வேங்குழல் 13

யாதவ் செந்தாழினியின் தவிப்பு புரியாமல் அவளை தனக்குள் இழுத்து சேர்த்து அணைத்தான். அவன் அணைப்பிலும் மூச்சுக்காற்றிலும் செந்தாழினியின் தேகம் தகித்தது, கூடவே எப்போதும் அவன் சொல்லும் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன.

 

‘ஆத்தி இவன் செய்யறதெல்லாம் செஞ்சுட்டு, நீ ஏன் என் பக்கத்துல வந்தேன்னு கேப்பானே. இதுக்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது” என்று நினைத்தவளாக, அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக விலகி ஓடினாள்.

 

இப்போது யாதவன் புன்னகையோடு, அவளை துரத்தினான். “ராதி நில்லுடி” என்றபடி அவள் பின்னால் ஓடினான். அவள் ஓட இவன் விரட்ட இருவரும் மீண்டும் துளசி வனத்திற்குள் நுழைந்து விட்டனர். மீண்டும் தங்களை மறந்தவர்கள் அந்த வனத்தில் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். அவர்கள் பின்னால் ஜோடி ஜோடியாக இருந்த துளசி மரங்களும் ஓடி வந்துக் கொண்டிருப்பதை அவர்கள் முதலில் உணரவில்லை.

 

கைக்கு சிக்காமல் மான்குட்டியாக துள்ளி ஓடிக் கொண்டிருப்பவளை தன் கையில் சிறைப்பிடிக்க எண்ணி திட்டம் போட்டு அங்கிருந்த மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டான் யாதவ் கிருஷ்ணா. தன் பின்னால் யாதவ் வராததை கண்டு குழப்பத்தோடு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவள் அப்போது தான் கவனித்தாள் அங்கே இருந்த மரங்களும் நகர்ந்து வருவது போல தோன்றியது. கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தாள் மரங்கள் எல்லாம்  அவளை நோக்கி வருவது போல தோன்றவும் பயந்து போனவள், “யாதவா” என்று கத்தினாள்.

 

அவன் மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டு அவளை எட்டிப் பார்த்து கள்ள சிரிப்பு சிரித்தான். ஆனால் செந்தாழினி கண்ணை கசக்கி கொண்டு அழ ஆரம்பிக்கவும், அவளருகே வந்தவன், “ராதி, ஏன்டி அழறே” என்றபடி அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தான். அவளும் அங்கே நகர்ந்து வந்து கொண்டிருந்த துளசி மரங்களை காட்டி “இதுங்களை பார்த்து பயமா இருக்கு யாதவா” என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

 

“அவ தான் பயமா இருக்குனு சொல்றா இல்ல, அவளுக்கு பிடிச்சது போல வாங்க” என்றான். செந்தாழினிக்கு ஒன்றுமே புரியவில்லை, இவனுக்கு என்ன கிறுக்கு பிடிச்சு போச்சா என்பது போல அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

 

“பின்னாடி திரும்பி பார்” என்றான். அவளும் மெல்ல திரும்பி பார்த்தாள், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் அவள் மனம் துள்ளியது.

 

அங்கே ஆண்களும் பெண்களும் விதவிதமான நிறங்களில் புத்தாடை அணிந்து மலர் மாலை அணிந்து கையில் தண்டி எனப்படும் குச்சிகளை வைத்துக் கொண்டிருந்தனர்.

 

“ஆரம்பிக்கலாமா?” என்று எல்லாரையும் பொதுவாக பார்த்து கேட்டான்.

 

எல்லாரும் கோரசாக “காத்திருக்கிறோம்” என்றனர். தன் மார்பில் சாய்ந்திருந்தவளை பார்த்து “நம்ம ராச லீலாவை பார்க்கிறதுக்காக காத்திருக்காங்க ராதி, தொடங்கலாமா?” என்றான் ஆழ்ந்த குரலில். அவனின் ஆழ்ந்த பார்வையும் பேச்சும் செந்தாழினியை யோசிக்க விடாமல் மயக்கத்தை கொடுத்து தலையசைக்க வைத்தது.

 

அவர்களிடமிருந்து நான்கு குச்சிகளை வாங்கியவன், அவளிடம் இரண்டை கொடுத்துவிட்டு, மற்ற இரண்டு குச்சிகளை தன் இரு கைகளில் பிடித்தபடி அவளுடையதை தட்டி குறிப்பு கொடுத்தான்.

