வேங்குழல் 6

வெற்றிவேந்தன் காரில் மீண்டும் செல்வியின் வீட்டை அடைவதற்குள், குறுக்கு தெருக்களில் புகுந்து தன் வீட்டை அடைந்திருந்தான் யாதவ் கிருஷ்ணா.

 

“அம்மா” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான்

 

“யாதவா, எதுக்குடா இப்படி காட்டு கத்தல் கத்தறே” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மோர்க்குழம்பை கிளறிக் கொண்டிருந்தார் செல்வி.

 

“ஓஹோ, அப்போ, அந்தாளு வந்தது உனக்கு தெரியுமா? சமையல் வேலை எல்லாம் தடுபுடலா நடக்குது போல” என்றான் கோபமாக

 

“யாதவா, அப்பாரை அந்தாளுனு சொல்லுவியா நீ? அவர் காதுல கேட்டா எவ்வளவு வருத்தப்படுவாரு?” அதட்டினார் செல்வி

 

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது, இத்தனை வருஷமா பொண்டாட்டி பிள்ளை இருக்காங்களா? செத்தாங்களானு எட்டி பார்த்தாரா அந்த ஆளு? இப்போ எதுக்கு வந்திருக்காராம்? எப்படியோ போய் தொலை, கேட்டா கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சொல்லுவ. அந்தாளு போன பின்னாடி சொல்லி அனுப்பு. நான் ஏரிக்கரை பக்கமா போயிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு திரும்பியவன் சற்றே அதிர்ந்தான்.

 

ஏனென்றால் வெற்றிவேந்தன் வேலு இருவருமே அங்கு தான் நின்றிருந்தார்கள். அவர்கள் இருந்த தோரணையை பார்த்தால் அவன் பேச்சை கேட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சற்று திகைத்தாலும் ‘நான் உண்மையை தானே சொன்னேன்’ என்று தோளை குலுக்கி கொண்டு வாசலை நோக்கி சென்றான்.

 

“யாதவா, நான் உன்கிட்ட பேசறதுக்காக தான் வந்திருக்கேன்” என்ற தந்தையின் அழுத்தமான குரலில் அப்படியே திரும்பாமல் நின்றான்.

 

“முரளி கிருஷ்ணா கிளம்பி போய் ஆறு மாசம் ஆச்சு, இன்னும் வீட்டுக்கு வரல. அவன்கிட்ட இருந்து எந்த தகவலும் இல்ல. அதுக்காக தான் உன்கிட்ட உதவி கேட்க வந்திருக்கேன்”

 

“அய்யோ என்ன சொல்றீங்க? என் மகன் முரளியை காணலயா? வந்தவுடனே இத ஏன் என்கிட்ட சொல்லல” என்று பதட்டமாக பேசிய தாயை உறுத்து விழித்தான் யாதவ் கிருஷ்ணா.

 

அதில் செல்வி வாயை கப்பென்று மூடிக் கொள்ள, “உங்க மகன் என்ன சின்ன பையனா திருவிழாவுல காணாம போறதுக்கு? 37 வயசாகுற தடிமாடு தானே? அவனா போனா தான் உண்டு, அவனை யாரு கடத்த போறாங்க? அப்படியே காணாம போயிருந்தா அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க? போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளெய்ண்ட் கொடுங்க” என்றான் தந்தையின் முகத்தை திரும்பி பார்க்காமல்

 

“இல்லப்பா போகும் போதே அவன் சொல்லிட்டு தான் போனான். ஒரு வேளை நான் திரும்பி வரலைனா போலீஸ்க்கு எல்லாம் போக வேண்டாம், யாதவ் கிட்ட பேசி என்னை தேட சொல்லுங்கனு சொல்லிட்டு போனான்”

 

அதைக் கேட்டு அடக்கமாட்டாமல் சத்தமாக சிரித்தான் யாதவ், “நான் தொலைஞ்சு போக போறேன்னு சொல்லிட்டு தொலைஞ்சு போனவன் உலகத்துலயே உங்க மகனா தான் இருப்பான்” என்று சிரித்தபடி சொன்னவனின் முகம் இப்போது இறுக்கமானது.

