கனவாக வந்தாய்…
காதலாக நின்றாய்…
நினைவாகிப் போனாய்…
கனவே சேராயோ? 5
அப்பா-மகன் என்று இருவரின் கோபத்தின் அளவு அவளுக்கு நன்றாகவே தெரியும். வேலையில் சிறு பிசகு என்றாலும், அந்த இடமே அதிரும் அளவிற்கு கத்துவார்கள்.
அதே சமயத்தில் நன்றாக வேலை செய்பவர்களைத் தட்டியும் கொடுத்து, பதவி உயர்வும் கொடுப்பார்கள். அப்படித்தான் அவளுக்குமே கிடைத்தது.
இல்லையென்றால் இந்த இரண்டு வருடத்தில் சீனியர் சிவில் இன்ஜினியருக்கு அசிஸ்டெண்ட்டாகும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்காது. அதில் பல பேரின் வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள் மானசா.
பதவி உயர்வு மட்டுமல்ல, பல பேருக்கு சம்பள உயர்வும் கிடைத்திருக்கிறது. இப்போது நிர்மல் செய்த காரியத்திற்கு அவளுக்கு என்ன கிடைக்கப் போகிறதோ?? என்று பரிதவிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எவ்வளவு திமிரு உனக்கு?? தைரியமா வேற பேசுற?? அக்கா தம்பின்னு ரெண்டு பேரும் ஏதோ ஒரு பிளானோட தான் வந்திருக்கீங்க?” என்றார் வெங்கடேசன்.
“ஐயோ! இல்ல சார். இவன் இப்படி வருவான்னு எனக்கு சுத்தமா தெரியாது. அவனுக்கு பைத்தியம் சார்” என்றாள் மானசா. தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?? இத்தனை பெரிய கம்பெனியில் அவள் பிளாக் ரிமார்க்கோடு விலகினாள். பிறகு, இது போல சம்பளத்தில், பெரிய கம்பெனியில் வேலை கிடைப்பது கஷ்டமாகிப் போகுமே??
“என்ன அக்கா இப்படி சொல்லிட்ட? ஒரு வேலைக்காக தம்பியைப் பைத்தியம்னு சொல்லிட்ட?” என்றான் இளையவன்.
“நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு பின்ன என்ன சொல்லுவாங்க?” என்று கேட்டவளின் குரல் காட்டமாகவே இருந்தது.
“கோச்சிக்கிட்டியா? உனக்கு நல்ல விஷயம் சொல்றதா நினைச்சேன்” என்றான் நிர்மல்.
“எது நல்ல விஷயம்? என் வேலைக்கு உலை வைக்கிறதா?” என்றாள்.
“இல்லக்கா, நேத்து பாத்துட்டு போனவன் உனக்கு கணவன் இல்லைன்றது நல்ல விஷயம் தானே?” என்றான்.
“அதை இப்படித்தான் மீட்டிங் ஹால்ல வந்து சொல்லுவியா?”
“இது மீட்டிங் ஹால்னு எனக்கு எப்படி தெரியும்?? நான் இதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்லையே?? ஒருவாட்டி தான் உன் ஆபீஸ்க்கு வந்திருக்கேன். அதுவும் உன்னை பிக்கப் பண்றதுக்காக. அப்பயும் அப்பா கூட தானே வந்தேன்?? கீழேயே நிக்க வச்சு இதுதான் என் ஆபீஸ்னு காட்டி அனுப்பி வச்சிட்ட. இன்னைக்கு எக்சைட்மெண்ட்ல எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்னு ஓடோடி வந்த, என்னை இப்படி ஏமாத்திட்டியே கோபால்?” என்றதும் அவள் மீண்டும் அவன் தலையில் கொட்டினாள்.
தேஜாவின் புருவம் சுருங்கியது. அவன் ஏதோ பட டயலாக்கை தான் அப்படி உபயோகிக்கிறான் என்று புரிந்தது. அவர்கள் இருவரையும் சுவாரசியமாகப் பார்த்தான்.
