செல்வி கேட்ட கேள்விக்கு வெற்றியால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் கூட அதைபற்றி எல்லாம் யோசித்து இருக்கவில்லை. அவள் நெற்றியில் அழுந்த முத்த மிட்டு, “சரி கண்ணை துடைச்சுட்டு வா, நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
“ஐயா, நானே சாப்பிட்டுக்கிறேன், நீங்க போய் தூங்குங்க” என்றவளை அழுத்தமாக பார்த்தான் வெற்றி. “பிடிக்கும்னு சொன்னியே செல்வி?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி
ஆமா அதுக்கென்ன என்பது போல பார்த்தவளை, “இப்போ என்னை மட்டும் தனியா படுக்க சொன்னா எப்படி?” என்று கண் சிமிட்டினான்.
செல்வியின் முகம் சிவந்து விட்டது. “குழந்தை” என்று முணங்கியவளின் இடையை பற்றி தன்னிடம் இழுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி, “குழந்தை வராம நான் பார்த்துக்கிறேன். முரளி இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவான். அவன் வந்த பின்னாடி நீ என் கூட வந்து தங்கினா அவனுக்கு வித்தியாசமா தோணும். அதனால…” என்றவன் அவளை மேலும் தனக்குள் இறுக்கி கழுத்து வளைவில் தன் இதழை பதித்து தன் உள்ள கிடங்கை மனைவிக்கு உணர்த்தினான்.
செல்வி வெற்றியின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இருவருமே ஒருவித நிம்மதியை உணர்ந்தனர். இப்படியே அவர்கள் வாழ்க்கை முழுவதும் இருந்து விட்டால் போதும் என்று தோன்றியது. செல்வியை சாப்பிட வைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான் வெற்றி. அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு அவன் தோளிலேயே முகம் புதைத்திருந்தவளின் நாடியை பற்றி நிமிர்த்தி, “செல்வி வாழ்க்கையில் யாராலயும் நான் சுகப்படல. என்னோட அத்தனை கஷ்டதுக்கும் வடிகால் நீதான். நான் கேக்கும்போது எல்லாம் உன்னை எனக்கு தருவியா செல்வி?” என்றான் ஏக்கமாக
“உங்களுக்கு எந்த கஷ்டமும் இனி வராதுங்க ஐயா. முரளி தான் நமக்கு ஒரே மகன். நீங்க உங்க தொழிலை மட்டும் பார்த்துக்கோங்க. நான் உங்களையும் நம்ம மகனையும் பார்த்துக்கிறேன்” என்றவளை அள்ளிக் கொண்டு கட்டிலில் கிடத்தி, “தேங்கஸ் செல்வி” என்றபடி அவள் மீது படர்ந்தான். அதற்கடுத்து வந்த இரண்டு நாட்களும் யார் பெண் யார் ஆண் என்று தேட வேண்டி இருந்தது. காலநேரம் மறந்து இருவரும் ஈருடல் ஓருயிராக பின்னி பிணைந்திருந்தனர். வெற்றி முழுமையான தாம்பத்தியத்தை இப்போது தான் உணர்ந்திருந்தான். செல்வி அவன் கண்களை பார்த்தே அவன் விருப்பத்தை அறிந்து நடந்துக் கொண்டாள். அவனும் அவளை பூவிலும் மென்மையாக கையாண்டான். இருவரும் இரண்டு நாட்களாக உலகையே மறந்திருந்தனர்
மறுநாள் முரளி கிருஷ்ணா வந்து விட்டதால் செல்வி எப்போதும் போல முரளியின் அறையில் தங்கி கொண்டாள். வெற்றியின் நிலை புதுமண தம்பதியின் நிலையில் இருக்க, முரளி பள்ளி சென்றதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் இணைந்திருந்தான். ஆனால் செல்வியிடம் சொன்ன விஷயத்தை பற்றி மறந்திருந்தான். “குழந்தை வராமல் இருப்பதை பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவன் சொன்னதோடு சரி, அதற்கான மாத்திரையை அவன் வாங்கி தர மறந்து விட்டான். அவனாக மறந்தானா? விதி அவனை மறக்க வைத்ததா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
செல்விக்கும் அதை பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லை என்பதால் கணவன் தன்னிடம் நடத்தும் சாகசங்களில் உலகையே மறந்து கனவில் இருப்பது போல மிதந்துக் கொண்டிருந்தாள். வெற்றியின் நிலையும் அப்படித்தான் இருந்தது. எப்போது நேரம் கிடைக்கும் மனைவியை அணைக்கலாம் என்று நினைத்தானே தவிர, குழந்தை தடுப்பை பற்றிய நினைவே அவனுக்கு இல்லை.
