இணை 14

ஆர்யனின் ஒவ்வொரு செயலும் அவளுக்குள் ஏற்படுத்தும் அதிர்வை அவன் அறியாமல் இல்லை. ஆனால் அவனின் அதிரடியான செயல்கள் மட்டுமே அவளின் கூட்டிலிருந்து அவளை வெளியேறச் செய்யும் என்று நினைத்தான். அவளுக்கு பிடிக்கவில்லை எனில் நிச்சயம் அவள் முகத்தில் அது தெரிந்திருக்கும். மாறாக அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அவள் முகத்தில் அதிர்ச்சியும், உடலில் அதிர்வும் ஒரு பக்கம் தோன்ற, அதற்கு மாறாக அவள் மேனி சிலிர்ப்பதும், கன்னங்கள் சிவப்பதும் அவனை பித்தங்கொள்ள செய்திருந்தது.

 

திருமணம் முடிந்தாலும் இருமனம் இணையும் வரை மகா சங்கமத்திற்கு காத்திருக்க வேண்டும் என்ற அவனின் திட்டம் எல்லாம் அவளின் வெட்க சிவப்பை கண்டதும் மாறி இருந்தது. அவளுள் சங்கமிக்க தவிக்கும் தன்னுடைய வேட்கையை அவளுக்கு உணர்த்த தொடங்கியிருந்தான்.

 

எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள் வளர்மதி. இது பிடிக்கிறதா பிடிக்கலையா என்று அவளுக்கே தெரியாத போது யாரிடம் கேட்பாள்?

 

இருவரும் வீட்டிற்குள் சென்று பூஜையறையில் விளக்கேற்றி விட்டு ஆர்யனின் தாய் பார்வதியின் புகைப்படத்தை வணங்கிய பின்பு, அவனுடைய அறைக்கு அழைத்து சென்றான்.

 

இதற்கு முன்பு வளர்மதி செழியனோடு இதே வீட்டிற்கு வந்த போது ஆர்யன் அவனுடைய அறைக்கு அழைத்து சென்றிருக்கவில்லை. முதன்முறையாக அவனுடைய தனிப்பட்ட அறைக்குள் அழைத்து சென்றான்.

 

அந்த அறையில் வளர்மதியின் பெரிய புகைப்படம் இருக்க, அதை அவள் விழி விரித்து பார்த்தாள். “பொண்ணு பாக்க வந்தப்போ நீ கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்றேன் மதி” என்று அவளின் கரம் பற்றி அறைக்குள் அழைத்து சென்றான். 

 

இப்போது அவளின் கரம் விறைப்புடன் இருப்பதை உணர்ந்தவன் அவள் முகத்தை பார்த்தான். அவள் முகத்திலும் இறுக்கம்.

 

“என்னாச்சு மதி? ஏன் ஒரு மாதிரி இருக்கே?”

 

“இந்த போட்டோ எப்ப எடுத்தது?” என்றபடி அறைக்குள் இருந்த அவளுடைய படத்தை கூர்ந்து பார்த்தாள்.

 

“ஏன் கேக்கறே?” 

 

“மூணு வருஷத்துக்கு முன்னாடி யுகி நிஷாவோட கல்யாண ரிசப்ஷன்ல எடுத்தது தானே?”

 

“ஆமா”

 

“அந்த சமயத்துல உங்களுக்கும் எனக்கும் பெரிசா பழக்கமில்ல தானே? எனக்கு தெரியாம இந்த போட்டோவ எடுத்தது தப்பில்லையா?” என்றாள் அழுத்தமாக

 

“இல்ல, அந்த போட்டாஸை நான் எடுக்கல. கல்யாண ஆல்பத்துல வந்தத யுகி கொடுத்தான். நான் கூட அவனை திட்டி எல்லா போட்டோவையும் அப்பவே டெலிட் பண்ண சொல்லிட்டேன்”

 

“அப்பவே டெலிட் பண்ணிட்டு நீங்க மட்டும் வச்சுக்கிட்டீங்களா?” அவள் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,

 

“மதி, ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ. என் அம்மா உயிரோட இருக்கும் போது எனக்காக பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அவங்க எனக்காக செலக்ட் பண்ண பொண்ணு நீதான். நாங்க உன்னை பொண்ணு பாக்க வர்றதுக்குள்ள உனக்கு வேற இடத்துல நிச்சயமாயிடுச்சுனு சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு. அவங்க போனதுக்கு அப்புறம் நான் ரொம்பவே லோன்லியா பீல் பண்ணிட்டு இருந்தேன்.

