வேங்குழல் 20

செந்தாழினி கதவை திறந்து தன் கணவனின் உருவில் இருந்த முரளியை பார்த்து “என்னாச்சு யாதவ்? அந்த முரளிகிட்ட இருந்து உண்மையை வரவழைக்க முடியலையா?”

 

“ஆமா ராதி. அவன் கிட்ட இருந்து டைம் வேஸ்ட் பண்றதை விட நாம கிளம்பலாம்” 

 

“இந்த ராத்திரி நேரத்துல எதுக்கு போகணும். காலைல மாமாவும் அத்தையும் வருவாங்க இல்ல. அவங்க கிட்ட சொல்லிட்டு போகலாமே யாதவ்”

 

“ராதி நான் சொன்னா கேளு, போற வழியில அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிக்கலாம். அந்த முரளி கத்திய எடுத்து என்னை குத்த வந்துட்டான்”

 

“ஐயோ, என்ன சொல்ற யாதவ்? நிஜமாவா?”

 

“ஆமா ராதி, நமக்கென்ன தலையெழுத்தா? அவன் எப்படியோ போகட்டும். வா நாம இங்கே இருந்து போயிடலாம். அப்பா அம்மா அவனை பாத்துக்குவாங்க. நம்ம லைஃபை பாக்கணும் இல்ல”

 

“அதுவும் சரிதான், எனக்கு பத்துநிமிஷம் டைம் கொடுங்க ரெடி ஆகிடுறேன்” என்று அறைக்குள் சென்றவள் அவசரமாக உடை மாற்றி பெட்டி படுக்கையுடன் வந்து நின்றாள்.

 

‘என்ன தான் இருந்தாலும் யாதவ்னு நினைச்சு தானே என்னோட வர்றா. எத்தனை நாள் இவளை மடக்க டிரை பண்ணியிருப்பேன். எதுக்கும் மசியாதவ இந்த யாதவன் கிட்ட மட்டும் மயங்கி இருக்கா. இத்தனைக்கும் அவன் ஒதுங்கி போக தான் நினைச்சிருக்கான்’ என்று உள்ளுக்குள் பொருமினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செந்தாழினியை பார்த்து புன்னகையுடன் “போலாமா ராதி?” என்றான் முரளி கிருஷ்ணா

 

“போகலாம் யாதவ், கடைசியா அந்த முரளியை பாத்துட்டு போகலாமா?”

 

“அவனை எதுக்கு பாக்கணும்?” என்றான் ஒரு மாதிரி குரலில்

 

“சும்மா தான்”

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், வா போகலாம்” என்று அவள் கையை பிடிக்க போனான்.

 

“யாதவ், நான் லக்கேஜ் எடுத்துட்டு வர்றேன். நீங்க சீக்கிரம் போய் காரை எடுங்க” என்றாள். அவன் சென்றதும் முரளி இருந்த அறைப்பக்கமாக போனாள்.

 

அங்கே கதவு சாத்தப்பட்டு இருந்தது. சாவி துவாரத்தின் வழியாக உள்ளே பார்த்தாள். அங்கே அறையின் மூலையில் இருந்த யாதவ்வை பார்த்து, “முரளி பேராசை பட்டா இதான் நிலமை. கடைசிவரைக்கும் இப்படியே ரூம்ல அடைஞ்சு கிட” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் தோளை தட்டினான் முரளி

 

“என்ன ராதி சொல்லிட்டு இருக்கே”

 

“பின்ன என்ன யாதவ்? நம்மளை ஒருநாள் கூட சேரவே விடாம டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான். அதான் திட்டிட்டு இருந்தேன்”

 

“கவலப்படாத ராதி. அதனால தான் நான் கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன். இனி நாம சேர்றதை யாராலயும் தடுக்க முடியாது” என்றான்.

 

“எங்கே போகப்போறாம் யாதவ்?” என்றாள் ஆர்வமாக

 

“அது சஸ்பென்ஸ்” என்றான் மர்ம புன்னகையுடன்

 

செந்தாழினி அவனை பார்த்து உதட்டை சுழித்து “சரி வாங்க. என்ன சர்ப்ரைஸ் பண்ண போறீங்கனு நானும் பார்க்கறேன்” என்று அவனுடன் நடந்தாள்.

