வேங்குழல் 27

“வேணி அக்கா, இவளை நம்ம கோடாங்கி சாமியார்கிட்ட கூட்டிட்டு போய் வேப்பிலைல மந்திரிச்சு தாயத்து கட்ட சொல்றது நல்லதுனு நினைக்கிறேன். எப்போ பார்த்தாலும் சுடுகாட்டு பக்கமாகவே போய்ட்டு வர்றாளேனு அப்பவே நினைச்சேன். அதே மாதிரி ஆயிடுச்சு, பேய் தான் புடிச்சிருக்கும் இவளுக்கு” என்று ஒருத்தி சொல்ல

 

“ஆமாண்டி, நானும் அதையே தான் நினைச்சேன். ஏய் அருவி, இனிமேட்டுக்கு இந்த சுடுகாட்டு பக்கமா உன்னைய பாத்தேன்னு வச்சுக்க, கழுத்து மேலயே ஒண்ணு போடுவேன். ஒழுங்கா வீட்ல இருக்கறதா இருந்தா இரு. இல்லனா செல்வி அத்தைக்கு போனை போட்டு உன்னைய மெட்ராஸூக்கு கூட்டிட்டு போக சொல்றேன்” என்று அருவியை இழுத்துக் கொண்டு போனார்கள்.

 

அருவி திரும்பி திரும்பி முரளி கிருஷ்ணாவின் சிலையை பார்த்துக் கொண்டே போனாள். முதன்முறையாக ஒருத்தியின் கண்களுக்கு அவன் உருவம் தெரிந்ததே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. முரளி கிருஷ்ணாவின் கண்கள் அருவியை ஆழ்ந்து, இவள் மூலமாக தனக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா என்று ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தது.

 

பின்னால் திரும்பி பார்த்த அருவிக்கு முரளியின் ஏக்கமான பார்வை மனதை என்னவோ செய்தது. அன்றிரவு சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து கண்மூடியவளுக்கு அந்த சிலையின் பார்வையே கண்முன்னால் வந்து நின்றது.

 

சந்தேகமே இல்லை, அது கற்சிலைதான். ஆனால் சிற்பியின் கைவண்ணத்தால் சிலையின் கண்கள் உயிர்ப்புடன் இருக்கும் தான். நம்மையே பார்ப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கும் சிலையை அவளும் பார்த்திருக்கிறாள் தான். தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று நம் முன்னோர்களின் சிலை வடிக்கும் திறமையை எண்ணி வியந்திருக்கிறாள் தான். ஆனால் எந்த சிலையிலும் இப்படிப்பட்ட பல்வேறு பார்வை மாறுப்பாட்டை அவள் கண்டதே இல்லை.

 

முதலில் அவள் சிலையை அதிர்ச்சியோடு பார்த்த போது சிலையின் கண்களிலும் அதே திகைப்பு, சற்று நேரத்திற்கெல்லாம் அவள் யாதவனின் பெயரை சொன்னதும் கண்களில் தெரிந்த கோபம். வேணி அக்காவோட சென்று சிலையை காண்பிக்கும் போது அது அவர்கள் கண்களுக்கு தெரியாமல் போனதால் வேணி அவளை திட்டிக் கொண்டிருக்கும் போது அந்த கண்களில் குறும்பு பார்வை கடைசியாக அவர்கள் இனி சுடுகாட்டிற்கு வரக்கூடாது என்று அவளை இழுத்துக் கொண்டு சென்ற போது அந்த கண்களில் தெரிந்த ஏமாற்றம். 

 

அந்த கண்கள் அவளிடம் இன்னும் ஏதேதோ பேசியதோ? யாரிடமோ மாட்டிக்கொண்ட சிறு குழந்தை என்னை காப்பாற்றேன் என்று கண்களால் கெஞ்சுவது போலவும் தோன்றியது. அருவி தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள். 

 

வேணி அக்கா சொன்னது அவள் காதில் விழுந்தது, “அருவி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, அம்மா செத்தது வாழ்க்கையில பெரிய இழப்பு தான். ஆனா அடிக்கடி சுடுகாட்டு பக்கம் போறது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல. அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போறேன்னு நீ போறதை பார்த்து இப்பவே உன்னைய நிறைய பேரு, பைத்தியம்னு நினைக்கிறாங்க. 

