வேங்குழல் 3

 

வெற்றிவேந்தனுக்கும் செல்விக்கும் எளிமையான முறையில் அவர்கள் வீட்டிலேயே திருமணம் நடந்தது. முரளி அப்போது தான் சிரித்த முகமாய் தன் தந்தையை பார்த்தான். நிம்மதி பெருமூச்சோடு தன் அருகில் மணமேடையில் அமர்ந்திருந்த செல்வியை பார்த்தான் வெற்றி.

கருப்பு நிறத்தழகியாக இருந்தாள் செல்வி. இப்போது தான் இவ்வளவு நெருக்கத்தில் அவளை பார்த்தான். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலை அவனுக்கு இல்லை.

அவள் திருமணத்திற்கு சம்மதித்ததால் தானே இந்த நிம்மதி கிடைத்தது என்று எண்ணியவனாய் முதல் முறையாக அவளிடம், “ரொம்ப தேங்க்ஸ் செல்வி” என்றான். அவளோ அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்துக் கொண்டு “பரவாயில்லைங்க ஐயா” என்றாள்.

அன்று இரவு செல்வி எப்போதும் போல் முரளியின் அறையில் இருந்த படுக்கையில் படுத்துக்கொள்ள வெற்றிவேந்தன் தன் அறைக்குள் நிம்மதியாக உறங்கினான்.

அதற்கடுத்து வந்த நாட்கள் எல்லாம் வெற்றிக்கு புது அனுபவமாக இருந்தது. வழக்கம் போல செல்வி முரளியின் அறையில் அவனுக்கான சேவைகளை செய்தாலும் இப்போது புதிதாக வெற்றியையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள். கணவன் என்ற பொறுப்போ, இல்லை தன் மகனின் தந்தை என்ற அக்கறையோ தெரியவில்லை. 

திருமணத்திற்கு முன்பு, அவள் முரளிக்கு தேவையானவற்றை மட்டும் செய்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வரமாட்டாள். ஆனால் இப்போதெல்லாம் காலையில் வெற்றிவேந்தன் எழுந்து வெளியே வந்ததும் தயாராக காபியுடன் வந்து நின்றாள். கருப்பாக இருந்தாலும் களையான முகம் செல்விக்கு. காலையில் குளித்து பழுக்க மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் இட்டு தலை குனிந்தபடி காபி டம்ளரை தன் முன்னால் நீட்டுபவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்ப்பான் வெற்றி. 

எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்மலமான முகத்துடன் நின்றிருப்பவளின் மஞ்சள் வாசமும் அவள் தலையில் சூடியிருக்கும் மரிக்கொழுந்தின் வாசமும் ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கும். “தேங்கஸ்” என்று சொல்லி அதை வாங்கி கொள்வான். அடுத்து அவன் குளிக்க வெந்நீர் போட்டு, டவல் முதற்கொண்டு அனைத்தையும் குளியலறையில் வைத்து விட்டு “ஐயா குளிச்சிட்டு வந்திடுங்க, டிபன் ரெடிபண்ணி வைக்கிறேன்” என்பாள்.

அவன் தயாராகி வந்ததும் அருகிலேயே நின்று பார்த்து பார்த்து பறிமாறுவாள், இடையில் முரளி எதாவது கேட்டு குரல் கொடுத்தால் அங்கேயும் ஓடுவாள். பம்பரமாக சுற்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தவளின் மேல் ஒரு கரிசனம் உண்டானது அவனுக்கு.

ஏனெனில் இந்த மாதிரி உபசரணை எல்லாம் அவன் ரோகிணியிடம் கண்டதே இல்லை. அவன் வேண்டுமானால் அவளை அமர வைத்து சாப்பிட வைத்திருக்கிறான். ஒரு நாளும் அவள் அவனை சாப்பிட்டிங்களா? என்று கேட்டது கூட இல்லை. அதை வெற்றியும் இதுநாள் வரை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.

