வேங்குழல் 19

முரளி தள்ளிவிட்டதில் யாதவ் கீழே விழுந்தாலும் கைகளை பின்பக்கமாக தரையில் ஊன்றியபடி சில நிமிடங்கள் உறைந்து போய் முரளியையே கூர்ந்து பார்த்தான். “உனக்கு சித்தபிரமை எல்லாம் இல்ல, நடிச்சிருக்கே அப்படித்தானே” என்றான்

 

“அந்த டவுட் தான் உனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்துச்சு தானே? அப்பவும் என்னை நம்பி என் கையில் புல்லாங்குழலை வச்சிடியேடா, சோ சேட் (so sad) ச்ச் உச்” என்று உச்சு கொட்டினான் முரளி

 

“ஆனா சும்மா சொல்லக்கூடாதுடா! நீயும் என்னை போல ஒரு மகா புத்திசாலி தான்! என்ன தான் வேறொரு அம்மாவுக்கு பொறந்து இருந்தாலும், நீயும் என்னோட ரத்தம் தான்ங்கிறத நிரூபிச்சிட்ட, அத மறுக்கவே முடியாது. நான் பிளான் பண்ணது போலவே பக்காவா நடந்துக்கிட்டயே எப்படி டா?

 

நானும் பலபேர பாத்திருக்கேன். பிளான் போட்டு தெளிவா சொல்லி கொடுத்தா கூட சொதப்பிடுவானுங்க. நான் உன் கிட்ட பிளானையே சொல்லல. நீ ரோடு போடறதுக்கு நான் கோடு கூட போடலையேடா. சும்மா புள்ளி தான் வச்சேன். அத வச்சி என் மொத்த பிளானையும் சரியா எக்ஸிகியூவுட் பண்ணிட்டியேடா. எங்கப்பா அவர் வாழ்க்கைல செஞ்சதுல உருப்படியான விஷயம் உன் பிறப்புக்கு காரணமா இருந்தது தான்டா. சரியா உன்னை கிருஷ்ணர் பிறந்த அதே தேதி அதே நேரம் நட்சத்திரத்துல எனக்காகவே பெத்து வச்சிருக்காரு. அவரை போய் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனே அத நினைச்சு தான் கொஞ்சம் பீல் ஆகுது ப்ரோ” என்றான் சோகம் போல

 

“உன் பிளான் புல்லாங்குழலை அடையறது தான்னு எனக்கும் தெரியும். அதை நான் உன்னை கந்தர்வன காட்டில் இருந்து கூட்டிட்டு வரும்போதே  வாங்கியிருக்கலாமே. எதுக்கு வீணா பைத்தியம் பிடிச்ச மாதிரி நடிச்சு எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டு இருந்த” என்றான் யாதவ் கோபமாக

 

“நான் கேட்டிருந்தா, நீ உடனே இந்தா வச்சிக்கோனு கொடுத்திருப்பியா?” என்றான் நக்கலாக.

 

“கொடுத்திருக்க மாட்டேன் தான். பைராகி அதை யார்கிட்டயும் கொடுக்க கூடாதுனு சொல்லியிருக்காரு. சரி நேத்து இருந்து அது உன் கண்முன்னாடி டேபிள்ல தானே இருந்துச்சு. அப்பவும் ஒண்ணும் தெரியாதவன் மாதிரியே நடிச்சியே அது எதுக்கு?”

 

“அந்த பைராகி சொன்னதை நீ முழுசா கேக்கலைனு நினைக்கிறேன். உங்கிட்ட இருந்து புல்லாங்குழலை யாராலயும் எடுக்கவோ அபகரிக்கவோ முடியாது. ஆனா நீ உன் கையால அதை யாருக்கும் கொடுக்க கூடாதுனு சொல்லியிருப்பாரே அதை கவனிக்கலயா?

 

யாருகிட்ட கொடுத்தாலும் என்கிட்ட கொடுக்ககூடாதுனு அவர் அவ்வளவு சொல்லியும் என்கிட்ட கொடுத்திட்டியேடா? அண்ணன் கையில் நரம்பு கட்டாகி ரத்தம் கொட்டுதே, எங்கடா செத்துடுவானோ நினைச்சிட்டியா? என் மேல அம்புட்டு பாசமாடா தம்பி?” என்று கேட்டு விட்டு அரக்கன் போல சத்தமாக சிரித்தான் முரளி கிருஷ்ணா.

