முரளிகிருஷ்ணா ஆள் அரவமற்ற அடர்ந்த காட்டுப் பகுதியை அடைந்ததும் அங்கே ஓங்கி உயர்ந்திருந்த மலைத் தொடருக்கு முன்னால் சென்று காரை நிறுத்தினான். செந்தாழினியின் மனதில் கேள்வி இருந்தாலும் அவள் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
காரில் இருந்து இறங்கியவன், “செந்தாழினி கீழே இறங்கு, உனக்காக ஒரு புது சாம்ராஜ்யத்தையே உருவாக்க போறேன் பாக்கறியா?”
“என்ன சொல்றீங்க யாதவ்? புது சாம்ராஜ்ஜியமா?”
“ஆமா, நாம வாழறதுக்காக இப்போதைக்கு ஒரு அரண்மனையை உருவாக்க போறேன். அதுக்கப்புறமா இந்த உலகத்தையே என் காலடியில் வரவைக்கிறேன்”
“அதெப்படி?”
“இதோ இப்படி” என்று தன் சட்டைக்குள் இருந்த புல்லாங்குழலை எடுத்துக் காட்டினான்.
“என்ன யாதவ் சொல்றீங்க? இந்த புல்லாங்குழலை சொந்த உபயோகத்துக்கு யூஸ் பண்ணமாட்டேன், யாருக்காவது ஆபத்துனா மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்னு சொன்னீங்க. இப்போ அரண்மனையை உருவாக்கறதா சொல்றீங்க? இதெல்லாம் வேணாம் யாதவ் நாம மதுரைக்கு போயிடலாம் உங்க பால்கோவா பிசினஸை பாத்துக்கலாம்”
“செந்தாழினி நமக்கே சொந்தமான இப்படிப்பட்ட மந்திரகோலை வச்சிக்கிட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் பால்கோவா விக்க சொல்றீயா என்னை? இதுல இருக்கிற மந்திர சக்தி அள்ள அள்ள குறையாதது, அதுல அரண்மணை கட்டிக்கிட்டா யாருக்கும் உதவி செய்ய முடியாதா என்ன? உனக்கு ராணி மாதிரி வாழணும்னு ஆசையே இல்லையா?”
அதற்கு மேல் செந்தாழினி எதுவும் மறுக்காமல், “சரி உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க” என்றாள் தோள்களை குலுக்கியபடி
முரளி கிருஷ்ணா தன் கையில் இருந்த பான்சூரி புல்லாங்குழலை எடுத்து தன் முகத்துக்கு நேரே நீட்டி “எனக்கு அழகான அரண்மனை வேண்டும்” என்று சொல்லி அதை எடுத்து ஒரு சுழற்று சுழற்றி தன் முன்னால் நீட்டினான். அப்போது அங்கே பிரமாண்டமான அரண்மனை உருவாகியது.
அழகிய ஒளிவிளக்குகளால் ஒளிர்ந்த அந்த பிரமாண்டமான அரண்மணையை பார்த்து செந்தாழினி விழி விரித்தாள். “வாவ்” என்றாள் கண்கள் மின்ன
“இதுக்கே இப்படி சொல்லிட்டா எப்படி? உள்ள வந்து பாரு, குட்டி சொர்க்கமே இருக்கும்”
“பாத்து யாதவ், விஸ்வாமித்ரர் உருவாக்கிய திரிசங்கு சொர்க்கம் போல ஆயிட போகுது”
“தாழினி அப்படி எதுவும் நடக்காது. உனக்கு இன்னும் இந்த புல்லாங்குழல் அருமையை பத்தி தெரியல, நமக்குள்ள நடக்க வேண்டியதை நடத்திட்டு, புல்லாங்குழலை வச்சு என்னவெல்லாம் செய்ய போறேன்னு பாரு” என்றான் தீவிரமான குரலில்
“என்ன பண்ண போறீங்க யாதவ்?”
“இந்த உலகத்தையே என் காலடியில கொண்டு வரப்போறேன். ஆனா என்னோட சாம்ராஜ்யத்துக்கு நீதான் மகாராணி, அதுக்கு முன்னாடி நமக்குள்ள நடக்க வேண்டியது நடக்கணும் செந்தாழினி” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து.
