செழியன் ஆதிசங்கரனிடம் தன்னையும் தன் குடும்பத்தினரையும் அறிமுகம் செய்துக் கொண்டு தன் தொழிலை பற்றி விவரித்துக் கொண்டு இருக்க, ஆர்யன் செழியன் அருகில் அமர்ந்தபடி வளர்மதியை நேருக்கு நேர் அழுத்தமாக பார்த்திருந்தான்.
இளம் பச்சை நிற பாவாடை சட்டையும் அடர்பச்சையில் தாவணியும் அணிந்து எந்த அலங்காரமும் இல்லாமல் இருந்தாள். அவளின் இதழ்களோ சிவந்திருக்க, கண்ணின் கருவிழிகளோ அவனை நேராக காண்பதை தவிர்க்கும் விதமாக இங்கும் அங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. தாவணியின் நுனியை கைவிரல்களால் முடிச்சிடுவதும் அவிழ்ப்பதுவுமாக இருந்தாள். கால்விரல்களோ தரையில் அழுத்திக் கொண்டிருந்தது. தன் பார்வையால் தான் இந்த பரிதவிப்பு என்று புரிய ஆர்யனின் மனதிற்குள் இளஞ்சாரல் வீசியது.
கனிஇதழி கணவனின் பேச்சில் ஆழ்ந்திருக்க, அகல்விழியோ அண்ணன் மகள் இலக்கியாவுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். முதன்முறையாக எந்தவித தடங்கலுமின்றி வளர்மதியை ஆர்யன் அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருக்க, அவளுக்கோ தர்மசங்கடமாக இருந்தது. ஆர்யனின் பார்வை தன் மேல் இருக்கிறதா என்று அவளுக்கு சர்வநிச்சயமாக தெரியவில்லை. ஆனால் அவன் முன்னால் அமர்ந்திருப்பதே ஏதோ முள் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது. உள்ளுக்குள் ஏன் இந்த படபடப்பு என்று புரியவில்லை. மூச்சு முட்டுவது போல இருக்கவே சட்டென எழுந்து நின்றாள்.
அவள் எழுந்த போதும் ஆர்யன் தான் அவளை நிமிர்ந்து கேள்வியாக பார்த்தானே தவிர மற்றவர்கள் அவளை கவனிப்பதாக தெரியவில்லை.
“ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கறது போரடிக்குதா மதி? வாங்களேன் வீட்டை சுத்தி காட்றேன்” என்று அவனும் எழுந்துக் கொள்ள சங்கடத்துடன் அண்ணனை பார்த்தாள்.
“வளர் போய் வீட்டை சுத்திபாரு, கனி நீயும் கூட போ” என்ற செழியன் மீண்டும் ஆதிசங்கரனுடன் பேச்சில் முழ்கிவிட்டான்.
கனிஇதழியும் வளர்மதியின் கரம்பற்றிக் கொண்டு வீட்டை சுற்றி பார்க்க தயாராகி விட வேறு வழியின்றி அவளுடன் நடந்தாள். ஆர்யன் ஒவ்வொரு அறையாக அழைத்து சென்று காட்டிவிட்டு பூஜை அறை அருகே தயங்கி நின்றான்.
“இது பூஜை ரூமா” என்று கனி அந்த அறைக்கதவை திறக்க, அந்த அறையில் எந்த சாமி படங்களும் இல்லை. மாறாக ஒரு பெண்மணியின் புகைப்படம் மட்டும் இருந்தது. அது ஆர்யனின் அம்மாவாக தான் இருக்க வேண்டும் என்று முகஜாடை சொன்னது.
“ஆர்யன் இது உங்க அம்மாவா?” கனிஇதழி கேட்க
“ம்”
“ஏன் பூஜை ரூம்ல சாமி படம் வைக்காம உங்கம்மாவோட போட்டோ வச்சிருக்கீங்க?”
“அம்மா இருக்கற வரைக்கும் இந்த ரூம்ல சாமி படம் இருந்துச்சு. அவங்க ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து மூணு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுக்கப்புறம் கடவுள் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு. எல்லா படத்தையும் தூக்கி போட்டுட்டு அம்மாவோட போட்டோவ இங்கே மாட்டி வச்சேன்” ஆர்யன் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக் கொண்டிருந்தான். வளர்மதியும் கனிஇதழியும் ஆர்யனை பாவமாக பார்த்தார்கள்.
