வேங்குழல் 15

கந்தர்வ வனத்தை சுற்றி பார்வையை செலுத்தியபடி “ராதி நாம வரும் போது சாப்பிட உட்கார்ந்தோம் இல்ல? அந்த இடத்துக்கு போய் தேடலாம் வா” என்றான் யாதவ்

“யாதவ், என்னோட பேரு செந்தாழினி, தாழினினு தானே கூப்பிடுவீங்க, புதுசா என்ன ராதினு கூப்பிடுறீங்க?”

“என்னவோ நீ என்னோடவள்னு ஆன பின்னாடி ராதினு ஸ்பெஷலா கூப்பிட தோணுது, உங்கப்பா கூட அப்படி தானே கூப்பிடுவாரு? இனி நானும் அப்படி தான் கூப்பிடுவேன்” என்றபடி அவள் தோளில் கைவைத்துக் கொண்டு நடந்தான். அந்த காடு முழுவதும் வெகுநேரம் தேடியும் யாரையும் காணவில்லை. 

அலுப்புடன் இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தபடி சுற்றும் பார்த்தனர். அப்போது “பசிக்குதே அய்யோ பசிக்குதே” என்ற முனகல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கம் நோட்டம் விட்டான் யாதவ், யாரையும் காணவில்லை. காதை சற்று கூர்மையாக்கி சத்தம் வரும் திசையை கூர்ந்து கவனித்தான்.

அவர்கள் அமர்ந்திருந்த ஆலமரத்தின் மேலிருந்து தான் சத்தம் வந்தது. யாரோ ஒருவன் மரக்கிளையில் தொங்கி கொண்டிருந்தான். சட்டை பேண்ட் எல்லாம் கிழிந்து தொங்கி கொண்டிருந்தது. இது பிரதாப் அணிந்திருந்த சட்டையாச்சே என்ற நினைவு வர “பிரதாப்” என்று உரக்க கத்தினான் யாதவ்.

மரக்கிளையில் தலையை வைத்து படுத்திருந்தவன் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தான். அவன் கண்களில் அந்நிய பார்வையே தென்பட்டது. 

“பிரதாப் கீழே இறங்கி வா” என்று கையசைத்தான் யாதவ்.

“யார் நீ? என்னை கொல்ல போறீயா? நா வரமாட்டேன்” 

“பிரதாப் நான் யாதவ், கீழே வா”

“எனக்கு பசிக்குது, சாப்பிட எதாவது தருவியா?” என்றான் தலையை கீறிக் கொண்டே

“ம்ம் தரேன் கீழே இறங்கி வா” என்றவன் திரும்பி “ராதி பேக்கில் எதாவது சாப்பிட இருக்கா பாரு” என்றான் மனைவியிடம்

மெல்ல கிளையிலிருந்து ஊர்ந்து மரத்தை பிடித்துக் கொண்டு கீழே இறங்கியனிடம் செந்தாழினி பழங்களை நீட்டினாள். அவளை பார்த்ததும் பிரதாப்பின் உடல் நடுங்கியது. “என்ன பிரதாப் யாரோ மாதிரி பாக்கறீங்க? இந்தாங்க பழம் சாப்பிடுங்க” என்றவளை பார்த்து, “ஐயோ மறுபடியும் மோகினி பிசாசா? என்னை விட்டுடு, என்னை எதுவும் பண்ணிடாதே” என்று கத்திக் கொண்டே மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டான்

மரத்தில் ஏறியதும் இல்லாமல் செந்தாழினியை பார்த்து ஏதோ பேயை கண்டவன் போல அரற்றிக் கொண்டே இருந்தான், “என்னை விட்டுடு, யாராவது காப்பாத்துங்களேன்” என்று கத்திக் கொண்டே மரத்தின் உச்சிக்கிளையை நோக்கி ஊர்ந்து சென்றான்.

“ராதி உன்னை பார்த்து தான் ரொம்ப பயப்படுறான்னு நினைக்கிறேன். நீ கொஞ்சம் அந்த பக்கமா போயேன். இப்போ எனக்கே உன்னை பார்த்து கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்ற யாதவ்வை பார்த்து முறைத்தாள்.

