“ஆர்யன்? நீ எப்படி இங்கே வந்தே?” என்று இன்பரசு கேட்டு முடிப்பதற்குள் அவன் முகத்தில் ஓங்கி மிதித்திருந்தான்.
வளர்மதிக்கு இன்னுமே நம்ப முடியவில்லை, அவள் சிறைப்பட்டிருப்பது அவள் கணவனின் கரங்களிலா? இல்லை மயக்க மருந்தில் அப்படி உணர்கிறாளா? சந்தேகத்துடன் அண்ணாந்து கணவனை பார்த்தாள்.
அவனோ மனைவியின் கன்னத்தை இருகரங்களில் ஏந்தி “மதி பயந்திட்டியாடா?” என்றான் மென்மையான குரலில். அவனின் மென்மையில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பதட்டமும் பயமும் உடைப்பெடுத்துக் கொண்டு கண்ணீராய் வழிந்தது.
அவளோ அவன் மார்பில் ஒடுங்கினாள். உடல் பதற்றத்தில் நடுங்கி கொண்டிருந்தது. “நான் தான் உன் கூட நிழலா வருவேன், பயப்படாதேனு சொன்னேனே, அப்புறம் எதுக்குடா பயம்?” என்று அவள் முதுகை வருடினான்
“நீங்க எப்படி நிழலா வர முடியும்? இவன் தான் என் போனை வாங்கி ஸ்விட்ஆப் பண்ணிட்டானே” என்றாள் அழுதுக் கொண்டே.
இன்பரசுவிற்கு டிரைவரின் மேல் சந்தேகம் எழ, “அடேய் டிரைவர்! துரோகி பயலே!” என்றான் ஹீனஸ்வரத்தில்
“அவன் துரோகி இல்லடா, நீதான் துரோகி. நான் வந்ததை உனக்கு இன்பார்ம் பண்றதுக்கு தான் ஓடி வந்து உன்னை சார்னு கூப்பிட்டான். அப்புறம் நான் வேகமா வந்து அவன் வாயை பொத்திட்டேன். நீ சொன்ன அதே படகு கட்ற கயிறுல தான் அவனை கட்டி போட்டு கதவை உடைச்சிட்டு உள்ளே வந்தேன். சோ அவனால இப்போதைக்கு வர முடியாது” என்றான் ஆர்யன்.
இன்பரசு தன்னை ஒருவாறு சமன் செய்து கொண்டு எழுந்து நிற்கவும், ஆர்யன் மனைவியை தள்ளி நிறுத்திவிட்டு யோசிக்க கூட அவகாசம் கொடுக்காமல் இன்பரசுவின் வாயில் ஓங்கி குத்தினான்.
“மதிக்கிட்ட என்னடா சொன்னே, ஆம்பளைங்கனா அப்படி இப்படிதான் இருப்பாங்களா? ஆம்பளைங்கிறது பொண்ணுங்களை அடையறதுக்காக மட்டும்னு நினைச்சிட்டு இருக்கியா? சொந்த தாய்மாமா பொண்ணையே இப்படி கடத்தி வச்சு நாசம் பண்ண பாக்கறீயே, மத்த பொண்ணுங்களை இன்னும் என்னவெல்லாம் செய்வே? உன்னை இதுக்கு மேலயும் விட்டா உருப்பட மாட்டடா” என்று ஆர்யன் அவனுடைய சட்டை காலரை பிடித்து வேகமாக வயிற்றில் உதைக்க அங்கு இருந்த நாற்காலியில் விழுந்தான்.
“மதி வெளியே இருக்கற கயிறை எடுத்துட்டு வா” என்று ஆர்யன் சொன்னதும் வெளியே ஓடிச் சென்றாள். டிரைவர் அங்கே இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தான். அவன் வாயில் ஆர்யனின் கர்சிப் இருந்தது. அங்கேயே நீண்ட தாம்பு கயிறு இருக்கவும் அதை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடி கணவனிடம் கொடுத்தாள்.
ஆர்யன் நாற்காலியில் அமர்ந்திருந்த இன்பரசுவை கட்டி போட்டு விட்டு அவன் கன்னத்தில் ஆத்திரத்துடன் அறைய தொடங்கினான். மனைவியை தவறவிட்டு விடுவோமோ என்ற தவிப்பும் இன்பரசு பேசிய வார்த்தைகளை தன் காதாலே கேட்டதால் வந்த ஆத்திரமும் சேர கண்மண் தெரியாமல் பலமாக அவனை அடித்துக் கொண்டே இருந்தான்.