முரளிகிருஷ்ணா மற்றும் கணவனின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே செல்விக்கு நேரம் போதவில்லை, இதில் அவளுடைய மாதாந்திர விலக்கை கூட மறந்து விட்டு இருந்தாள். இரண்டு மாதங்கள் கடந்த பின்பே தேதியை பார்த்து யோசனையானாள். அன்று மாலை வீட்டிற்கு வந்த வெற்றியிடம், “ஐயா, குழந்தை வராம பாத்துக்கிறேன்னு சொன்னீங்களே, வராது தானே?” என்றாள் அப்பாவியாக
வெற்றிவேந்தன் தலையில் கைவைத்துக் கொண்டான். ‘அச்சோ அதை எப்படி சுத்தமாக மறந்து போனேன்’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, “போனா மாசமே வீட்டுக்கு விலக்கு ஆகி இருக்கணும், இன்னும் ஆகலயா? அதுதான் கேட்டேங்க ஐயா. உங்க மேல சந்தேகத்துல கேக்கல, நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. சில சமயம் இப்படி நடக்கறது உண்டு” என்றாள் சமாதானமாக.
வெற்றி அவளின் அப்பாவி தனத்தை பார்த்து அதிர்ந்தான், “செல்வி, நான் குழந்தை வராம பாத்துக்கிறேன்னு வார்த்தையில் சொன்னா மட்டும் குழந்தை வராம போயிடுமா? அதுக்கு நீ மாத்திரை சாப்பிட்டு இருக்கணும் செல்வி”
“சரி நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு தன் வேலை பார்க்க சென்றவளை தடுத்து நிறுத்தினான் வெற்றி.
“என்னங்க ஐயா?”
“செல்வி, நீ என்கூட வா, நாம் இப்பவே ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்”
“அதெல்லாம் எதுக்கு, நீங்க மாத்திரையை வாங்கிட்டு வாங்க. முரளி வர்ற நேரமாயிடுச்சு” என்று மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தவளை அதட்டினான் வெற்றி.
“செல்வி, நான் சொன்னா கேப்பியா மாட்டியா? கிளம்பு முதல்ல” என்றான் அழுத்தமான குரலில். அவன் உள்மனது படபடப்பாக இருந்தது. அவன் அளவுக்கு இல்லையென்றாலும் இப்போது செல்விக்கும் ஏதோ புரிவது போல தோன்ற, உடனே அவனுடன் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றாள்.
மருத்துவர் செல்வியை சோதித்துவிட்டு, வெற்றியை அழைத்தார். “சார், இந்த பொண்ணு யாருனு தெரிஞ்சுக்கலாமா?” என்று தயங்கியபடியே கேட்டார்.
ஏனென்றால் பிரபல கம்பெனியின் முதலாளி, வேலைக்கார பெண் போல இருப்பவளை கூட்டி வந்திருக்கிறாரே, விஷயம் என்னவோ என்று தயங்கினார் போலும். அதை உணர்ந்துக் கொண்ட வெற்றிவேந்தன், “இவங்க என் மனைவி செல்வி. என் முதல் மனைவி இறந்ததுக்கு பிறகு நான்கு வருடங்கள் கழிச்சு எளிமையான முறையில் இவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். யாருக்கும் விளம்பரப்படுத்தல” என்றான் அழுத்தமான குரலில்.
இப்போது மருத்துவர் செல்வியின் கழுத்தில் இருந்த தாலியை திருப்தியுடன் பார்த்துவிட்டு, “வாழ்த்துக்கள் சார், உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க” என்றார்.
வெற்றி கிட்டத்தட்ட எதிர்ப்பார்த்தது தான் என்பதால் அவன் அவ்வளவாக அதிர்ச்சியடையவில்லை. ஆனால் செல்வி அதிர்ச்சியாக கணவனை ஏறிட்டாள். வெற்றி அவள் கையை பிடித்து அழுத்தி அமைதியாக இருக்கும்படி கண்ணசைத்தான். மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளை இருவரும் அமைதியாக கேட்டுக் கொண்டனர். வெற்றி அவரிடம் நன்றி சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
“ஐயா, குழந்தை வராதுனு தானே சொன்னீங்க? ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க?” என்றாள் செல்வி அழுதுக் கொண்டே
“செல்வி, குழந்தை வராம இருக்கணும்னா” என்று தொடங்கியவன் அவள் காதில் மற்ற விவரங்களை சொல்ல, “இதை ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல” என்று விசும்பினாள்
“சுத்தமா மறந்துட்டேன்டி. நீ மாதவிலக்கு ஆகலனு சொன்னதும் தான் எனக்கு நியாபகமே வந்துச்சு. நீயாவது நியாபகப்படுத்தியிருக்கலாம்”
“எனக்கு இந்த விவரம் எல்லாம் எங்க அப்பத்தா சொல்லலைங்களே” என்ற மனைவியை கனிவுடன் பார்த்தான்.
“இப்போ என்னங்க பண்றது, வாங்க இப்பவே போய் குழந்தையை..” என்று அவள் முடிக்கும் முன்னே அவன் வாயை பொத்தினான் வெற்றிவேந்தேன்.