“முறைக்காதேடி சும்மா சொன்னேன், கொஞ்சம் அந்த பக்கமா போ, அப்போ தான் அவன் கீழ இறங்கி வருவான்”

செந்தாழினி அந்த பக்கமாக சென்றதும், “பிரதாப் நான் மட்டும் தான் இருக்கேன். கீழே இறங்கி வா உன்னை நான் காப்பாத்துறேன்” என்றபடி பழத்தை அவனிடம் நீட்டினான்

“இல்ல நீ பொய் சொல்ற, நான் கீழே வந்ததும் அந்த மோகினி பிசாசுகிட்ட என்னை பிடிச்சு கொடுத்துடுவ, நான் வரமாட்டேன் போ” என்றான் சிறுவன் போல

“இல்ல பிரதாப் அந்த மோகினி பிசாசுகிட்ட நான் ஏற்கனவே மாட்டிக்கிட்டேன். அது உன்னை எதுவும் செய்யாது” என்று செந்தாழினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி யாதவ் சொல்லவும் அவள் அங்கிருந்த கல்லை எடுத்து அவன் மேல் வீசினாள். லாவகமாக தன் உடலை வளைத்துக் கொண்டே “பார்த்தியா, இந்த மோகினி என்னை மட்டும் தான் அடிக்கும் உன்னை எதுவும் செய்யாது, கீழே இறங்கி வா” என்றான் சிரிப்பை அடக்கி கொண்டே

“அய்யோ பாவம் நீ! மோகினி கிட்ட மாட்டிக்கிட்டியா? ஆனா நான் உன்னை அந்த மோகினி கிட்ட இருந்து காப்பாத்தமாட்டேன், ஏன்னா எனக்கே பயமா இருக்கும்”

“உன்னால மட்டும் இல்ல யாராலயும் அந்த மோகினிகிட்ட இருந்து என்னை காப்பாத்த முடியாது. அதை நான் பார்த்துக்கிறேன். நீ கீழே இறங்கி வா. மரக்கிளையில் கிழிச்சுக்கிட்டு அங்கங்க ரத்தம் வருது பாரு, மெதுவா இறங்கி வா” என்றான் யாதவ்

பிரதாப் மெல்ல இறங்கி வந்ததும் முதலில் அவனை சாப்பிட சொன்னான். மரத்திலிருந்த இலைகளை பறித்து வட்டமாக கோர்த்து அதை பொட்டலமாக்கி யமுனை ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த நீரை எடுத்து வரச் சென்றான். பிரதாப் சாப்பிட்டு முடிக்கும் வரை செந்தாழினி மரத்தின் பின்னால் ஒளிந்து நின்றாள்.

யாதவ் திரும்பி வந்து பிரதாப்பை நீர் அருந்த செய்தான். பின்பு கிழிந்து தொங்கிய அவன் சட்டைகளை பார்த்து “பிரதாப் உன்னோட பேக் எங்கே?” என்றான்.

“அது அது” என்று தலையை சொரிந்தவன், “காக்கா தூக்கினு போச்” என்றான் கைகளை விரித்து

பிரதாப்பின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் அவன் நிலையை பார்த்து கவலையாக இருந்தது யாதவ்விற்கு. தன் இடையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து வாசித்து இப்போதே பிரதாப்பின் மனபிழறலை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து அவன் புல்லாங்குழலை வாசிக்க தொடங்கவும், அங்கிருந்த கந்தரவர்களும் மோகினிகளும் அந்த இடத்தை சுற்றி நின்றிருந்தனர். அவர்களும் தங்கள் இசை கருவிகளை எடுத்து மீட்ட தொடங்கவும் தெய்வீகமான இசைக் கச்சேரி அங்கே அரங்கேறியது.

செந்தாழினி மெய்மறந்து இசையை ரசித்து கேட்டாள், அவளுக்கு யாதவை தவிர எந்த உருவமும் தெரியவில்லை. ஆனால் பிரதாப்பிற்கு யாதவ் வாசித்த புல்லாங்குழல் ஓசையே கேட்கவில்லை போலும். அவன் எந்த எதிர்வினையும் புரியாமல் தன் பசியை போக்குவதிலேயே மும்மரமாக இருந்தான்.

“யாதவா, இங்கே நடப்பவை அவனுக்கு தெரியக்கூடாது அதுமட்டுமில்லாமல் உங்கள் இசையை கேட்கும் பாக்கியம் அவனுக்கு இல்லை. செய்த தவறுக்காக கொடுக்கப்பட்ட தண்டனையை திரும்ப பெற முடியாது. எனவே இன்னமும் அவன் மனநிலை சரியாகவில்லை. இந்த மானிடனை அழைத்துக் கொண்டு சென்று அவனுக்கு முறைப்படி வைத்தியம் பாருங்கள், சீக்கிரமே குணமாகி விடும்” என்று ஒரு கந்தர்வன் கூறினான்.