முரளிக்கு தெரியும் அவன் கிருஷ்ண அம்சத்தில் பிறந்தவன் இல்லை, அத்தோடு நல்லது செய்யும் எண்ணமும் அவனுக்கு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனால் வெகுநாட்களுக்கு புல்லாங்குழலை வைத்திருக்க முடியாது.
ஏனென்றால் ஒவ்வொரு கோகுலாஷ்டமி அன்றும் கந்தர்வர்கள் தங்கள் இசைக்கருவிகளோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய புல்லாங்குழல் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள். அந்த சமயத்தில் புல்லாங்குழல் தவறான இடத்தில் இருந்தால் கட்டாயம் அதை வைத்திருப்பவர்களை மரணிக்க செய்து அதை மீண்டும் கொண்டு சென்று பழையபடி மதுரா நகரில் பந்திரவன் காட்டுக்குள்ளே வைத்து விடுவார்கள். கந்தர்வன்கள் அவனை கொல்ல கூட தேவை இல்லை, அவர்களின் இசை வாத்தியங்களை மீட்டினாலே போதும், அதீத சப்தத்தால் காது சவ்வு வழியாக நரம்புகள் வெடித்து இறக்க வேண்டியது தான். அல்லது பைத்தியமாக திரிய வேண்டியது தான். இவற்றையெல்லாம் அவன் கண்டுபிடித்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் படித்து தெரிந்துக் கொண்டான்.
அதிலிருந்து தப்பிக்க தான் முரளி செந்தாழினியை அடைய நினைத்தான். ராதையின் அம்சத்தில் பிறந்தவளை தன் மனையாளாக்கி கொண்டால், கந்தர்வர்களால் அவனை எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு ராதை அன்னை போன்றவள். அவளுடைய கணவனான யாதவ் என்னும் போர்வையில் இருக்கும் முரளியை அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று முழுதாக நம்பினான். அதனால் தம்பி மனைவியை தன் மனையாளாக்கி கொள்ள நினைத்தான்.
வாலி தன் தம்பி சுக்ரீவன் மனைவியை அடைய விரும்பியதால் அவனுக்கு வந்த நிலைமையை முரளி அறிந்திருக்கவில்லை பாவம்!
“யாதவ் என்ன பலமா யோசிச்சிட்டு இருக்கீங்க? நீங்க உருவாக்கிய அரண்மனையை வெளியே இருந்து பாத்தே ரசிச்சிட்டு இருக்கீங்க. உள்ளே கூட்டிட்டு போற ஐடியாவே இல்லயா?” என்றாள் கிண்டலாக
“உனக்காக உருவாக்கினது, உன்னை கூட்டிட்டு போக மாட்டேனா? வா” என்று அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவள் சற்றே யாேசித்து அவன் கையில் தன் கரத்தை நீட்டினாள், அவன் அதை பற்றும் முன்பே துள்ளிக் கொண்டு முன்னால் ஓடினாள். “யாதவ் என்னை பிடிங்க பாக்கலாம், ஆனா மந்திரக்கோலை யூஸ் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்” என்று கத்தியபடி அரண்மனையின் வளாகத்திற்குள் ஓடினாள்.
“செந்தாழினி என்ன இது விளையாட்டு” என்று திகைத்தவன், அவளின் குறும்பு சிரிப்பை பார்த்து அவனும் சிரித்துக் கொண்டே அவளை துரத்தினான். அவள் அரண்மனையின் ஒவ்வொரு தூண்களிலும் தன்னை மறைத்துக் கொண்டு அவனுக்கு போக்கு காட்டி கலகலவென்று சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பை பார்த்து வியந்து போனான் முரளி கிருஷ்ணா. இதுவரைக்கும் அவள் அவனை பார்த்து சிரித்ததே இல்லை. அதற்காக அவன் செய்யாத முயற்சிகள் இல்லை. எப்போதும் அவளின் வெற்றுப்பார்வையை தரிசித்தவனுக்கு அவளுடைய விளையாட்டும் சிரிப்பும் மனதை கவர்ந்தது. இதுநாள் வரைக்கும் புல்லாங்குழலை அடைவதற்கு மட்டும் தான் அவனுக்கு செந்தாழினி தேவைப்பட்டாள்.
