வேங்குழல் 26

செல்வி நெஞ்சில் கைவைத்துக் கொண்டு பதறினார், “அய்யோ என்னம்மா சொல்றே, என்புள்ளை செத்துட்டானா, சுடுகாட்டுல இருக்கான்னா என்ன அர்த்தம் எனக்கொன்னும் புரியலயேம்மா. யாதவா என்னடா நடக்குது?” என்று மகனை பார்த்தார்.

 

“இதுக்கு பதில் ராதி சொல்லுவா, அவளோட முடிவு தான் என்னோடதும்” என்று சொல்லிவிட்டு மனைவியின் முகத்தை பார்த்தான்.

 

“உங்க மகன் செத்திருக்க வேண்டியவன் தான், அதுக்குள்ள யாதவ்.  தடுத்திட்டாரு, அதனால சிலையா இருக்கான்” என்றாள் கோபத்துடன்.

 

“அவனை எனக்காக மன்னிச்சு மறுபடியும் மனுஷனாக்க கூடாதா?” என்று அழுத செல்வியை பார்த்து, “ஒரு பெண்ணை ஏமாத்தி அடைய நினைக்கிறதே தப்பு. இதுல நான் யாருனு தெரிஞ்சும் என்கிட்ட உங்க மகன் விளையாட நினைச்சிருக்கான். தெய்வமே பொண்ணா வந்தாலும் அவளுக்கு பாதுகாப்பில்லனு உங்க மகன் புரிய வச்சிட்டான். அவனுக்கு கொடுத்த தண்டனையே குறைவு தான். அவன் எப்பவும் கல்லாக இருக்க வேண்டியது தான்” என்று திரும்பிக் கொண்டாள்.

 

யாதவ் மற்றும் செந்தாழினியின் இந்த புது அவதாரத்தை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் வெற்றிவேந்தன். வீட்டில் அவள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் சம்மந்தமே இல்லையே. ஆருத்ரன் வெற்றியின் மனதை புரிந்துக் கொண்டு, “சில நேரங்கள்ல அவங்க இப்படி தான் பிஹேவ் பண்ணுவாங்க, இது அவங்களுக்கே தெரியாது. கடவுள் நம்பிக்கை இருக்கறவங்களுக்கு இவங்க தெய்வாம்சத்தோட பிறந்தவங்கனு சொல்வேன். சயின்டிபிக்கா சொல்லணும்னா இரண்டு பேருக்குமே ஸ்பிலிட் பர்சனாலிட்டி” என்றார்.

 

எதுவாயிருந்தாலும் கண்முன்னாடி நடக்கும் அதிசயத்தை இமைக்க கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் வெற்றிவேந்தன்.

 

செல்வி செந்தாழினியின் காலில் விழாத குறையாக மன்றாடிக் கொண்டிருந்தாள். செல்வியின் கண்ணீர் செந்தாழினியின் கால்களை நனைத்தது, அதில் அவளின் கோபம் கொஞ்சம் குறைந்தது. “கற்சிலையா இருக்கிற உங்க மகன் முதல்ல முழுசா திருந்தணும். அப்புறம் அவன் மனுசனா திரும்பி வரணும்னு ரத்த சொந்தமில்லாத யாராச்சும் அவனுக்காக வேண்டிக்கணும். அப்படி அவனுக்காக யாராவது வேண்டிக்கிட்டா அவன் சாபம் நீங்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா இதைப்பத்தி நீங்க யார்கிட்டயும் சொல்லி செய்ய வைக்க கூடாது. 

 

பெற்றோரான உங்களையும் இரத்த சொந்தங்களையும் தவிர, இந்த உலகத்துல வேற யாராவது மனசார முரளியோட சிலைக்கு உயிர் வரணும் நினைச்சு வேண்டிக்கிட்டாங்கனா அவன் மறுபடியும் மனுஷனா மாறுவான். அதுவரைக்கும் அவனை நீங்க தேடினா கூட கிடைக்க மாட்டான், யார் கண்ணுக்கும் தெரியவும் மாட்டான்” என்று சொல்லி விட்டு அவ்வளவு தான் என்பது போல எழுந்துக் கொண்டாள்.

