து விட்டதால் செல்விக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டிருந்தாள். ஊரே கொதித்து போய் இருக்கும் இந்த நிலைமையில் அருவிக்கு ஆதரவாக பேசினால் தன்னையும் சும்மா விட மாட்டார்கள் என்பதால் வேணி கவலையுடன் அருவியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஐயா மொத்த நெல்லும் வீணா போயிடுச்சுங்க, பக்கத்துல இருந்த ஓலைகுடிசையும் எரிஞ்சு போச்சு, லட்ச கணக்குல நஷ்டம். குடிசையில இருந்தவங்களுக்கும் தீக்காயம், நல்லவேளையா உடனே போனதுல யாருக்கும் உயிர்சேதம் இல்ல” என்றனர் அங்கே தீயை அணைக்க சென்றவர்கள்
“இதுக்கு மாரிக்கும் மாடசாமிக்கும் தான் நன்றி சொல்லணும், அவங்க தான் சரியான நேரத்துல வந்து சொன்னாங்க” என்ற நாட்டாமைக்காரர் அருவியை பார்த்து, “ஏற்கனவே உன்னைய சுடுகாட்டு பக்கம் போக கூடாதுனு சொல்லியும் எதுக்காக அங்கே போனே, எதுக்காக வயக்காட்டுலயும், நெல் வைக்கிற கூட்டுறவு கொடவுன்லயும் தீய வச்சே சொல்லு, இதுக்கு பின்னாடி நீ மட்டும் தான் இருக்கியா? வேற யாரும் இருக்காங்களா?” என்று கோபத்துடன் தன் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார் அந்த ஊர் பெரியவர்.
இருகைகளையும் கட்டி போடப்பட்ட நிலையில் தலையை கவிழ்ந்திருந்த அருவி மெல்ல நிமிர்ந்து மாரியையும் மாடசாமியையும் எரித்து விடுபவள் போல பார்த்தாள். “இவனுங்க வேணும்னே என் மேல பழி போடுறானுங்க, நான் சுடுகாட்டுக்கு போனது உண்மை தான். ஆனா நான் நெருப்பு வைக்கல” என்றாள்.
“ஐயா இவ அங்க போனாலே வேற மாதிரி ஆயிடுறா, ஒரு மாதிரி பேய் புடிச்ச மாதிரி. அவளுக்கே தெரியாம கூட நெருப்பு வச்சிருப்பா. ஆனா எங்க இரண்டு கண்ணால பாத்தோம் இவ தான் வயக்காட்டுக்கு நெருப்பு வச்சா” என்றனர் இருவரும் கோரசாக
“இல்ல இவுனுங்க பொய் சொல்றானுங்க. ஒரு நாள் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தானுங்க, நான் அடிச்சு துரத்துனதால என்னைய பழிவாங்க நினைக்கிறாங்க”
மாரியும் மாடசாமியும் இதற்கு பதில் சொல்வதற்குள், “அப்போ நீ ஏன் அவங்களை பத்தி பிராது கொடுக்கல. இது எப்போ நடந்துச்சு?” என்று கேட்டார் நாட்டாமைக்காரர்.
“அது நடந்து மூணு நாலு மாசம் இருக்கும்” என்றாள் மெல்லிய குரலில்
“நீ சொல்றது எதுவும் நம்பற மாதிரி இல்லயே அருவி. சரி நீ நெருப்பு வைக்காததாவே இருக்கட்டும், பொட்ட பொண்ணுக்கு அதுவும் அர்த்த ராத்திரில சுடுகாட்டுல என்ன வேல? இதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றார்.
எல்லாருடைய கேள்வியும் அதே தான் என்பதால் அனைவரும் அருவியின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருவியிடத்தில் மெளனம், என்னவென்று சொல்வது? யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு சிலை இருந்தது, அது என் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. இப்போது அந்த சிலையை காணவில்லை, அதை தேடி தான் போனேன் என்று சொன்னால் நம்புவார்களா?