யாதவனும் தலையை அசைத்துக் கொண்டே தன் இசையை தொடர்ந்தான். சில மணித்துளிகள் கடந்த பின் யாதவ் தன் வாசிப்பை நிறுத்தியிருக்க, அனைவரும் அவனை வணங்கிவிட்டு கலைந்து சென்றனர். அவர்கள் சென்றதும் யாதவ் மீண்டும் பழைய நிலைக்கு வந்தான்.

“ராதி நீ பிரதாப்பை பார்த்துக்கோ, நான் முரளி இருக்கானானு தேடிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு யாதவ் அந்த கந்தரவ வனத்திற்குள் நுழைந்து சென்றான். 

சிறிது தூரம் சென்றதும் அவன் கால்களில் ஏதோ தட்டுப்படவும் குனிந்து பார்த்தான். அது பிரதாப்பின் பேக், அதை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு அந்த காடு முழுவதும் சுற்றி அலைந்தான். மரக்கிளையில் பிரதாப் தொங்கி கொண்டிருந்தது போல முரளியும் இருப்பானோ என்று 360 டிகிரியில் பார்வையை சுழற்றிய படி சென்றான்.

அந்த இடத்தில் ஏதோ ஒரு பள்ளம் இருப்பது போல தோன்றியது. அதற்குள் யாதவ் இறங்கி நடந்தான். உள்ளே ஒரு சுரங்க பாதை போல இருந்தது. இந்த காட்டிற்குள் இப்படி ஒரு சுரங்க பாதை இருப்பதை எண்ணி ஆச்சரியத்துடன் அதில் இறங்கி நடக்க தொடங்கினான் யாதவ்.

பின்பக்க தோற்றத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஒரு உருவம் தெரிந்தது. பின்னால் ஜடா முடியுடன் ஒருவர் அமர்ந்து தவம் செய்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அவர் முன்னே சென்றால் என் தவத்தை கலைத்துவிட்டாய்னு சொல்லி எதாச்சும் சாபம் கொடுத்துடுவாரோ என்று யாதவ்விற்கு சற்று பயமாகவே இருந்தது.

மெல்ல நடந்து அவர் அருகே சென்றான். “ஐயா” என்றான்.

அவரிடம் ஒரு அசைவும் இல்லை. அவர் முன்னால் சென்று அவர் முகத்தை எட்டி பார்த்தான். முகம் முழுவதும் தாடி படர்ந்திருந்தது. இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை.

கண்களை சுருக்கி அவர் முகத்தை கூர்ந்து பார்த்தான். அது வேறு யாருமில்லை முரளி கிருஷ்ணா தான்!

யாதவ்வால் நம்பவே முடியவில்லை கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தான். முரளி தான் அமர்ந்திருந்தான். கண்கள் வெறித்தபடி எங்கேயோ நிலை குத்தியிருந்தது. இடையில் ஒரு சின்ன ஆடையை தவிர வேறெதுவும் அணியாமல் வெற்றுடம்புடன் இருந்தான்.

உடற்பயிற்சி செய்து வலிமையான புஜங்களை கொண்டிருந்தவனின் உடல் மிகவும் மெலிந்து போயிருந்தது. முகத்தில் அந்த வசீகரம் இல்லை, கண்கள் பொலிவிழந்து காணப்பட்டது. ராஜ்ஜியத்தை ஆளும் ஒரு ராஜா போல இருந்தவன் இப்போது பட்டினியில் கிடக்கும் பிச்சைக்காரனை போல இருக்கானே என்று யாதவ்விற்கு மனம் வலிக்கத் தான் செய்தது.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று இதற்கு தான் சொன்னார்களா? யாதவ்வை அறியாமல் அவன் சகோதரனின் மேல் ஒரு பரிதாப உணர்வு ஏற்பட்டது. “முரளி” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. இப்போது மெல்ல அவன் தோளில் கைவைத்தான். பயமாக தான் இருந்தது, அவனை தொட்டால் எங்கே என்னை தொடறதுக்கு கூட ஒரு அருகதை இருக்கணும், நீ என்னை எப்படி தொடலாம்னு கத்துவானோ? தயக்கத்துடன் முரளியின் விழிகளை பார்த்தான். இப்போதும் முரளியிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“முரளி.. முரளி” என்று மெல்ல உலுக்கினான். ம்ஹூம் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்ததே தவிர, அவன் கண்மணி கூட அசைய வில்லை. ஏதோ வித்தியாசமாக தோன்றியது. யாதவ் முரளியின் கரம் பற்றி எழுப்பி நிறுத்தினான். அவனும் எழுந்து நின்றான். ஆனால் பார்வை மட்டும் எங்கேயோ வெறித்தபடி இருந்தது.

