அத்தியாயம் 27
ரத்னாவுக்கு மீண்டும் நினைவு திரும்பிய பொழுது, தான் அதே இடத்தில் தனியே இருப்பதைக் கவனித்தாள். ஆனால், அவளுக்குத் தன் சுயநினைவு தப்பிய அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது துளியும் நினைவில் இல்லை.
அவள் இருந்த அறையின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த இருண்ட அறையிலிருந்து வெளியே செல்வதற்கோ, தப்பிப்பதற்கோ வேறு வழிகள் எதுவும் இல்லை. அப்படியே ஏதேனும் ஒரு வழி இருந்தாலும், இங்கிருந்து தப்பிச் செல்லும் எண்ணம் எதுவும் ரத்னாவுக்குக் கிடையாது; இந்தச் சூழ்ச்சியை எதிர்கொள்ளவே அவள் துணிந்திருந்தாள்.
நாழிகைகள் கடந்து கொண்டிருக்க, ரத்னா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்பதை அவள் அறியவில்லை. தான் யாருக்காக இங்கே காத்திருக்கிறோம் என்பது அவளுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், தான் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாளோ, அந்த நபர் மட்டும் இங்கே வந்துவிடவே கூடாது என்று ஒவ்வொரு நொடியும் கடவுளை மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் கடவுளோ, ‘நீ வேண்டும் இந்த வேண்டுதல் இப்போது நிறைவேறாது’ என்று கூறிவிட்டது போல, ரத்னா யாருக்காகக் கலக்கத்துடன் காத்திருந்தாளோ, அவரே ரத்னாவின் எதிரில் வந்து நின்றார்.
ரத்னா இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு, முகத்தில் வஞ்சகச் சிரிப்புடன் ரூபவதி உள்ளே வந்தாள். உள்ளே வந்தவள் ரத்னா விழித்திருப்பதைக் கண்டதும், கதவை உள்புறமாகத் தாளிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன ரத்னா, நம்ம பசங்க உன்னை நல்லா கவனிச்சிருக்காங்க போல? உன்னை இதுக்கு மேல கஷ்டப்படுத்த இந்த அக்காவுக்கு விருப்பமில்லை. அதனால நீ என்ன பண்ற… அடம் பிடிக்காமல் இந்தச் சொத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடு. போட்டா உடனே உனக்கு நிச்சயமாக விடுதலை கிடைக்கும்” என்றாள் ரூபா.
“நீ விடுதலைன்னு சொல்றது என்னுடைய மரணம்தான்னு புரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை க்கா. ஒரு காலத்துல நீ சொல்றது எல்லாத்தையும் அப்படியே நம்பி, உன்னுடைய பாசத்துக்காக ஏங்கின ரத்னா இறந்துட்டான்னு இன்னும் நீ நினைக்கலையா? ஐ அம் சோ சாரி ஃபார் இட்.” என்றாள் ரத்னா தீர்க்கமாக.
“நாட் பேட்! என்னைப் பார்த்த உடனே, ‘நீயா அக்கா இப்படி பண்ணுனே?’ அப்படின்னு அதிர்ச்சியாகி என் காலைப் பிடிச்சு கெஞ்சுவேன்னு எதிர்பார்த்தேன். என்னுடைய எதிர்பார்ப்பை இப்படிப் பொய்யாக்கிட்டியே! இட்ஸ் ஓகே, பேச்சை வளர்க்காமல் இந்தப்பத்திரத்தில் கையெழுத்துப் போடு” என அதட்டினாள் ரூபா.
“போட முடியாதுன்னு சொன்னா உன்னால என்ன செய்ய முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனா ஜஸ்வந்தைக் கொலை பண்ண மாதிரி என்னையும் கொலை மட்டும்தானே உன்னால பண்ண முடியும்? அதுக்காக உன்னைப் பார்த்துப் பயந்து நான் இதுல கையெழுத்துப் போடுவேன்னு எதிர்பார்க்காதே” என்றாள் ரத்னா நெஞ்சுறுதியோடு.