 

இருவரும் காரில் ஏறி சென்றனர். அதே சமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று வெற்றிவேந்தன் செல்வி தம்பதியினர் காத்திருந்தனர்.

 

அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவர் இவர்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். வெற்றிவேந்தன் அவரை பார்த்து என்னவென்று கேட்டதுக்கு ஒன்றுமில்லை என்று தலையாட்டினார். ஆனாலும் அவர்களை பார்ப்பதை அவர் நிறுத்தவில்லை. பூஜை முடிந்து அவர்கள் வெளியே வந்ததும் அவர்கள் பின்னாலேயே சென்றார்.

 

அவர் பின்தொடர்வதை உணர்ந்த வெற்றி திரும்பி பார்த்து, “யார் நீங்க? எதுக்கு எங்களை பாலோ பண்றீங்க?” என்றார்.

 

“நீங்க எப்போ ஊருக்கு போவீங்க?”

 

“அது எதுக்கு உங்களுக்கு?

 

“ஐயா காரணமா தான் கேக்கறேன், பதில் சொல்லுங்க”

 

“இப்பவே மணி பத்தாக போகுது. நைட் தங்கிட்டு காலைல போகலாம்னு இருக்கோம். ஏன் கேக்கறீங்க?”

 

“நீங்க இப்பவே கிளம்புங்க”

 

“அது எங்க விருப்பம் நீங்க சொல்லாதீங்க, செல்வி வா போகலாம்” என்று முன்னால் நடந்தார் வெற்றி.

 

“ஐயா உங்களுக்கு இரண்டு மகன் தானே?” என்று அவர் கேட்டதும் வெற்றி அப்படியே நின்றார். “ஒரே உறையில இரண்டு கத்தி இருக்க கூடாது. அது மாதிரி தான் உங்க இரண்டு பசங்களும் ஒரே இடத்தில இருக்க கூடாது. இரண்டு பேரும் எதிர்எதிர் துருவத்துல பிறந்தவங்க. யாராவது ஒருத்தன வெளியே அனுப்பிடுங்க. நீங்க இப்பவே உங்க வீட்டுக்கு போங்க. இந்தாங்க இந்த கயிற்றை உங்க சின்ன மகன் கையில் கட்டுங்க. அவரோட உயிருக்கு ஆபத்து காத்திருக்கு, நான் சொல்றத நம்புங்க,” என்றார்

 

“ஐயோ என்ன சொல்றீங்க?” செல்வி பதறினார்

 

“ஆமா உங்க பெரிய மகன் தான் உங்க சின்ன மகனுக்கு எமன். அவன் கிட்ட இருந்து காப்பாத்த உடனே கிளம்புங்க. இந்த கயித்தை அவன் கையில கட்டுங்க” என்றார் அந்த ஆசாமி.

 

“ஐயா என்னென்னவோ சொல்றாருங்களே எனக்கு பயமா இருக்குங்க” என்றார் செல்வி.

 

“நீ சும்மா இரு செல்வி, இந்த மாதிரி நம்மளை பயமுறுத்தறதுக்கு எதாவது சொல்லி கயித்த கையில கொடுத்துட்டு அப்புறம் இவ்வளவு கொடு அவ்வளவு கொடுனு பணம் பறிக்கறதுக்கே கோவில்ல ஒரு கும்பல் திரியும். இந்தாளும் அதுல ஒரு ரகம். நீ எதுவும் பயப்படாதே” என்றார் வெற்றி

 

“ஐயா எனக்கென்னவோ மனசே சரியில்ல. ஏமாத்தறதாவே இருக்கட்டுமே. எவ்வளவு செலவாகிட போகுது அதை வாங்குங்க. நாம இப்பவே சென்னைக்கு கிளம்பலாம்” என்றார் செல்வி.

