கனவே சேராயோ??? 2

என்றும் தீராத என் கனவே, நீ என் வாழ்வின் துணையாக வந்து சேர்வாயா?

 

கனவே சேராயோ?? – 2

 

பனை மரம் போல வளர்ந்திருக்கும் தன் மகனை, தலையை உயர்த்தி தான் பார்த்துக் கொண்டிருந்தார் காவியா.

 

தவமாய் தவமிருந்து பெற்ற மகன்தான். அவன் ஆளுமையின் மீது அவருக்கு எப்பொழுதுமே ஒரு கர்வம் இருந்தது. இவன் தன் மகன் என்று பெருமை பொங்க பார்த்தார்.

 

“பதட்டமா கூப்பிட்டது இதுக்குத்தானா?” என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு தன் தாயை முறைத்தபடி கேட்டான் தேஜா.

 

அவனை ரசித்துக் கொண்டிருப்பதைத் தான் அவன் அப்படிக் கேட்கிறான் என்று புரிந்து புன்னகைத்தவர்.

 

“எவ்வளவு நேரம் டா? குளிக்கப் போறேன்னு சொல்லிட்டு அங்கேயே குடும்பம் நடத்துறியா? அதான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றேன். பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா தான் எல்லாம் சரியா இருக்கும். அப்பதான் அவள் கூட குடும்பம் நடத்துவ. இல்லனா இப்படித்தான் ஷவருக்கடியில குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பாரு, தலையெல்லாம் ஈரமா இருக்கு. அப்படியே வந்து நிக்குற?” என்று அதட்டியபடி அவன் கபோர்டைத் திறந்து, பூந்துவாலையை எடுத்து வந்தவர், அவனை இழுத்துக் கட்டிலில் அமர வைத்து, தலையைத் துடைக்க ஆரம்பித்து விட்டார்.

 

அவர் அப்படி பதட்டமாக அழைக்கவில்லை என்றால், அவனே பொறுமையாக எல்லாவற்றையும் செய்து விட்டுத்தான் வந்திருப்பான். ஆனாலும், அவருடைய பாசத்திற்கு அடிபணிந்து தாயின் இழுப்பிற்குப் போனான்.

 

ஷவரின் ஈரத்தில் நனைவதை விட, தாயின் அன்பில் நனைவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான். ஆனால் அவனுக்குத் தோன்றிய இந்த நினைவுகளை அவன் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறான்.

 

பகிர்ந்து கொண்டால் தாயும்-தந்தையும் வருத்தப்படுவார்கள் என்று. தேவையில்லாமல் பதட்டமாகி, தன்னை மருத்துவமனைக்கு அலைய வைத்து விடுவார்கள்.

 

வெங்கடேசன்-காவியா தம்பதியினருக்கு ஒரே ஆண் மகவு தான். அதுவும் ஐந்து வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு பிறந்தவன். அதுவரை நிலங்களை வாங்கி விற்பது என்று புரோக்கராக வேலை செய்து கொண்டிருந்தவர். அவன் பிறந்ததும் சிறிது பண முதலீட்டில் பில்டர்ஸாக மாறினார்.

 

ஆந்திர மாநில வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேசன். தொழிலுக்காக வந்த இடத்தில் காவியாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

காவியாவின் பூர்வீகம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், தகப்பனின் அந்த வம்சாவளியின் பெயரிலேயே பிள்ளைக்கு ஒரு பெயரைச் சூட்டி அழகு பார்க்க நினைத்தவர். சாய்பாபாவின் அருளால் பிறந்த தன் பிள்ளைக்கு சாய் தேஜா என்ற பெயரைச் சூட்டி அழகு பார்த்தனர்.

 

நடுத்தர வர்க்கத்தில் இருந்தவர்கள். மேல்தட்டு வர்க்கத்தை நோக்கி சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.

 

சாய் தேஜாவும் படு சுட்டி. நன்றாகப் படித்தான். தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தான் பள்ளிக்குச் செல்வான்.