 

நீயும் அதுக்கு தகுந்தாப்புல யாருமே இல்லாத அந்த சுடுகாட்டுல ஒரு சிலை இருக்குனு கை காட்ற. இனி அந்த பக்கம் போகாதே. உன்கூடவே இந்த வீட்ல தானே உன் அம்மா வாழ்ந்தாங்க. அவங்க ஆத்மா உனக்காக  இங்கே தான் சுத்திக்கினு இருக்கும். அப்படி இருக்கும் போது எதுக்காக நீ சுடுகாட்டுக்கு போறே? இப்போ பார்த்தியா, உனக்கு பேய் பிடிச்சிருக்கு, மூளை கலங்கிருச்சுனு எல்லாரும் பேசறாங்க”

 

“அக்கா என்னைய நம்பு, உண்மையாவே அங்கே சிலை இருந்துச்சுக்கா, அது என்னைய பார்த்து சிரிச்சது, என் ஆத்தா மேல சத்தியமா சொல்றேன்கா”

 

“அருவி, இனி சிலையை பத்தி நினைக்காத, அது அங்கன இருந்ததாவே இருக்கட்டும். அதுக்கு என்ன பண்ணலாங்கிற?” என்றாள் வேணி பொறுமையின்றி அதட்டலாக.

 

அந்த அதட்டலில் அருவி மெளனமாக இருந்தாள். அவள் தலையை வருடிக் கொடுத்த வேணி, “கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு, இப்படி தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு மனச குழப்பிக்காத. சிலையை பத்தி யோசிக்காம படுத்து தூங்கு. என் மாமா இந்நேரம் வேலைக்கு போய்ட்டு வந்திருக்கும், நான் காலையில வந்து உன்னைய பாக்கறேன்” என்று சொல்லி விட்டு சென்றாள் வேணி.

 

குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதையாகி போனது அருவிக்கு. கண்களை மூடி என்னனென்னவோ மனக்கண்ணில் கொண்டு வந்து சிலையை மறக்க முயன்றாள். ஆனால் ஆளுயர கம்பீரமான சிலையும், அந்த கண்களில் தெரிந்த நவரசங்களும், அது சிலையா இல்லை வேறேதுவுமா என்று குழப்பமாக இருந்தது. காலையில் அவள் கண்களுக்கு தெரிந்த அந்த சிலை ஏன் மற்றவர்களுக்கு தெரியவில்லை? எப்போது, யார் அதை கொண்டு வந்து வைத்திருப்பார்கள்? இரவிலும் அந்த சிலை அங்கேயே இருக்குமா? ஒரு வேளை வேணி அக்கா சொன்னது போல அங்கே சிலையே இல்லையா? எல்லாம் என்னுடைய பிரமையா? என்று கேள்விகள் அவள் மூளையை குடைந்துக் கொண்டே இருந்தது.

 

இப்போது அந்த சிலை அங்கே தான் இருக்குமா? அதற்கு மேல் தூக்கம் வராது என்று தோன்றவே எழுந்து லாந்தர் லைட்டை எடுத்துக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டை நோக்கி சென்றாள். அவள் சென்றுக் கொண்டிருந்த வழியில் மாந்தோப்பில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நால்வர், லாந்தர் வெளிச்சத்தை பார்த்து திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். அருவி தன்னந்தனியாக இந்த நேரத்தில் எங்கே செல்கிறாள்? என்பது போல நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருவியின் பின்னால் அவளுக்கு தெரியாமல் அவளை பின்தொடர்ந்தனர்.

 

பிணங்கள் எரிந்துக் கொண்டிருக்கும் சுடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் யாரோ லாந்தர் லைட்டை எடுத்துக் கொண்டு வருவதை உணர்ந்த முரளி யோசனையானான். அருவி தன் முகத்தருகே லாந்தர் லைட்டை பிடித்தபடி பயந்து கொண்டே முரளி இருந்த புதர் அருகே வந்தாள்.

 

இந்த நேரத்தில் எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என்று கேள்வியாய் அவன் கண்கள் அவளை நோக்க, அருவியும் அவன் கண்களை தான் உற்று நோக்கி கொண்டிருந்தாள். “நீங்க யாரு? உண்மையாவே சிலையா?” என்றாள்.