 

“ச்சீ நீ மோசமானவன்னு தெரியும், ஆனா இவ்வளவு கேவலமான மிருகமா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. உனக்கு எல்லாம் மனுஷங்களோட உணர்வு எங்கே தெரிய போகுது? நீ எனக்கு எவ்வளவோ கெட்டது செஞ்சும் உனக்கு எதுவும் ஆககூடாதுனு அந்த நிமிஷம் எனக்குள்ள ஒரு தவிப்பு இருந்துச்சுடா, அதனால தான் கொஞ்சம் கூட யோசிக்காம புல்லாங்குழலை எடுத்து உன் கையில் வச்சிட்டேன்

 

மரியாதையா அதை என்கிட்ட கொடுத்திடு. அதோட மந்திரசக்திய யூஸ் பண்ண வேண்டிய காலம் வரும் போது மட்டும் தான் யூஸ் பண்ணனும்னு நினைச்சிருக்கேன். அதுக்கப்புறம் மறுபடியும் எங்கே இருந்து எடுத்தேனோ அங்கேயே வச்சிட்டு வந்திடுவேன். சின்ன வயசுல உன் கிட்ட அடிவாங்கறதுக்கு பயந்து ஓடி ஒளிஞ்ச யாதவ் இல்ல நான். உன்ன விட வயசுல சின்னவன் கிட்ட அடிவாங்கி வீணா அவமானபடாத, மரியாதையா புல்லாங்குழலை என்கிட்ட கொடுத்திடு” என்றான் எச்சரிக்கை தொணியில்

 

“அதே தான்டா நானும் சொல்றேன். என்னோட சின்ன பையன், நீ என்னை மிரட்டினா. இந்தாங்க தம்பினு புல்லாங்குழலை எடுத்து உன் கையில கொடுக்க நான் என்ன முட்டாளா? முரளி கிருஷ்ணா டா!” என்றான் கர்வமாக

 

“கிருஷ்ணரோட வாழ்க்கை வரலாற்றை படிச்சு ஆய்வு செஞ்சு, அந்த புல்லாங்குழல் இருக்கிற இடத்தை பத்தி தெரிஞ்சுக்க முழுசா என் வாழ்க்கையில பத்து வருஷம் செலவழிச்சிருக்கேன். அதை நீ கேட்டதும் இந்தா வச்சிக்கனு கொடுக்கறதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்பட்டேனா? முதல்லயே இதுக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன்னு சொல்றேன் கேட்டுக்கோ.

 

என்னோட ஆராய்ச்சி சமயத்துல ஒரு கல்வெட்டுல நிறைய விஷயம் இருந்துச்சு. கிருஷ்ணர் நிறைய புல்லாங்குழல் வாசிச்சாருனும் அதுல முக்கியமான மூணு புல்லாங்குழல்ல முரளிங்கிற பான்சூரி புல்லாங்குழல் ரொம்பவும் தெய்வீகமான இசையை கொடுக்க கூடியது. அத்தோடு அதுக்கு மந்திர சக்தியும் இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். கூடவே புல்லாங்குழல் எப்பவும் ராதா கிருஷ்ணர் இருக்கிற இடத்துல தான் இருக்கும்னு இருந்தது. அவங்களோட அம்சத்துல பிறந்தவங்களால தான் அந்த புல்லாங்குழலை அடைய முடியும்னு அதுல இருந்துச்சு

 

நான் கிருஷ்ணர் அம்சத்துல பிறந்தவன் இல்ல தான், குறைஞ்சது ராதாவையாவது என்கூட கல்யாணம் பண்ணி வச்சிக்கிட்டா புல்லாங்குழல் எப்பவும் என் கூடவே இருக்கும்னு தோணுச்சு. 

 

அதுக்காக புல்லாங்குழலை தேடறதுக்கு முன்னாடி நான் தேடினது ராதையை. அதாவது ராதையோட அம்சத்துல பிறந்த பொண்ணை தேடி அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா புல்லாங்குழல் எனக்கு கிடைக்கும்னு நம்பினேன். அதுக்காக தான் ரொம்ப வருஷமா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்தேன். கடைசியா டெல்லில என்னை கூப்பிட்டப்போ செந்தாழினியை பார்த்தேன். அவ முகத்துல ஒரு லட்சுமி கடாட்சம் தெரிஞ்சது. அவளோட பிறந்த தேதி நேரத்தை ஆபிஸ் ரெக்கார்ட்ல பார்த்ததுல அவ ராதையோட வம்சாவளியில பிறந்தவ. அதே தேதியில நட்சத்திரத்துல பிறந்து இருக்கானு தெரிஞ்சது. 

 

புல்லாங்குழல் எனக்கு கிடைக்கணும்னா செந்தாழினியை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணி நிறைய முறை அவகிட்ட டிரை பண்ணிட்டேன். ஆனா அவ என்னை கண்டுக்கவே இல்லை. அதுக்கும் மேல அவகிட்ட கெஞ்சிட்டு இருக்க என் தன்மானம் எனக்கு இடம் தரல. சரி புல்லாங்குழலை கண்டுபிடிச்சு அதோட மந்திர சக்தியால அவளோட மனச மாத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்.