அதில் இன்பரசுவின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டியது. அப்போதும் ஆத்திரம் தீராமல் அவன் கழுத்தை நெருக்கினான். கணவன் கொலைகாரன் ஆகிவிட போகிறான் என்று பயந்த வளர்மதி, “ஆரி அவனை கொன்னு நீங்க ஜெயிலுக்கு போக வேணாம்” என்று கணவனின் கைப்பற்றி தடுத்தாள்.
“முதல்ல பணம் வேணும்னு வரச்சொல்லுவான், அப்புறம் செழியனையும் அவர் மனைவியையும் பழிவாங்கறதுக்காக உன்னை திருப்பி அனுப்பாம அடிமையா வச்சுக்க போறதா சொல்லுவான், அவனை சும்மா விட சொல்றீயா?” ஆத்திரத்துடன் கேட்டான் கணவன்.
‘எப்படி இன்பரசு பேசிய அத்தனையையும் அச்சுபிசகாமல் சொல்கிறான்?’ என்று வியப்புடன் வளர்மதி கணவனை பார்த்தாள். அதைப்பற்றி பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள்,
“மொதல்ல அவன்கிட்ட இருக்கற போட்டோஸை அழிக்கணும், அதப்பத்தி கேளுங்க” என்றாள்
“உன்னை பேங்க்ல விட்டுட்டு போன பத்தவாது நிமிஷத்துல இவன் டேட்டா எல்லாத்தையும் அழிச்சிட்டேன், அதை சொல்ல தான் உனக்கு போன் பண்ணேன், ஆனா உனக்கு லைன் கிடைக்கல, கொஞ்ச நேரத்துல போன் ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு”
“டேட்டாவை அழிச்சிட்டீங்களா? எப்படி?” வளர்மதி ஆச்சரியத்துடன் கேட்டாள்
“இவன் நிஷாகிட்டயும் பணம் கேட்டு மிரட்டினதா யுகேந்திரன் சொன்னதும் தான் எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு. நிஷா பெர்சனல் அக்கவுண்ட் வச்சிருக்கறதால பெரிய அமெளன்ட்டை உடனே பணமா கொடுக்க முடியாது, ஆன்லைன் டிரான்ஸ்பர் பண்றதா அவளை பேச வச்சேன். இவனும் ஒத்துக்கிட்டான். அப்புறம் அவ பேர்ல ஒரு டம்மி ஆன்லைன் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதுல இருந்து இவனோட அக்கவுண்ட்டுக்கு பணத்தை டிரான்ஸ்பர் பண்ண மாதிரி மெயில் அனுப்ப சொன்னேன். அதுல இருக்கற லிங்க்கை இவன் கிளிக் பண்ணி கன்பார்ம் பண்ணனும்ங்கிற மாதிரி செட் பண்ணேன்.
பணம் வந்திருக்கறதா மெயில் பார்த்ததும் இவனும் அந்த லிங்க்கை கிளிக் பண்ணிட்டான். ஹாக்கர்ஸ் மூலமா இவன் அக்கவுண்ட்ல இருக்கற எல்லா டேட்டாவையும் டெலிட் பண்ணிட்டு வைரஸையும் பரவ வச்சுட்டோம். இவனோட மொத்த டேட்டாவும் காலி. அதனால தான் சார் உன்னை மொத்தமா கடத்தற பிளானுக்கு மாறிட்டாரு.
“உங்களுக்கு இந்த இடம் எப்படி தெரியும்? அவன் பேசினதெல்லாம் கரெக்ட்டா சொல்றீங்களே எப்படி?” வளர்மதி கேட்க, இன்பரசுவிற்கும் அதே சந்தேகம் தான் அவனும் பதிலுக்காக ஆர்யனை தான் பார்த்து கொண்டிருந்தான்.