வளர்மதியும் கனிஇதழியும் சற்று தள்ளி சென்றதும் ஆதிசங்கரன் செழியனிடம் பேச ஆரம்பித்தார்.
“அந்த பொண்ணு உங்க தங்கச்சியா?” என்று வளர்மதியை காட்டினார்.
“ஆமா சார்”
“கல்யாணம் ஆயிடுச்சா?”
“இன்னும் இல்ல சார்”
“இந்நேரம் கல்யாணமாகி இருக்கணுமே? அத்தை மகனுக்கு கட்றதா சொன்னாங்களே”
“அப்படி தான் பேச்சு இருந்துச்சு, ஆனா கல்யாணம் நின்னுடுச்சு. உங்களுக்கு எப்படி தெரியும்? ஆர்யன் ஏதாச்சும் சொன்னாரா?” செழியனின் முகம் லேசாக கருத்தது.
“அவன் இதுவரைக்கும் என்கிட்ட எதுவும் சொன்னதில்ல. இன்னைக்கு உங்க குடும்பம் இங்கே வரப்போகுதுனு கூட அவன் என்கிட்ட சொல்லவே இல்ல”
“நாங்க வந்தது அவருக்கே தெரியாது சார். ஆர்யன் சொல்லாம என் தங்கச்சிக்கு கல்யாணம் பேசினது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற செழியனுக்கு இன்பரசு வேலை செய்ததும் இவர்கள் கம்பெனியில் தானே என்பதும் நினைவில் வர ஒரு விநாடியில் என்னென்னவோ நினைத்து விட்டான்.
ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக ஆதிசங்கரன் பேச ஆரம்பித்தார்.
“எங்களுக்கு ஆர்யன் ஒரே மகன். ரொம்ப வருஷம் குழந்தையில்லாம பொறந்தவன். அவனுக்கு கண்ணுக்கு நிறைவா ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு நானும் என் மனைவி பார்வதியும் ரொம்ப ஆசையா இருந்தோம்” என்றவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.
“ஆர்யா, யாரையாச்சும் லவ் பண்றீயாடா? அப்படி இருந்தா என்கிட்ட மறைக்காம சொல்லு, அப்பாகிட்ட பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்” என்றார் பார்வதி
“ஆபிஸ்ல வொர்க் பண்ற பொண்ணுங்ககிட்ட வேலை விஷயமா பேசினா கூட உனக்கு லவ் பண்றேனோனு சந்தேகம் வந்திடுமே. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல. அப்பாவோட பிசினஸ் இல்லாம தனியா ஆரம்பிச்சு ஜெயிச்ச பின்னாடி தான் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்”
“நீயும் உன் அப்பா கூட சேர்ந்துக்கிட்டு பிசினஸ்னு நிக்காம ஓடிட்டு இருக்கீங்க. வீட்ல நான் மட்டும் தனியா யாருமில்லாத அனாதை மாதிரி இருக்கேன். என்னை பத்தி உங்களுக்கு என்ன கவலை இருக்கு” என்று பார்வதி கண்ணை கசக்க, பதறினான் மகன்
“இப்போ எதுக்கும்மா கண்ணை கசக்கிட்டு இருக்கே? கல்யாணம் தானே பண்ணிக்குறேன்” என்று அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டான்.
சட்டென மலர்ந்த புன்னகையுடன் மகனை நிமிர்ந்து பார்த்தவர் “உனக்கு எந்த மாதிரி பொண்ணு பாக்கணும்டா?” என்று ஆர்வமாக கேட்க
“உனக்கு பிடிச்சிருந்தா போதும். எல்லாம் ஓகேனா மட்டும் எனக்கு சொல்லு. அதுவரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதே” என்றதும் பார்வதி கண்களில் கண்ணீரும் சிரிப்புமாக தலையை ஆட்டினார்.