ஆனால் இப்போது அவள் அவனை பார்த்து சிரித்து விளையாடவும், இதுநாள் வரையில் அவள் மேல் இல்லாத ஈர்ப்பு இன்று தோன்றியது. கடமைக்காக அவளை ஆட்கொண்டு அவளையும் புல்லாங்குழலையும் தன் வசப்படுத்தி எண்ணி இருந்தவனின் தெளிந்த மனதில் கல்லை எறிந்து கொண்டிருந்தாள் செந்தாழினி!
எந்த அலங்காரமும் இல்லாமல் பயணக் களைப்புடன் இருந்தவளின் முகத்தில் இப்போதும் தென்படும் அபரிதமான அழகை கண்டு வியந்தான். தூண்களின் மறைவில் மறைந்துக் கொண்டு எட்டி பார்த்து உதட்டை சுழித்து கண்களை சுருக்கி அவனுக்கு அழகு காட்டியவளின் குறும்பில் மதி மயங்கினான் முரளி. யாதவ் கிருஷ்ணா என்று தான் தன்னிடம் விளையாடுகிறாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இந்த இனிமையான தருணத்தை மிகவும் விரும்பினான்.
செந்தாழினி தன் விழியசைவிலும் செவ்விதழ் குவிப்பிலும் முரளியின் முரட்டுத்தனத்தை முறியடித்து கொண்டிருந்தாள். அவளுக்கு சந்தேகம் வராமல் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் அவளை கொண்டு வருவது எப்படி என்று தயங்கி கொண்டிருந்தவனுக்கு இப்போது அவளின் செயல் உல்லாசத்தை அளித்தது. அவளோடு இப்படியே விளையாடி அவள் பெண்மையை சூறையாடி விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து விட்டான் முரளிகிருஷ்ணா.
இப்போது மும்பரமாக அவனும் அவளின் ஓடிப்பிடித்து விளையாடும் ஆட்டத்தில் இணைந்துக் கொண்டு அவளை துரத்தினான். தூண்களின் மறைவில் இருந்து எட்டிப்பார்த்தவளை, அவள் அறியாமல் அவள் பின்னால் இருந்து பார்த்தான். தூணோடு சேர்த்து அவளையும் இறுக அணைக்க எண்ணி கைகளை விரித்துக் கொண்டு அவன் முன்னேற அவளோ கீழே குனிந்து தப்பி ஓடினாள். அதை கவனிக்காமல் அந்த தூணை இறுக்கிபிடித்தவனை பார்த்து கலகலவென்று சிரித்தாள்.
அந்த தூணிலேயே தலையை சின்னதாக மோதி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மீண்டும் அவளை துரத்தி பிடிக்க ஒடினான். துரத்திக்கொண்டிருந்தவன் தன் முன்னால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று வளைந்து வளைந்து இடுப்பை வளைத்து ஒயிலாக ஓடிக் கொண்டிருந்தவளையும், அவளின் ஆடி அசைந்தாடும் கூந்தல் மோதி மோதி விளையாடிய அவள் பின்னழகில் ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டான். அவன் துரத்தவில்லை என்பதை உணர்ந்து திரும்பி நின்றவள் இடையில் தன் இருகைளையும் வைத்துக் கொண்டு என்ன என்பது போல தலையை அசைத்து இருபுருவங்களையும் உயர்த்தினாள். ஓடியதால் பலமாக மூச்சுவாங்கி கொண்டிருந்தவளின் யெளவனங்கள் அவற்றின் செழுமையை வெளிச்சம் போட்டு காட்ட முரளிகிருஷ்ணாவிற்கு மூச்சுமுட்டியது. தூரத்தில் இருந்து அவள் அழகை ரசித்திருக்கிறான் தான். ஆனால் இப்படியொரு கோணத்தில் அவளை அவன் பார்த்தே இல்லை.
