செழியன் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை ஆதிசங்கரனிடம் நீட்ட, அதை வாங்கி குடித்து விட்டு மீண்டும் பேசினார்.
“அதுக்கப்புறம் எனக்கும் ஆர்யனுக்கும் கல்யாண பேச்சை பத்தி யோசிக்க கூட நேரமில்லாம ப்ராஜெக்ட் வொர்க்கை முடிக்கணும்னு ஓடிட்டு இருந்தோம். பார்வதி கோயிலுக்கு போகணும்னு எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டா. ஆர்யன் வரமுடியாதுனு சொல்லிட்டு, என்னை பார்வதி கூட போக சொன்னான். நானும் வேலையிருக்குனு முடியாதுனு சொல்லிட்டேன். டிரைவர்கிட்ட என் காரை கொடுத்து பார்வதியை கோயிலுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டு, நான் ஆர்யன் கூட கம்பெனிக்கு கிளம்பிட்டேன். கோயிலுக்கு போனவ பொணமா தான் திரும்பி வந்தா” என்றவர் கண்கலங்க ஆரம்பிக்க செழியன் அவரின் கரம்பற்றி அழுத்தினான்.
“கோயில்ல இருந்து வெளியே வரும் போது டிரைவருக்கு போன் பேசிட்டே ரோடை கிராஸ் பண்ணியிருக்கா. பின்னாடி வந்த வண்டி மோதினதுல” என்றவரின் குரல் அதற்கு மேல் எழும்பவில்லை.
செழியன் அவராகவே தெளிந்து வரட்டும் என்று அமைதி காத்தான். சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஆதிசங்கரன் பேச ஆரம்பித்தார்.
“பார்வதி இருக்கிற வரைக்கும் வேலை பிசினஸ்னு ஓடிட்டு இருந்தேன். அவ கூட நான் நேரம் செலவழிக்கறதே இல்லங்கிறது தான் அவளுக்கு பெரிய குறையா இருந்துச்சு. பலமுறை சொல்லி புலம்பியிருக்கா. அவளோட ஏக்கம் அப்போ எனக்கு புரியல. இப்போ தான் புரியுது. அன்னைக்கு அவ கூட நாங்க போயிருந்தா, இந்த ஆக்சிடென்ட் நடந்திருக்காதோனு எனக்கும் ஆர்யனுக்கும் தோணிட்டே இருக்கும். ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தாலும் கடமைக்கு பேசிப்போம். எனக்கு மனைவியை இழந்த சோகம், அவனுக்கு உயிருக்கு உயிரா இருந்த அம்மாவை பறிகொடுத்த வலி.
ரெண்டு ஆம்பளைங்க இருக்கற வீட்ல ஒரு பொண்ணு இல்லாம வீடே வெறிச்சோடி போயிடுச்சு. ஆர்யனுக்கு மனைவினு ஒருத்தி வீட்டுக்கு வந்துட்டா எல்லாம் சரியாயிடும்னு நினைச்சு, பலமுறை அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டு பார்த்துட்டேன். ஆனா அவன் இதுவரைக்கும் என்கிட்ட பிடி கொடுத்து பேசவே இல்லை.
இப்போ சமீபத்துல என்னை சீஃப் கெஸ்ட்டா வரச்சொல்லி என்னோட பார்ட்னரோட காலேஜ்ல இருந்து அழைப்பு வந்துச்சு. ஆனா ஆர்யன் தனியா ஆரம்பிச்சு சக்ஸஸ்புல்லா முடிச்ச ப்ராஜெக்ட்டோட அவுட்புட்டை அவன் பிரசண்ட் பண்ற மீட்டிங் அன்னைக்கு இருந்ததால நான் போகல. அவனோட ப்ராஜெக்ட்டுக்காக தான் நானே காலேஜ்க்கு போகாம இருந்தேன். ஆனா அன்னைக்கு என் சார்பா எனக்கே தெரியாம சிஃப் கெஸ்ட்டா போயிருக்கான்.
அப்பவே எனக்கு யோசனையா இருந்துச்சு. யுகேந்திரன் கிட்ட விசாரிச்சதுல செழியனோட தங்கச்சிய விரும்பறான்னு சொன்னான். எனக்கு அப்போ உங்கள தெரியாது, ஆர்யன விசாரிச்சா அவன் பதில் சொல்லாம மழுப்பிட்டான். இன்னைக்கு நீங்க வீட்டுக்கு வரவும் நீங்க தான் அந்த செழியன்னு தெரிஞ்சுக்கிட்டேன். செழியனோட தங்கச்சி யாருடானு பார்த்தா, என் மனைவி பார்வதி ஆர்யனுக்காக பார்த்த அதே பொண்ணு!