 

“என்னை கண்டாலே உங்க மகனுக்கு பிடிக்காதே, என்னை எதுக்கு அவனை தேட சொல்றான்? இதுல என்ன உள்குத்து இருக்கு? ஓஹோ ஒரு வேளை நான் சொத்துல பங்கு கேட்டு வந்திடுவேனோனு போட்டு தள்ள பிளான் பண்ணிட்டானா உங்க மகன்?” என்றான் புருவம் உயர்த்தி

 

செல்வி இப்போது பயத்துடன் வெற்றிவேந்தனை பார்க்க, அவர் இல்லை என்று தலையசைத்தார்.

 

“அவன் போகும் போது சொன்னதை அப்படியே சொல்றேன், அப்போ தான் உனக்கு புரியும்” என்றவர் முரளிகிருஷ்ணா தன்னிடம் பேசியதை சொல்ல தொடங்கினார்.

 

“அப்பா, நான் ஒரு விஷயத்தை ஆராய்ச்சி செய்ய போறேன். அதை நான் கவர்மண்டுக்கோ பொது மக்களுக்கோ சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க. என்னை ஒரு பைத்தியக்காரன்னு தான் நினைப்பாங்க. அதுமட்டுமில்லாம அதை உண்மைனு சொல்லி அவங்களுக்கு நிரூபிக்கணும்னு எந்த கட்டாயமும் எனக்கில்லை. அதே சமயம் அது உண்மை தானானு எனக்கே முழுசா தெரியாது. 

 

அதை தெரிஞ்சுக்க தான் நான் இப்போ போறேன். திரும்பி எப்போ வருவன்னு சொல்ல முடியாது. என்னோட டைம் லைன் ஆறு மாசம். ஆறுமாசத்துக்குள்ள நான் திரும்பி வரலைனா, எனக்கு ஏதோ ஆபத்துனு அர்த்தம்” என்று நிறுத்தினான் முரளி கிருஷ்ணா.

 

“முரளி, என்னடா என்னென்னவோ சொல்றே? திகிலா இருக்கு எனக்கு. முதல்ல எதை கண்டுபிடிக்க போறே? அதை சொல்லு, அவ்வளவு ஆபத்து இருக்கிற விஷயத்தை தேடி நீ போய் தான் ஆகணுமா?” என்றார் வெற்றிவேந்தன் பதட்டத்தோடு.

 

“நான் சொல்றதை மட்டும் கேளுங்க. உங்க கருத்தை கேட்கிறதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை.  நான் என்ன கண்டுபிடிக்கபோறேன்னு சொல்றதா இல்ல, அது எனக்கு கிடைச்சிட்டா நான் தான் இந்த உலகத்தையே ஆட்சி செய்ய போறேன். இந்த முயற்சியில் எனக்கு நிறைய ஆபத்து இருக்கு, ஆறுமாசத்துக்கு மேல ஆகியும் நான் வரலைனா, அது தான் எனக்கு உதவி வேணும்னு நான் உங்களுக்கு கொடுக்க போற குறிப்பு. அதை புரிஞ்சுகிட்டு நீங்க யாதவனை அனுப்பி வையுங்க”

 

“போன் பண்ணி குறிப்பு கொடுக்க முடியாதா?” வெற்றிவேந்தன்.

 

“நான் போற இடத்துல போன் வேலை செய்யுமானு தெரியாது. போன் வேலை செய்தால் எனக்கு உதவி தேவைப்படாது” என்றான் முரளி கிருஷ்ணா

 

“எல்லாம் சரி, உனக்கு தான் யாதவ்வை கண்டாலே பிடிக்காதே. உன்னால தானே அவனை…” முடிக்க முடியாமல் நிறுத்தினார்.

 

“சொல்லுங்க, ஏன் நிறுத்திட்டீங்க? ஆமா! நான் தான் அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பனேன். அதுக்காக? எனக்கு ஒரு பிரச்சனைனு வந்தா அவன் வரமாட்டானா?” என்று புருவம் உயர்த்தி கேட்ட மகனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

 

“இதுக்கு அவன் ஒத்துக்குவானா? அவனால உன்னை தேடி கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறியா?”

 

“அவனை ஒத்துக்க வைக்கிறது உங்க பொறுப்பு. நீங்க தான் அடிக்கடி சொல்வீங்களே. அந்தம்மாவுக்கு உண்மையிலே என் மேல ரொம்ப பாசம்னு. அப்படி உண்மையிலே பாசம் இருந்தா அவங்க மகனை அனுப்பி என்னை கண்டுபிடிக்க சொல்லுங்க. இதுல தெரிஞ்சுட போகுது அவங்க காட்றது பாசமா? இல்ல வேசமானு. 

