திருமண நாள் காலை அழகாக விடிந்தது.
விருந்தினர்களின் வாகனங்கள் வரிசை கட்டி வர ஆரம்பித்தது.
ருத்ரனின் சொந்தம் என்ற வகையில் மஹேந்திரன் , சுபத்ரா மற்றும் அவர்களின் தவப்புதல்வி சுபிக்ஷா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடைப்பெற இருந்தது. மக்கள் வாத்தியங்களின் ஓசை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
கீதாஞ்சலிக்கு இணையாக மோகனாவிற்கும் புடவைகள் ,தங்க நகைகள் என அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அழகுக்கலை நிபுணர்களின் கை வண்ணத்தில் இரு பெண்களுமே தனிப்பொலிவுடன் மிளிர்ந்தனர்.
மோகனாவின் அலைப்பேசிக்கு சில அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தது.
அழைப்புகளை ஏற்று பேசியவளின் முகம் குழப்பத்தையும் பதற்றத்தையும் தத்தெடுத்தது.
நகத்தை கடித்துக் கொண்டு அமரந்திருந்தாள் மோகனா.
அப்போது உள்ளே நுழைந்த ஜானகி அதனை கவனித்து விட்டு அவளது கையில் பட்டென்று ஒரு அடியை போட்டாள், “ இப்ப எதுக்கு நகத்தை கடிச்சிண்டு இருக்க? எல்லாம் சரியா இருக்கு தானே…? ஏதானும் வேணுமா?” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே ஆதவ் உள்ளே நுழைந்தான்.
“ என்ன ஆதவ் உனக்கென்ன இங்க வேல ? “ என்றாள் ஜானகி.
“ ம்மா.. மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணனும். அதுக்காக மோகனாவோட ஃபர்த் சர்டிபிகேட்டை கேட்டுருந்தேன். இன்னைக்கே ரெஜிஸ்டர் பண்ணிடலாம்னு தான்…எல்லாம் அரேன்ஜ் பண்ணிருக்கேன் கீதுக்காவோடது கூட வாங்கிட்டேன்.” என்றவன் மோகனாவின் புறம் திரும்பினான்.
அடர்பச்சை நிற பட்டுப்புடவையில் மெழுகு பொம்மை போலிருந்தாள் மோகனா.
சற்றே பூசிய உடல்வாகும், குண்டு கன்னங்களும் , நீண்ட மையிட்ட விழிகளும் கவர்ந்திழுத்தது ஆதவ்வை.
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் தோளில் தட்டிய ஜானகி, “ நீ தான் டா அவ கழுத்துல தான் தாலி கட்டப் போற. பார்த்துண்டே நிக்காம போய் ரெடி ஆகு போ…” என்றவள் மோகனாவிடம் ,” ம்மா…மோகனா ஆதவ் கேட்ட ஃபர்த் சர்டிபிகேட்டை எடுத்து வச்சிருக்கியா? இருந்தா அதை எடுத்து அவன் கையில் கொடுத்துடு…”என்றாள்.
“ இ…இல்ல…நான் எடுத்து வைக்கல…அப்பறமா…எ..எடுத்துத் தர்றேனே…” என்றாள் தயக்கத்துடன்.
ஜானகி ஆதவ்வை பார்க்க , அவனோ, “ம்ம்…சரி…சரி…கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கப்பறம் எடுத்து வை…ரிஸ்ஜிஸ்ட்ராரை கையில பிடிக்குறதே கஷ்டம் ” என்று கூறி விட்டு அவளது அறையிலிருந்து வெளியேறினான்.
அதற்குள் மோகனாவின் அலைப்பேசிக்கு அழைப்புகள் தொடர்ந்து வர திடுக்கிட்டு ஜானகியை பார்த்தாள்.
