அத்தியாயம் 26
மற்றொருபுறம், மண்டபத்தில் இருந்து வெளியேறிய தங்கவேலுவும் ஹர்ஷத்தும் ரத்னாவைத் தேடிப் புறப்பட்டனர். காரை ஓட்டிக்கொண்டே தங்கவேலு ஹர்ஷத்திடம், “ரத்னா எங்க இருக்கான்னு இப்போதைக்குச் சொல்ல ஒருத்தரால் மட்டும்தான் முடியும்” என்றான்.
“என்ன சொல்ற? யாருக்குத் தெரியும், அதைச் சொல்லு!”
“ரூபா!”
திடுக்கிட்டுத் திரும்பிய ஹர்ஷத், “ரூபாவுக்குத் தெரிஞ்சா எதுக்கு அதை மண்டபத்துல சொல்லல? அதுமட்டுமில்லாம, அந்த நேரத்துல ரத்னாவைக் காணோம்னு அவளும் தானே தேடிட்டு இருந்தா? அப்படி இருக்கும் பொழுது ரூபாவுக்குத் தெரியும்னு நீ எதை வச்சுச் சொல்ற?” என்றான்.
“அக்காவுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ரத்னாவைத் தூக்குனவங்களுக்குத் தெரியாதா அவ எங்க இருப்பான்னு?”
“வேலு! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே!” எனத் தன் மனைவியைப் பற்றிக் குற்றம் சுமத்தியது பிடிக்காமல் ஹர்ஷத் சத்தமிட்டான்.
“நான் சொல்றதுதான் உண்மை அண்ணே. எனக்கு ரூபாவின் குணம் தெரியும். ஆனா அவ இந்த அளவுக்குப் போவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.”
“வேலு, தேவையில்லாமல் ரூபாவைப்பற்றித் தப்பாகப் பேசாதே.”
“அவ உங்களுக்கு மனைவியாகுறதுக்கு முன்னாடியே என்னுடைய அக்கா! அப்படி இருக்கும் பொழுது நான் எதுக்காக அவங்களைப் பத்தித் தப்பா பேசணும்?”
“எந்த ஆதாரத்தை வச்சு ரூபா ரத்னாவைக் கடத்தினாள்னு நீ நினைக்கிற? எதனால உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு?”
“ஜஸ்வந்தை கொலை பண்ணின ஒருத்தருக்கு… ரத்னாவைக் கடத்துவது ரொம்ப பெரிய விஷயம் கிடையாது அண்ணே” எனச் சாதாரணமாக வேலு கூறினாலும், அதன் அழுத்தம் ஹர்ஷத்திற்கு உண்மையை உணர்த்தத் தொடங்கியது.
“என்ன ஸ்டெல்லா, அதிர்ச்சியா இருக்கா? எப்படி நம்ம எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுச் செஞ்சோம், அப்படி இருந்தும் இவனுக்கு எப்படி உண்மை தெரிஞ்சதுன்னு பார்க்கிறியா? எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும், தப்பு பண்ணும்போது தன்னை அறியாமலேயே ஒரு தடயத்தை விட்டுடுவான். அப்படி ஒரு தப்பை நீ பண்ணுன, அதுதான் உன்னை எனக்குக் காட்டிக்கொடுத்துடுச்சு” என்றான் அஜீத்.
ராபர்ட் குறுக்கிட்டு, “அஜீத், திஸ் இஸ் யுவர் லிமிட்! என் பொண்ணைப் பற்றி இதுக்கு மேல தப்பா ஒரு வார்த்தை நீ சொன்னா, அடுத்த நிமிஷம் உன்னுடைய உடம்பில் உயிர் இருக்காது” என எச்சரித்தார்.
“நான் ஒன்னும் தப்பா சொல்லல அங்கிள். இதுவரைக்கும் எங்க வாழ்க்கையில் நடந்த எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் உங்க பொண்ணும், ரத்னாவின் அக்கா ரூபாவும் தான்! இப்போ ரத்னா எங்க இருக்கிறாள்னு உங்க பொண்ணு சொல்லலைன்னா, என்கிட்ட இருக்கிற எல்லா ஆதாரத்தையும் நான் போலீஸ்கிட்ட கொடுக்க வேண்டியதிருக்கும். அப்போ உங்க பொண்ணு காலம் முழுக்கக் கம்பி எண்ண வேண்டியதுதான்” என்றான் அஜீத் உறுதியாக.
