பொங்கல் வைக்கும் திருவிழாவில் கனிஇதழி, வீரமல்லி மற்றும் வளர்மதி மூவரும் இளம் மஞ்சள் நிற ஆடையில் இளம் ஊதா நிற பார்டர் வைத்த ஒரே மாதிரி சேலை அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.
அகல்விழி தோழிகளுடன் சேர்ந்து திருவிழாவிற்காக தரையிறங்கி இருக்கும் அனைத்து வகை ராட்டினங்களிலும் விளையாடப் போவதாக சொல்லி விட்டு கிளம்பி இருந்தாள்.
ஆண்களும் ஒரே மாதிரி வேட்டி சட்டை அணிந்து மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆர்யனின் தோளில் பாண்டியின் மகள் முத்துமல்லியை வைத்திருந்தான். வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருக்கும் கணவனையும் அவனுடன் இரு குழந்தைகளையும் பார்த்த போது வளர்மதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனருகே நின்றிருந்த செழியனின் மகள் இலக்கியா “மாமா, என்னையும் தூக்கு” என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.
கணவனிடம் சென்றவள் அவன் கையில் இருந்த முத்துமல்லியை வாங்கி கொண்டாள். அவனும் இலக்கியாவை தூக்கி தோளில் வைத்துக் கொண்டே, “மதி இதே மாதிரி நமக்கும் ரெண்டு குழந்தைங்க வேணும்டி” என்றான் கண்சிமிட்டி
“ரெண்டு போதுமா?” பதில் கேள்வி கேட்டவளை கண்டு வியந்தவன், “நீ ரெடினா நானும் ரெடி” என்று அவள் கன்னத்தை கிள்ள, “அச்சோ எல்லாரும் இருக்காங்க” என்று சிணுங்கினாள்.
இருவரின் அன்னியோன்யத்தை செழியன் மற்றும் பாண்டியின் குடும்பம் கவனிக்க தவறவில்லை. வளர்மதி கூச்சத்தோடு பொங்கல் வைக்கும் இடத்திற்கு செல்ல, “வளரு, அடுத்த வருஷம் ஊர்திருவிழாவுக்கு வரும் போது நல்ல செய்தியோட வரணும்னு வேண்டிக்கிட்டு பொங்கல் வை” என்றார் பைரவி.
“ஆமா வளரு, குழந்தை பொறக்கணும்னு வேண்டிக்கிட்டு தொட்டில் கட்டு” என்றார் அமுதா
“சின்ன அத்தை, அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. இவங்க பண்ற ரொமான்ஸ பார்த்தா, உனக்கு பேரனையோ பேத்தியையோ ரெடி பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன், என் அண்ணன் பார்வையாலேயே வளரை கர்ப்பமாக்கிடுவார் போல. பொண்டாட்டியை எப்படி சைட் அடிச்சிட்டு இருக்காரு பாரு” என்றாள் கனிஇதழி. பெண்கள் அனைவரும் சட்டென திரும்பி பார்க்க, ஆர்யன் வளர்மதியை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
பட்டுப்புடவையில் சூரிய வெளிச்சத்தில் தங்கமென மின்னும் மனைவியின் அழகை பிறர் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தவன் சட்டென அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவும் திகைத்து பார்க்க, பெண்கள் அனைவரும் கொல்லென சிரித்தனர். ஆர்யன் மனைவியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்த, அவள் வெட்கத்துடன் தலையசைத்தாள்.
“கையில ஒன்னு வயித்துல ஒன்னு கொடுத்தும் இன்னும் என் மாமனுக்கு பொண்டாட்டி மேல இருக்கற மயக்கம் தீரல போலருக்கு” என்றாள் வீரமல்லி. இப்போது பெண்கள் செழியனை பார்க்க, அவனும் வேலுவிடம் பேசிக் கொண்டே கனிஇதழியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதே மாதிரி திருவிழாவில் வளர்மதியுடன் பொங்கல் வைக்க வந்த கனிஇதழியை அவன் இரண்டாவது முறையாக கோயில் வளாகத்தில் பார்த்து பேசியதும், பிறகு பாண்டிக்கு நிச்சயம் செய்த பெண் என்று அவளை விட்டு விலக நினைத்ததும் மனக்கண்ணில் வந்து சென்றது.