 

பதில் பேச முடியாதவன், அவள் கண்களை உற்று நோக்கினான், “இதை கேட்க இந்த நேரத்தில் வரணுமா?” என்பதாக அந்த பார்வை உணர்த்த, “என்னவோ தெரியல, கண்ணை மூடினாலே உங்க உருவம் தான் கண்ணுல வந்து நிக்குது, எனக்கு ஒரு வேளை பிரமையா இருக்குமோனு சந்தேகம் வந்துச்சு, அதான்” என்றவள் சட்டென்று அவன் நெற்றியில் தன் கரத்தை வைத்தாள். புருவம், நெற்றி, கண்கள், நாசி, கன்னம் என்று ஒவ்வொன்றாக அழுத்தி தடவி பார்த்தாள். 

 

கல்லாகி போனாலும் உணர்ச்சிகளோடு இருந்த முரளிக்கு அவள் செய்கை என்னவோ போல இருந்தது. இப்போது அவள் விரல்கள் அவன் இதழ்களை வருடியது, மெல்ல கீழிறங்கி அவன் பரந்து விரிந்த மார்பின் உறுதியை ஆராய்ந்தது. வலப்பக்க தோள்பட்டையில் ஏதோ கோடு போல இருக்கவும், அதை விரல் நகத்தால் சுரண்டினாள்.  “என்னடா இது சோதனை” என்று நினைத்தான் முரளி.

 

“எந்த கல்லுல செஞ்சாங்கனு தெரியலயே இவ்வளவு உறுதியா இருக்கு” என்றபடி தன் ஆட்காட்டி விரலை மடக்கி கதவை தட்டுவது போல அவன் நெஞ்சில் தட்டினாள். அது என்னவோ முரளியின் இரும்பு இதயத்தின் கதவை தட்டியது போல இருந்தது. அருகாமையில் நின்றிருந்த அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

திறமையான சிற்பியால் வடிவமைக்கப்பட்ட பெண் சிலை போல இருந்தவள் தன் முன்னால் இருந்த ஆண் சிலையை நள்ளிரவு நேரத்தில் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

 

“என்னடா மாரி, ஊருக்குள்ள பேசிக்கிறது போல இந்த அருவிக்கு பைத்தியம் தான் பிடிச்சிடுச்சு போல,  தனியா நின்னு காத்துல கோலம் போட்டுட்டு இருக்கறா” என்ற ஆண் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் அருவி. மாரியும் அவனுடைய சகாக்களும் நின்றிருந்தார்கள்.

 

முரளி கிருஷ்ணாவும் அப்போது தான் அவள் பின்னால் நின்றிருந்த நால்வரையும் பார்த்தான். எதற்காக இவர்கள் இந்த நேரத்தில் வந்திருக்கிறார்கள் என்று அவன் யோசிக்கும் போதே, வந்திருந்தவர்களில் ஒருவன் அதற்கு பதில் சொல்லும் விதமாக பேச தொடங்கினான்.

 

“பைத்தியம் புடிச்சா என்ன? பேய் புடிச்சா தான் நமக்கென்னடா, சண்டிராணியாட்டாம் யாருக்கும் அடங்காம சுத்திட்டு இருந்தவ, இப்ப தனியா, தொக்கா வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டாளே, அத பார்டா” என்றான் அந்த மாரி

 

“ஏய், என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு?” என்றாள் அருவி பதட்டத்தை மறைத்துக் கொண்டு

 

“கருப்பா இருந்துட்டு என்னமோ உலக அழகியாட்டம் சிலுப்பிட்டு போறே, அன்னைக்கு, நான் கட்டிக்கறேன்னு தானே கேட்டேன், வச்சிக்கிறேன்னா கேட்டேன்? காது கேக்காதவளாட்டம் கண்டுக்காம போறே?” என்றான் மாரி குடிபோதையில் நாக்கு குழறியபடி

 