இந்த கந்தர்வ வனத்தில் முரளியும் மனநலம் பாதிக்க பட்டு இருக்கிறான் என்று இப்போது யாதவ்விற்கு புரிந்தது. அவனை மெல்ல நடக்க வைத்து அந்த சுரங்க பாதையிலிருந்து வெளியே கூட்டி வந்தான். வெளியில் வெயில் பட்டதும் யாதவ் ஒரு கணம் கண்களை சுருக்கி விரித்தான் ஆனால் முரளி அப்படியே அசையாமல் வெறித்த பார்வையுடன் நடந்து வந்தான்.

யாதவ் தன் கையிலிருந்த பிரதாப்பின் பேக்கை திறந்து அதில் இருந்த உடையை எடுத்து முரளிக்கு அணிவித்தான். அடம் செய்யாத குழந்தை போல யாதவனின் செயலுக்கு ஒத்துழைத்தானே தவிர முரளி எதுவும் பேசவில்லை, கண்ணின் இமையை கூட சிமிட்டாமல் இருந்தான். யாதவ் முரளியின் கையைப் பிடித்தபடி பிரதாப்பும் செந்தாழினியும் இருந்த இடத்திற்கு சென்றான்.

யாதவ்வுடன் யாரோ ஒரு சாமியார் வருவதாகவே நினைத்த செந்தாழினி, “யாதவ் யார் இது? இவர் இன்னொரு பைராகியா?” என்றாள்

“ராதி நல்லா பாரு, யாருனு தெரியலையா? உன்னோட பாஸ் முரளி கிருஷ்ணாவையே தெரியலனு சொல்றீயேடி?” 

“என்ன சொல்றே யாதவா?” என்றபடி அவர்கள் அருகில் ஓடியவள் முரளியை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியுடன் பார்த்தாள். 

“எப்படி இருந்த மனுஷன் ஏன் இப்படி சித்த பிரமை புடிச்ச மாதிரி இருக்காரு?” என்றாள் அதிர்ச்சியோடு

“எல்லாம் கந்தர்வ வனத்துல இருந்ததால தான். பிரதாப்புக்கும் டிரஸ் மாத்திட்டு இரண்டு பேரையும் இங்கே இருந்து கூட்டிட்டு போகலாம். அப்புறம் ஒரு நல்ல சைக்ரியாரிஸ்ட் கிட்ட இவங்களை காட்டலாம்” 

“யாதவா நம்ம கிட்ட தான் அந்த புல்லாங்குழல் இருக்கே, அதை வச்சு இவங்களை நொடியில் குணமாக்கிடலாமே” என்றாள்.

“ராதி பந்திர்வன் காட்டுல பைராகி சொன்னதை மறந்துட்டியா? இந்த புல்லாங்குழலை வச்சு இவங்களை கந்தர்வ வனத்துல இருந்து கூட்டிட்டு போக முடியுமே தவிர குணப்படுத்த முடியாதுனு சொல்லிட்டாரே. நீ கவனிக்கலையா? அப்பவும் நான் பிரதாப்பை தெளிவு படுத்த முடியுதானு புல்லாங்குழலை எடுத்து வாசிச்சேன். ஆனா அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல. பிரதாப் இன்னமும் அப்படியே தான் இருக்கான். 

எப்போ இந்த கந்தர்வ வனத்துக்குள்ள நுழைஞ்சனோ அப்போ இருந்து எனக்குமே என்னென்னவோ நடக்குது. இங்கே வந்ததால எனக்கு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி போல ஏதோ ஒரு பிராப்ளம் வந்திருக்குனு தோணுது. திடீர்னு நான் ஏதோ செய்யறேன், என்னென்னமோ பேசறேன். ஆனா என்ன பேசறேன்னு தான் நியாபகம் இருக்க மாட்டேங்குது” என்றான்.

“ஆமா யாதவ் நீ சொல்றது சரிதான். சிலசமயம் நீ வித்தியாசமா நடந்துக்கறே. அந்த சமயத்துல நானும் அப்படி தான் நடந்துக்கிறேன்னு தோணுது. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நார்மல் ஆகிடுறேன். கந்தர்வ வனத்தோட எபக்ட் நம்மளையும் பாதிச்சிருக்குமோ?” என்றாள் யோசனையாக

“இங்கிருந்து போய்ட்டா எல்லாம் சரியாகிடும் ராதி”

“முரளிக்கும் பிரதாப்புக்கும் கூட இங்கிருந்து போனதும் குணமாகிடுமா யாதவ்?”