 

இப்போ முரளிக்காக அவன் திரும்பி வரணும்னு யாரு வேண்டிக்குவாங்க? அதுவும் நாம யார்கிட்டயும் அவனுக்காக வேண்டிக்க சொல்லியும் கேக்க கூடாதாமே! இதெல்லாம் நடக்குமா? என்ற தோரணையில் யாதவனை பார்த்தார் செல்வி. அவன் இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல திரும்பிக்கொண்டான். பின்னே யாராக இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனையை அனுபவித்து தானே ஆகணும் என்பதாய் அவன் செயல் இருக்கவும் செல்வி பெருமூச்செறிந்தார்.

 

முரளியை பற்றிய பேச்சால் செந்தாழினியின் முகம் சுணங்கியது. யாதவன் அவள் தோள்களை அழுத்தி “வேங்குழல் வாசிச்சாச்சு, வேங்குழலியை வாசிக்கலாமா?” என்றான் குறும்புடன் .

 

அவள் மனநிலைமையை மாற்றத்தான் அப்படி சொல்கிறான் என்று புரிய ராதி அவனை பார்த்து முறுவலிக்க முயன்றாள். “உங்களுக்கு என் முடிவு தப்புனு தோணுதா யாதவா?” என்றாள்

 

“இல்ல, உனக்கு அநியாயம் செஞ்சவனுக்கு தண்டனை கொடுக்கும் முழுஉரிமை உனக்கு இருக்கு. இந்த விஷயத்துல நான் தலையிட மாட்டேன். தப்பு செஞ்சவன் திருந்தறதுக்கு தண்டனையும் அவசியம் தான். அதனால இதப்பத்தி ரொம்ப யோசிக்காதே. நமக்கு இதைவிட பெரிய வேலை எல்லாம் இருக்கு”

 

சம்மதமாக செந்தாழினி இப்போது மலர்ந்து புன்னகைத்தாள். யாதவ் அவளை அழைத்துக் கொண்டு, மணமேடையை விட்டு கீழிறங்கி வந்தான். ஆரூத்ரனை பார்த்து, “உங்க வேண்டுதலும் நிறைவேறிடுச்சா மாமா” என்றான்.

 

அவர் ஆனந்த கண்ணீருடன் எல்லா பக்கமும் தலையை ஆட்ட, அவன் புன்னகைத்து “இப்போ எங்க வேலையை கவனிக்க போகலாம் இல்லயா?”

 

“எங்க போக போறீங்க?” என்றார் வெற்றிவேந்தன் இடைபுகுந்து.

 

“எங்க கடமையை செய்ய. நாங்க புல்லாங்குழலை வச்சு இனி உலகத்துல நடக்க போகிற பேரழிவுகளையும் இயற்கை சீற்றங்களையும் தடுத்து மக்களை காப்பாத்தணும். எங்க எல்லாம் உதவி தேவைப்படுதோ அங்கே எல்லாம் போவோம். எங்களோட வேலை முடிஞ்சதும் புல்லாங்குழல் இருந்த இடத்துக்கே போய்டும். அதுக்கப்புறம் உங்க சின்னமகன் யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியும் எல்லாரையும் போல ஆகர்ஷன தம்பதிங்களா சந்தோஷமா வாழ்வாங்க, அதுவரைக்கும் நீங்க அவங்களை பத்தி கவலைப்படாம நிம்மதியா இருங்க”

 

யாதவன் இப்போது மாயவனாக பேசுகிறான் என்பதை புரிந்துக் கொண்டார் வெற்றிவேந்தன். அவரையும் அறியாமல் யாதவனை பார்த்து கைக்கூப்பினார். அவர் கைகளை தடுத்த யாதவன், “நான் உங்களுக்கு ஒரு வரம் கொடுத்திருக்கேன். நினைவிருக்கா?” என்றான்

 

வெற்றிவேந்தன் புரியாமல் விழிக்கவும், “உங்க இரண்டு மகன்களோட உயிருக்கு எந்த பிரச்சனையும் வராது, உங்க மனைவியை கூட்டிட்டு போங்க. எல்லாம் நல்லதே நடக்கும்” என்று சொல்லிவிட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு யாதவன் மட்டும் வேறுதிசையில் நடக்க தொடங்கினான்.

 

“என்னங்கய்யா, யாதவனும் மருமகளும் எங்கே போறாங்க? நம்மளை விட்டுட்டு” என்றபடி பதறிக் கொண்டு வந்தார் செல்வி.