கந்தர்வ வனத்தில் தன் முன்னால் வந்து நின்ற தேவகன்னிகைகளையும் அவர்களின் மோகினி ஆட்டத்தையும் பார்த்து மயங்காதவன் இப்போது செந்தாழினியின் செம்மேனி வனப்பை பார்த்ததும் அப்போதே அவற்றை தீண்டி விட துடித்தான். “ப்பா என்னா அழகு இவ, பாக்கும் போதே போதையை தரும் இவளை அடையறதை விட்டுட்டு சாமியார் மாதிரி இல்ல வாழ்ந்திருக்கேன்” என்று நினைத்தவாறு அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக கண்களால் அளவெடுக்க தொடங்கினான்.
அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டு “யாதவ் ஏன் இப்படி முழுங்கற மாதிரி பாக்குற? நீ மோசம்” என்று சிணுங்கினாள்.
“அப்படியே உன்னை முழுங்கிடணும்னு தான் பாக்கறேன்” என்றான் மோகத்துடன்.
“ஏன் யாதவ் ரொம்ப பசிக்குதா?” என்றாள் கண்களை சிமிட்டி
“ரொம்ப” என்றான் அதிகமான அழுத்தத்துடன்
“அப்போ கொஞ்சம் பொறு, இன்னைக்கு நைட் பன்னென்டு மணிக்கு உனக்கு விருந்தே வைக்கிறேன்” என்றாள் மோக பார்வையுடன்
“அதென்ன பன்னென்டு மணி கணக்கு” என்றான் புருவம் சுருக்கி
“அது சஸ்பென்ஸ்” என்றாள் குறும்புடன்
பன்னிரண்டு மணிக்கு என்ன? என்று தாடையை தடவியபடி அண்ணாந்து வானத்தை பார்த்தவனின் கண்கள் விரிந்தன. வானத்தில் தெரிந்த தேய்பிறை நிலவை கூர்ந்து பார்த்தவனுக்கு புரிந்து போனது, தேய்பிறை எட்டாம் நாள், நட்சத்திரங்களை கூர்ந்து பார்த்தான். முரளியின் மூளை சீக்கிரமாக நாட்களை கணக்கெடுத்தது, அடச்சே இதை எப்படி மறந்து போனேன். மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். திட்டத்தை நிறைவேற்றுவதில் மும்பரமாக இருந்தவன் நாள் கணக்கை கவனிக்காமல் விட்டிருக்கிறான். அவனுடைய திட்டத்தை இன்னும் சீக்கிரம் நடைமுறைபடுத்தி இருக்கணும். நள்ளிரவை தாண்டினால் கிருஷ்ணர் பிறந்த நாளான அஷ்டமி, அதாவது கோகுலாஷ்டமி.
யாதவ் கிருஷ்ணா பிறந்ததும் அன்று தானே? அதுக்கு தான் செந்தாழினி அவன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு தன்னையே கொடுக்க நினைக்கிறாள் போலும். ஆனால் பன்னிரண்டை தாண்டினால் எந்த நேரத்திலும் கந்தர்வர்கள் இசை முழுக்கத்துடன் புல்லாங்குழல் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள். அது உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்து விடுமே. இப்போது என்ன செய்வது? பலமாக யோசித்தான். பன்னிரண்டு மணிக்குள் அவளை அடைந்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்
“என்ன யாதவ் யோசிக்கிறே? அதுசரி வெளியே இருக்கும் போது நடக்க வேண்டியது எல்லாம் நடக்கணும்னு சொன்னியே அது என்ன யாதவ்?” என்றாள் குறும்புடன்
“உன்னை நான் முழுசா முழுங்கறது தான் நடக்கணும்னு சொன்னேன். இப்பவே உன்னை முழுங்கிடட்டுமா” என்று அவளை மோகத்துடன் நெருங்கினான்.
“ச்சீ நீ மோசம், நான் குளிக்க போறேன். எனக்கு பசிக்குது. முதல்ல என் பசியை தீர்த்து வை, உன் பசியை நான் அப்புறமா தீர்க்கறேன்”
அவளை ஆழ்ந்து பார்த்தபடி “சரி குளிச்சிட்டு வா, சாப்பாட்டையும் மந்திரத்தால வரவைக்கிறேன். கொஞ்சநாள் நமக்கு தனிமை வேணும். அதுக்கப்புறம் வேலை ஆட்களை வச்சுக்கலாம்” என்றான். அன்று இரவே அவளை வேட்டையாடி விடவேண்டும் என்று அவன் முடிவெடுத்து விட்டான்.