 

அந்த சமயத்துல தான் என்னோட பத்து வருஷ  தேடுதலக்கு பரிசா எனக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைச்சது. அதை எடுத்துட்டு போய் அந்த ஆரூத்ரன் கிட்ட கொடுத்தா அந்த ஆள் ஓவரா சீன் போட்டு ஹெல்ப் பண்ண முடியாதுனு சொல்லிட்டான்.

 

அதுக்கப்புறமா நானே அதை படிக்க கத்துக்கிட்டேன். பந்திர்வன் காட்டுல புல்லாங்குழல் இருக்கும்னு, அதை சாதாரண மனிதனால நெருங்க முடியாதுனும் அதுல இருந்தது. அதுமட்டுமில்லாம பலவித ஆபத்தான மர்மங்கள் அந்த இடத்தை சுத்தி இருக்குதுனு தெரிஞ்சுக்கிட்டேன். அங்க போறதுக்கு முதல் நுழைவாயிலே கந்தர்வ வனம் தான். 

 

அந்த ஓலைச்சுவடிய முழுசா படிச்சதுல கந்தர்வ வனத்தை பத்தின மர்மம் தெரிஞ்சது. எந்த ஒரு சாதாரண மனுஷனாலயும் காமத்தை கடக்க முடியாது, அதனால தான் அங்கே இருக்கிற கந்தர்வர்கள் மோகினிங்ககிட்ட எல்லாரும் மாட்டிகறாங்கனு புரிஞ்சுகிட்டேன்.  சரி முற்றும் துறந்த முனிவர் போல தவ வலிமையோடு நானே போலாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அப்பவும் கந்தர்வன வனத்தை விட்டு வெளியே வர முடியாம போச்சுனா என்ன பண்றதுனு குழப்பமா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம ஓலைச்சுவடி எழுதனவங்களுக்கே கந்தர்வ வனத்துக்கு அப்புறம் இருக்கிற மர்மங்களை பத்தி தெரியல. அதைப்பத்தின எந்த குறிப்பும் அதுல இல்ல. 

 

அதனால நான் போய் மாட்டிக்க கூடாதுனு சில பேரை தேர்ந்தெடுத்து பணம் நிறைய தர்றதா சொல்லி அவங்களை அங்கே அனுப்பி வச்சேன். அவங்க உடம்புல ஜிபிஎஸ் செட் பண்ணி அனுப்பனேன். எவனுமே கந்தர்வவனத்தை விட்டு தாண்டவும் இல்ல. திரும்பி வரவும் இல்ல. 

 

நல்லா யோசிச்சு பார்த்ததுல எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது, கந்தர்வனம் வரைக்கும் போய் வெளியே வந்தவங்க இருந்திருக்காங்க, அவங்க தானே இந்த  ஓலைச்சுவடியை எழுதி இருப்பாங்க. அந்த தைரியத்துல தான் கடைசி வாய்ப்பா நான் போகலாம்னு முடிவு பண்ணேன்

 

நானும் அஸ்வினும் கந்தர்வ வனத்துக்கு நேரா போகாம பிருந்தாவனத்தை சுத்தி இருக்கிற காடுகளுக்கு போய் புல்லாங்குழலை தேடலாம்னு முடிவு செஞ்சோம். ஆனாலும் என் ஆறாம் அறிவு நான் போனா திரும்பி வர்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டே இருந்துச்சு.

 

அப்போ தான் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. ராதையோட அம்சத்துல ஒருத்தி பிறந்து இருக்கும் போது கிருஷ்ணரோட அம்சத்துலயும் யாராவது பிறந்திருப்பாங்கனு நினைச்சேன். அவங்களால தான் புல்லாங்குழலை நெருங்க முடியும்னு நம்பினேன். உடனே எனக்கு உன்னோட நினைவு வந்துச்சு. நீ கிருஷ்ணரோட பிறந்த நேரத்துல பிறந்ததால உனக்கு யாதவ் கிருஷ்ணானு அப்பா பேரு வச்சதும், கருப்பா பிறந்த உன்னை என்னவோ கிருஷ்ணரே பிறந்த மாதிரி கொண்டினதும் எனக்கு நியாபகம் வந்துச்சு.

 

உன்னோட பிறந்த நேரத்தை வச்சு உன் ஜாதகத்தை கணிச்சேன். நீதான் புல்லாங்குழலை எடுக்க சரியான ஆளுனு தோணினதால உன்னை பத்தி விசாரிச்சு நீ படிக்கிற காலேஜூக்கு வந்து உன்னை பாத்தேன். பாத்ததும் ஷாக் ஆயிட்டேன். நீ என்னை மாதிரியே ஆனா மாநிறத்துல இருந்தே. நம்மளோட உருவ ஒத்துமையை வச்சி எப்படி என்னோட சக்கரவியூகத்துல உன்னை கொண்டு வர்றதுனு யோசிச்சேன்.

