வேலு செல்வியை அழைத்துக் கொண்டு அவர்களின் பூர்வீகமான ஊரான அலங்காலநல்லூரில் இருக்கும் அவர்களுடை பழைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இனி தங்கைக்கு துணையாக அங்கேயே தங்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர் செல்விக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தார்.
“வேலுண்ணா ஏன் இங்கனயே இருக்க, சென்னைக்கு போகலையா?” என்று கேட்டாள் செல்வி
“ஐயா தான் உனக்கு துணையா என்னை இங்கேயே இருக்க சொல்லிட்டாரு செல்வி”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் பொறந்து வளர்ந்த ஊரு, என்னைய பார்த்துக்க எனக்கு தெரியும். நீ போய் ஐயாவை பார்த்துக்க. நீயும் இல்லைனா அவருக்கு யாரு துணையா இருப்பா?”
“சரி ஐயா பணம் அனுப்பி வைக்கிறதா சொல்லி இருக்காரு. யாதவனை ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்திட்டு, உனக்கு வருமானம் வர போல செய்திட்டு போறேன். இனி நீ அங்கே வராத செல்வி, ஐயா வேணும்னா உன்னைய இங்கனயே வந்து பார்த்துட்டு போகட்டும். முரளி தம்பி மாறுவாறுனு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார் வேலு
“சரிண்ணா, நான் அங்கே இருந்தா ஐயாவுக்கு நிம்மதி இருக்காது. இரண்டு மாடுங்களை மட்டும் வாங்கி கொடுத்துட்டு போ. நான் அதை வச்சு பொழைச்சுப்பேன். யாதவனை கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்திடலாம் அண்ணா” என்றாள் செல்வி முகத்தை துடைத்துக் கொண்டு
“என்னை மன்னிச்சுடு செல்வி, உன்னை வேலைக்கு அழைச்சிட்டு போறதா சொல்லி உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்” என்று கண்கலங்கினார் வேலு
“அப்படி சொல்லாதே அண்ணா, ஐயாவுக்கு கொஞ்ச நாளாவது என்னால சந்தோசம் கொடுக்க முடிஞ்சதே அதுவே போதும். அவர் கொடுத்த பரிசா என் மவன் யாதவன் இருக்கானே, அவனை பார்த்துக்கிட்டே என் வாழ்க்கையை கழிச்சிடுவேன்” என்றாள் செல்வி பெருமூச்சோடு.
********
செல்வியை தனியாக விட்டு விட்டு சென்னைக்கு வந்ததற்காக வேலுவை, வெற்றிவேந்தன் திட்டினார். “ஐயா நான் பெரிய ஐயாவுக்கு கொடுத்த வாக்குக்காக உங்க கூடவே இருந்து பார்த்துக்குவேன். செல்விக்கு அங்கே ஒரு பிரச்சனையும் இருக்காது. எல்லாம் எங்க ஊர்க்காரங்க தான். அதுமட்டுமில்லாம சிங்க குட்டியாட்டம் என் மருமகன் யாதவ் இருக்கானே. அவன் பாத்துப்பான்” என்றார் வேலு பெருமிதமாக.
கொஞ்ச நாட்கள் கழித்து வெற்றி தன் மனைவி பிள்ளையை பார்த்து வரலாம் என்று கிளம்பினார். அதை அறிந்துக் கொண்ட முரளி, “அப்பா பாக்டரில தீப்பிடிச்சிடுச்சாம், போன் வந்தது” என்றான்.
பதறியடித்துக் கொண்டு அவசரமாக பேக்டரிக்கு ஓடினார் வெற்றி. அங்கே எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்ததும், “முரளி உனக்கு போன் பண்ணவங்க யாரு? தப்பா நியூஸ் சொல்லி இருக்காங்க” என்ற தந்தையிடம், “யாரும் போன் பண்ணல” என்றான் மகன் விட்டேற்றியான குரலில்
“என்ன முரளி சொல்றே? நீ தானே தீப்பிடிச்சிடுச்சுனு போன் வந்ததா சொன்னே?” என்றார் வெற்றி குழப்பத்துடன்.
