இணை 15

இணை 15

 

வளர்மதி அங்கே நின்றிருந்தவனை கண்டதும் உறைந்து போனாள். அவன் தானா? மூளை சற்று நேரம் வேலை நிறுத்தம் செய்திருந்தது.

 

அவனே தான்! இன்பரசு குரூரத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் வன்மத்தை கண்டவளுக்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டோடியது. அகல விரிந்த கண்கள் இமைக்க கூட மறந்து போனது. தன் கண்முன்னே நிற்கும் நம்பிக்கை துரோகியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஆத்திரம் பொங்கியது. 

 

வளர்மதி தன்னை அடையாளம் காணும் வரை காத்திருந்தான் போலும் அவள் முகத்தில் துவேஷத்தை கண்டதும் திருப்தியுடன் தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டு பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை காதில் வைத்தான்.

 

ஏன் இங்கே வந்திருக்கான்? அண்ணன்களுக்கு தெரியுமா? என்று பார்வையை சுழல விட்டாள். அவர்கள் சாப்பாடு பரிமாறும் இடத்தில் வேலை செய்வது தெரிந்தது.

 

‘இப்போ என்ன செய்றது? அண்ணன்களை அழைக்கலாமா? இல்லை அருகில் நிற்கும் கணவனிடம் சொல்லலாமா? என்னவென்று சொல்வது? வளர்மதியின் திருமணம் ஏற்கனவே இன்பரசுவுடன் ஏற்பாடாகி நிஷாவின் விவகாரத்தினால் தடைபட்டது என்பது ஆர்யனுக்கு தெரியும். இருந்தாலும் அவனிடம் எப்படி சொல்வது?”

 

அவள் பலத்த யோசனையில் இருக்க, அங்கிருந்த சிறுவன் அவள் கையில் இருந்த கிப்ட் பாக்ஸை ஆர்வத்துடன் திறக்க தொடங்கியிருந்தான். அதில் கைப்பேசியை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அதை எடுத்து வளர்மதியின் கையில் திணித்தான்.

 

“கேம் வச்சு தா” என்று மழலையில் மிழற்றினான்.

 

அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போக அவள் கையை பற்றி உலுக்கினான். அதில் சுயஉணர்வை அடைந்தவள் அப்போது தான் தன் கையில் இருந்த கைப்பேசியை பார்த்தாள்.

 

அடுத்த நொடி அது ஒலித்தது. கைபேசியின் திரையில் வளர்மதி இன்பரசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தெரியவும் பதட்டத்துடன் அதை  நிறுத்தினாள், உடனே குறுஞ்செய்தி வந்தது. திரையில் தெரிந்த அறிவிப்பில் ““வாட்ஸ்அப் ஓபன் செஞ்சு பார்த்துட்டு, இந்த நம்பருக்கு போன் பண்ணு” என்று இருந்தது. ஏசி ஹாலிலும் உடல் குப்பென்று வியர்த்தது.

 

“மதி, ஆர் யு ஓகே?” என்ற ஆர்யனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். 

 

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்றான் புருவ முடிச்சுடன். 

 

“ரெஸ்ட் ரூம் போகணும்” என்றாள் மெல்லிய குரலில்

 

“எங்கே இருக்குனு தெரியுமா?” என்று வலது பக்கம் வழி காட்டியவன், “மதி, உன் வீட்டு ஆளுங்க யாரையும் காணோமே, தனியாவா போவே? உனக்கு ஓகேனா  நானும் கூட வரட்டுமா?” என்றான் அக்கறையுடன்

 

“இல்ல நான் போய்ட்டு உடனே வந்துடறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்றவள் வேகமாக ஓய்வறை பக்கம் சென்றாள். சுவர் ஓரத்தில் நின்று தன் கைபேசியில் செழியனுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. 

 

மீண்டும் சிறுவன் கொடுத்த அலைபேசி ஒலிக்கவும், நடுங்கும் விரல்களால் அழைப்பை ஏற்றாள். 

 

“ஹாப்பி மேரேஜ் லைப் வளர்மதி” என்ற இன்பரசுவின் குரலில் உடல் ஒரு முறை நடுக்கத்தில் குலுங்கினாலும் அதை உடனே சமன் செய்து மனதிற்குள் தைரியத்தை வரவழைத்தாள்.

