வேங்குழல் 25

பதினாறாம் நாள் முடிந்த துக்க வீட்டில் அருவிக்கு ஆதரவாக இருந்த அக்கம்பக்கத்தார்கள் ஒவ்வொருவராக தங்கள் வேலையை பார்க்க சென்று விட, அவள் மட்டும் தனிமையில் அழுதுக் கொண்டிருந்தாள்.

 

வேலுவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சென்னை வீட்டில் அவர் இருந்தாக வேண்டும், அப்போது தான் தொழில் சம்மந்தமாக வெற்றிவேந்தனுக்கு யாராவது லேன்ட்லைனில் அழைத்தால் பதில் சொல்லமுடியும். முதன் முதலாக குடும்பத்தோடு சென்றவர்களுக்கு விஷயத்தை சொல்லி வரவழைக்கவும் வேலுவுக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் வயது பெண்ணான அருவியை, அதுவும் தாயை இழந்து அழுது கொண்டிருப்பவளை விட்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் தவித்தார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக அருவியின் வீட்டிற்குள் நுழைந்தார்.

 

“ஆத்தா அருவி”

 

முழங்காலில் முகத்தை புதைத்து அழுதுக் கொண்டிருந்தவள் மெல்ல தலையை மட்டும் நிமிர்த்தினாள். கண்கள் கோவைப்பழமாக சிவந்திருந்தது.

 

“உன்னோட இழப்பு ஈடு செய்ய முடியாததுதான், அதுக்காக இடிஞ்சு போய்ட்டா எப்படிமா? செல்வி ரொம்ப வருஷத்துக்கப்புறம் இப்ப தான் குடும்பத்தோட சேர்ந்து டெல்லி போயிருக்கா. அவளுக்கு விஷயம் தெரியாது. அவ இருந்திருந்தா உன்னைய கண்டிப்பா தனியா விட்டிருக்க மாட்டா. கொஞ்சநாள்ல வந்திடுவாங்க. அதுவரைக்கும் நீ இங்கே தனியா இருக்க வேண்டாம்மா, என்கூட வந்திடுறீயா? நான் உன்னை என் மகளா பாத்துக்கறேன்” என்றார் கனிவான குரலில்.

 

அருவி எழுந்து சென்று அவரை கட்டிக் கொண்டு கதறி அழுதுவிட்டாள். அவள் பிறந்து வளர்ந்து பழகிய அக்கம்பக்கத்தார் சொல்லாத வார்த்தையை வேலு சொல்லிவிட்டதால் அவள் மனம் பாகாக உருகியது. அவள் தலையை தடவிக் கொடுத்தவாறு “அழாதம்மா, நான் இருக்கிறேன் உனக்கு” என்றார் ஆதரவாக

 

ஒருவாறு அவள் அழுது முடிக்கும் வரை அப்படியே தோளில் சாய்த்து அவளை ஆற்றுப்படுத்தியவர், “என் முதலாளி குடும்பத்தோட டெல்லிக்கு போய்ட்டதால என்னால இங்கேயே இருக்கமுடியாதும்மா, நான் கிளம்பணும், நீ ரெடியாகி வா, போகலாம்”

 

“இல்லைங்கப்பா நான் இங்கனயே இருக்கேன். எனக்காக நீங்க இருக்கேன்னு சொன்ன இந்த வார்த்தையே போதும்” என்றாள் கண்களை துடைத்துக் கொண்டே

 

“ஏம்மா இப்படி சொல்ற? இங்கே இருந்து என்ன பண்ண போறே?” என்றார் அதிர்ச்சியுடன்

 

“நான் பொறந்து வளர்ந்த ஊரு, அம்மா வாழ்ந்த வீடு இதையெல்லாம் என்னால விட்டுட்டு வரமுடியாது. அது மட்டுமில்லாம நீங்களே வேலை செய்யும் வீட்ல நான் எந்த உரிமையில இருக்கிறது” என்றாள் மெல்லிய குரலில்

 

“என்ன ஆத்தா இப்படி சொல்லிப்புட்ட, அவர் என் முதலாளி மட்டும் இல்ல, என்னோட மாப்பிள்ளை, என் தங்கச்சி செல்வியோட புருஷன் வீடு. செல்வியை உனக்கு தெரியாத என்ன? அவ உன் அத்தை தானே எப்பவும் அவ பின்னாடியும் யாதவ் பின்னாடியும் தானே சுத்திட்டு இருப்பே, யாரோ போல பேசறீயேமா”

 

யாதவ் பேரை சொன்னதும் அருவியின் கண்களில் மீண்டும் கண்ணீர் குளம் கட்டியது.

 

“அதனால தான் அங்க இருக்க முடியாதுனு சொல்றேன், இதே வேற ஒருத்தவங்க வீடா இருந்தா, அவங்க வீட்ல வேலைக்காரியா கூட இருந்துக்கறேன்னு உங்க கூடவே வந்திருப்பேன்” என்றவள் மீண்டும் முகத்தை தன் இருகரங்களால் மூடி குலுங்கி குலுங்கி அழுதாள்.