அன்று பாவாடை தாவணியில் இருந்த மங்கையின் செழிப்பில் மயங்கிய செழியன், இப்போது தாய்மையின் பூரிப்பில் அழகு கூடிப்போயிருக்கும் மனைவியை கண்களால் களவாடிக் கொண்டிருந்தான். அவனை பார்த்தும் பெண்கள் கூட்டம் சிரிக்க தொண்டையை செருமிக் கொண்டு வேலுவிடம் பேசுவது போல திரும்பிக் கொண்டான்.
“என் மாமாவாவது யாருக்கும் தெரியாம கெத்தா சைட் அடிக்கறாரு. முத்துமாமா எப்பவும் மல்லியோட முந்தானையை புடிச்சிட்டு தான் இருப்பாரு” என்றாள் கனிஇதழி
அதற்கேற்றார் போல முத்துபாண்டி கையில் ஜூஸ் பாட்டிலுடன் வந்தான். “மல்லி எம்புட்டு நேரம் வெயில்ல நின்னுட்டு இருப்பே? வீட்லயே பொங்கல் வச்சா ஆவாதா?” என்று ஜூஸ் பாட்டிலை மனைவியிடம் கொடுத்து விட்டு, அவள் முந்தாணையை எடுத்து அவன் முகத்தை துடைத்துக் கொள்ள, பெண்கள் அனைவரும் அடக்கமாட்டாமல் சிரிக்க தொடங்கினர்.
பெண்கள் கூட்டாக சேர்ந்து ஆண்களை கலாய்க்கிறார்கள் என்று புரிந்தாலும் அனைவரின் முகத்திலும் இருந்த மகிழ்ச்சியில் ஆண்கள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ஆதிசங்கரனுக்கும் மருமகளையும் அவள் குடும்பத்தையும் பார்த்து மனநிறைவாக இருந்தது, சொத்துக்கு அவரிடம் பஞ்சமில்லை என்றாலும் சொந்தத்துக்கு நிறையவே பஞ்சமிருந்தது. வளர்மதியின் மூலம் மகனுக்கு பெரிய குடும்பம் சொந்தமானதில் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தார்.
ராஜரத்னம் மற்றும் செல்வரத்தினம் இருவரும் அவருக்கு சம்பந்தி போல் இல்லாமல் பால்ய சிநேகிதர்கள் போல பழகினார்கள். இருவரும் செல்லும் இடத்திற்கு எல்லாம் ஆதிசங்கரனையும் அழைத்து சென்றார்கள். ஊர்தலைவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மரியாதை செலுத்திய மக்கள் ஆதிசங்கரனையும் மரியாதையுடன் நடத்தினார்கள்
இந்த ஒரு வாரக் காலமும் அவர்களுடன் இருந்தது சொந்த ஊரில் பழைய நண்பர்களுடன் கூடி திரிந்தது போலவும் பத்து வயது குறைந்தது போலவும் உணர்ந்தார் ஆதிசங்கரன்.
“ஆர்யா எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்குடா. இனி அடிக்கடி வந்து போகணும்டா” என்றார் உற்சாகத்துடன்
“என் மாமனார்ங்க கூட சேர்ந்துக்கிட்டு ஆத்துல குளிக்கறதுக்கு போனீங்களாமே, மீன் வேற பிடிச்சீங்களாம்? கேள்விப்பட்டேன். தி கிரேட் ஆதிசங்கரனுக்கு வயசாகுதுங்கறது மறந்து போய் இளவட்டம் போல சுத்திட்டு இருக்காரு, நான் செய்ய வேண்டியதெல்லாம் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க” என்று கிண்டல் செய்தான்
“நீ சொல்றது சரிதான் ஆர்யா. உன் வயசுல நான் தொழில்லயே முழ்கி போயிட்டேன். திரும்பி பார்த்தா என்னோட இளமைக் காலத்தை நிறைய இழந்திருக்கேன். உன் மாமனாருங்க அவங்க இளைஞர்களா இருக்கும் போது அவங்களோட அனுபவங்களை சொல்லும் போது தான் எனக்கே அது புரிஞ்சது. பணம் தொழில் முக்கியமா இருந்தாலும், இந்த மாதிரி திருவிழா சமயங்கள்ல சொந்தங்களோட சிரிச்சு சந்தோஷமா இருக்கறது புது அனுபவமா இருக்கு ஆர்யா. தொடர்ந்து வேலை செய்யும் போது லேப்டாப்பை ரிஃப்ரஷ் பண்றோம், அது போல நமக்கும் ரிப்ரஷ்மென்ட் வேணும்”
“ரிட்டயர்மென்ட் ஆகற வயசுல ரிஃப்ரஷ்மென்ட் வேணுமா?” என்று தந்தையை சீண்டினான்.