“ம் அப்படியா சொன்னேன்?” என்று சத்தமாக தனக்குள் யோசிப்பது போல சொன்னவன், “நீங்க அந்த பொம்பளையையும், அவனையும் பார்க்க போனா பேக்டரி தீப்பிடுச்சுடும்னு தானே சொன்ன மாதிரி இருந்துச்சு” என்றான் நக்கலாக
“முரளி, உனக்கென்ன பைத்தியமா? பேக்டரி தீப்பிடுக்கிறது எல்லாம் விளையாட்டா போச்சா உனக்கு. பல ஆயிரக்கணக்கான கோடி இன்வஸ்ட் பண்ணியிருக்கோம். அது மட்டுமில்லாம அங்கே வேலை செய்யறவங்களோட உயிரை பத்தியெல்லாம் யோசிக்காம பேசறீயே. பேச்சுக்காக கூட இப்படி எல்லாம் சொல்லாதே, நினைக்கும் போதே பதறுது” என்று அதட்டினார் வெற்றி.
“நான் பேச்சுக்காக எல்லாம் சொல்லல. நீங்க அவங்களை பார்க்க போனா அடுத்த முறை சொல்லிட்டு இருக்கமாட்டேன். செஞ்சுட்டு தான் சொல்லுவேன். அவனுக்கு தான் அவனோட அம்மா இருக்காங்களே. எனக்குனு நீங்க மட்டும் தானே இருக்கீங்க. உங்களோட அன்பும் அக்கறையும் என் மேல மட்டும் தான் இருக்கணும். நான் என் அப்பாவையும் சரி என் சொத்தையும் சரி யார் கூடவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன். இனி அவங்களை பார்க்கணுங்கிற எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது”
“டேய், டேய் நீ தானடா செல்வியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம்புடிச்ச, இப்ப இப்படி எல்லாம் பண்றீயே. ஒருத்தியை கல்யாணம் பண்ணி அவளுக்கு பிள்ளையை கொடுத்துட்டு நட்டாத்துல விட்டா அந்த பாவம் என்னை சும்மா விடுமாடா? ஏன்டா இப்படி பண்றே?”
“அதைப்பத்தி ஐ டோன்ட் கேர். நான் அப்போ சின்ன பையன், நான் சொன்னா உங்களுக்கு எங்கே போச்சு புத்தி? எப்போ சொல்லுவான் கல்யாணம் பண்ணிக்கிக்கலாம்னு இருந்திருப்பீங்க. சரி நான் சொன்னதுக்காகவே நடந்ததாக இருந்தாலும் உங்களை யாரு புள்ள பெத்துக்க சொன்னது?”
“ச்சே நீ எனக்கு பொறந்தவனா? அரக்கன் மாதிரி மனசாட்சி இல்லாம பேசறீயேடா?” என்றார் வெற்றி வெறுப்புடன்
“அப்பா மைன்ட் யுவர் வோர்ட்ஸ். மாசாமாசம் அவங்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பறதா இருந்தா அனுப்பிக்கோங்க. ஆனா நீங்க அங்கே போறதோ இல்லை அவங்க இங்க வர்றதோ இருக்க கூடாது. அப்படி என்னை மீறி உங்களுக்குள்ள உறவு இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுனா நான் உங்க சின்ன மகனை உயிரோட இருக்க விடமாட்டேன்.
“டேய் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியாடா பேசுறே? பக்கா ரவுடி மாதிரி பேசறீயேடா” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு போனை வைத்தார் வெற்றி.
கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் முரளி கிருஷ்ணாவிற்கு தெரியாமல் செல்வியை காண வேண்டி காரில் செல்லும் போதே வேலு போன் செய்தார். “ஐயா பேக்டரி தீப்பிடிச்சுடுச்சுங்க. நிறைய பேருக்கு பலத்த காயம் சீக்கிரம் வாங்க” என்று சொன்னதும் “தன் மகன் சொல்வதோடு நிற்க மாட்டான், செய்தும் விடுவான்” என்று புரிந்து கொண்டு மனைவியை பார்க்கும் எண்ணத்தை அப்போதே கைவிட்டார்.