 

அப்ப தான் யுகி நிஷாவோட செழியன் வீட்டுக்கு வந்தேன். உன்னை பாத்ததும் எனக்கு ஷாக். உன்னோட கல்யாணம் நின்னுருச்சுனு கேள்வி பட்டதும், நீ எனக்கானவளோனு அப்பவே தோணுச்சு. அம்மா பார்த்த பொண்ணுங்கிற சென்டிமெண்ட் மட்டுமில்ல, உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சிருந்துச்சு.

 

அதை மறைக்காம அப்பவே உன் அண்ணாகிட்ட சொல்லி பொண்ணு கேட்டேன். அவர் தான் நீ மனஅழுத்தத்துல இருக்கே. படிக்கட்டும்னு சொன்னாரு. நானும் உனக்காக மூணு வருஷமா காத்திருந்தேன். இந்த போட்டோவை நான் மறந்தே போயிட்டேன். 

 

இப்போ ரிசப்ஷனுக்கு பேனர் வைக்க உன்னோட போட்டோ தேவைப்பட்டுச்சு. pre wedding photo shoot எடுக்கலாமா? இல்ல நல்ல போட்டோகிராபர அனுப்பி வைச்சா நீயே எடுத்து அனுப்பறீயானு கேட்கறதுக்கு உனக்கு பல முறை போன் பண்ணேன். நீ சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. உன் வீட்டு ஆளுங்க கிட்ட கேட்டா அதெல்லாம் எங்களுக்கு பழக்கமில்லனு சொல்லி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ அனுப்பி வைக்கிறாங்க. என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சுட்டு இருந்தப்போ தான் ஞாபகம் வந்துச்சு. அதுக்கப்புறம் தான் போட்டோவை பிரிண்ட் போட்டு பேனர் அடிக்க சொன்னேன்.

 

உன்னை சர்ப்பரைஸ் பண்ணலாம்னு யோசிச்சு உன் போட்டோவ பெரிசா ரூம்ல வைக்க சொன்னேன். ஆனா இதை பாத்து நீ டென்ஷனாவனு நான் சத்தியமா எதிர்பார்க்கல” என்றான்

 

தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்ததும் வளர்மதிக்குள் சுறுசுறுவென கோபம் வந்திருந்தது. ஆர்யன் அதற்கு கொடுத்த விளக்கம் நம்பும்படியாக இருக்கவே சற்று அமைதியானாள். ஆனாலும் மனம் சமாதானம் ஆகவில்லை.

 

“மதி நான் மூணு வருஷம் உன்னை ஒருதலையா காதலிச்சுட்டு இருந்தேன். உனக்கு தெரியுமா?”

 

அவள் தெரியாது என்பதாய் தலையசைக்க, “உங்க அண்ணனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தறதுக்காக, நான் எந்த வகையிலும் உன்னை நெருங்க முயற்சி பண்ணவே இல்ல. அதனால தான் உனக்கு தெரியல. 

 

நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வியானு உறுதியா தெரியாது. இருந்தாலும் நீ எனக்கானவளா இருந்தா கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும்னு நம்பி காத்திருந்தேன். அது நடந்தும் இருக்கு. இந்த விஷயத்தை நம்மளோட பர்ஸ்ட் நைட்ல உன் மடியில படுத்துக்கிட்டு சொல்லணும்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்படி சொல்ல வேண்டி வரும்னு நினைக்கல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்றான்.

 

“புரியுது. நான் ஒருவேளை கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா என்ன பண்ணி இருப்பீங்க?”

 

“தெரியல மதி, நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் நூறு சதவீதம் நம்பினேன். அத தாண்டி நான் வேற யோசிக்கல. ஆனா எந்த சூழ்நிலையிலயும் இந்த போட்டோஸை தப்பா மட்டும் யூஸ் பண்ணியிருக்க மாட்டேன். மணமேடை ஏறதுக்கு முன்னாடி கூட உனக்கு கல்யாணத்துல சம்மதமானு கேட்டேன், நினைவிருக்கா?”