“நீயும் மருமகளும் என் பார்வதியை பெத்து கொடுத்துடுங்க, நான் ஹாப்பியா ரிட்டர்யர்மென்ட் வாங்கிக்கிறேன்”
“அப்படியே நழுவ பாக்காதீங்க, ரெண்டு பேரோட பிசினஸையும் நான் ஒருத்தனே கட்டிட்டு அழணுமா?”
“மருமகளுக்கு இன்டர்ஸ்ட் இருந்தா, என் தொழிலை அவகிட்ட ஒப்படைச்சிடுவேன். இல்லனா யுகியை சிஇஓவா அப்பாய்ட்மெண்ட் பண்ணிடுவேன்” என்றார் ஆதிசங்கரன். ஆர்யன் யோசனையோடு மனைவியையே பார்த்திருந்தான்.
அன்று மாலை கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீரமல்லியிடம் சிலம்பம் பயின்ற மாணவ மாணவிகள் இரு அணிகளாக பிரிந்து தங்கள் திறமையை காட்டினர். ஆண்களுக்கு சமமாக அவர்கள் சண்டை போட்டு வெற்றி பெறவும் ஊர்மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.
மேடையில் வீரமல்லிக்கு வீரப்பதக்கம் வழங்கும் போது முத்துபாண்டிக்கு பெருமையாக இருந்தது. “முத்து மாமா” என்று அவள் மைக்கில் அவனை அழைக்க, வெட்கத்துடன் மேடைக்கு சென்றான். அவன் கழுத்தில் அந்த பதக்கத்தை அணிவித்து, “மாமா தான் எனக்கு எதிராளியா நின்னு சண்டை போட சொல்லி கொடுக்க உறுதுணையா இருந்துச்சு. இது எங்க ரெண்டு பேரோட வெற்றி” என்றவள் அவன் கால்களில் விழ, பாண்டியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
‘தர்மலிங்கம் வாரிசுனு நிருபிச்சிட்டடா பாண்டி’ என்று கூட்டத்தில் யாரோ சொல்ல நெகிழ்ச்சியுடன் அனைவரையும் வணங்கிவிட்டு மனைவியுடன் மேடையிலிருந்து கீழே இறங்கி நேராக செழியனிடம் சென்றான்.
செழியன் கைகளை கட்டிக் கொண்டு பாண்டியை தீர்க்கமாக பார்த்தபடி நிமிர்ந்து நின்றிருந்தான். அவனிடம் பாண்டிக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை. ஏனெனில் இருவரும் இதுவரை பாசமாக பேசிக் கொண்டதே இல்லை. எப்போதாவது நடக்கும் பேச்சு வார்த்தையும் எதிரும் புதிருமாக தான் இருக்கும்.
பாண்டியின் கண்கள் கலங்கி இருக்க, பேச்சு தொண்டையில் சிக்கி தவிப்பதை உணர்ந்த செழியன் “ஏலே, சங்கத்துல சேர்த்துக்கறேன்னு சொன்னியே, எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க போறே” என்றான் செழியன்.
“செயலாளர் பொறுப்பு கொடுக்கலாம்னு இருக்கேன்” என்றான் புன்னகையுடன்
“செயலாளர் செங்கதிர் செழியன், நல்லா தாம்லே இருக்கு” என்றான் பாண்டியின் தோளை தட்டி
பாண்டி சட்டென செழியனை அணைத்துக் கொண்டான். கூட்டத்தில் இருந்த ஊர்மக்கள் அனைவரும் காணக்கிடைக்காத அதிசயத்தை கண்டது போல அவர்கள் இருவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஊர் ரெண்டுபட்டத்துக்கு காரணமான இரு குடும்பமும் சேர்ந்து திருவிழா ஏற்பாடு செய்தது மட்டுமில்லாமல் ஊர்மக்கள் நடுவில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து நிற்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.