 

அப்புறம் அவனால கண்டுபிடிக்க முடியுமானு கேட்டீங்க இல்ல? அவன் உடம்புல  உண்மையில நம்ம வம்சத்தோட ரத்தம் ஓடுச்சுனா கட்டாயம் என்னை கண்டுபிடிப்பான்”

 

வெற்றிவேந்தன் முரளி கிருஷ்ணாவின் வார்த்தைகளை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே யாதவ் கிருஷ்ணாவின் கழுத்து நரம்புகள் கோபத்தில் புடைத்துக் கொண்டன. ‘ராஸ்கல் நான் மறுக்கவே முடியாதபடி எப்படி செக் வச்சிருக்கான்’ என்று தன் விரல்களை மடக்கி முஷ்டியால் சுவற்றை ஓங்கி குத்தினான்.

 

வெற்றிவேந்தன் பேசிக் கொண்டே இருந்தார். “சரி முரளி, எங்கே போறே? எங்கே தங்க போறேனு எதாவது குறிப்பையாவது கொடுத்துட்டு போ. அதை வச்சாவது யாதவ் உன்னை தேடி வருவானில்ல”

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் சொன்ன விஷயத்தை மட்டும் அவன்கிட்ட சொல்லுங்க. மத்த விஷயத்தை அவனே பாத்துக்குவான். என் போனை மட்டும் அவன்கிட்ட கொடுங்க” என்று சொல்லிவிட்டு தன் போனை தந்தையிடம் கொடுத்துவிட்டு கிளம்பி சென்று விட்டான் முரளி கிருஷ்ணா.

 

அவரும் அந்த போனை தோண்டி துருவி பார்த்தார். அவன் அதில் எந்த குறிப்பையும் குறித்து வைத்திருக்கவில்லை. சரி எப்படியும் ஆறு மாதத்திற்குள் மகன் திரும்பி வந்து விடுவான் என்று காத்திருந்தார். ஆனால் அவன் சொல்லி சென்றது போல ஆறு மாதங்கள் கடந்தும் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. 

 

முரளி கிருஷ்ணாவுக்கு ஏதோ ஆபத்து என்று பயந்து உடனே யாதவ் கிருஷ்ணாவை தேடி வந்திருக்கிறார்.

 

வெற்றிவேந்தன் பேசி முடித்ததும் யாதவ் கிருஷ்ணா நக்கலாக தன் தாயை பார்த்தான். “கேட்டியா கதையை? இந்தாளு பதினைந்து வருஷமா உன்னையோ என்னையோ பார்க்க வரலை. இன்னைக்கு வந்திருக்கிறது கூட நம்மள பாக்கறதுக்கு இல்ல. அவர் மகனை காப்பத்தறதுக்கு. இதுகூட தெரியாம அந்தாளுக்கு சமைச்சுட்டு இருக்கே. இவங்க எல்லாம் பணக்காரங்க மட்டும் இல்ல. பக்கா சுயநலவாதிங்க” என்றான் கோபமும் ஆற்றாமையுமாக

 

“யாதவா, அப்படி சொல்லாதப்பா. என்னோட சூழ்நிலை உங்களை பிரிஞ்சு இருக்கிறது போல ஆயிடுச்சு. உன்னையும் உன் அம்மாவையும் நான் நினைச்சு வருந்தாத நாள் இல்ல” என்று அவர் சொல்லும் போதே நக்கலாக சிரித்தான் யாதவ்

 

“நீ நம்ப மாட்டேன்னு தெரியும், ஆனால் இதுதான் நிஜம். சரி அதை விடு. முரளி  இத்தனை வருஷத்துல முதல் முறையா உன்னை பத்தி பேசியிருக்கான். உன்னால தான் அவனை காப்பாத்த முடியும்னு நம்பறான். அவன் நம்பிக்கையை நீ காப்பாத்திட்டா, உன் மேல அவனுக்கு இருக்கிற துவேஷம் போயி இரண்டு பேரும் ஒண்ணா ஆகிட மாட்டீங்களானு ஒரு நப்பாசைல தான் உன்னை தேடி வந்தேன்.

