அத்தியாயம் 21

கீதாஞ்சலிக்கு சிறு வயது முதலே காவல்துறையில் உயர் பதவியில் பணிபுரிய வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது.

அவள் தனது முதுகலைப் படிப்பை கோயம்புத்தூரில் படித்துக் கொண்டிருந்த சமயம் அனைத்து மாநிலங்களின் சார்பாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றாள். 

ஜானகியின் தூண்டுதலால் சிறு வயதிலிருந்தே பரதத்தையும் முறையாக கற்றுத் தேர்ந்தாள்.

 தமிழ்நாட்டின் சார்பாக அவள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியிக்கு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த வஜ்ரவேலுடன்  வந்திருந்தான் மிருகேந்திரன். 

கீதாஞ்சலியின் நளினமான நடனத்திலும், அழகிலும் மனதை பறிகொடுத்தான்.

வஜ்ரவேலிடமிருந்து  பரிசுக் கோப்பையை வாங்க வந்தவளின் பார்வை ஆண்மையின் இலக்கணமாக அதே சமயம் அலட்டலில்லாத நேர் கொண்ட பார்வையுடன் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்த மிருகேந்திரன் மீது சில கணங்கள் படிந்து மீண்டது.

மையிட்ட நீண்ட நயனங்களின் அழகில் மயங்கித் தான் போனான் மிருகேந்திரன்.

முதலில் தயங்கித் தயங்கி அவனது முகத்தை பார்த்த அவளது விழிகள் சில கணங்களில் அவன் முகத்தில் அழுத்தமாக பதிந்ததை கண்டு கொண்டான் மிருகேந்திரன். 

இருவரது விழிகளும் சில கணங்களே நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும் ஒன்றை ஒன்று தன்புறமாக  இழுத்துக் கொண்டு விட்டது.

கன்னி மனமும் அவனது உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டது.

 கண்களில் நிரப்பிக் கொண்டதை இதயத்தில் காதல் என்னும் கல்வெட்டாக பதிக்க வைத்தான் மிருகேந்திரன். 

அடுத்தடுத்த சந்திப்புகளை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தி கொண்டவன் கீதாஞ்சலியுடனான உறவை பலப்படுத்திக் கொண்டான். 

ஓராண்டு கடந்திருந்தது . 

தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள் கீதாஞ்சலி .

மிருகேந்திரன் அப்போது தான் வஜ்ரவேலின் முதன்மைத் தொழிலான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை கையில் எடுத்திருந்தான். 

வஜ்ரவேல் நிழல் உலக தாதாவாக வலம் வந்தாலும் அன்று வரை மிருகேனை தனது சட்ட விரோதமான தொழிலுக்கு அவனைப் பயன்படுத்திக் கொண்டதேயில்லை. 

அதனால் கீதாஞ்சலிக்கும் மிருகேனும் எவ்விதமான பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது . சிறு பூசல்களும் விவாதங்களும் ஏற்பட்டாலும் கூட  மிருகேந்திரனே விட்டு கொடுத்து பெண்ணவள் மனதில் தனது காதலை நங்கூரமிட்டு இறக்கினான். 

அளவிற்கு அதிகமாக அவன் மீது கொட்டிக் கிடந்த காதல் தான் சிறு சிறு பூசலுக்குமே  வழி வகுத்தது. 

கீதாஞ்சலி தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி மிருகேந்திரன் வந்து போய் கொண்டிருந்தான்.

அக்கம் பக்கத்தினர் கீதாஞ்சலியை தவறாக சித்தரித்து பேச ஆரம்பித்து விட்டனர். 

வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததால் வீட்டின் உரிமையாளர் அவளிடம் நேரடியாகவே விஷயத்தை கூறி விட்டார்‌

“இங்க பாரும்மா வயசு பொண்ணு நீ. யாரோ ஒரு பையன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கானாம். பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியறதுல்ல…என்ன நடக்கும் ஏது நடக்கும்னே தெரியது. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்க வீட்டு ஆளுங்களுக்கு நாந்தாம்மா பதில் சொல்லணும். ஏதாவது ஒரு முடிவு செய். ஒண்ணா அந்த பையனையே கல்யாணம் பண்ணிட்டு புருஷன் பொஞ்சாதியா அந்த வீட்டுல இருங்க. இல்லன்னா வீட்டை காலி பண்ணி கொடுத்துட்டு போங்க…நல்லா யோசிச்சு முடிவு பண்ணு.. எனக்கு பணத்தை விட மானம் மரியாதை தான் முக்கியம்…அடுத்த வாரம் வர்றேன்…நல்ல முடிவா யோசிச்சு சொல்லு…இல்லன்னா நான் வேற ஆளுங்களுக்கு வீட்டை வாடகைக்கு விடணும்.” என்று கூறி விட்டுச் சென்றார்‌.

யோசனையுடன் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.

இன்னும் சில தினங்களில் அவள் காவலர் பயிற்சி மையத்தில் சேர வேண்டும். அதற்க்கான போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக  வந்திருந்தாள்.

அங்கு சேர்ந்து விட்டால் அடிக்கடி மிருகேந்திரனை சந்திக்க முடியாமல் போகும். 

அவனுடன் நேரத்தை செலவிட முடியாது. அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்க வேண்டும் . 

அவனது அடர்ந்த கேசத்தில் விரல் நுழைத்து விளையாடி அவனை ரசித்து அவனது ஸ்பரிசத்தை உள் வாங்கிக் கொள்ள வேண்டும். 

அவளது காதல் சற்று வித்தியாசமானது தான். தனது உணர்வுகளை அவனிடம் காட்டவே மாட்டாள். அவனை மட்டுமே அவளது விழிகள் ஆசையோடு அள்ளிப் பருகி கொண்டாடும். ஏனோ விதி வசத்தால் அவளது முரண்பட்ட காதலை மிருகேந்திரன் உன்னிப்பாக கவனிக்கத் தவறினான்.

வீட்டு உரிமையாளர் அவளிடம் பேசியதை  அசைப்போட்டுக் கொண்டிருந்தவளருகே வந்தமர்ந்தான் மிருகேந்திரன்.

“ என்ன மாமி…அமைதியா நகத்தை கடிச்சிண்டு உக்காந்திருக்கேள்…என்ன பலமான யோசனை?”

“ ம்ம்ச்…சும்மா இரு மிருகேன்…” என்று சலித்துக் கொண்டாள்

“ என்ன டி…என்னாச்சு?” என்றவன் அவளது பட்டுக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்

சட்டென்று அவன் புறம் திரும்பி அவனது முகத்தை தனது  இரு கரங்களால் தாங்கியவள் அவனது கூரிய விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “ கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள்.

“ ஏய்…! என்ன விளையாடுறியா? ஜோக் பண்ணாத கீது குட்டி…” என்று அவளது நெற்றி முட்டினான்.

“ பீ சிரீயஸ்…மிரு…நான் உண்மையா தான் சொல்றேன். எப்படியும் கல்யாணம் பண்ணிக்க போறோம்ல . அதை இப்பவே பண்ணிக்கிட்டா என்ன?”

“ ஹலோ…! மேடம் நீங்க இப்ப டிரெயினிங் ல சேரப் போறீங்க…உங்களுக்கு அது கொஞ்சமாவது நியாபகம் இருக்கா?”

“ நல்லாவே நியாபகம் இருக்கு..மிரு. . ட்ரெயினிங் போயிட்டா..அப்பறம் உன்னை அடிக்கடி பார்க்க முடியாது…உன் கிட்ட பேச முடியாது…எனக்கு என்னவோ உன் கூடவே…உன்னை ஃபீல் பண்ணிட்டே இருக்கணும் போல இருக்கு டா…ப்ளீஸ்…அடுத்த வாரமே கல்யாணம் பண்ணிக்கலாம் …முடியாதுன்னு சொல்லி என்னைய கஷ்டப்படுத்தாதே…” என்று மிருகேனின் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

யோசனையுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“நான் சொன்னா நீ கேப்ப தானே…எப்படியிருந்தாலும் நாம ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்..அதை இப்பவே பண்ணிக்கிட்டா தப்பில்லையே…”

“ இப்ப ஏன் இவ்வளவு அவசரப்படுற கீது…? கொஞ்ச நாள் போகட்டுமே…நீயும் கொஞ்சம் லைஃப்ல செட்டில் ஆகு. நானும் வஜ்ரவேல் அய்யாவோட பிசினஸை இப்ப தான் கையில எடுத்திருக்கேன். அதை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி செட்டில் ஆகிடுறேன்‌. . அதுக்கப்பறமா கல்யாணம் பண்ணிக்கலாமே…” என்றபடி  அவளது கரங்களை பிடித்துக் கொண்டேன்.