 

அவ்வளவு தான் தெரியும் அவளுக்கு, அதற்கு பின் இருவரும் சுழன்று சுழன்று ஆடி கொண்டிருந்தார்கள். இப்போது தாண்டியா நடனம் என்றழைக்கப்படும் ராசலீலா நடனம் அங்கே நடந்துக் கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் தங்கள் இணைகளோடு சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டிருக்க, அங்கே கந்தர்வ வனத்தில் இருந்த கந்தர்வர்கள் தங்களின் இசைக் கருவிகளை கொண்டு மனதை மயக்கும் இனிமையான நாதத்தை வாசிக்க, அனைவரும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.

 

கந்தர்வர்கள் மீட்டக் கூடிய அந்த இசை சாதாரண மனிதர்களால் கேட்க முடியாத மீயொலி. அதை காதில் கேட்டாலே அவர்களின் சித்தம் கலங்கி பைத்தியமாகி விடுவார்கள். தினமும் இந்த நடனமும் இசையும் ஆட்டமும் பாட்டமும் நடப்பதால் தான் சாதாரண மனிதர்கள் அங்கே ஏழு மணிக்கு மேல் இருப்பதில்லை.

 

ஆனால் யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியும் தங்களை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். வெகுநேரம் ஆடிய பின்பு மெல்ல களைத்து அங்கிருந்த ஆலமரத்தின் கிளையின் மீது ஏறி அமர்ந்தான் யாதவ் கிருஷ்ணா, செந்தாழினி அவன் அருகில் நின்றபடி அவள் தொடையில் தலைசாய்த்தபடி நின்றிருந்தாள்.

 

கந்தர்வர்களும் கோபியர்களும் அவன் முன்னே வந்து வணங்கினார்கள். 

 

யாதவ் கிருஷ்ணா கந்தர்வர்களை கூர்ந்து நோக்கிய படி செந்தாழினியை கண்களால் காட்டினான். “ராதியை உங்களால் இனம் காண முடியலையா? கந்தவர்வ வனத்தில் என் உருவில் வந்து அவளை நெருங்க பார்த்தது யார்?” என்றான் ஆழ்ந்த குரலில். 

 

“மன்னிக்கவும் மாதவா, நாங்கள் யாரும் அம்மையாரை நெருங்க வில்லை. ஒரு வேளை தங்களின் பூவுடலான யாதவனின் சகோதரனாக இருக்கலாம்” என்றான் ஒரு கந்தர்வன்

 

“சரி அதைப்பற்றி அவன் பார்த்துக் கொள்ளட்டும், இந்த யுகத்தில் என்னுடைய வரத்தை நிறைவேற்றி விட்டேன். சந்தோஷம் தானே?” என்றான்.

 

“நிச்சயமாக! நீங்க ஒவ்வொரு யுகத்திலும் பூலோக உடலில் யார் உருவத்திலாவது எங்களுக்கு காட்சி அளித்து ராசலீலா நடனம் புரிவதாக சொல்லியிருந்தீர்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. எங்களோடே இருந்தால் இன்னும் சந்தோஷம் கொள்வோம்” என்றார்கள் அனைவரும் ஒரே குரலில்

 

“அது முடியாது, யாதவ் கிருஷ்ணா என்பவனுக்கு தனி மனித வாழ்க்கை இருக்கிறது. அவனுக்குள் நான் இருப்பதையோ அவ்வப்போது நான் வெளிப்படுவதையோ அவனால் உணர முடியாது. அவன் வாழ்க்கையில் நான் குறுக்கிட முடியாது. நாளை விடிந்ததும் அவன் என்ன முடிவெடுக்கிறானோ அது அவன் விருப்பம்” என்றான் மாயோன்

 

“புரிந்தது மாதவா, நிதிவன் கோயில் அர்ச்சகர்கள் தினமும் தங்களுக்காக உணவு, ஆடைகள், அணிகலன்கள், படுக்கை என அனைத்தும் கோயில் பிரகாரத்தில் வைத்து விட்டு செல்கிறார்கள். இன்று தங்கள் களைப்பை போக்கி கொள்ள அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றனர்.

 

“சரி” என்று சொல்லிவிட்டு யாதவ் செந்தாழினியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த  பழங்களை அவளுக்கும் கொடுத்து தானும் உண்டான். அங்கே இருந்த ஆடையை எடுத்து அவளிடம் கொடுத்து உடுத்திக் கொள்ள சொன்னான்.