 

நீ சொன்னது போல நான் சுயநலக்காரன் தான். என் இரண்டு மகன்களும் ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்கணும்னு நினைக்கிற பேராசைக்காரன். ஆனா அது நடக்குமானு தெரியல” என்றார் கண்கலங்க

 

“வாய்ப்பே இல்ல தான். அவன் பெரிய இவன், அவன் சொல்லிட்டான்னு நான் அவனை தேடிட்டு போகணுமா? என்னால எல்லாம் முடியாது. நீங்க கிளம்பலாம்” என்றான் யாதவ் விட்டேற்றியாக

 

வெற்றிவேந்தன் முகம் வாடிவிட்டது. அதை பார்த்த செல்வி “யாதவா, அப்பா முதல் முறையா உன்கிட்ட ஒரு விஷயம் செய்ய சொல்றாரு. அதை கேள்வி கேட்காம செஞ்சு முடிக்க வேண்டியது மகனா உன்னோட கடமை. அவர் சொல்றத கேளு. முரளியை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வா. அப்போ தான் இந்த வீட்டில உனக்கு இடம் கிடைக்கும்” 

 

“அவர் அப்பாவா அவரோட கடமைய செஞ்சுட்டாரா? நான் என் கடமைய செய்ய? இப்போ என்ன? புதுசா வந்த புருஷனுக்காக என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்றியா? சரி வெளியே இருக்கிற மாட்டு கொட்டாயில படுத்துக்கிறேன். எனக்கென்ன புதுசா? உன்னை விட முத்துகருப்பனும் லஷ்மியும் என்னை நல்லா பாத்துப்பாங்க” என்று கோபமாக பேசிவிட்டு வெளியே சென்றான். 

 

மாட்டு கொட்டகையில் இருந்த காளை மாட்டிடம், “கருப்பா நானும் உன் கூடவே தங்கிக்கவா?” என்றான்

 

அதுமுறைக்கவும், “சரி சரி முறைக்காதே, உன் ஆளு லஷ்மி முன்னாடி உன்னை கருப்பானு சொன்னா உனக்கு தான் புடிக்காதே. முத்து உன் கூடவே தங்கிக்கவா?” என்று காளையிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

“இப்போ என்ன பண்றதுங்க ஐயா?” என்றார் வேலு தன் முதலாளியை பார்த்து கவலையுடன்

 

“வேலுண்ணா, அவனை எப்படி பேசி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும். நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. இன்னும் இரண்டு நாள்ல அவனே உங்களை தேடிட்டு வருவான்” என்றார் செல்வி உறுதியான குரலில்.

 

வெற்றிவேந்தன் கெஞ்சும் பார்வையில் செல்வியை பார்க்க, அவரோ கண்களை மூடி பராவாயில்லை என்பது போல சைகையில் சொல்லிவிட்டு உணவு பறிமாறினார். இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். காரில் ஏறும் போது வெற்றிவேந்தன் தன் மகனை பார்த்தார். யாதவ் லஷ்மியிடம் பால்கறந்து அதை அப்படியே குடித்துக் கொண்டிருந்தான்.

 

ஒரு பெருமூச்சுடன் டிரைவரை காரை எடுக்கும்படி கூறினார். அவர்கள் சென்றபின் செல்வி லஷ்மியிடம் வந்து, “ஏய் லஷ்மி,  என் மகனுக்கு மட்டும் நல்லா பசியாத்து. ஆனால் அவன் சென்னைக்கு போய் அவனோட அப்பா செய்ய சொன்ன வேலையை செஞ்சு முடிக்கிறேன்னு சொல்ற வரைக்கும் நான் சாப்பிட போறதில்லை, நான் சொன்னதை அப்படியே அவன்கிட்ட சொல்லிடு” என்றுவிட்டு செல்வி வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

 

பால் அருந்துவதை நிறுத்திவிட்டு பின்னாலேயே சென்றான் மகன், “அம்மா”

 

“என்னடா?” என்றார் செல்வி கோபமாக

 

“உனக்கு நான் எனக்கு நீனு சந்தோசமா தானே இருந்தோம்? வந்த ஒரே நாள்ல அந்தாளு நம்மள  பிரிச்சு விட்டு போயிட்டார் பாத்தியா? நீ ஏம்மா சாப்பிட மாட்டேன்னு சொல்றே?” என்றான் மகன் அமர்ந்திருந்த தாயின் காலை கட்டிக்கொண்டு.