“அதில்லடா மாரி, அந்த யாதவனை கட்டிக்கலாம்னு கனா கண்டுட்டு இருந்தா, அதான் உன்னை கண்டுக்காம சுத்திட்டு இருந்தா. அவன் தான் யாரோ ஒருத்திய கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்துட்டானே, அப்பவும் அவன் நினைப்பாவே சுத்திட்டு இருக்கறா. காளைய அடக்கறவன் தான் ஆம்பளைனு நினைச்சுட்டா போல. நீயும் ஆம்பளைதான்னு அவளுக்கு புரிய வச்சுடு, தானா உன்னைய கட்டிக்குவா” என்றான் மாடசாமி

 

“அடச்சீ, வாயை மூடுங்கடா, யாதவனை நான் மட்டுமா விரும்பனேன்? இந்த ஊரே விரும்புச்சுடா, காளைய அடக்கனதால மட்டும் அவன் தான் ஆம்பளனு நினைச்சு இந்த ஊர் பொண்ணுங்க அவனை விரும்பல. எல்லார்கிட்டயும் கண்ணியத்தோட பொண்ணுங்களை மதிச்சு நடந்துக்கிட்டான், அத பாத்து தான் எல்லாரும் அவனை விரும்பனாங்க. நானும் விரும்பனேன் தான். அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரைக்கும் கிருஷ்ணரை காதலிக்காத பொண்ணுங்க இருக்காங்களா என்ன? பக்தியை காதலாகவும் காட்டி இருக்காங்க, யாதவ் மேல இருந்த என்னோட காதலும் அப்படிப்பட்டது தான்.

 

தனக்கு பிடிச்ச ஹீரோவை விரும்பற ரசிகை போல தான் எனக்கும் யாதவன் மேல விருப்பம் இருந்தது. அவனை உங்களோட ஒப்பிட்டு பாக்கற அளவுக்கு நீங்க வொர்த் இல்ல. பொண்ணுங்களை வெறும் சதைபிண்டமா பாக்கற நீங்கல்லாம் ஆம்பளையாடா?” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று முன்னால் நடந்தாள்.

 

அருவியின் வார்த்தைகள் அந்த நால்வருக்கு உறைத்ததோ இல்லையோ முரளியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாற் போன்ற உணர்ந்தான். ‘எல்லாராலும் விரும்பப்படும் ஒரு சிறந்த ஆண்மகனாக என் சகோதரன் யாதவ் இருந்திருக்கிறான், ஒரு பொண்ணை அடக்கி அவள் உடலை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விட்டால் மட்டும் அவன் ஆணாகி விட முடியுமா? அவன் வெல்ல வேண்டியது அவளின் உடலை அல்ல, மனதை! 

 

இதுவரை முரளி கிருஷ்ணா எந்த பெண்ணின் மனதையும் வென்றதில்லையே, அந்த வகையில பார்த்தால் நான் ஒரு ஆண்மகன் தானா?’ தனக்குள்ளே கூனி குறுகி போனான் முரளி கிருஷ்ணா.

 

“என்னடா மாரி ஆம்பளையானு கேட்டுட்டு போறா? சும்மா இருக்க?” என்று மாடசாமி உசுப்பேற்றவும்

 

மாரி ஓடிச்சென்று பின்னாலிருந்து அருவியின் தாவணியை பிடித்து இழுத்தான். முரளிக்கு உள்ளுக்குள் நரம்புகள் புடைத்துக் கொண்து, ஆனால் வெளியே எந்த உணர்ச்சியும் காட்ட முடியவில்லை, கோபத்தை அடக்க கைமுஷ்டியை கூட அவனால் மடக்க முடியாமல் போகவே முதல் முறையாக தான் சிலையாக இருப்பதை எண்ணி மிகவும் வருந்தினான்.

 

அருவியை இந்த ஒரு வருடமாக பார்த்துக் கொண்டு இருக்கிறான், அவள் மேல் காதல் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவள் மேல் ஒரு பரிவும் பாசமும் வந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சற்றுமுன்பு அவள் நெருங்கி அவன் முகத்தில் தன் விரல்களால் கோலமிட்ட போது, கல்லுக்குள்ளும் அவன் தேகம் சிலிர்க்கத்தான் செய்தது. இப்போது இந்த நால்வரும் அவள் முன்னால் வந்து நின்றதும் அவன் உள்ளம் பதறியது.

