அத்தியாயம் 25
ரத்னாவை மண்டபம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை என்றதும், குடும்பத்தினர் அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்தனர். கிருஷ்ணசந்திரன் அர்ச்சனாவை அழைத்து, “ரத்னா உன்கூடத்தானே இருந்தா? அப்படி இருக்கும் பொழுது ரத்னா காணாமல் போனது உனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்?” என்றார் பதட்டத்துடன்.
அதுவரை அழுதுகொண்டிருந்த அர்ச்சனா, “இல்லைப்பா, எனக்குத் தெரியாது. அவ என் கூடத்தான் இருந்தா. அப்போ எனக்கு ஒரு போன் வந்துச்சு, நான் பேசிக்கிட்டு இருக்கும்போது அம்மா கூப்பிடவும் நான் வெளியே வந்தேன். திரும்பவும் ரூம்க்கு வந்து பார்க்கும்போது ரத்னாவைக் காணோம். நானும் அவ வேற எங்கயாவது இருப்பான்னுதான் நினைச்சேன்” என்றாள் விம்மலுடன்.
அடுத்ததாக மண்டபத்துக் காவலாளியிடம் விசாரிக்க, அவரோ, “நான் சரியாகக் கவனிக்கவில்லை” என்று கூற, கிருஷ்ணசந்திரனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
“அப்பா, வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்க நேரமில்லை. எப்படி இருந்தாலும் ரத்னா ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. நீங்க முதல்ல தாத்தா, பாட்டி, அம்மாவை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க. இதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் அஜீத் தைரியமாக.
“வீட்டுப் பொண்ணு காணாமல் போயிருக்கா, எப்படிடா பயப்படாமல் வீட்டுக்குப் போக முடியும்? அவங்க எல்லாரும் வீட்டுக்குப் போகட்டும், நம்ம தேடிப் பார்த்துக்கலாம்” என்றார் கிருஷ்ணசந்திரன்.
தாத்தா, பாட்டி மற்றும் வீட்டுப் பெண்கள் தவிர, ஆண்கள் அனைவரும் ரத்னாவைத் தேடி அந்த இரவில் அலைந்து கொண்டிருந்தனர். அஜீத்திற்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இது யார் செய்திருப்பார் என்பது தெரியும்; ஆனால் அவளை எங்கு வைத்திருப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. பிரபுவுக்கும் ஒரு யூகம் இருந்தது.
“ஒருவேளை ரத்னாவைக் கடத்தியது…” என்று பேச ஆரம்பித்த பிரபுவைத் தடுத்து, அடிக்குரலில்,
“இங்கே பேச வேண்டாம் பிரபு. அவங்க வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்டா” என்றான் அஜீத்.
இதைக் கவனித்த கிருஷ்ணசந்திரன், “என்னடா பிரபு ஏதோ கடத்தல் அப்படின்னு சொல்றான், நீ அதைப்பற்றிப் பேச வேண்டாம்னு சொல்ற? இங்க என்னதான் நடக்குது?” என்றார் குழப்பத்துடன்.
“அப்பா கவலைப்படாதீங்க, விடியும் பொழுது ரத்னா பத்திரமாக நம்ம வீட்டில் இருப்பா. எங்களுக்கு ரத்னா இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சாகணும். நான் இப்போ புறப்படுறேன், நீங்க என்ன பண்ணணும்னு நான் போன் பண்றேன்” என்று ஒருவழியாக அஜீத் அனைவரையும் சமாளித்துவிட்டுப் புறப்பட்டான்.
அஜீத்தும் பிரபுவும் நேரே சென்று நின்ற இடம் ராபர்ட்டின் வீட்டிற்கு முன்னால்! இந்நேரத்தில் அவர்களை அங்கே எதிர்பார்க்காத ராபர்ட், “ஹாய் அஜீத், என்னாச்சு? நீ இப்போ வீட்டுக்குப் போகாமல் இங்க ஏன் வந்திருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா? சொல்லியிருந்தா நானே காலையில வந்திருப்பேனே” எனக் கேட்டார்.
அஜீத் தன் உணர்ச்சிகளை மறைத்த குரலில், “ரத்னா எங்கன்னு தெரிஞ்சுகிட்டு அவளைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தோம்” என்றான் நேரடியாக.
“வாட்! ரத்னாவா? ரத்னாவுக்கு என்ன ஆச்சு? அவளைத் தேடி எதுக்காக என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சத்தம் கேட்டு மேலே இருந்து கீழே வந்தாள் ஸ்டெல்லா.