“உன் வாயில் இருந்து அந்த மாதிரி வார்த்தையே வரக்கூடாது செல்வி. குழந்தை உருவாகதத்தக்கு முன்னாடி என்னவேனா செய்திருக்கலாம். இப்போ கரு உண்டாயிருச்சு. இனி எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்றான் தீர்க்கமான முடிவுடன்.
“அய்யோ முரளி என்ன நினைப்பானே” என்றாள் கவலையாக
“நான் அவன் கிட்ட பேசிக்கிறேன்” என்றபடி வெற்றி தன் காரை வீடு நோக்கி செலுத்தினான்.
முரளி கிருஷ்ணா ஹாலில் அமர்ந்திருந்தவன், “செல்விம்மா எங்கே போயிட்டீங்க, நான் வரும்போது நீங்க வீட்டில் தானே இருக்கணும்?” என்றான் பெரிய மனிதன் போல
“முரளி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான் வெற்றிவேந்தன்
“சொல்லுங்கப்பா”
“செல்விக்கு குழந்தை பிறக்க போகுது, உன்கூட விளையாட ஒரு குட்டி தம்பியோ தங்கையோ வரப்போறான்” என்றதும்
“அய்யா ஜாலி” என்று முரளி குதித்ததும் தான் இருவருக்கும் உயிரே வந்தது.
விஷயம் கேள்விப்பட்டு வேலு மீண்டும் வீட்டில் இருந்த வேலைகளை பார்த்துக் கொள்ள தொடங்கினான். செல்வியை பார்த்துக் கொள்ள வேலுவும் வந்துவிட்டதால் வெற்றி தன் வேலையில் கவனம் செலுத்தினான். இடையிடை செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தாய் சேய் இருவரையும் நன்றாக கவனித்துக் கொண்டான்.
ஆவணி மாதம் தேய்பிறையில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் செல்வி ஆண் மகனை பெற்றெடுத்தாள். வெற்றி வேந்தன் இரண்டாம் முறை தந்தையான மகிழ்ச்சியோடு தன் பிள்ளை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தேதியில் அதே நேரத்தில், கார்மேக நிறத்துடன் பிறந்திருக்கிறான் என்பதால் பேரானந்தம் கொண்டான். என்னவோ தன் வீட்டில் அந்த கிருஷ்ணனே வந்து பிறந்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ச்சியில் திளைத்தான்.
அதனால் தன் மகனுக்கு யாதவ் கிருஷ்ணா என்று பெயர் சூட்டினான். அன்று அந்த யாதவ கிருஷ்ணனை அழிக்க நினைத்தான் தாய்மாமன் கம்சன். இன்று இந்த யாதவனை அவன் அண்ணன் முரளி கிருஷ்ணா என்ன செய்ய போகிறானோ? அது அவனுக்கே வெளிச்சம்!
குழந்தையுடன் வீட்டிற்கு வந்த செல்வியை முரளிகிருஷ்ணா ஆசையோடு தான் சென்று பார்த்தான். அவன் அவனை போல வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருந்ததால் ஏனோ அவனுக்கு அந்த குழந்தையை அவ்வளவாக பிடிக்கவில்லை. முதல் நாள் எட்டிப்பார்த்தோடு சரி, அதற்கு பின் அவன் குழந்தையை கண்டுக் கொள்ளவில்லை.
“செல்வி, முரளிக்கு ஒன்பது வயசு ஆயிடுச்சு, நீ என் அறையில் தங்கிக்கோ, குழந்தைக்கு பசியாத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாம குழந்தை ராத்திரியில் அழுதா முரளிக்கு தூக்கம் கெடும்” என்றான் வெற்றி
முதல் பிரச்சனை அங்கே இருந்து ஆரம்பித்தது. புதிதாக பிறந்தவனால் தான் ஒதுக்க படுகிறோம் என்று நினைத்தான் முரளிகிருஷ்ணா. அவன் சென்று எதாவது கேட்டால், “முரளிப்பா, தம்பி அழுதுட்டே இருக்கான். கொஞ்சம் நீயே சாப்பிட்டுக்கிறியா?, இல்லைனா நீ ரெடியாயிடு நான் வந்து ஊட்டி விடுறேன்” என்பாள் செல்வி.
முறைத்துக் கொண்டே சென்று விடுவான் முரளி. சின்ன குழந்தை என்பதால் வெற்றியும் வேலையில் இருந்து வந்ததும் யாதவனை தூக்கி கொஞ்சுவதும் அவனுக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் அந்த வீட்டில் தான் யாரோ போல இருப்பதாக உணர்ந்தான். யாதவன் தனியாக இருக்கும் சமயங்களில் குழந்தை என்றும் பாராமல் அவனை கிள்ளி விட்டு ஓடி விடுவான்.