ஆனால் வெங்கடேசனுக்கு அப்படி இல்லை. மாறி மாறி பேசிக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வந்தது.
அவருடைய இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல ஒன்று நடந்ததே இல்லை. ஆங்கில அறிவு மட்டும் தான் அவரிடம் இல்லை. ஆனால் கன்ஸ்டிரக்ஷனின் ‘ஆ’ முதல் ‘ஃ’ அக்கு வரை தெரிந்து வைத்திருப்பவர் அவர். அவருடைய மீட்டிங்கில் அவர் தமிழில்தான் பேசுவார். செக்ரட்டரியாக நம்பிக்கைக்குரியவனை வைத்திருந்தார். அவன் ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றவன். இப்பொழுதுமே தேஜாவின் செகரட்டரியாக அவன் தான் இருக்கிறான்.
இவர்கள் இருவரும் தன் மகனை வளைக்கப் பார்க்கிறார்கள். வேண்டுமென்றே நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பினார். ஆனால் அவர் கோபமாகச் செல்ல நினைக்கும் போதெல்லாம், மகனோ அவர் கையைப் பற்றி, தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சைகை செய்ய, அவரால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் இருந்தது. ஆனாலும் பற்களை நரநரத்தபடிதான் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தார்.
“கார்ட்ஸ், நீங்க ரெண்டு பேரும் கூட வெளியே போங்க” என்ற குரலில் தான் இருவரும் சுயத்திற்கு திரும்பினார்கள். தயக்கத்தோடு குரல் வந்த திசையில் பார்த்தனர்.
திடகாத்திரமான அந்த இருவர் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தனர். தந்தையும் மகனும் மட்டும் கைகளை கட்டியபடி அந்த இருவரையும் பார்த்திருந்தார்கள்.
“நல்லவேளை அக்கா, அடிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேர் அடிச்சா கூட தாங்கிக்கலாம். ஆனா அந்த ரெண்டு மலை மாடுங்க அடிச்சா நம்மளால தாங்க முடியாது” என்று அவன் கூறியது. நிசப்தமான அந்த அறையில் இருவருக்குமே கேட்டது.
“வாய மூடுடா எரும மாடு. நீ அவங்க கிட்ட அடி வாங்குவியோ இல்லையோ? என்கிட்ட செத்த” என்று முணங்கினாள்.
அவளையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் முணுமுணுப்பைப் பார்த்ததும், உதடுகளைப் பார்த்தான். அவள் தம்பியை திட்டியதில், அத்தனை நேரம் இருந்த கோபம் மறைந்து, லேசான புன்னகை கூட வெளிவந்தது தேஜாவிற்கு.
“என்ன இதெல்லாம்?? அக்காவும் தம்பியும் டிராமா போட்டு என் வீட்டு மருமகளாக நினைக்கிறீங்களா?? தொலைச்சிடுவேன் தொலைச்சு?? இதுக்குத்தான் வேலைக்கே வரீங்களா?” என்று காட்டமாகக் கேட்டார் வெங்கடேசன்.
“இல்ல இல்ல சார், ப்ராமிஸ் அப்படி எல்லாம் இல்ல. இவனுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. நான் வேணும்னா டாக்டரோட மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து காட்டுறேன்” என்றாள் மானசா.
“இன்னைக்கு எங்க மானம் போச்சே?? அது திரும்பி வருமா?” என்று அவர் அழுத்தமாகக் கேட்க.
“நான் இன்னைக்கே பேப்பர் போட்டுடுறேன் சார். வேலையை விட்டு போயிடுறேன் சார். நீங்க மூணு மாசம் சம்பளம் கூட புடிச்சுக்கோங்க. ஆனா எங்களை விட்டுடுங்க சார், ப்ளீஸ். பனிஷ்மென்ட் எதுவும் கொடுக்காதீங்க. அப்படியே கொடுக்கிறதா இருந்தாலும் எனக்கு கொடுங்க. இந்தப் பைத்தியத்துக்கு கொடுக்காதீங்க” என்றாள்.