 

அது நான்கு சக்கர வாகனமாக மாறியது. அவ்வப்போது மகனை அழைத்துக் கொண்டு சைட்டுக்கும் செல்வார். சிறிதளவு தொடங்கிய தொழில், ரியல் எஸ்டேட் தொழிலாக, பில்டர்ஸாக மாறினாலும், அவருடைய வளர்ச்சி ஆமை வேகத்தில் தான் இருந்தது. முக்கிய காரணம் ஆங்கில அறிவு இல்லாதது.

 

என்னதான் இன்ஜினியர்களை வைத்து வேலை செய்தாலும், வரும் பணமெல்லாம் எப்படி மறைகிறது என்று அவருக்குப் புலப்படவில்லை. ஆனால் தேஜா கல்லூரியை அடையும்போது, அவர் ஒரு நிலைக்கு வந்து விட்டார்.

 

தந்தையுடன் சென்று சென்று, அவனுக்குக் கல்லும், மண்ணும், ஜல்லியையும் பார்த்துப் பார்த்து, அதுவே அவன் மூளையை ஆக்கிரமித்திருந்தது.

 

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் போது, அதற்குச் சம்பந்தப்பட்ட படிப்பைத் தான் அவன் தேர்ந்தெடுத்தான். கல்லூரி படிக்கும் போதே சைட்டுக்குச் சென்று வேலையையும் பார்க்க ஆரம்பித்து விட்டான். அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றறிந்துக் கொண்டான்.

 

விளைவு, அவன் நான்கு வருட சிவில் இன்ஜினியரிங்கை முடிக்கும்போதே அவருக்கு அந்தத் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்திருந்தான் மகன்.

 

மகன் தலை தூக்க ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்ததும் வெங்கடேசன் சற்று ஆசுவாசமாக உணர்ந்தார். தனக்கு இல்லாத ஆங்கில அறிவு மகனுக்கு இருக்க, மகன் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்று, பொறுப்பையும் அவன் கையில் ஒப்படைக்க ஆரம்பித்து விட்டார்.

 

மேற்பார்வையிடுவது, மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்வது, சைட் வேலைகளைக் கவனிப்பது என்று அவர் கையில் எடுத்துக் கொண்டார்.

 

ஏற்கனவே மகனின் பிறப்பும், ராசியும் தான் அவரை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்று நம்பியவருக்கு, இப்போது மகனும் தொழிலுக்குள் நுழைந்து அவரை மேல் மட்டத்திற்கு உயர்த்திச் சென்று விட, எல்லாமே அவனால் தான் என்ற எண்ணம் வலுத்திருந்தது. அது உண்மையும் கூட.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நாம தொடங்கி வைக்கிற தொழிலை பெத்த பிள்ளைகள் எடுத்து நடத்த மாட்டாங்களான்னு? எத்தனையோ தந்தைகள் ஏங்கிக்கிட்டு இருக்கும் போது, நீ ரொம்ப அழகா அதை கையில் எடுத்து நடத்திட்டிருக்க. அதுல வெற்றி அடைஞ்சு காட்டியிருக்க.”

 

“எனக்கு அது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? காலேஜ் முடிச்சவுடனே பொறுப்பு உன் கையில ஒப்படைச்சிடலாம்னு நினைக்கிறேன். பெயரை கூட மாத்தி எழுதலாம்னு யோசிக்கிறேன்,” என்று கூறினார்.

 

“அதுக்கு அவசியமே இல்லப்பா. ஏற்கனவே என்னோட பேர்ல தான் நீங்க இந்த கம்பெனியே நடத்திட்டிருக்கீங்க. அதை இன்னும் நான் விரிவுபடுத்தியிருக்கேன் அவ்வளவுதான். என்னுடைய இலக்கு இந்த மாவட்டத்தோட முதல் பில்டர்ஸா நாம மாறணுன்றது தான். அதுக்கப்புறம் இந்த மாநிலத்தோட முதல் இடத்தைப் பிடிக்கணும். அதுக்கப்புறம் இந்த நாட்டோட முதலிடம்,” என்று அவன் கூறும் போதே, கனவுகள் மின்ன, கைகளை விரித்து கூறிக் கொண்டிருந்தான். அப்படி அவன் சொல்லும்போதே, அவருக்கும் அந்த ஆசை துளிர்விட ஆரம்பித்தது. அந்த அளவு திறன் படைத்தவன் தான் தன் மகன் என்ற நம்பிக்கையும் இருந்தது.