தங்கவேலு கூறியதை நம்ப முடியாமல் கண் கலங்கி நின்ற ஹர்ஷத், “நீ சொல்றது உண்மையாக இருக்காது வேலு. நான் எந்த அளவுக்கு என்னுடைய தம்பி மேல பாசம் வச்சு வளர்த்தேனோ, அதே அளவு பாசம் ரூபாவும் என் தம்பி மேல வச்சிருந்தா. அப்படி இருக்கும் பொழுது எதுக்காக ஜஸ்வந்தை கொலை பண்ணனும்? அதே மாதிரி ஒரு நாள்கூட ரூபா ரத்னாவைப் பற்றிப் பேசாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு ரத்னா மேல உயிரா இருந்தா… அப்படிப்பட்டவள் ரத்னாவின் உயிரை எடுக்கப் போறான்னு நீ சொல்ற?” என்றான் கண்ணீருடன்.
“நான் இப்போ உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தைக் கொஞ்ச நாளுக்கு முன்னாடி வேற யாராவது என்கிட்ட சொல்லியிருந்தா, அவங்களை நான் கண்டிப்பா கொலை பண்ணியிருப்பேன் அண்ணே. ஆனா, இந்த விஷயம் முழுசா நானா விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட உண்மை” எனக் கூறிவிட்டுத் தன் செல்போனில் இருந்த வீடியோவை ஓடவிட்டான் வேலு. அதில் ஜஸ்வந்தை ரூபா விஷம் கொடுத்துக் கொலை செய்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சி அப்பட்டமாக ஒளிபரப்பாகியது! அதைப்பார்த்து ஹர்ஷத் அப்படியே உறைந்து போனான்.
ராபர்ட்-நன்சி தம்பதியின் செல்ல மகள் ஸ்டெல்லா. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களின் வாழ்வின் வசந்த காலத்தில் மலர்ந்த மலர்தான் அவள். ஆனால், ஒரு விபத்தில் நன்சி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, போதிய பணம் இல்லாததால் அவரின் உயிர் பிரிந்தது. அன்றிலிருந்து பணத்தின் பின்னால் தன் ஓட்டத்தைத் ஆரம்பித்த ராபர்ட், தன் மகளுக்குப் பணத்தை வாரி வழங்கிய அளவுக்குப் பாசத்தை வழங்கத் தவறிவிட்டார்.
ஆரம்பத்தில் பாசத்திற்காக ஏங்கித் தவித்த ஸ்டெல்லா, பின்பு தனிமையைப் பழகிக்கொண்டாள். பள்ளிக் காலத்தில் விடுதி வாசத்தை அனுபவித்தவள், கல்லூரி நாட்களிலாவது தன் தந்தையுடன் இருக்க வேண்டும் என்று போராடி, கோயம்புத்தூரில் இருக்கும் கலைக் கல்லூரியில் சேர்ந்தாள்.
சேர்ந்த இடத்தில் ரத்னாவின் நட்பு அவள் மனக் காயங்களுக்கு அருமருந்தாக இருந்தது உண்மைதான். ஆனால், அது அவளது தந்தையின் பாசத்தின் இடத்தை நிரப்பவில்லை.
அதன்பின் அஜீத் அவர்களின் நண்பனாக வந்த பிறகு, அவன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துப் பாசத்துடன் செய்ய, அது ஸ்டெல்லாவின் மனதில் அஜீத்திற்கு ஒரு உயர்ந்த இடத்தை வழங்கியது. கல்லூரிக்குள் ரத்னா, ஸ்டெல்லா இருவருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் அஜீத் அதை முன்னின்று சரி செய்ய, அதுவரை தனிமையை மட்டுமே அனுபவித்த ஸ்டெல்லாவிற்கு அஜீத்தின் அருகாமை அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது.
பொங்கல் விழாவின் போது, ராபர்ட் தன் மகளின் நிலை உணர்ந்து பாசத்தைப் பொழியத் தொடங்கினார். இவை அனைத்திற்கும் அஜீத் தான் காரணம் என ஸ்டெல்லா எண்ணிக்கொண்டாள். அஜீத் தன்னோடு இருந்தால் மட்டுமே தன் வாழ்வு முழுமையடையும் என அவள் நினைக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் அஜீத்தைக் காண்பதற்காக மட்டுமே கல்லூரி சென்றாள். அனைவரும் சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்கும் போதும் ஸ்டெல்லாவின் கவனம் முழுவதும் அஜீத்தின் மீதே இருந்தது. இருந்தும் மற்ற மூவரும் இதை என்றும் கவனித்ததே இல்லை.