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவ கடைசியா ஆசைப்பட்டு தன் மகனுக்கு கட்டிவைக்கணும்னு நினைச்ச அதே பொண்ணை தான் ஆர்யன் விரும்பறானா? இதெல்லாம் எப்போ? எப்படி நடந்துச்சுனு ஒரே குழப்பமா இருக்கு. அதே சமயம் சந்தோசமாவும் இருக்கு.
எது எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் மட்டும் நடந்துட்டா, என் மனைவியோட ஆசை நிறைவேறிடுச்சுங்கிற நிம்மதியோட நான் பேர புள்ளைங்களை பாத்துக்கிட்டு இருந்துடுவேன்” என்றார் ஆதிசங்கரன்.
ஆதிசங்கரன் சொன்ன விஷயங்களை கேட்டு செழியனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. வளர்மதி இந்த வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என்பது தான் விதியா? இல்லையென்றால் சம்மந்தமே இல்லாமல் ஆர்யன் எதற்காக செழியன் வீட்டிற்கு வரவேண்டும்? அங்கே வளர்மதியை சந்திக்க வேண்டும்? ஆர்யனின் மூன்று வருட பொறுமையான காத்திருப்புக்கு காரணமும் புரிந்தது.
ஆர்யனோடு செழியனின் வீட்டு பெண்கள் மாடியிலிருந்து படியிறங்கி வந்தனர். ஆர்யனுக்கு அருகே இறங்கி வரும் வளர்மதியை பார்த்து ஆதிசங்கரனின் கண்கள் பளபளப்பதை செழியன் கவனிக்க தவறவில்லை.
“அண்ணா கிளம்பலாமா?” என்றபடி வளர்மதி செழியன் அருகே வரவும், “ஆர்யனுக்கு நன்றி சொல்லிட்டியா?” என்றான் அண்ணன்
இல்லை என்று அவள் மறுப்பாக தலையாட்டவும் ஆர்யனுக்கு எதுவும் புரியவில்லை. கேள்வியாக செழியனை பார்த்தான்.
“தங்கச்சிங்களுக்கும் எம்.பி மகனுக்கும் காலேஜ்ல ஏதோ பிரச்சனை ஆயிடுச்சாமே, அந்த விஷயத்துல நீங்க உதவி செஞ்சதை சொன்னாங்க. அதான் நேர்ல பாத்து நன்றி சொல்லணும்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்”
“எதுக்கு செழியன், நன்றியெல்லாம் சொல்லி என்னை ஒதுக்கி வைக்கறீங்க? நான் இருக்கற தைரியத்துல தானே காலேஜ்ல உங்க தங்கச்சிங்களை விட்டுட்டு போறதா சொன்னீங்க? இதை கூட செய்யலனா எப்படி?” என்று ஆர்யன் கேட்க, வளர்மதியும் அகல்விழியும் இதெல்லாம் எப்போ நடந்தது என்று புருவம் சுருக்கினார்கள்.
செழியன் வளர்மதியை அழுத்தமாக பார்க்க அண்ணன் பார்வையின் அர்த்தம் உணர்ந்து அவள் ஆர்யன் எதிரே சென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் முறையாக நேருக்கு நேர் அவன் கண்களை பார்க்கிறாள்.
ஆர்யனின் கண்கள் அவளின் கண்களை கவர்ந்திழுக்க சட்டென தலையை குனிந்தபடி, “உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று இருகரம் கூப்பினாள்.
முதன்முறையாக தன்னவள் தன்னை பார்த்ததுமில்லாமல் அவனிடம் பேசவும் செய்கிறாளே என்ற உற்சாகத்தோடு ஆர்யன் தன்னை மறந்து அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் அழுத்தமாக பார்த்திருந்தான்.
மற்றவர்களுக்கு அது சங்கோஜத்தை தர ஆதிசங்கரன் பலமாக செருமினார். சுயஉணர்வுக்கு வந்தவன் தலையை கோதுவது போல தன்னை சமநிலை படுத்திக் கொண்டு, “செழியன் முதல்முறையா குடும்பத்தோட வந்திருக்கீங்க, சாப்பிட்டு தான் போகணும்” என்று சமையல்காரரை அழைத்தான்.
“இல்ல ஆர்யன், நீங்க தான் முதல்ல எங்க வீட்டுக்கு வரணும். நான் உங்களுக்கு போன் பண்றேன். உங்கப்பாவையும் அழைச்சுட்டு வாங்க, நீங்க முதல்ல எங்க வீட்ல விருந்து சாப்பிடுங்க, அப்புறம் நாங்க சாப்பிட்டுக்கறோம்” என்றான் பூடகமாக
ஆதிசங்கரனுக்கு புரிந்தது, ஆனால் ஆர்யனுக்கு புரியவில்லை. “நாங்க உங்க வீட்ல சாப்பிட்டா தான் நீங்க சாப்பிடுவீங்களா? அதென்ன கணக்கு?” என்றான்.