 

வெற்றிவேந்தன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். அவர் அதை வாங்காமல் கயிற்றை மட்டும் வெற்றியிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

 

அதன் பிறகு இருவரும் காருடன் வெளியில் காத்திருந்த வேலுவிற்கு போன் செய்து விஷயத்தை கூறி சென்னைக்கு கிளம்பினர். அதற்குள் முரளி கிருஷ்ணா செந்தாழினியை அழைத்துக் கொண்டு சென்னையின் எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருந்தான்.

 

வெற்றி மனைவியுடன் வீட்டை அடைந்த போது அதிகாலை மணி ஆறு.

 

வீட்டில் இன்னொரு கார் இல்லாததை பார்த்து யோசனையுடன் உள்ளே சென்றனர். “யாதவா” என்று கூவிக் கொண்டே உள்ளே ஓடினார் செல்வி.

 

அப்போது தான் முரளியின் அறைக்குள் இருந்த யாதவ்விற்கு மெல்ல மயக்கம் தெளிந்தது. ஆனாலும் அவனால் பேச முடியவில்லை.

 

“ஐயா வீடு பூரா தேடிட்டேன் யாதவனையும் காணோம் நம்ம மருமவளையும் காணோம்” என்றார் பதட்டமாக

 

“பதறாத செல்வி, வரும்போதே கார் பார்க்கிங்கில் இருந்த இன்னொரு கார் இல்ல. யாதவ்வும் மருமகளும் எங்காவது வெளியே போய் இருப்பாங்க. வந்திடுவாங்க” என்றார்.

 

“இவ்வளவு காலைலயா?” என்றார் வேலு யோசனையுடன்

 

“இரு போன் பண்ணி பார்த்தா என்னனு தெரிஞ்சிட போகுது” என்றபடி யாதவ்வின் எண்ணிற்கு போன் செய்து ஸ்பிக்கரில் போட்டார்.

 

முரளி போனை ஆன் செய்து, “சொல்லுங்கப்பா, கோயில்ல இருந்து கிளம்பிட்டிங்களா?” என்றான்.

 

வெற்றி “யாதவ் நாங்க வீட்டுக்கே வந்துட்டோம். நீயும் மருமகளும் எங்கே போனீங்க வீட்டை கூட பூட்டாம” 

 

“அத ஏம்பா கேக்கறீங்க. இராத்திரி இந்த முரளி ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கிட்டான். கத்திய எடுத்து என்னை குத்த வந்துட்டான்”

 

“அய்யய்யோ”  என்று மூவருமே பதறினார்கள்.

 

“எப்படியோ அவன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். ராதி தான் ரொம்ப பயந்துட்டா. இப்பவே கிளம்பலாம்னு ஒரே அடம். அதான் வேற வழியில்லாம அவளை கொஞ்ச நாள் வெளியே அழைச்சிட்டு போகலாம்னு கிளம்பிட்டேன்ப்பா

 

முரளி ரொம்ப ஆக்ரோஷமா ஆயிட்டான். அவனை வெளிய விட்ராதீங்க. வேணும்னா பைத்தியக்கார ஆஸ்பிட்டல்ல சேர்த்திட்டு நீங்களும் அம்மாவும் நிம்மதியா இருங்க” என்றான் யாதவ் உருவில் இருக்கும் முரளி

 

“ஐயோ அந்த சாமியார் சொன்ன மாதிரியே நடந்திருக்கே ஐயா? இரண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கிறது நல்லது இல்ல போல இருக்கே” என்றார் செல்வி பதட்டத்துடன் 

 

“ஆமா செல்விம்மா, அவனை அங்கேயே வச்சிருங்க வெளியே விட்டுடாதீங்க” என்றான்

 

“என்ன யாதவா? புதுசா செல்விம்மா னு சொல்றே. எப்பவும் அம்மானு தானே சொல்லுவ?” என்றார் செல்வி யோசனையுடன்

 

“ஏன் உன் மூத்த புள்ளைக்கு தான் உன் பேர் சொல்ல உரிமை இருக்கா? நான் எல்லாம் உன் பேர் சொல்ல கூடாதா?” என்று சமாளித்தான்

 

“அப்படி இல்லப்பா புதுசா கூப்பிட்டியா அதான் கேட்டேன். மருமகள கூட்டிட்டு எங்கே போறே?” 