 

“அவங்களுக்கு ஏதோ வேலை இருக்காம் செல்வி, நம்மளை ஊருக்கு கிளம்ப சொல்றாங்க. அப்புறமா வராங்களாம்” என்றார் வெற்றிவேந்தன் செல்பவர்களையே பார்த்துக் கொண்டு.

 

“அய்யோ என்னங்க இது? மூத்த மகன் தான் எங்கே இருக்கானோ தெரியல. சின்னவனையாவது பக்கத்துல வச்சு பாத்து மனச தேத்திக்கலாம்னு பாத்தா அவனும் பொண்டாட்டியை கூட்டிட்டு போறான். பெத்தவ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணுச்சா அவனுக்கு” என்று புலம்பினார் செல்வி.

 

“உன் கிட்ட சொல்லிட்டுப் போனா நீ போக விடமாட்டே, பெத்தவ பேச்சை மீறவும் முடியாது. அதான் சொல்லாமலே போறான். கட்டாயம் அவங்க வேலையை முடிச்சுட்டு திரும்ப வருவாங்க, வா நாம கிளம்பலாம்” என்றார் வெற்றிவேந்தன்.

 

செல்விக்கு கணவர் சொல்வது புரியவில்லை. ஆனாலும் மகன் ஏதோ வேலையாக செல்கிறான் திரும்பி வருவான் என்ற செய்தி அவருக்கு திருப்தியை கொடுத்தது. யாதவனும் ராதியும் பார்வை விட்டத்தை விட்டு அகலும் வரை மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஆருத்ரனுக்கு இதுதான் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்ததால் அவர் எந்த கேள்வியும் கேட்காமல் நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குபின்பு வெற்றிவேந்தனும் செல்வியும் விமானத்தில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர்.

 

**********

 

யாதவனும் அவன் ராதியும் வறட்சியால் பசியில் வாடிக் கொண்டிருக்கும் இடங்களை தேடி தேடி போயினர். ராதி தன் கையில் வைத்திருந்த வேங்குழலை எடுத்து அவனிடம் நீட்டி “யாதவா நின் வேங்குழலே” என்று கூறி மறைமுகமாக அவனை வாசிக்க கூறினாள்.

 

“வேங்குழல் மட்டுமல்ல வேங்குழலியும் என்னுடையது தான்” என்று புன்னகையுடன் அவளிடமிருந்த புல்லாங்குழலை வாங்கி “அமிர்தவர்ஷினி” ராகத்தில் அவன் வாசிக்க தொடங்க வறண்ட நிலங்கள் இருக்கும் இடமெல்லாம் அமுத மழை பொழிய தொடங்கியது.

 

*******

 

வெற்றிவேந்தனும் செல்வியும் சென்னையை வந்தடைந்ததும் வேலு பொன்னியின் இறப்பு செய்தியை சொல்ல, செல்வி கதறி அழுதுவிட்டார்.

 

“ஏன் வேலுண்ணா எனக்கு முன்னாடியே சொல்லல, என் அருவி ஒத்தையில ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாளே” என்று உடைந்து அழுதார்

 

“நீங்களே ரொம்ப நாளைக்கு அப்புறமா குடும்பமா வெளியே போய் இருக்கீங்க, அதுக்கு தான் நான் சொல்லல செல்வி, நான் கூடவே இருந்து பாத்துக்கிட்டேன்” என்றார் வேலு சமாதானமாக

 

“என்ன பெரிசா பாத்துக்கிட்டீங்க? ஒரு பொம்பளை கூட இருக்கறது போல வருமா? என் கருப்பி இந்த நேரத்துல கூட அத்தை வரலயேனு நினைச்சிருப்பாளே, அவளுக்கு நான் என்ன சமாதானம் சொல்லட்டும்”

 

“செல்வி அழாதே, கிளம்பு, இப்பவாவது கருப்பிய போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்றார் வெற்றி

 

“பொன்னியும் நானும் சின்னவயசுல இருந்து ஒண்ணா ஓடியாடி விளையாடினவங்க ஐயா, யாதவனை ஒத்தையில வச்சிட்டு இருக்கும் போது அவ தான் எனக்கு பக்கபலமா இருந்தாங்க. இன்னைக்கு அவ பொண்ணு அநாதையா இருக்கும் போது நான் கூட இல்லாம போயிட்டேனே” என்று அழுது கரைந்தவரை இருவரும் சமாதானம் செய்து அலங்காநல்லூர்க்கு கூட்டிக் கொண்டு சென்றனர்.