“ரத்னா, நீ என்னைக்கும் உன்னைப்பற்றி அதிகமா யோசிக்க மாட்ட, அதனால உனக்கு உன்னுடைய மரணம் பயத்தைத் தராது. ஆனா, உனக்கு வேண்டப்பட்ட ஒருத்தருடைய மரணம் நிச்சயமா உனக்கு மரண பயத்தைத் தரும்! அந்தப் பயத்துல நீ நிச்சயமா, கண்டிப்பா கையெழுத்துப் போடுவ” என்றாள் ரூபா குரூரமாக.
ரூபா யாரைப் பற்றிக் கூறுகிறாள் என்பதை யோசித்த ரத்னா, ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதைத் தன் முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“எஸ் ரத்னா, யுவர் கெஸ் இஸ் ரைட். நீ யாரைக் கெஸ் பண்ணியிருக்கியோ, அவனைக் கொல்றதுக்குத்தான் நானும் முடிவு பண்ணியிருக்கேன். இப்ப மட்டும் நீ இதுல கையெழுத்துப் போடலை… உன்னுடைய பிரியத்துக்குரிய அஜீத் அத்தான் உயிரோடு இருக்க மாட்டான்! நீ ரொம்ப யோசிச்ச, உன்னைத் தேடி இந்நேரம் ரோட்டுல நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிறவன், நாய் மாதிரியே செத்துப் போய்விடுவான்” என்று அஜீத்தின் உயிரை வைத்து மிரட்டினாள் ரூபா.
ஆனால், ரூபாவின் இந்த வெறித்தனமான மிரட்டலுக்குப் பயப்படாத ரத்னா, “வெல் ட்ரை அக்கா! நான் பயந்துட்டேன்… ‘இப்ப நான் என்ன பண்ணனும் அக்கா? ப்ளீஸ், அத்தானை ஒன்னும் பண்ணிடாதீங்க, நான் இதுல கையெழுத்துப் போடுறேன்’ அப்படின்னு உன் காலைப் பிடிச்சு கெஞ்சணும்னு நீ நினைக்கிறாயா? நாட் அட் ஆல்!” என்றாள் சற்றும் தளராமல்.
மேலும், “நான் எந்தப் பயமும் இல்லாமல் இங்க உன் முன்னாடி உட்கார்ந்திருக்கும் போதே உனக்குத் தெரிய வேண்டாமா… எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் நான் வந்து இங்கே மாட்டிக்கொள்ள மாட்டேன்னு!” என ரத்னா கம்பீரமாகப் பேச, அவளது தெளிவான பேச்சைக் கண்டு ஒரு நிமிடம் உள்ளுக்குள் பதறிப் போனாள் ரூபா.
“நீ… நீ என்ன சொல்ற?!” எனத் தடுமாறினாள் ரூபா.
“நீ ஜஸ்வந்தைக் கொலை பண்ணது எனக்கு முன்னமே தெரியும். என்னையும் கொலை பண்ண முயற்சி பண்ணதும் எனக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது நீ வந்து என்னைக் கடத்திக் கொலை பண்ற வரைக்கும் நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா? இந்நேரம் நீ என்னைக் கடத்தி வச்சிருக்கிற விஷயம் என்னுடைய ஃப்ரெண்ட் மூலமா நம்ம வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்” என்றாள் ரத்னா.
ரத்னாவின் பேச்சைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்த ரூபா, அடுத்த நொடி வாய்விட்டுப் பைத்தியக்காரத்தனமாகச் சிரித்தாள். “ரத்னா… ரத்னா! நான் கூட நீ ரொம்பப் புத்திசாலியா மாறிட்டியோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்டி. எங்க என்னைப்பற்றி எல்லார்கிட்டயும் சொல்லி இருப்பியோன்னு ஒரு சின்ன சந்தேகம் கூட எனக்கு வந்துடுச்சு. ஆனா இங்க பாரு…” எனக் கூறிக்கொண்டே பாய்ந்து வந்து, ரத்னாவின் அருகில் அமர்ந்து அவளது கழுத்தை நெரித்தாள் ரூபா.