 

வேலுக்கு அவளின் பதில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்தது. “என்ன ஆத்தா இப்படி எல்லாம் பேசுற? செல்வியையும் யாதவனையும் உனக்கு புடிக்காதா? அவங்க எதாச்சும் உனக்கு துரோகம் பண்ணிட்டாங்களா?”

 

“அய்யோ நான் அப்படி சொன்னா என் நாக்கு அழுகிடும். யாதவன் மேல எந்த தப்பும் இல்ல, எல்லாம் என்னோட தப்பு தான்” என்று மேலும் அழுதாள்

 

“ஆத்தா புரியற மாதிரி சொல்லும்மா, வயசாயிடுச்சு, ஏற்கனவே உங்கம்மா செத்ததுல ஓய்ஞ்சு போயிருக்கேன்” என்றார் லேசான அலுப்புடன்

 

“யாதவன் என்னைய தான் கட்டிக்கும்னு நினைச்சேன், ஆனா அவர் வேற பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டாரு. அவங்க இருக்கற வீட்ல நான் எப்படி இருக்கிறது? தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க” என்றாள் கண்ணீருடன்

 

“என்னம்மா சொல்ற? யாதவ் உன்கிட்ட அப்படியா நடந்துக்கிட்டான்? செல்வி வளர்ப்பு தப்பா போகாதே?” என்றார் அதிர்ச்சியுடன்

 

“இல்லப்பா, யாதவ் மேல எந்த தப்பும் இல்ல, என் மனசுல இருந்த ஆசை அதுக்கு தெரியாது. ஊர்ல இருக்கற பொண்ணுங்கல்லாம் யாதவன் பின்னாடி சுத்தும் போது நானும் அதையே செய்ய கூடாதுனு நினைச்சேன். எப்படியும் பக்கத்து வீடு தானே, செல்வி அத்தை என்னைய தான் யாதவனுக்கு கட்டி வைக்கும்னு நினைச்சுக்கிட்டு நான் என் மனசுல இருக்கிறது அவர்கிட்ட சொல்லாம போயிட்டேன். அது தான் தப்பா போச்சு, யாதவன் என்கிட்ட சிரிச்சு பேசி கிண்டல் பண்ணாலும் என்னைய அப்படி பார்க்கவே இல்லைனு தோணுது.

 

அன்னைக்கு கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நின்னப்ப யாதவனோட கண்ணுல எப்பவும் என் மேல இருக்கிற பாசம் அப்படியே இருந்துச்சு. யாதவன் எனக்கில்லையே நினைச்சுக்கிட்டு நான் அழுதுட்டு ஓடினதை பார்த்து, அவர் என் தலையில செல்லமா அடிச்சதால தான் அழுதுட்டு ஓடறேன்னு நினைச்சுக்கிட்டாரு. என் அம்மா தான் எனக்கு புத்தி சொன்னாங்க

 

“அருவி, நாம ஆசைப்பட்டது நடக்கலைனா, கடவுள் நமக்கு வேற ஒண்ணை கொடுக்க முடிவு செஞ்சிருக்கான்னு அர்த்தம். இனியும் யாதவனை நினைக்காதே, அவன் இன்னொருத்தியோட புருஷன், அது மனசில வச்சிக்க” அப்படினு அம்மா சொன்னதும் என் மனச தேத்திக்கிட்டேன். 

 

அதுமட்டுமில்லாம யாதவ் மேல எனக்கிருந்தது என்னோட பொருள் என் கையை விட்டு போயிடுச்சேங்கிற உரிமை உணர்வு தான்னு எனக்கு தோணுச்சு. இருந்தாலும் மறுபடியும் அவங்க இருக்கிற வீட்ல உங்களோட வந்து தங்கி எதுவுமே தெரியாத மாதிரி என்னால நடிக்க முடியாது, அதனால தான் அங்கே வரலனு சொல்றேன்” என்றாள்

 

“நீ சொல்றது புரியுது ஆத்தா. உன் நிலைமையை நானுமே அனுபவிச்சிருக்கேன். ஆனா எப்படி  இங்கே தனியா இருப்பே? உன்னைய தனியா விட்டுட்டு போக எனக்கு மனசே வரல” என்றார் வேலு தவிப்புடன்

 

“நான் இந்த வீட்லய இருந்தா தான் அம்மாவோடவே இருக்கிற போல இருக்கும். நீங்க என்னைய நினைச்சு கவலப்படாதீங்க. எனக்கு எதாவது தேவைனாலோ பிரச்சனைனாலோ உங்களுக்கு போன் பண்றேன்”

 

“நிஜமாத்தான் சொல்றீயா கண்ணு, இருந்துக்குவியா?”