 

அவர்கள் மூவரும் வீட்டிற்குள் வந்ததும் பொதுவாக பார்த்து, “வாங்க” என்று விட்டு அமைதியாக இருந்தாள் அருவி. தன் தாயின் இறப்பிற்கு வராததால் அவளுக்கு செல்வியின் மேல் கோபம் இருந்தது. ஆனால் அதை காட்டும் உரிமை தனக்கு இல்லை என்று கருதி மெளனமாக நின்றாள்.

 

செல்வி அவளை கட்டிக் கொண்டு அழுதுவிட்டு, “அருவி, எனக்கு வேலு அண்ணன் தகவல் சொல்லலடி, தெரிஞ்சு இருந்தா, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்திருப்பேன். என்கூட வந்திடு அருவி, நான் உன்னைய பாத்துக்கறேன்” என்றவரை விலக்கினாள் அருவி

 

“வேணாம் அத்த, என் அம்மா செத்தப்போ சாஞ்சி அழ, ஒரு தோள் தேவைப்பட்டுச்சு, அப்போ உன்னைய ரொம்ப எதிர்ப்பார்த்தேன். ஆனா கடைசி வரைக்கும் நீ வரல. எதுவுமே நமக்கு தேவைப்படும் போது கிடைச்சா தான் அதுக்கு மதிப்பு இருக்கும். நான் இப்போ என் மனசை தேத்திக்கிட்டு வாழ ஆரம்பிச்சுட்டேன். அதனால யாரோட அனுதாபமும் எனக்கு தேவையில்ல”

 

“என் மேல கோபமா அருவி? என் மூத்தமகன் காணாம போன அதிர்ச்சியில இருந்தோம்டி” என்ற செல்விக்கு அதற்கு மேல் அவளுக்கு என்னவென்று விளக்குவது என்று புரியாமல் மீண்டும் கண்ணீர்விட, 

 

“கோபம் எல்லாம் இல்ல அத்தே, என்ன இருந்தாலும் உங்க வீட்டுக்கு வந்து இருக்க முடியாது. நீங்க வேணும்னா நேரம் இருக்கும் போது பாத்துட்டு போங்க. எனக்கு இங்க தனியா இருக்க முடியலனா நானே உங்க கிட்ட சொல்றேன். அப்போ என்னைய வந்து அழைச்சிட்டு போங்க. அதுவரைக்கும் நானே தனியா இருந்து பழகிக்கறேன்” என்று அருவி திட்டவட்டமாக சொல்லிவிட்டாள். 

 

மூவரும் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக செல்வி தன்னுடயை மாடுகளான முத்துகருப்பனையும், லட்சுமியையும் அருவியிடம் ஒப்படைத்துவிட்டு, “உனக்கு எப்போ தனியா இருக்கறது போல தோணுதோ, அப்போ உனக்காக ஒரு அத்தை இருக்கறானு நினைவுல வச்சுக்க, உடனே என்கிட்ட வந்துடு அருவி. நீ கூடிய சீக்கிரம் வந்துடுவனு நம்பி நான் இப்போ போறேன்” என்று சொல்லிவிட்டு கணவருடன் கிளம்பினார் செல்வி. 

 

யாதவனும் செந்தாழினியும் உலகப்பயணம் சென்று கொண்டிருந்தார்கள், அவ்வப்போது தாங்கள் இருக்கும் இடத்தை பற்றி தகவல் சொன்னதோடு சரி. எங்கெல்லாம் வெள்ளம், பூகம்பம், புயல் நோய் பரவல் போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

 