“அவங்களுக்கு குணமாக இன்னும் கொஞ்ச காலம் ஆகும்னு நினைக்கிறேன். இப்போதைக்கு இந்த புல்லாங்குழல் இருக்கிறதால தான் இவங்களை இந்த கந்தர்வ வனத்தை விட்டு வெளிய கொண்டு போக முடியும். அது போதாதா? கூட்டிட்டு போய் அவங்கவங்க வீட்டுல விட்டுட்டு முதல்ல தேவையான சிகிச்சை கொடுக்க சொல்வோம். சரியாகலைனா அடுத்து என்ன பண்றதுனு பார்க்கலாம்”

“சரி சரி அந்த புல்லாங்குழலை எடுத்து எதாவது பிளைட் இல்லனா ஹெலிகாப்டர் வரவழை. அதோட மந்திரசக்தி எப்படி வேலை செய்யுதுனு பார்க்கலாம். அப்படியே  சீக்கிரமா வீடு போயும் சேரலாம்” என்றாள்

“ராதி ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. நான் இந்த புல்லாங்குழலை என் சொந்த உபயோகத்துக்கு யூஸ் பண்ண மாட்டேன். நீயும் அதை செய்ய கூடாது. யாரையாவது காப்பத்தவோ, இல்லைனா மனிதனால சரிசெய்ய முடியாத விஷயத்துக்கு தான் புல்லாங்குழலோட தெய்வீகத்தை பயன்படுத்தணுமே தவிர சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அதை யூஸ் பண்ண கூடாது. அதை நம்மளோட பயன்பாட்டு ஒரு முறை யூஸ் பண்ணிட்டோம்னா மறுபடியும் மறுபடியும் அதை யூஸ் பண்ண தோணும், நம்மோட எதிர்ப்பார்ப்புகளும் அதிகமாகிட்டே போகும். நான் சொல்றது உனக்கு புரியுது தானே?”

“உங்களை நினைச்சு பெருமையா இருக்கு யாதவ். எனக்கும் அந்த ஆசையெல்லாம் இல்ல. சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலே போதும். நீங்க என்ன சொல்றீங்கனு தெரிஞ்சுக்க தான் கேட்டேன். பைராகி நம்மளை நம்பி அந்த புல்லாங்குழலை கொடுத்திருக்காரு. அதை மிஸ் யூஸ் பண்ண கூடாது தான். அவர் சொன்னது போல தேவைப்படும் போது மட்டும் யூஸ் பண்ணுங்க. சரி கிளம்பலாமா?”

யாதவ் கிருஷ்ணா முரளி மற்றும் பிரதாப்பை அழைத்துக் கொண்டு முன்னால் செல்ல செந்தாழினி அவர்களை பின் தொடர்ந்தாள். பிரதாப் பத்து வயது சிறுவன் போல குதித்துக் கொண்டும் ஏதோதோ பேசிக் கொண்டும் சென்றான். யாதவ் அவன் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் முரளி இறுக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் முகமும் பார்வையும் எந்த பக்கமும் அசையாமல் அப்படியே இருக்க, கால்கள் மட்டும் யாதவனோட நடந்துக் கொண்டிருந்தது.

எப்படியோ அவர்கள் நால்வரும் அந்த காட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் யாரிடமும் போன் இல்லை. அந்த வழியாக சென்று கொண்டிருந்த டிராக்டரில் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டு மதுரா சென்றடைந்தனர். 

பிரதாப் வழியில் பெண்களை கண்டாலே பேயறைந்தவன் போல கத்தினான், “ஐயோ மோகினி பிசாசு” என்று தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். அங்கிருந்த அனைவரும் அவனை விசித்திரமாக பார்த்தனர். யாதவ்விற்கு அவனை கட்டுப்படுத்துவதற்குள் போதும் என்றாகி விட்டது. அவசரமாக ஒரு டாக்சியை புக் செய்தான். 

செந்தாழினியும் வேறு வழியில்லாமல் பேண்ட் சட்டை அணிந்து தொப்பி போட்டுக் கொண்டாள். அவள் ஆண் தோற்றத்திற்கு மாறிய பின்பே காரில் அமைதியாக பயணம் செய்ய ஆரம்பித்தான். அவர்கள் மதுராவிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்தனர்.