 

காலை நீட்டி தலைக்கு அடியில் கைகளை கோர்த்தபடி படுத்திருந்தவன் ராதையின் ஆடை அலங்காரத்தில் ஜொலித்தவளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான். அவளும் அந்த படுக்கையில் படுத்துக் கொண்டு அவன் நெஞ்சில் கரம் வைத்து அதன் மீது தன் தாடையை நிறுத்தி அவனை தான் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இருவரின் பார்வைகளும் காதல் பாஷைகளை பரிமாறிக் கொண்டிருந்தன. அங்கே இருந்த கோபியர்கள் அவர்களின் வழக்கமான இடத்தில் நின்று கொண்டு துளசி மரங்களாக மாறிவிட்டனர். கந்தர்வர்களும் கிளம்பி விட,  இப்போது இருவரும் தனிமையில் ஒருவரை ஒருவர் ரசித்தபடி இருந்தனர்.

 

அன்றைய இரவு அப்படியே உறைந்து விடாதா என்று அவர்கள் இருவர் மட்டுமல்ல, அங்கே துளசி மரங்களாக நின்றிருந்த கோபியர்களும் ஏங்கினர். ஆனால் காலதேவன் கடமை தவறாமல் சூரிய உதயத்திற்கு உத்தரவிட்டு விட்டான் போலும்.

 

சூரியன் உதயமாக ஆரம்பிக்க அங்கே வெளிச்சம் பரவியது. யாதவ் கிருஷ்ணா தன் கைகளை தலையணை ஆக்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். செந்தாழினி அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி அங்கேயே துயில் கொண்டு இருந்தாள். 

 

அதிகாலையில் கோயிலை சுற்றியிருந்த பகுதியை சுத்தம் செய்ய வந்த அர்ச்சகர் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

“ஐயோ ஐயோ அபச்சாரம் நேர்ந்து விட்டது. பகவானுக்கு போட பட்டிருந்த படுக்கையில் யாரோ இரண்டு பேர் படுத்திருக்காளே. இதை யார்கிட்ட போய் சொல்லுவேன்? என்னனு சொல்லுவேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

 

அவர் தோள் மேல் ஆதரவாக ஒரு கை படவும் திரும்பி பார்த்தார் அர்ச்சகர். பைராகி தான் நின்று கொண்டிருந்தார்.

 

“நீ வருத்தபடற அளவுக்கு எதுவும் ஆகலை. இவா ரெண்டு பேரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதாராணியின் வம்சாவளியில் பிறந்தவங்க. பகவான் தான் கொடுத்த வரத்தை நிறைவேற்ற இவங்களோட உருவத்துல வந்து ராசலீலாவை நடத்தி இருக்காரு.  இவங்களை  இங்கே பார்க்கும் கொடுப்பினை உனக்கு கிடைச்சிருக்கிறதே அதை நினைச்சு நீ பெருமை படணும்” என்றார்

 

“நிஜமா தான் சொல்றீங்களா? கடவுள் மீண்டும் பிறந்து வந்திருக்காரா? இவங்க நிஜமாவே ராதா கிருஷ்ணனா?” என்று வாயை பிளந்தார் அர்ச்சகர்

 

“இவங்க இங்கே இருக்கிற வரைக்கும் தான் ராதா கிருஷ்ணன். இங்கிருந்து வெளியே போனாங்கனா சாதாரண மனுஷங்க தான்” என்றார் பைராகி

 

“புரியல?”

 

“இவங்களுக்கு பதிலா வேற யாரும் இந்த துளசிவனத்துல தங்கி இருந்தா என்னாகியிருக்கும்?

 

“இறந்து போயிடுவாங்க, இல்லைனா பார்வை போயிடும், அதுவும் இல்லைனா பைத்தியம் பிடிச்சுடும், ஒரு வேளை இவங்களுக்கு பார்வை போயிருக்குமா?” 

 

“நிச்சயமா இல்லை. இவங்க இரண்டு பேருடைய பிறப்பும் மகத்தானது. கிருஷ்ணர் ராதை பிறந்த அதே தேதியில் நேரத்தில் பிறந்தவங்க. அத்தோட அவங்களோட வம்சாவளியை சேர்ந்தவங்க. அதனால தான் இவங்களுக்கு ஒண்ணும் ஆகல. 

