இணை 20

 

கார் சாலையின் ஓரத்தில் நின்றதும் அங்கிருந்த ஆலமரத்தின் மறைவில் இருந்து இன்பரசு வெளியே வந்தான். அவனை கண்டதும் வளர்மதிக்கு உள்ளுக்குள் உதற துவங்கியது. அவசரத்திற்கு உதவி என்று கத்தினால் கூட ஏனென்று கேட்க ஆளில்லாத காட்டு பாதையில் இருக்கிறாள். அவளுடைய கைபேசி அவளிடம் உயிர்ப்போடு இருந்திருந்தால் கூட நெட்வொர்க் கிடைத்திருக்காது. 

 

ஆர்யன் எப்படி அவளை கண்டுபிடித்து காப்பாற்ற போகிறான்? மனதிற்குள் பயமெனும் பேய் தலைவிரித்தாட துவங்கியது. இன்பரசு கார்கதவை திறந்து கொண்டு அவள் அருகில் அமர எத்தனிக்கவும் சட்டென பணப்பெட்டியை அவர்களுக்கு இடையே வைத்தாள்.

 

இன்பரசுவின் முகம் பெட்டியை பார்த்ததும் ஜொலித்தது. டிரைவர், “சார்” என்று இருவிரல்களை உதட்டில் வைத்து புகைப்பிடித்து விட்டு வருவதாக சொல்ல, “சரி சீக்கிரம் வா, பட் டோரை லாக் பண்ணிட்டு போ, இவளை நம்ப முடியாது. இறங்கி ஓடினாலும் ஓடிருவா” என்றான் வளர்மதியை பார்த்துக் கொண்டே.

 

டிரைவர் இறங்கி சென்றதும் அவசரமாக பெட்டியை திறந்தவன் அதில் இருக்கும் பணத்தை சரி பார்த்தான். வளர்மதி அவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

 

“தற்காப்பு கலையை கத்துக்கிட்டா மட்டும் போதாது மனசுல தைரியம் இருக்கணும். மனசுல தைரியம் இருந்தா சண்டையே போட தெரியலனாலும் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். உன்னை நீதான் காப்பாத்திக்க போறே. நான் உனக்கு நிழலா வருவேன். நான் வர்ற வரைக்கும் இதை வச்சு அவனை சமாளி” என்று கணவன் கூறிய வார்த்தைகளை மனதிற்குள் அசைப்போட்டாள்.

 

நிலைமை சற்று மோசமானதாகவே இருந்தாலும், கைமீறி போய்விடவில்லை. அவளுடைய கை பையில் கையை விட்டு துழாவினாள். ஏதோ கையில் தட்டுப்படவும் மனதில் சின்னதாக தைரியம் வந்தது. ஆனால் இதை வைத்து டிரைவரோடு இவனையும் சேர்த்து சமாளிப்பது முடியாது. யோசித்து கொண்டிருக்கும் போதே இன்பரசுவின் கரம் வளர்மதியின் தோளை அழுத்தியது.

 

தீச்சுட்டாற் போல திரும்பி அவனை முறைத்தாள். “என்ன முறைக்கிறே? எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தானே வந்தே. தம்மடிக்க போன டிரைவரை இன்னும் காணல. அதுவரைக்கும்” என்று நிறுத்தியவனின் முகத்தை பார்க்க குமட்டிக் கொண்டு வந்தது. இவனையா? இவனையா உருகி உருகி காதலிச்சேன்? இவனுக்காகவா தற்கொலை வரைக்கும் போனேன்? தன்னையே வெறுத்தாள் வளர்மதி.

 

எவனுடைய பார்வை அன்று வெட்கத்தை தந்ததோ, அதே பார்வை இன்று அருவெருப்பை தருகிறது. அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்தாள்.