 

“எந்த தைரியத்துல கல்யாணத்துக்கு வந்திருக்க? நீ செஞ்ச காரியத்துக்கு வெக்கமே இல்லாம வந்து நிக்கறியே! ஒழுங்கா என் அண்ணனுங்க கண்ணுல படறதுக்கு முன்னாடி ஓடி போயிடு. இல்லனா இந்த முறை உன்னை உரு தெரியாம ஆக்கிடுவானுங்க” என்றாள்

 

“என்ன கேட்ட? எனக்கு வெக்கமே இல்லையா? நீயே வெக்கங்கெட்டு போய் என்கிட்ட உன்னை காட்டிட்டு வேற கல்யாணத்தை பண்ணிக்கிறே, என்னை கேக்கறதுக்கு உனக்கு என்னடி தகுதி இருக்கு?”

 

“கட்டிக்க போறவன் தானே உன்னை நம்பி நீ கேட்டதை செஞ்சேன். நிறைய பொண்ணுங்க கிட்ட நீ நம்பிக்கை துரோகம் பண்ணியிருக்க. தப்பு பண்ணவன் நீ, நான் ஏன்டா வெக்கப்படணும்?”

 

“அப்படியா? அந்த போன்ல இருக்கற வாட்ஸ் அப்ப தொறந்து பாரு, அதுல நீ எனக்கு அனுப்பின மெசேஜ் போட்டோ எல்லாம் இன்டர்நெட்ல விடறேன். அப்பவாவது உனக்கு வெக்கம் வருதானு பாக்கறேன்” என்றான் நக்கலாக

 

செழியனும் பாண்டியுமாக சேர்ந்து அவளின் அந்தரங்க போட்டோக்களை அழித்து விட்டதாக தானே சொன்னார்கள்? அவசரமாக அந்த போனில் இருந்த செயலியை திறந்து பார்த்தாள். இன்பரசுவுடன் திருமணம் உறுதியான நாளில் இருந்து இருவரும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் மற்றும்  புகைப்படம் என இருக்க அவளுக்கு வியர்த்தது.

 

“ஹலோ லைன்ல இருக்கியா? உன் அண்ணனுங்க போனை உடைச்சு எல்லா போட்டோவைும் அழிச்சிட்டானுங்களே, இதெப்படினு தானே யோசிக்கறே? வாட்ஸ்அப் சேட்டிங் எல்லாத்தையும் என்னோட ஜிமெயில் அக்கவுண்ட்ல பேக்அப் எடுக்கறது வழக்கம். ஜெயில்ல இருக்கும் போது உனக்கு கல்யாணம் ஆகலனு கேள்வி பட்டேன். ரிலீஸ் ஆனதும் உன்னை எப்படியாவது சமாதானம் செஞ்சு கல்யாணத்தை பண்ணி உன்னையும் உன் சொத்தையும் அடைஞ்சிடலாம்னு நினைச்சேன். 

 

ஆனா நான் ரீலிஸ் ஆகி ஊருக்கு வந்தப்ப தான் உனக்கு கல்யாணம் ஏற்பாடு ஆயிடுச்சுனு தெரிஞ்சது. நான் ஊர்ல இருந்தா கல்யாணத்துல ஏதாச்சும் கோளாறு பண்ணுவேன்னு என் அம்மாவும் அப்பாவும் என்னை துபாய்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணாங்க. நானும் மனசை தேத்திக்கிட்டு சென்னை ஏர்போர்ட் வரைக்கும் வந்துட்டேன்.

 

புதுசா போன் வாங்கி ஜிமெயில் அக்கவுண்ட் கொடுத்ததும் எல்லாமே திரும்ப லோட் ஆச்சு. நான் வேலை செஞ்ச ஆபிஸ் குரூப்ல இருந்து வந்த மேசெஜ் பாத்தேன். அதுல அந்த கம்பெனியோட முதலாளி ஆர்யனோட ரிசப்ஷன் இன்விடேஷன் வந்திருந்துச்சு. பொண்ணு யார்னு எதேச்சையா பார்த்தா, நம்ம ஆளு!