வெற்றிவேந்தனுக்கும் செல்விக்கும் முரளி கிருஷ்ணாவை நினைத்து கவலையாக இருந்தது. நாட்கள் மாதங்களாக உருண்டோடியதே தவிர அவனை பற்றிய எந்த தகவலும் இல்லை, அவனுடைய தற்போதைய நிலைமையை பற்றி தெரியாமல் தவித்தனர். இந்த பரந்த உலகத்தில் சிலையாகி போனவனை எங்கே சென்று கண்டுபிடிப்பது? இந்த மாதிரியான விஷயத்தை யாரிடம் போய் கேட்க முடியும்? சொன்னால் நம்புவார்களா? அதனால் இருவரும் தம்பதியராக சேர்ந்துக் கொண்டு ஒவ்வொரு கோயிலாக சென்று வந்துக் கொண்டிருந்தனர். சிலை என்றால் கோயிலில் இருக்கும் என்று யோசித்தார்களே தவிர, அது சுடுகாட்டில் இருக்கும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. செந்தாழினி முரளி சுடுகாட்டில் இருப்பதாக குறிப்பு கொடுத்திருந்தாலும், அவள் கோபத்தில் சொன்ன வார்த்தைகள் என்றே நினைத்தார் செல்வி.

 

*********

 

ஒரு வருடத்திற்கு பிறகு,

 

செந்தாழினி உருவத்தில் இருந்த ராதியின் சாபத்தால் சுடுகாட்டில் கற்சிலையாக மாறி இருந்த முரளிகிருஷ்ணா தன் தவறை உணர்ந்து கொண்டிருந்தான், அதற்காக மிகவும் வருந்தினான். ஆனால் சிலையாக இருப்பவனால் நான் திருந்திவிட்டேன் என்று யாரிடம் போய் சொல்ல முடியும்? இதிலிருந்து தப்பிக்க விமோசனம் இருக்கிறதா இல்லையா என்று கூட அவனுக்கு தெரியவில்லை. வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு விதியே என்று காலம் கழித்தான்.

 

அன்று ஏனோ அந்த பக்கம் யாரும் வரவில்லை என்பதால் யோசனையில் ஆழ்ந்திருந்தான். யாரை எதிர்பார்க்கிறோம்  இறந்தவர்களையா அல்லது வேறு யாரையுமா? என்று அவனுக்கே தெரியவில்லை.

 

அவன் யோசனையை கலைக்கும் படி அருவி வந்தாள். அவள் உடன் யாரும் வருகிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை, எப்போதும் போல தனியாக தான் சுடுகாட்டிற்கு வந்திருக்கிறாள் என்று வழக்கம் போல அவள் செய்கைகளை கவனிக்கலான்.

 

சில மாதங்களுக்கு முன்பு வரை அருவி தன் அன்னை ஏதோ வயக்காட்டில் வேலை செய்வது போலவும், அவருக்காக தினமும் எதாவது சாப்பிட எடுத்துக் கொண்டு வருவது போலவும் வந்துக் கொண்டிருந்தாள். வந்தவள் தூக்கு சட்டியில் இருந்த உணவை எடுத்து அவள் அம்மாவை புதைத்த இடத்திற்கு எதிரே இலையில் உணவை பரிமாறிவிட்டு தானும் ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டு செல்வாள். அதைப்பார்த்த அந்த ஊர் பெரியவர்களை அவளை அதட்டினார்கள். “இங்கே பாரும்மா இங்கெல்லாம் வயசு பொண்ணு வரக்கூடாது, கிளம்பு முதல்ல” என்று விரட்டினார்கள்.

 

“எங்கம்மா இங்கே தானே இருக்கு, நான் வேறெங்க போறது பெரியப்பா” 

 

“செல்வி தான் உன்னைய மெட்ராசுக்கு வரச்சொல்லி அம்புட்டு தூரம் கூப்பிடுச்சே, போக வேண்டியது தானே, இங்கன எல்லாம் வரக்கூடாது ஆத்தா, வயசு பொண்ணா இருக்கிற உன்னைய பேய் புடிச்சுக்கும் சொன்னா கேளு” என்று அவர் சொன்னதிலிருந்து தான் அவள் பயந்துக் கொண்டு வருவதை நிறுத்தினாள்.

 

ஆனாலும் மாதம் ஒரு முறை அவள் அன்னை இறந்த நாளன்று வந்து போவாள். அருவியின் செய்கை முரளிக்கு விநோதமாக இருந்தது. அவளை பொறுத்தவரை அவளுடைய அம்மா ஏதோ அங்கே தான் இருப்பது போல நடந்து கொண்டாள். 