 

“என்னடி பத்தினி மாதிரி முறைக்கிறே? போன்ல காட்டினதே நேர்ல காட்ட போறே, அவ்வளவு தானே” என்றான்

 

“என்னைக்கு உங்க வீட்ல பேசி எனக்கு பரிசம் போட்டாங்களோ அன்னைக்கே நீ என் புருஷன்னு நினைச்சிட்டேன். அதனால உன்னை முழுசா நம்பிட்டேன். மனைவியா வரப்போறவளுக்கு அவளோட புருஷன் தான் பாதுகாப்பா இருப்பான். ஆனா நீ? வேலியே பயிரை மேயற மாதிரி உன் தங்கச்சிகிட்டயே என்னை பணயமா வச்சு நிஷாவுக்கு நீ பண்ண துரோகத்தை மறைச்சு கல்யாணம் பண்ண பாத்திருக்கே. செஞ்ச தப்புக்கு மூணு வருஷம் தண்டனை கிடைச்சும் மறுபடியும் அதே தப்பை பண்றீயே, நீ எல்லாம் திருந்தவே மாட்டியா?” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்

 

“திருந்தி என்ன பண்ண சொல்றே? ஆம்பளைனா அப்படி இப்படி தான்டி இருப்பான். சில பொண்ணுங்களுக்கு அவளுங்களை புகழ்ந்தா போதும், இல்ல பாசமா பேசினா போதும் முழுசா நம்பிடுவாளுங்க, அவளுங்களை சந்தோஷப்படுத்தி நானும் சந்தோஷமா இருந்தேன். அது தப்பா?”

 

“தப்பு தான் அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்து நம்பிக்கை துரோகம் செய்யறது தப்பில்லையா?”

 

“ஏமாத்தறது தப்புன்னா, ஏமாறுவதும் தப்பு தான்.  நீ உட்பட என்னை கண்மூடி தனமா நம்பினது உங்களோட தப்பு. அதை பெரிய பிரச்சனையாக்கி என் கூட பொறந்தவளே  கல்யாணத்தை நிறுத்திட்டா, அத்தோட விட்டாளா? புருஷன்கிட்ட சொல்லி என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டா. 

 

நியாயமா பார்த்தா வெளியே வந்ததும் அவளையும் அவ புருஷனையும் தான் கொன்னிருக்கணும். என்ன பண்றது? ஆத்திரத்துல அவங்களை கொன்னு ஆயுசுக்கும் தண்டனைய அனுபவிக்கணுமே. அதுக்கு தான் இந்த யோசனை. யாரை என்கிட்ட இருந்து காப்பாத்த நினைச்சாங்களோ அவளை அடைஞ்சு காட்றது தான் அவங்களுக்கு கொடுக்க போறே தண்டனை” என்று சத்தமாக சிரித்தான்.

 

வளர்மதி திடுக்கிடலோடு இன்பரசுவை பார்க்க, “என்ன முழிக்கிறே, பணத்தை எடுத்துட்டு நீ கிளம்பி வந்திருக்கே. இனி வீட்டுக்கு திரும்ப போறதே இல்ல. நாளைக்கு நியூஸ் என்ன தெரியுமா? பிரபல தொழிலதிபர் ஆர்யனின் மனைவி அவருடைய கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனோடு ஓடிவிட்டாள். எப்படி இருக்கு தலைப்பு? அதுக்கு சாட்சியா நீயும் நானும் ஒண்ணா இருக்கற மாதிரி போட்டோஸ்” என்று அவன் இடியென சத்தமாக சிரிக்க வளர்மதி அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

 

“பேங்க்ல இருந்த சிசிடிவியில நீ கார்ல ஏறி வந்தது நல்லாவே தெரிஞ்சு இருக்கும். நம்பர் ப்ளேட் தமிழ்நாடுனு இருக்கறதால உன் புருஷன் உன்னைய அங்கே தேடிட்டு இருப்பான். ஆனா இந்த காரும் டிரைவரும் ஆந்திராவை சேர்ந்தவங்க. உன் புருஷன் தேடி கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள, உன்னை ஒருமுறை யுஸ் பண்ணிட்டு விட்ருவேன்னு நினைச்சே இல்ல? வாழ்நாள் முழுக்க நீ என்கூட ஒரு அடிமையா இருக்க போறே.

 

நீயும் நானும் சேர்ந்து இருக்கறத உன் நொண்ணனுக்கு அனுப்பி வைச்சுடுவேன். முன்ன நின்னு பெருமையா கல்யாணம் பண்ணி வச்சானே அந்த செழியன், அவன் நாளைக்கு உன் மாமனார் முன்னாடியும் ஊர்காரங்க முன்னாடியும் தலைகுனிஞ்சு நிக்க போறான்”

 

“வாய்க்கு வந்ததை உளறிட்டு இருக்காதே, நீ போன்ல என்ன சொன்னே? இப்போ ஏன் மாத்தி பேசறே?” வளர்மதி பதட்டத்தை மறைத்தபடி அதிகார தோரணையில் கேட்க, “போன்ல தான் மாத்தி பேசினேன். இது தான்டி என்னோட உண்மையான பிளான். ஒரு கோடி ரூபாயை திருடிட்டு என்கூட வந்துடு. நாம ஓடி போயிடலாம்னு சொன்னா வருவியா?” என்று அவன் மீண்டும் சத்தமாக சிரித்தான்.