மாலை அவன் வரும் போதே செல்வி காபி பலகாரங்களுடன் தயாராக இருப்பாள். வேலுவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த மோர்குழம்பை அடிக்கடி வைத்து கொடுப்பாள். எல்லாவற்றையும் செய்துவிட்டு முரளியின் அறைக்குள் சென்று ஒடுங்கி கொள்வாள். அவளும் அவனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, வெற்றிவேந்தனும் அப்படித்தான் இருந்தான். இப்படியே ஓராண்டு காலம் அவர்கள் வாழ்க்கை தனித்தனியாகவே ஓடிக்கொண்டிருந்தது.

வெற்றிவேந்தன் இப்போது செல்வியின் அனுசரனையான உபசரிப்புக்கு மிகவும் பழக்கப்பட்டு விட்டான். எதற்கெடுத்தாலும் “செல்வி” என்று ஒரே குரல் தான். அடுத்த நிமிடம் “சொல்லுங்க ஐயா” என்று வந்து நிற்பாள்.

“ப்ச் எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஐயானு கூப்பிடாதேனு, யாரோ போல அந்நியமா தோணுது” என்பான் அலுப்பாய்

“வேறெப்படிங்க கூப்பிடுறது?”

“பேர் சொல்லி கூப்பிடு, இல்லனா மாமா அத்தான் என்று உறவு முறை வச்சு கூப்பிடுனு சொன்னேன் தானே”

“இல்லங்க ஐயா, அது சரிவராது, என்னய மன்னிச்சிடுங்க” என்பாள்.

இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேசி கொள்ள ஆரம்பித்தாலும் ஏனோ ஒருவரை ஒருவர் நேராக பார்த்து கொள்வதை தவிர்த்தனர். ஆனால் வெற்றிவேந்தன் அவ்வப்போது செல்வி அறியாமல் அவளை ரசனையோடு பார்க்க ஆரம்பித்து இருந்தான்.

ஆரம்பத்தில் முரளி சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போது அவன் பின்னால் ஓடி அவனுக்கு சோறு ஊட்டி விடுபவளை கவனிக்க தொடங்கி அவளின் ஒவ்வொரு அசைவையும் பின் தொடர்ந்து கடைசியில் அவளை மொத்தமாக ரசிக்க தொடங்கி விட்டான். ஆனால் அதற்கு மேல் முன்னேற அவன் முயற்சிக்கவில்லை. 

ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா? இருவருக்குள்ளும் மாற்றம் ஏற்படும் நாளும் வந்தது.

ஒரு நாள் வெற்றிவேந்தன் குளித்து கொண்டிருக்கும் போது குழாயில் இருந்து தண்ணீர் வராமல் நின்று விட்டது. முகத்திற்கு சோப்பு போட்டு ஷவரை திறந்தவன் தண்ணீர் வராமல் போகவே “வேலு” என்று கத்தினான். ஆனால் வேலு மார்க்கெட்டுக்கு சென்றிருந்தான்.

வெற்றிவேந்தனின் குரல் கேட்கவும், கையை பிசைந்து கொண்டு “என்னங்க ஐயா” என்றாள் செல்வி குளியலறை வாசலில் நின்றுக் கொண்டு

“செல்வி குழாயில் தண்ணி வரல, மோட்டர் போடு” என்றான்.

“ஐயோ அது எங்கன இருக்கு? எனக்கு தெரியாதுங்களே?”

“இத்தனை நாளா வீட்ல இருக்க, அதுகூட தெரியாம என்ன பண்ணிட்டு இருக்க, போய் எங்காச்சு தேடி எல்லா ஸ்விட்சையும் போட்டு பாரு, கண்ணு எரியுது எனக்கு” என்றான் எரிச்சலாக

“நான் வேணும்னா சமையல் கட்டில் குடத்தில் இருக்கிற தண்ணிய கொண்டாரட்டுங்களா?”

“சரி, எடுத்துட்டு வா சீக்கிரம்” என்று தட்டு தடுமாறி குளியலறை கதவை திறந்துவிட்டு ஒதுங்கி நின்றான்.

செல்வி இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு வந்தவள் அங்கிருந்த பக்கெட்டில் அதை ஊற்றி விட்டு திரும்பினாள். அங்கே வெற்றிவேந்தன் சோப்பு நுரையுடன் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தான். அதை பார்த்து அதிர்ந்து போய் அவசரமாக வெளியே செல்ல எத்தனித்தவள் கீழே இருந்த சோப்பு நுரையில் வழுக்கி கீழே விழுந்து விட்டாள்.