“என்ன ஆச்சு அஜீத்? எதுக்காக இப்போ இங்க வந்திருக்கீங்க?” என வினவினாள்.
“நாங்க இங்க பேச்சுவார்த்தை நடத்த வரல. ரத்னா எங்க இருக்கிறான்னு எனக்கு இப்பவே தெரியணும்” என வார்த்தைகளில் உஷ்ணம் தெறிக்க அஜீத் பேசினான்.
“அவ காணாமல் போனதுக்கு எங்ககிட்ட வந்து கேட்டா எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் ஸ்டெல்லா அலட்சியமாக.
“நல்லா தெரியும்! ரத்னா இப்ப எங்க இருக்கான்னு இங்க வந்து கேட்டா மட்டும்தான் தெரியும்” என்றான் அஜீத். அவனது கோபத்தை உணர்ந்த ராபர்ட் ஸ்டெல்லாவிடம் திரும்பி,
“ஸ்டெல்லா, ரத்னா உன்கிட்ட எதுவும் சொல்லிட்டுப் போனாளா? அதைக் கேக்குறதுக்காகத்தான் ரெண்டு பேரும் இங்க வந்திருக்காங்களா?” எனக் கேட்க, பிரபு வேகமாக முன்வந்தான்.
“நாங்க வந்தது ஸ்டெல்லாகிட்ட கேக்குறதுக்கு இல்லை, உங்ககிட்ட! ரத்னாவை எதுக்காக நீங்க கடத்துனீங்க? இப்போ ரத்னாவை எங்க வச்சிருக்கீங்க?” என ராபர்ட்டை நோக்கிக் கேட்டான் பிரபு.
மயக்கம் தெளிந்து விழித்த ரத்னாவிற்கு, தான் எங்கு இருக்கிறோம் என்பது புரியாத பொழுதும், தான் எதிர்பார்த்த மாதிரியே கடத்தப்பட்டிருப்பது புரிந்தது. நிதானமாகத் தான் இருக்கும் இடத்தை விழித்தெடுத்துச் சுற்றிப் பார்த்தாள்.
ஆள் நடமாட்டமில்லாத ஒரு பழைய இடத்தில் தான் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். இருந்தும் தனக்குள் எழுந்த பயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அப்போது அவளருகில் வந்த இரு ரௌடிகளில் ஒருவன், “என்னம்மா பொண்ணு, உனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா?” என்றான் ஏளனமாக.
அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த ரத்னா, பேசாமல் மௌனம் சாதித்தாள்.
“பாருடா இவ திமிரை! நாம கடத்தி வைத்திருக்கிறது தெரிஞ்சும் எப்படி கெத்தாக உட்கார்ந்து இருக்கா பாரு” என்றான் மற்றொருவன்.
“ஆமாண்டா, இதுக்கு முன்னாடி எத்தனையோ பேரை கடத்தியிருக்கோம். அவங்க எல்லாம் ஒன்னு கதறி அழுவாங்க, இல்லை நம்மகிட்ட பேரம் பேசுவாங்க, இல்லன்னா ‘நான் யார் தெரியுமா?’ என்று மிரட்டுவார்கள். இது என்னடான்னா இப்படிப் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கு” என்று பேச, ரத்னா அப்பொழுதும் வாய் திறக்கவில்லை.
“சரி நமக்கு என்ன, எவளோ என்னமோ செஞ்சுட்டுப் போறா. இருடா, இவளுக்கு மயக்கம் தெளிஞ்சதை முதலாளிக்குச் சொல்லிட்டு வர்றேன்” என்று கூறி நகர்ந்து, தொலைபேசியில் ரத்னாவுக்கு மயக்கம் தெளிந்ததைத் தெரியப்படுத்தினான். அந்தப் பக்கம் இருந்து ஏதோ உத்தரவு வர, இவன்
“சரி, அப்படியே செய்கிறேன்” எனக் கூறிவிட்டு ரத்னாவிடம் வந்தான்.
தன்னிடமிருந்த வெற்றுப் பத்திரத்தை நீட்டி, “இங்க பாரு பொண்ணு, ஒழுங்கு மரியாதையா இந்தப்பத்திரத்தில் கையெழுத்து போட்டுட்டா, நாங்க உன்னை எந்தச் சேதாரமும் இல்லாமல் அனுப்பி விடுவோம். இல்லை, நான் கையெழுத்து போட மாட்டேன் அப்படின்னு நீ மொரண்டு பிடிச்சா… முழுசா வீடு போய் சேர மாட்ட” எனக் கூறினான்.