 

இவங்க இங்கே வந்ததால அவங்க உடலுக்குள்ள இருந்த கிருஷ்ணரோட மரபணு தூண்டப்பட்டு பகவான் போல நடந்துக்கிட்டாங்க. இங்கே இருக்கிற வரைக்கும் அவங்களும் தங்களை கிருஷ்ணா ராதாவாக தான் உணருவாங்க. இங்கே இருந்து போயிட்டா எல்லாமே மறந்து போய் எப்போதும் போல சாதாரண மனுஷங்களா நடமாடுவாங்க”

 

“என்னால நம்பவே முடியல”

 

“சில சமயம் நம்ப முடியாத விஷயங்கள் நடக்கும். நம்பறதும் நம்பாததும் அவரவர் விருப்பம். அவங்களா எழுந்து போகும் வரைக்கும் நீ அவங்களை தொல்லை செய்யாம மத்த வேலையை பாரு” 

 

அர்ச்சகர் அங்கே சயனித்திருந்த இருவரையும் பயபக்தியோடு வணங்கி விட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க கோயிலுக்குள் சென்றார். பைராகியும் இருவரையும் வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

 

சூரிய கதிர்கள் யாதவனின் மேல் விழவும் கண்களை சுருக்கி கொண்டு மெல்ல கண்திறந்தவன், தான் வெட்டவெளியில் ஒரு படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான். கடைசியாக பிரசாதம் சாப்பிட்டு விட்டு கோயில் பிரகாரத்தில் தானே உறங்கினோம், இங்கே எப்படி வந்தோம் என்று யோசித்தவனுக்கு மற்ற எதுவுமே நினைவில் இல்லை. நெஞ்சில் ஏதோ பாரம் இருப்பது போல தோன்றவும் குனிந்து பார்த்தான்.

 

செந்தாழினி அவன் மார்பில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள். அவளுடைய செவ்விதழ்கள் அவன் மார்பை அழுத்திக் கொண்டிருந்தன. அதிர்ச்சியும் கோபமுமாக அவளை திட்ட வாய் திறந்தவன் அப்போது தான் கவனித்தான். அவனுடைய ஒரு கை அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது.

 

நடந்ததை பற்றிய நினைவு சுத்தமாக இல்லாததால் “ஐயோ என்ன நடந்துச்சோ தெரியலையே, அதுவும் கோயில் இருக்கும் இடத்தில்” என்று நினைத்தவன் பதட்டத்தோடு

 

“தாழினி, எழுந்திரி” என்றான்

 

அவளிடம் அசைவில்லை, என்றதும் தன் இருகைளால் அவளை தூக்கி நிமிர்த்தினான். கண்கள் சொருக அவள் மீண்டும் அவன் மார்பில் சாய போனாள்.

 

“ஏய் கும்ப கர்ணி, முதல்ல எழுந்திரிடி” 

 

“போ யாதவா, ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம விடியற வரைக்கும் ஆட்டம் போட்டுட்டு, இவ்வளவு சீக்கிரமா எழுப்பினா எப்படி?” என்று சிணுங்கியபடி அவள் மீண்டும் அவன் மீது சாய்ந்தாள்.

 

அவள் இரவு அவனோடு ஆடிய தான்டியா ஆட்டத்தை பற்றி அரைகுறை நினைவில் சொல்ல, யாதவனுக்கோ அந்த ஆட்டம் வேறாக தோன்றியது. உச்சப்பட்ச அதிர்ச்சியில் தலையில் கைவத்துக் கொண்டான். 

 

“அய்யோ இந்த இடத்துல ஹார்மோன்கள் தறிக்கெட்டு சுரந்தாலும் எவ்வளவு கண்ட்ரோலா இருந்தேன்! தூக்கத்தல என்ன நடந்ததுனே தெரியலயே! கந்தர்வ வனத்துலயே கெத்தா வந்துட்டு, இங்கே வந்து தப்பு பண்ணிட்டேனே! இப்போ அந்த முரளிகிருஷ்ணா முகத்துல எப்படி முழிக்க போறேன்? அவன் யூஸ் பண்ண பொருளையே தொட விடமாட்டானே!

 

இப்போ அவன் காதலிச்ச பொண்ணை நான்… அதற்கு மேல் முரளியோடு செந்தாழினியை வைத்து அவனால் யோசிக்ககூட முடியவில்லை. என்ன நடந்தாலும் சரி, செந்தாழினி இனி அவனுடையவள் என்ற முடிவுக்கு வந்தவனாக, “செந்தாழினி” என்று அழுத்தமாக கூப்பிட்டான்.