“நான் உன்னை இவன்கிட்ட பணம் கொடுக்க தயார்னு பேச சொன்னப்போ, உன் புருஷனால என்னை கண்டுபிடிக்க முடியலயானு கேட்டு சிரிச்சானே, அப்பவே இவனை சாதாரணமா நினைக்க கூடாதுனு எனக்குள்ள ஒரு எச்சரிக்கை இருந்துச்சு.
நான் ஏற்பாடு பண்ண டாக்சியில நீ போனா எல்லாமே என் கன்ட்ரோல்ல இருக்கும், அன்ட் நான் பிளான் பண்ண மாதிரி உன்னை காப்பாத்த முடியும். ஒருவேளை நாம நினைச்சத விட இவன் கிரிமினலா இருந்தா என்ன பண்றதுனு யோசிச்சேன். அப்புறம் தான் எதுக்கும் இருக்கட்டும்னு உன்னோட ஹேண்ட் பேக்ல இருக்கற கீசெயின்ல மைக்ரோ போனை செட் பண்ணேன்”
“எப்போ செட் பண்ணீங்க? என்கிட்ட சொல்லி இருந்தா நான் இன்னும் தைரியமா இருந்திருப்பேன் இல்ல?” ஆற்றாமையுடன் கேட்டாள்
“உன் பேக்ல அந்த ஊசியை போடும் போது தான் கீசெயின்ல மைக்ரா போனை வச்சேன். உன்கிட்ட சொல்லியிருந்தா நீ கொஞ்சம் தைரியமா தான் இருந்திருப்பே. அதேசமயம் உன்னையும் அறியாம உன் கவனம் பேக் மேலயே இருக்கும். இதையெல்லாம் இவன் கவனிச்சுட்டான்னா மைக்ரோ போனை ஈசியா கண்டுபிடிச்சிடுவான். அதனால தான் உன்கிட்ட சொல்லல. ஒரு சேப்டிக்கு தான் அதை வச்சேன். மத்தபடி நாம பிளான் பண்ண கார்ல தான் நீ போக போறேனு உறுதியா நம்பினேன்.
காரையும் உன் போன்ல காட்ற லொகேஷனையும் வச்சு உன்னை கண்டுபிடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா உன்னை பிக்அப் பண்ண இவனே காரை அனுப்புவான்னு நான் கொஞ்சமும் எக்ஸ்பெக்ட் பண்ணல. உன் போன் வேற ஸ்விட் ஆப்னு வரவும் என் உயிரே போன மாதிரி இருந்துச்சு.
ஒரு கோடி ரூபா பணத்தை எடுத்ததால மேனேஜர் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்காரு. அப்பா நம்ம ரெண்டு பேருக்கும் போன் பண்ணி விசாரிக்க நினைச்சிருக்காரு, நாம எடுக்கலன்னதும் மேனேஜர் கிட்ட நீ எந்த கார்ல போறேனு பார்க்க சொல்லியிருக்காரு. அவர் நீ ஏறின கார் நம்பரையும் கலரையும் அப்பா கிட்ட சொல்லி இருக்காரு.
நீ என்னோட கார்ல ஏறாம ஏன் வேற கார்ல பணத்தை எடுத்துட்டு போறேனு அப்பாவுக்கு குழப்பம். மறுபடியும் எனக்கு போன் பண்ணிட்டே இருந்தாரு. முதல்ல நான் அவர் காலை அவாய்ட் பண்ணேன், அவர் தொடர்ந்து போன் பண்ணிட்டே இருக்கவும் தான் போனை எடுத்தேன். அப்புறம் அப்பா சொல்லி தான் நீ கிளம்பி போன காரோட டீடெய்ல்ஸ் எனக்கு கிடைச்சது.