இன்னொருமுறை முயன்றால் யாதவனுக்கு எதாவது தீங்கு செய்தால் என்ன செய்வது என்று யோசித்தவர், மொத்தமாக முரளி கிருஷ்ணாவின் கை பொம்மை ஆகி போனார். மாதாமாதம் பணம் மட்டும் சென்று கொண்டிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு, வெற்றிவேந்தன் அனுப்பி வைத்த மணியார்டர் திரும்பி வந்திருந்தது. அதன் கூடவே ஒரு கடிதம். செல்விக்கு எழுதபடிக்க தெரியாதே என்று எண்ணிக் கொண்டே அதை பிரித்து படித்தவர், நெகிழ்ந்து போனார். யாதவ் கிருஷ்ணா தான் அந்த கடிதத்தை எழுதி இருந்தான். என் மகன் எனக்கு கடிதம் போடும் அளவிற்கு வளர்ந்து விட்டானா? என்று கண்கலங்க, கடிதத்தை வாசிக்க தொடங்கினார்.
“எங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டு, என்னை இதுவரை பார்க்க வராத அப்பா எனக்கு வேண்டாம். நீங்க அனுப்பும் பணமும் வேண்டாம். என் அம்மாவை நானே பார்த்துக்குவேன் – யாதவ் கிருஷ்ணா”
பணத்தை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியது கவலையாக இருந்தாலும் யாதவ் தன்னம்பிக்கையோடு தன் அம்மாவை பார்த்துக்குவேன் என்று சொன்னது வெற்றிவேந்தனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
முரளி கிருஷ்ணா மாறுவான் என்று நம்பிக்கையோடு காத்திருந்து காத்திருந்து வருடங்கள் உருண்டோடியதே தவிர அவன் மாறுவதாக தெரியவில்லை. வேலு மட்டும் எப்போதாவது சென்று செல்வியை பார்த்து வந்து கொண்டிருந்தார்.
முரளியை பொறுத்தவரை யாதவ் கிருஷ்ணா வேறு உருவத்தில் பிறந்து இருந்தால் இந்த அளவுக்கு கொடுரமாக நடந்திருக்க மாட்டான். அவன் எப்படி அவனை போலவே இருக்கலாம்? நானும் வேலைக்காரிக்கு பிறந்தவனும் ஒண்ணா? என்று மனதுக்குள் கருவிக் கொண்டான்.
ஆனால் இருவரின் உருவ ஒற்றுமையும் யாதவ் கிருஷ்ணாவின் பிறப்பும் தனக்கு எதிர்ப்பார்க்காத அளவிற்கு ஒரு பொக்கிஷத்தை தரப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
வெற்றிவேந்தனுக்கு கடைசியாக இருந்த நம்பிக்கை, முரளியின் திருமணம் தான்!
முரளி படித்து முடித்ததும், தொழில் மொத்தமும் அவனுக்கு ஒப்படைத்துவிட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, இறுதி கட்ட வாழ்க்கையையாவது செல்வியுடனும் இளையமகன் யாதவனுடனும் கழிக்கலாம் என்று நினைத்து அதற்கான காலம் வரும் என்று காத்திருந்தார்
ஆனால் முரளி கிருஷ்ணாவிற்கு பழங்கால கட்டிடங்களையும் வரலாற்றையும் அறிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் எம்.ஏ ஆர்க்கியாலஜி படித்து பிஎச்டி முடித்தான். எப்போதும் ஆராய்ச்சி என்று கிளம்பிச் சென்றான். இதில் வெற்றி வேந்தனுக்கு பலத்த ஏமாற்றம் தான்.
அது போதாதென்று, பெண்களுடன் சுற்றினாலும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அவனுக்கு இல்லை. முரளிகிருஷ்ணாவின் அழகிற்கும், ஆளுமைக்கும் மயங்காத பெண்களே இல்லை. அத்தோடு அவன் படிப்பும் சொத்தும் கூடுதலாக பெண்கள் மத்தியில் மயக்கத்தை கொடுத்திருந்தது.