“ஐயோ” என்ற அலறல் சத்தத்தில் “என்னாச்சு செல்வி” என்று அவன் அவசரமாக முன்னே வர அவனும் கால் வழுக்கி சோப்பு நுரையோடு அவள் மேலேயே விழுந்தான். விழுந்தவனின் கண்கள் மூடியிருக்க, மூக்கின் உதவியால் அவள் வாசத்தை உணர்ந்தான், மஞ்சள் வாசமும் மரிக்கொழுந்துடன் சேர்ந்த மல்லிகையில் வாசமும் அவன் கவனத்தை சிதறடிக்க, அவள் மேலிருந்து எழும் எண்ணமே இல்லாமல் அப்படியே இருந்தான். செல்வியின் பஞ்சு மெத்தை மேனியை உணர்ந்து புதுவித உணர்ச்சியோடு ஒரு மோன நிலையில் அப்படியே இருந்தவனை செல்வியின் குரல் கலைத்தது.

“ஐயா கண்ணு எரியலையா? எழுந்து போய் குளிங்க” என்றாள் செல்வி ஒரு வித அவஸ்தையுடன்

“தண்ணி எங்கே இருக்குதுனு தெரியலையே செல்வி” என்றான் கிசுகிசுப்பான குரலில்

செல்வி தன் முந்தானையால் அவன் கண்களை துடைத்தாள், இப்போது வெற்றிவேந்தன் கண்களை திறந்து தனக்கு கீழே இருக்கும் செல்வியை ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையின் வித்தியாசத்தில் பதட்டம் தோன்ற செல்வியின் இமைகள் படபடத்தன, இதழ்கள் உலர்ந்து போயின. அவனும் அவள் நிலையை உணர்ந்து கொண்டு, அவள் உதடுகளை பார்த்தான்.

“ஏன் செல்வி உதடு எல்லாம் உலர்ந்து போய் இருக்கு, தாகமா இருக்கா?” என்றான் ஒரு மாதிரி குரலில். 

அவன் கேட்கும் போது இருவரின் உதடுகளும் உரசிக்கொள்ளும் நிலையில் இருந்தது. செல்விக்கு இப்போது நெஞ்சில் நீர் வற்றி போனது. இல்லை என்பதாக தலையை ஆட்டி பக்கவாட்டாக திரும்பிக் கொண்டாள். இப்போது கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டு இருந்தை பார்த்த வெற்றிவேந்தனின் கண்கள் உரிமையோடு அதற்கும் கீழே பயணித்தது. அவளுடைய மென்பாகங்கள் அவனின் திண்ணிய மார்பில் சிறைப்பட்டு இருந்தது. நீண்ட பெருமூச்சொன்றை அவன் வெளியிட அது செல்வியின் கழுத்தில் பட்டு அவள் உடலை சிலிர்க்க வைத்தது.

“என்னாச்சு செல்வி” என்றான் 

“ஐயா, நான் போகட்டுங்களா?” என்றாள்

“ம் போ” என்றவனை திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். இப்படி தன் மேல் ஆக்ரமித்து படுத்துக் கொண்டிருக்கும் ஆறடி ஆண்மகனை தள்ளிக் கொண்டு அவள் எப்படி போக முடியும்? நகராமல் போ என்கிறாரே? என்று அவள் விழி விரித்து பார்க்க அவள் பார்வையின் அர்த்தம் புரிய, வெற்றிவேந்தன் மந்தகாசமாக புன்னகைத்தான்.

அதற்குள் முரளியின் “செல்விம்மா” என்ற குரல் கேட்கவும், இதுவரை தன்னால் நகர்த்தவே முடியாது என்று நினைத்திருந்தவனை நொடியில் கீழே தள்ளிவிட்டிருந்தாள் செல்வி. அவசரமாக எழுந்து அப்படியே வெளியே செல்ல எத்தனித்தவளின் கரத்தை பற்றி இழுத்தான் வெற்றிவேந்தன்.