ஜானகி அதனை கவனிக்கவில்லை போலும், “ ஆமா…உன்னோட தங்கச்சியை இன்னைக்கு கூட நீ கூட்டிண்டு வரலையே? ஏன்? அப்படியென்ன படிப்பு அவளுக்கு? உன்னோட கல்யாணத்துக்கு வரக்கூட முடியாத அளவுக்கு? ம்ம்…அவளை கண்ணுல கூட காட்டல நீ. ஆமா அவளுக்குன்னு எடுத்த ட்ரெஸ்ஸையெல்லாம் கொடுத்துட்டு தானே..?” என்றபடி மோகனாவின் தலையிலிருந்த பூவை சரி செய்து விட்டாள்.
“ ம்ம்..ஆமா…ஆன்ட்டி…இன்னைக்கு அவளுக்கு…” என்று ஆரம்பிக்கும் போதே வெளியே இருந்து ருத்ரன் குரல் கொடுக்க , “தோ...வரேன்னா…” என்றவள் அவளது முகத்தை முன்பு பின்னும் திருப்பி நெட்டி முறித்தவள், ”நன்னா மெழுகு பொம்மை மாதிரி இருக்க…கண்ணே பட்டுடும் . அதனால் தான் ஆதவ் உன்னை வச்ச கண் வாங்காம பாத்துண்டு இருந்தான் போல…இதோ பாரு..உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நேக்குத் தெரியாது..ஆனா இனி எல்லாமே நல்லதா தான் நடக்கணும்ன்னு ஆசைப்படுறேன்…இனிமே ரெண்டு பேரும் தனித்தனி ரூம்ல தங்க வேண்டாம். அப்பறம்… உன்னோட தங்கச்சியை சீக்கிரமா நம்ம ஆத்துக்கு கூட்டிண்டு வந்துடு..” என்று கூறி விட்டு வெளியேறினாள்.
ஜானகி அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர் அழைப்புகள் மோகனாவிற்கு வந்தது. அவற்றையெல்லாம் துண்டித்து விட்டாள்.
ஜானகி வெளியேறியவுடன் ஒரு பெருமூச்சுடன் அவளுக்கு வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் , “ஹ…லோ…”என்றாள் தடுமாற்றமாக.
எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ தெரியவல்லை ஆனால் பதிலுக்கு மோகனா, “ ம்ம்…இ..தோ…வர்றேன்…இல்ல இல்ல.. வந்துடுறேன்…”என்றவள் அலைப்பேசியை துண்டித்து விட்டு அறைக்குள் இருந்த பெண்களிடம், “நான் அவர் கிட்ட ஃபர்த் சர்டிபிகேட்டை கொடுத்துட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்…” என்றாள்.
அதற்கு அங்கிருந்த பெண்ணொருத்தி, “ அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல தாலி கட்ட போறாரு ல…அதுக்குள்ள அவரை பாக்காம இருக்க முடியலையா? இப்ப வெளியே எல்லாரும் இருப்பாங்களே…நீங்க இப்ப வெளியே போனா நல்லா இருக்காது. அதை எங்கள் ல யார் கிட்டயாவது கொடுங்க…நாங்க போய் கொடுத்துடுறோம் “ என்றாள்.
“இ..இல்ல..இன்னும் நேரம் இருக்கே….நானே…அவர் கிட்ட போய் கொடுத்துடுறேனே…உங்களுக்கு..எ.. எதுக்கு சிரமம்?”என்றாள்.
“அதில்லை…சிஸ்டர்.”என்று மறுத்து கூற முயன்ற பெண்ணை கையமர்த்திய மற்றொருப் பெண், “ஹேய்…நீ உங்க பாட்டி காலத்துலயே இருக்க…அவங்க தான் வருங்கால ஹஸ்பண்ட்டை பாக்கணும்னு ஆசைபடுறாங்கல்ல போயிட்டு வரட்டும். இங்க தானே… கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை தனியா பேசணும்னு ஆசைப்படுறாங்க…போகட்டும் விடு…”என்று கூறிய அப்பெண், “சீக்கிரமா போய் பேசிட்டு வந்துடுங்க சிஸ்டர்…உங்களை காணோம்னா எங்களை தான் கேப்பாங்க..சோ…சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க…” என்று கூறி மோகனாவை அனுப்பி வைத்தாள் அப்பெண்..