 

“இருந்துக்குவேன், ஆனா நீங்க நேரம் கிடைக்கும் போது என்னைய வந்து பாத்துட்டு போங்க” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு அவருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக மென்புன்னகையை உதிர்த்தாள். 

 

“அப்படின்னா இந்த பணத்தை வாங்கிக்க, அப்போ தான் நான் நிம்மதியா போவேன்” என்றவர் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

 

அதில் தேவையான கொஞ்ச பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவரிடமே கொடுத்துவிட்டு, “தேவைனா கேக்கறேன், மாடு இருக்கு நான் என்னைய பார்த்துக்குவேன்” என்றாள்,

 

கொஞ்ச நாள் போனதும் இவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அருவிக்கு பலமுறை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றார்.

 

வேலு சென்றதும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவள், வீட்டிலிருந்து பாலை எடுத்துக் கொண்டு தன் அம்மாவை புதைத்த இடத்திற்கு சென்றாள். 

 

இதுவரை தன் வாழ்க்கையில் பயின்ற கல்லூரி பாடம், அனுபவ பாடம் எல்லாம் ஒரு பாடமே இல்லை என்று முரளிகிருஷ்ணாவிற்கு தோன்றியது. இப்போது சுடுகாட்டில் அவனுக்கு கற்பிக்கப்படும் பாடம் அவனுக்குள் பெரும் மாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

 

பெரும் பணக்காரர்களும், ஏழைகளும் ஒரே இடத்தில் தான் புதைக்கப்பட்டார்கள். அவர்களின் சொந்தங்களில் சிலர் முடிந்தால் மறு நாளோ அல்லது மூன்றாம் மாதம் இறந்தவர்களை வணங்கி செல்ல வந்தார்கள். பெரும்பாலோனோர் வருவதே இல்லை. வாழும் வரை மரியாதை செலுத்திய சொந்தபந்தங்கள் எல்லாம் இறந்த பின் பிணம் என்றே அழைத்தனர். பணக்காரனையும் சரி ஏழையையும் சரி பாகுபாடில்லாமல் பிணம் என்றே அழைத்தனர். பணக்கார பிணம், அமைச்சர் பிணம், வேலைக்கார பிணம் என்றெல்லாம் சொல்லவில்லை. வாழ்க்கையின் நிதர்சனத்தை முரளி உணரத் தொடங்கியிருந்தான்.

 

இப்போதெல்லாம் தான் அங்கே இருப்பதை அசூசையாக கருதாமல் அங்கே நடப்பவற்றை கூர்ந்து கவனிக்கலானான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான். 

 

********

 

யாதவ் கிருஷ்ணா குடும்பத்தோடு டெல்லி வந்தடைந்துவிட்டதாக சொல்லவும் ஆருத்தரனுக்கு மிகுந்த சந்தோஷம். அவர்கள் வரும்போதே வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார். விருந்து சாப்பாடு எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அவர் யாதவனை மிகுந்த மரியாதையோடு நடத்துவதை கவனித்தார் வெற்றிவேந்தன்.

 

“முரளி கிருஷ்ணா” என்று அவர் தயங்கிக் கொண்டே ஏதோ யாதவனிடம் கேட்பதும் அதற்கு அவன் பிறகு சொல்வதாக கண்ணசைப்பதையும் பார்த்து இவர்களுக்குள் ஏற்கனவே சம்மந்தம் இருக்கும் போலிருக்கே என்று நினைத்தவராக

 

 “சம்மந்தி உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கலாமா?”

 

“தாராளமா கேளுங்க சம்மந்தி” 

 

“உங்களுக்கு ஏற்கனவே முரளியையும் யாதவனையும் தெரியுமா?”

 

“ஆமா சம்மந்தி நானும் தொல்லியல் துறையில இருந்ததால ஒரு முறை முரளிகிருஷ்ணா என்னை மீட் பண்ண வந்தார். அப்புறம் யாதவ்வும் வந்தார். நான் தான் முரளியை தேடறதுக்கு செந்தாழினியை அவர் கூட அனுப்பி வச்சேன்” 

 

“ஓ அப்படியா? முரளியை தேடி ஒண்ணா போன இடத்துல தான் இரண்டு பேரும் விரும்பனாங்களா? என்ன தான் முரளியை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தாலும் மறுபடியும் காணமா போயிட்டானே சம்பந்தி, இப்போ எங்கே இருக்கானோ, எப்படி இருக்கானோ” என்றார் கவலையுடன்

 

“சம்பந்தி நீங்க எந்த முரளியை பத்தி பேசறீங்க?”

 

“என் மூத்தமகன் முரளிகிருஷ்ணாவை தான் சொல்றேன், ஏன் வேறே யாராவது முரளினு இருக்காங்களா என்ன?” என்றார் வெற்றிவேந்தன் புருவமுடிச்சுடன்.