“ஐயா புள்ளை கூப்பிடுறான், நான் போகணும்” என்றாள்

“இப்படியேவா போக போறே?” என்று கேட்டவனை புரியாமல் திரும்பி பார்த்தாள். அவளுடைய சேலை முந்தானை அவன் மேல் இருந்தது. அவசரமாக தன்னை குனிந்து பார்த்தாள், வெற்றிவேந்தனை தள்ளிவிட்டு எழுந்ததில் அவளுடைய சேலை முந்தானை அவனுக்கு அடியில் மாட்டிக் கொண்டு இருக்கிறது. தன் இருகைகளால் தன் முன்னழகை மறைத்துக் கொண்டாள்.

வெற்றிவேந்தனின் பார்வை இப்போது அவள் வயிற்றில் பதிந்தது. ‘அச்சோ இவக என்ன இப்படி எல்லாம் பாக்குறாக’ என்று நினைத்தவள் குனிந்து அவன் கையில் இருந்த முந்தானையை பிடுங்க போனாள். அதில் வெற்றிவேந்தனின் விழிகள் மேலும் விரிந்து கொள்ள தன்னையே குனிந்து பார்த்தாள். 

“ஆத்தி” என்று தன் கைகளால் மீண்டும் தன்னை மறைத்துக் கொண்டு கெஞ்சலாக அவனை பார்த்தாள். அதற்கு மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் சிரித்துக் கொண்டே அவள் முந்தாணையை அவளிடம் கொடுத்தான். அவள் சென்ற பின்பும் சிரிப்பு மாறாமல் குளித்து முடித்தான்.

ஆபிசுக்கு செல்ல தயாராகி வந்தவனை, “ஐயா டேபிள்ல சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாக செல்ல எத்தனித்தவளை, “ஏன் செல்வி எப்பவும் நான் சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் நீதானே பறிமாறுவ? இன்னைக்கு என்ன புதுசா? சரி எனக்கு சாப்பாடு வேணாம்” என்று சொல்லிவிட்டு வெற்றி கிளம்ப எத்தனிக்க,

“ஐயா வெறும் வயித்தோட போகாதீங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க” என்றாள் செல்வி

வெற்றிவேந்தன் புன்னகையுடன் வந்து நாற்காலியில் அமர, செல்வி தட்டில் இட்லியை எடுத்த வைத்துக் கொண்டே வெற்றிவேந்தனை பார்த்தாள். ஏனென்றால் அவனாக போதும் என்று சொல்லும்வரை அவள் வைத்துக் கொண்டே இருப்பாள். இன்று ஆறு இட்லியை தட்டில் வைத்த பின்பும் அவன் எதுவும் சொல்லாமல் இருக்கவே கேள்வியோடு தன் ஐயாவை பார்த்தாள். அவன் பார்வை தட்டில் இருந்த இட்லியின் மேல் இல்லை, தன் மேல் இருக்கவும் திடுக்கிட்டு போனாள். கிட்டத்தட்ட ஒராண்டுக்கும் மேலாக உணவு பரிமாறிக் கொண்டு இருக்கிறாள். சாப்பிடும் போது அவன் பார்வை தட்டை விட்டு எங்கும் அகலாது. சாப்பிட்டு முடித்ததும் கிளம்பறேன் என்று அவளை திரும்பி கூட பார்க்காமல் சொல்லிவிட்டு செல்பவன் இன்று தன் பார்வையை அவள் மேனியெங்கும் மேய விட்டிருந்தான்.

“ஐயா” என்றாள் சத்தமாக

பார்வையை திருப்பாமலே “சொல்லு செல்வி”

“போதுங்களா, இன்னும் இட்லி வைக்கட்டுமா?

“எனக்கு இரண்டே போதும் செல்வி” என்றான் பார்வையை அகற்றாமல்.

அவன் பார்வை கொடுத்த அவஸ்தையில் செல்விக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்து விட்டது, “சட்னி எடுத்துட்டு வரேன்” என்று சமையலறைக்குள் ஓடி விட்டாள்.