இரண்டாவது வருடம் அனைவரும் கல்விச் சுற்றுலா சென்றபோது, பிரபு காரணமின்றி ஒவ்வொரு முறையும் ஸ்டெல்லாவைத் தனியே அழைத்துச் செல்வது, அஜீத்திடம் பேச விடாமல் செய்வது என்று இருந்தான். இதனால் கோபப்பட்ட ஸ்டெல்லா,
“பிரபு, எதுக்காக இப்படிப் பண்ற? சும்மா சும்மா எதுக்காக என்னைத் தனியா கூட்டிட்டு வர்ற? எல்லாரும் சேர்ந்து வர்றாங்க, உனக்கு என்ன பிரச்சினை?” எனக் கேட்டாள்.
“ஐயோ ஸ்டெல்லா, தயவுசெஞ்சு என்னைத் தப்பா எடுத்துக்காதே. அந்த ரெண்டு லூசுகளும் (அஜீத் – ரத்னா) தனியா கொஞ்ச நேரம் இருக்கட்டும்டா. அவங்க காதலை அவங்க உணரணும்னு நினைச்சேன், ஆனா இதுவரைக்கும் எதுவும் நடக்கல” எனப் பிரபு புலம்பினான்.
“யாருக்கு… யார் யாரைக் காதலிக்கிறார்?” எனப் புரியாமல் ஸ்டெல்லா கேட்க,
“அஜீத் ரத்னாவைக் காதலிக்கிறான்” என்றான் பிரபு.
“நீ என்ன சொல்ற?!” தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள் ஸ்டெல்லா.
“நீ சொல்றது உண்மையா?”
“நான் எதுக்காகப் பொய் சொல்லப் போறேன்? இந்த மக்குப்பையன் ரெண்டு வருஷமா ரத்னாவைக் கரெக்ட் பண்ண முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான். மனசுக்குள்ள இருக்கிற காதலை வெளியே சொல்லத் தெரியல. சொல்லாமல் மனசுல இருக்கிறதை எப்படி ரத்னாவால் புரிஞ்சுக்க முடியும்?” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான் பிரபு.
அதன் பிறகு வந்த நாட்களில் ஸ்டெல்லா இருவரையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள். அஜீத் மட்டுமே ரத்னாவைக் காதலிப்பதையும், ரத்னாவிற்கு இதுவரை காதல் என்ற உணர்வே வராததையும் சரியாகக் கவனித்த ஸ்டெல்லா, அதன் பின்பு தனது சதித் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினாள்.
தான் அஜீத்திற்கு மிகவும் நெருக்கமானவள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் ரத்னாவிற்கு எந்தச் சூழ்நிலையிலும் அஜீத்தின் மீது காதல் தோன்றாமல் பார்த்துக் கொண்டாள். நான்காவது வருடம் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரபு எடுத்த புகைப்படங்களை வைத்துத் தனக்குச் சாதகமான வதந்திகளைப் பரப்பினாள்.
இதில் அவளே எதிர்பாராத ஒன்றாக ரூபாவின் உதவி அவளுக்குக் கிடைத்தது. ஸ்டெல்லாவின் திட்டத்தை முதலில் கண்டுபிடித்த நபர் ரூபவதிதான். ஆனால், அவளை மிரட்டுவதற்குப் பதிலாக, ஜஸ்வந்தின் சொத்துக்காக ரூபவதியும் ஸ்டெல்லாவுடன் இணைந்து செயல்பட சம்மதித்தாள். அனைத்தும் இருவரின் திட்டத்தின்படியே அரங்கேறியது.
தன்னிடமிருந்த ஆதாரங்களை ராபர்ட் முன்பு வைத்த அஜீத், “உங்களுக்கு இது எந்த அளவுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் என்று எனக்கு நல்லாப் புரியுது அங்கிள். ஆனா இதுதான் உண்மை. உங்க பொண்ணு நீங்க நினைக்கிற அளவுக்கு நல்லவ இல்லை” என்றான்.