இருவரின் குடும்பத்தாரும் ஆனந்த கண்ணீருடன் அந்த காட்சியை பார்த்திருந்தனர். குடும்பங்கள் இணைந்து மூன்று வருடங்கள் ஆகி இருந்தாலும், அது வளர்மதியின் நன்மையை கருதி மட்டுமே நடந்திருந்தது. மற்றபடி செழியன் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாத தன்மையுடன் தான் அவர்களோடு பேசினான்.
செழியனுக்கும் முத்துபாண்டிக்கும் சிறுவயது முதலே ஏழாம் பொறுத்தம் தான். இருவரும் பாசத்தோடு கட்டிப்பிடித்து நிற்கும் காட்சியை அவர்களே இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறார்கள்.
“கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ”
என்ற பாடல் ஒலிக்கவும் செழியன் தன்னையுமறியாமல் சட்டென திரும்பி மேடையை பார்த்தான். அன்று பேருந்தில் கனிஇதழி இதே பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது தான் அவளை முதன்முதலாக ரசித்து பார்த்ததிருந்தான். அந்த நினைவில் அவன் கண்கள் மனைவியை தேட, அவளும் மேடையின் ஓரத்தில் நின்றபடி கணவனை தான் பார்த்திருந்தாள்.
கனிஇதழியிடம் பயிற்சி பெற்றவர்கள் ஒவ்வொருவராக நடனம் ஆடி மக்களை மகிழ்வித்தனர். ஆர்யன் தன் அருகில் அமர்ந்திருந்த வளர்மதியின் கரத்தை அழுத்தினான்.
“மதி, உன் அண்ணிங்க அவங்களோட தனித் திறமையை நல்ல முறையில பயன்படுத்த உன் அண்ணனுங்க பக்கபலமா இருந்திருக்காங்க. உனக்கும் ஏதாச்சும் சாதிக்கணும்னு இருந்தா என்கிட்ட சொல்லு, உனக்கு நான் உதவியா இருப்பேன்” என்றான்.
“எனக்கு உங்க கூடவே இருக்கணும். அந்த மாதிரி ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க”
“என் கூடவே இருக்கணும்னா ஆபிஸூக்கு வந்தா தான் முடியும்”
“அப்போ ஓகே, நானும் உங்க கூட ஆபிஸ் வந்து, உங்களுக்கு பிஏ வா இருக்கேன்”
“எனக்கு பி ஏ வா இருந்தா, நம்ம பெட்ரூம்ல நடக்கறது தான் ஆபிஸ்லயும் நடக்கும் பரவால்லயா?” என்று கண் சிமிட்டினான்.
வளர்மதி அவன் தோளில் செல்லமாக தட்டி, “போங்க நீங்க” என்று சிணுங்கினாள்.
“நான் மட்டும் தனியா போய் என்ன பண்றது? வேணும்னா நீயும் என் கூட வா. இப்ப வீட்லயும் யாரும் இருக்க மாட்டாங்க ஓகேவா?” என்று கண்சிமிட்ட, அவள் வெட்கத்தில் அவன் தோளில் சாய்ந்தாள்.
நடன நிகழ்ச்சி முடிந்ததும் செழியனின் கரங்களால் கனிஇதழிக்கும் பாராட்டும் பதக்கமும் வழங்கப்பட்டது.
அன்று இரவு கனிஇதழியின் மடியில் செழியன் படுத்திருந்தான். கணவனின் தலைமுடியை கோதியபடி “என் ஸ்டுடென்ட்ஸ் டான்ஸ் ஆடறதை பாக்கறதா உங்களை பாக்கறதானு தெரியல, கடிச்சு திங்கற மாதிரி பாத்துட்டு இருக்கீங்க” என்று சிணுங்கினாள் கனிஇதழி
“எத்தனை முறை கடிச்சு தின்னாலும் பசி அடங்க மாட்டேங்குதுடி, என்ன பண்ண சொல்றே” என்றவன் கனிஇதழியின் கழுத்தை பற்றி தன் முகம் நோக்கி இழுத்து அவள் கனிஇதழ்களை கொய்து தின்ன ஆரம்பித்தான்.