அப்போது தான் வெற்றிவேந்தன் தன் தட்டை பார்த்தான், அதிகப்படியான இட்லியை எடுத்து வேறு தட்டில் வைத்தபடி அங்கிருந்த சட்னியை பார்த்தவன், “சட்னி இங்கே தானே இருக்கு, வேறெ சட்னி எதும் செஞ்சிருக்கியா செல்வி” என்று குரல் கொடுத்தான்.

“அது வந்து மறந்துட்டேங்க, அங்கனயே தான் இருக்கு. சாப்பிடுங்க, இதோ வர்றேன்” என்றவள் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியே வரவே இல்லை. கணவனின் பார்வை பட்ட இடமெல்லாம் குறுகுறுப்பாக இருந்தது. உடல் முழுவதும் வெட்கத்தால் சிவந்து போக, இந்த புது வித அவஸ்தையில் கண்மூடி நின்றிருந்தாள்.

“செல்வி” என்ற வெற்றிவேந்தனின் குரலில் பட்டென்று கண் திறந்து பார்த்தாள்.

“ரொம்ப சாப்டா இருந்துச்சு” என்றவனின் பேச்சில் அதிர்ந்து போய் விழித்தாள். “நான் இட்லியை சொன்னேன்” என்று குறும்பாக சொல்லிவிட்டு அவள் புடவை முந்தானையை உரிமையுடன் எடுத்து கைகளை துடைத்துக் கொண்டே மனைவியை ஆழ்ந்து பார்த்தான்.

கணவன் பார்வையில் நாக்கு உதடு எல்லாம் வறண்டு போக பேயறைந்தாற் போல நின்றிருந்தவளை பார்த்து, “ஏன் செல்வி உதடு எல்லாம் உலர்ந்து போய் இருக்கு, தாகமா இருக்கா? தண்ணி வேணுமா?” என்றான்

அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று நினைத்தவள், ஆமாம் என்று தலையை ஆட்டி, தண்ணீர் குடிக்க செல்வது போல நகர்ந்து செல்ல முயற்சித்தவளின் இடையை பிடித்து நிறுத்தினான்.

முதன் முறையாக தன் இடையை அழுத்தமாக பற்றியிருந்த கணவனின் கரத்தை அதிர்ச்சியோடு பார்த்தவளின் நாடியை ஒற்றைக்கையால் நிமிர்த்தி, “இரு நான் உன் தாகத்தை தீர்க்கறேன்” என்றபடி அவளின் இதழ்களை அழுத்தமாக பார்த்தான் வெற்றிவேந்தன்.

“ஐயா இதெல்லாம் வேணாமுங்க” என்றவளின் வார்த்தைகள் வெற்றிவேந்தனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டு இருந்தன. ஆம் அதற்கு முன்பாகவே அவன் செல்வியின் இதழ்களை தன் இதழ்களால் கவ்வியிருந்தான்.

தன் ஈர இதழ்களால் செல்வியின் இதழ்களை ஈரப்படுத்தினான். கணவனின் முதல் இதழ் அணைப்பில் தன்னை மறந்து அவன் கழுத்தில் தன் கைகைளை மாலையாக போட்டுக் கொண்டாள். இப்போது தன் இருகைகளால் தன்னவளின் இடையை பற்றி இறுக்கிக் கொண்டே நீண்ட இதழ்முத்தத்தை தன் மனைவிக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தான்.

இருவரின் இதழ் நீரும் அங்கே பாரபட்சமின்றி பரிமாறிக் கொள்ளப்பட்டது. வெற்றிவேந்தனின் கைகள் இப்போது இடையிலிருந்து மெல்ல ஊர்ந்து மேல் நோக்கி பயணிக்கவும், சட்டென்று சுதாரித்தாள் செல்வி. தன் கைகளால் கணவனின் கைகளை தடுத்தாள்.

இருவரின் இதழ்களும் அங்கே முத்த யுத்தம் நடத்திக் கொண்டிருக்க, கைகைளும் சண்டையிட்டுக் கொண்டன, அவன் பற்றிக் கொள்ள முயற்சிப்பதும் அவள் தடுப்பதுவுமாகவே இருக்கவே பொறுமையின்றி அவள் இதழ்களை கடித்து விட்டான்.