 

 அதன் பிறகு, அவனிடம் கேட்காமல் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் மகனுக்கே எழுதி கொடுத்து விட்டார். அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவனுக்கு அது சுலபமாகத்தான் மாறியது. ஒவ்வொன்றுக்கும் தந்தையிடம் சென்று நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முடிவெடுக்க வேண்டிய விஷயங்களையும், கையெழுத்திட வேண்டிய வேலைகளையும் திறம்பட செய்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் பிள்ளையார் சுழி போட்ட தந்தையை கலந்தாலோசிக்க எப்போதும் அவன் மறப்பதில்லை.

 

இதோ சொற்ப இந்த வருடங்களில் அவன் எதிர்பார்த்தது போல அந்த மாவட்டத்தின் முதன்மை நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டான். மாநிலத்தின் முதல் நிலைக்கு கொண்டு வர முற்பட்டுக் கொண்டிருக்கிறான். அதற்கு அவரும் துணையாக நிற்கிறார். ஆனால் அதற்காக அவன் மேற்கொண்ட போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. தொழிலில் மட்டுமே முழு கவனமாக இருந்தான். அதைத் தவிர அவன் கவனம் வேறு எதிலும் செல்லாதபடி பார்த்துக் கொண்டான்.

 

“அம்மா, எனக்கு இருபத்தி ஏழு வயசு ஆகுது. நீங்க என்னை சின்ன பையனாவே நினைச்சுட்டிருக்கீங்க?” தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவரிடம் சலுகையாகக் கோபித்துக் கொண்டான்.

 

“உனக்கு எத்தனை வயசு ஆனாலும் நீ எனக்கு சின்ன பையன் தான்டா,” என்றவரை பாதூரமாக பார்த்தான்.

 

அவன் இரு பக்கமும் தலையாட்டி புன்னகை பூத்தான்.

 

“உன் பொண்டாட்டி வந்துட்டா, இந்தப் பொறுப்பை அவள் கிட்ட ஒப்படைச்சிட்டு, உன் பையனோட பொறுப்பை நான் ஏத்துக்குறேன். டீல் ஓகேவா?” என்று அவனிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

 

“நைசா சைக்கிள் கேப்ல உங்க கனவை என் தலையில திணிக்காதீங்கம்மா,” என்றான்.

 

“என் கனவை உன்கிட்ட சொல்லாம, யார்கிட்ட சொல்வேன்?” என்றார்.

 

“இந்த ஸ்டேட்டோட பில்டர்ஸ் லிஸ்ட்ல நம்மளோட கம்பெனி எப்போ ஃபர்ஸ்ட் பிளேஸ்க்கு வருதோ அப்பதான் கல்யாணமே பண்ணிப்பேன்,” என்றான்.

 

“அதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன். எத்தனை பேர் அதுக்குப் போட்டி போட்டுட்டு இருப்பாங்க தெரியுமா? இப்ப வரைக்கும் நீயும் உங்க அப்பனும் சம்பாதிச்சதே போதும்டா. ப்ளீஸ்டா. நேத்து கூட தரகர் ஒரு வரனை கொண்டு வந்தார். பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா? நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு. நான் பொண்ணுங்களை கொண்டு வந்து லைன்ல நிறுத்துறேன். உனக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து தேர்ந்தெடு,” என்றார்.

 

அவனோ, “ம்ஹூம்” என்று தலையாட்டினான்.

 

“ம்ப்ச்,” அவர் சலித்துக் கொண்டார்.

 

“இன்னும் ஒரு வருஷம் டைம் கொடுங்க. அதுக்குள்ள என்னால சாதிக்க முடியலன்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்,” என்று அவரிடம் அக்ரீமெண்ட் போட்டான்.

 

“நீ பிறந்ததுக்கு அப்புறம் தான் உங்க அப்பா தொட்டது எல்லாம் துலங்குச்சு. ரியல் எஸ்டேட் பாத்துட்டு இருந்தவரு பில்டர்ஸா மாறினார். அதேபோல உன் குழந்தை பிறக்கும் போது, உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்டா.” அவன் இரு பக்கமும் தலையாட்டினான். தன் உயரத்துக்கு எழுந்து நின்றவன், தன் தாயைக் கட்டி அணைத்து விடுவித்தான்.