 

உன்கிட்ட நேரா விஷயத்தை சொன்னா சத்தியமா செய்ய மாட்டேன்னு நல்லா தெரியும். அதே சமயம் புல்லாங்குழலோட மந்திரசக்தியை பத்தி உனக்கு தெரிஞ்சு அதை நீயே அடையணும்னு நினைச்சா என்ன பண்றதுனு யோசிச்சேன். அதான் உனக்கு எந்த விவரமும் தெரிய படுத்தாமலே உன்னை இந்த விஷயத்துல இழுத்துவிட்டேன். 

 

அஸ்வின் கூட கேட்டான், “பத்துவருஷமா ஆராய்ச்சி பண்ண பின்னாடி தான் உனக்கு புல்லாங்குழல் இருக்கற இடத்தை பத்தி தெரிஞ்சது. உன் தம்பி வந்து நாம் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கவே இன்னும் பத்து வருஷம் ஆயிட்டா என்னடா பண்றது? அதுவும் அவனால புல்லாங்குழலை நெருங்க முடியும்னு எப்படி அவ்வளவு உறுதியா நம்பறேன்னு கேட்டான், எனக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சு. அப்போ தான் நான் வச்சிருந்த ஒலைச்சுவடியில எழுதி இருந்த விஷயத்தை படிச்சேன்”

 

“ஒரு விஷயம் ஒருத்தருக்கு கிடைக்கணும்னோ நடக்கணும்னோ இருந்தா, அது யார் தடுத்தாலும் அவங்களை வந்து சேரும். அவங்க அந்த வழியில போனாலே போதும். மத்தது எல்லாம் தானாவே நடக்கும்”

 

“இந்த எழுத்துக்களை பார்த்ததும் எனக்கென்னவோ உன்னால கண்டிப்பா புல்லாங்குழலை எடுக்க முடியும்னு தோணுச்சு. அதான் கிளம்பும் போது அப்பாகிட்ட நான் ஆறுமாசத்துக்குள்ள வரலைனா என்னை தேடறதுக்கு உன்னை அனுப்ப சொன்னேன். நானும் அஸ்வினும் ஏற்கனவே புலன்களை அடக்கறதுக்கான பயிற்சி எடுத்துக்கிட்டு கந்தர்வ வனத்துக்கு போனோம். ஆனா அஸ்வின் மோகினியோட பிடியில மாட்டிக்கிட்டு ஒரு வாரத்திலயே செத்தும் போயிட்டான். 

 

நான் மட்டும் மோகினியோட வலையில் சிக்காம இருந்தேன். ஆனாலும் என்னால அந்த இடத்துல இருந்து முன்னாடி பின்னாடி எங்கேயும் போக முடியல. அப்போ தான் ஒரு கந்தர்வன் என்கிட்ட வந்து, “உன்னோட மனவலிமையை பாத்தது வியப்பா இருக்கு. அதுக்கு பரிசா நான் உனக்கு ஒரு சின்ன வரம் கொடுக்கறேன். இங்கே இருக்கிற வரைக்கும் உனக்கும் எங்களை போல மறைஞ்சு போகிற சக்தியை தர்றேன். யாராவது மோகினி உன் கண்ணுக்கு தெரிஞ்சா நீ மறைஞ்சுடு. அவங்க நீயும் எங்களை போல ஒரு கந்தர்வன்னு நினைச்சிட்டு போயிடுவாங்க. ஆனா இந்த வரத்தை வச்சுட்டு உன்னால இந்த இடத்தை விட்டு போக முடியாது. உன்னோட இறப்பை தள்ளி போட மட்டும் தான் உதவும்” அப்படினு சொல்லி அந்த கந்தர்வன் கொடுத்த வரத்தால நானும் பாதி கந்தர்வனா பாதி மனுஷனாவும் அந்த காட்டுல சுத்திட்டு இருந்தேன்.

 

கண்டிப்பா என்னை தேடி எனக்காக வருவேன்னு காத்துட்டு இருந்தேன். உண்மையிலே நான் நினைக்கிற மாதிரியான அம்சம் உன்கிட்ட இருந்தா நீ நிச்சயமா கந்தர்வ வனம் வருவேன்னு நான் நம்பனேன். உனக்கு கிடைக்கிற புல்லாங்குழலை வச்சு கண்டிப்பா நீ என்னை இங்கே இருந்து கூட்டிட்டு போயிடுவே, அதுக்கப்புறமா உன் கிட்ட இருந்து அந்த புல்லாங்குழலை தூக்கறது தான் என்னோட மாஸ்டர் பிளான்.