 

புல்லாங்குழலை தான் ஆருத்ரன் முரளி என்று கூறினார் என்று யாதவ்விற்கு புரிந்தது. இந்த விஷயத்தை பெற்றவர்களிடம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். ஆருத்ரன் இப்போது வெற்றிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் யாதவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

ஆருத்ரனின் தடுமாற்றத்தை உணராமல் வெற்றிவேந்தன் பேசிக் கொண்டே இருந்தார். “எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ, மூத்த பிள்ளை முரடனா போயிட்டான். என்னை புரிஞ்சுக்காமலே வளர்ந்தான், எல்லாம் சரியாயிடும்னு நினைச்சா ஆராய்ச்சி செய்யறேன்னு போய் பைத்தியமாகி தான் திரும்பி வந்தான். இப்போ எங்கோ ஒரு மடத்துல இருக்கான்” என்றார் பெருமூச்சோடு அதற்கு பின் அவரால் பேச முடியவில்லை தொண்டையை அடைத்துக் கொண்டது. ஆருத்ரன் வெற்றியின் கரத்தை பற்றி ஆதரவாக அழுத்தினார்.

 

“கவலப்படாதீங்க, முரளிகிருஷ்ணாவை வச்சு மட்டும் உங்க பாவ கணக்கை எடைப்போடதீங்க. யாதவனை உங்க மகனா பெத்தெடுக்க நீங்க எவ்வளவு புண்ணியம், தவம் செஞ்சிருக்கீங்கனு போக போக புரிஞ்சுப்பீங்க”

 

அப்போது தான் நினைவு வந்தவராக, “யாதவ், டிரெயின் ஆக்சிடென்டை எப்படி தடுத்து நிறுத்தினே, நெஞ்சுவலியால மயங்கி இருந்தவரை எப்படி எழுப்பி உட்கார வச்சே?” என்று கேட்ட வெற்றிவேந்தனுக்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் யாதவ் கிருஷ்ணா.

 

ஒரு பெருமூச்சோடு அவன் துவாரகா சென்றதில் இருந்து நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தவன், கடைசியாக முரளி கிருஷ்ணா இப்போது கற்சிலையாகி போனதையும் கூறினான்.

 

யாதவ் சொல்ல சொல்ல இதை நம்புவதா வேண்டாமா என்று அதிர்ச்சியில் உறைந்துப்போய் இருந்தார் வெற்றிவேந்தன். செல்வி தான் மகன் பாசத்தில் அழ தொடங்கி விட்டார்.

 

“அய்யோ என் மூத்த மகன் பைத்தியமா இருந்தாலும் குணமாகி வருவான்னு நினைச்சேனே. இப்போ சாபத்தால சிலையாகிட்டானா? இதை ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல” என்றபடி ஓடி வந்து யாதவ்வின் சட்டையை பிடித்து உலுக்கினார்.

 

“யாதவ் நீ சொல்றதெல்லாம்” 

 

“நூறு சதவீதம் உண்மைப்பா” என்றவன் இப்போது தன் பேகிலிருந்த புல்லாங்குழலை எடுத்து அவரிடம் காட்டினான்.

 

“இதுக்காக தான் அவன் பிளான் பண்ணி, என்னை இழுத்து விட்டிருக்கான். அவன்கிட்ட புல்லாங்குழலை ஒப்படைக்க கூட நான் ரெடியா தான் இருந்தேன். ஆனா அவன் புல்லாங்குழலோட மந்திரசக்தியை மிஸ்யூஸ் பண்றதலயே குறியா இருந்தான். அத்தோட ராதியையும் அழைச்சிட்டு போயிட்டான். என் மனைவினு தெரிஞ்சும் அவகிட்ட தப்பா மிஸ்பிஹேவ் பண்ணி இருக்கான். அவன் கிட்ட இருந்து தப்பிக்க தான் வேற வழியில்லாம ராதி அந்த புல்லாங்குழலோட மந்திர சக்தியை யூஸ் பண்ணி முரளியை கற்சிலையாக்கிட்டா, இதையெல்லாம் முன்னாடியே சொன்னா நீங்க நம்புவீங்களானு தெரியலப்பா அதான் உங்க கிட்ட சொல்லல”

 

வெற்றி பேச்சற்று போய் சிலையாக அமர்ந்திருந்தார். யாதவ் சொன்ன விஷயங்களை கிரகிக்கவே அவருக்கு இன்னும் நேரம் தேவைப்பட்டது. ஆனால் செல்வி கொஞ்சமும் யோசிக்காமல் செந்தாழினியின் காலில் விழப்போனார்.