அவளுக்காக சிகப்பு நிறத்திலான ஆடையில் தங்க நிற ஜரிகையுடன் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய உடையும் அதற்கு ஏற்றாற் போல தங்க நிறத்தில் மேல் கச்சையையும் வரவழைத்து அவளிடம் கொடுத்தான்.
“என்ன யாதவ் இது, எனக்கு இந்த கச்சை எல்லாம் கட்ட தெரியாது” என்று சிணுங்கினாள்.
“கட்டணும்னு கட்டாயம் இல்ல தாழினி” என்று கண்சிமிட்டினான். நானா இப்படியெல்லாம் பேசறேன்? என்று அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
“நீ ஒரு மார்க்கமா தான் இருக்க, என்னைய மார்க் பண்ணாம விடமாட்ட போல” என்று உதட்டை சுழித்து அவனுக்கு அழகு காட்டியபடி அவன் கையிலிருந்த ஆடையை வாங்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
“செந்தாழினி நானும் குளிக்க தான் போறேன், உள்ளே வரலாமா?” என்றான்.
அவனுக்கு விரலை காட்டி எச்சரிப்பது போல பாவனை செய்துவிட்டு சிரித்துக் கொண்டே வெட்கத்துடன் குளியலறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
அவள் பேச்சும் குறும்பும் நாணமும் முரளியின் ஆண்மையை வெகுவாக தூண்டி விட்டது. குளியலறை கதவை உடைத்துக் கொண்டு அப்போதே அவளை ஆட்கொள்ளும் ஆவேசம் பொங்கியது. தன் புலன்களை வெகுவாக அடக்கினான், காதலனை போல கையாண்டால் தான் சந்தேகம் வராமல் தனக்கு கட்டுபடுவாள், அதைவிட்டு கயவனை போல நடந்துக் கொண்டால் வீண் பிரச்சனை. என்ன இருந்தாலும் அடித்து பழுக்க வைப்பதை விட தானாக கனிந்த பழம் தானே ருசிக்கும் என்று அந்த எண்ணத்தை கைவிட்டான்.
இன்று இரவு விடிந்தால் கோகுலாஷ்டமி. அவளை அடைய வேண்டிய கட்டாயமிருந்தது அவனுக்கு. அவன் இருந்த நிலைக்கு இந்த நாள் எல்லாம் கணக்கே இல்லை. இப்போது அவளை அடைந்தே ஆக வேண்டும் என்ற தீரா மோகம் அவனை ஆட்கொண்டு விட்டது. அவனும் வேறொரு குளியலறைக்கு சென்று அங்கிருந்த குளியல் தொட்டியில் இருந்த குளிர்ந்த நீரில் முழ்கினான். அந்த குளுமையையும் மீறி மோகத்தின் வெப்பத்தால் அவன் உடல் முழுவதும் தகித்தது. அவனின் ஒவ்வொரு அணுவும் அவள் வேண்டும் வேண்டும் என்று அவனுக்குள் அணுப்பிளவை உருவாக்கி கொண்டு இருந்தது.
*******
அதே சமயம் யாதவ் கிருஷ்ணாவை மனநோயளிகளுக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சுமார் பத்து ஆட்கள் சேர்ந்து அவனை ஒரு பெரிய வேனில் பலவந்தமாக ஏற்ற முயன்றுக் கொண்டிருந்தனர்.
சற்று முன்பு, வெற்றிவேந்தன் முரளி என்று நினைத்து யாதவ் கிருஷ்ணாவை அறைக்குள் தள்ளி பூட்டி விட, உச்சப்பட்ச கோபத்தை அடைந்தான் யாதவ். அவன் எவ்வளவோ சொல்லியும் வீட்டில் இருந்தவர்கள் அவனை முரளி கிருஷ்ணா என்றே நினைத்தார்கள்.