 

அன்றும் அருவி நேராக தன் தாயை புதைத்த இடத்திற்கு சென்று பாலை வைத்துவிட்டு தன் அன்னையிடம் சண்டையிட தொடங்கி விட்டாள், “நீ பாட்டுக்கு இங்கே வந்து நிம்மதியா தூங்கிடலாம்னு நினைச்சியா? உன்னை சும்மா விட மாட்டேன். என் மேல கொஞ்சமாச்சு பாசம் இருந்தா இப்படி  என்னைய விட்டுட்டு போயிருப்பியா? எனக்கு பதில் சொல்லு, ஏன் இப்படி பண்ண? தனியா ஒத்தையில கிடந்து அல்லாடுறேனே, உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருந்துச்சா?” என்று இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுகையை ஆட்டி யாரோ எதிரில் இருப்பது போல பேசிக் கொண்டிருந்தாள்.

 

அவள் செய்கை பைத்தியக்காரத்தனம் போல இருந்தாலும் அதில் அவளின் பாசமும் தனிமையுமே தெரிந்தது. முரளிக்கும் அவன் அம்மா ரோகிணி இறந்த போது இதே கேள்வியும் கோபமும் தான் இருந்தது. அதை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் மொத்த கோபத்தையும் ஆற்றாமையையும் தன் தந்தை வெற்றியிடமே காண்பித்தான். ஆனால் இவள் நிலைமை இன்னும் மோசம் என்று பரிவுடன் அவளை பார்த்தான்.

 

அருவிக்கு யாரோ தன்னை குறுகுறுவென்று பார்ப்பது போல உணர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள், “யாரது, யாராச்சும் இங்கே இருக்கீங்களா?” குரல் கொடுத்தாள்.

 

இதுவரைக்கும் யார்கண்ணுக்கும் என்னை தெரியலயே, ஏன் இந்த பொண்ணு கூட கிட்டத்தட்ட ஒரு வருஷமா இங்கே வந்து போய்ட்டு இருக்கா. அப்போ எல்லாம் அவ கண்ணுக்கு தெரியாத என்னை, இப்போ இவளால உணர முடியுதா? என்று முரளி கிருஷ்ணா மீண்டும் அருவியை ஆர்வத்துடன் கவனிக்கலானான். எந்த பதிலும் வராததால் அவள் தன் அன்னையிடம் வம்பளந்துக் கொண்டிருந்தாள்.

 

அருவிக்கு மறுபடியும் ஏதோ உள்ளுணர்வு தோன்றியதோ என்னவோ செடியின் மறைவில் இருந்து அவளை யாராவது கவனிக்கிறார்களா என்று பயத்துடன் சுற்றும் முற்றும் கவனித்தாள். யாருமற்ற இந்த சுடுகாட்டில் தனிமையில் இருக்கும் அவளை யாராவது பின் தொடர்ந்து வந்திருந்தால்? இல்லையென்றால் அன்று பெரியப்பா சொன்னது போல எதாவது பேய் பிசாசு இருக்குமோ? நினைக்கும் போதே பக்கென்றது.

 

பாதுகாப்பிற்காக தன் இடையில் சொருகி இருந்த சின்ன சூரி கத்தியை எடுத்து நீட்டியபடி, “யாராவது ஒளிஞ்சுட்டு இருந்தா, மரியாதையா வெளியே வந்துடுங்க. நானா கண்டுபிடிச்சா அவ்வளவு தான்” என்று மிரட்டினாள்.

 

முரளிகிருஷ்ணாவிற்கு அவள் செய்கை வேடிக்கையாக இருந்தது. என்ன செய்கிறாள் என்று சுவாரசியமாக கவனிக்கலானான். அவள் புதர்கள் மண்டியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று செடிகளை விலக்கி விலக்கி பார்த்தாள்.

 

ஒருவித எச்சரிக்கையுடன், கையில் கத்தியை வைத்துக் கொண்டு தைரியமாக, அவள் நடந்துக் கொண்டவிதம் முரளிக்கு புதுமையாக இருந்தது. ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வந்தவள், கடைசியாக முரளி கிருஷ்ணா சிலையாக இருந்த புதர் அருகே வந்துவிட்டாள்.

 

முரளி சிலையாக மாறி இந்த இடத்திற்கு வந்து கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகியும் அவன் சிலை வடிவத்தை இதுவரை யாருமே கண்டதே இல்லை. ஏன் அந்த புதர் அருகே கூட யாரும் வந்தது இல்லை.  ஆனால் அருவி சில நொடிகளில் அவனை காணப்போகிறாள், அவனை கண்டதும் அவளுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? அவள் கண்களுக்கு நான் எப்படி தெரிவேன்? என்று ஆர்வமாக அவளை எதிர்நோக்கி இருந்தான்.