“அது அப்படி தான் ஆர்யன், உங்கப்பாகிட்ட வேணும்னா கேளுங்க” என்றான் செழியன்
ஆதிசங்கரனும் ஆர்யனை பார்த்து ஆமோதிப்பாக தலையசைக்க, எதுவும் புரியாமல் நின்றிருந்தான். வளர்மதியோடு சேர்ந்து உணவு உண்ணும் வாய்ப்பை இழக்க போகிறான். அவளும் கல்லூரி முடிந்ததால் இன்றோடு ஊருக்கு சென்று விடுவாள். மறுபடியும் அவளை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினால் நன்றாக இருக்கும். அதை தன் நினைவு பெட்டகத்தில் வைத்துக் கொள்வான். இதுவரை அவளிடம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள அவகாசமே கிடைக்கவில்லை. இத்தனை வருடங்களாக அவளுக்காக காத்திருந்தது எல்லாம் வீணாகிவிடுமோ?
ஆழ்ந்த யோசனையில் இருந்த ஆர்யனின் தோள் பற்றி அழுத்தினான் செழியன். ஆர்யன் திரும்பி செழியனை பார்க்க அவன் பார்வையில் எனக்கு கொடுத்த வாக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி இருப்பதாக செழியனுக்கு தோன்றியது.
பதில் சொல்லாமல் ஆர்யனின் தோள்மேல் கைப்போட்டுக் கொண்டு, “கனி தங்கச்சிங்களை கூட்டிட்டு ஜீப்ல ஏறு, நான் பின்னாடியே வரேன்” என்றான்.
அவர்கள் சென்றதும், “ஏன் மாப்பிள்ளையோட முகம் வாடியிருக்கு, மாமா” என்று ஆதிசங்கரனை பார்த்து கேட்டான்.
அவரோ சத்தமாக சிரிக்க, “மாப்பிள்ளையா?” ஆர்யன் திகைப்புடன் கேட்டான்.
“என் தங்கச்சிய கட்டிக்க போறவர் எனக்கு மாப்பிள்ளை தானே”
“செழியன் என்ன சொல்றீங்க? எப்போ இந்த முடிவ எடுத்தீங்க? மதி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களா?” என்று ஆச்சர்யத்துடன் கேள்விகளை அடுக்கினான்.
“வளர்மதிக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கும் போது உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும், மத்தபடி வளர்மதியோட விருப்பம் தான்னு இவ்வளவு நாளா நினைச்சுட்டு இருந்தேன். கொஞ்ச முன்னாடி மாமாகிட்ட பேசி முடிச்சப் பொறவு தான் என்ன ஆனாலும் சரி வளர்மதிக்கு ஆர்யன் தான்னு முடிவு பண்ணிட்டேன். பாப்பாவ சமாளிக்கிறத நான் பாத்துக்கறேன்”
“அப்பா உங்ககிட்ட அப்படி என்ன சொன்னாரு?” என்றவன் தந்தையை எச்சரிக்கையாக பார்த்தான். அவரோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல அழைப்பே வராத கைபேசியில் யாரிடமோ பேசுவது போல அங்கிருந்து அகன்றார்.
ஆர்யன் பதிலுக்காக செழியனை பார்க்க, “உங்க அம்மா உங்களுக்கு பாத்து முடிவு பண்ண பொண்ணு வளர்மதினு சொன்னாரு. அதனால தான் வளர்மதிய எங்க வீட்ல வச்சு பாத்த அந்த நிமிஷத்துலயே உங்களுக்கு பிடிச்சு போச்சு. அம்மாவோட ஆசைய நிறைவேத்தறதுக்காக மூணு வருஷமா காத்திருக்கீங்கனு புரிஞ்சுக்கிட்டேன் ஆர்யன்”
“அம்மாவோட ஆசைய நிறைவேத்தறதுக்காக மட்டும்னு சொல்லிட முடியாது செழியன். அதுவும் ஒரு முக்கிய காரணம்னு வேணும்னா சொல்லலாம். அம்மா இருக்கும் போது காட்டின போட்டோவுல வளர்மதிய எனக்கும் பிடிச்சுருந்துச்சு. சம்பந்தம் தட்டி போனதால அந்த நினைப்பை கடந்து வந்துட்டேன். அம்மா எங்களை விட்டு போன அதிர்ச்சியில இருந்து மீளவே முடியாம இருந்தப்போ தான் மாறுதலுக்காக யுகி நிஷாவோட உங்க ஊருக்கு வந்தேன்.