“ஏய்! நான் உனக்கு முன்னே இந்த உலகத்தைப் பார்த்தவடி. அப்படி இருக்கும் பொழுது உன்னைவிட அறிவு எனக்கு அதிகம். நீ என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தது எனக்கு நல்லாத் தெரிஞ்சிடுச்சு. உனக்குச் சேவகம் பண்ணிக்கிட்டு இருந்த அந்த முத்து, இதே இடத்துல இன்னொரு ரூம்ல மயங்கிக் கிடக்கிறான்! அவன் போயி எல்லார்கிட்டயும் தகவல் கொடுத்து உன்னை வந்து காப்பாத்தப் போறானா? சோ சேட், சோ சேட்!”
ரூபா மேலும் வன்மத்துடன், “உன்னைத் தேடுற யாருக்கும் என் மேல சந்தேகம் வரப்போவதே இல்லை. உன்னையும் உனக்கு அடிமை வேலை பார்த்த அந்த முத்துவையும் கொன்னு புதைச்சுட்டு, நீங்க ரெண்டு பேரும் ஒன்னா ஓடிப் போயிட்டதா எல்லாரையும் நம்ப வைக்கிறதுக்கான ஆதாரத்தைக் கூட நான் ரெடி பண்ணிட்டேன்டி!” என்று ரூபா கத்திக் கொண்டிருக்கும் பொழுதே… ‘டமால்!’ என்ற பயங்கர சத்தத்துடன் அந்த அறையின் கதவு உடைந்து கீழே விழுந்தது!
அறையிலிருந்த இரண்டு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க… அங்கே கோபத்தால் ரத்தமெனச் சிவந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தனர் அஜீத், தங்கவேலு மற்றும் ஹர்ஷத்!
மூவரும் ஒரே நேரத்தில் ஆவேசமாக அறைக்குள் வர, தன் திட்டம் அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற வெறியில், ரூபா தன் இடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை சட்டென்று எடுத்து ரத்னாவின் நெற்றியில் நேராக வைத்தாள்.
“மூணு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னும் ஒரு அடி எடுத்து முன்னாடி வச்சாலும்… ரத்னாவை உங்களால உயிரோட பார்க்க முடியாது!” என அலறினாள்.
ரூபா நின்றிருந்த வெறித்தனமான நிலையும், அவளது கண்களில் தெரிந்த கொலைவெறியும் அவள் சொன்னதைச் செய்வாள் என்று உணர்த்தவே, மூவரும் மேற்கொண்டு நகர முடியாமல் அப்படியே அசைவற்று நின்றனர்.
இவ்வளவு நடந்த பிறகும், தன் மனைவியின் மீது வைத்திருந்த காதலால் அவளை நம்பத் தயாராக இருந்த ஹர்ஷத், நெஞ்சு உருகிப் பேச ஆரம்பித்தான்.
“ரூபா… நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம்கூட கனவுல கூட நினைக்கலடி. எப்பொழுதும் ‘ரத்னா என்னுடைய முதல் பொண்ணு’ அப்படின்னு சொல்ற நீயா இப்போ ரத்னாவைக் கொலை பண்ணப் பார்க்கிற?
‘என்னுடைய தம்பி ஜஸ்வந்த் எப்பவும் உனக்கும் தம்பி’ அப்படின்னு சொல்லி அவனுக்காக எல்லா விஷயத்துலயும் முன்னாடி நிக்கிற நீயா அவனை கொடூரமா கொலை பண்ணுன? இப்பவும் கூட என்னால இதை நம்ப முடியல ரூபா. நான் பார்த்த எல்லா ஆதாரமும் பொய் அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுடி… நான் நிச்சயமா உன்னைத்தான் நம்புவேன்” என அவளது காலடியில் விழாத குறையாக மன்றாடினான் ஹர்ஷத்.
ஹர்ஷத்தின் குரலில் இருந்த அந்த உண்மையான மன்றாடல் ஒரு கணம் ரூபாவை அசைத்தாலும், அவளுக்குள் இருந்த பேராசை வெறியும் வன்மமும் அவளைத் தடுத்தது.