 

பதறிவிலகியவள், “அத்த என்ன காரியம் பண்றீங்க? எழுந்திரிங்க முதல்ல”

 

“நீ என் மருமகளா இருந்தாலும், என்னை பெத்த தாயா நினைச்சு கேக்கறேன். என் மவன் செஞ்சது தப்பு தான். அதுக்காக நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறேன். அவனுக்கு கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கொடுத்திடும்மா, நான் செத்தா என் மூத்த பிள்ளை தான் கொள்ளி வைக்கணும். என் மவனை எனக்கு திருப்பி கொடுத்திடும்மா” என்று கதறினார் அவள் கால்களை பற்றிக் கொண்டு

 

“செல்வி” என்ற வெற்றியின் சத்தமான அதட்டலில் அதிர்ந்து போய் கணவனை பார்த்தார்.

 

“இன்னும் எத்தனை நாளைக்கு மகன் செஞ்ச தப்பை, எல்லா அம்மாக்களும் தெரியாம செஞ்சிட்டான்னு சப்பை கட்டு கட்ட போறீங்க?

 

யாதவ் சொன்னதை கேட்ட தானே? உன் மூத்தமகன் ஒரு பொண்ணை ஏமாத்தி அடைய நினைச்சிருக்கான், அதுவும் யாரை? தம்பி பொண்டாட்டிய. இத்தனை நாளா நம்ம மூணு பேருக்கும் தான் பிரச்சனை கொடுக்கிறான் மத்தபடி அவன் நல்லவன் தான்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா ஒரு பொண்ணை மானபங்க படுத்த நினைச்சிருக்கான், அதுவும் எதுக்காக? உயிரே இல்லாத இந்த புல்லாங்குழலை அடையறதுக்காக.  அது அவன் கையில கிடைச்சிருந்தா இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருப்பானோ? அவனுக்கு கிடைச்ச தண்டனை சரிதான். 

 

இனி நமக்கு ஒரே மகன், யாதவ் கிருஷ்ணா தான். அவனை நினைச்சு அழறதை விட்டுட்டு கண்ணுக்கு முன்னாடி இருக்கிற மகனை பார்த்து சந்தோஷப்படு” என்றார் அழுத்தமான குரலில்.

 

ஆருத்ரன் தன்னை மறந்து கைத்தட்டினார், “சம்மந்தி உண்மையிலேயே நீங்க ரொம்ப கிரேட், பெத்தமகனா இருந்தாலும் குற்றம் குற்றமேனு சொன்ன மனுநீதி சோழனோட வம்சமா இருப்பீங்கனு தோணுது. உங்களோட நல்ல மனசுக்கு தான் தெய்வாம்சத்தோட ஒரு பிள்ளை பொறந்திருக்கு”

 

விரக்தியோடு சிரித்த வெற்றிவேந்தன், “யாதவனுக்கு மட்டும் நான் அப்பா இல்லையே சம்மந்தி, முரளிகிருஷ்ணாவுக்கும் நான் தானே அப்பா”

 

“இருக்கலாம், நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல நல்லது கெட்டது இருக்கறது யதார்த்தம் தான். எல்லாருக்குள்ளயும் நல்ல குணமும் கெட்ட குணமும் இருக்கும் தானே? இதுவரைக்கும்  முரளியோட கெட்ட குணத்தை தானே பார்த்திருக்கிறோம்,  நல்ல குணம் இனி வெளிப்பட வாய்ப்பிருக்கு இல்லையா?

 

“கல்லாகி போனவனுக்கு நல்ல குணம் எங்கேயிருந்து வரப்போகுது? அப்படியே வந்தாலும் அது யாருக்கு தெரிய போகுது?” என்றார் சலிப்புடன்

 

“அப்படி சொல்லாதீங்க, எல்லா சாபத்துக்கும் ஒரு விமோசனம் இருக்கும். கண்டிப்பா  முரளியோட சாபத்துக்கும் தீர்வு இருக்கும்” என்ற ஆருத்தரனை செல்வி ஆவலோடு பார்த்தார்.

 

“என்ன அது சொல்லுங்க ஐயா, எதுவா இருந்தாலும் என் மகனுக்காக நான் செய்யறேன்” என்றார்.

 

“அதை நான் சொல்ல முடியாதும்மா, சாபம் கொடுத்தவங்க தான் சொல்லணும்” என்று அவர் செந்தாழினியை பார்க்க, இப்போது செல்வியும் அவளை பார்த்து கைக்கூப்பினார்.