 

உன்னை பொறுத்தவரை நீ முரளி கிருஷ்ணாவான என்னை தான் தேடி வந்தே. ஆனா உனக்கு தெரியாமலே நீ வந்ததது முரளிங்கிற புல்லாங்குழலை தேடி தான். நான் நினைச்சது போல நீயும் பிரதாப்பும் வந்தீங்க. எல்லாமே என் பிளான்படி நல்லா தான் நடக்குதுனு நான் நினைச்சேன், ஆனா என்னோட பிளான்ல இல்லாத ஒண்ணும் நடந்துச்சு” என்றான்

 

“என்ன அது உன் பிளான்ல இல்லாத ஒண்ணு?” என்றான் யாதவ் புருவம் சுருக்கி

 

“நீ என்னை மாதிரி நடிக்க வந்த இடத்துல செந்தாழினியை பார்த்து ஆசைப்பட்டுட கூடாதேனு நினைச்சு உனக்கு எச்சரிக்கையா குறிப்பு கொடுக்க தான் என் போன்ல அவ போட்டோவை மட்டும் விட்டு வச்சேன்.

 

அவளை பத்தி நான் கவலை படல. ஏன்னா என்னோட உருவத்துல போக போற உன்னை அவளுக்கு பிடிக்காது. எப்படியும் அவ உன்னை விரும்ப மாட்டான்னு நினைச்சேன். என்னோட பிளான்ல சொதப்பினது அது மட்டும் தான். பிரதாப்பும் நீயும் தான் கந்தர்வ வனத்துக்கு வருவீங்கனு நினைச்சேன். ஆனா செந்தாழினிய உன் கூட கந்தர்வ வனத்துல பாத்ததும் ஷாக் ஆயிட்டேன்” என்றான் முரளி கிருஷ்ணா

 

“ஓ அப்போ கந்தர்வ வனத்துல செந்தாழினி முன்னாடி வந்தது கந்தர்வன் இல்ல, நீதானா?  நான்னு நினைச்சி உன்னை நெருங்கி இருக்கா. அப்பவே சின்ன டவுட் வந்துச்சு. ஆனா கந்தர்வன் உனக்கு இப்படி ஒரு வரம் கொடுத்திருப்பான்னு எனக்கு தெரியல. அதான் அதைப்பத்தி அப்போ பெரிசா யோசிக்கல” என்றான் யாதவ்.

 

“என்னோட பிளான்படி எனக்கு புல்லாங்குழலும் வேணும், அது என்னோட நிலைச்சிருக்க செந்தாழினியும் வேணும். உன்னோட அவளை பாத்ததும் ரொம்ப டென்ஷனாயிடுச்சு. அதான் அவளை மயக்கி அப்பவே அடைஞ்சிடணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நீ வந்து அவளை காப்பாத்திட்ட. அவ கண்ணுல உன் மேல இருக்கிற காதல் தெரிஞ்சது. கோபமா வந்துச்சு, ஆனாலும் நீ புல்லாங்குழல் எடுக்கிறது தான் முக்கியம்னு அமைதியாயிட்டேன்.

 

நீ திரும்பி வந்ததும் பாத்துக்கலாம்னு நினைச்சு யமுனை ஆத்தோட கரையில உங்களுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருந்தேன். போகும் போது உங்க இரண்டு பேருக்குள்ள இல்லாத நெருக்கம் திரும்பி வந்தப்ப அதிகமாவே இருந்துச்சு. ஆத்தங்கரையில நீ அவளோட கரை ஒதுங்கினதையும் பாத்தேன், அவ கழுத்துல தாலி இருந்ததையும் பார்த்தேன். ஒரு நிமிஷம் என்ன பண்றதுனே எனக்கு தெரியல. என்னோட கோவத்தை காட்ட இது சரியான நேரமில்லனு எப்பவும் நான் தங்கற குகைக்குள்ள போய் தியானம் செஞ்சேன். நீ எப்படியும் என்னை தேடி வருவேன்னு எனக்கு தெரியும்.

 

நான் நினைச்சது போலவே நீயும் வந்தே. என்னையும் பிரதாப்பையும் கூட்டிட்டு கந்தர்வ வனத்தை உன்னால கடக்க முடிஞ்சதுனா உன்கிட்ட புல்லாங்குழல் இருக்குங்கிறதை நான் ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டேன். சரி நமக்கு கிடைச்சது புல்லாங்குழல் தான், அதை உன்கிட்ட இருந்து தூக்கினா போதும்னு சித்தபிரமை பிடிச்ச மாதிரி நடிச்சேன். 