செந்தாழினியிடம் பிரதாப்பின் வீட்டு விலாசத்தை அறிந்துக் கொண்டு அவனை அவன் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தனர். பைத்தியம் போல உளறிக் கொண்டிருந்தவனை பார்த்து அவன் வீட்டினர் பயந்து போயினர்.

“கவலபடாதீங்க, அவர் உயிர் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம், இது தற்காலிகமான மனநோய் தான். கொஞ்ச நாள்ல சரியாகிடும், நல்ல டாக்டரை பாருங்க” என்றான் யாதவ். அவர்கள் இவனை பார்த்து கைப்கூப்பி நன்றி சொன்னதும் அங்கிருந்து கிளம்பி மூவரும் செந்தாழினியின் வீட்டிற்கு சென்றனர்.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த ஆருத்ரன் வாசலில் நின்றிருந்த யாதவ் மற்றும் செந்தாழினியை பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். “என்ன யாதவ் போன காரியம் எல்லாம் சக்சஸா முடிஞ்சதா? ஹவ் இஸ் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் ராதி” என்று கேட்டவாறே மகளை பார்த்தவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

செந்தாழினியின் கழுத்தில் இருந்த தாலியையும் நெற்றியில் இருந்த குங்குமமத்தையும் பார்த்து புருவம் சுருக்கினார் ஆருத்ரன். அவளோ தவறு செய்துவிட்டு சின்ன பெண் போல தலையை குனிந்துக் கொண்டு “சாரி டாடி, வி காட் மேரிட்” என்றாள் சின்ன குரலில்

“மன்னிக்கனும் சார், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எங்களுக்கு ராதா கிருஷ்ணர் கோயில்ல கல்யாணம் நடந்துடுச்சு. பிளான் பண்ணி நடந்தது இல்ல. தற்செயலா தான்” என்று தயக்கத்துடன் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்த யாதவனை பார்த்து புன்னகைத்தார் ஆருத்ரன்.

“எனக்கு இது நடக்கும்னு முன்னாடியே தெரியும். என் மக உங்க கூட வரேன்னு அடம்பிடிக்கும் போதே நினைச்சேன் ஷி லவ்ஸ் யூனு. அன்ட் உங்க பிறந்த நேரத்தை நான் பார்க்கும் போதே ராதியோட ஜாதகத்துக்கு பொருத்தமான ஜாதகம்னு நினைச்சேன். நீங்க திரும்பி வந்ததும் அதைப்பத்தி உங்க கிட்ட பேசலாம்னு இருந்தேன். ஆனா நீங்க இப்படி கணவன் மனைவியா வருவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல. இதுல எனக்கு சந்தோஷம் தான். ஆனா பிரச்சனை இன்னும் முடியல யாதவ். ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. முரளியை கந்தர்வ வனத்துல தானே விட்டுட்டு வந்தீங்க?”

“இல்லப்பா அவர் கார்ல தான் இருக்காரு. சித்தபிரமை பிடிச்சத போல இருக்கார். காரை விட்டு கீழே இறங்கவே மாட்டேங்கிறாரு. அதான் நாங்க மட்டும் வந்தோம்” 

“ராதி” என்று அதிர்ச்சியில் கத்தியவர் “அவனை ஏன் உங்களோடவே கூட்டிட்டு வந்தீங்க?” என்று தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

“என்னாச்சு சார்? ஏன் அப்படி சொல்றீங்க? நான் கிளம்பி வந்ததுக்கான முக்கிய காரணம், முரளி கிருஷ்ணா தான். அவனை என் அப்பாகிட்ட ஒப்படைக்க வேண்டியது என்னோட கடமை. அதனால தான் கூட்டிட்டு வந்தேன்”

“யாதவ், முரளியால உங்க இரண்டு பேரோட வாழ்க்கையில் பிரச்சனை வரும். அவன் நல்லவன் இல்லப்பா”

“அவன் நல்லவன் இல்லனு எனக்கும் தெரியும், ஆனா இப்போ சித்தபிரமை பிடிச்சு சுயநினைவு இல்லாம இருக்கான். அவனை அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா? அவனால எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது. அவனை எங்கப்பாகிட்ட சென்னை வீட்ல விட்டுட்டு நான் ராதியோட அலங்காநல்லூர் போக போறேன்.