 

“ம்”

 

“எப்படியாவது உன்னை அடையணும்னு நான் நினைக்கல. ஆனா எப்படியும் நீயும் நானும் சேருவோம்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு”

 

ஆர்யனின் மனது புரிய வளர்மதியின் முகம் தெளிந்தது. 

 

“பங்ஷனுக்கு டைம் ஆயிடுச்சு. நான் போய் குளிச்சுட்டு வரட்டுமா?”

 

மற்ற நேரமாக இருந்தால் ‘நானும் கூட வரட்டுமா?’ என்று கேட்டிருப்பான். இப்போது நேரம் சரியில்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். 

 

வளர்மதி சங்கடமின்றி தயாராகட்டும் என்று அவன் மற்றொரு அறையில் குளித்து தயாராகி வரும் போது வளர்மதியை சுற்றி அவளின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

 

“பாப்பா எப்படிடா இருக்கே? ஏன் முகம் வாடி இருக்கு?” என்று கேட்ட செழியனை பார்த்து மலைத்தான் ஆர்யன்.

 

‘வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம் ஆகல, அதுக்குள்ள எப்படியிருக்கானு விசாரிக்கிறாரே, முகம் வாடியிருக்குனு கரெக்ட்டா பாத்து கேக்கறாரே, மச்சானை பீட் பண்ணி பொண்டாட்டி மனசுல இடம் பிடிக்கிறது அவ்வளவு சுலபமில்லையோ?’

 

“என்னாச்சு மாப்பிள்ளை, பாப்பா முகம் ஏன் டல்லா இருக்கு?”

 

“உங்க பாப்பாவுக்கு இன்னும் பத்து மாசத்துல குட்டி பாப்பா வந்துடும். இன்னும் பாப்பாவா?” என்று கிண்டலடித்தாள் கனிஇதழி

 

“நீ சும்மாயிரு, என் தங்கச்சி பேரன் பேத்தி எடுத்து கிழவியே ஆனாலும் எனக்கு பாப்பா தான்” என்று மனைவியை அதட்டினான் செழியன்

 

“அப்போ இவள என்னனு சொல்லுவீங்க?” என்று தன் இடையிலிருந்த இலக்கியாவை காட்டி கேட்டாள்.

 

“இது என்னை பெத்த ஆத்தா” என்று மகளின் கன்னம் கிள்ளி கொஞ்சிவிட்டு மீண்டும் தங்கையிடம் திரும்பி, “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல பாப்பா” என்றான் அழுத்தமாக

 

“அண்ணா, நேத்து நைட்டும் சரியா தூங்கல, கல்யாணம் முடிஞ்சதும் டிராவல் பண்ணி சென்னை வந்திருக்கேன். மறுபடியும் பங்கஷனுக்கு ரெடி ஆகணும். முகம் டல்லா இல்லாம டாலடிக்குமா?” என்றாள் வளர்மதி

 

“மாப்ள, ரெண்டு நாள் கழிச்சு ரிசப்ஷன் வச்சிக்கோங்கனு நான் அப்பவே சொன்னேன். நீங்க தான் பிசினஸ் அது இதுனு சொன்னீங்க. இப்போ பாத்தீங்களா?” என்றான் செழியன்

 

ஆர்யனோ ‘இதென்னடா வம்பா போச்சு? ஏற்கனவே முறுக்கிட்டு இருக்கா. இவர் வேற ஏத்தி விடறாரே’ என்று மனைவியை பார்த்தான்.

 

“அண்ணா அவர் செஞ்சது கரெக்ட் தானே. எல்லாத்தையும் ஒரே டைம்ல முடிச்சிட்டா ரிலாக்ஸா இருக்கலாம்னு நினைச்சிருப்பாரு” என்று கணவனுக்கு ஆதரவாக பேச

 

“பாத்தீங்களா உங்க தங்கச்சிய? தாலி கட்டி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ளாற புருஷனுக்கு சப்போர்ட் பண்றா” என்று கனிஇதழி கிண்டலடித்து பேச, சற்று முன் இருந்த நிலை மாறி சுமுக நிலைக்கு மாறி இருந்தாள் அவன் மனைவி.