 

“ஹனிமூன் போறேன். எங்கனு இன்னும் டிசைட் பண்ணலம்மா”

 

“சரி சரி பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றார் செல்வி. பின்பு தந்தையிடமும் சொல்லிக் கொண்டு போனை வைத்தான் முரளி. 

 

“என்ன யாதவ், நான் தான் அடம்புடிச்சு உங்களை வீட்ல இருந்து கூட்டிட்டு வந்த மாதிரி அத்த மாமா கிட்ட சொல்றீங்க. அவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள் செந்தாழினி அலுப்புடன்.

 

“நீ சொன்னேனு சொன்னா தான் சும்மா இருப்பாங்க ராதி. இல்லனா திரும்பி வானு சொன்னாலும் சொல்லுவாங்க. அதான் சின்ன பொய் சொன்னேன்” என்றபடி காரை ஓட்டினான்.

 

வேலு முரளியின் அறையை திறந்துக் கொண்டே, “ஐயா நேத்து நைட் முரளி தம்பி ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கிட்டாரு போல இருக்கு. அதான் யாதவ் அவரை உள்ள வச்சு பூட்டிட்டு போய் இருக்கான்” என்றார்.

 

மூவரும் ஒரு வித கலவரத்துடன் கதவை திறந்து பார்த்தனர். ஆனால் யாதவ் அரை மயக்கத்தில் அந்த அறையின் மூலையில் விழுந்திருந்தான்.

 

“ஐயா முரளி” என்று பதறிக் கொண்டு ஒடினார் செல்வி. அதன்பின் மூவரும் சேர்ந்து அவனை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தனர். யாதவ் வெறித்த பார்வையாேடு சித்த பிரமை பிடித்தவன் போல இருந்தான்.

 

“என்னங்க ஐயா கோவிலுக்கு போயும் பிரச்சனை தீரல. நம்ம மூத்த மகன் இப்படியே இருந்தா எப்படி? அந்த சாமியார் கொடுத்த கயித்தை இவனுக்கு கட்டி விடுவோமா?”

 

“செல்வி, அவர் அந்த கயித்த உன் சின்ன மகனுக்கு கட்ட தானே கொடுத்தாரு. இவனால தான் அவன் உயிருக்கு ஆபத்துனு சொன்னாரு மறந்துட்டியா?”

 

“ஐயா, என் பெரிய மகன் இப்படி அடிப்பட்டு கிடக்கறான், யாருக்கு கட்டினா என்ன? இரண்டு பேரும் என் மகன் தானே? சின்னவன் தான் எங்கோ பத்திரமா போய்ட்டான் இல்ல? பெரியவனுக்கு கட்டி விடலாம் எதாவது மாற்றம் வருதானு பாப்போம்”

 

“எப்படியோ செய் உன் இஷ்டம், அதுக்கு முன்னாடி அவனுக்கு முகம் துடைச்சு டிரஸ் மாத்தி விடறேன், எதாவது சாப்பிட கொண்டு வா” என்று மனைவியை அனுப்பினார்

 

அப்போது தான் அவன் தலையில் இரத்தம் வருவதை கவனித்தவர் உடனடியாக மருத்துவரை அழைத்தார். அவர் வந்து தேவையான முதலுதவிகளை செய்து விட்டு சென்றார். செல்வி கொண்டு வந்து கொடுத்த கயிற்றை யாதவ்வின் கையில் கட்டிவிட்டு அவன் தலையை கோதிவிட்டார் வெற்றிவேந்தன். மருந்தின் வீரியத்தால் யாதவ் ஆழ்ந்து உறங்கினான். 

 

மூவரும் வெளியே வந்து கதவை வெளிப்புறமாக சாத்திவிட்டு சென்றனர்.