“அச்சோ மாமா என்னை தப்பா நினைச்சிருப்பார் இல்ல?” என்றாள் வளர்மதி வருத்தமான குரலில்
“முதல்ல தெரியாத மாதிரி அப்பாகிட்ட காரோட கலரையும் நம்பரையும் கேட்டேன், அவர் சொன்னதும் அந்த கார் நான் ஏற்பாடு பண்ணினது தான். நான் தான் பணத்தை கொண்டு போய் என்னோட பார்ட்னருக்கு கொடுக்க நம்பிக்கையான ஆள் வேணுங்கிறதால உன்கிட்ட கொடுத்து அனுப்பினதா அப்பாகிட்ட சொல்லிட்டேன். அவர் என்னை கன்னாபின்னானு திட்டிட்டு போனை வச்சிட்டாரு. இப்போ அவர் என்மேல தான் கோபமா இருப்பாரு. சோ நீ அதை நினைச்சு வொர்ரி பண்ணாதே”
“நான் செஞ்ச தப்புக்கு எத்தனை பேர் தான் பழியை ஏத்துக்க போறீங்கனு தெரியல. முதல்ல என் அத்தை பொண்ணு கனி. எனக்காக அவ என் அண்ணன்கிட்ட கெட்டு போனதா பொய் சொல்லி பழியை ஏத்துக்கிட்டு கல்யாணத்தை நிறுத்தி என்னை இந்த நயவஞ்சகன்கிட்ட இருந்து காப்பாத்தினா. இப்போ நீங்க எனக்காகவும் என் மரியாதையை காப்பாத்தறதுக்காகவும் உங்க அப்பாகிட்ட உங்க மேல தப்பு இருக்கற மாதிரி பொய் சொல்லி இருக்கீங்க. உங்க யாருக்கும் இதுவரைக்கும் நான் எந்த நல்லதும் பண்ணதில்ல. ஆனா நீங்க எல்லாரும் எனக்கு நல்லதை மட்டுமே செய்யறீங்க. ஏங்க?” என்று அவனை உலுக்கியவள் அவன் தோளிலேயே சாய்ந்து விம்மினாள்.
“இதென்ன கேள்வி மதி? உங்க அண்ணி உன்னை இவன்கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கு காரணம், உன் மேல இருக்கற பாசமும், அவங்களோட நேர்மையான குணமும் தான். நான் அவங்க அளவுக்கு உசந்தவன் இல்ல. உன்னை காப்பத்தறது என்னையே காப்பாத்திக்கிறதுக்கு சமம், உனக்கு எந்த தலைகுனிவும் வந்திடக்கூடாதுனு நினைக்கிறது என்னோட சுயநலம். ஏன்னா நீயும் நானும் வேற வேற இல்ல” என்ற கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இருவரின் பார்வைகளும் காதலை பரிமாறிக் கொள்ள, ‘இதுங்க காதோல் பண்ற கொடுமைய வேற பாக்கணுமா?’ என்று இன்பரசு பற்களை கடித்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டான். இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.
கணவனின் பார்வையில் வளர்மதியின் அழுகை குறைந்தது.
“என்னை கடத்திட்டு வந்த கார்ல டுப்ளிகேட் நம்பர் பிளேட் வச்சிருந்தானே, எப்படி காரை டிராக் பண்ணீங்க?” என்று விளக்கம் கேட்டாள்.
“தெரிஞ்ச போலீஸ் பிரெண்ட் விக்ரம்னு ஒருத்தன் இருந்தான். அவன்கிட்ட நம்பர் பிளேட் பத்தி விசாரிக்க சொன்னேன். அவன் அது உண்மையான நம்பர் பிளேட் இல்லனு சொல்லிட்டான். இருந்தாலும் ரோட்ல சிசிடிவி கேமரா வழியா காரை டிராக் பண்ண சொல்லி கேட்டிருந்தேன். அவனும் டிராக் பண்ணி திருவள்ளூர் பார்டர் வரைக்கும் சொன்னான். அதுக்கப்புறம் ஆந்திரா பார்டர் வந்ததால அவனால டிராக் பண்ண முடியல.
அதுக்கப்புறம் உன்னை எப்படி கண்டுபிடிக்கறதுனு எனக்கு புரியல. ரொம்பவே பயந்துட்டேன். ரொம்ப நேரம் கார்லயும் பேச்சுக்குரல் கேட்கவே இல்ல. அப்புறம் தான் இவனோட குரலும் உன் குரலும் கேட்டுச்சு. இவன் பேசினதை கேட்டதும் எனக்கு ஆத்திரத்தை அடக்கவே முடியல. ஆந்திரா பார்டர், நம்பர் ப்ளேட் மாத்தறாங்கனு புரிஞ்சது ஆனா அவங்க போக போற இடத்தை பத்தி பேசவே இல்ல. அதுக்கப்புறம் உன்னோட குரல் கேட்கவே இல்ல, இவனும் டிரைவரும் படகுல போறத பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதை வச்சு அவங்க திருவள்ளூர் ஆந்திராவை பார்டர்ல இருக்கிற பழவேற்காடு ஏரியில (pulicat lake) படகுல போக போறாங்கனு புரிஞ்சுக்கிட்டேன்.