“சாரி ஹர்ஷத், இதுவரைக்கும் உங்ககிட்ட நான் நிறைய பொய் சொல்லிட்டேன். ஆனா இப்போ இந்த முடிவுல உங்ககிட்ட பொய் சொல்ல எனக்கு மனசு வரல. நான்தான் ஜஸ்வந்தைக் கொலை பண்ணுனேன்! அதுவும் விஷம் கொடுத்து உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டிருந்த அவனுடைய கழுத்துல என் காலால் மிதித்துக் கொலை பண்ணுனேன்!” என்றாள் இரக்கமின்றி.
ரூபாவின் முகத்தில் தெரிந்த அந்தத் துளியும் இரக்கமற்ற கொலைவெறியைக் கண்ட தங்கவேலு ஆத்திரத்துடன், “எதுக்காகடி இப்படி பண்ணுன? ரத்னா நம்ம சொந்தத் தங்கை, ஜஸ்வந்த் உன் கணவனுடைய தம்பி! அப்படி இருக்கும் பொழுது கேவலம் இந்தச் சொத்துக்காகவா அவங்களை இரக்கமில்லாமல் கொலை பண்ணுன?” எனக் கத்தினான்.
“எனக்குச் சந்தோஷமா வாழ இந்தச் சொத்து முக்கியம்தான், அதுவும் ஒரு பெரிய காரணம் நான் இவங்களைக் கொலை பண்ண நினைத்ததற்கு! ஆனா அதைவிட இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு…” எனக் கூறிக்கொண்டே, ஒரு கையில் இருந்த துப்பாக்கியை ரத்னாவின் கழுத்தில் பலமாக அழுத்தி, மற்றொரு கையால் ரத்னாவின் முடியைப் பிடித்துக் கொத்தாக பின்னுக்கு இழுத்தாள் ரூபா.
“எல்லாம் இவளால் மட்டும்தான்! இவள் ஒருத்தியால் மட்டும்தான் என்னுடைய சந்தோஷம் எல்லாமே போயிடுச்சு!”
“நீ பண்ண தப்புக்கு எல்லாம் தேவையில்லாமல் ரத்னாவை காரணம் சொல்லாதே ரூபா!” என்றான் வேலு.
“என்னடா… ரத்னா, ரத்னான்னு ஓவரா உருகுறீங்க? இவ ஒன்னும் உன் கூடப் பிறந்தவள் இல்லை! ஆனா நீ கூட இவளை உன் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடுவ. அப்படி இருக்கும் பொழுது என் பக்கம் உள்ள நியாயம் உனக்கு எங்கே புரியப் போகுது? எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் நிறைய இருக்கும்; ஆனா என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு சந்தோஷமே இல்லாமல் அடியோடு அழித்தது இதோ இந்த ரத்னாதான்!” என்றாள் வெறியுடன்.
மேலும், “அம்மா இல்லாத நமக்கு நம்ம அப்பா இன்னொரு அம்மாவா இருந்திருக்கணும். ஆனா அவருக்கு இந்த ரத்னாதான் என்னைவிடவும் ஒசத்தி! என்னைக்காவது இவகிட்ட காட்டின பாசத்துல ஒரு பாதி அளவாவது என்கிட்ட காட்டியிருப்பாரா? நான் என்னமோ இவளைக் கவனிக்க மட்டும் பிறந்த அடிமை மாதிரிதானே அந்த வீட்ல எல்லாரும் என்னை நடத்துனீங்க!” எனத் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் ரூபா.
எப்பொழுதும் போலத் தன் பெரியப்பாவைப் பற்றித் தவறாகப் பேசியதும், ரத்னாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “அக்கா! தேவையில்லாமல் பெரியப்பாவைப்பற்றித் தப்பா பேசாதே. அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” என்றாள் சத்தமாக.