அன்றிலிருந்து பார்வதி மகனுக்கு பெண் பார்க்கும் வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார். வீட்டிற்கு கல்யாண தரகர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். பார்வதியும் தரகர் கொடுத்த புகைப்படங்களை ஆர்யனிடம் நீட்ட, “இத்தனை போட்டோவ பாத்து, இங்கி பிங்கி பாங்கி போட்டு என்னால செலக்ட் பண்ண முடியாதும்மா. நீ எதிர்பாக்கிற மாதிரி எல்லாம் அமைஞ்சு இருக்கற ஒரு பொண்ணை நீயே செலக்ட் பண்ணிட்டு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணு. நேர்ல பாத்த பின்னாடி நான் என் முடிவ சொல்றேன்” என்றான்.
அன்னையின் முகம் சோர்வாக இருப்பதை கண்டு, “என்னாச்சும்மா?” என்று விசாரித்தான்.
“பொறுப்பை என்கிட்ட கொடுத்துட்டு நீ ஜாலியா இருக்கே இல்ல? தரகர் கொண்டு வர்ற பொண்ணுங்க போட்டோ எல்லாம் அரைகுறை டிரஸ்ல இருக்கு. சிலர் போட்டோவுல வேற மாதிரியும் நேர்ல வேற மாதிரியும் இருக்காங்க. என்னால முடிவெடுக்க முடியல. நீ யாரையும் விரும்புறதா இருந்தா சொல்லுடா, அவளையே கல்யாணம் பண்ணி வச்சிடறேன்”
“அதுக்கெல்லாம் நேரமில்லம்மா. எனக்கு கல்யாணத்துக்கு அவசரமுமில்ல. நீ கண்ணை கசக்கினதால தான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். பொறுமையா பாரு, அதுக்குள்ள நான் என் கனவை நிறைவேத்திடறேன்”
“ஆர்யன், உனக்கு கிராமத்து பொண்ணு ஓகே வா டா?”
“நான் தான் உங்க விருப்பம்னு முதல்லயே சொல்லிட்டேனே” என்றான் சலிப்புடன்
“இது தான்டா எனக்கு பிரச்சனையே. நான் ஒரு பொண்ணை காட்டி உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னா கூட பரவாயில்ல. உனக்கு பிடிச்சிருந்தா ஓகேனு சொல்லி பொறுப்பை என் தலையில கட்றே” என்று புலம்பினார்.
பார்வதிக்கு பதில் சொல்ல முடியாமல் ஆர்யனுக்கு கைபேசியில் அழைப்பு வந்துக் கொண்டே இருக்கவும், “நான் கிளம்பறேன்மா” என்று வெளியேறிவிட்டான்.
மறுநாள் வீட்டிற்கு வந்த தரகர், “பார்வதி அம்மா நீங்க கேட்ட மாதிரியே கிராமத்துல இருக்கற பொண்ணுங்க போட்டோவ எடுத்துட்டு வந்திருக்கேன். இதுல இருக்கறது எல்லாமே உங்க மகனோட ஜாதகத்துக்கு பொருந்தி வருது. எந்த பொண்ணை பிடிச்சிருக்குனு சொல்லுங்க, பேசி முடிச்சிடலாம்” என்று கவரை நீட்டினார்.
பார்வதியும் ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து பார்த்ததில் கோதுமை நிறத்தில் பாவாடை தாவணியில் கருப்பசாமி கோயிலின் முன்பு நின்றிருந்த பெண்ணை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
“தரகரே இந்த பொண்ணு நல்லா இருக்கு”
“ஓ செல்வரத்தினம் மகளா? நல்ல இடமா தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க. பொண்ணு பேரு வளர்மதி, ஊரு தேனி பக்கத்துல பெரியகுளம்ங்கிற கிராமம். வசதியான குடும்பம் தான். பொண்ணுக்கும் சென்னையில வாக்கப்பட்டு போகணும்னு ஆசையாம். அதான் மாப்பிள்ளை பாக்க சொல்லி போட்டோவ நேத்து தான் கொடுத்தாங்க. ஆனா பொண்ணு பன்னென்டாவது தான் படிச்சிருக்கு, பரவால்லயா?”