 

“எனக்கு ரொம்ப பசிக்குது. ரொம்ப நேரம் ஷவரில் நின்னுட்டேன். நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். அதுக்குள்ள நீங்க டிபன் எடுத்து வைங்க,” என்று கூறிவிட்டு அவரிடம் இருந்து விலகினான்.

 

மகன் பசி என்று கூறியதும் அதற்குமேல் அவர் அங்கு பேசிக் கொண்டு நிற்கவில்லை. வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.

 

தனக்குத் தோன்றிய நினைவிலிருந்து தன்னை மீட்டெடுத்த தாயை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டே தயாராகிக் கீழே வந்தான் தேஜா.

 

அவனுடைய தந்தையும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்க, மூவருமாக சேர்ந்து பேசிக்கொண்டே உணவை உட்கொண்டார்கள்.

 

அவர்களுடைய குடும்பம் மிகவும் சிறியது தான். பாசம், அன்பு என்று எல்லாம் அந்த மூவருக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. அதை பங்கு போட யாராவது ஒருவர் வருவார் அல்லவா?

 

பங்கு போட ஒருவர் வருகிறாரா? அல்லது இருவர் வரப்போகிறார்களா? அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

………

 

“நிர்மல், நிர்மல்” என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைத்துக் கொண்டிருப்பது, எங்கோ தூரத்தில் கேட்பது போல தோன்றியது அவனுக்கு.

 

ஓங்கி காலில் ஒரு அடி விழ.

 

சுல்லென்று வலித்தது. கண்களை மெல்லத் திறந்து பார்த்தான். இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மானசா தான் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

காளியின் அவதாரமாகத் தோற்றமளித்தவளைப் பார்த்ததும், கண்களை கசக்கி விட்டுப் பார்த்தான். மீனாட்சியாகத் தெரிந்த அவளுடைய முகத்தரிசனத்தைப் பார்த்து ரசித்தான்.

 

“ரொம்ப அழகு காளி நீ,” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டு வாயிலேயே போட்டுக் கொண்டான்.

 

“என் அக்கா அழகுனு சொல்ல வந்து, டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு அக்கா. ஆனா, நான் இதை சொல்லியே ஆகணும், நீங்க அவ்வளவு அழகு,” என்று சூர்யா ஸ்டைலில் கிட்டாரை வைத்து பாவனை செய்வது போல கூறினான்.

 

“உனக்கு வாய் மட்டும் இல்லனா, நாய் கூட உன்னை மதிக்காது. நேத்து ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்தியா?” என்று மானசா கேட்க.

 

“ஆமாக்கா, எப்படி கண்டுபிடிச்ச”? என்றான் இளையவன்.

 

“பெரிய கம்ப சூத்திரம், கண்டுபிடிக்கறதுக்கு கஷ்டம் பாரு?” என்று அவள் நொடித்துக் கொண்டாள்.

 

“போ அக்கா, சமீரா ரெட்டியோட டூயட் பாடிக்கிட்டிருந்தேன். எங்க ரெண்டு பேருக்கும் குறுக்கால நீங்க வந்துட்டீங்க,” என்று கொட்டாவி விட்டபடியே கூறினான்.

 

“நான் அவங்க கிட்ட கால்ஷீட் வாங்கித் தரேன்,” என்று மானசா கூற.

 

“என் அக்கானா அக்கா தான்,” என்று அவள் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவன், “இந்த அழகு யாருக்கு சொந்தமாகப் போகுதோ?” என்று ஏக்கப் பெருமூச்சோடு கேட்டுவிட்டு, மீண்டும் தமக்கையிடம் இருந்து அடியைப் பரிசாக வாங்கிக் கொண்டான்.

 

சரியாக அப்பொழுது தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தவனுக்குப் புரை ஏறியது. அவன் எதிரில் அமர்ந்திருந்த அவனுடைய தந்தை, அவசரமாக தேஜாவுக்குத் தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top