 

இந்த பெண் எதற்காக இந்த நேரத்தில் இங்கே வர வேண்டும், இவர்கள் எதாவது செய்தால் என்னால் காப்பாற்றக்கூட முடியாதே என்று பதைபதைப்புடன் தான் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மாரி பிடித்து இழுத்ததில் தாவணி அவன் கையோடு வந்து விட, அருவி சட்டென்று முரளியின் சிலை பின்னால் சென்று தன் மானத்தை மறைத்துக் கொண்டாள். மாரியோ தன் முன்னால் இருந்த புதரில் கைவிட்டு துழாவி கொண்டிருந்தான். “ஏய் எங்கடி செடிங்களுக்கு நடுவுல போய் ஒளிஞ்சுக்கிட்ட வாடி வெளியே” என்றான் ஆவேசமாக

 

“டேய் மாரி, நாங்க இருக்கும் போதே கட்டிக்க போற பொண்ணு தாவணியை பிடிச்சு இழுக்கறீயேடா” என்றான் மாடசாமி

 

“கட்டிக்க நினைச்சது எல்லாம் அப்போ அவ ஆத்தா இருந்தப்போ மச்சி. இப்போ இந்த பைத்தியத்தை கட்டிக்கிட்டு காலம் முழுக்க வைத்தியம் பாக்க சொல்றீயா? அதெல்லாம் முடியாது, அருவியில குளிச்சமா, போனாமானு இருக்கணும், வீட்டுக்கு கொண்டு போனா வெள்ளம் வந்திடும் மச்சி” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான்.

 

“அப்போ நாங்களும் அருவியில குளிக்கலாம் இல்ல” என்றனர் மற்ற மூவரும் கோரசாக 

 

“ஓ தாராளாமா”, என்றபடி புதருக்குள் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்தான் மாரி

 

சிலை அவர்கள் கண்களுக்கு தெரியாததால், அவள் மறைந்து கொண்டிருப்பது கூட அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சிலையின் பின்னால் இருந்தவளை தொட்டுவிடும் தூரத்தில் அவர்கள் கைகளை துழாவிக் கொண்டே வர, அவள் தன் கையில் இருந்த லாந்தர் விளக்கால் அவர்களை தாக்கினாள்.

 

தன் பின்னால் பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருப்பவளின் மானத்தை காக்க முடியாத தன் கையறு நிலையை நினைத்தவனுக்கு உள்ளம் கொதித்தது, தான் செய்த தவறும் உறைத்தது. இவர்களாவது தங்கள் உண்மை முகத்தை காட்டி அருவியிடம் தவறாக நடந்துக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அவன் தன் தம்பியின் உருவத்தில் போய் அவன் மனைவியை அடைய நினைத்தானே, அது எத்தனை பெரிய பாவம்? அந்த பாவத்திற்கு தான் தன் கண்முன்னால் நடந்துக் கொண்டிருக்கும் கொடுமையை தட்டிக் கேட்க முடியாமல் கல்லாகி கிடக்கிறேனா? கடவுளே, அவளை காப்பாற்றும் வரை எனக்கு சக்தியை கொடு, அதற்கு பின் மறுபடியும் என்னை நிரந்தரமாக சிலையாக்கி விடு என்று கடவுளை மனதார வேண்டினான்.

 

அசைய முயற்சி செய்தான் முடியவில்லை, கைகளை தூக்கி அவர்களை தாக்க நினைத்தான் பலனில்லை. அருவி தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த களைகளை அறுக்க பயன்படுத்தும் சிறிய கத்தியை எடுத்து அவள் பக்கமாக வந்த கைகளுக்கு கோடு போட்டாள்.

 

“ஆ” என்ற வலியுடன் கையை எடுத்து தன் முகத்தருகே கொண்டு சென்று கண்களை சுருக்கி பார்த்த மாரி பதறினான். “மாடா கையில ரத்தம் வருதுடா, கத்தியால கோடு போட்டுட்டா” என்று அலறினான்.

 

“என்னடா சொல்றே, போதையில உளராத, அவ கண்ணுக்கே தெரியல, கோடு போட்டானு சொல்றே, ஒரு வேள முள் செடில கை கிழிஞ்சிருக்கும். இரு நான் அவளை புடிச்சு இழுக்கறேன்” என்றபடி மாடசாமி முன்னேறினான்.