இப்படியே நாட்கள் நகர முரளிக்கு எப்படி யார் மீது என்ன காரணுத்துக்காக கோவத்தை காட்டுவது என்று தெரியாமல் இருந்தான். அவன் முகவாட்டத்தை பார்த்த பள்ளி தோழர்கள் என்னவென்று காரணம் கேட்க வீட்டில் நடப்பவற்றை கூற தொடங்கினான்.
“முதல்ல எல்லாம் செல்வி அம்மா நல்லா தான் பார்த்துக்கிட்டாங்கடா. இப்போ என்னை கண்டுக்கறதே இல்ல. அப்பாவும் அவனை தான் கொஞ்சறார். இத்தனைக்கும் அவன் என்னை விட கருப்பா இருக்கான்” என்று புலம்பினான் ஒன்பது வயது பாலகன் முரளி.
“டேய் செல்வி அம்மானா, உன்னை பெத்தவங்களா?” என்றான் இன்னொரு வாண்டு
“இல்லடா என்னோட அம்மா செத்துட்டாங்க. நான் தான் செல்வி அம்மா வேணும்னு அடம்பிடிச்சு எங்க வீட்லயே இருக்க வச்சிருக்கேன்”
“அப்போ அவங்க உன்னோட சித்தினு சொல்லு. முதல்ல எல்லா சித்தியும் நல்லா தான்டா பார்த்துப்பாங்க. அவங்களுக்குனு இன்னொரு குழந்தை வந்துட்டா முதல் பொண்டாட்டியோட பிள்ளைய கொடுமைப்படுத்துவாங்க. இனி உன் கதி அதோகதி தான்” என்றான் மற்றவன்
“டேய், என்னடா சொல்றே?” என்றான் முரளி அதிர்ச்சியோடு
“எல்லா படத்துலயும் அப்படி தான்டா காட்றாங்க, நான் என் பக்கத்து வீட்ல கூட பார்த்து இருக்கிறேன். இனி சித்தி கொடுமை ஆரம்பம். உன் தம்பி தான் உன் வீட்டின் ஓனர் ஆக போறான், உன்னை சீக்கிரமே வெளியே துரத்திடுவாங்க” என்று சொன்னதும் ஏற்கனவே கலங்கியிருந்த அவன் மூளையில் நஞ்சை விதைத்தது போல ஆனது.
அன்றிலிருந்து வீட்டில் எதாவது பிரச்சனை செய்து கொண்டே இருந்தான் முரளி கிருஷ்ணா. செல்வியை அம்மா என்று அழைப்பதை நிறுத்தினான். சித்தி என்றும் அழைப்பதில்லை. வெற்றி வீட்டுக்கு வந்தபின் தான் அறையை விட்டு வெளியே வருவான். செல்வி எவ்வளவு அழைத்தாலும் வரவே மாட்டான்.
வெற்றியிடம் தினம் ஒரு புகார் சொல்ல ஆரம்பித்தான். “எனக்கு சாப்பாடு ஊட்டலை, என்னை அடிச்சாங்க, கிள்ளினாங்க, உன்னை வீட்டை விட்டு துரத்திடுவேன்னு சொல்றாங்க” என்று எதாவது சொல்லிக் கொண்டு தந்தையின் முன்னால் வந்து கண்ணை கசக்குவான்.
மகன் பொய் சொல்லுகிறான் என்று நன்றாக தெரிந்தாலும் அவன் திருப்திக்காக செல்வியை அழைத்து அவன் முன்னால் அதட்டுவான் வெற்றி. அவளை அனுப்பி விட்டு மகனுக்கு எவ்வளவோ புத்தி சொன்னாலும் அவன் மனதில் அது ஏற வில்லை. முரளியால் அதை தாண்டி எந்த பிரச்சனையும் செய்ய முடியவில்லை. செல்வியை வீட்டை விட்டு அனுப்ப சொன்னால், “நீ தானே செல்வி அம்மா வேணும்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னே?” என்று தன் தந்தை கேள்வி கேட்பார் என்று உணர்ந்து செல்வியையும் யாதவனையும் கண்டுக் கொள்ளாமல் தன் போக்கில் இருக்க தொடங்கி விட்டான்.
வருடங்கள் கடந்தாலும் முரளி எப்போதும் யாதவனை தன்னருகில் வரவே விட்டதில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அடிப்பதும் நறுக்கென்று கிள்ளுவதுமாக இருந்தான். அதனால் யாதவனும் முரளி இருக்கும் திசைப்பக்கமே போக மாட்டான். யாதவனுக்கும் முரளி கிருஷ்ணாவிற்கும் ஒன்பது வயது வித்தியாசம், இருந்தாலும் முரளி யாதவனை ஒரு எதிரியை போலவே பார்த்தான்.