மறுநாள் காலை பூ மிதிக்கும் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முத்துபாண்டி தவித்துக் கொண்டிருந்தான். வீரமல்லியிடம் கெஞ்சி கொஞ்சி பார்த்து விட்டான், அவன் மனம் மாறுவதாக இல்லை. மனைவியுடன் குளித்து மஞ்சள் ஆடை அணிந்து கோயிலுக்கு வந்தான்.
செழியன் பாண்டியை அணைத்து, “தைரியமா இரு, நல்லதே நடக்கும்” என்றான். பாண்டியும் தலையசைத்து வரிசையில் அமர்ந்தான். அவன் பார்வை பூக்குழியில் இறங்க தயாராக இருக்கும் அவன் மனைவி வீரமல்லியின் மீதே நிலைத்திருந்தது.
அவனுக்காக வேண்டி தன்னையே வருத்திக் கொள்கிறாளே என்ற ஆதங்கமும் தவிப்புமாக மனைவியையே பார்த்திருந்தான். வேலு தேங்காய்களை கொண்டு வந்து வைக்க கோயில் பூசாரி தேங்காய்களை உடைக்க ஆரம்பித்தார். அவர் உடைத்து முடித்தது கூட தெரியாமல் மல்லிக்கு கால் வலிக்குமோ என்ற யோசனையில் இருந்தான்.
ஆர்யன் அவனை எழுப்பிய பின்பு தான் சுயநினைவுக்கு வந்தவன் ஓடிச்சென்று மனைவியின் காலடியில் அமர்ந்து அவள் காலை ஆராய்ந்தான். காலில் எந்த காயமும் இல்லாததை உறுதி செய்த பின் தான் நிம்மதியாக மூச்சு விட்டான். வீரமல்லியும் பாண்டியின் தலையை தான் வருடிக் கொண்டிருந்தாள்.
அடுத்ததாக அர்ஜூனன் திரெளபதி திருமண வைபவத்தை தொடர்ந்து அன்னதானம் நடைபெற செழியன், ஆர்யன், முத்துபாண்டி மூவருமாக சேர்ந்து வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினர். பந்தியில் கனிஇதழியின் பெற்றோர் அனலரசுவும் கெளரியும் அமர்ந்திருப்பதை பார்த்து செழியன் முகம் மாற, உடனே அவர்கள் எழுந்து கொண்டனர்.
“அவங்க மகன் செஞ்ச தப்புக்கு அவங்களை தண்டிக்கிறது நியாயமில்லை செழியன். இனி இன்பரசுவால எந்த பிரச்சனைக்கும் வராது. இவங்க பொறந்த வீடும் பொண்ணை கொடுத்த வீடும் இங்கே இருக்கும் போது வேறெங்க போவாங்க? இவங்களை பாத்தா மதிக்கு எந்த குழப்பமும் வராது. ஆனா அவங்களை ஒதுக்கி வைச்சா கனிக்கு அது வருத்தத்தை தான் கொடுக்கும்” என்றான் ஆர்யன்.
செழியன் திரும்பி மனைவியை பார்த்தான். அவள் தூரத்தில் இருந்து அவள் பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்தாள். கணவனின் பார்வை தன் மேல் இருப்பதை கண்டதும் திரு திருவென விழித்தாள். கைநீட்டி அவளை வரச் சொன்னான். தடதடக்கும் மனதுடன் கணவன் அருகே வந்து நின்றாள்.
“அத்தைக்கும் மாமாவுக்கும் என்ன வேணும்னு பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோ” என்று சொல்லி அங்கிருந்து அகன்றான். கனிஇதழி ஆர்யனை நன்றியுடன் பார்த்துவிட்டு அவள் பெற்றோருக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.
“நீங்க பேசிட்டு இருங்க” என்று ஆர்யன் நகர்ந்ததும், கனிஇதழி சாப்பாடு பரிமாற கெளரி தன் மகளுக்கு சாதத்தை பிசைந்து ஊட்டினார். செழியன் சற்று தூரத்தில் இருந்து மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான். அவள் முகம் முன்பை விட சந்தோஷமாக இருப்பதாக தோன்றியது.
(தொடரும்)