 

என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே நீ எனக்கு அனுப்பின மெசேஜ் எல்லாம் ஒவ்வொன்னா வந்துச்சு. துபாய் போறதை கேன்சல் பண்ணிட்டு உன்னை பாக்கலாம்னு வந்தேன்”

 

“போறவன் போக வேண்டியது தானே, என்னை பாக்கறதுக்கு எதுக்குடா வந்தே” என்றாள் எரிச்சலுடன்

 

“அரைகுறையா பாத்தத முழுசா பாக்கலாம்னு”

 

“ராஸ்கல், கேவலமா பேசிட்டு இருந்தே, உன்னை கொன்னுருவேன்டா”

 

“நீ என்னை கொல்றதுக்குள்ள உன் மானம் போயிடுமே பரவாயில்லையா? நான் உன்கிட்ட பேசின விஷயத்தை உன் நொண்ணனுங்க கிட்டயோ உன் புருஷன் கிட்டயோ நீ சொன்ன அடுத்த நொடி, உன் போன்ல இருக்கறது எல்லாருடைய போனுக்கும் போகும். உன்னை கட்டியிருக்கானே ஆர்யன் அவனோடது எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம்னு உனக்கு தெரியுமா? அம்புட்டு பெரிய பணக்காரன். அவன் பொண்டாட்டி மானம் காத்துல பறந்தா அவனுக்கு எவ்வளவு அவமானம்?” 

 

“ச்சீ நீ இவ்வளவு கேவலமானவனா? உனக்காக தற்கொலைக்கெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன். அதுக்காக செழியன் அண்ணா என்னை அடிச்சிருக்க கூடாது. கொன்னு போட்டிருக்கணும். இப்படிப்பட்ட நாதாரிய போய் காதலிச்சிருக்கேனே” என்றவளுக்கு தன்னை நினைத்தே அருவெருப்பாக இருந்தது. 

 

செழியனும் பாண்டியும் இன்பரசுவின் தரங்கெட்ட செயல்களை சொல்லி கேள்வி பட்டிருக்கிறாளே தவிர நேரில் அவனின் தரங்கெட்ட பேச்சையோ செயலையோ கண்டதில்லை. திருமணம் முடிவான தேதியில் இருந்து அவளிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவளின் உணர்வுகளை எழுப்பி அவளை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி கெஞ்சி கொஞ்சி அவளிடம் சில புகைப்படங்களை வாங்கினான். அது கூட திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்தது. இவனை பற்றி எந்த வித சந்தேகமும் இல்லை, அதே சமயம் சொந்த அத்தை மகன், வீட்டினர் சம்மதத்துடன் நாளை கணவனாக போகிறவன் என்ற நம்பிக்கையில் அவன் கேட்டதற்கு இசைந்தாள்.

 

அவனுக்குள் ஒரு மிருகம் இருப்பதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. அவன் மிருகம் என்பதை அறிந்ததும் துடித்து போனாள். அதிலிருந்து மீளவே மூன்று ஆண்டுகள் ஆனது. ஜெயில் தண்டனை அவனுக்கு மட்டும் அல்ல, அவளுக்கும் தான்! தகுதியே இல்லாதவனை உருகி உருகி காதலித்ததை எண்ணி தனக்குள் வெந்து தணிந்தாள்.

 

திருமணமே முடிவானாலும் தாலி கழுத்தில் ஏறும் வரை எவனிடமும் அந்தரங்க பேச்சுக்கள் இருக்க கூடாது என்பதை காலம் கடந்து உணர்ந்தாள். இன்பரசுவின் சுயரூபத்தை இன்று தான் நேரில் காண்கிறாள். புரையோடி போய் இருந்த அன்றைய வலி, இன்றும் அதே வலியை கொடுத்தது. 

 

அவள் தவறு செய்து விட்டாள். அதை உணர்ந்தும் விட்டாள். நடந்ததை இனி மாற்ற முடியாது, மறக்கவும் முடியாது. ஆனாலும் கடந்து தானே ஆக வேண்டும்? அவளின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வீட்டினர் மொத்தமும் பாடுபடும் போது அவளால் மறுக்க முடியவில்லை.