 

வளர்மதியோ என்ன நடந்தாலும் சரி இவனுக்கு இரையாக மட்டும் ஆகிவிடக்கூடாது. உயிர் இருக்கும் வரை போராடுவோம் இல்லையெனில் மானத்தோடு உயிர் துறக்க வேண்டியது தான் என்று மனதிற்குள் உறுதி பூண்டாள். இன்பரசு அவளை நெருங்கும் சமயம் டிரைவர் இருவரும் அமர்ந்திருந்த கார் கதவை திறந்தான்.

 

“என்ன?”

 

“ஆந்திரா நம்பர் ப்ளேட் மாத்தணும்” என்ற டிரைவர் அவர்களுக்கு பின்னால் இருந்த நம்பர் ப்ளேட்டை எடுத்தான். 

 

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”

 

“அரை மணி நேரம் கார் டிராவல், தரவாத்த போட்லோ வெள்ளாளி (அதுக்கப்புறம் படகுல போகணும்) நா பிரெண்ட் ரெடிகா இருக்கான்” என்றான் அவன் தெலுங்கும் தமிழும் கலந்து

 

“ஓகே, சீக்கிரம் கிளம்பு” என்றான்.

 

அப்போதே அந்த இடம் இருட்ட துவங்கி விட்டது. வளர்மதிக்கு எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. படகு சவாரியில் செல்லும் போது கீழே குதித்து விடாலாமா என்ற யோசனையில் இருந்தாள். ஆனால் திடீரென்று ஏதோ நறுமணம் மூக்கை துளைக்கவும் சந்தேகத்துடன் இன்பரசுவை பார்த்தாள். அவன் கையில் ஸ்ப்ரே இருந்தது. அதன்பின் அவளால் எதையும் ஆழ்ந்து யோசிக்க முடியவில்லை. அரை மயக்கத்தில் இருந்தாள்.

 

இன்பரசுவும் டிரைவரும் ஏதோ பேசிக் கொண்டார்கள், என்ன பேசினார்கள் என்பது அவள் காதில் தெளிவாக விழவில்லை. கார் நின்றதும் இருவரும் இறங்கினார்கள். எழுந்து ஓடி விட நினைத்தாள். ஆனால் கை கால்களை அசைக்க முடியவில்லை. அரை மயக்க நிலையில் இருந்தவளை யாரோ தூக்கி செல்வது போல இருந்தது.

 

அதற்கு பின் பூமியே அவளை தாலாட்டுவது போல் இருக்க, முழுமையாக கண் அயர்ந்தாள். கண் விழிக்கும் போது ஒரு சிறிய அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தாள். தூரத்தில் எங்கோ இஸ்லாமியர் வழிபடும் சத்தம் கேட்டது. அங்கிருந்த ஜன்னலில் எட்டி பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீரே இருந்தது. தப்பி வெளியே ஓடினாலும் எங்கே செல்வது, எப்படி செல்வது என்று புரியவில்லை.

 

“என்ன பாத்துட்டு இருக்கே? எப்படி தப்பிக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கியா?” என்ற இன்பரசுவின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

 

அவன் அறைக்கதவை சாத்தவும் உடல் வியர்த்து விட்டது. அறைக்குள் அவனை அடிக்க ஆயுதம் கிடைக்குமா என்று கண்களை சுழல விட்டாள்.

 

“எதை எடுத்து அடிக்கலாம்னு பாக்கறீயா? செழியனோட தங்கச்சி ஆச்சே, நீ இப்படி தான் யோசிப்பேனு தெரிஞ்சு தான் ரூம்ல கட்டிலை தவிர எதுவும் இருக்க கூடாதுனு சொல்லிட்டேன். அங்கே உன் வீரத்தை காட்டு” என்றபடி அவளை நெருங்கினான்.