 

கந்தர்வவனத்தை விட்டு வந்ததுமே எனக்கு கந்தர்வனால கிடைச்ச மறைந்து போகற சக்தியும் என்னை விட்டு போயிடுச்சு. எனக்கு நல்லா தெரியும் புல்லாங்குழலை நீயா கொடுக்காம அதை நானா திருடவோ உன்கிட்ட இருந்து பிடுங்கவோ முடியாது. அப்படி நான் முயற்சி பண்ணா அது மறைஞ்சுடும். அதனால அமைதியா என்னோட நேரம் வரும் வரைக்கும் பைத்தியம் போல நடிக்கிறதுனு முடிவு பண்ணேன்.

 

உன் மாமானார், அதான் செந்தாழினியோட அப்பா ஆருத்ரன் வீட்டுக்கு போகும்போது கார்ல என்னை உட்கார வச்சிட்டு நீங்க மட்டும் போனீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் உங்களுக்கு தெரியாம நீ்ங்க இரண்டு பேரும் என்ன பேசிக்கறீங்கனு ஒட்டு கேட்டேன். அப்போ தான் தெரிஞ்சது நீங்க இரண்டு பேரும் இன்னும் ஒண்ணு சேரவே இல்லனு.

 

எனக்கு ராதை அம்சத்துல இருக்கிற செந்தாழினியை அடையறதுக்கு இன்னொரு சான்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ தானே புல்லாங்குழல் என்கிட்ட நிரந்தரமா இருக்கும்? 

 

அதான் நீங்க இரண்டு பேரும் அலங்காநல்லூர் போனதும் உங்களை சேரவிடாம பண்றதுக்காக இங்கே ஒரு குட்டி ஆர்பாட்டம் பண்ணி அப்பாவோட மண்டையை உடைச்சேன். நான் நினைச்ச போலவே நீயும் செந்தாழினியும் கிளம்பி வந்துட்டீங்க. அதுக்கப்புறமாவும் நீங்க இரண்டு பேரும் சேராம இருக்கிறதுக்காக நான் ஹிஸ்டிரியா வந்தது போல நிறையவே நடிக்க வேண்டியிருந்துச்சு.

 

உன்னால தான் என்னை அடக்க முடியும்னு எல்லாரும் நம்பற அளவுக்கு நடிச்சு உன்னை என் கூடவே இருக்கற மாதிரி பாத்துக்கிட்டேன். என் மேல உனக்கு முழுசா நம்பிக்கை இல்லனு எனக்கு நல்லா தெரியும். அதான் நீ என்னை வெறுப்பேத்தறதுக்கு பண்ண எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஜடம் மாதிரி இருந்தேன்.

 

அதுவே உன்னை ரொம்ப உசுப்பி விட்டுடுச்சு போல, என்னை வெளிப்படுத்தறதுக்காக நீ புல்லாங்குழல டேபிள் மேல வச்சிட்டு என்னை வேவு பாத்தே. என்ன பண்றது? நானா எடுக்க கூடாதே, அதான் சும்மா இருந்தேன்.

 

அதை எப்படி உன் கையால வாங்கறதுனு யோசிச்சுட்டே இருந்தப்ப தான் இந்த கத்தி என் கண்ணுல பட்டுச்சு. நீயும் எங்கப்பாவ போல ஒரு எமோஷனல் இடியட்னு எனக்கு தெரியும். எப்படியும் என்னை நீ காப்பாத்திடுவனு நம்பி கத்தியை எடுத்து என் உள்ளங்கையில் குத்திக்கிட்டேன். என் நம்பிக்கை வீண் போகல, நான் நினைச்சது போலவே நீ புல்லாங்குழலை எடுத்து என் கையில் வச்சிட்ட, பைனலி மை பிளான் சக்சஸ் அன்ட் ஐ காட் த முரளி (Finally my plan success and I got the Murali)” என்று அந்த அறையே அதிரும்படி சிரித்தான் முரளி கிருஷ்ணா.

 

“இங்கே பாரு முரளி எல்லா பிளானும் உன்னோடது தான். ஒருநாளும் நான் புல்லாங்குழலை தேடி போயிருக்கவே மாட்டேன். உன்னோட பிளான்படி உன்னையும் புல்லாங்குழலையும் காப்பாத்தி கொடுக்க வந்தவனாவே இருந்துட்டு போறேன். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. என்னை பொறுத்தவரைக்கும் என் அம்மா கொடுத்த வேலையை செஞ்சு முடிச்சேங்கிற திருப்தி மட்டும் எனக்கு போதும்.