ஒருவேளை பிரச்சனை வந்தா என்னோட மிடிஸ்கிளாஸ் நிலைமையை பார்த்து வரலாம். ஏன்னா என் வீடு நடுத்தர வசதி கொண்டது, அங்கே தான் என்னோட மனைவி வந்து வாழணும். அதுல உங்களுக்கும் ராதிக்கும் ஆட்சேபனை இருந்தா சொல்லிடுங்க. மதுராவில் நடந்த கல்யாணத்தை அப்படியே மறந்துடுவோம். நான் மட்டும் முரளியை கூட்டிட்டு சென்னைக்கு போறேன்” என்றான் ஆழ்ந்த குரலில்

“யாதவ்  ராதி உன் மனைவி. அவ என்னோட முடிவுக்கு கட்டுபடணும்னு அவசியம் இல்ல. நீங்க எங்கே இருக்கீங்களோ அங்கே தான் அவளும் இருப்பா. என் பெண்ணை நான் அப்படி தான் வளர்த்திருக்கேன். நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வந்திடுறேன்” என்று சொல்லி அவர்களுக்கு தனிமையை கொடுத்து ஏதோ வேலையாக  உள்ளே சென்றார் ஆருத்ரன்.

செந்தாழினி அவன் முழங்கையில் நறுக்கென்று கிள்ளினாள். “என்னை விட்டு போயிடுவியா நீ?” என்று அடிக்குரலில் சீறினாள்.

“ராதி உன் கிட்ட நான் தள்ளி இருந்ததுக்கு முரளி மட்டும் காரணம் இல்ல, உன்னோட வசதியும் ஒரு காரணம் தான். வசதியான பெண்ணை கல்யாணம் பண்ணினதால என் அப்பாவுக்கு வந்த அதே நிலமை எனக்கும் வரக்கூடாதுனு  நினைச்சேன். அதனால தான் இப்பவே தெளிவுபடுத்திக்கணும்னு பேசிட்டேன், தப்பா நினைக்காதே. எல்லாத்தையும் மனசுல வச்சுக்கிட்டு தான் உன்கிட்ட இருந்து விலகி இருக்க நினைச்சேன். ஆனா என்ன பண்றது? நாம கல்யாணம் பண்ணிக்காம அந்த புல்லாங்குழலை எடுத்திருக்கவே முடியாதே”

“அடப்பாவி அப்போ அந்த புல்லாங்குழலை எடுக்கறதுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டயா?” என்றாள் கோபமாக

“அப்படியெல்லாம் இல்ல ராதி, அன்னைக்கு முதல் நாள் ராத்திரி நமக்குள்ள தான் எல்லாம் முடிஞ்சுருச்சே, அதான் முழுக்க நனைஞ்சாச்சு இனி என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு உன் கழுத்தில் தாலி கட்டிட்டேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“எல்லாம் முடிஞ்சுருச்சா? உனக்கெப்படி தெரியும்? அதை நான் தானே சொல்லணும்?” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி

“ராதி என்னடி சொல்றே?” என்றான் யாதவ் அதிர்ச்சியாக

“ம் ஒண்ணும் நடக்கலைனு சொல்றேன்”

“நீ தானே உடம்பு வலிக்குது, ராத்திரி முழுசும் நான் ஆட்டம் போட்டதா சொன்னே”

“ஆமா சொன்னேன், அதுக்கு நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சினு நீ நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்றது?” என்று உதட்டை சுழித்தாள்.

“அடிப்பாவி நான்  பைராகி கிட்ட நமக்கு கந்தர்வ கல்யாணம் நடந்துச்சுனு சொன்னேனே அப்பவே அப்படி எல்லாம் நடக்கலனு சொல்றதுக்கு என்ன?”

“ம் சொல்லி இருந்தா என் கழுத்துல தாலி கட்டியிருப்பியா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினாள்.

“உன்னை” என்று அவள் தலையில் கொட்ட போனவனின் கரம் பற்றி தன் தலையில் அழுத்தி பிடித்தாள், “யாதவா என் தலையில் கை வச்சு உண்மையை சொல்லு, நீ என்னை விரும்பல?” என்றாள் அவன் கண்களை நேராக பார்த்து.