அதே சமயம் அந்தத் திருமண மண்டபத்தின் பின்புற வாசலில் வந்து நின்றது அந்து கருப்பு நிற தார் ஜீப்.
காவல் பலமாக தான் இருந்தது.
இருப்பினும் அதையெல்லாம் தாண்டி சரியாக மண்டபத்தின் பின்புற வாசலில் நுழைந்து மளிகைச் சாமான்கள் இறக்கும் இடத்தில் வந்து நின்றது.
அதிலிருந்து தனது நீண்ட கால்களை வெளியே நீட்டி இறங்கி நின்றான் மிருகேந்திரன்.
தலையில் அணிந்திருந்த கருப்புத் தொப்பியை சரி செய்தவன் கருப்பு நிற குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டான். தனது கைக்கடிகாரத்தை சரி செய்து நேரத்தைப் பார்த்தான்.
மோகனா தனது அலைப்பேசியுடன் வெளியே வந்து தூணின் ஓரமாக நின்றவள் தனது அலைப்பேசியிலிருந்து கீதாஞ்சலியை அழைத்தாள்.
மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்த கீதாஞ்சலி கண்ணாடியில் தனது பிம்பத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கீது…ஓவரா பண்ணிட்டு இருக்க டி… பாவம் மிருகேன்…அவனை ரொம்ப கஷ்டப்படுத்துற…இந்த கல்யாணம் அவசியம் தேவையா?” என்று மனம் ஒரு புறம் கூக்குரலிட அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு, அவளது சிந்தனையை கலைத்த மோகனாவின் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ ஹலோ…யாரு…? “ என்று கம்பீரமாக ஒலித்தது அவளது குரல்.
அதில் ஒரு கணம் உடலும் உள்ளமும் பதறியது மோகனாவிற்கு.
சமாளித்துக் கொண்டவள். “ நா…நாந்தான்….மோ…மோகனா பேசுறேன்….””என்றாள்
“இப்ப போய் எதுக்கு கால் பண்ணியிருக்க?”
“ இல்ல ரொம்ப முக்கியமான விஷயம்…அதான்..” என்று இழுத்தாள்.
“ம்ம்ச்…எதுவாயிருந்தாலும் அப்பறம் பாக்கலாம் ..இப்ப ஃபோனை வை….” என்று கூறி அழைப்பை துண்டிக்க முயல், “ ஹ..ஹலோ…ஹலோ…ப்ளீஸ்…ப்ளீஸ்….ப்ளீஸ்…ஒரு நிமிஷம் வச்சுடாதீங்க…ரொம்பவே அர்ஜெண்ட். ஒரு ப்ராப்ளம் கொஞ்சம் கீழ வர முடியுமா?”என்றாள் பதற்றத்துடன்.
மோகனா கீதாஞ்சலி கீழே வர மாட்டாள் என்று நினைத்து பதற , கீதாஞ்சலிக்கோ மோகனாவின் குரலில் இருந்த பதற்றம் ஏதோ பிரச்சினை என்று நினைக்கத் தோன்றியது.
“ என்ன விஷயம்? நா எதுக்கு இப்ப கீழே வரணும்?”என்றாள் நிதானமாக.
“ ப்ளீஸ்…என் கிட்ட எதுவும் கேட்காதீங்க…நான் பின் வாசல் பக்கத்துல நிக்குறேன்…நீங்களும் பின் வாசலுக்கே வந்துடுங்க….” என்று கூறி விட்டு துண்டித்து விட்டாள்.
யோசனையுடன் நெற்றியை நீவி விட்டவள் அவளது அறையில் யாருமில்லை என்பதால் கதவை வெறுமையாக சாற்றி விட்டு வெளியேறினாள்.
மண்டபத்தின் பின் புற வாசலை யாரும் பெரிதாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் அவள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. ஆட்களின் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.
அவளது அறையை ஒட்டியே பின் பக்க வாசலுக்கு படிக்கட்டுகள் இருந்ததால் கீதாஞ்சலி கீழே சென்றது யாருக்கும் தெரியாமல் போயிற்று.