 

அவள் செய்த தவறு அவளை மட்டுமல்ல அவளின் குடும்ப மானத்தையும் அல்லவா பாதிக்க போகிறது? இதில் ஆர்யனுக்கு எப்பேர்பட்ட தலைகுனிவு ஏற்படும்? நினைத்தாலே உடல் நடுங்கியது. என்ன செய்ய போகிறான்? எப்படி இதிலிருந்து மீள்வது? தலையே வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு.

 

“என்ன பேச்சே காணோம்? அதிர்ச்சியில மயக்கம் போட்டுட்டியா?”

 

“இப்ப என்ன வேணும் உனக்கு?”

 

“அடேங்கப்பா, நீ எப்போயிருந்து இவ்வளவு ஷார்ப்பா யோசிக்க தொடங்கினே? பட்டணத்துக்கு வந்ததும் அறிவும் அழகும் கூடி போயிருக்கு. ஆளும் மாடர்னா இருக்க, முன்னாடி இருந்தத விட பாக்கறதுக்கு இன்னும் கும்முனு இருக்கே”

 

“கேட்டதுக்கு பதில் சொல்லு, இல்லனா போனை கட் பண்றேன்”

 

“நீ போனை கட் பண்ணா, என்னாகும்னு நான் திரும்பி சொல்ல தேவையிருக்காதுனு நினைக்கிறேன். நான் அடையணும்னு நினைச்ச ரெண்டு விஷயமும் எனக்கு திரும்ப கிடைக்கணும்”

 

“என்ன அது?”

 

“ஒன்னு நீ இன்னொன்னு பணம். உன்னோட பங்கு என் அம்மாவுக்கு கிடைக்கவேண்டிய பங்குனு எல்லா சொத்தையும் கணக்கு போட்டு சொல்றேன். பணமா கொடுத்துடு நான் போய் துபாய்ல செட்டில் ஆயிடறேன்”

 

“பணம் தானே வேணும்? ஏற்பாடு பண்ணி உன் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு நீ நாளைக்கே துபாய்க்கு கிளம்பு”

 

“நான் பணம் மட்டுமா கேட்டேன், உன்னையும் தானே? நான் கடைசியா பார்த்த காட்சி இன்னுமே என் கண் முன்னாடி இருக்கு. உன்னை அடையாம போனதை நினைச்சு ஜெயில்ல ஏங்கிட்டு இருந்தேன். மூணு வருஷமா பெண் வாடையே இல்லாம செத்துட்டு இருந்தேன். நீ எனக்கு பிரஷ்ஷா வேணும். புரியலையா? இன்னைக்கு நைட் உன் புருஷனுக்கும் உனக்கும் எதுவுமே நடக்க கூடாது, நான் சொல்றவரைக்கும் அவன்கிட்ட தள்ளியே இரு, நான் சொல்றப்போ சொல்ற இடத்துக்கு பணத்தோட வந்து ஒரு ராத்திரி மட்டும் என் கூட இரு”

 

“ஒரு வார்த்தை என் அண்ணனுக்கு சொன்னா போதும். உன்னை உரு தெரியாம அழிச்சிடுவானுங்க, உன் மிரட்டலுக்கு எல்லாம் கண்ணை கசக்கிட்டு தலையாட்றவ இல்ல இந்த வளர்மதி” என்றாள் சீற்றத்துடன்

 

“அடேங்கப்பா, சொல்லேன் உன் அண்ணன்கிட்டே, ஒன்னு அவன் சாவான் இல்ல நான் சாவேன். நான் செத்தாலும் அவன் ஜெயிலுக்கு போவான் இல்ல? வரும்போதே ஸ்டேஷன்ல எழுதி கொடுத்துட்டு தான் வந்திருக்கேன். குடும்பத்துல சொத்து தகராறு இருக்கு, என்னை யாராச்சும் கொலை பண்ணா அதுக்கு செழியனும், பாண்டியும் தான் காரணம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். தாராளமா என்னைய கொல்ல சொல்லு. கொன்னுட்டு அவனுங்க ஜெயிலுக்கு போவானுங்க இல்ல? எனக்கு அதுபோதும். நான் சொல்றத நீ செய்யலனா போட்டோவை இன்டர்நெட்ல விடறது மட்டுமில்ல, என்னை காட்டி கொடுத்தாளே என் அருமை தங்கச்சி கனிஇதழி. அவளை கொன்னுட்டு நிம்மதியா இன்னொருக்கா ஜெயிலுக்கு போறேன். ஜெயில் ஒன்னும் எனக்கு புதுசில்ல”