இதைக் கேட்டு ராபர்ட் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். சில வினாடிகள் கழித்து ஆவேசமாக எழுந்து வந்து, “ஸ்டெல்லா! ரத்னா எங்கு இருக்கான்னு சொல்லு!” என்றார் கத்தியபடி.
“நான் சொல்ல மாட்டேன்! அந்த ரத்னாவால் மட்டும்தான் எனக்கு என்னுடைய அஜீத் கிடைக்காமல் போயிட்டான்” என வெறிபிடித்தவள் போல் கத்தினாள் ஸ்டெல்லா. பின்பு அஜீத்தின் முன் வந்து நின்று,
“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியுமா அஜீத்? எனக்குப் பிடிச்ச எல்லாமே உன்னால மட்டும்தான் எனக்குத் தர முடியும். நீ என்னுடைய வாழ்க்கையில் இருந்தால் மட்டும்தான் நான் சந்தோஷமா இருப்பேன். உன்னால மட்டும்தான் எனக்கு என்னுடைய அப்பா திரும்பக் கிடைச்சார்.
அப்படி இருக்கும் பொழுது உன்னை எப்படி என்னால அந்த ரத்னாவுக்கு விட்டுக் கொடுக்க முடியும்? முடியாது! உயிரோடு இருந்தால் மட்டும்தானே அவ உன்னைத் தேடி வருவா? அதான் நான் இப்போ முடிவு பண்ணிட்டேன், அந்த ரத்னா உன்கூட மட்டுமில்லை… இந்த உலகத்துலேயே உயிரோட இருக்கக் கூடாதுன்னு! நீ எனக்கு வேணும், எனக்கு மட்டும்தான் வேணும்!” எனப் பைத்தியக்காரி போல் கத்தினாள்.
ராபர்ட், அஜீத், பிரபு மூவரும் எவ்வளவு பேசியும் ஸ்டெல்லாவிடமிருந்து ரத்னா இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை.
“நீங்க மூணு பேரும் எவ்வளவு கேட்டாலும் நான் சொல்லப் போறது இல்லை. இந்நேரம் ரத்னாவின் உயிர் அவளை விட்டு ரொம்ப தூரம் போயிருக்கும்” எனக் கூறிப் பயங்கரமாகச் சிரித்தாள்.
தன் ஆத்திரத்தை அதுவரை கட்டுப்படுத்திய ராபர்ட், தன் மகளைப் பிடித்து உலுக்கி, “நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்குடி! உன்னால எப்படி ஒரு பொண்ணுக்குத் துரோகம் பண்ண முடிஞ்சது? நான் உன்கிட்ட மனசு விட்டுப் பேசுறதுதக்கும், உன் கூடவே அதிக நேரம் இருக்கிறதுக்கும் காரணமே ரத்னாதான்டி! ரத்னாதான் வந்து என்கிட்ட உனக்காகப் பேசினா! நீ எந்த அளவுக்கு எனக்காக, என்னுடைய அன்புக்காக ஏங்கியிருக்கேன்னு சொன்னா! அவ உன் நட்புக்கு உண்மையா இருந்தா, உனக்கு உன்னுடைய அப்பாவைத் திரும்பக் கிடைக்க வச்சா! ஆனா நீ பதிலுக்கு அவளுக்கு என்ன செய்திருக்க? அவளுடைய வாழ்க்கையை அவகிட்ட இருந்து பறிக்கப் பார்க்கிற!” எனக் கூறிவிட்டுத் தன் மகளைப் பிடித்திருந்த கையை உதறிவிட்டு அஜீத்தின் புறம் திரும்பினார்.
“நீ கவலைப்படாத அஜீத், இன்னும் கொஞ்ச நேரத்துல ரத்னா எங்கிருந்தாலும் கண்டுபிடித்து உன்னுடைய முன்னால நிப்பாட்டுறேன்” என்றார் ராபர்ட்.
ஆவேசமாக அவர் முன் வந்த ஸ்டெல்லா, “அப்பா! உங்களுக்கு நான் வேணும்னு நினைச்சா அந்த ரத்னாவுக்கு நீங்க உதவி பண்ணக் கூடாது. ஒருவேளை ரத்னாவுக்கு உதவி பண்ணா, என்னை நீங்க பார்க்கிறது இதுதான் கடைசித் தடவையா இருக்கும்” எனத் தற்கொலை மிரட்டல் விடுத்தாள்.