பின்பக்க நுழைவு வாயிலில் அருகே உள்ள மின்தூக்கியின் முன்பு பதற்றத்துடன் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள் மோகனா
வேக வேகமாக அவளருகே வந்த கீதாஞ்சலி, “என்ன விஷயம்? இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க நீ? இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம்…இ்ப்ப வந்து ஏதோ பிரச்சினைன்னு அது இதுன்னு சொல்லிட்டு இருக்க…என்னன்னு சீக்கிரமா சொல்லு. கொஞ்ச நேரத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க. ரூம்ல இல்லன்னா தேடுவாங்க…” என்று கடுகடுததாள்.
“ அது வந்து….அது…அந்த கருப்பு கலர் ஜீப்ல….ஒருத்தர்…நின்னுட்டு இருக்காரு…அவரு..அவரு…” என்று கூறி நிறுத்தினாள்.
“ஏய்…அறிவில்லை உனக்கு?என்ன விஷயம் பட்டுன்னு சொல்லு…இந்த நேரத்துல வந்து ஜீப்பு…ஆளுன்னு உளறிட்டு இருக்க….நான் கிளம்புறேன்…” என்று கோபமாக கிளம்பியவளை கைப்பிடித்து நிறுத்தியவள் , “ப்ளீஸ்….அவரு…அவரு…உங்களை பார்க்கணும்னு சொன்னாரு…ரொம்பவே ரிக்வெஸ்ட் பண்ணினாரு….அதான்….” என்று இழுத்தவளை சுட்டுக் தள்ளும் பார்வை பார்த்தவள், “ உன்னை….வந்து கவனிச்சுக்குறேன்…” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவள் விறுவிறுவென அந்த கருப்பு நிற ஜீப்பை நோக்கி நடந்தாள்.
பயத்திலும் பதட்டத்திலும் வியர்வையில் குளித்திருந்தாள் மோகனா…. கண்கள் கலங்க ஆரம்பித்தது….
சரியாக அந்நேரத்தில் அவளது அலைப்பேசி சிணுங்க, எடுத்து காதில் வைத்தாள்.
“உன் வேலை முடிஞ்சது…திரும்பிப் பாக்காம போயிடு….இல்லன்னா…நா சொல்லிட்டு இருக்க மாட்டேன்…செஞ்சிடுவேன். உன் தலை இந்த பக்கம் திரும்பிச்சு …அவ்வளவு தான்….பணமும் கைக்கு வராது…எதுவும் கிடைக்காது.அது மட்டும் இல்ல…நான் சொன்னதை செஞ்சிடு வேன்…” என்று அந்தக் குரல் மிரட்டியது.
கால்கள் தடுமாற படிக்கட்டுகளை நோக்கி நடந்தவளுக்கு திருமணமே வேண்டாம் என்று தோன்றி விட்டது.
ஏதேனும் தவறு நடந்து விட்டால் ஆதவ் தன்னை சும்மா விட மாட்டான் என்று தெளிவாகத் தெரிந்தது.
கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டவள் மண்டபத்தை விட்டு வெளியேற முடிவு செய்து வாசலை நோக்கி நடந்தாள்.
அதற்குள் அவளை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட ருத்ரன் வேகமாக அவளருகே வந்து, “என்னம்மா இங்க நின்னுட்டு இருக்க? இன்னும் கால்மணி நேரத்துல கல்யாணம் இங்க என்ன பண்ணிட்டு இருக்க.?மேல போ…எல்லாரும் தேடப்போறாங்க…” என்று கூறியதோடு மட்டுமில்லாமல் அவளை கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
ஜானகியும் மோகனாவை கடிந்து கொண்டாள். பின்னர் அவளது தோற்றத்தை சரி செய்து விட்டு நேராக மணமேடைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
கீழே கருப்பு நிற ஜீப்பினருகே வந்த கீதாஞ்சலி மூடியிருந்த சன்னல் கண்ணாடியை தனது விரல்களால் படபடவென தட்டினாள்.
சில கணங்கள் மௌனமாக கழிய…
ஜீப்பின் கண்ணாடி மெதுவாக இறக்கப்பட்டது.