 

அருவி கீழே குனிந்துக் கொண்டு செடி மறைவில் யாராவது மறைந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு உறுதியான கால்கள் தென்படவும் அதிர்ச்சியானாள், தன் கத்தியை இன்னும் இறுகபிடித்தப்படி மெல்ல நிமிர்ந்தாள்.

 

ஒரு கை அவளை நோக்கி நீட்டியபடி ஆறடி உயரத்தில் இருந்த ஆண் சிலையை பார்த்ததும் அவள் இதயம் வேகமாக துடித்தது. கற்சிலையா இல்லை நிஜமாகவே ஒரு ஆண் தான் நின்று கொண்டிருக்கிறானா? என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது. அந்த அளவுக்கு அந்த சிலை தத்ரூபமாக இருந்தது.

 

எதையோ வாங்கி நீட்டியிருந்த கைகளை ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்தபடி மெல்ல நிமிர்ந்து முகத்தை பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாகி போனது. எதிரிலிருந்த சிலை யாதவனை போல இருக்கிறதே, அவனை போல சிலையை யார் செய்தார்கள்? இவ்வளவு கம்பீரமான சிலையை எதற்காக சுடுகாட்டில் வைத்திருக்கிறார்கள்? யார் செய்த வேலையா இருக்கும்? என்று மேலும் விழிவிரித்து பார்த்தவளையே சிலையின் கண்களும் கூர்ந்து நோக்குவது போல இருந்தது.

 

அந்த கண்களில் தெரிந்த உயிர்ப்பை பார்த்தவளுக்கு ஏனோ இது சிலையில்லையோ என்ற சந்தேகம் வர மெல்ல தன் கைகளை எடுத்து நீட்டியிருந்த அவன் கரத்தை அழுத்தமாக பற்றினாள். உறுதியான அந்த கைகைள் கல்லால் ஆன சிலை தான், ஆனால் கண்கள் மட்டும் எப்படி அவளையே பார்ப்பது போல தோன்றுகிறது?

 

சிலை பார்ப்பதற்கு யாதவன் போல இருக்குதே? அவன் தான் பொண்டாட்டியோட ஏதோ வெளிநாட்டுக்கு போய்ட்டான்னு செல்வி அத்தை சொல்லுச்சே. ஒருவேளை ஊர்ல இருந்து வந்துட்டானா? எப்பவும் சீண்டற மாதிரி என்னிடம் விளையாடுகிறானா? கற்சிலை போன்ற வேசத்தோடு வந்திருக்கிறானோ? என்று நினைத்தவள், எச்சிலை விழுங்கிக் கொண்டு, “யாதவா” என்றது தான் தாமதம், இதுவரை அந்த கண்களில் இருந்த கனிவு அவளை மிரட்டுவது போல கோபத்தை காட்டியது.

 

“யாதவா விளையாடாத, நீதானே” என்று அந்த சிலையின் கரத்தை பற்றி உலுக்கினாள். முடிந்த மட்டும் அந்த சிலையை அசைத்து பார்த்தாள், ஆனால் முரளியின் சிலை கொஞ்சம் கூட அசைய வில்லை, அவன் மனது மட்டும் லேசாக அசைந்ததோ? அது அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் அவள் யாதவா என்று கூப்பிட்டது மட்டும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. கண்களிலும் அதுவே தெரிய ஒருவேளை பேயோ பூதமோ என்ற பயத்துடன் அங்கேயிருந்து தலை தெறிக்க ஓடினாள்.

 

 

*********

 

இடுகாட்டில் முரளியின் சிலையை பார்த்த அருவி, பயந்து ஊருக்குள் ஓடி வந்ததால், வந்த வேகத்தில் எதிரில் பேசி சிரித்துக் கொண்டு வந்த பெண்களின் மேல் மோதி கீழே விழுந்தாள். அவசரமாக அவளை தூக்கி நிறுத்திய அந்த பெண்கள், “ஏய் அருவி, எதுக்குடி இப்படி ஓடியாற?”