அவள் முகம் வலியில் சுருங்கவும் “சாரி செல்வி” என்று அவளை விட்டு விலகியவன் அவள் முகத்தை நிமிர்த்தி “ஏன்டி என்னை தடுக்கற? உனக்கு பிடிக்கலையா?” ஆழ்ந்த குரலில் கேட்டான். அவள் பதில் சொல்லாமல் கண்களை இறுக்கமாக மூடியநிலையில் இருக்க

“பதில் சொல்லு செல்வி, நான் முத்தம் கொடுத்தப்ப சும்மாதானே இருந்தே” அப்போதும் அவளிடம் பதில் இல்லை.

வெற்றிவேந்தனின் முகம் இறுக்கமானது “சாரி செல்வி, நானும் சராசரி ஆம்பிள்ளை மாதிரி உன்கிட்ட கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டேன். இனி என் பக்கத்திலேயே வராதே. என் வேலையை நானே பார்த்துக்கிறேன். எப்பவும் போல நீ முரளியோட தேவைகளை மட்டும் கவனிச்சுக்க” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் வெற்றிவேந்தன் செல்வியின் முகத்தை பார்ப்பதை அறவே தவிர்த்தான். ஓராண்டு காலமாக பழகி விட்டதால் கணவனுக்கு பணிவிடைகள் செய்ய முடியாமல் தவித்து போனாள் செல்வி.  அதைவிட எப்போதும் அவளுடைய ஒவ்வொரு செய்கைக்கும் அவன் சொல்லும் “தேங்க்ஸ் செல்வி” என்ற அவன் வார்த்தையை கேட்க முடியாமல் தவித்து போனாள்.

இதற்கிடையில் முரளி கிருஷ்ணா தன் கோபங்களை மறந்து தந்தையிடம் பேச தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக தன் மகன் தன்னிடம் சகஜமாக பேச முயற்சிப்பதை கவனித்த வெற்றிவேந்தனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் பேசினாலே போதும் என்று இருந்தவன் அல்லவா? அவன் கேட்கும் முன்னே அவன் நினைத்ததை செய்து அவனை அசத்தி வந்தான். 

இந்த நிலையில் தான் முரளி கிருஷ்ணா தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மூன்று நாள் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டுமேன்று தன் தந்தையிடம் அனுமதி கேட்டான். அவன் கோரிக்கை உடனே ஏற்கப்பட்டு அவனுக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்து அனுப்பி வைத்தான் வெற்றிவேந்தன்.

செல்விக்கு இப்போது முரளியும் இல்லாமல் போகவே தனிமையாக உணர்ந்தாள். வேலுவும் இவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அடிக்கடி வெளியூர் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளாமல் இருந்தது செல்விக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

அன்று இரவு சாப்பாட்டை மேஜையில் வைத்து விட்டு, செல்வி தன் அறையில் விளக்கை அணைத்து விட்டு படுத்தபடி அழுதுக் கொண்டிருந்தாள். வழக்கம் போல வெற்றிவேந்தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்து விட்டு தன் அறைக்கு செல்ல எத்தனித்தான்.

முரளியும் இல்லாமல் தனியாக இருந்தாளே, சாப்பிட்டாளோ இல்லையோ என்று தோன்ற அவள் அறையை பார்த்தான். அந்த அறை இருட்டாக இருக்கவே, லைட் போடாம தூங்க மாட்டாளே, இப்ப இருட்டறைக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்கா? என்று யோசித்தபடி அறைக்குள் வந்து விளக்கை போட்டு கொண்டே, “லைட் கூட போடாம என்ன பண்ணிட்டு இருக்க செல்வி?” என்று அவன் கேட்கவும் அவள் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது.

அழுதழுது வீங்கியிருந்த கண்களையும் முகத்தையும் பார்த்து பதறிபோனான் கணவன், “செல்வி என்னாச்சும்மா, ஏன் இப்படி அழுதுட்டு இருக்கே” என்றபடி அவள் அருகில் செல்லவும் அவளோ உடைந்து அழுதாள்

என்னவோ ஏதோ என்று பதறி போனவன், “வயிறு ஏதும் வலிக்குதா செல்வி? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் பதட்டமாக

அவள் இல்லை என்று தலையாட்டிக் கொண்டே, மீண்டும் தேம்பினாள். “என்னாச்சு செல்வி, சொன்னாதானே தெரியும்? சொல்லும்மா” என்று அவள் தோள்களை பற்றி உலுக்கினான்.