 

காலையில் சாப்பிட்டது, இப்போது இரவாகி இருந்ததால் பசி ஒரு பக்கம், கார் பயணத்தின் களைப்பு, மயக்கமருந்தினால் சக்தி குறைந்தாற் போன்ற உணர்வு என அனைத்தும் வளர்மதியை தள்ளாட செய்தது. மீண்டும் கட்டிலில் தடுமாறி விழுந்த போது அவள் கையில் அவளுடைய கைப்பை தட்டுப்பட்டது. சட்டென எழுந்து அமர்ந்தவள் கைப்பைக்குள் எதையோ தேட இன்பரசு சற்று பின் வாங்கினான்.

 

கைப்பையில் கத்தி வைத்திருக்கிறாளா? என்ற சந்தேகத்துடன் அவன் பார்க்க, அவள் கையிலோ சின்னதாக ஊசி இருந்தது. அதை பார்த்ததும் சத்தமாக சிரித்தான்.

 

“நான் கூட பயந்துட்டேன். என்னடா இவ்வளவு ஜாக்கிரதையா இருந்தும் இவ ஹேன்ட் பேக்கை கவனிக்காம விட்டுட்டோமே. கத்தியை எடுத்து குத்திடுவாளோனு நினைச்சேன். சின்ன புள்ள மாதிரி ஊசிய எடுத்துட்டு வந்திருக்கே. என்ன அது? மயக்க மருந்தா? என்னைய தூங்க வச்சிட்டு நீ தப்பிச்சு போயிடலாம்னு நினைப்பா?” என்று ஏதோ நகைச்சுவையை கண்டவன் போல பெரிதாக சிரித்தான்.

 

கையில் பெரிய ஆயுதம் கிடைத்தது போல தைரியத்தை வரவழைத்திருந்த வளர்மதிக்கு இன்பரசுவின் சிரிப்பு கிலியை ஏற்படுத்தியது. அவன் சொல்வது உண்மை தானே. இதில் இருக்கும் மயக்க மருந்தால் அவன் மயக்கமே அடைந்தாலும், இங்கிருந்து எப்படி தப்பிப்பாள்? நன்றாக இருட்டி விட்டது. வெளியே சுற்றிலும் தண்ணீராக உள்ளது. 

 

ஆர்யன் திட்டமிட்டபடி ஒன்று கூட நடக்க வில்லையே, உள்ளுக்குள் உதறினாலும் கையில் இருந்த ஊசியை மட்டும் கீழே போடாமல் அவனை நோக்கி தயாராக நின்றிருந்தாள். இன்பரசு எட்டி அவள் கையை பிடித்து முறுக்க, அந்த ஊசி அவள் கையில் இருந்து நழுவி கதவருகே விழுந்தது.

 

அவள் ஓடிச்சென்று அதை எடுக்க முனைய, இன்பரசு அவளின் கையை பிடித்து இழுத்தான். எட்டி அவன் நெஞ்சில் உதைத்தாள். எதிர்பாராத அவள் தாக்குதலில் அவன் கீழே விழவும் ஓடிச்சென்று கதவை திறக்க முயன்றாள். அதற்குள் இன்பரசு, “என்னையே உதைக்கிறீயா? மைல்டா ஹாண்டில் பண்ணலாம்னு நினைச்சேன், வைல்டா தான் ஹேண்டில் பண்ணனும் போல இருக்கு” என்றபடி அவள் முடியை கொத்தாக பிடித்து இழுத்தான் 

 

வளர்மதியின் விரல்களில் அந்த ஊசி தட்டுப்பட்டது ஆனால் எடுக்க முடியவில்லை. இன்பரசு அவளின் முடியை பற்றி இழுத்துக் கொண்டே அறையின் மூலையில் இருந்த கட்டில் வரை நகர்த்தி சென்றான். கையை பின்னாேக்கி இழுத்து இன்பரசுவின் மார்பில் பலம் கொண்டு குத்தினாள். அவன் கீழே விழவும் வளர்மதி எழ முயன்றாள். அதற்குள் இன்பரசு அவளின் முந்தாணையை பற்றி இழுக்கவும் ஆத்திரத்துடன் திரும்பி அவன் முகத்தில் ஓங்கி மிதித்தாள். 

 

அப்போது கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டது.