 

நான் புல்லாங்குழலை அடையணும்னு எப்பவுமே நினைச்சது இல்ல. நீயே கூட அதை வச்சிக்க. ஆனா ஒரு நிபந்தனை. புல்லாங்குழலோட மந்திரசக்தியை நல்ல விஷயத்துக்கு மட்டும் யூஸ் பண்ணு. பைராகி சொன்னதுபோல எதாவது மனுஷங்களால கன்ட்ரோல் பண்ணமுடியாத மாதிரி இயற்கை பேரழிவு வந்தா மக்களை காப்பாத்த இதை யூஸ் பண்ணு

 

மத்தபடி நான் இதுல தலையிட மாட்டேன். என் மனைவியை கூட்டிட்டு நான் இங்கே இருந்து கிளம்பறேன்” என்றான் யாதவ் பெருந்தன்மையோடு

 

“டேய் நல்லது பண்றதுக்கு நான் என்ன கடவுளா? அந்த வேலய பாக்கறதுக்கு தான் அந்தாளு இருக்காறேடா. ஏதோ கிடைச்ச புல்லாங்குழல வச்சு அதோட மந்திரசக்தியால இந்த உலகத்தையே ஆளலாம்னு நான் பிளான் போட்டு வச்சிருக்கேன். நீ என்னடான்னா இவ்வளவு சிம்பிளா நல்லதுக்கு மட்டும் யூஸ் பண்ணுனு சொல்றே? புல்லாங்குழலை என்கிட்ட கொடுத்ததோடு உன் வேலை முடிஞ்சது. நீ போகலாம், அப்படியே உன் பொண்டாட்டியையும் என் ரூம்ல விட்டுட்டு போய்டு, இரண்டையும் நானே வச்சிக்கிறேன்”

 

“என்னடா சொன்னே?” என்று யாதவ் பாய்ந்து வந்து முரளியின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

 

ஆனால் முரளி தன் கையில் இருந்த புல்லாங்குழலை நீட்டி யாதவனை நோக்கி காட்ட, யாதவ் தூக்கி எறியப்பட்டான்.

 

“யாதவ் இந்த புல்லாங்குழலுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு பத்து பக்கத்துக்கு மேல உன்கிட்ட சொல்லியிருக்கேன். அதை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு கொடுக்க மாட்டேன். தம்பி பொண்டாட்டியை அடையணும்ங்கிறது என்னோட நோக்கம் இல்ல. புல்லாங்குழலை என்கிட்ட தக்க வச்சிக்கணுங்கிறதுக்காக தான் அவளை அடையணும்னு நினைக்கிறேன், நீ அவளை மறந்துட்டு ஊர் போய் சேரு” என்று மீண்டும் முரளி செல்ல எத்தனிக்க, யாதவ் பாய்ந்து வந்து அவன் முதுகில் எட்டி உதைத்தான்.

 

“நான் கூட நீ விரும்பின பெண்ணை எப்படி ஏத்துக்கிறதுனு அவளா நெருங்கினா கூட அவகிட்ட ரொம்பவே தள்ளி தான் இருந்தேன். ஆனா துளசிவனத்துல என்னோட கன்ட்ரோல் மீறி அவகிட்ட நெருக்கமா நடந்துக்கிட்டேன். ஏதோ ஒரு சக்தி தான் எங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சு கல்யாணமும் பண்ணிக்க வச்சது. சுயஉணர்வோட எங்க திருமணம் நடக்கலனாலும் உனக்கு துரோகம் பண்ணிட்டோமோனு ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. 

 

ஆனா இப்போ தான் உன்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். நீ செந்தாழினிய விரும்பல. அவ மூலமா கிடைக்க போற புல்லாங்குழலுக்காக அவளை கல்யாணம் பண்ண நினைச்சிருக்க. இப்போ தான் என் மனசுல இருந்த பாரம் இறங்கின மாதிரி இருக்கு. உன்னை போல ஒருத்தன் கிட்ட புல்லாங்குழலை விட்டு கொடுக்கறது மகா பாவம். இனி ராதி மட்டுமில்ல வேங்குழலும் என்னோடது தான். என்றபடி மீண்டும் முரளியை பின்பக்கமாக தூக்கி அப்படியே வீசினான்.

 

அப்போதும் புல்லாங்குழலை கீழே விடாமல் தள்ளாடிக்கொண்டே எழுந்த முரளி “இனி பாவம் பாத்தா முடியாது. என் கையில் இருக்கிற புல்லாங்குழல் சாதாரணமானது இல்ல, மந்திர சக்தி கொண்டது. இதை வச்சி நான் உன் உயிரை கூட எடுக்க முடியும். ஆனா உன்னால தான் இது கிடைச்சதுங்கிறதால உன் உயிரை பறிக்க எனக்கு விருப்பம் இல்ல. மரியாதையா போய்டு. புல்லாங்குழலும் செந்தாழினியையும் விட்டுட்டு போனா உனக்கு நல்லது”

 

யாதவ் “நான் ஏன்டா என் பொண்டாட்டியை விட்டுட்டு போக போறேன். அப்படியே போனா மட்டும் என் ராதி உன்னை ஏத்துக்குவானு நினைக்கிறீயா? இந்த உலகத்துல அவ வெறுக்கிற ஒரே ஆளு நீ தான். அவ மனசையும் மந்திரத்தால மாத்தபோறீயா?” என்றான் யாதவ் ஆத்திரமாக

 

“அதுக்கு மந்திரத்தை யூஸ் பண்ணனும்னு அவசியமே இல்ல. உன் உருவத்துக்கு மாறினாவே போதும்”

 

“என்ன சொல்றே?”