“நீங்க ஏன் என்கிட்ட பேச மாட்டேங்குறிங்க?” என்றாள் கேவிக் கொண்டே

“நீ என் முன்னாடி வந்து நின்னா தானே உன் கிட்ட பேசறதுக்கு? தனியா பேசினா என்னை லூசுனு சொல்ல மாட்டாங்களா?” என்றான்

“நீங்க தானே என் முன்னாடி வராதேனு சொல்லிட்டீங்க, அதனால தான் நான் வரல”

“நான் சொன்னா நீ வரமாட்டியா செல்வி? நான் எத்தனை முறை நீ வர்றியானு உன்னோட அறையை பார்த்துட்டே இருப்பேன் தெரியுமா?” என்ற கணவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமா செல்வி, நம்ம கல்யாணம் முரளிக்காக  தான் நடந்துச்சு. ஒரு வருஷமா நானும் உன்னை நிமிர்ந்து பார்க்காம தான் இருந்தேன். ஆனாலும் என்னையறியாமல் எனக்கு உன் மேல ஈர்ப்பு வந்துடுச்சு. நான் இவ்வளவு பலவீனமானவானு எனக்கே என்னை நினைச்சு அவமானமா இருந்தது. 

ரோகிணி என்னை எப்பவும் ஒரு பொருட்டா கவனிச்சுக்கிட்டதே இல்ல. நீ எனக்கு வேண்டியது எல்லாம் பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்ட. அப்பதான் எனக்கு தோணுச்சு நம்மைவிட பணக்கார வீட்டு பெண்ணை கல்யாணம் கட்டக் கூடாது. அப்படி கட்டினால் நமக்கு மரியாதை கிடைக்காது. நான் ஏன் உன்னை முதல்லயே பார்த்து கல்யாணம் கட்டியிருக்க கூடாது? என் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்கும், ரோகிணியும் அவளோட தகுதிக்கு ஏத்தவனை கல்யாணம் முடிச்சிருப்பானு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்ரமிச்சுட்ட. அதுக்கு காரணம் நீ என்னை பார்த்து பார்த்து கவனிச்சிக்கிட்டதுனாலயா? என் மகனை நல்லா பார்த்துகிட்டதாலயா? இல்லை உன் கழுத்துல நான் கட்டின தாலி இருக்கிறதாலயா எனக்கு தெரியல. 

என் மனசை உனக்கு வெளிப்படையா சொல்லவும் முடியாம, கணவன் என்கிற உரிமையை எடுத்துக்கவும் முடியாம திணறிட்டு இருந்தேன். நீயும் என்னை வேற மாதிரி பார்க்கவே இல்ல. நானும் என்னை அடக்கிட்டு வாழ பழகிட்டேன். அன்னைக்கு குளியலறையில் உன்னை நெருக்கமா பார்த்ததும் ரொம்ப தடுமாறிட்டேன். மனைவி தானேனு உரிமை உணர்வு தோணுச்சு. நானும் சராசரி மனுஷன் தானே செல்வி. உன்கிட்ட வெறுப்பை பார்க்கலை. பதட்டமும் வெட்கமும் தான் தெரிஞ்சது. அதனால தான் உன்கிட்ட சும்மா சீண்டி விளையாடினேன்.

“ஆனா உனக்கு பிடிக்கலைனு சொன்னதும் உன்னை கட்டாயப்படுத்த வேணாம்னு தோணுச்சு. நீ என் முன்னாடி வந்து நின்னா, வழக்கம் போல என்னால கடந்து போக முடியாது. அதனால தான் அன்னைக்கு அப்படி சொன்னேன். ஆனா நீ உண்மையாவே என் முன்னாடி வர்றதை சுத்தமா நிறுத்திட்ட. மறுபடியும் உன்கிட்ட வந்து நின்னா நான் உன்னை வற்புறுத்தறதா நினைச்சுக்க போறீயோனு நினைச்சு நானும் விலகி இருக்க தொடங்கிட்டேன்” என்றான் விளக்கமாக

தன் கணவன் முதன் முறையாக தன் மனதை வெளிப்படுத்தியதில் மீண்டும் கண்ணீர் அவள் கண்களை நிறைத்தது.