அவன் கையில் இருந்த பத்திரத்தைப் பார்த்த ரத்னா, “முடியாது” என ஒற்றைச் சொல்லில் பதிலளித்தாள்.
அடுத்த நொடி, அருகில் நின்றவனின் கரம் ரத்னாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது. “என்னடி நினைச்சிட்டு இருக்க? பொறுமையா உன் முன்னாடி பேசினால் எங்களைப் பார்த்தா உனக்கு இளிச்சவாயன் மாதிரி தெரியுதா? இப்ப மட்டும் நீ இதுல கையெழுத்து போடலைன்னா உன் உயிர் உன்கிட்ட இருக்காது” என மிரட்டினான்.
அடி வாங்கிய பின்பும் அவர்களைப் பார்த்துத் துணிச்சலாகச் சிரித்த ரத்னா, “என் உடம்பிலிருந்து உயிர் போயிட்டா… அப்புறம் யார் வந்து இந்தப்பத்திரத்தில் கையெழுத்து போடுவா?” என்றாள் ஏளனமாக.
அடி வாங்கிய பின்பும் ரத்னா திமிராகப் பேச, வெகுண்டு எழுந்த ஒருவன் மறு கன்னத்திலும் ரத்னாவை ஓங்கி அடிக்க, அந்த பலத்த அடியில் ரத்னா நாற்காலியோடு கீழே விழுந்து தன் சுயநினைவை இழந்தாள்.
“டேய், இதுக்கு மேல அடிச்சா செத்துப் போயிடப் போறாடா!” என்றான் ஒருவன்.
“உயிர் போனாலும் கையெழுத்து போட முடியாதுன்னு சொல்றா… அவளுக்கு உயிருக்கு மேலான ஒன்னு போயிட்டா தானா வழிக்கு வருவா” எனக் கூறி வக்கிரமாகச் சிரித்தான் அடித்தவன்.
மற்றொருவன், “சரியா சொன்னடா. குட்டி நல்லா சோக்காகத்தான் இருக்கா. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்படி ஒன்னு கிடைக்கிறது கஷ்டம்தான். எப்படியும் இவ சாகத்தான் போறா, அதுக்கு முன்னாடி நாம அனுபவிச்சா ஒன்னும் தப்பு இல்லை” எனக் கூறிக்கொண்டே ரத்னாவின் மீது கையை வைக்கச் சென்றான்.
ஆனால், அவனது கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன! அவனால் மேற்கொண்டு முன்னேற முடியாமல் தவிக்க, அருகில் நின்றவன், “என்னடா ஆச்சு? அசையாமல் அப்படியே நிற்கிற?” என்றான் குழப்பத்துடன்.
“என்னன்னு தெரியலடா… என் கையை யாரோ பின்னாடி இருந்து இறுக்கமாகப் பிடிச்சிருக்கிற மாதிரி இருக்கு!”
அடுத்த நொடி, அவன் கைகள் முறியும் சத்தத்துடன் அலறிக்கொண்டு கீழே சுருண்டு விழுந்தான். தன் நண்பன் கீழே விழுந்ததும் அதிர்ச்சியடைந்த மற்றவன் அவளைப் பார்க்க முயல, அவனது தலைமுடியை யாரோ கொத்தாகப் பிடித்து மேலே தூக்குவது போல உணர்ந்தான்.
“யாருடா அது? யாரு?!” எனக் கத்தினான். அவன் முடியைப் பிடித்து ஆவேசமாக இழுத்த ஜஸ்வந்தின் ஆன்மா, சுவரோடு சுவராக அவன் தலையை மோத வைத்தது. அவனும் அலறியபடி மயங்கி கீழே விழுந்தான்.
கீழே விழுந்த இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, ஜஸ்வந்தின் ஆன்மா ரத்னாவின் அருகில் சென்றது. ரத்னா மெல்லிய முனகலுடன் மெல்லக் கண்விழித்து எழுந்து அமர்ந்தாள். விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கே யாரும் இல்லை. எழுந்து நின்ற ரத்னா, தள்ளாடியபடி சென்று பழையபடி நாற்காலியில் அமர்ந்து கொள்ள, ஜஸ்வந்தின் ஆன்மா ரத்னாவின் அருகில் வந்தது.