செல்வி எத்தனையோ முறை தன்னை முரளிக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். அவன் அதற்கெல்லாம் இடம் கொடுப்பதாக இல்லை. நான்கு வயதிலேயே தந்தையை ஆட்டி படைத்தவன் ஆயிற்றே. இப்போது வளர்இளம் பருவத்தில் இளம்காளையாக வளர்ந்துக் காெண்டு இருப்பவனை செல்வியால் நெருங்கவே முடியவில்லை.
பொதுவாக இந்த வயதில் இருக்கும் ஆண் பெண் இருபாலருமே பெற்றோரின் பேச்சை மதிக்க மாட்டார்கள். பெற்றவர்கள் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் பூமராகவும் கிரிஞ்சாகவும் தோன்றும். முரளி கிருஷ்ணா இரண்டாம் தாயான செல்வியின் பேச்சை எங்கே கேட்க போகிறான்?
செல்வி தான் தன் மூத்தமகன் தன்னிடம் முன்பு மாதிரி இருப்பதில்லை என்று அழுது கரைந்தாள். அடிக்கடி கணவனிடம் புலம்பவும் தொடங்கி விட்டாள்.
“நான் அப்பவே சொன்னேன். குழந்தை வந்திடபோகுதுனு. அப்பவே அவனை கலைச்சிட்டு இருந்தா இந்த பிரச்சனையே இல்லை” என்று சொன்ன மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் வெற்றிவேந்தன்.
“முரளி குணம் தெரியாதா உனக்கு, கொஞ்ச நாள்ல அவனே புரிஞ்சுப்பான். அதுக்காக சின்னவன் பொறந்ததை குறையா சொல்லுவியாடி. அவன் நம்மளோட ஆத்மார்த்தமான காதலுக்கு பிறந்தவன்டி. இனி இன்னொருமுறை இப்படி சொன்னே கொன்னுடுவேன்” என்று கத்திவிட்டு சென்றான் வெற்றி.
மொத்தத்தில் முரளியின் செய்கையால் யாதவன் உட்பட வீட்டில் யாருக்குமே நிம்மதியில்லாமல் போனது.
முரளி படித்துக்கொண்டிருக்கும் பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாவது வரை இருந்தது. வெற்றிவேந்தன் யாதவனையும் முரளி படிக்கும் பள்ளியிலேயே சேர்த்திருந்தான்.
யாதவ் கிருஷ்ணா பார்ப்பதற்கு முரளியை போன்றே இருப்பதால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் எளிதில் அவன் முரளியின் தம்பி என்று ஊகித்துக் கொண்டார்கள். அப்படி அவனிடம் கேட்பவர்களிடம் “சேச்சே அவன் என் தம்பி எல்லாம் இல்ல. என் வீட்டு வேலைக்காரியோட மகன். என் அப்பா அவனை பாவமேனு இந்த ஸ்கூல்ல சேர்த்திருக்காரு” என்பான்.
“டேய் அவன் அப்படியே உன் அப்பா மாதிரியும் உன்ன மாதிரியும் இருக்கான், ஏன்டா பொய் சொல்றே. ஒரு வேளை உங்கப்பா அந்த வேலைக்காரி கிட்ட ம் ம்.” என்று டீன் ஏஜ் பிள்ளைகளின் குறும்போடு அவனை கிண்டல் செய்ய முரளிகிருஷ்ணாவிற்கு கொதித்து போனது.
“அந்த வேலைக்காரி ரொம்ப கருப்பா இருப்பாங்களா முரளி? ஏன் கேக்கறேன்னா உன் தம்பியும் கருப்பா இருக்கானே” என்று மற்றவன் கிண்டல் செய்ய, முரளியின் உயிர்தோழன் அஸ்வின் அவனை தனியாக அழைத்தான்.
“மச்சான் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. சின்னவயசுல இருந்து உன்னோட எல்லா விஷயமும் எனக்கு தெரியும்ங்கிறதால உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோ. உன்னோட சொத்து முழுசும் உன்னோட அம்மாவால வந்தது. அது உனக்கு மட்டும் தான் சொந்தம். இதுல உங்க அப்பாவுக்கே உரிமையில்லாத போது, அவர் கட்டிக்கிட்ட வேலைக்காரியோட பையனுக்கு இந்த சொத்தில் பாதியை தூக்கி கொடுக்க போறீயா?” என்றான்
“அஸ்வின் நீ சொல்றது கரெக்ட் தான்டா. நான் ப்ளஸ்டூ முடிச்சதும் பதினெட்டு வயது முடிஞ்சுடும். என் அப்பாகிட்ட சொல்லி எல்லா சொத்தையும் என் பேருக்கு மாத்த சொல்றேன்”
“அதுமட்டுமில்லடா உன் அப்பாவும் இத்தனை வருஷத்துல எவ்வளவோ பணம் சம்பாதிச்சு இருப்பாரு இல்ல, அதையும் விட்டு கொடுத்திடாதே”
“இப்போ என்னடா பண்றது?”