“இந்த மாதிரி ஒரு பொண்ணைப் பெத்ததுக்கு நான் வருத்தப்படுறேன். ஒருவேளை இதுதான் உன்னைப் பார்க்கிறதுக்கு கடைசித் தடவையா இருந்துச்சுன்னா, அதுக்கு நான் நிச்சயமாக வருத்தப்படப் போறது இல்லை” என்று ராபர்ட் அவளை உதறினார்.
அஜீத் யோசனையுடன், “சரி, இப்போ ரூபா ரத்னாவை எங்க கடத்தி வைத்திருக்கிறாள்னு அவகிட்டயே கேட்டா என்ன?” என்றான்.
“இல்லை அஜீத், இப்போ நாம போறதுக்கு முன்னே அந்த ரூபா ரத்னாவை ஏதாவது பண்ணிடுவா. நாம ரத்னாவை நெருங்க முயற்சி பண்றது அந்த ரூபாவுக்குத் தெரியக்கூடாது” என்றான் பிரபு.
ராபர்ட், “ஓகே லீவ் இட். எனக்குத் தொழில் சம்பந்தமா அண்டர்கிரவுண்ட் ஆட்கள் இருக்காங்க, அவங்க மூலமா இந்த ரௌடிகள் யாருன்னு முதல்ல கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிச்சிட்டா நாம சுலபமாக ரத்னா இருக்கும் இடத்தை நெருங்கிவிடலாம்” என்றார்.
____________
“இப்போ நமக்கு இருக்கிற ஒரே பிரச்சினை ரூபா ரத்னாவை எங்க வச்சிருக்காங்கிறதுதான். கண்டிப்பா அவகிட்ட கேட்டா சொல்லப் போறது இல்லை. ஆனா நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அது ரத்னாவுக்குத்தான் ஆபத்து” என்றான் வேலு ஹர்ஷத்திடம்.
“ரூபா ரத்னாவைக் கடத்தி வைத்திருப்பது உண்மை என்றால், அவ எங்க வச்சிருப்பான்னு எனக்குத் தெரியும் வேலு” என்றான் ஹர்ஷத்.
“உங்களுக்குத் தெரியுமா?”
“நாலு வருஷத்துக்கு முன்னாடி ஜஸ்வந்த் கோயம்புத்தூர்ல ரத்னா பெயரில் ஒரு தனி வீடு வாங்கினான். அது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியா. அங்க அவங்க இருக்க வாய்ப்பு அதிகமிருக்கு” என்றான் ஹர்ஷத்.
தங்கவேலுவும் ஹர்ஷத்தும் அந்த வீட்டை நோக்கி விரைய, அதே நேரம் ராபர்ட்டின் ஆட்கள் கொடுத்த தகவலின்படி அஜீத், பிரபு, ராபர்ட் ஆகிய மூவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
ஐவரும் அந்தப் பழைய வீட்டுக்குள் நுழைந்த நேரம்… அவர்கள் கண்டது, வாசலின் அருகில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தவனை மட்டுமே.
அவன் அருகில் நின்ற ஜஸ்வந்தின் ஆன்மா அஜீத் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.
“ஜஸ்வந்த்…” என அவன் உதடுகள் முணுமுணுக்க, அவன் அருகில் வந்த ஜஸ்வந்தின் ஆன்மா, “என்னுடைய மரணத்துக்கு நானே பழி வாங்கிட்டேன். இவனோட மரணம் நிச்சயமா இவனுக்கும், இவனோடு இருந்த இன்னொருத்தனுக்கும் தகுந்த தண்டனையாக இருக்கும்” எனக் கூறிவிட்டு அஜீத்தின் கணனகளை பார்த்து
“உன்னை மட்டும் நம்பி நான் இங்கே இருந்து போறேன் அஜீத். இனி உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன். என்னுடைய பேபியைப் பத்திரமாகப் பார்த்துக்கோ” என்றது.
ஜஸ்வந்தின் ஆன்மா அங்கிருந்து காற்றில் மறைந்தது. சில வினாடிகள் அதிர்ச்சியில் உணர்வற்று நின்ற அஜீத், இறந்து கிடந்த நபரின் அருகில் சென்று பார்க்க… தங்கவேலு பதறிப் போய் கத்தினான்.
“இது… இது குமார் மாமா! எப்படி இங்க?!”