சரியாக மூன்று மணி நேரம் நன்கு தூங்கிய யாதவ்விற்கு அவனும் முரளியும் சண்டையிட்ட காட்சிகள் கனவில் ஒவ்வொன்றாக வர, கடைசியாக முரளி யாதவனை அறையின் மூலையில் தூக்கிப்போட்டு சென்றது வரை நினைவில் வர பட்டென்று கண்களை திறந்தான்.

 

இதெல்லாம் கனவா நிஜமா என்று ஒரு கணம் தோன்ற அவசரமாக ஓடிச் சென்று ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தான். முரளியின் சிவந்த நிறத்தை பார்த்து உள்ளங்கையால் நன்கு தேய்த்தான். ஒடிச்சென்று முகம் கழுவினான். டவல் எடுத்து அழுந்த துடைத்தான். ம்ஹூம் அவன் கருமை நிறம் எங்கே போனது? செக்க சிவந்த மேனியின் மேல் வெறுப்பாக இருக்கவும் ஆத்திரத்துடன் அந்த கண்ணாடியில் ஓங்கி குத்தினான்.

 

“டேய் முரளி, உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று அந்த வீடே அதிரும்படி கர்ஜித்தான். ஆத்திரத்துடன் கதவை திறக்க வந்தவன் அது வெளிப்பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து அது உடையும் அளவுக்கு ஓங்கி தட்டினான்.

 

என்னவோ ஏதோனு என்று வெற்றிவேந்தனும் செல்வியும் பதறிக்கொண்டு கதவை திறக்க, “அம்மா அந்த முரளி வீட்ல இருக்கானா? இல்லையா? எங்கே அவன்?” என்றான் கோபமாக

 

வெற்றியும் செல்வியும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். முரளியே முரளி வீட்டில் இருக்கானா என்று கேட்டால் அவர்களுக்கும் அதிர்ச்சியாக தானே இருக்கும்? முரளியின் உருவத்தில் இருப்பது யாதவ் என்று அவர்களுக்கு தெரியாததால் பைத்தியம் முத்தி உளறுகிறான் என்றே நினைத்தனர்.

 

வெகுநாட்களுக்கு பிறகு முரளி வாய்திறந்து பேசியதை எண்ணி சந்தோஷப்படுவதா? இல்லை தன்னையே மறந்து புத்தி சுவாதீனம் இல்லாமல் உளறுவதை எண்ணி அழுவதா? மனைவியுடன் சேர்ந்த சந்தோஷத்தைக்கூட வெற்றிவேந்தனால் கொண்டாட முடியவில்லை

 

“முரளி என்னப்பா சொல்றே? ஒரு வேளை யாதவ்வை கேக்கறீயா? அவனோட பொண்டாட்டியோட ஹனிமூன் போய்ட்டான்ப்பா, நீ வா உள்ள வந்து ரெஸ்ட் எடு”

 

“டேமிட் யார் பொண்டாட்டி கூட யார் ஹனிமூன் போறது? அவனை கொல்லாம விட மாட்டேன்” என்று வெளியேற முயற்சித்தவனை தடுத்து நிறுத்தினார் வெற்றி

 

“முரளி, உனக்கு புத்திசுவாதீனம் இல்லாம இருந்துச்சு. அதான் யாதவ் செந்தாழினியை கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு தெரியல போல. அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுப்பா அந்த பொண்ணை மறந்துடு, நான் உனக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வக்கிறேன்” என்று சமாதானம் செய்ய முயன்றார்.

 

“என்ன உளர்றீங்க? நான் தான் யாதவ். அந்த முரளி என்னோட உருவத்துல என் பொண்டாட்டியை கூட்டிட்டு புல்லாங்குழலையும் எடுத்துட்டு போய்ட்டான்”

 

“என்ன முரளி என்னென்னவோ சொல்ற? நீ யாதவனா? புல்லாங்குழல்னு ஏதேதோ சொல்ற? நீ கோவிச்சுக்கலனா நாம கொஞ்சம் டாக்டரை பார்த்துட்டு வரலாமா?” என்றார் வெற்றிவேந்தன் கவலையோடு

 