 

“இனி நீ தான் முரளி கிருஷ்ணா, நான் யாதவ் கிருஷ்ணா. தி ரோல் இஸ் சேஞ்சிங் நவ்” (the role is changing now) என்றபடி நொடியில் யாதவனை நோக்கி தன் கையில் இருந்த புல்லாங்குழலை ஆட்டினான்.

 

உடனே கார்மேக வண்ணத்தில் இருந்த யாதவ் சிவந்த நிறத்திற்கு மாறினான். முரளிகிருஷ்ணா இப்போது யாதவ்வின் உருவத்திற்கு மாறினான்.

 

“இது நீ போட்ட மேக்கப் போல இல்ல, ஒரிஜினல், கலையவே கலையாது. பர்மனன்ட் சேஞ்ச், வர்ட்டா” (permanent change) என்றபடி முரளிகிருஷ்ணா வாசலை நோக்கி சென்றான்.

 

பாய்ந்து சென்று முரளியின் சட்டையை பிடித்து உலுக்கினான் யாதவ். அவன் கையில் இருந்த புல்லாங்குழலை பிடுங்க எவ்வளவோ போராடினான். முரளியாக அதை கொடுக்காத வரையில் யாதவாலும் மீண்டும் புல்லாங்குழலை அடைய முடியாது என்பதை அப்போது தான் உணர்ந்தான். “அடப்பாவி அயோக்கிய ராஸ்கல், நீ இந்த அளவுக்கு போவேனு நான் நினைச்சுக்கூட பாக்கலடா. ச்சே நீ மனுஷ ஜென்மமா?” என்றான் யாதவ் அருவெருப்புடன்.

 

“சின்னவனே, இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. இதுக்கும் மேலயும் போவேன். உன்னை யாரு என்னை மனுஷனா நினைக்க சொன்னது? மிருகமா நினை, -ஏன் அரக்கனா கூட நினை. ஐ டோன்ட் கேர், வர்ட்டா” என்று புல்லாங்குழலை ஆட்டியபடி நடந்தவனை போக விடாமல் பாய்ந்து பிடித்தான் யாதவ்.

 

ஆனால் அதிவேகத்தோடு மீண்டும் அந்த அறையின் மூலைக்கு விசிறி எறியப்பட்டான். பின்னந்தலையில் இரத்தம் வழிய மயக்கநிலைக்கு சென்று கொண்டிருந்த யாதவனை நோக்கி சொடுக்கிட்டு, “இனிமேல் சித்தபிரமை பிடிச்ச முரளி கிருஷ்ணாவா இந்த அறைக்குள்ளவே நீ இருக்க வேண்டியது தான்”

 

உன் உருவத்தை வச்சு நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். கலர் கொஞ்சம் கம்மி தான் பரவால்ல. யாதவ் கிருஷ்ணாவா இந்த புல்லாங்குழலோட போய் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போய்ட்டு வரேன்”

 

யாதவ் அவன் பேச்சில் நரம்புகள் முறுக்கேற மீண்டும் எழப்போனான். ஆனால் முரளி தன் கையில் இருந்த புல்லாங்குழலை நீட்டி “இனி சித்தபிரமையோட இங்கேயே இரு” என்றான்.

 

அடுத்தநிமிடம் யாதவ் வெறித்த பார்வையுடன் அப்படியே அமர்ந்திருக்க, “சாரிடா எனக்கு தம்பியா பிறந்ததுக்கு எனக்கு தேவையான பேவர் பண்ணிட்ட, இனி உன் உதவி எனக்கு தேவையில்ல, நான் உன் பொண்டாட்டியையும் புல்லாங்குழலையும் பத்திரமா பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த அறைக்குள் யாதவ்வை வைத்து பூட்டிவிட்டு செந்தாழினி இருந்த அறையை நோக்கி நடந்தான்.

 

“ராதி கதவை திற. நீ சொன்ன மாதிரி இப்பவே நாம இந்த வீட்டை விட்டு கிளம்பலாம்” என்று சத்தமாக சொன்னபடி கதவை தட்டினான் யாதவனின் உருவில் இருந்த முரளி கிருஷ்ணா!

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top