“யோசிடா, நீ புத்திசாலி, உனக்கு நான் சொல்லணுமா?” என்றான் அஸ்வின்
ஒரு முடிவுடன் வீட்டுக்குள் சென்றவன் அங்கே விளையாடிக் கொண்டிருந்த யாதவனை கவனித்தான்.
முரளியின் பழைய விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான் யாதவ் கிருஷ்ணா. ஆவேசத்துடன் வந்து எல்லாவற்றையும் பிடுங்கி சுக்கல் சுக்கலாக உடைத்துப்போட்டான்.
யாதவ் சிறுவன் என்பதால் பெருங்குரலெடுத்து அழத் தொடங்க, வெற்றி என்னவோ ஏதோ என்று ஒடிவந்தான். “முரளி, ஏன்டா இப்படி எல்லாம் நடந்துக்குற? உனக்கு பதினெட்டு வயசு தொடங்கிடுச்சு. இன்னமும் சின்னபையன் மாதிரி நடந்துக்குற. யாதவ் கிட்ட இருக்கிற பொம்மையை ஏன்டா உடைச்சே. அவனே பழசை வச்சி தானே விளையாடிட்டு இருந்தான்?” என்றான் வெற்றி சலிப்பாக
“என் பொருளை அவன் தொடக்கூடாது, வேலைக்காரிக்கு பொறந்தவன் என்னோட திங்க்ஸ்சை எப்படி தொடலாம்” என்றதும் வெற்றி மகனை ஓங்கி அறைந்திருந்தான்.
“ஓ அந்த பொம்பளைக்காக என்னையே அடிக்க தொடங்கிட்டீங்களா? எனக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லி ஊரை ஏமாத்திகிட்டு உங்க சந்தோஷத்துக்கு பிள்ளையை பெத்துக்கிட்டீங்க இல்ல” என்றவனை மீண்டும் வெற்றி அடிக்க கையை ஓங்கவும் வேலுவும் செல்வியும் அவனை தடுத்து நிறுத்தினார்கள்.
ஒரு தந்தையை பார்த்து கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டான் முரளி கிருஷ்ணா. செல்வி காதை பொத்திக் கொண்டு கதறி அழ ஆரம்பிக்க, வேலு அங்கே நிற்க முடியாமல் யாதவனை தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
வெற்றிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. “முரளி திஸ் இஸ் த லிமிட். மேல எதுவும் பேசாதே, வெளியே போ” என்று அவன் பேச்சை நிறுத்துவதற்காக அவர் அதட்டலாக சொல்ல, “நான் ஏன் போகணும்? இது என் தாத்தாவோட சொத்து. எல்லா உரிமையும் எனக்கு தான் இருக்கு. நீங்க வேணும்னா உங்க வேலைக்கார பொண்டாட்டியையும் அந்த கரியனையும் கூட்டிட்டு வெளியே போங்க” என்று சொன்னதும் மகனை அடிப்பட்ட பார்வை பார்த்தான் வெற்றிவேந்தன்.
அன்று ரோகிணி காட்டிய அதே ஏளன பேச்சும் பார்வையும் தன் மகனிடத்தில் கண்டு துடித்து போனார். குணத்தில் தாயை கொண்டு பிறந்திருக்கிறானே என்ற வேதனையுடன் செல்வியிடம் திரும்பி, “செல்வி யாதவ்வை கூட்டிட்டு கிளம்பு போகலாம்” என்றான் பிசிரற்ற குரலில்
“ஐயா என்ன சொல்றீங்க? குடும்பம் உடையக்கூடாதுங்க” என்றாள் செல்வி அதிர்ச்சியோடு
“செல்வி, அன்னைக்கு ரோகிணி என்னை நம்பி என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ நீயும் என்கூட வரப்போறதில்லையா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா செல்வி? நான் உனக்கு மூணுவேளை சோறு போட மாட்டேனா?” என்று வெற்றி கேட்கவும் தலையில் அடித்துக் காெண்டு அழுதாள் செல்வி.
“செல்வி கிளம்புனு சொன்னேன்” கர்ஜித்தான் வெற்றிவேந்தன்.
அதற்கு மேல் நிற்காமல் செல்வி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெற்றியுடன் சேர்ந்து வெளியே வந்தாள். வேலு யாதவ்வை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தவர், “ஐயா என்ன இது பொட்டி படுக்கையோடு நின்னுட்டு இருக்கீங்க?” என்றான் பதட்டமாக
“வேலு நான் செல்வியை கூட்டிட்டு வீட்டை விட்டு போறேன். நீ முரளியை பார்த்துக்க” என்று வேலுவின் கையில் இருந்த யாதவனை வாங்க போனான்.
“அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கொஞ்சம் கேட்டுட்டு போங்க” என்றான் வேலு தீர்க்கமான குரலில்
நீயென்ன சொல்ல போறே என்பதாய் வெற்றி வேலுவை கேள்வியாக பார்க்க. “இதே மாதிரி தான் நீங்க பொறுமையை இழந்து ரோகிணி அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வெளியே போறதா கிளம்பனீங்க. அதுக்கப்புறம் அவங்க விபத்துல இந்த உலகத்தை விட்டே போயிட்டாங்க. இப்பவும் பொறுமை இழந்து பெத்த பிள்ளைகிட்ட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போறேன்னு சொல்றீங்க. நாளைக்கு முரளிக்கு எதாவது ஆச்சுனா அதுக்கும் நீங்க தான் பொறுப்பாக போறீங்களா ஐயா?” என்று கேட்ட வேலுவை அதிர்ச்சியாக பார்த்தான் வெற்றி.
“வேலு”
“நீங்க செல்வரத்தினம் ஐயாவுக்கு சத்தியம் பண்ணதை மறந்துட்டீங்களா? ரோகிணி அம்மா போல முரளியும் முன்கோபக்காரன். அவங்களை கைவிட்டுடாதேனு கேட்டு நீங்க சத்தியம் பண்ண பின்னாடி தானே அவரோட உயிர் போச்சு? வீட்டை விட்டு கிளம்பும் போது அவர் என்கிட்ட உங்களை பக்கத்துல இருந்து பார்த்துக்க சொன்னாரு. அதனால தான் இத்தனை வருஷமாக உங்க கூட இருக்கேன், இனியும் இருப்பேன். இந்த வீட்டோட வேலைக்காரனான எனக்கு இருக்கும் கடமையுணர்வு அவரோட மாப்பிள்ளையான உங்களுக்கும் இருக்கு தானே?”
“வேலு, அவன் என்னவெல்லாம் பேசிட்டான் தெரியுமா?”
“தெரியும், அவரு சின்ன பிள்ளை. நீங்க கொஞ்சம் விட்டு பிடிங்க ஐயா”
“என்ன பண்ண சொல்றே வேலு”
“கொஞ்ச நாளைக்கு செல்வியும் யாதவனும் எங்க ஊருல இருக்கட்டும். முரளி தம்பியோட மனசு மாறினதுக்கு அப்புறம் அவங்களை திரும்பவும் வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்” என்றான் வேலு
“ஆமாங்க ஐயா. வேலுண்ணா சொல்றதும் சரியா தான் இருக்கு. நம்ம விரல் நம்ம கண்ணை குத்திடுச்சுன்னா விரலை வெட்டிக்கிறமா என்ன? முரளி என்னோட மூத்த மகன். நான் கொஞ்சநாள் வீட்ல இல்லைனா என்ன தேடிட்டு அவனே ஓடியாந்துடுவான். நீங்க வேணா பாருங்க” என்றாள் செல்வி
வேலு கேட்ட கேள்வியிலிருந்து வெளி வர முடியாமல் சிலை போல நின்றிருந்தான் வெற்றிவேந்தன்.
வேலு மேலும் தொடர்ந்தான், “அதுமட்டும் இல்லைங்க. நீங்க செல்வியோட தனியா போயிட்டா ஊரு உலகம் என்ன சொல்லும். புள்ளைக்காக கல்யாணம் கட்டிக்கிட்டு, இப்போ பொண்டாட்டிக்காக சின்ன பையனை விட்டுட்டு தனியா போயிட்டான்னு சொல்ல மாட்டாங்களா? இவ்வளவு பெரிய சொத்தை 18 வயசு ஆரம்பத்தில் இருக்கிற முரளியால கட்டியாள முடியுங்களா? நீங்களே யோசிங்க. சொத்துக்காக யாராவது அவனை எதாவது பண்ணிட்டா?”
“போதும் வேலு, முரளி பேசினதையே என்னால ஜீரணிக்க முடியல. நீயும் என்னை பேசியே கொல்லாதே. சரி இப்போதைக்கு செல்வியையும் யாதவனையும் கூட்டிட்டுபோய் ஊருல விட்டுட்டு தேவையானதை செஞ்சு கொடுத்துட்டு வரலாம் வா” என்றான் வெற்றி.
“இப்போ இருட்டிடுச்சு, நாளைக்கு நான் மட்டும் செல்வியை அழைச்சிட்டு போய் விடறேன். நீங்க முரளி பக்கம் இருந்தா தான் அவன் உங்களை நம்புவான், புரிஞ்சுப்பான்” என்று வேலு சொல்லிவிட பெருமூச்சுடன் வெற்றி தன் மூத்த மகனை தேடினார்.
அவன் அப்போதே தன் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டிருந்தான். ஒன்பது வயது சிறுவனான யாதவனுக்கு நடப்பது எதுவும் புரியாமல் உடைந்து போன விளையாட்டு சாமான்களை வைத்துக் விளையாடிக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை செல்வி யாதவனை கூட்டிக் கொண்டு வேலுவுடன் கிளம்பினாள். கிளம்பும் போது முரளியிடம் சொல்லிக் கொண்டு போக எண்ணி யாதவனை அழைத்துக் கொண்டு அவன் அறை வாசலில் நின்றாள்.