 

மெல்ல கண்விழித்தவள், அவன் மேல் தான் படுத்திருப்பதை பார்த்து, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள், அவள் மேலாடை விலகி அங்கே இருக்கும் செழுமை யாதவன் கண்களுக்கு விருந்தாகி கொண்டிருந்தது. இந்த முறை அவன் தன் பார்வையை விலக்காமல் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை உணராதவள் தன் ஆடைகளை அவசரமாக சரி செய்துக் கொண்டே அவன் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்துக் கொண்டாள், “நான் ஒண்ணும் உன் மேல வேணும்னு வந்து படுக்கல. என்னாச்சுனு எனக்கே தெரியல. நீ உன்னோட பழைய ரெக்காடை ஆரம்பிச்சுடாதே யாதவா ப்ளீஸ்” என்றாள்

 

அவன் குறும்புடன் அவளை பார்த்துக் கொண்டே, “பழைய ரெக்கார்டா? என்ன அது?” என்றான்

 

“அதான், தாழினி என் கிட்ட இருந்து விலகி இரு அப்படினு ஒரு டயலாக் சொல்லுவியே” உதட்டை சுளித்தாள்

 

அதை ரசனையுடன் பார்த்துக் கொண்டே, “இனி அப்படி சொல்ல மாட்டேன்”

 

“நிஜமாவா?” என்று கண்களை அகல விரித்தவள், “ப்ச் உனக்கு இந்த காட்டை விட்டு போனா எல்லாம் மறந்துடும். நேத்து சாயந்திரம் கூட நீயா இழுத்து வச்சு முத்தம் கொடுத்துட்டு, நான் தான் உன்னை நெருங்கினதா சண்டை போட்டவன் தானே நீனு” 

 

தாடையை தடவியபடி யோசித்தவன் “அது போகட்டும், நேத்து நைட் என்ன நடந்துச்சுனு உனக்கு நினைவிருக்கா?” என்றான் அவள் கண்களை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு

 

“இல்லையே, ஆனா உடம்பெல்லாம் அடிச்சு போட்டது போல வலிக்குது” என்று உடலை முறுக்கினாள்.

 

தொண்டையை செருமிக் கொண்டு “சரி கிளம்பு போகலாம் இங்கே எதாவது குளம் இருந்தா குளிச்சுட்டு அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்” என்றான்

 

அங்கே இருந்த கந்தர்வர்களால் மனம் தடுமாறாமல் போனாலும் அதன் தாக்கம் செந்தாழினியிடம் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் முந்தைய இரவு இருவரும் தங்களை மறந்து தங்களுக்குள் நெருங்கிவிட்டு இருக்கிறோம் என்று முழுமையாக நம்பினான் யாதவ் கிருஷ்ணா. 

 

இப்போது அவள் மீதான அவன் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் அவளை பிடித்து தான் போனது. ஆனால் முரளி ஆசைப்பட்ட பெண் என்று அவளை தூர நிறுத்த எண்ணினான். இப்போது இருவரும் சங்கமித்த பின்பு அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

 

இருவரும் அங்கிருந்த குளத்தில் குளித்து முடித்து தங்கள் பேகில் இருந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். வழியில் பைராகி எதிர்ப்பட்டு இருவரையும் வணங்கினார். 

 

யாதவ் பதில் வணக்கம் செய்து “ஐயா எங்க இரண்டு பேருக்கும் நேத்து இராத்திரி கந்தர்வ திருமணம் முடிஞ்சது. முறைப்படி கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறோம். இங்கே இருக்கிற கோயில்ல எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?” என்ற யாதவனை அதிர்ந்து போய் பார்த்தாள் செந்தாழினி.

 

“என்ன இவன் இப்படி உளர்றான்? கந்தர்வ திருமணமா? அது எப்போ நடந்துச்சு? என்று வாயை பிளந்தவளுக்கு அப்போது தான் நேற்று மாலை அந்த அர்ச்சகர் சொன்னது அவள் நினைவில் வந்தது. 

 

அவள் உடனே பைராகியை சற்று தனியாக வருமாறு சைகை செய்து அழைத்துச் சென்று “ஐயா நாங்க தெரியாத்தனமா நேத்து ராத்திரி இங்கே தங்கிட்டோம். இவருக்கு கொஞ்சம் மூளை கலங்கிடுச்சு போல, அதை எப்படியாவது சரி பண்ணுங்க” என்று கண்ணீருடன் கைகூப்பினாள்.