எப்போதும் அவன் மேல் வந்து விழும் பெண்களை பயன்படுத்திக் கொண்டானே தவிர, திருமணம் செய்து கொள்ள நினைத்ததே இல்லை. வெற்றியும் எத்தனையோ முறை சொல்லி பார்த்துவிட்டார். மகனின் திருமணம் தான் தனக்கு கிடைக்கும் விடுதலை என்று அவர் நினைத்திருக்க, முரளி அந்த சுதந்திரத்தையும் கொடுப்பதாக இல்லை.
முரளி கிருஷ்ணா அரசுத்துறையில் தொல்லியல் ஆய்வாளாராக பணியில் சேர்ந்தான். அவனோடு அஸ்வினும் சேர்ந்துக் கொண்டான். முதலில் ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தவன் மெல்ல மெல்ல ஆதாயத்திற்காக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். தனக்கு பொக்கிஷம் போன்று எதாவது கிடைக்காதா என்று இரவு பகல் பார்க்காமல் அவன் ஆராய்ச்சி செய்ய செய்ய, அவன் திட்டம் தெரியாமல் அரசாங்கம் அவனுக்கு பதவி உயர்வையும் அவார்டுகளையும் வாரி வழங்கியது.
இந்த சூழ்நிலையில் தான் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு சென்றான் முரளி கிருஷ்ணா. அங்கே முதன் முறையாக செந்தாழினியை பார்த்தான்.
ஒரு முறை பார்த்தால் திரும்பி பார்க்க வைக்கும் அழகி இல்லை, கண்களை திருப்பவே முடியாத அளவிற்கு பேரழகியாக இருந்தாள். தேவலோகத்தில் இருந்து வந்த தேவகன்னிகை போன்ற எழிலோடு இருந்தவளை பார்த்ததும் முதன் முறையாக அவளை திருமணம் செய்துக் கொண்டு தன் ராஜ்ஜியத்தின் ராணி ஆக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டான் முரளிகிருஷ்ணா.
அதுமட்டுமில்லாமல் அவள் மற்றவர்களை போல முரளியை பார்த்து அவனிடம் மயங்கவில்லை. அவனிடம் மட்டும் அல்ல எந்த ஆணையும் அவள் கண்டு கொள்ளவே இல்லை. அதுவே அவனுக்கு செந்தாழினியின் மேல் தீராத ஈர்ப்பை விதைத்திருந்தது.
அவளிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் விருப்பத்தை சொல்லிப் பார்த்தான். ஆனால் செந்தாழினி எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை.
வழக்கமாக ஆபிசில் செந்தாழினியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முரளி, அங்கே இருப்பவர்களை சத்தமாக திட்டுவான். “செந்தாழினி, முரளி உனக்கு டிரை பண்றாருனு எங்க எல்லாருக்கும் வெளிப்படையாவே தெரியுது. நீ ஏன் கண்டுக்காம இருக்கே? அவர் மாதிரி ஹான்ட்ஸ்சம் யங் சார்மிங் யாருமே இருக்க மாட்டாங்க. அவர் பார்வை என் மேல விழாதானு நான் ஏங்காத நாள் இல்லை தெரியுமா? நீ என்னடி ரொம்ப பிகு பண்ணிக்கிறே” என்று கேட்பாள் உடன் வேலை செய்யும் தோழி.
“அழகும் படிப்பும் பணமும் மட்டும் போதாது அனு, நல்ல குணமும், அன்பும், மனிதாபிமானமும் இருக்கணும். இந்த மனுஷனை பார்க்கும் போதே தெரியல? உடம்பு முழுக்க ஆணவம், திமிர், நான் என்கிற கர்வம், ஈகோ எல்லாம் இருக்கு, எனக்கு இந்த ஆள் செட்டாக மாட்டான். நான் அவனை கவனிச்சா அவன் அட்வான்டேஜ் எடுத்துப்பான். அவன் செய்யறது எல்லாம் தேவையில்லாத ஆணி. செய்துட்டு போகட்டுமே எனக்கு எந்த நஷ்டமும் இல்ல” என்று தோள்களை குலுக்கினாள் செந்தாழினி.