 

அருவி முரளியின் சிலையை பின்னாலிருந்து அணைத்தபடி நின்று எட்டி மாடசாமியின் கையிலும் கத்தியால் கோடு போட்டாள், அவனும் வலியுடன் கையை எடுத்துக் கொள்ள, அவன் கையில் வழிந்த இரத்தத்தை பார்த்த மற்ற இருவரும் பின்வாங்கினர்.

 

“மாரி, இந்த பொண்ணை சாதாரணமா நினைச்சிடாதே, இவளுக்கு பைத்தியம் எல்லாம் புடிக்கல, சுடுகாட்டுல இந்த நேரத்துக்கு வர்றானா ஏதோ சூனியக்காரியா தான் இருப்பா. நம்மள பலிபோட்டாலும் போட்டுடுவா வா ஓடிரலாம்” என்றனர்

 

“டேய் என்னங்கடா என்னென்னமோ சொல்றீங்க? அடிச்சது எல்லாம் மொத்தமா இறங்கிடும் போலயே” என்றான் மாரி

 

“ஆமாடா நம்ம பசங்க சொல்றது சரிதான், புதருக்குள்ள போனவ கண்ணுக்கே தெரியல, எவ்வளவு நேரமா நாமளும் தேடறாம்? கையை கிழிச்சி இரத்தம் வரவச்சிட்டா கழுத்த அறுக்கறதுக்குள்ள ஓடிரலாம்” என்று மாடசாமி சொல்லவும் நால்வருக்கும் கிலிபிடித்துக் கொண்டது.

 

சரியாக ஆந்தை ஒன்று அந்த நேரத்தில் அலற, நான்கு பேரும் தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களிடம் தனியாக மாட்டி சிக்கி சின்னாபின்னமாகி விடப்போகிறோம் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர்கள் பயந்து ஓடிச்செல்வதை பார்த்து தான் மூச்சே வந்தது. 

 

ஒரு கையில் இருந்த லாந்தர் விளக்கையும், இன்னொரு கையில் இருந்த கத்தியையும் அப்படியே போட்டு விட்டு, பின்னால் இருந்து முரளியின் சிலையை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். சிலையின் முதுகில் முகத்தை சாய்த்து, “நல்லவேளை என்னையும் என் மானத்தையும் காப்பாத்திட்டீங்க” என்றவளின் கண்களில் இருந்த கண்ணீர் அவன் முதுகை நனைத்தது.

 

சிலையாக நின்றிருந்ததை தவிர அவன் எதுவுமே செய்யவில்லை. இதுவரை அந்த நால்வரை அடிக்க துடித்த கைகள், இப்போது ஏனோ பின்னால் இருப்பவளை இழுத்து அணைத்து ஆறுதல்படுத்த பரபரத்தது. தான் சிலையாக்கப்பட்டது கொடுந்தண்டனை என்று இன்று தான் அவன் முழுவதுமாக உணர்ந்தான். 

 

அருவியோ தனக்கு வந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது இந்த சிலை தான் என்று நம்பினாள். யாருமற்ற அநாதையாக இருக்கும் தனக்கு, இந்த சிலை தான் இனி வாழ்க்கையின் ஆதாரம் என்று தோன்றியது,  இதை தன்னோடவே வைத்துக் கொண்டால் இன்னுமே பாதுகாப்பாக இருக்கலாம், என்று எண்ணியவள் மேலும் மேலும் அந்த சிலைக்குள் ஒடுங்கி நின்றாள். நொடிகள் நிமிடங்களாகி மணித்துளிகளாக கரைந்தாலும் அவள் சிலையை விட்டு பிரியாமல் பிணைந்திருந்தாள்.

 

கல்லுக்குள் மென்மையான உணர்வுகளை தூண்டிக் கொண்டிருக்கிறோம் என்று அவளும் உணரவில்லை. இன்னதென்று பிரித்தறிய முடியா உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் இருந்தான் முரளி கிருஷ்ணா! 