“ரொம்பவே விரும்புனேன்” என்றான் அவளை நேராக பார்க்க முடியாமல் பக்கவாட்டாக திரும்பிக் கொண்டு

“அப்புறம் என்ன? உனக்கும் என் மேல காதல் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். என்னதான் என்னை விட்டு  விலகி விலகி போனாலும்,  என்கிட்ட இருந்து நீ தப்பிக்க பார்க்கறேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது. எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சது யாதவா, கிடைச்ச சான்சை விட எனக்கு மனசு இல்ல, அதான் எந்த மறுப்பும் சொல்லாம உன் கையால தாலி வாங்கிட்டேன்”

“இல்ல ராதி, முரளியை பத்தி உனக்கு தெரியாது, அவனுக்கு குணமான பின்னாடி நம்ம விஷயம் தெரிஞ்சா அவனுக்கு நான் துரோகம் பண்ணதா நினைப்பான்” என்றான்

“இதில துரோகம் எங்கே இருக்கு? அவர் என்னை விரும்பி இருக்கலாம். ஆனா நான் அவரை விரும்பல. நீங்க என் வாழ்க்கையில் வரலைனா கூட எப்பவும் அவரை நான் கன்சிடர் பண்ணியிருக்கவே மாட்டேன். இனி அவரோட என்னை சேர்த்து வச்சு பேசாதீங்க யாதவ்” என்றாள் சிரீயசான குரலில்

“சரி பார்த்துக்கலாம் விடு, என்னோட கிராமத்துல வந்து வாழறதுக்கு உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லயே? அப்படி எதாவது இருந்தா சொல்லு, நானும் சிட்டில எங்காவது வேலை பார்த்துக்கிறேன்” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நாம உங்க ஊருக்கே போகலாம். நான் என்னோட வேலையை கீழடி ஆராய்ச்சி செய்யற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன்”

“சரி உன்னோட விருப்பம், இப்போ முதல்ல சென்னைக்கு போய் முரளியை என் அப்பாகிட்ட விட்டுட்டு போயிடலாம்” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஆருத்ரன் ஒரு பெட்டியை கொண்டு வந்து யாதவ்விடம் கொடுத்தார்.

“மாப்பிள்ளை இது என் மகளுக்கு சீதனமா கொடுக்க வேண்டிய சொத்து. மறுக்காம வாங்கிக்கோங்க”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மாமா, ஒருவேளை என்னால உங்க பெண்ணை காப்பாத்த முடியாதுனு நினைச்சீங்கனா கொடுங்க வாங்கிக்கிறேன்” என்றான் அழுத்தமான குரலில்

“ச்சேச்சே அப்படி எல்லாம் இல்ல. முறைனு ஒன்னு இருக்கு இல்ல, அதுக்கு தான் கொண்டு வந்தேன். உங்களுக்கு எப்பவாச்சும் தேவைப்பட்டா தயங்காம என்கிட்ட கேளுங்க. என்னை உங்க மாமனாரா நினைக்க வேண்டாம், அப்பாவா நினையுங்க” என்றார் கனிவான குரலில்

“நம்ம ரிலேஷன்ஷிப் நல்லா இருக்கணும்னா நான் உங்களை மாமாவா நினைக்கிறது தான் பெட்டர். சரி மாமா நாங்க கிளம்பறோம். முரளியோட போனும் தொலைஞ்சிட்டதால என் அப்பாவுக்கு போன் செய்து விவரம் சொல்ல முடியல. அவரோட நம்பரும் என்கிட்ட இல்ல. நான் உடனே போகலைனா அவர் அடுத்தகட்ட நடவடிக்கையாக எங்க இரண்டு பேரையும் காணவில்லைனு கம்ளைய்ண்ட் பண்ணாலும் பண்ணிடுவார். நாங்க இன்னொரு முறை சாவகாசமா வந்து வீட்டில் இருந்துட்டு போறோம்” என்றபடி செந்தாழினிக்கு கண்ணால் குறிப்பு கொடுத்து அவளுடன் ஆருத்ரனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

ஆருத்ரன் யாதவனை அவசரமாக எழுப்பி ஆரத் தழுவிக் கொண்டார். “ஜாக்கிரதையா இருங்க மாப்பிள்ளை” என்று அழுத்தி சொல்லிவிட்டு இருவருக்கும் மனமார ஆசி வழங்கினார். 

செந்தாழினி தன் தகப்பனிடம் பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு கணவனுடன் மீண்டும் காரில் ஏறி டெல்லி விமான நிலையத்தை நோக்கி பயணம் செய்ய தயாரானாள். முரளி பின் சீட்டில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

டெல்லியிலிருந்து விமானம் சென்னை ஏர்போர்ட் வந்ததும் மூவரும் வெற்றிவேந்தனின் வீட்டை நோக்கி டாக்சியில் பயணம் செய்தனர்.

இனி முரளி கிருஷ்ணாவின் ஆட்டம் ஆரம்பம்!

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top