“ஏய் இவரு ஆல்பா மேல் வகையை சேர்ந்த ஆன்டி ஹீரோடி, சிங்கம் மாதிரி இருக்கார், அவரை போய் வேணாம்ங்கிறயே”
“ஆன்டி ஹீரோ எல்லாம் கதைக்கு வேணும்னா செட்டாகலாம், கூட வச்சு எல்லாம் வாழ முடியாது, வாழ்க்கை நரகமாயிடும்” என்றாள் செந்தாழினி
இவர்களின் பேச்சை தற்காலிகமாக கேட்டு விட்டான் முரளி கிருஷ்ணா. இது அவனுடயை ஈகோவை உசுப்பி விட்டு இருந்தது. ‘இனி நீயே என்னிடம் மயங்கிற மாதிரி வித்தையை கண்டுபிடிச்சு உன்னை என் காலடியில் விழவைக்கிறேன்டி’ என்று கருவிக் கொண்டான்.
பல வருடங்களாக ஆராய்ச்சி செய்ததில் அவனுக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைத்திருந்தது. அதில் அவன் தேடிக்கொண்டிருந்த ஆதாயம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக தோன்றியது.
அந்த ஒலைச்சுவடியின் அர்த்தத்தை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாததால் பழைய ஓய்வுப்பெற்ற ஆர்க்கியாலஜிஸ்ட் மற்றும் வரலாற்று ஆய்வாளரான மிஸ்டர் ஆருத்ரனை சந்திக்க அவர் வீடு தேடி சென்றான்.
“என்ன விஷயம்? யார் நீங்க?”
“சார் நான் முரளி கிருஷ்ணா ஆர்க்கியாலஜிஸ்ட், உங்களோட பொசிஷன்ல தான் நான் இப்போ இருக்கேன்”
“ஓ அப்டியா? வாங்க உட்காருங்க. என்ன விஷயமா வந்திருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”
“சார் எனக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைச்சிருக்கு, அதில் இருக்கிறது ரொம்பவும் பழைய எழுத்துக்களா இருக்கு, அது தான் உங்க கிட்ட வந்தேன்”
“இதுக்கு எதுக்கு நீங்க வந்தீங்க மிஸ்டர் முரளி? அப்பிஷயலா எனக்கு போன் பண்ணியிருக்கலாமே” என்று புருவம் சுருக்கினார்.
“இது அன்அபிசியல் அதான்” என்றான் முரளி தயங்கிய குரலில்
ஒரு கணம் யோசித்தவர், “சரி கொடுங்க என்ன இருக்குனு பார்க்கலாம்” என்று அவனிடமிருந்து ஓலைச்சுவடியை வாங்கியவர் அதிலிருந்தவற்றை படித்து விட்டு, “முரளி நீங்க தேடுற பொருள் அவ்வளவு எளிதா கிடைக்காது. இதுலயே பலப்பேர் மரணம் அடைஞ்சதா சொல்லப்பட்டு இருக்கு. தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம்”
“இல்ல சார், நான் ரிஸ்க் எடுக்கறதா முடிவு பண்ணிட்டேன். நீங்க அதில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளை எப்படி கையாளனும்னு கைட் பண்ணா போதும். நீங்க வாழ்க்கையில் நினைச்சு கூட பார்க்காத பெரிய தொகை உங்களை வந்து சேரும்” என்றான் முரளி
“பணத்தை விட உயிர் முக்கியம் முரளி, முதல்ல வெளியே போங்க” என்றார் ஆருத்ரன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான குரலில்.
அதற்கு மேல் அவரிடம் கெஞ்சுவதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் அங்கிருந்து கிளம்பினான் முரளி கிருஷ்ணா.
அவன் சென்றதும் உள்ளே இருந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் செந்தாழினி.
“டாடி, எதுக்கு முரளி கிருஷ்ணா உங்களை பார்த்துட்டு போறாரு” என்றபடி தந்தையின் அருகில் அமர்ந்தாள்.