 

அவன் இதுவரை யாரையும் அன்போடு அணைக்கவோ அணுகவோ அனுமதித்ததில்லை. தந்தையையே எட்டி நிறுத்தியவன், செல்வியை வீட்டை விட்டு அனுப்பியதற்கு பிறகு, அதிகாரத்தை மட்டுமே மற்றவர்களுக்கு காட்டி வந்தான், அவர்கள் அவனிடம் காட்டிய பயம் கலந்த மரியாதையே அவனுக்கு போதையாகி போனது. பின்னாளில் அவனும் யாரிடமும் அன்பை காட்டியதில்லை, அவர்கள் அன்பை ஏற்றதும் இல்லை. இன்று ஒருத்தி கல்லாக இருக்கும் தன்னை அன்போடு அணைத்திருக்கிறாள், இத்தனைக்கும் அவன் அவளுக்காக எதுவுமே செய்யவில்லை. இந்த சூழ்நிலை அவன் மனதை என்னவோ செய்தது.

 

அருவி முரளியின் சிலைக்கு முன்னால் வந்து, “நீங்க சிலையா? இல்லை பிரமையானு தெரியல. நான் பேசறது உங்களுக்கு கேட்குமானு கூட தெரியல. என்னை பொறுத்தவரைக்கும் நீங்க உண்மையான ஒரு ஜீவன் போல தான் தெரியறீங்க. எதுக்காக இந்த சுடுகாட்டுல இருக்கீங்க? என் கூட எனக்கு துணையா என் வீட்ல வந்து இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

 

‘நீ பேசுவதை கேட்கவும், உன்னை பார்க்கவும் மட்டுமே முடிந்த என்னால், உன் கூட எப்படி வரமுடியும்’ என்று மனதிற்குள் நினைத்தபடி அவளையே பார்த்திருந்தான் முரளி கிருஷ்ணா

 

“என் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரியறீங்க?” 

 

அதற்கும் அவனிடம் பதில் இல்லை.  “நான் மறுபடியும் இந்த சுடுகாட்டுக்கு வரமுடியாது, என்னை பைத்தியக்காரினு சொன்னா கூட பரவாயில்ல, சூனியக்காரினு சொல்லிடுவாங்க போல. அதனால நான் இனி இங்கே வரமாட்டேன்” என்றாள் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி

 

தான் இருப்பதை உணர்ந்த ஒருத்தியும் இனி வரப்போவதில்லை என்கிறாளே, இனி காலம் முழுவதும் இந்த இடுகாட்டில் தான் இருக்கணுமா? புல்லாங்குழலை அடைந்து ராஜபோக வாழ்க்கை வாழணும்னு நினைச்சேன். ஆனா சராசரி மனுஷனா கூட வாழ கொடுத்து வைக்கலியே என்று தனக்குள் எண்ணி வருந்தினான்.

 

அருவி தன்னால் முடிந்தவரை அவன் சிலையை நகர்த்த முயற்சி செய்தாள். எப்படியாவது அந்த சிலையை நகர்த்தி தன் வீட்டிற்கு கொண்டு சென்று விடவேண்டும் என்பதே அவள் எண்ணம். ஆனால் அவளால் அசைக்க கூட முடியவில்லை. நள்ளிரவை தாண்டி விடிய ஆரம்பித்ததால், இனி ஊர்மக்கள் நடமாட்டம் அதிகமாகி விடும், அவளை இந்த இடத்தில் பார்த்தால் மீண்டும் வம்பு பேசுவார்கள் என்று நினைத்தவளாக, முரளியின் சிலையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டிற்கு போனாள்.

 

அவள் வீட்டை அடைவதற்கும் அவள் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. இந்த அதிகாலை நேரத்தில் யார் வீட்டின் முன்னால் காரில் வந்திருக்கிறார்கள் என்ற கேள்வியோடு வீட்டை நோக்கி நடந்தாள்.

 

செல்வி தான் காரில் இருந்து இறங்கி வீடு பூட்டியிருப்பதை பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தார். அருவியை கண்டதும், “ஏய் கருப்பி இவ்வளவு காலைல எங்கேடி போய்ட்டு வர்ற?” 