“ ம்ம்ச்..” என்று அவனது கரங்களை உதறித் தள்ளியவள் , “ என்ன பிரச்சினை உனக்கு இப்ப? எதுக்காக இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்ற? நீயும் இப்ப நல்ல நிலையில் தான் இருக்க…நானும் நல்ல வசதியான வீட்டு பொண்ணு தானே…அப்பறம் என்ன பிரச்சினை உனக்கு? ஓஹோ….. இப்படியே காதலிச்சிட்டு கழட்டி விட்டுடலாமன்னு யோசிச்சிக்கிறியா? அதான் நடக்காது… அப்படி ஏதாவது ஒரு எண்ணம் உன் மனசுல இருந்தா அதை அழிச்சிடு…சொல்லிட்டேன். நானா நீ வேண்டாம்னு சொன்னா தான் நீ விலக முடியும்…” என்று ஆத்திரத்தில் படபடத்தாள். 

ஏனோ சொல்ல முடியாத தவிப்பு அவளுள் இருந்து ஆட்டிப்படைக்கவே அதையும் கோபமாகமவே மிருகேந்திரனிடம் காட்டினாள்.

இடுப்பில் கை வைத்து சலிப்புடன் இரு புறமும் தலையை ஆட்டியவன்,”  என்ன ஆச்சு உனக்கு கீது? ஏன் தேவையில்லாம பேசிட்டு இருக்க….நான் உன்னை விட்டுடுவேன்னு பயப்படுறியா?” என்று அவளது முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்குமாறு செய்தான்.

கலங்கத் தொடங்கியது அவளது விழிகள்.

அவளது இமைகளில் மெல்ல முத்தமிட்டு தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்

அவனது பரந்த மார்பில் தலையை வைத்திருந்தவளுக்கு அவனது இதயத்துடிப்பு தெளிவாகக் கேட்டது. 

அதனைக் கேட்டு புன்னகைத்தவள் அவனது அணைப்பில் இருந்து கொண்டே,“ கல்யாணம் பண்ணிக்கலாமா? இதை விட ஒரு பொண்ணு கெஞ்ச முடியாது டா‌. சொல்லு மிரு….” என்றாள்.

அவளது தலையை வருடியபடி , “ம்ம்…” என்றான்.

“ என்ன ம்ம்…? சரி பண்ணிக்கலாம்னு வாயயைத் திறந்து சொல்லேன் மிருகேன்.” என்றாள் பிடிவாதமாக.

“ சரி கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றான்.

வெடுக்கென்று தலையை மட்டும் வேகமாக அவன் மார்பில் இருந்து தலையை மட்டும் நிமிர்த்தி பார்த்தவள்,  “நிஜமாவே வா?” என்றாள் விழிகளை அகல விரித்து.

அவளை கோபமாக முறைக்க முயன்று தோற்றவன் வசீகரிக்கும் புன்னகையுடன், “நிஜமாவே தான் …ஆனா..உங்க அப்பா?” என்றான் கேள்வியாக ..

“ம்ம்ச்..சொல்லிக்கலாம்…” என்று கூறி கண் சிமிட்டினாள்.

அடுத்த ஒரு வாரத்தில் வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலில் கீதாஞ்சலியின் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான்மிருகேந்திரன்.

 கீதாஞ்சலி ருத்ரேந்திரனாக இருந்தவள்  கீதாஞ்சலி மிருகேந்திரனானாள்.

தன்னவன் அணிவித்த பொன் தாலியை கையில் எடுத்துப் பார்த்தாள் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top