 

“அய்யோ அத்தை எனக்கு எதுவுமே தெரியாது, அந்த புல்லாங்குழலோட மந்திரசக்தியை கூட நான் டெஸ்ட் பண்ணி பார்க்கல. முரளிகிட்ட இருந்து எப்படியாவது அதை வாங்கணும் நினைச்சேன். வாங்கிட்டேன், அவர் என்கிட்ட இருந்து மறுபடியும் அதை பிடுங்க போகவும் என்னையும் அறியாம கல்லாகிப்போன்னு சொன்னேன். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே எனக்கு தெரியல, முரளிகிருஷ்ணா அந்த இடத்துலயே இல்ல. உண்மையிலே அவர் சிலையா ஆயிட்டாரா? இல்லை தப்பிச்சு எங்காவது போய் தலைமறைவா இருக்காரானு இன்னமும் எனக்கு சந்தேகமா தான் இருக்கு. நான் என்ன கடவுளா? இல்லை முனிவரா? சாபம் கொடுக்கறதுக்கு. அப்பா தான் உளர்றார்னா நீங்களும் அவர் பேச்சை கேட்டுகிட்டு என்ன கும்பிட்டு இப்படி எல்லாம் சங்கடப்படுத்தாதீங்க அத்தை”  என்றாள் பதறிக் கொண்டு

 

“செல்வி நான் சொன்னத கேக்க மாட்டியா? முரளி கிருஷ்ணானு ஒருத்தன் இருந்ததையே மறந்துட்டு வேலைய பாரு” என்று அதட்டினார் வெற்றிவேந்தன்.

 

“கேட்கமாட்டேன், இந்த விஷயத்துல நான் உங்க பேச்சை கேட்க மாட்டேன். நான் உங்களை விட்டு பதினைந்து வருஷமா பிரிஞ்சு இருந்தது உங்க நிம்மதிக்காக மட்டும் இல்ல, என் மகன் முரளியோட சந்தோஷத்துக்காகவும் தான். அவனுக்கு அப்பாவா நீங்க இருக்கணும்னு தான் நான் என் புருஷனையே விட்டு கொடுத்தேன், நான் கேட்கமாட்டேன், என் மகன் எனக்கு திரும்ப வேணும்” என்று செல்வி ஒரு அடம்பிடிக்கும் குழந்தை போல கத்தி கூப்பாடு போட்டு அப்படியே மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.

 

செல்வி மயங்கி விழுந்தது செந்தாழினி செய்வதறியாது திகைத்தாள். யாதவ் அவன் அன்னையை தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைக்க, ஆருத்ரன் உடனடியாக  மருத்துவரை வீட்டிற்கு வரவழைத்தார்.

 

“அதிர்ச்சியில மயங்கி இருக்காங்க, பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல. ஆனா அவங்க டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு சென்றார் அந்த மருத்துவர்.

 

செந்தாழினி யாதவ்வின் அருகில் வந்து, “இப்போ என்ன பண்றது யாதவ்? புல்லாங்குழலை வச்சு சிலையா இருக்கிற முரளியை மறுபடியும் மனுஷனாக்கிடலாமா?”

 

“அதுக்கு அவனோட சிலை இப்போ எங்கே இருக்குதுனு தெரியணுமில்ல? ச்சே, என் வாழ்நாள் முழுசும் இவனை கண்டுபிடிக்கறதுக்கே போய்டும் போல” என்றான் சலிப்பாக

 

வெற்றிக்கு யாதவ்வின் மனதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவன் தோளை அழுத்தி, “அம்மாவை நான் சமாதானம் செஞ்சுக்கறேன். நீங்க உங்க வேலையை பாருங்க”

 

“மாமா தப்பா நினைச்சுக்காதீங்க, நான் முரளிகிட்ட இருந்து தப்பிக்க கல்லாகி போனு சொன்னது உண்மை தான். ஆனா முரளி சிலையாகிட்டாரானு கூட எனக்கு கன்பார்மா தெரியல. ஏன்னா எனக்கு அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல, நினைவு வந்தப்போ நானும் யாதவ்வும் ஒரு காட்டுல இருந்தோம். அடிக்கடி நாங்க இரண்டு பேரும் வேற மாதிரி பிஹேவ் பண்றோம்னு மட்டும் தெரியுது. ஆனா என்ன நடந்ததுனு எங்களுக்கே சரியா புரிய மாட்டேங்குது” 

 

“புரியுதும்மா, அவனை நீங்க கண்டுபிடிச்சு மறுபடியும் மனுசனாக்கினா மட்டும் திருந்திடுவானா என்ன? செல்விக்கு முரளி மேல ரொம்ப பாசம், அவளுக்கு மெதுவா சொல்லி புரிய வைக்கிறேன்

 

ஆனால் வெற்றி நினைத்தது போல செல்வி அவர் பேச்சை அத்தனை எளிதாக புரிந்துக் கொள்வதாக இல்லை. “ராஜா மாதிரி இருந்த என் மகன் கல்லாகி போயிட்டானாமே” என்று அழுதுக் கொண்டே இருந்தார்.

 

செல்வியின் நிலையை பார்த்த ஆருத்தரன் அவரை தனியாக அழைத்து பேசினார். “சம்பந்திம்மா, நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்கறீங்களா?”