ஜீப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் லேசான அதிர்ச்சியை தத்தெடுத்தது.
“ ஹலோ…! கமிஷ்னர் மேடம் என்ன இன்னைக்கு ஜாலியா கல்யாணம் பண்ணிட்டு போகலாம்னு நினைச்சிங்க போல. ஆனா பாருங்க உங்களால நினைக்க மட்டுந்தான் முடியும். அதை செயல்படுத்த முடியாது…சரி சரி..பேசினது போதும்….மிஸர்ஸ் கீதாஞ்சலி மிருகேந்திரன்…நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்றபடி ஜீப்பிலிருந்து இறங்கி நின்றான்.
“நான் கீதாஞ்சலி ருத்ரேந்திரன் தான்…மிஸ்டர்…”
“ம்ம்…” என்று போலி வியப்பைக் காட்டி புருவத்தை உயர்த்தியவன் , “மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு உன்னை தூக்கிட்டு போக எனக்கு நிமிஷமாகாது…ஆனா அந்த மாதிரி சில முட்டாள்த்தனங்களை நான் பண்ணறதில்லை…சோ…நீங்களா வர்றீங்களா…இல்ல நானே உங்களைத் தூக்கிட்டு போகவா? “ என்றவன் அவளருகே நெருங்கி நின்றான்.
அவனை முறைத்து விட்டு திரும்பிச் செல்ல முயல , அவளது கரங்களை பிடித்து இழுத்தவன் தன்னோடு நெருக்கிக் கொண்டு பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து வலுக்கட்டாயமாக அவளது கழுத்தில் கட்டினான்.
அவனிடமிருந்து திமிறக்கொண்டு விலக முயன்றவளை தனது உடல் பலத்தால் அடக்கியவன் மூன்று முடிச்சிட்டு விட்டு மெல்ல விலகினான்.
அவளது பார்வை நெருப்புக் கங்குகளாக அவனை சுட்டெரித்து விட்டு திருமாங்கல்யத்தை பார்த்தது.
அவளது கரங்கள் அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை வேகமாக கழற்ற முயல், அதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவன் போல கயிற்றை எடுத்து அவளை அணைத்தபடி பின்புறமாக அவளது கரங்களைக் கட்டிக் ஜீப்பினுள்ளே தள்ளி வேகமாக வாகனத்தை எடுத்தான்.
மண்டபத்தின் பின்புற வாசல் வழியாக சீறிக் கொண்டு சென்றது அவனது கருப்பு நிற தார் ஜீப்.
சிறது தூரம் சென்றவுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன் , “ ஏற்கனவே நான் கட்டினதை தான் கழட்டி எறிஞ்சிட்டு போயிட்ட…இப்ப நான் உஷாராகிட்டேன். இதையும் கழட்ட விட மாட்டேன்.. வாழ்த்துக்கள்.மிஸர்ஸ் கீதாஞ்சலி மிருகேந்திரன்….முன்னது போலவே இதுவும் திருட்டுக் கல்யாணம் தான்….என்ன பண்றது…நம்ம ராசி அப்படி…உ…ம்ம்மா…மை டியர்….ஸ்வீட் ஹார்ட்…” என்று கண் சிமிட்டி உதடு குவித்து முத்தமிடுவது போல சமிக்ஞை செய்து சிரித்தவன் , “கொஞ்ச நேரத்துக்கு நீ சத்தம் போடாம பேசாம இருக்குறது தான் எனக்கு நல்லது….”என்றவன் முன்னால் வைத்திருந்த ஸ்ப்ரேயை எடுத்து அவளது முகத்தில் அடித்தான்
சில நொடிகளில் மயக்கத்திற்கு சென்றாள் கீதாஞ்சலி.
இங்கே திருமண மண்டபத்தில் மோகனாவின் கழுத்தில் இறுகிய முகத்துடன் மங்கல நாணை அணிவித்திருந்தான் ஆதவ்.
பயப்பந்து வயிற்றில் உருள பதட்டத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மோகனா.