 

“நீ என் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்டயே நடிச்சத விடவா?” என்று வளர்மதி கேட்க, இதற்கு மேல் பேசினால் அவர்களின் குட்டு வெளிப்பட்டு விடும் என்று செழியனும் கனிஇதழியும் அந்த இடத்தை விட்டு சத்தமில்லாமல் நகர்ந்தனர்.

 

“எதைப் பத்தி பேசிட்டு இருக்கே மதி?” என்றான் ஆர்யன் குழப்பத்துடன்

 

“இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கற மாதிரி என்கிட்ட நடிச்சாங்க”

 

“எதுக்கு?”

 

“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு”

 

“மை காட். அவங்க சண்டை போட்டுக்கறாங்கனு தான் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா?” உடனே ஆர்யன் முகம் வாடவும்

 

“இல்ல, அவங்க ரெண்டு பேரும் நடிக்கறாங்கனு எனக்கு அப்பவே தெரியும்” என்றாள் அவசரமாக

 

“அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்சே?”

 

“என்னையும், என்னை பெத்தவங்களையும் விட செழியன் அண்ணா, நான் நல்லா இருக்கணும்னு அளவுக்கு அதிகமாக யோசிக்கறவரு. கனி என்னோட வாழ்க்கைய காப்பாத்த அவளோட வாழ்க்கையையே பணயம் வச்சி என் அண்ணனுக்கு விருப்பமில்லாம அவரை கட்டிக்கிட்டா. இப்படி என்னோட நன்மைக்காகவே அவங்க கல்யாணம் நடந்திருந்தாலும் அவங்களுக்குள்ள உண்மையான காதல் இருந்துச்சு. அந்த காதல்ல நடிப்புக்கு கூட என்னால பிரிவு வரக்கூடாதுனு தான் உடனே சம்மதம் சொல்லிட்டேன்”

 

“என்னை பத்தி உனக்கு எந்த எண்ணமும் இல்ல, அப்படித்தானே?” ஆர்யனின் குரல் பிசிரற்று ஒலித்தது.

 

கணவனாக அவன் ஏமாற்றம் புரிய, “அப்போதைக்கு நான் அவங்களுக்காக சம்மதம் சொன்னது உண்மை தான். ஆனா நீ்ங்க பொண்ணு பாக்க வந்தப்போ உங்க கூட எனக்கு கம்பர்டபிளா பேச முடிஞ்சது. நீங்களும் என்னை மதிச்சு என்னோட சம்மதம் இருந்தா தான் கல்யாணம்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்துச்சு. உங்க கிட்ட முழு மனசோட தான் சம்மதம் சொன்னேன்” 

 

“நிஜமாவா?” என்றான் நம்பாத பார்வையில்

 

“நிஜமா” என்றாள் அழுத்தி

 

“அப்போ நிருபிச்சு காட்டு”

 

“எப்படி நிரூபிக்கிறது?”

 

அவள் முகம் நோக்கி குனிந்தான். முத்தமிடப் போகிறானோ என்று ரெண்டடி பின்னால் நகர்ந்தாள். அவனோ அவளை முத்திடமிட சொல்லி தன் கன்னத்தை காட்டினான்.

 

தொண்டையில் ஏதோ சிக்கியது போல மிடறு விழுங்கியபடி நின்றிருந்தாள்.

 

“எனக்கு தெரியும் மதி, உனக்கு சம்மதம் இல்ல”

 

“சம்மதம் தான்”

 

“அப்போ நிருபிச்சு காட்டு” என்று அவன் மீண்டும் கன்னத்தை காட்ட, மெல்ல நெருங்கி வந்தாள். அவள் இதழ்கள் அவனுடைய கன்னத்திற்கு மிக அருகில் இருக்க, மூச்சு வேகமாக வந்தது. உள்ளே இதயம் பந்தயக் குதிரையாய் ஓட, தவிப்புடன் நின்றிருந்தாள்.