“ஏன் அதுக்கு மேல படிக்கலயா?” பார்வதியின் முகம் சுருங்கிவிட்டது
“பொண்ணுக்கு மெட்ராஸ்ல இருக்கற மாப்பிள்ளையா பாருனு செல்வரத்தினம் ஐயா சொன்னப்பவே படிச்சு கொறைச்சலா இருக்கேனு கேட்டேன், காலேஜூக்கு போகணும்னா டவுனுக்கு போகணும். அதனால படிக்க அனுப்பலனு சொன்னாரு. அவங்க குடும்பம் அந்த காலத்து ஆளுங்க. உங்களுக்கு பரவால்லைனா சொல்லுங்க முடிச்சிடலாம்”
“நானே முடிவு பண்ண முடியாது. என் வீட்டுக்காரர்கிட்டயும் மகன்கிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்று தரகரை அனுப்பி வைத்தார்.
தந்தையும் மகனும் அலுவலகத்திலிருந்து வந்தபின் நடந்தவைகளை பற்றி சொன்னார்.
“பொண்ணுக்கு படிப்பு குறைச்சலா இருக்குனு நீயே சொல்றே. அதுக்கப்புறம் அதப்பத்தி எதுக்கு பேசிட்டு இருக்கே? வேற சம்பந்தம் பாக்கலாம் விடு” என்றார் ஆதிசங்கரன்.
“இல்லைங்க, பொண்ணை பாத்ததும் எனக்கு பிடிச்சு போச்சு. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. படிப்பு தான் குறையா இருக்கு”
“அதுக்கு என்ன பண்ணலாம்ங்கிற? ஐடி கம்பெனி வச்சி நடத்தற என் மகனுக்கு ஒரு டிகிரி கூட முடிக்காத பொண்ணை கட்டி வைக்கலாம்ங்கிறியா?” என்றார் ஆதிசங்கரன் எரிச்சலுடன்
“குடும்பம் நடத்தறதுக்கு அந்த படிப்பு போதாதா? வேலைக்கா ஆள் எடுக்க போறீங்க?” பார்வதியும் பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“அச்சோ எதுக்கு சண்டை போட்டுக்கறீங்க? அம்மாவோட திருப்திக்காக ஒரு முறை நேர்ல போய் பேசிட்டு வாங்க அப்பா. பொண்ணுக்கு விருப்பமிருந்தா கல்யாணத்துக்கப்புறம் கூட படிச்சுக்கட்டும்” என்று முடித்தான் ஆர்யன்.
இருவரும் பெண்ணை நேரில் பார்க்க விரும்புவதாக தரகரிடம் சொல்ல, “உங்க குடும்பத்தை பத்தி செல்வரத்தினம் ஐயா கிட்ட சொன்னேன். அவரோட அப்பா இறந்த திதி அடுத்த மாசம் இருக்காம். அதுமுடிஞ்சதும் பொண்ணு பாக்க வர சொல்றாரு”
“இன்னும் ஒரு மாசம் காத்திருக்கணுமா?” பார்வதி சலிப்புடன் கேட்க
“அவங்க மதுரையில ‘இம்மையிலும் நன்மை தருவார் கோயில்’ அதாவது சொக்கநாதர் கோயில்ல தான் திதி கொடுக்கறதா சொன்னாங்க. குடும்பத்தோட வருவாங்க. நீங்க கோயிலுக்கு வர மாதிரி வந்து பொண்ணை பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு மாசம் காத்திருக்கிறதுல தப்பில்லையே” என்று அவர் கூறவும் பார்வதிக்கும் அதுவே சரியாக பட்டது.
படிப்பில் குறைவாகவும் கிராமத்து பெண்ணாகவும் இருப்பவள் தன் மகனுக்கு மனைவியாக வருவதில் ஆதிசங்கரனுக்கு சற்றும் விருப்பமில்லை. பார்வதி கொடுத்த அழுத்தத்திற்காக மனைவியுடன் கிளம்பி மதுரைக்கு சென்றார். அங்கே கோயிலில் செல்வரத்தினம் குடும்பத்தோடு வந்து அவரது தந்தைக்கு திதி கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கே தான் ஆதிசங்கரன் வளர்மதியை முதன்முறையாக பார்த்தார். அமைதியாகவும் அடக்கமான அழகுடனும் இருந்தாள். அங்கிருந்த முதியவர்களுக்கு அவளின் குடும்பம் அன்னதானம் வழங்க, வளர்மதி இன்முகத்துடன் அனைவருக்கும் அவர்களின் தேவையறிந்து உணவு பரிமாறிய விதம் அவரையும் ஈர்த்தது.
அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர், “நீ என் பேத்தி மாதிரியே இருக்கே. சாப்டியாம்மா?” என்று விசாரிக்க, “இல்ல பாட்டி இனிமே தான் சாப்பிடணும்” என்றாள் அவள்
“இன்னுமா சாப்பிடல?” என்ற மூதாட்டி சற்றும் யோசிக்காமல் தன் இலையில் இருந்த சாதத்தை உருட்டி அவளுக்கு ஊட்ட வர, அவளும் யோசிக்காமல் வாயை திறந்தாள்.
“வளர் அறிவிருக்கா? பிச்சைகாரங்க ஊட்றத வாங்கிட்டு இருக்கே?” என்று யாரோ இன்னோரு மூதாட்டி அதட்டினார். அவர் அவளின் சொந்த பாட்டியாக இருக்க வேண்டும்.
சாதத்தை ஊட்ட வந்தவர் அப்படியே கையை பின்னுக்கு இழுத்துக் கொள்ள அவரின் கரம் பற்றி தன் கை அருகே இழுத்தாள். “பாட்டி, அவங்கள மாதிரியே நீங்களும் எனக்கும் இன்னொரு பாட்டி தான். நான் சொல்றேன் நீங்க ஊட்டுங்க” என்றவள் வலுக்கட்டாயமாக அவரின் கையை பற்றி தன் வாயருகே கொண்டு வந்து சாதத்தை சாப்பிட்டாள்.
அந்த பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர். மறுகையால் அவளின் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தவர், “உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன். மகராசியா இருப்பே” என்று ஆசி வழங்க, சற்று தள்ளி நின்றபடி ஆதிசங்கரனும் பார்வதியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“படிப்பு குறைச்சல்னு சொன்னீங்களே இப்போ என்ன சொல்றீங்க? குணத்துல தங்கமா இருக்கா. இவ தான் எனக்கு மருமகளா வரணும் சொல்லிட்டேன்” என்றார் தீர்மானமாக
ஆதிசங்கரனுக்கும் மறுத்து பேச முடியவில்லை. அவரே தரகருக்கு அழைத்து, “பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. முறைப்படி பொண்ணு பாக்கறதுக்கு எப்போ வரலாம்னு கேட்டு சொல்லுங்க. நாங்க குடும்பத்தோட வர்றோம்” என்று கூறினார்.
வீட்டிற்கு வந்ததும் ஆர்யனிடம் வளர்மதியின் புகைப்படத்தை கொடுத்து, “இந்த பொண்ணை தான் பார்த்திருக்கோம் ஆர்யா. அப்பாவுக்கும் பிடிச்சிருக்காம். நீ வந்து ஓகே சொல்லிட்டா கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம்”
ஆர்யன் புகைப்படத்தை வாங்கி பார்த்தான். பார்க்க அழகாக தான் இருந்தாள். “சரிம்மா பொண்ணு பாக்க போறதுக்கு ஒரு நாள் முன்னாடியே என்கிட்ட சொல்லிடு, அப்போ தான் என் வொர்க்கை யார்கிட்டயாவது கொடுத்துட்டு வர முடியும்” என்று விட்டு தன் வேலையில் மூழ்கி விட்டான்.
அதன்பிறகு அவன் தனக்கு பார்த்திருக்கும் பெண் வளர்மதியை பற்றி யோசிக்கவே இல்லை. ஒரு மாதம் கடந்த பின்பும் தரகரிடம் இருந்து எந்த செய்தியும் வராததால் பார்வதி அவருக்கு போன் செய்தார்.