 

“அது அது” என்று மூச்சு வாங்கினாள் அருவி

 

“எதுக்குடி இப்படி மூச்சுவாங்குற? மத்தியான நேரத்துல உச்சி வெயிலுல ஏதோ பேயே பார்த்தவ மாதிரி ஓடி வர்ற, என்னாச்சு” என்றாள் இன்னொருத்தி.

 

“ஐயோ அப்போ நான் பாத்தது பேயா” என்று மேலும் பதறினாள்

 

“என்னடி உளர்ற, என்ன நடந்துனு விவரமா சொல்லு”

 

“எங்கம்மாவை புதைச்ச இடத்துக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம்னு போனேன். யாரோ உத்து பாக்கறது போல இருந்துச்சு, என்னானு தேடிப்பார்த்தேன். அப்போ அப்போ அங்கன இருந்த ஒரு பொதருக்கு நடுவுல நல்லா ஐயனார் சிலை கணக்கா கருப்பா ஒரு உருவம் கையை நீட்டிட்டு இருந்துச்சு. பாக்கறதுக்கு நம்ம யாதவனை போல இருக்கவும் அவன் தான் வேஷம் போட்டு பயமுறுத்தறானோனு நினைச்சேன். ஆனா அது யாதவன் இல்ல. ஏதோ கருங்கல்லால செஞ்ச சிலை மாதிரி இருந்துச்சு”

 

“அந்த சுடுகாட்டுல யார் சிலையை கொண்டுபோய் வச்சிருப்பாங்க? அதுசரி அந்த சிலைய பார்த்தா இப்படி மூச்சிறைக்க ஓடியாற்ரவ?

 

“அந்த சிலை என்னை முறைச்சி பாக்கிற மாதிரி இருந்துச்சு. பாக்கவே உண்மையா ஒரு ஆளு முறைக்கறாப்புல இருந்துச்சு. அதான் ரொம்ப பயந்துட்டேன்” என்றாள்.

 

“என்னாடி இவ கத உடுறா, தினமும் அந்த சுடுகாட்ட தாண்டி தான் நான் ஏரிக்கரைக்கு போய் துணியெல்லாம் துவைச்சு எடுத்தாறேன். ஒருநாள் கூட அங்கன எந்த சிலையையும் பாத்ததில்லயே” என்றாள் வேணி என்பவள்.

 

“வேணி அக்கா என் அம்மா மேல சத்தியமா, அங்கே ஒரு சிலை இருக்கு, ஐயனார் மாதிரி நல்லா உசரம்”

 

“அப்படியா, சரி வாங்கடி ஒருக்கா போய் பாத்துட்டு வந்துடலாம்” என்று வேணி சொல்ல, மற்ற பெண்களும் அருவியை அழைத்துக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்றனர். அருவி அவர்களை அழைத்துக் கொண்டு சென்று முரளிகிருஷ்ணாவின் சிலை இருந்த புதர் அருகே சென்றாள்.

 

முரளியின் கண்கள் அவளை ஆழ்ந்து நோக்கியது. வேணியின் பின்னால் ஒளிந்துக் கொண்டு “அக்கா அங்கே பாரு” என்று முரளியின் சிலையை காட்டினாள்.

 

“எங்கடி இருக்கு? ஒண்ணுத்தையும் காணாமே” என்றனர் வந்திருந்த பெண்கள் எல்லாம்

 

“அய்யோ நல்லா கண்ணை திறந்து பாருக்கா, கருப்பா ஐயனார் சிலை மாதிரி நின்னுகிட்டு முறைச்சி பாக்கறமாதிரி இருக்கே இவ்வளவு பெரிய உருவம், உங்களுக்கு தெரியலயா?” என்று சிலையை காட்டினாள்.

 

அவள் காட்டிய திசையில் அவர்கள் கண்களுக்கு வெறும் செடிகொடிகளே தெரிய அந்த பெண்கள் அவளை ஒரு தினுசாக பார்த்தனர். இப்போது முரளியின் கண்கள் சிரித்தது போல தெரிந்தது, அருவி வேணியின் முதுகில் முகத்தை மறைத்துக் கொண்டு, “பாரு பாரு, என்னை பாத்து அந்த உருவம் சிரிக்குது” என்றாள்.

 

மற்ற பெண்கள் அவளை ‘இவ என்ன லூசா?’ என்பது போல பார்த்தனர்.

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top