 

நொடிகள் பல நிமிடங்களாக கரைந்தும் அவளிடம் அசைவில்லாமல் போகவே ஆர்யன் பொறுமை குறைந்து அங்கிருந்து நகர முனைய எட்டி அவன் கரம் பற்றி நிறுத்தினாள். கேள்வியாய் அவன் வேகமாக திரும்ப இருவரின் இதழ்களும் ஒன்றையொன்று உரசி கொண்டது.

 

இரு மின்சார கம்பிகள் உரசி கொண்டது போல இருவருக்குள்ளும் தீப்பொறி பறக்க, ஆர்யனுக்கு அதை அணைத்தே ஆகவேண்டு்ம் என்றிருக்க, அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை இழுத்து அவள் இதழ்களுக்குள் தன் இதழ்களை ஆழமாக புதைத்துக் கொண்டான். எத்தனை அடி வரை உள் நுழையமுடியும் என்று ஆழம் பார்ப்பவன் போல மெல்ல மெல்ல அவள் இதழ்களுக்குள் இறங்கி கொண்டிருந்தான்.

 

“ஆர்யா நேரமாச்சு, கிளம்புங்க” என்ற ஆதிசங்கரனின் குரலில் அவள் இதழ்களை மென்மையாக விடுவித்தான்.

 

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனையே அவள் ஆவென்று பார்த்திருக்க, மீண்டும் அவள் இதழ் மீது தன் இதழ்களால் வேகமாக மோதி, அதே வேகத்தில் விலகி அறையை விட்டு வெளியேறினான்.

 

ஆர்யனின் அதிரடி தாக்குதலில் கால்கள் தடுமாற தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள். மீண்டும் ஆர்யன் அறை வாசலில் நின்று எட்டிப் பார்க்க, பதட்டத்துடன் எழுந்து நின்றாள்.

 

“உனக்காக எல்லாரும் கீழே வெயிட் பண்றாங்க மதி” என்றான்.

 

சாவி கொடுத்த பொம்மை போல அவள் நடந்து வரவும் மனதிற்குள் சிரித்தாலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் அவளுக்கு முன் நடந்தான்.

 

அனைவரும் ரிசப்ஷன் ஹாலை அடைந்ததும், கனிஇதழி மட்டும் வளர்மதிக்கு துணையாக மேடையருகே நின்றுக் கொண்டாள்.

 

“நம்ம ரூமுக்குள்ள நடந்ததுல உனக்கு சம்மதமா மதி?” மெல்லிய குரலில் மனைவியிடம் விசாரித்தான் ஆர்யன்.

 

‘மேடைல நிக்க வச்சு இந்த மாதிரி எல்லாம் கேக்கறாரே’ என்று மனதிற்குள் புலம்பியபடி நின்றிருந்தாள்.

 

“உன் சம்மதம் இல்லாம கிஸ் பண்ணதுக்கு ஐயம் சாரி” என்றான். அதற்குள் தொழில்முறை நண்பர்கள் சிலர் மேடைக்கு வந்து பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு நகர்ந்தனர். 

 

வெகுநேரம் அவளிடம் பதில் இல்லாமல் போகவே, “என்னை மன்னிக்க மாட்டியா மதி?”

 

“எதுக்கு மன்னிக்கணும்?” அவன் முத்தத்தை பற்றி பேசுவது புரியாமல் கேட்டாள்.

 

“உன் சம்மதம் இல்லாம கிஸ் பண்ணது தப்பு தானே”

 

‘அத பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்’ என்று நினைத்தவள், “பரவாயில்ல விடுங்க” என்றாள் பெருந்தன்மையுடன்.

 

“நான் வேணும்னு கிஸ் பண்ணல மதி”

 

“புரியுது” என்றவள் ‘கிஸ்ஸ தவிர வேற பேசமாட்டார் போலயே’ என்று முனகி கொண்டாள்.

 

“நீ ஓகே தானே?”

 

“ம்”

 

“ஒரு வேளை வேணும்னே கிஸ் பண்ணி இருந்தாலும் உனக்கு சம்மதமா?”

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் தடுமாறிக் கொண்டு இருக்க, “சொல்லு மதி சம்மதமா? இல்லையா?”

 

“வளரு உன் வீட்டுக்காரர் எதுக்கு சம்மதமானு கேட்டுட்டு இருக்காரு?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் கனிஇதழி.