வேலு கூட ஒருமுறை, “ஐயா, எனக்கென்னவோ ஒரு முறை அவர் சொல்றதை கேக்கலாம்னு தோணுது, என்ன சொல்றாருனு தான் கேப்போமே” என்றார்
“வேலு, உனக்கு முரளியை பத்தி தெரியாதா? என்னென்னவோ சொல்லி நம்மளை குழப்பி விட பாக்கறான். நாம கதவை திறந்தா போதும் யாதவ்வை தேடி கிளம்பிடுவான். அவன் சொல்றதை கேட்டியா? அவன் தான் யாதவ் கிருஷ்ணாவாம்? உருவ ஒற்றுமை இருக்கு தான் ஆனா இரண்டு பேரும் நிறத்தாலயும் குணத்தாலயும் வேற வேற, அதுகூடவா நமக்கு தெரியாது? அவனுக்கு பைத்தியம் முத்திடுச்சுனு நினைக்கிறதா? இல்லை நம்ம கிட்ட நடிக்கிறான்னு நினைக்கிறதானு ஒண்ணும் புரியல. இரண்டுமே ஆபத்து தான். அவன் போய் நம்ம யாதவ்வை கொலை பண்ண போறதா சொல்லிட்டு இருக்கான். சொன்ன மாதிரி செஞ்சுட்டா என்ன பண்றது வேலு? நீயே சொல்லு
ஒரு தகப்பனா நான் என் சின்ன மகனுக்கு இதுவரைக்கும் எதுவும் செய்யல. அவன் உயிரையாவது காப்பாத்த வேண்டாமா? என்ன ஆனாலும் சரி நான் முரளியை வெளியே விடறதா இல்ல. அவன் காட்டு கத்தல் கத்தினாலும் சரி, சாப்பிடலனா கூட பரவாயில்லை. அந்த ரூம் கதவை நீங்க யாரும் திறக்க கூடாது சொல்லிட்டேன்” என்று வெற்றிவேந்தன் செல்விக்கும் வேலுக்கும் பொதுவாக எச்சரிக்கை கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.
இதையெல்லாம் பூட்டிய அறைக்கதவின் சாவி துவாரத்தின் வழியாக கேட்டுக் கொண்டிருந்த யாதவ் கிருஷ்ணாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. “இந்த ஆளோட புள்ள பாசத்துல தீய வச்சு கொளுத்த. நான் தான்யா யாதவ்” என்று கத்தினான்.
அந்த அறைக்கதவை பலம் கொண்டு அடித்தும் உதைத்தும் பார்த்தான். உறுதியான தேக்குமரத்தில் செய்யப்பட்ட கதவு அது அவனுக்கு அசைந்து கொடுக்கவில்லை. என்ன செய்வது? என்று யோசித்தவன் தன் அன்னையை அழைத்தான் “அம்மா பசிக்குதும்மா, நம்ம ஊருலயே இருந்து இருக்கலாம் உன் புருஷன் பேச்சை கேட்டு அந்த முரளியை கண்டுபிடினு சொன்னே. இப்போ என் நிலைமையை பாத்தியா? ஊர்ல நம்ம முத்துகருப்பனும் லட்சுமியும் என்ன பண்றாங்களோ தெரியல, நான் தான் யாதவ் என்னை நம்பும்மா, கதவை திறமா” என்றான்.
அவன் குரல் ஏனோ செல்வியின் மனதை பிசைந்தது “ஐயா, இது என் புள்ளை யாதவ் தான். கதவை திறந்து அவனை வெளியே விடுங்க” என்று கதறிக் கொண்டு வெற்றிவேந்தனிடம் ஓடினார் செல்வி
“செல்வி அவனை பத்தி உனக்கு முழுசா தெரியாது. அவன் வெளியே வர்றதுக்காக நடிக்கிறான். நம்பாதே” என்றார் வெற்றிவேந்தன்
“ஐயோ அவன் முரளியா கூட இருக்கட்டுமே. பசிக்குதுங்கிறானே என் புள்ள, கதவை திறங்க முதல்ல. இந்த கொடுமையை பாக்கறதுக்கு தான் இத்தனை வருஷம் கழிச்சு இந்த வீட்டுக்கு நான் வந்தேனா? என்று செல்வி அழ, வெற்றி வேந்தனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அவர் யோசித்து ஒரு முடிவிற்கு வருவதற்குள் அறைக்குள் இருந்த யாதவ் உச்சப்பட்ட கோபத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து போட்டவன், ஆத்திரத்தோடு கதவை தோள்களில் ஓங்கி குத்தினான். அவன் கோபத்தை தாங்காமல் கதவு ஆட்டம் காண ஆரம்பித்தது.