 

“சார்” என்ற டிரைவரின் குரல் கேட்கவும்

 

“டிரைவர், வெளியே படகை கட்ற கயிறு இருந்தா எடுத்துட்டு வந்து இவளை கட்டிப்போடு. பயந்தாங்கோலினு நினைச்சா. சண்டி குதிரையா இருக்கா” என்று வலியில் கத்தினான் இன்பரசு

 

கதவு உள்பக்கமாக பூட்டியிருக்கவும் டிரைவரால் கதவை திறக்க முடியவில்லை போலும் அவன் கதவை காலால் உதைத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட கதவு திறந்து கொள்ளும் அபாயம் இருந்தது. அவன் வந்து அவளை கட்டிப்போட்டு விட்டால் என்ன செய்வது என்று பயந்தவள் ஒடிச்சென்று கதவின் கீழே இருந்த ஊசியை எடுத்துக் கொண்டு சுவர் ஓரம் நின்றாள்.

 

கதவு கிட்டத்தட்ட திறந்து கொண்டதும் சற்றும் யோசிக்காமல் ஊசியை குத்த வந்தாள். அவளின் கரத்தை அழுத்தமாக பிடித்து தடுத்த விரல்களில் இருந்த V என்ற மோதிரமும், அந்த ஸ்பரிசமும் அவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது. நம்பமுடியாமல் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நிறைந்திருந்த கண்ணீரால் கண் பார்வை மங்கலாக தெரிந்தது.

 

“மதி” என்ற அழைப்பை கேட்டதும் ஊசியை தூக்கி எறிந்தவள் எதிரே இருந்தவனின் நெஞ்சில் பாய்ந்து அவனுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

 

உயிருக்கு உயிரானவளை பறிக்கொடுத்த இந்த சில மணிநேரத்தில் உயிரில்லாத வெறும் கூடாகவே தன்னை உணர்ந்திருந்தான் ஆர்யன்! தன் உயிரை கண்டதும் தனக்குள் சேர்த்து உயிர் பெற நினைத்தான் போலும். அவளை தனக்குள் இறுக்கி கொண்டான். 

 

இருவரின் இதயங்களும் தாறுமாறாக துடித்ததில் ஒருவரின் பிரிவு மற்றவரை எந்தளவுக்கு பாதித்தது என்பதை இருவருக்குமே உணர்த்தி இருந்தது.

 

அவளின் உச்சந்தலையில் ஆரம்பித்து அவனுக்கு அகப்படும் இடத்தில் எல்லாம் வேகமாக முத்தம் இட்டான். தைரியமாக வழி அனுப்பி வைத்த மனைவியை தவறவிட்டு அவளை கண்டு பிடிப்பதற்குள் அவன் தவித்த தவிப்பை அவனின் அணைப்பிலும் இதழ் முத்தத்திலும் உணர வைத்தான்.

 

முத்தமிட்டே அவன் தவிப்பை போக்கி கொண்டிருந்தான். அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல கணவனின் மார்பை துளைத்துக் கொண்டு அவன் உயிருக்குள் சங்கமித்து விடவேண்டும் என்று அவளும் அவனுக்குள் மூழ்கினாள். அவன் மார்பில் முகம் புரட்டி கண்ணீராலும் இதழ்களாலும் அவன் சட்டையை ஈரமாக்கி கொண்டிருந்தாள்.

 

கதவை உடைத்துக் கொண்டு வந்தது டிரைவர் என்று நினைத்த இன்பரசு, தன்னை சமாளித்து, தடுமாற்றத்துடன் மெதுவாக எழுந்து நின்றான். 

 

இருவரும் நின்ற கோலத்தை கண்டதும் “டேய், உன்னை கயிறு எடுத்து அவளை கட்ட சொன்னா, நீ அவளை கட்டிட்டு நிக்கறீயா? முதல்ல நான் தான் அவளை, அப்புறம்” என்றவன் அடுத்து பேசுவதற்குள் ஆர்யன் இன்பரசுவின் வாயில் ஓங்கி குத்தி இருந்தான்.

 

தள்ளாடி கீழே விழுந்த இன்பரசு, தன்னை நோக்கி மிதிக்க வந்த காலையும், அந்த காலுக்கு சொந்தக்காரனையும் அப்போது தான் பார்த்தான்.

 

‘ஆடிய பாதனே, அம்பல வாணனே!’ என்ற ரீதியில் ஆர்யன் தன் காலை ஆங்காரத்துடன் தூக்கி நின்றிருந்த கோலம், ருத்ர தாண்டவம் ஆட தயாராக நின்றிருந்த ஆருத்ரனை போன்று காட்சியளிக்க, இன்பரசுவின் உடல் பயத்தில் சில்லிட்டு போனது.

 

 (தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top