“என்ன தரகரே நீங்களே போன் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன். அமைதியாயிட்டீங்க”
“அது வந்தும்மா, இந்த சம்பந்தம் நடக்காது. நான் தம்பிக்கு வேற பொண்ணை பாத்துட்டு இருக்கேன். நல்லதா அமைஞ்சதும் நானே நேர்ல வர்றேன்”
“ஏன் என்னாச்சு?”
“செல்வரத்தினம் அவரோட தங்கச்சி பையனுக்கே தன் பொண்ணை கொடுக்க போறதா சொல்றாரு, அதான்”
“அதுக்கெதுக்கு போட்டோவெல்லாம் கொடுத்து உங்களை பொண்ணு பாக்க சொன்னாராம்?” பார்வதிக்கு ஏமாற்றமாக இருந்தது.
“செல்வரத்தினத்துக்கும் அவரோட தங்கச்சி புருஷனுக்கும் பேச்சு வார்த்தை இல்லாம இருந்துச்சு. அதனால அவர் பொண்ணை வெளியே கொடுக்கலாம்னு நினைச்சாராம். திடீர்னு அவர் தங்கச்சியும் மாப்பிள்ளையும் நேரா வீட்டுக்கு வந்து அவங்களோட பொண்ணுக்கும் செல்வரத்தினம் பையனுக்கும் சம்மந்தம் பேசியிருக்காங்க. அப்படியே பேச்சு வளர்ந்து பொண்ணை கொடுத்து பொண்ணு எடுக்கறதா முடிவு பண்ணிட்டாங்களாம். அதனால உங்களை பொண்ணு பாக்க வரவேணாம்னு சொல்லிட்டாங்க”
“நாங்க வேணும்னா நேர்ல வந்து ஒருமுறை பேசி பார்க்கட்டுமா?”
“இல்லம்மா சரிவராது. திருவிழா முடிஞ்சதும் கல்யாணம்னு பேசி முடிச்சிட்டாங்க. நான் வேற போட்டோவோட வரேன்” என்று போனை வைத்தார்.
அன்று மாலை ஆதிசங்கரனும் ஆர்யனும் வேலை முடித்து வரும்போது பார்வதியின் முகத்தில் வருத்தம் தெரியவும் என்னவென்று விசாரிக்க, அவரும் தரகர் சொன்னதை கூறினார்.
“அதுக்கு எதுக்கு முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கே? அந்த பொண்ணு இல்லனா நம்ம ஆர்யனுக்கு பொண்ணா கிடைக்காது? வேற நல்ல இடமா பாக்கலாம் விடு” என்றார் ஆதிசங்கரன்.
“இல்லைங்க எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு. வேணாம்னு சொல்லிட்டு இருந்த நீங்களும் கோயில்ல பாத்ததும் சரினு சொல்லிட்டீங்க. ஆர்யனுக்கும் சம்மதம்ங்கிற மாதிரி தான் தெரிஞ்சது. அதனால மனசுல அந்த பொண்ணை மருமகளா நினைச்சு ஆசப்பட்டுட்டேன்” என்றார் வருத்தமான குரலில்
“பார்வதி, இதையெல்லாம் உன் மகன் சொல்லணும். நீ சொல்லிட்டு இருக்கே” என்று மனைவியை அதட்டியவர் மகனிடம் திரும்பி, “என்ன ஆர்யா நீயும் உன் அம்மா மாதிரியே அந்த பொண்ணை மனைவியா நினைக்க ஆரம்பிச்சிட்டியா?” என்று கேட்டார்.
“நோ. நேர்ல பாத்து ரெண்டு சைடும் பிடிச்சிருந்தா அப்புறம் பாக்கலாம்னு தான் நினைச்சேன். மத்தபடி வேற எதுவும் யோசிக்கலப்பா” என்று தோளை குலுக்கினான் ஆர்யன்
“நல்லது. நாம வேற பொண்ணை பாக்கலாம்” என்று பேச்சை முடித்தார் ஆதிசங்கரன்.
பேசிக் கொண்டிருந்த ஆதிசங்கரன் அமைதியாகிவிட செழியன் அவர் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். அவர் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. பேச முடியாமல் தொண்டை கமறியது.
(தொடரும்)