“என்னை ரொம்பப் பிடிச்சதனால்தான் உனக்கு என்னை ஆயாவா பார்க்க வச்சாராடி? ‘ரத்னாவை நல்லாப் பாத்துக்கணும், ரத்னாவுக்குச் சாப்பாடு கொடுக்கணும், ரத்னாவைத் தூங்க வைக்கணும், ரத்னாவை படிக்க வைக்கணும்’… இப்படி உனக்கு எல்லா பணிவிடைகளையும் செய்யுறதுக்கு மட்டும்தான் நான் அந்த வீட்ல இருக்கிறேனா?” எனக் கத்தினாள்.
அக்காவின் இந்த நியாயமற்ற குற்றச்சாட்டில் பொறுமை இழந்த தங்கவேலு குறுக்கிட்டு, “ரூபா! எல்லார் வீட்டிலேயும் சின்னக் குழந்தைகளைப் பெரியவங்க பார்த்துக்கிறது சகஜமா நடக்கிறதுதானே? அவ உன்னைவிடச் சின்னப் பொண்ணு, அவளை நம்ம பார்த்துக்கச் சொல்லுறது ஒரு தப்பேயில்லை.
உன்னால ரத்னா எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா? ஆனா அதுக்கு எதுக்கும் அவ உன்னைக் குற்றம் சுமத்துனதே இல்லை. உனக்காகப் பெரியப்பாகிட்ட எத்தனையோ முறை பரிந்து பேசி இருக்காளே தவிர, நீ தப்பு பண்ணியிருந்தாலும் அதைப்பற்றி ஒரு மூச்சு கூட அவ வெளியில விட்டது கிடையாது” என்றான்.
தங்கவேலு பேசப் பேசக் கோபம் தலைக்கேறிய ரூபா, ஆங்காரத்துடன் “இவ என்னைப்பற்றித் தப்பா பேசறது இல்லையா?” எனத் தங்கவேலுவிடம் கூச்சலிட்டுவிட்டு, ரத்னாவின் புறம் திரும்பினாள்.
“சொல்லுடி! என்னைப்பற்றி நீ தப்பா பேசினது இல்லையா? என் சந்தோஷத்தை மொத்தமா அழிச்சது நீதானேடி?” எனக் கழுத்தை நெரித்தாள்.
“அக்கா… உண்மையிலேயே நான் உனக்கு நல்லது மட்டும்தான் பண்ணனும்னு நினைச்சேன்” என்றாள் ரத்னா மூச்சுத் திணறியபடி.
“எப்படி? எது எனக்கு நல்லது? என் காதலை மொத்தமாகக் குழிதோண்டிப் புதைச்சதுதான் உனக்கு நல்லதாடி?!” என ரூபா கத்த, ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ஹர்ஷத் திடுக்கிட்டுப் போனான்.
“ரூபா… அதுதான் நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்துச்சே, அப்புறம் அவளால நம்ம காதல் எப்படி அழிஞ்சு போயிருக்கும்?” எனக் கேட்ட ஹர்ஷத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள் ரூபா.
“நம்ம காதலா? சாரி மிஸ்டர் ஹர்ஷத் தேவராஜ், அது உங்களோட காதல்! நான் எப்பவும் உங்களைக் காதலிச்சதே இல்லை. எனக்குத் தேவை உங்களுடைய பணம், அந்த அந்தஸ்து! அதுக்காக மட்டும்தான் உங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சேன், கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்! நான் உயிராகக் காதலித்தது என்னுடைய குமார் மாமாவை.
அதை இந்த ரத்னா என் அப்பாகிட்ட போட்டுக் கொடுத்து, என்னை அடி வாங்க வச்சா! அதுமட்டுமா, இவளால் தான் என்னுடைய குமார் மாமா என்னை விட்டு ரொம்பத் தூரம் போக வேண்டியதாச்சு!” என உண்மையை உடைத்தாள் ரூபா.
குமார் என்பவன் ரத்னாவின் தாய் பார்வதியின் உடன் பிறந்த தம்பி. பார்வதிக்கு எந்த அளவுக்கு நல்ல குணமோ, அதற்கு நேர் எதிர்மாறான குணம் நிறைந்தவன் குமார். பெரிய பணக்காரக் குடும்பத்தில் தன் அக்காவைத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், தன் வாழ்விலும் பெரிய நிலையை அடையலாம் எனப் பேராசை கனவு கண்டிருந்தான் அவன்.