 

“யாதவா, என் வாழ்க்கையில எத்தனையோ பழி சொல்லுக்கு ஆளாயிட்டேன், இப்போ நீ முரளியை கண்டு பிடிக்கலனா, அவன் எப்பவும் சொல்ற மாதிரி நான் அவன் மேல காட்டினது பாசம் இல்ல வேசம்னு சொல்லுவான். அது பரவாயில்லையா? நீயே சொல்லு” என்றார் செல்வி மகனின் தலையை வருடியபடி

 

“இப்போ என்னை என்னம்மா பண்ண சொல்ற?” என்றான் யாதவ் சலிப்பாக

 

“நீ முரளியை தேடி கண்டுபிடிச்சு அப்பாகிட்ட சேர்த்திட்டு வந்துடு. அவரோட நிம்மதி தான் எனக்கு முக்கியம். நமக்கு சொத்து பத்து எதுவும் வேணாம், நான் சொல்றத கேப்ப தானே யாதவா?”

 

“உனக்காக செய்றேம்மா. இந்த முரளி ஏதோ பிளான் பண்ணி என்னைய எதுலயோ சிக்க வைக்க நினைக்கிறான். பரவாயில்லை. நானா? அவனானு பாத்துக்கிறேன். நான் நாளைக்கே சென்னைக்கு போறேன்” என்றான் யாதவ்.

 

மகனின் தலையை வாஞ்சையோடு தடவி கொடுத்தபடி பழைய நினைவுகளில் கண் மூடி அமர்ந்திருந்தார் செல்வி.

 

******

 

மறுநாளே யாதவ் கிருஷ்ணா வீட்டு வாசலில் வந்து நிற்கவும் பால்கனியில் இருந்த வெற்றிவேந்தனுக்கு சந்தோஷத்தில் கைகால் புரியாமல் குதுகலித்தார்.

 

“வேலு வாசல்ல யாதவ் நிக்கிறான் பாரு, அவனை உள்ளே கூட்டிட்டு வா” என்றார் சத்தமாக, மகன் உள்ளே வருவதற்குள் சின்ன பிள்ளை போல குதித்துக் கொண்டு கீழே இறங்கினார்.

 

உள்ளே வந்த யாதவ் ஒரு அந்நியத்தன்மையோடு நின்றிருந்தான். இதே வீட்டில் தனக்கும் தன் அன்னைக்கும் நடந்த கொடுமைகைளை எண்ணி பார்த்தவனின் ரத்தம் சூடேறியது. அதைவிட கொடுமை அந்த ராட்சஷனை இவன் தேடி கண்டுபிடிக்க வேண்டுமாமே, எரிச்சலாக இருந்தது.

 

“என்ன பார்க்கிறே வேலு, சீக்கிரம் உன் மருமகனுக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் சமைக்க தொடங்கு” என்றார் வெற்றி

 

“ப்ச், நான் இங்கே விருந்து சாப்பிட எல்லாம் வரல, உங்க மூத்த மகன் கடைசியா கிளம்பும் போது கொடுத்துட்டு போன போனை மட்டும் கொடுங்க. நான் அவனை தேடி கண்டுபிடிச்சுட்டு தகவல் சொல்றேன்” என்றான் எங்கேயோ பார்த்துக் கொண்டு

 

தன் சட்டை பையிலிருந்த போனை அவனிடம் நீட்டியவர், “எங்கே போய் அவனை தேடப்போறே யாதவா?” என்றார்

 

“அவன் ஆர்க்கியாலஜிஸ்ட் தானே. அவன் வேலை செஞ்ச ஆபிசுக்கு போய் தான் விசாரிக்கணும், அவனை மாதிரியே போக போறேன். அப்போ தான் அவன் எங்கே போனான்? எதுக்கு போனான்னு தெரியும்” என்றான்

 

“நீ எப்படி..” என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார்.

 

அவர் சொல்ல வந்ததின் அர்த்தம் புரிய முகம் இறுகியது யாதவ் கிருஷ்ணாவுக்கு

 

பற்களை கடித்துக் கொண்டு, “கருப்பா இருக்கிற என்னை உங்க சிவப்பான மகன்னு ஒத்துக்க மாட்டாங்கனு பார்க்கறீங்களா? அதுக்கு எத்தனையோ மேக்கப் சாதனங்கள் வந்துடுச்சு, அதை நான் பார்த்துக்குறேன்” என்றான்.