அதை பார்த்து அதிர்ந்த வேலு வெற்றியின் அறைக்கு ஓடி வந்து விஷயத்தை சொல்ல, “பார்த்தியா, அவனுக்கு பைத்தியம் தான் முத்திடுச்சு” என்றபடி அவசரமாக தன் போனை எடுத்து மனநலமருத்துவமனைக்கு போன் செய்தார்.
அடுத்த பத்து நிமிடத்தில் யாதவ் கிருஷ்ணா அவன் இருந்த அறைக்கதவை மொத்தமாக தகர்த்து எறிந்து வெளியே வரவும் மனநல மருத்துவமனையிலிருந்து சுமார் பத்து ஆட்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவன் திமிற திமிற பத்து பேரும் அவனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் கொண்டுவந்திருந்த பெரிய வேனில் அவனை ஏற்ற போராடினார்கள். வெளியே வரும் வரை கொஞ்சமாக இருந்த அவன் திமிறல் இப்போது அளவுக்கு அதிகமாக இருந்தது. இன்னும் பத்து பேர் வந்தாலும் அவனை பிடிக்க முடியாது போல என்று நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் கைகளில் அப்படியே உருண்டு எழுந்து துள்ளி குதித்து அந்த வேனுடைய மேல் பகுதியில் நின்றான். அவன் எகிறி குதித்ததையும் அநாயசமாக அந்த வேன் மேல் நின்றதையும் பார்த்து வெற்றிவேந்தன் செல்வி உட்பட அவர்கள் அனைவரும் வாயை பிளக்க, அந்த நொடியை வீணாக்காமல் யாதவ் கிருஷ்ணா கீழே குதித்து மின்னல் வேகத்தில் வேனுக்குள் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து சாவியை திருப்பி, வெற்றிவேந்தனை முறைத்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“முரளி வேணாம் யாதவ்வை ஒண்ணும் செய்யாதே. நான் சம்பாரிச்சதையும் சேர்த்து மொத்த சொத்தையும் உனக்கே எழுதி வச்சிடுறேன். நீ அவனை கொன்னுடுவேன்னு பயமுறுத்தினதால தானே இத்தனை நாளா அவனை போய் பார்க்காம இருந்தேன். இனி மேலும் அவனை போய் பார்க்க மாட்டேன். செல்வியை கூட அவ ஊருக்கே அனுப்பிடுறேன். யாதவனை உயிரோட மட்டும் விட்டுடுப்பா. எனக்கு என் இரண்டு பிள்ளையும் வேணும்” என்று கைக்கூப்பினார் வெற்றி வேந்தன்.
அவரை பார்க்கவே பாவமாக இருந்தது யாதவ் கிருஷ்ணாவிற்கு “நான் தான் யாதவ்னு எத்தனைமுறை சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல. ஒரே ஒரு வாக்கு மட்டும் கொடுக்கறேன். உங்க இரண்டு மகன்களோட உயிருக்கும் எதுவும் ஆகாது சரியா? இப்போ என் வேலையை பாக்க விடுங்க” என்று சொல்லிவிட்டு வேனை வேகமாக கிளப்பினான்.
“ஐயா, விடிஞ்சா கோகுலாஷ்டமி, நம்ம யாதவனோட பொறந்த நாள். அவனுக்கும் முரளிக்கும் எதுவும் ஆக கூடாதுனு நான் இப்பவே பூஜையை ஆரம்பிக்கிறேன். நீங்க கவலபடாதீங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று கண்களை துடைத்துக் கொண்டு செல்வி வீட்டிற்குள் சென்றார்.