 

“என்ன அது சொல்லுங்க”

 

“என் மகளும் மருமகனும் சொல்றது உண்மை தான், அவங்களுக்கு முரளியோட சிலை எங்கே இருக்குனு இப்போ தெரியாது”

 

“முரளியை சிலையாகி போனு சொன்னது உங்க பொண்ணு தானே? அவளை காப்பாத்தி கூட்டிட்டி வந்தது என் மகன் தானே, இரண்டு பேரும் இப்போ சிலை எங்கே இருக்குனு தெரியாதுனு சொல்றாங்களே அதெப்படி தெரியாம போயிடுங்க? முரளி முன்கோவக்காரன் தான், எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசிடுவான் தான். அதுக்காக அவன் எப்படியோ போகட்டும்னு விட்டுட முடியுங்களா? அவனோட நாலு வயசுல இருந்து என் கண்ணுக்குள்ள அவனை வச்சு பாத்துக்கிட்டேன். அவன் கல்லாகி போயிட்டானாமே, அவன் தானுங்களே எனக்கு மூத்தமகனா இருந்து கொள்ளி வைக்கணும்?” என்று கண்கலங்கினார் செல்வி

 

“சரி ஒரு வழி இருக்கு, அதை முயற்சி செஞ்சு பார்க்கலாம்” என்ற ஆருத்ரனை ஆர்வமாக பார்த்து “சொல்லுங்க சம்பந்தி என்ன அது?”

 

“இவங்க இரண்டு பேரோட கல்யாணத்தை நாம நேரடியா பார்க்கல, அதனால மதுராவுல இருக்கிற கோயிலுக்கு இரண்டு பேரையும் கூட்டிட்டு போய் மாலை மாத்திக்க சொல்லி சிம்பிளா கல்யாணம் பண்ணி வைப்போம். அந்த சந்தோஷமான சூழ்நிலையில யாதவனை புல்லாங்குழலை வாசிக்க சொல்லுவோம்”

 

“அவன் புல்லாங்குழல் வாசிக்கிறதுக்கும் இதுக்கும் என்னங்கய்யா சம்மந்தம்?” என்றார் செல்வி புரியாமல்

 

“யாதவ் புல்லாங்குழல் வாசிச்சா அந்த இசையில இரண்டு பேரும் லயிச்சு போய் இருப்பாங்க, அந்த நேரத்துல உங்க மகன் முரளியோட சாபத்துக்கு விமோசனம் என்னனு கேக்கலாம், அவங்க மறுக்கமாட்டாங்கனு தோணுது” 

 

“என்னமோ சொல்றீங்க, நீங்க சொல்றது போல நடந்த சந்தோஷம் தான், எப்போ போகலாம் மதுராவுக்கு?”

 

“நாளைக்கே போகலாம், அதுக்கான ஏற்பாடுகளை நான் இப்பவே போய் செஞ்சுட்டு வர்றேன்” என்று கிளம்பி சென்றார் 

 

மறுநாள் காலை வெற்றிவேந்தன் செல்வி தம்பதியினர், யாதவ் செந்தாழினி தம்பதி மற்றும் ஆரூத்ரன் என ஐவரும் மதுராவில் பிருந்தாவனத்திற்கு சென்றனர்.

 

அங்கிருந்த ஒரு கோயில் பிரகாரத்தில் பிரம்மாண்டமான திருமண மேடை அமைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். திருமண ஏற்பாட்டை பார்த்து வெற்றிவேந்தன் திகைத்து போனார். “என்னங்க ஆருத்ரன், சிம்பிளா கல்யாணம்னு சொன்னீங்க? இங்கே பாத்தா ரொம்ப ஆடம்பரமா இருக்கு?”

 

“ராதா கிருஷ்ணன் கல்யாணம்னா சும்மாவா, இதுவே ரொம்ப சிம்பிள், ஒரே நாள்ல இவ்வளவு தான் ரெடிபண்ண முடிஞ்சது” என்றார்.

 

“என்ன சொல்றீங்க? எனக்கு புரியல” என்ற வெற்றியை பார்த்து “இன்னைக்கு ராதா கிருஷ்ணருக்கு திருமணம் நடந்ததா நம்பப்படுற நாள் இது. நம்ம பசங்க இரண்டு பேரும் அவங்களோட தசாபுத்தியில பிறந்தவங்க, அதை சொன்னேன் சம்மந்தி” 

 

மணமேடையில் அமர்ந்திருந்த மணமக்களை வெற்றியும் செல்வியும் கண்குளிர பார்த்தனர். யாதவ் கிருஷ்ணாவிற்கும், செந்தாழினிக்கும் ராதா கிருஷ்ணர் போன்ற ஆடை அலங்காரத்தை ஏற்பாடு செய்திருந்தார் ஆருத்ரன். அவருக்கு ஏதோ ஒரு வகையில் இருவரின் திருமணத்தை கண்குளிர பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

 