 

“அதுக்காக சொல்லல யாதவா, அவன் ஆர்க்கியாலஜிஸ்ட் படிச்சிருக்கான், நிறைய பேர்கிட்ட இங்கிலிஷ்ல தான் பேசுவான். நீ எப்படி சமாளிப்பனு தான்…” என்றவர் மேலும் தயங்க

 

“அலங்காநல்லூர்ல மாடு மேய்ச்சிட்டே இருந்திருப்பேன்னு நினைச்சிட்டீங்களா? ஒரு அப்பனுக்கு தன்னோட மகன் என்ன படிச்சிருக்கான்னு கூட தெரியலைனா கூட பரவாயில்லை. அவன் படிச்சிருக்கானானே தெரியல உங்களுக்கு” என்று நக்கலாக சொன்னாலும் அவன் குரலில் வலி தெரிந்தது.

 

“நானும் படிச்சிருக்கேன். உங்க மகன் அளவுக்கு இல்லனாலும் இரண்டு டிகிரி வாங்கி இருக்கேன். அப்புறம் ஊர்ல நான் ஒண்ணும் சும்மா சுத்திட்டு இல்ல. பதினெட்டு வயசில் இருந்தே பால்பண்ணையில் கிடைக்கிற பாலை வச்சு நெய், வெண்ணெய், பால்கோவானு ஊர்ல இருக்கிறவங்களையே செய்ய வச்சு, எக்ஸ்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.  அதை வச்சி தான் என்னோட படிப்பு செலவை பாத்துக்கிட்டு அம்மாவையும் பாத்துக்கிட்டேன். 

 

என்னோட காலேஜூக்கு சிறப்பு விருந்தினரா உங்க மகன் ஒரு நாள் வந்திருந்தான். என்னை எப்பவும் நேருக்கு நேரா பார்க்காதவன் குறுகுறுன்னு பார்த்துட்டு போனான். அப்போ புரியல, இப்போ புரியுது. பயபுள்ள எதுக்கோ ஸ்கெட்ச் போட்டு இருக்கான். அது என்ன ஸ்கெட்ச்னு தான் இப்போ கண்டுபிடிக்கணும்” என்றான் யாதவ்

 

“அவன் என்னவேனா செய்துட்டு போகட்டும். நாம நல்லதையே நினைப்போம். முரளி உன்னை பார்த்ததும், என்கிட்ட உன்னை பத்தி பேசினதையும் வச்சு எனக்குள்ள நம்பிக்கை வந்திருக்கு. கண்டிப்பா ஒரு நாள் உன்னையும் செல்வியையும் அவன் புரிஞ்சுப்பான் யாதவா”

 

“ப்ச், நடக்காத விஷயத்தை பத்தி பேசி நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. அவனோட போன்ல என்ன இருக்குனு பார்த்து அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும். இனி முரளியோட போனை நான் யூஸ் பண்ண போறதால, எதாவதுனா நீங்க அவனோட நம்பருக்கே போன் பண்ணுங்க” என்று விட்டு வெளியே செல்ல எத்தனித்தான்

 

“தம்பி, சாப்பிட்டு போப்பா” என்றார் வேலு அவசரமாக

 

“வேணாம் மாமா, நீங்க சொன்னதே போதும்” என்று அவரை பார்த்து புன்னகைத்தான் யாதவ்.

 

முரளி கிருஷ்ணாவிற்கும் இவனுக்கும் தான் எத்தனை வித்தியாசம் என்று வேலு மட்டுமல்ல வெற்றிவேந்தனும் அதையே தான் நினைத்தார்.

 

“சரி மாமா, நான் கிளம்புறேன்” என்று அவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வெளியேறினான்.

 

ஹோட்டலில் அவன் எடுத்திருந்த அறையில் படுக்கையில் படுத்தபடி முரளி கிருஷ்ணாவின் போனை ஆராய்ந்தான். அதில் தொழில்முறை சார்ந்த நபர்களின் எண்களும் செய்திகளுமே இருந்தது. சமூக வலைத்தள செயலிகளை ஏற்கனவே லாக் அவுட் செய்திருந்தான்.

 

புகைப்படம் எதாவது இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே இல்லை ஒன்றை தவிர. புருவ முடிச்சுடன் அந்த போட்டோவை பெரிது படுத்தி பார்த்தான். அந்த புகைப்படத்தில் செந்தாழினி சிரித்துக் கொண்டிருந்தாள்!

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top