நானும் அதே இடத்துக்கு வந்துட்டேன், ஆனா ஏரி ரொம்ப பெரிசு, எந்த பக்கமா உன்னை கொண்டு போனாங்கனு எனக்கு தெரியல, ரொம்ப நேரமா போட்லயே சுத்திட்டு இருந்தேன். அப்போ தான் நீ இருக்கற இடத்துல இருந்து இஸ்லாமியர் வழிபடற சத்தம் கேட்டுச்சு. நான் படகு ஓட்டுறவங்க கிட்ட விசாரிச்சேன். அவங்க ஏரிக்கு நடுவுல வெனாடுங்கிற தீவு இருக்கறதாகவும் அங்கே ஒரு பேமஸான தர்கா இருக்கறதாகவும் சொன்னாங்க.
உன்னை அந்த இடத்துல கடத்தி வச்சிருக்கறதுக்கு வாய்ப்பிருக்குனு தோணுச்சு, உடனே வெனாடு தீவுக்கு படகை ஓட்ட சொன்னேன். நான் தரைக்கு இறங்கினதும் எங்கே போறதுனு தெரியாம அலைஞ்சுட்டு இருந்தேன்.
அப்போ உன்னை கார்ல கூட்டிட்டு வந்த டிரைவரோட குரல் கேட்டுச்சு. மீன் விக்கிற இடத்துல யார்கூடவோ பேசிட்டு இருந்தான். பணம் நிறைய கிடைக்க போகுது கடனை நாளைக்கே அடைச்சிடறேன்னு சொல்லிட்டு இருந்தான். அவனோட குரல் மைக்ரோ போன்ல கேட்ட குரல் மாதிரி இருந்துச்சு. ஆனா அவன் தானானு எனக்கு அப்போ உறுதியா தெரியாது, இருந்தாலும் அவனை பாலோவ் பண்ணி வந்தேன். அவனுக்கு நான் பாலோவ் பண்றது தெரிஞ்சு ஓட ஆரம்பிச்சான்.
அப்புறம் தான் எனக்கே அவன் தான் உன்னை கடத்திட்டு வந்த டிரைவர்னு கன்பார்ம் ஆச்சு, அப்புறம் அவன் ஓடிவந்து கதவை தட்டி சார்னு கூப்பிட்டான், நான் அதுக்குள்ள அவனோட வாயை பொத்தி அதுல என்னோட கர்சிப்பை அடைச்சு வெளியே இருந்த மரத்துல கட்டிட்டு கதவை உடைச்சிட்டு உள்ளே வந்தேன்” என்றான் விளக்கமாக
“நீங்க என்னை கண்டுபிடிச்சு வர்றது ரொம்ப கஷ்டம், என்னோட விதி இத்தோட முடியப்போகுதுனு நினைச்சேன். எனக்கு நல்லதை மட்டுமே செஞ்ச செழியன் அண்ணாவையும், கனியையும் நம்பாம அசிங்கப்படுத்தினதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனை இது. இவன் கை என் மேல படறதுக்குள்ள உயிரை விட்டுடணும்னு நினைச்சேன்” என்றாள் வளர்மதி கண்ணீருடன்
“குடும்பத்துல புரிதல் இல்லாம சண்டை போட்டுக்கறது சகஜம் தான், அதுக்கான தண்டனையா உயிரையே விடணும்னு நினைக்கிறது கோழைத்தனம் மதி. நீ இவனை கொன்னிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். அதை விட்டுட்டு நீ உயிரை விட்டு இருப்பேன்னு சொல்லிட்டு இருக்க. இனியும் இவனை உயிரோட விடக்கூடாது. இவனை இங்கேயே கொன்னு புதைச்சிட்டு தான் நாம இங்கிருந்து கிளம்ப போறோம்” என்றான் உறுதியான குரலில்
கணவன் மனைவியின் உரையாடலை கேட்டபடி வலியில் முனகி கொண்டிருந்த இன்பரசு இப்போது சத்தமாக சிரிக்க தொடங்கினான்.
(தொடரும்)