 

அவன் வார்த்தைகளில் வளர்மதிக்குள் எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது. அவன் பேசும் பேச்சிற்கு தன் எதிரில் இருந்தால் அடித்து துவைத்து அவன் குடலை பிடுங்கி எறிந்து, அவன் தலையை காலால் நசுக்கி காளியாக காட்சி தந்திருப்பாள். கோழையாக அலைபேசியில் மிரட்டி கொண்டிருக்கும் பிண்டத்தை என்ன செய்வாள்? 

 

ஓய்வறைக்கு வெளியே அவளை அழைக்கும் குரல் கேட்டது.

 

“மதி, ஆர் யு ஓகே? உள்ளே வரட்டுமா?” கணவனின் அக்கறையான அழைப்பில் இதுவரை அடக்கி வைத்த கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு கன்னங்களில் வழிந்தது.

 

“வரேன்ங்க” என்றவள் கண்ணீரை அவசரமாக துடைத்து அழைப்பை துண்டித்தாள். அந்த போனில் இருந்தவைகளை உடனே அழித்து விட்டு, அதிலிருந்த சிம்கார்டை உடைத்து தண்ணீரில் போட்டு விட்டு, கைபேசியை குப்பை தொட்டியில் வீசியெறிந்தாள்.

 

முகத்தை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். ஆர்யன் அவளையே ஆராய்ச்சியாக பார்த்தான். அவனை நேராக பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். 

 

அவளின் நாடியை ஒற்றை விரலால் நிமிர்த்தி, “என்னாச்சுடா?” என்றான் மென்மையான குரலில். அவன் மென்மையில் உடைந்து போனவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க, “மதி என்னாச்சு? ஏன் அழறே? வயிறு வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போகலாமா?”

 

“ம்ஹூம்” 

 

“ப்ரீயட்ஸா? உன் அண்ணிங்களை கூப்பிடவா?”

 

“அதெல்லாம் இல்ல, உள்ளே யாருமில்லனு கொஞ்சம் பயந்துட்டேன்” என்றாள் முகத்தை துடைத்துக் கொண்டு

 

“ஆர் யு சூர்?” என்றான் அவள் கண்களை பார்த்து

 

“ம்”

 

“சரி வா, போகலாம்” என்று அவளின் கரம் பற்றி தன்னோடு அணைத்தபடி நடந்தான்.

 

தன்னை பற்றிய முழு உண்மை ஆர்யனுக்கு தெரியுமா? தெரிந்தால் கணவனாக இவருடைய எதிர்வினை எப்படி இருக்கும்? தன் மனைவியின் கடந்த கால காதலையே யாரும் விரும்ப மாட்டார்கள். மாற்றானிடம் தன் மனைவியின் அந்தரங்க புகைப்படம் இருக்கிறது என்று தெரிந்தால் எந்த கணவன் தான் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வான்?

 

குழப்பத்துடன் அவனுடன் நடந்து மேடைக்கு சென்றாள். விருந்தினர்கள் வருவதும் பரிசுகளை வழங்கி செல்வதுமாக இருக்க, கடமைக்கு அவர்களிடம் அதை வாங்கியவளின் பார்வை அந்த வளாகம் முழுவதும் சுழன்றது. இன்பரசு அங்கே இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 

ஆர்யன் வந்திருந்த விருந்தினர்களை வளர்மதிக்கு அறிமுகம் செய்ய நினைத்து அவளை பார்க்கும் போதெல்லாம் அவள் அந்த வளாகத்தில் யாரையோ தேடிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.

 

“யாரை தேடிட்டு இருக்கே?” என்ற ஆர்யனின் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள்.

 

ஏதோ சரியில்லை என்று ஆர்யனுக்கு தெளிவாக புரிந்தது.

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
5 Comments
error: Content is protected !!
Scroll to Top