 

பைராகி சிரித்துக் கொண்டே “அவருக்கு சித்தம் எல்லாம் கலங்கல அம்மா. நீங்க இரண்டு பேரும் சேரணும்ங்கிறது விதி. உங்க இரண்டு பேருக்கும் என் கையால திருமணம் செய்ய நான் எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்கணும், உங்க திருமணம் முடிஞ்ச பின்னாடி தான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை என்னால நிறைவேற்ற முடியும். என் கடமையை நிறைவேற்றுவதற்கு அருள் புரியுங்க” என்று பதிலுக்கு கைகூப்பினார்.

 

செந்தாழினிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவளுக்கும் யாதவ் கிருஷ்ணாவை பிடிக்கும் தான். அவனை திருமணம் செய்து கொள்ள கசக்குமா என்ன? ஆனால் இங்கிருந்து போனதும் நான் அவன் இல்லைனு சொல்லிட்டா என்ன பண்றது? பலமாக யோசித்தாள்.

 

“நீங்க எதுக்கு யோசிக்கறீங்கனு எனக்கு நல்லாவே புரியுது. அவர் இந்த வனத்துல சில சமயம் வித்தியாசமா நடந்துக்கிட்டாரே அது மட்டும் தான் அவருக்கு நினைவிருக்காது. மத்தபடி சுயநினைவோட தான் உங்களை திருமணம் செய்துக்கறதா சொல்றாரு. நீங்க அவரை மறந்தாலும் அவர் உங்களை மறக்க மாட்டார். உங்களை கைவிடவும் மாட்டார்”

 

ஆனா உங்க இரண்டு பேரையும் சேர விடாம சில துஷ்ட சக்திகள் முயற்சி நடக்கும். அதையெல்லாம் முறியடிச்சி உங்களை சேர்வார் உங்க கணவர்”

 

“அப்ப சரிங்க ஐயா” என்று செந்தாழினி தெளிவான மனதுடன் சம்மதிக்கவும் பைராகி அவர்களை அழைத்துக் கொண்டு பந்திர்வன் காட்டில் இருந்த ராதா கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றார். சன்னதியில் இருந்த மங்கல நாணை எடுத்து அவர் யாதவ் கையில் கொடுக்க, அதை கையில் வாங்கி செந்தாழினியின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட்டான். அங்கிருந்த செந்தூரத்தை எடுத்து அவள் நெற்றியில் திலகமிட்டு செந்தாழினியை தன் மனையாளாக்கி கொண்டான்.

 

கண்கலங்க யாதவ் கிருஷ்ணாவை ஏறிட்டவளை ஒரு தலையசைப்பில் அவளை ஆசுவாசப்படுத்தி அவள் தோள் மேல் கைப்போட்டு தன்னுடன் சேர்த்து நிறுத்திக் கொண்டான். பைராகி இருவரையும் வணங்கி விட்டு அங்கே அணையாமல் எரிந்துக் கொண்டிருந்த பெரிய கொப்பரையை காட்டினார்.

 

அதை வலம் வர சொல்கிறார் என நினைத்து இருவரும் மூன்று முறை வலம் வந்தனர்.

 

“யாதவா, இந்த அக்னி குண்டத்திற்குள் நீங்க இருவரும் இறங்குங்கள், நீங்கள் வந்த வேலையை செய்து முடிக்கும் தருணம் வந்து விட்டது” என்ற பைராகியை பார்த்து தம்பதிகள் இருவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

 

என்ன? அக்னி குண்டத்திற்குள் இறங்கணுமா? ஏதோ குளத்துல இறங்கறது போல சொல்றாரே?

 

“ஹலோ கல்யாணம் பண்ணி வச்ச நீங்களே எங்களை நெருப்பில இறங்க சொல்றீங்க? ஒரு வேளை எங்க இரண்டு பேரையும் பலி கொடுக்க தான் இங்கே கூட்டிட்டு வந்தீங்களா? என்று அலறினாள் செந்தாழினி

 

இப்போது பைராகி தன் இடுப்பில் சொருகி வைத்து இருந்த ஒரு வெட்டு அரிவாளை வெளியில் எடுத்துக் கொண்டு இருந்தார். இருவருக்கும் விழிகள் தெறித்து விழுந்து விடும் போல இருந்தது! 

 

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top