முரளி எங்கே போயிருப்பான் என்று எல்லாம் யாதவ்விற்கு தெரியாது. இலக்கில்லாமல் வேனை படுவேகத்துடன் ஓட்டிக் கொண்டு இருந்தான்.
*********
முரளிகிருஷ்ணா குளித்து முடித்து கையில்லாத மேல் சட்டையை அணிந்தான், அதன் பட்டன்களை பூட்டாமல் விட்டபடி அவன் முன்னால் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முழுபிம்பத்தை கர்வத்துடன் பார்த்தான்.
உருண்டு திரண்டிருந்த தோள்களும், அவன் நெஞ்சுறுதியை காட்டும் திண்ணிய மார்பும், அதற்கு கீழே கட்டம் கட்டமாக இருந்த வயிறும் அவன் கட்டுடலை பறைச்சாற்ற, கர்வத்துடன் தன் அடர்ந்த மீசையை முறுக்கினான். யாதவனின் நிறம் கருமை தான் என்றாலும் அவனுடயை தோற்றம் அழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறது என்று நினைத்தவன் மெல்ல சிரித்தான்.
“யாதவா, இந்த உருவமும் எனது இல்லை, உன்னுடையது, நான் ஆட்கொள்ள போகும் பெண்ணும் என் மனைவியில்லை, உன் மனைவி. ஆனால் உணர்வுகள் மட்டும் இந்த முரளி கிருஷ்ணாவுடையது” என்று சத்தமாக சிரித்தான்.
வெளியே அரவம் கேட்கவும் ஹாலிற்கு வந்தான். அவன் விழிகள் தெறித்து விடுவது போல விரிந்தன, சிவப்பு நிற உடையில் செந்தாழினி செங்காந்தள் மலராக வந்து நின்றாள். வெண்ணிறமேனி சிவப்பு நிற ஆடையில் தன் வனப்பை இன்னும் தூக்கி காட்டியது, தங்க நிற மேலாடையில் இருந்தவளை பார்க்க பார்க்க நெஞ்சில் நீர் வற்றி போனது அவனுக்கு. பாலும் தேனும் கலந்த கலவையால் செய்து அச்சில் வார்த்த சிலை போல இருந்தவளின் மேலிருந்த பார்வையை அவனால் விலக்க முடியவில்லை.
“யாதவ் பசிக்குது” என்றாள் சிணுங்கலாக
புல்லாங்குழலை எடுத்து அவளுக்கு தேவையான உணவுகளை வரவழைத்து கொடுத்தான். செந்தாழினி நிறுத்தி நிதானமாக சாப்பிட்டு கொண்டிருக்க, “செந்தாழினி சீக்கிரம் சாப்பிடு” என்று சொல்லிக் கொண்டே அவளை தன் பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான். அவள் வேண்டுமென்றே நிதானமாக சாப்பிட்டு அவனை வெறுப்பேற்றி சிரித்தாள்.
அவள் விளையாடுகிறாள் என்று புரிந்தவன், அவளிடமிருந்து தட்டை பிடுங்கி அதை ஓரமாக வைத்து விட்டு அவளை அள்ளி அணைக்க நினைத்து திரும்பியவன் திடுக்கிட்டான், செந்தாழினி அங்கே இல்லை!
அதிர்ச்சியோடு சுற்றும் முற்றும் பார்க்க, அவள் குறும்புடன் அவனை பார்த்து சிரித்து, “யாதவா என்னை பிடி பார்க்கலாம்” என்று ஓடினாள். அவள் பின்புறம் தங்க நிற மேலாடையின் முடிச்சு அவன் கண்களுக்கு தெரிந்து அவனை மேலும் வெறியேற்றியது. அப்போதே அதை பிடித்து இழுக்கும் எண்ணம் மேலோங்க அவளை நோக்கி ஓடினான்.
இதே காட்சி கந்தர்வனவனத்தில் பிரதாப்பிற்கு நடந்ததை நேரில் பார்த்தவனுக்கு, ஏனோ இப்போது அது நினைவில் இல்லை போலும்! கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த ராதை மனதில் என்ன ரகசியமோ?
(தொடரும்)