“அய்யோ எனக்கு பைத்தியமெல்லாம் இல்ல. இன்பாக்ட் அந்த முரளி கூட சித்தபிரமை புடிச்ச மாதிரி நடிச்சிருக்கான். எல்லாம் என்கிட்ட இருக்கற புல்லாங்குழல பறிக்கிறதுக்கு தான் இவ்வளவு நாளா நடிச்சிருக்கான். உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிறதுக்கு எனக்கு நேரமில்ல. அவன் கையில புல்லாங்குழல் இருக்கிறது ரொம்ப ஆபத்தானது, அத்தோட செந்தாழினியும் அவன் கிட்ட மாட்டி இருக்கா. அவளையும் நான் காப்பாத்தணும்” என்று பரபரப்புடன் பேசியபடி வெளியேற முயன்றான்.

 

“என்னங்கய்யா முரளி என்னென்னவோ சொல்றான்? எனக்கென்னவோ பயமா இருக்கு. மூத்தவனால தான் இளையவன் உயிருக்கு ஆபத்துனு அந்த சாமியார் சொன்னது நிஜமாகிடுமோனு கவலையா இருக்கு. எப்படியாவது முரளியை தடுத்து நிறுத்துங்கய்யா” என்று கதறினாள் செல்வி

 

“தப்பா சொல்றம்மா, நான் தான் யாதவ் உன்னோட இளைய மகன். என் கையால தான் உன் மூத்த புள்ளைக்கு சாவு. நானும் எவ்வளவோ பொறுத்து போயிட்டேன். எப்போ புல்லாங்குழலுக்காக தான் என்னை பகட காயாக்கி யூஸ் பண்ணதா அவனே சொன்னானே, அப்பவே அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதையும் பொறுத்துக்கிட்டு அவன்கிட்டயே பான்சூரிய ஒப்படைக்க தயாராத் தான் இருந்தேன். ஆனா என் பொண்டாட்டியையும் இல்ல அவன் தூக்கி இருக்கான். இனி நானா அவனானு பாத்துக்கிறேன் என்று அறைக்குள் சென்று அங்கே முரளி வைத்திருந்த கத்தியை எடுத்து தன் சட்டைக்குள் வைத்துக் கொண்டான்.

 

இதைப்பார்த்து அதிர்ந்த வெற்றிவேந்தன் நொடியும் தாமதிக்காமல் யாதவ் இருந்த அறைக்கதவை வேகமாக சாத்தி பூட்டினார்.

 

செல்வி புடவை தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு தன் கதறலை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டிருந்தார்.

 

யாதவ் கிருஷ்ணா கதவை ஓங்கி தட்டிக் கொண்டிருந்தான், “கதவை திறங்கப்பா, நான் தான் யாதவ் கிருஷ்ணா. உங்களுக்கு நான் சொன்னது எல்லாம் கேக்கலயா? நான் போகலனா செந்தாழினிய அவன் என்ன பண்ணுவானோ தெரியாது, அத்தோட புல்லாங்குழல் அவங்கிட்ட இருக்கிறது நல்லது இல்ல, என் பொறுமைய சோதிக்காதீங்க, கதவை திறங்க” என்று கத்தியபடி தன் பலம் கொண்டு அறைக்கதவை ஒங்கி அடித்துக் கொண்டிருந்தான்.

 

வெற்றிவேந்தன் கலங்கி கண்களுடன் “வேலு மனநலம் பாக்க வர்ற டாக்டருக்கு போன் பண்ணி முரளிக்கு பைத்தியம் முத்தி போச்சு. உடனே நாலஞ்சு பேரோட வந்து அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லு. இவனை வெளிய விட்டா யாதவனை கொன்னாலும் கொன்னுடுவான்”

 

யாருக்காக அழுவது என்று தெரியாமல் செல்வி தலையில் அடித்துக் கொண்டு அழ தொடங்கவும், அவரை தேற்றக்கூட முடியாமல் வெற்றிவேந்தனும் வேலுவும் கூட கலங்கி நின்றனர்.

 

முரளி கிருஷ்ணா செந்தாழினியுடன் ஏதோ ஒரு பெரிய மலை பிரதேசத்தின் மேலே காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தான். 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top