 

கருப்பி என்றாலே செல்வியிடம் வாயாடுபவள், இப்போது அதை கண்டுக்கொள்ளாமல், “சும்மா காலாற நடந்துட்டு வர்றேன், என்னத்த இவ்வளவு காலையில வந்திருக்கீங்க?” என்றபடி கதவை திறந்தாள்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெற்றிவேந்தனும் வேலுவும் கூட காரில் இருந்து இறங்கி செல்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தார்கள். 

 

“நேத்து ராத்திரி வேணி போன் பண்ணியிருந்தா, என்னாடி எப்போ பாத்தாலும் சுடுகாட்டு பக்கமாவே சுத்திட்டு இருக்கியாமே” என்று அதட்டினார் செல்வி

 

பதில் பேசாமல் தலையை குனிந்திருந்த அருவியின் கண்களில் கண்ணீர் பெருகி தரையை நனைத்தது.

 

செல்வி அருவியின் அருகில் வந்து அவள் தலையை ஆதரவாக கோதியபடி, “பொன்னி போனது எனக்கும் ரொம்ப கஷ்டமா தான்டி இருக்கு, அதுக்காக நீ தெனமும் சுடுகாட்டுக்கு போனா மட்டும் போனவ திரும்பியா வரப்போறா? எல்லாரும் உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுனு போன் பண்ணி சொல்றாங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? நான் டெல்லியில் இருந்து வந்ததுமே செய்தி கேட்டு உன்னைய என்கூட வந்துடுனு சொன்னேன், அப்பவே வந்திருக்கலாம் இல்ல? என் கூட வந்திடு அருவி”

 

“இல்ல அத்தே நான் வரமாட்டேன்”

 

“புடிவாதம் புடிக்காதே, ஒண்ணு என் கூட வா, இல்லனா நாங்க ஒரு மாப்பிள்ளையை பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம். நீ போய் உன் புருஷன் வீட்ல இரு. இதுக்கு மேலயும் உன்னைய தனியா விட்டா உங்கம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்காது” என்ற செல்வியை பார்த்து விரக்தியாக சிரித்தாள் அருவி.

 

“எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம், என்னைய இப்படியே விட்டுடுங்க”

 

அருவி யாதவனை விரும்பிய விஷயத்தை வேலு ஏற்கனவே செல்வியிடம் கூறியிருந்ததால், “அருவி இன்னும் யாதவனையே நினைச்சிட்டு இருக்கியா?” என்றார் ஒரு மாதிரி குரலில்

 

“ச்சேச்சே எப்போ அதுக்கு கல்யாணம் ஆச்சோ, அப்பவே எல்லாத்தையும் மறந்துட்டேன். என் மனசுல யாரும் இல்ல” என்றாள் அவசரமாக

 

“பின்ன என்னாடி பிரச்சனை உனக்கு, உங்கம்மா போய் கூட ஒரு வருஷம் ஆச்சு, எத்தனை நாளைக்கு ஒத்தையில இருக்க போறே. தனியா இருக்கிற உன்கிட்ட எவனாச்சும் வந்து வம்பு பண்ணா என்ன பண்ணுவ? யார் உனக்கு பாதுகாப்பு?” என்று செல்வி கோபமாக திட்டிக் கொண்டிருக்க, அருவிக்கு முரளியின் சிலை நினைவில் வந்தது. 

 

அத்தையிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். சொன்னால் இவங்களும் என்னை பைத்தியம்னு முடிவே பண்ணிடுவாங்க என்று தோன்ற மெளனமாக நின்றாள்.

 

“என்ன அருவி, அத்தை கேட்டுட்டு இருக்காங்க, நீ சிலையாட்டம் இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு, நல்ல இடமா பார்த்துடலாம்” என்றார் வேலு

 

‘அந்த சிலையா இருக்கறவன் தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்’ என்று அந்த நொடி அவள் மனதில் தோன்றியது. ‘தன் மனம் போகும் போக்கை எண்ணி அதிர்ந்தாள். என்னாச்சு எனக்கு? சிலையா இருக்கிறவன் எனக்கு எப்படி புருஷனாக முடியும்? அதுவும் யார் கண்ணுக்கும் தெரியாத சிலை!

 

எனக்கு ஏன் திடீர்னு அந்த சிலையை கட்டிக்கணும்னு தோணுது என்ற சுயசிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அருவி.

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top