ஆனால், பார்வதியோ புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விசுவாசம் உள்ளவளாகவும் நேர்மையானவளாகவும் இருந்ததால், அவனால் அவளைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் குமார் தந்திரமாக வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தான்; அந்த வழிதான் ரூபா!
ரூபாவின் மனதில் அவளது குடும்பத்தினரைப் பற்றித் தவறான எண்ணங்களை விதைத்து, அதன் மூலம் ‘தான் மட்டுமே ரூபாவின் உண்மையான நலம் விரும்பி, மற்றவர்கள் அனைவரும் அவளிடம் உண்மையான அன்பு இல்லாதவர்கள்’ என அவளை நம்ப வைத்தான். பள்ளிப் பருவத்திலேயே இவர்கள் இருவரும் ரகசியமாகத் தனிமையில் சந்தித்துப் பேசுவதை, அப்போது ரத்னா எதேச்சையாகப் பார்த்துத் தன் பெரியப்பா முத்துவேலிடம் கூறிவிட்டாள்.
அதன் பின்பு தொடர்ந்து தன் மகளைக் கண்காணித்த முத்துவேல், ரூபாவைக் கண்டித்ததுடன், குமார் அதன்பின் அந்த ஊருக்குள்ளேயே வர முடியாத வகையில் அவனுக்குத் அடி கொடுத்து நன்கு கவனித்து அனுப்பினார்.
நடந்த அனைத்துக்கும் தன் வாழ்வை நாசமாக்கியதற்கும் காரணம் இந்த ரத்னாதான் என்பதை அறிந்துகொண்ட ரூபா, தன் மனதில் ரத்னா மீதான வன்மத்தையும் குரோதத்தையும் நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டாள். ஆனாலும் தந்தைக்கு பயந்து அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
அடுத்த வருடம் கல்லூரிக்குச் செல்ல ரூபா முயற்சிக்கும் பொழுது, குடும்பத்தினர் ரத்னாவின் படிப்பைக் காரணம்காட்டி அவளை ஊருக்குள் படிக்க வைக்க நினைத்து மறுக்க, அது ரத்னாவின் மீதான வன்மத்தை இன்னும் வளரச் செய்தது.
கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம், ஹர்ஷத் ரூபாவின் புறத்தோற்றத்திலும் போலியான நடிப்பிலும் ஏமாந்து அவளைக் காதலிக்கத் தொடங்கினான். ரூபா அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே ரூபா மீண்டும் குமாரின் காதலை ரகசியமாகப் புதுப்பித்துக்கொண்டாள்; இது எதுவும் முத்துவேலிற்குத் தெரியாமல் போனது. பிழைப்பதற்கு வேறு வழி இல்லாமல் தவித்த குமார், முதலில் ரூபாவைத் திருமணம் செய்துகொண்டு அவள் குடும்பச் சொத்தைக் கைப்பற்ற வேண்டும் என நினைத்தான். ஆனால், முத்துவேல் இருக்கும் வரை அது நடக்காது என்பதைப் புரிந்து கொண்டு, ரூபாவை ஹர்ஷத்தின் காதலை ஏற்றுக் கொள்ளக் கூறினான்; அதன் மூலம் ஹர்ஷத்தின் பணத்தைச் சுரண்டலாம் எனத் திட்டமிட்டான். முதலில் ரூபா மறுத்தாலும், குமாருக்காக அந்தக் காதலை ஏற்றுக்கொண்டாள்.
ஹர்ஷத் ஒவ்வொரு முறையும் ரூபாவிற்கு விலை உயர்ந்த பொருட்களைப் பரிசளிக்கும் போது, முதலில் மறுப்பது போல் நடித்தாலும், பின்பு அவை அனைத்தையும் ஆசையோடு வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.
ஹர்ஷத்-ரூபா திருமணம் முடிந்த பின்பு, ஹர்ஷத்தைத் தன்னிடமிருந்து பிரித்து வைக்கவும், குடும்பத்தாரைக் கட்டுப்படுத்தவும், ‘தான் தன் தங்கையின் நினைவில் வருந்துவதாக’ மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்தாள்.