இதே அறையில் யாதவனின் இப்போதைய வயதில் முரளி இருந்ததையும் எப்போதும் செல்வி அம்மா என்று அவள் பின்னால் அவன் அலைந்ததையும் எண்ணி கண்ணீர் விட்டாள்.
வாசலில் நிழலாடுவதை பார்த்த முரளி அங்கே செல்வியை கண்டதும் எரிச்சலானான். “உன்னோட டிராமா எல்லாம் என் அப்பாகிட்ட வச்சுக்கோ. என்கிட்ட வேணாம். என்னை பார்த்துக்க வந்த வேலைக்காரி நீ, என் அப்பனை வளைச்சு போட்டு சொத்துல பங்கு கேக்க புள்ளையும் பெத்து வச்சுக்கிட்ட இல்ல” என்றான் ஆத்திரத்துடன்.
“முரளி அப்படி எல்லாம் பேசாதப்பா, நானே யாதவனை கூட்டிட்டு வீட்டை விட்டு போறேன். இனி நீயும் உன் அப்பாவும் வேளா வேளைக்கு கரெக்டடா சாப்பிடுங்க, உடம்பை பாத்துக்கோ முரளி. ஐயாவையும் கொஞ்சம் நிம்மதியா வச்சுக்க, அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன். நான் போய்ட்டு வரேன்” என்றாள் செல்வி கண்ணீருடன்
“போ, ஆனா வராதே! இனி இந்த வீட்டுக்கு திரும்பி வர்ற எண்ணம் இருந்தா அதை அழிச்சிடு” என்றான் எரிச்சலாக
முரளியின் பேச்சில் செல்வி பொங்கி அழ, யாதவன் முரளியை முறைத்துக் கொண்டே “அம்மா அழாதே” என்றான். அப்போது தான் முரளி யாதவனை பார்த்தான். அவன் போட்டிருந்த உடை முரளியின் சின்ன வயது உடை. அதைப்பார்த்து ஆத்திரத்துடன் யாதவனிடம் வந்து, “டேய் என் டிரஸ்ஸை ஏன்டா போட்டிருக்க, கழட்டுடா” என்று அதட்டினான்.
“ம்ஹூம் நான் கழட்ட மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டு யாதவன் ஹாலுக்கு ஓடி வெற்றியின் கால்களை கட்டிக் கொண்டான்.
முரளி துரத்திக் கொண்டு வந்து, “இப்போ என் டிரஸ்ஸை கழட்டி தர்றீயா? இல்ல சூடு வைக்கவா?” என்று லைட்டரை காண்பித்தான்.
யாதவன் தந்தையின் ஆதரவிற்காக நிமிர்ந்து பார்த்தான். வெற்றி இறுக்கமான முகத்துடன், “யாதவா அவனோட டிரஸை கழட்டி கொடுத்திடு” என்றான். அடிக்கடி லைட்டரில் சூடு வைப்பதும் மிரட்டுவதும் முரளியின் வாடிக்கை என்பதால் பயந்து போய் யாதவன் தன் உடைகளை அவசரமாக கழட்டி போட்டான். அந்த உடைகைளை எடுத்து முரளி ஹாலிலேயே தீயிட்டு கொளுத்தினான்.
“நான் போட்ட டிரஸ்ஸை போடறதுக்கு கூட ஒரு தராதரம் வேணும்டா, ஓடிப்போ, இனி வராதே” என்ற முரளியை யாதவன் அப்போது தான் கோபத்தோடு முறைத்தான்.
அந்த சின்ன வயதில் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்தான், தன் அப்பாவை ஏறிட்டு பார்த்தான். அவர் எதாவது முரளியை திட்டுவாரா என்று எதிர்பார்த்தான்.
வெற்றி தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கண்களை இறுக மூடி, கைமூஷ்டியில் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றார்.
“அப்பா” என்று ஏக்கமாக பார்த்த யாதவனை பார்க்க தெம்பில்லாமல், “வேலு செல்வியையும் யாதவனையும் கூட்டிட்டு போ. போற வழியில் உன்னோட காசுல அவனுக்கு டிரஸ் வாங்கி கொடு” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெற்றி வேந்தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
அன்று மனைவி மாமானார் விபத்தில் இறந்தபோது ஏற்பட்ட வேதனையை விட இந்த வேதனை வெற்றியை நிலைகுலைய செய்திருந்தது.
யாதவ் கிருஷ்ணாவிற்கு அண்ணன் முரளியின் மீதிருந்த கோபத்தை விட, தன் தந்தையின் மீது அதிக கோபம் வந்தது. ஒன்பது வயது சிறுவன் பிறந்த மேனியோடு தன் மாமாவின் தோளில் தன் மானத்தை மறைத்தபடி, அந்த வீட்டை கடைசியாக வெறித்து பார்த்தான்.
(தொடரும்)