“சாரி சாரி சார், ப்ளீஸ் சார். பனிஷ்மென்ட் எதுவும் வேணாம் சார். கொஞ்சம் இவனோட பிரச்சினையை கேட்டீங்கன்னா?? உங்களுக்கு கோபம் வராது” மன்னிப்பைக் கேட்கும்போது காதைப் பிடித்துக் கொண்டு கேட்டவள்.
தம்பியைத் திட்டினாலும், அவனுக்குத் துணையாக நின்றாள். அவனுக்கு பதிலாக தண்டனையை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறாள்.
இத்தனை நாட்கள் அவளை அவ்வளவாக அவதானிக்காதவன். இப்போதுதான் அவளுடைய ஒவ்வொரு செயல்களையும் அவதானித்தான்.
நுனி நாக்கைக் கடிப்பது, கண்களைச் சுருக்கிக் கெஞ்சுவது, பயத்துடன் கண்களை மூடுவது, காதைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவது, பேசும்போது அவள் முகத்தோடு பல அபிநயங்களைப் பிடித்துப் பேசுவது, முகத்தில் அத்தனை பாவங்களைக் கொண்டு வருவது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவதானித்தான்.
‘தந்தை அவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், தானோ அந்தப் பெண்ணை நினைத்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்தவன். தலையை உலுக்கிக் கொண்டான்.
“டாட், ஏன் டென்ஷன் ஆகுறீங்க?? அவங்க சொல்றதையும் என்னன்னு கொஞ்சம் பொறுமையாகக் கேட்கலாம். அதான் மீட்டிங் போஸ்ட்போண்ட் பண்ணிட்டோம் இல்ல?” என்று தந்தையை நோக்கிக் கைகளை காட்டினான்.
“இவங்க ரெண்டு பேரும் ஏதோ நாடகம் நடிக்கிறாங்க தேஜா. பெரிய இடமா பார்த்து வலை வீசி பிடிக்கப் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்?” என்றார்.
அது அவள் தன்மானத்தைத் தீண்டியது. தன் தம்பி தவறு செய்திருக்கிறான் தான். ஆனால் அதற்காக தங்கள் குடும்பத்தையே அவர்கள் தரம் தாழ்த்திப் பேசக்கூடாது என்று தோன்றியது.
“சார், அப்படி எல்லாம் நாங்க ஒன்னும் ரொம்ப ஏழ்மையில் இருக்கிறவங்க இல்ல. அப்பா சென்ட்ரல் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி, அம்மா பேங்க் எம்ப்ளாயி. நான்தான் இன்ஜினியரிங் முடிச்சுட்டு கேம்பஸ்ல இங்க வேலைக்கு வந்தேன். தம்பிக்கு ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. அதனால இன்னும் வேலைக்கு போகல. ஊர்ல சொத்து பத்து எல்லாம் நிறையவே இருக்கு. எல்லாரும் வேலை செய்யுறதுனால, இங்க வீடு வாங்கிகிட்டு செட்டில் ஆயிட்டோம். கஞ்சிக்கே வழியில்லாத குடும்பம் எல்லாம் இல்லை. நாங்களும் கொஞ்சம் வசதி படைச்சவங்க தான். ஆனா உங்க அளவுக்கு இல்ல. அதுக்காக எல்லாம் நாங்க நாடகம் நடிக்கல. எங்களுக்கு பணம் முக்கியம் இல்லை. அவனுக்கு சில பிரச்சனைகள் இருக்கு. அதனால உளறி கொட்டிட்டான். அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இதுக்காக நீங்க எந்த ஆக்சன் எடுக்கிறதா இருந்தாலும் என் மேல எடுங்க. பிக்காஸ், நான் தான் உங்ககிட்ட வேலை செய்யுறேன். அவன் இல்லை” என்று அவள் பேசிக் கொண்டிருக்க.
தேஜாவிற்கு அந்த நொடி அவள் புறம் மனம் சாயத் துடித்தது.