ஒவ்வொரு முறையும் தனக்கு நகை வாங்கும் பொழுது ‘என் தங்கைக்கு’ என்று கூறியும், தன் தங்கை போன்ற ஏழைப் பெண்களுக்கு உதவுவதாகக் கூறியும் ஹர்ஷத்திடம் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்று குமாரிடம் கொடுக்க ஆரம்பித்தாள்.
மனைவியின் மீது அளவு கடந்த காதலை வைத்திருந்த ஹர்ஷத்திற்கு, ரூபாவின் இந்த வஞ்சக முகம் தெரியாமல் போனது. ஆனால், படிப்பு முடிந்து தொழிலைத் தன் கையில் எடுத்த ஜஸ்வந்த், ரூபாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழில்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதையும், பல கோடிகள் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதையும் தணிக்கை மூலம் அறிந்து, அதற்காக ரூபாவிடம் கணக்குக் கேட்க ஆரம்பித்தான். அப்போதும் அவன் ரூபாவின் மேல் முழுமையான சந்தேகம் கொள்ளவில்லை.
இந்நிலையிலேயே ஜஸ்வந்த்-ரத்னா திருமணம் அவசரக் கோலத்தில் நடந்தது. திருமணம் நடந்த சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரூபா, அஜீத் குடும்பத்திலும் பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸ்டெல்லா மூலம் செய்ய ஆரம்பித்தாள். இவை அனைத்தும் ஒருநாள் தெரிய வரும்பொழுது, அனைவரும் ஜஸ்வந்த் மீதுதான் குற்றம் சுமத்துவார்கள் என்றும், அதன்பின்பு ஜஸ்வந்த் தனது தவறைக் கண்டுபிடித்தாலும் யாரும் நம்பப் போவதில்லை என்றும் ஒரு கொடூரமான திட்டம் வகுத்தாள் ரூபா.
இதற்கிடையில் ஸ்டெல்லாவிற்கு அஜீத் மீதிருக்கும் வெறித்தனமான விருப்பத்தைத் தெரிந்துகொண்ட ரூபா, தன் திட்டத்திற்கு ஸ்டெல்லாவை பகடைக்காயாகப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.
அஜீத்தை அடைய வேண்டும் என்ற பேராசையில் ஸ்டெல்லாவும் ரூபாவின் திட்டத்திற்கு உதவ ஒப்புக் கொண்டாள். ஆனால், இவர்கள் மூவரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பமாக அஜீத்-ஜஸ்வந்த் சந்திப்பு ரகசியமாக நடந்தது! ரத்னாவின் திருமணம் முடிந்து வந்ததிலிருந்தே, ரத்னாவின் மனதில் ஜஸ்வந்த் பற்றித் தவறான அபிப்பிராயங்களை ரூபா விதைக்க ஆரம்பித்தாள்.
குமாரின் தூண்டுதலின் பேரில் இருந்த ரூபா, தன்னால் முடிந்தவரை ரத்னா-அஜீத்-ஜஸ்வந்த் வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கினாள்.
திருமணம் முடிந்ததும் சிறிது காலம் குடும்பப் பிரச்சினைகளால் தொழிலின் குளறுபடிகளை மறந்திருந்த ஜஸ்வந்த், மீண்டும் அதைப்பற்றித் தீவிரமாக விசாரணை செய்தான். கணக்கு வழக்குகளின் குளறுபடிகள் அனைத்தும் அண்ணி ரூபாவிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பதைத் தெளிவாகக் கண்டுகொண்டு கோபத்துடன் வீட்டிற்கு வந்தான்.
அனைத்தையும் உடனே வீட்டினரிடம் தெரியப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் ரூபாவை ரகசியமாகக் கண்காணிக்க ஆரம்பித்தான். அதில் அவனுக்குத் தெரியவந்ததுதான் ரூபா மற்றும் குமாரின் கள்ளக்காதல்!