ஆருத்ரன் நடந்ததை சுருக்கமாக சொன்னார். “என்ன டாடி அவனை சும்மாவா விட்டீங்க. நியாயமா அந்த ஓலைச்சுவடி அரசாங்கத்துல தான் சேர்க்கணும். நீங்க முதல்ல மேலிடத்துக்கு இந்த விஷயத்தை தெரிவியுங்க, அவனை சும்மா விடக்கூடாது” என்றாள் படப்படப்புடன்
“இல்லம்மா, இந்த ஓலைச்சுவடி யாருகிட்ட கிடைக்குதோ அவங்க அதில் இருக்கிற விஷயத்தை தேடி போவாங்க. ஆனால் அவங்களுக்கு மரணம் தான் கிடைக்கும். மறுபடியும் இந்த ஓலைச்சுவடி மாயமா மறைஞ்சுடும். கொஞ்ச நாள் கழிச்சு வேற யார் கையிலாயாவது கிடைக்கும். இது ரொம்ப காலமா நடந்துட்டு வர்ற விஷயம் தான். என்னை கேட்டா இந்த ஒலைச்சுவடி அரசாங்கத்துக்கு மட்டுமில்ல யார் கையிலயும் கிடைக்காம அழிஞ்சு போயிடுறது நல்லது”
“என்னப்பா என்னென்னவோ சொல்றீங்க?”
“என்னோட கவலை எல்லாம் இப்போ அந்த முரளி கிருஷ்ணாவை பத்தி தான். பேராசையால வாழ்க்கையையே அழிச்சுக்க போறான். உன் கூட தானே வேலைப் பார்க்கிறான். முடிஞ்சா அவனுக்கு புத்திமதி சொல்லு” என்றார் ஆருத்ரன்.
தந்தை பூடகமாக பேசி முடித்ததால் செந்தாழினி முரளி கிருஷ்ணா அப்படி என்ன செய்ய போகிறான் என்று அவனறியாமல் அவனை கண்காணிக்க தொடங்கினாள்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் முரளி கிருஷ்ணா பிரதமரின் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றான். செந்தாழினியின் புறகணிப்பும், ஆருத்ரன் உதவி செய்ய மறுத்ததும் முரளி கிருஷ்ணாவை தூண்டி விட, என்ன ஆனாலும் சரி, அந்த ஓலைச்சுவடியில் இருக்கும் விஷயத்தை தானாகவே தேடி கண்டுபிடித்தாக வேண்டும் என்று முடிவெடுத்தான்.
பின்பு வெற்றிவேந்தனிடம் சென்று தான் ஒரு ஆராய்ச்சிக்காக செல்வதாகவும் திரும்பி வந்தபின்பு செந்தாழினியை மணந்துக் கொள்வதாகவும் கூறினான். எப்படியும் தான் நினைத்ததை அடைந்து விடுவோம், அதைக் கொண்டு செந்தாழினியின் மனதை வென்று விடலாம் என்று நினைத்திருந்தான்.
அத்தோடு வேறு சில விஷயங்களையும் தன் தந்தையிடம் சொல்லி இருந்தான். மகனின் ஆணைப்படி அதற்காகவே வெற்றிவேந்தன் பதினைந்து வருடங்களுக்கு பிறகு தன் மனைவி செல்வியையும் யாதவ் கிருஷ்ணாவையும் சந்திக்க வந்தார்.
ஆனால் வெற்றிவேந்தனின் நிலையை பற்றி முழுவதும் தெரியாத யாதவ் கிருஷ்ணா தந்தையின் மேல் கோபம் கொண்டிருந்தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்றவன், அதை தாயிடம் காண்பிக்க ஆசையோடு கூட்டத்திலிருந்து வெளியே வந்தால் அங்கே வெற்றிவேந்தனை கண்டதும் ஆத்திரமாக வந்தது அவனுக்கு
என் அம்மாவையும் என்னையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிட்டு அப்பனா எந்த கடமையும் செய்யாமல், இப்போ எந்த முகத்தை வச்சுக்கிட்டு இந்த ஆள் வந்திருக்காரு என்று மனதிற்குள் பொருமிக் கொண்டவன், முதலில் அன்னையிடம் சொல்லி இந்த ஆளை வீட்டிற்குள் வரவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி விரைந்தான்.
இனி முரளியின் சக்கரவியூகத்துக்குள் யாதவ் சிக்குவானா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)