என் அம்மா எனக்கு பார்த்த அதே பொண்ணை உங்க வீட்ல பாத்ததும் ஷாக் ஆயிட்டேன். அவங்க குழந்தையோட குழந்தையா நாலுகால்ல நடந்து வந்தப்போ அவங்க கழுத்தை கவனிச்சேன். அவங்க கழுத்துல தாலி இல்லாததால கல்யாணம் நடக்கலங்கிறத உறுதி செஞ்சுக்கிட்டேன். அப்பவே உங்க கிட்ட இது விஷயமா பேசனும்னு தான் இருந்தேன்.
ஆனா வளர்மதிக்கு ஏற்பாடு பண்ணியிருந்த மாப்பிள்ளை இன்பரசு தான்னும், கல்யாணம் நின்னதுக்கு காரணம் நிஷாவுக்கு இன்பரசு செய்த துரோகம் தான்னும் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த சூழ்நிலையில என் விஷயத்தை பேச விரும்பல. ஆனா என் அம்மா மருமகளாக்கி தன் வீட்ல வாழ வைக்கணும்னு ஆசப்பட்ட பொண்ணை நான் மறுபடியும் சந்திக்க சந்தர்ப்பம் அமையுதுனா அவ எனக்காக பொறந்தவனு தோணுச்சு.
அம்மாவோட கடைசி ஆசைக்காக மட்டும் நான் வளர்மதியை கட்டிக்க நினைக்கல. எனக்கு அவளை புடிச்சு இருந்துச்சுங்கிறது தான் நிஜம். இந்த மூணு வருஷத்துல எந்த பொண்ணுங்க மேலயும் நாட்டம் வரல. யாராவது ஜோடியா என் முன்னாடி போனா நானும் வளர்மதியும் கூட இப்படி தான் இருக்கணும்னு நினைச்சுப்பேன்” என்று ஆர்யன் தன் மனதிலிருப்பதை மொத்தமாக கொட்டி விட்டான்.
செழியன் ஆர்யனை ஆரத்தழுவிக் கொண்டான். “என் தங்கச்சிக்கு உங்களை விட நல்ல மாப்பிள்ளைய என்னால கொண்டு வர முடியாது. சீக்கிரமே வீட்ல பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன். மாமாவ கூட்டிட்டு பொண்ணு பாக்க வந்திடுங்க”
“வளர்மதி” என்றான் கேள்வியாக
“அவளை சமாளிக்கிறது என் வேலை, நான் பாத்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்ற செழியனை இறுக அணைத்துக் கொண்டான் ஆர்யன்.
செழியன் குடும்பம் கிளம்பி சென்றதும் ஆதிசங்கரன் மகனிடம் வந்தவர், “உன் அம்மா பாத்த பொண்ணை கட்டிக்கிறதுக்காக தான் இத்தனை நாளா கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியா? இந்த விஷயத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா எப்பவோ கல்யாணத்தை நடத்தி முடிச்சிருப்பேன். இந்நேரம் பேரனோ பேத்தியோ பொறந்திருக்கும்” என்றார் ஆற்றாமையுடன்
“உங்க கிட்ட நான் முன்னாடியே பேசியிருந்தா உங்களுக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு வந்திருக்கும். கல்யாணம் நடக்காம போயிட்டா உங்களுக்கு மனவருத்தம் தான் மிஞ்சும். அதனால தான் உங்க கிட்ட சொல்லாம இருந்தேன்”
“சரி புரியுது, செழியன் உறுதியா பேசிட்டு போறத பாத்தா சீக்கிரமே கல்யாணம் முடிஞ்சிடும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. இப்பவாவது சொல்லு கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கட்டுமா?”
“வளர்மதி சம்மதம் சொல்றவரைக்கும் கொஞ்சம் பொறுங்கப்பா”
“செழியன் தான் அவர் தங்கச்சியை சம்மதிக்க வைக்கறது அவரோட பொறுப்புனு சொல்லிட்டாரே, அப்புறமென்ன?”
“அது அவ்வளவு சுலபம் இல்லப்பா” என்றவனை திகைப்போடு பார்த்தார்.
“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அந்த பொண்ணுக்கு கசக்குமா என்ன?”
‘என்னை மட்டும் இல்ல, யாரையும் கல்யாணம் பண்ணிக்க அவ அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டா’ என்று மனதிற்குள் மிக சரியாக வளர்மதியை கணித்திருந்தான்.
அவன் கணித்தது சரி தான் என்பது போல அடுத்த பதினைந்தாவது நாள் வளர்மதி ஆர்யனை சந்திக்க அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
(தொடரும்)