“அப்ப எதுக்கு இந்த டிராமா பண்ணிட்டிருக்கீங்க?? அதுவும் மீட்டிங் ஹால்ல வந்து?? முதல்ல இவனை யார் ஆபிஸ்க்குள்ள அலோ பண்ணது?? இவன் மீட்டிங் ஹால் வர வரைக்கும் வெளியில் மத்தவங்க என்ன பண்ணிட்டிருக்காங்க?? இந்த ஆபீஸ்ல என்னதான் நடக்குது?” என்று கர்ஜித்தார் வெங்கடேசன்.
“டாட் ப்ளீஸ், ரிலாக்ஸ். உங்களுக்கு பீ.பி. இருக்கு. அதை ரைஸ் பண்ணிக்காதீங்க. இங்க என்ன பிரச்சனைன்னு நான் பாத்துக்குறேன். நீங்க என் கூட மட்டும் இருங்க போதும்” என்று தந்தையிடம் கூறியவன். அவர்கள் இருவரையும் பார்த்தான்.
“ம்ம், ரெண்டு பேரும் அங்க போய் உட்காருங்க” என்று கூறினான் தேஜா.
“சார், கனவுல உங்கள நான் பார்த்தேன். என் கனவுல நடக்கிறது எல்லாம் ரெண்டு வருஷமா நடந்துட்டு இருக்கு. ஆர்வக்கோளாறுல சொல்றதுக்கு வந்துட்டேன். மீட்டிங் ஹாலை கவனிக்கல. நான் சாரி கேட்டுக்குறேன். என் கனவு பொய்யா போகணும்னு கடவுளை வேண்டிக்குறேன். நாங்க ஒன்னும் பணத்துக்கு ஆசைப்படுறவங்க இல்ல. உயிர் வாழ்றதுக்கு அத்தியாவசிய தேவை இருப்பதெல்லாம் எங்க கிட்ட இருக்கு. சாப்பாடு, தங்குவதற்கு வீடு, துணிமணிகள்னு எல்லாமே எங்களுக்கு அளவுக்கதிகமாகவே இருக்கு. நீங்க ஸ்ட்ராங்கா இருந்து. இந்தக் கல்யாணம் நடக்காம பாத்துக்கோங்க. நான் எங்க அக்காவை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு மெயில்ல ரிலீவிங் லெட்டர் கொடுக்க சொல்றேன்” என்றவன். தன் தமக்கையின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த ஹாலில் இருக்கும் கதவின் புறம் திரும்பினான்.
“ஹலோ, என்ன விளையாடுறியா?” என்று சொடக்கிட்டான்.
அதில் அவர்கள் இருவரின் பாதங்களும் வேரூன்றி நின்றது.
“இங்க நான் பேசிகிட்டிருக்கேன். நான் இன்னும் பேசி முடிக்கல. நீ பாட்டுக்கு ஆபீஸுள்ள நுழைஞ்சு, மீட்டிங் ஹால்ல நுழைஞ்சு எங்களோட ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாம் பேசிட்டிருக்கும் போது இன்டர்ஃபேராகி, உன் அக்கா கிட்ட பேசுனது மட்டும் இல்லாம, என்னையும் அதில் இழுத்து பேசி இருக்க. அப்படியே சும்மா போறேன்னு சொல்ற?? அப்படியெல்லாம் விட முடியாது. இதெல்லாம் ஏன் பண்ண? எதுக்கு பண்ணேன்னு எனக்கு ரீசன் தெரியணும். அது அக்சப்டபுளா இருந்ததுனா நான் அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கிறேன்” என்றான் தேஜா.
மொத்தத்தில் அவனை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும். இத்தனை நேரம் அவர்கள் பேசியது, அந்த இருவருக்கும் திருப்தியாக இல்லை போலும்??
“என்ன தேஜா இதெல்லாம்?? போலீஸ்க்கு போன் பண்ணி, இவங்களைப் பிடிச்சுக் கொடுக்காம?? இவங்க கிட்ட என்ன காரணம் கேட்டுட்டு இருக்க?” என்றார் வெங்கடேசன்.