“சொல்லு அருவி, எதுக்காக சுடுகாட்டுக்கு போனே” என்றனர் அனைவரும் ஒரே நேரத்தில்.
“அங்கே அங்கே, ஒரு சிலை இருந்துச்சு. அதை தேடி போனேன்”
“என்ன சிலையா? கோயில் சிலையை கடத்தி யாராவது அங்கே மறைச்சி வச்சிருந்தாங்களா?” என்ற நாட்டாமைக்காரர் தன்னருகே இருந்த வேலையாட்களிடம் திரும்பி, “நம்ம பூசாரி கிட்ட சொல்லி கோயில்ல எல்லா சிலையும் பத்திரமா இருக்கானு பாக்க சொல்லுங்க” என்று அவர்களை விரட்டினார்.
“அது கோயில் சிலை இல்லைங்க, பார்க்க மனுஷன மாதிரி நல்லா ஆறடி உயரத்துல ஐயனார் சிலை மாதிரி இருந்துச்சு”
“அப்படியா? யாராவது அந்த மாதிரி சிலையை அங்கே பாத்திருக்கீங்களா?” என்றார் எல்லாரையும் பார்த்து.
இறுதிசடங்கில் பங்கேற்கும் தொழிலாளர்கள் முன்னாடி வந்து, “ஐயா நாங்க தினமும் போறோம் வர்றோம், அந்த மாதிரி எந்த சிலையையும் அங்கே நாங்க பார்க்கலைங்க ஐயா”
“அந்த சிலை என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்” என்றாள் அருவி நிதானமாக
“என்னம்மா கத வுடறியா? எங்கள பாத்தா எப்படி தெரியுது?” என்றார் நாட்டாமைக்காரர் எரிச்சலாக
இப்போது வேணி மெல்ல வாய் திறந்தாள், “ஐயா இந்த பொண்ணு அருவி, ஏற்கனவே அங்கே ஒரு சிலை இருக்கறதா தான் என்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு. நானும் போய் பாத்தேன். ஆனா அங்கே அந்த மாதிரி சிலை இல்லை. எனக்கென்னவோ அவங்க அம்மா இறந்ததுல இருந்து அவ ஒரு மாதிரி ஆயிட்டா, சிலை இருக்கறது போல அவளுக்கு பிரமை தோணியிருக்கும், அதான் போயிருப்பா, மத்தபடி எந்த தப்பும் அவ செஞ்சிருக்க மாட்டா” என்றாள் வேணி.
“அப்போ அவளுக்கு பைத்தியம்னு சொல்றீயா?” என்றார் அவர் இப்போது வேணியை பார்த்து
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வேணி அருவியை பாவமாக பார்த்தாள்.
“எது எப்படியோ, இந்த மாதிரி ஒரு பைத்தியத்தை ஊருக்குள்ள வச்சிருக்க முடியாது, இப்பவே இவளுக்கு மொட்டை அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர விட்டு துரத்தணும்” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க, அருவி தலையை கவிழ்ந்து கொண்டு தான் வணங்கிய கள்ளழகரை மனதார திட்டிக் கொண்டிருந்தாள். கண்களில் கண்ணீர் பார்வையை மறைத்தது, திடீரென்று அங்கே பேச்சுக்குரல் நின்று அந்த இடமே நிசப்தமானது
மெல்ல நிமிர்ந்து பார்த்தாள், தன் எதிரே யாரோ நின்றிருந்தார்கள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததால் அவள் பார்வை மங்கலாக தெரிந்தது. கண்ணிமையை வேகமாக தட்டி கண்களில் இருந்த கண்ணீரை கன்னத்தில் வழிய விட்டாள். எதிரே நின்றிருந்தவன் யாரென்று அவள் பார்க்கும் முன்னரே தன் கையில் இருந்த தாலிக்கயிற்றை அவளை நோக்கி கொண்டு வந்தான்.
அதிர்ந்து அவன் யாரென்று நிமிர்ந்து பார்க்கும் முன்னரே அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டிருந்தான். யார் அவன்? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)