தன் அண்ணனை இத்தனை வருடங்களாக ரூபா ஏமாற்றி வந்ததை அறிந்துகொண்ட ஜஸ்வந்த், நேரடியாகவே அவளைத் தனியே சந்தித்து எச்சரிக்கை செய்தான்.
ஜஸ்வந்தும் ரத்னாவும் அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அன்று, ரூபாவும் குமாரும் இணைந்து ஹர்ஷத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருப்பதாக ஜஸ்வந்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனால்தான் அங்கிருந்து உடனே ஜஸ்வந்த் ரத்னாவுடன் அவசரமாகப் புறப்பட்டான்.
ஆனால் வரும் வழியிலேயே, தங்களுக்கு ஆபத்தாக இருக்கும் ரத்னா-ஜஸ்வந்த் இருவரையும் லாரியை விட்டு மோதிக் கொலை செய்ய ரூபாவும் குமாரும் திட்டமிட்டிருந்தனர்; அதிர்ஷ்டவசமாக அன்று ரத்னா மட்டும் உயிர் பிழைத்தாள்!
உயிருக்கு உயிராகக் காதலித்த தன் காதல் மனைவி, சொத்துக்காகவும் மற்றொருவனுக்காகவும் இத்தனை வருடங்கள் தன்னை ஏமாற்றினாள் என்பதையும், அவனுடன் சேர்ந்து சதி செய்து தன் தம்பி ஜஸ்வந்தை கொன்றாள் என்பதையும் தாங்கிக்கொள்ள முடியாத ஹர்ஷத், நெஞ்சு வெடித்து அப்படியே தரையில் மடங்கி அமர்ந்துவிட்டான். அவனைத் தாங்க முடியாமல் கண்ணீருடன் தங்கவேலு தாங்கிப் பிடிக்க…
அதே நேரத்தில், ரூபா நிலைதடுமாறி நின்ற அந்த ஒரு கண்ணிமைக்கும் நேரத்தில், பாய்போல் பாய்ந்த அஜீத், அவளது கையில் இருந்த துப்பாக்கியை ஓங்கி அடித்துத் தட்டிப் பறித்தான்!
தன் கையில் இருந்த துப்பாக்கி பறிக்கப்பட்ட அதிர்ச்சியில் நிலைதடுமாறி ரூபா கீழே விழுந்தாள். விழுந்தவள் ஆவேசமாக எழுந்து நின்று, “என்னைக் கொலை பண்ணப் போறியா அஜீத்? உன்னால முடியாதுடா! ஒருவேளை நீ என்னைக் கொன்னாலும் எனக்குப் பயமில்லை, எனக்கு அதுதான் சந்தோஷம்! நான் இதோ இவரைக் காதலிக்கிற மாதிரி நடித்திருந்தாலும், நீ ரத்னாவை உண்மையா காதலிச்ச… நான் செத்து நீ ஜெயிலுக்குப் போயிட்டா, இவளால் காலம் முழுக்க உன்னோட நிம்மதியா வாழ முடியாதுடி! அது போதும் எனக்கு!” என வன்மத்தைக் கக்கினாள்.
அஜீத் அவளை ஏளனமாகப் பார்த்து, “நீ சொல்றது உண்மைதான் ரூபா. என்னால உன்னை மட்டும் இல்லை, யாரையும் எப்பவும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கிட்டு கஷ்டப்படுத்த முடியாது. ஆனா, உனக்குத் தகுந்த தண்டனையைக் கடவுளும் ஜஸ்வந்தும் கொடுத்துட்டாங்க. எந்தக் குமார் மாமனுக்காக இவ்வளவு துரோகங்களையும் செய்தாயோ… அவன் இப்போ உயிரோடவே இல்லை!” என்றான் தீர்க்கமாக.
அஜீத் சொன்னதைக் கேட்ட அடுத்த நொடி, பைத்தியம் பிடித்தவள் போல ஓடிவந்து அவனது சட்டையைப் பிடித்த ரூபா, “என்ன சொல்ற?! என்ன சொல்ற நீ?! என்னுடைய குமாருக்கு என்ன ஆச்சு? அவனுக்கு என்ன பண்ணீங்க? சொல்லுடா!” என்று கதறினாள்..