யாதவ் கண்களால் தன் ராதியின் அழகை பருகி கொண்டிருந்தான். அவளோ வெட்கத்துடன் தலைகவிழ்ந்திருந்தாள். அவள் காதருகே குனிந்து, “ராதி ஒரு விஷயம் மறந்துட்டியா, நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, முதலிரவும் முடிஞ்சு போச்சு, இப்போ எதுக்குடி இவ்வளவு வெட்கம்?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

 

“உன் பார்வை என்னை நித்தம் நித்தம் பித்தம் கொள்ள வைக்குதே யாதவா” என்றாள் மெல்லிய குரலில். அதைக் கேட்டு “பார்வை ஒன்றே போதுமா பெண்ணே” என்று அவளை சீண்டினான். அவளின் செங்காந்தள் முகம் மேலும் சிவந்து போனது. “சொல்லு ராதி பார்வையே போதுமா” என்றான் கிறக்கமான குரலில். அவள் போதாது என்று தலையை ஆட்டினாள். “வேறென்ன வேணும்” என்றான் மீண்டும் அதே குரலில்

 

“வேணுகானம் வேணும், நீங்க எனக்காக வாசிக்கணும்”

 

“என் வேங்குழலிக்காக வேணுகானம் வாசிக்கமாட்டேனா? வேங்குழலையும் வாசிப்பேன், வேங்குழலியையும் வாசிப்பேன்” என்று மந்தகாசமாக புன்னகைத்தான்.

 

இருவரும் தங்கள் உலகத்திற்குள் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ஆருத்ரன், செல்வியிடம் மலர்மாலைகளை நீட்டி, “இரண்டு பேரையும் மாலை மாத்திக்க சொல்லுங்கம்மா” என்றார்

 

செல்வியும் மாலைகளை மணமக்களிடம் நீட்ட யாதவ்வும் செந்தாழினியும் மீண்டுமொரு முறை மாலைமாற்றி ஊரிறிய தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர். அங்கே நடந்தது அவர்கள் திருமணம் மட்டுமல்ல, ராதா கிருஷ்ணரின் திருமணமும் தான்.

 

ராதையாக தன்னை உணர்ந்த செந்தாழினி இப்போது யாதவனை ஆனந்த கண்ணீருடன் பார்த்தாள். என்ன தான் பந்திர்வன் காட்டில் தேவர்கள் முன்னால் இருவரின் திருமணம் நடந்திருந்தாலும், மக்களை பொறுத்தவரை கிருஷ்ணர் ராதையை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்ற பேச்சு தானே உலவிக் கொண்டிருக்கிறது. இப்போது ராதையின் அந்த ஏக்கத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த தன் யாதவனை காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க பார்த்தாள்.

 

அவள் மனம் புரிந்தவனாக அவள் தோள்மேல் தன் நீண்ட கைகளை போட்டுக் கொண்டு அவளை தன்னோடு சேர்த்து அணைத்தபடி, அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்து விட்டு அங்கே தன் விரல்களால் திலகமிட்டான். என்ன தான் கிருஷ்ணா என்ற பெயரோடு இருந்தாலும் தன் ராதைக்காக ஸ்ரீராமனாக வாழவேண்டும் என்று தீர்க்கமாக இருந்தான்.

 

மணமக்களை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவை ஏற்பாடு செய்து அவர்களை சாப்பிட அழைத்து சென்றார் ஆருத்ரன். ஏகாந்த நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மணமக்கள் இருவரும் சுற்றம் மறந்த ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது செந்தாழினி, “யாதவா எனக்காக வேணுகானம் வாசிக்கிறதா சொன்னீங்களே” என்று நினைவுப்படுத்தினாள்.

 

யாதவ் அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல், தன் இடையிலிருந்த பான்சூரி முரளியை எடுத்து வாசிக்க தொடங்கினான். 

 

கண்ணன் ஊதும்குழல், காற்றை தூண்டிலாக்கி ராதியின் மனதை காந்தம் போல அவனிடம் இழுத்தது. தன்னை மறந்து தன்னவனின் இசையில் லயித்திருந்தவளின் அருகே சென்ற செல்வி தயக்கத்துடன் ஆருத்ரனை பார்த்தார்.

 

அவர் தலையசைக்கவும், மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ம்மா மருமவளே” என்றார் அவள் காதருகே. இசையின் இனிமையில் இமை மூடிக்கொண்டிருந்தவள் மெல்ல கண்திறந்தாள்.

 

“முரளியை கல்லாகிப்போனு சிலையாக்கிட்டியேம்மா, இப்போ அவன் எங்கே இருக்கான்னு கொஞ்சம் சொல்லும்மா” 

 

“சுடுகாட்டுல” அவள் வார்த்தைகள் மட்டுமல்ல விழிகளும் நெருப்பை கக்கின.

 

மருமகளின் சாந்தமான முகம் கோபத்தில் சிவந்திருப்பதை பார்த்த செல்விக்கு திக்கென்று இருந்தது.

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top