 

வளர்மதி பதில் சொல்ல முடியாமல் திணற, “சொல்லு மதி கேக்கறாங்க இல்ல?” என்றான் ஆர்யன் குறும்புடன்

 

அவளோ அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்துக் காட்டி, “மோதிரம் மாத்திக்க சம்மதமானு கேட்டேன். உங்க ப்ரெண்ட் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க” என்றான்.

 

கனிஇதழி அண்ணியாய் தன் நாத்தனாரை முறைக்க, “நான் சம்மதம்னு சொல்லறதுக்குள்ள நீ வந்துட்டே கனி” என்றாள்

 

“அப்போ உனக்கு சம்மதமா மதி?” என்றான் ஆர்யன் இடையிட்டு

 

அவன் எதைப்பற்றி கேட்கிறான் என்று புரிந்ததால் வளர்மதி மெளனம் காக்க, “வளரு, கழுத்துல தாலியவே வாங்கிக்கிட்ட, அவர் போடற மோதிரம் போட்டுக்க சம்மதம் சொல்ல மாட்டியா?” கனிஇதழி முறைத்தாள்.

 

“சம்மதம்” என்ற வளர்மதி சட்டென தன் கரத்தை ஆர்யனை நோக்கி நீட்டினாள். அவன் புன்னகையுடன் A என்ற எழுத்து வடிவிலான மோதிரத்தை அவளுக்கு அணிவித்து அவளின் கையில் இதழ்பதிக்க அனைவரும் ஆரவாரத்துடன் ஓசை எழுப்பினார்கள். இப்போது V வடிவில் இருந்த மோதிரத்தை அவளிடம் கொடுத்து தனக்கு அணிவிக்க சொன்னான்.

 

நடுங்கும் விரல்களால் அவன் விரலில் மோதிரம் போட்டு அவள் நிமிர, அவளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

 

அவள் கூச்சத்துடன் விலகி நிற்க, அவளின் காதருகே குனிந்து “நீ சம்மதம் சொன்னதால இந்த முறை வேணும்னு தான் கிஸ் பண்ணேன். அதுவும் சைவம் தான். வீட்டுக்கு போனதும் அசைவம்”

 

“கிஸ்ஸை தவிர வேற பேச மாட்டீங்களா?” என்றாள் பொறுமையிழந்து.

 

“வேற பேச ஆசை தான், அதுக்கும் உன் சம்மதம் வேணும்” என்றான்.

 

இந்த முறை அவள் முறைக்க, “சரி டென்ஷனாகாதே. பிரெண்ட்ஸ் எல்லாம் வர்றாங்க. ரொம்ப கலாய்ப்பாங்க. நீ கண்டுக்காதே” என்றான்.

 

அவன் சொன்னது உண்மைதான். அவனுடன் படித்த கல்லூரி நண்பர்கள் பட்டாளம் எல்லாம் புடை சூழ்ந்து அவனை தூக்கி கொண்டாடினர். அவர்களுக்குள் என்னென்னவோ கிண்டல் பேச்சு வளர்ந்து கொண்டே போக சற்று தள்ளி நின்றாள்.

 

அப்போது அவளின் வெண்ணிற லெகாங்காவை யாரோ பற்றி இழுக்க குனிந்து பார்த்தாள். அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

 

ஒரு கையில் சாக்லெட்டும் இன்னொரு கையில் கிப்ட் கவரும் இருந்தது.

 

“எனக்கா?” என்று குனிந்து சாக்லெட்டை கேட்டாள்.

 

அவன் சாக்லெட் இருந்த கையை தன் பக்கம் இழுத்துக் கொண்டு பரிசை அவளிடம் நீட்டினான்.

 

அதை வாங்கி கொண்டே அவன் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று நிமிர்ந்து பார்த்தாள். யாருமில்லாததால் “யார் இந்த கிப்ட்டை கொடுத்தது?” என்று கேட்க, அவன் திரும்பி கைகாட்டினான்.

 

அவன் காட்டிய திசையில் பார்த்தவளுக்கு பூமியே காலடியிலிருந்து நழுவியது போல இருந்தது.

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top