“இன்னும் ஏன்டி அழுதுட்டு இருக்கே? நான் உன்னை தொட மாட்டேன் போதுமா? நீ எப்பவும் போல நிம்மதியா இரு, நான் வரும்போது எனக்கு சாப்பாடு போடு, அதுவே போதும்” என்றான்.

கணவனை போல அத்தனை நீளமாக பேச தெரியா விட்டாலும் தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்த எண்ணியவளாக “இல்லைங்க ஐயா, எனக்கும் பிடிச்சிருக்கு” என்றாள் மெல்லிய குரலில்

“என்ன பிடிச்சிருக்கு? புரியல” 

“உங்கள தான்” என்ற மனைவியை ஆழ்ந்து பார்த்தபடி “செல்வி நீ சொல்றதோடு அர்த்தம் என்னனு தெரிஞ்சு சொல்றீயா?” என்றான் ஆழ்ந்த குரலில்

“மனைவியோட கடமை கணவனுக்கு பணிவிடை செய்யறதோடு முடியறது இல்லனு எங்க அப்பத்தா சொல்லியிருக்கு” என்றாள் மெல்லிய குரலில்

“ஓஹோ வேறென்ன சொல்லியிருக்கு உங்க அப்பத்தா?” என்றான் குறும்பாக

“அது அது வந்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் நடந்துக்கணும்னு சொல்லி இருக்கு” 

“என்ன சொன்ன? காது சரியா கேக்கல. கொஞ்சம் சத்தமா சொல்லு செல்வி”

“போங்க ஐயா” என்று முகத்தை மூடிக் கொண்டாள் செல்வி.

“ஐயாவா?, என் பேரு சொல்லி கூப்பிடு செல்வி” என்று அவன் உல்லாசமாக சொல்ல அவள் முகத்திலிருந்து கையை எடுக்காமல் தலையை இடம்வலமாக ஆட்டினாள்.

“சரி மாமானு சொல்லு” 

“ம்ஹூம், எனக்கு அதெல்லாம் கூப்பிட்டா வெக்கமா இருக்கும், நான் ஐயானு தான் கூப்பிடுவேன். என்னை கட்டாயப்படுத்தாதீங்க”

“சரி அதை விடு, உங்க அப்பத்தா இந்த கதை எல்லாம் எப்ப சொல்லுச்சு?” என்றான்

“நான் பெரியவளாகும் போதே சொல்லுச்சு, கல்யாணம் ஆன பின்னாடி புருஷனை மட்டும் தான் தொட அனுமதிக்கணும். வேறு யாரையும் கைவிரல் கூட தொடவிடக்கூடாதுனு சொல்லுச்சு”

“அப்போ அன்னைக்கு ஏன்டி என்னை தொடவிடல, அப்பவும் நான் உன் புருஷன் தானே?” என்றான் கணவன் குற்றம் சாட்டும் குரலில்

“அது அது வந்து, பிள்ளை வந்திடுமோன்னு பயம், அதான் தடுத்தேன்” என்றாள் மெல்லிய குரலில்

“ஏன் பிள்ளை வந்தா என்ன? என் பிள்ளையை சுமக்க மாட்டியா செல்வி?

படக்கென்று நிமிர்ந்தவளின் கண்களில் கண்ணீர், “அதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்ங்க, அந்த கொடுப்பினை எனக்கு இல்லை” என்றாள் வேதனையோடு

அவள் கன்னத்தை தன் இருகைகளால் பற்றி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடி  “ஏன்டி அப்படி சொல்றே?”

“நம்ம பையன் முரளி, இதை ஏத்துக்குவான்னு நினைக்குறீங்களா? என்றாள் கண்ணீரோடு

அந்த கேள்விக்கு வெற்றிவேந்தனிடமும் பதில் இல்லை. கேள்வியின் நாயகன் எப்போது எவ்வாறு நடந்துக் கொள்வான் என்று தான் யாராலும் கணிக்க முடியாதே!

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top