“நீ முதல்ல இங்கிருந்து கிளம்பிப் போயிடு ரதி. இங்கே இருக்கிறது உனக்கு நல்லது இல்லை” என அது கூறியது. கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்த ரத்னா, ஜஸ்வந்த் பேசியது கேட்காத போதும் தன் கடமையை நினைத்து,
‘என்னால இங்கிருந்து இப்போ போக முடியாது. இன்னையோட இந்தத் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரியாமல் நான் இங்கிருந்து போகப் போறது இல்லை’ எனத் தன் மனதுக்குள் பேசிக்கொண்டு உறுதியோடு அமர்ந்துவிட்டாள்.
ஜஸ்வந்தின் ஆன்மாவோ, ‘ஓகே ரதி, இன்னைக்கே இந்தத் பிரச்சினைக்கு எல்லாத்தையும் நான் முடித்து வைக்கிறேன். இப்போ எனக்கு நீ மட்டும்தான் முக்கியம், வேற யாரும் முக்கியம் இல்லை. எப்போ உன்னைக் கொலை பண்ற அளவுக்கு இறங்கி வந்தாங்களோ, இதுக்கு மேல அவங்களை நான் சும்மா விடப்போவதில்லை. மனுஷங்க எல்லோரும் நல்லவங்க இல்லைன்னு நீயும் தெரிஞ்சுக்கிறதுதான் உனக்கு நல்லது’ எனக் கூறி ரத்னாவின் அருகில் காவலாக நின்றது.
“ரத்னா எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் அங்கிள், ஆனா உங்க பொண்ணு ஸ்டெல்லாக்கு நல்லா தெரியும்” என அஜீத் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிறுத்தி நிதானமாகப் பேசினான்.
அதைக் கேட்ட ஸ்டெல்லா, ஒரு நொடி திகைத்தாலும் உடனே தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அது எனக்கு எப்படித் தெரியும்? ரத்னா என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லை. அன்னைக்கு ரத்னா சென்னை கிளம்பும்போது கூட நான் உதவி பண்றேன்னு சும்மாதான் சொன்னேன். அதைக்கூட உடனே உன்கிட்ட நான் சொல்லிட்டேனே! அதுக்கப்புறம் நான் ரத்னாகிட்ட பேசவே இல்லை. இன்னைக்கு ரிசப்ஷன்ல பார்த்தபோது கூட விஷ் பண்ணிட்டு நான் கிளம்பிட்டேன்” என்றாள் கள்ளத்தனமாக.
அவள் பேசி முடிக்கும் முன்பே, வேகமாக அவளது கழுத்தைப் பிடித்துத் தூக்கினான் அஜீத். “என்னை பார்த்தா உனக்கு முட்டாள் மாதிரி இருக்கா? நீ சொல்ற எல்லாத்தையும் நம்பிக்கிட்டு சரி சரின்னு தலையாட்டுவேன்னு நினைச்சுட்டியா?” என்றான் ஆத்திரத்துடன்.
அஜீத்தின் கை ஸ்டெல்லாவின் கழுத்தை நெரிப்பதைக் கண்ட பிரபுவும் ராபர்ட்டும், அஜீத்தின் கையிலிருந்து ஸ்டெல்லாவைத் பலவந்தமாகப் பிரித்து எடுத்தனர்.
ராபர்ட் கோபமாக, “என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற அஜீத்? எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வீட்டுக்கு வந்து என் பொண்ணை இப்படி ட்ரீட் பண்ணுவ?” என்றார்.
பிரபுவும், “உனக்கு என்னடா ஆச்சு? எதுக்காக ஸ்டெல்லா கழுத்துல கை வைக்கிற? எதுவாயிருந்தாலும் ரத்னாவைக் கடத்தின இந்த ராபர்ட் ஆளுகிட்ட விசாரிக்க வேண்டியதுதானே?” என்றான்.
“வாயை மூடுடா பிரபு! நீ நினைக்கிற மாதிரி அங்கிள் ஒன்னும் ரத்னாவைக் கடத்தல. இதுவரைக்கும் எங்க வாழ்க்கையில் நடந்த எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே காரணம் இந்த ஸ்டெல்லா மட்டும்தான்!” என்று அஜீத் கூற, அதை நம்ப முடியாமல் பிரபுவும் ராபர்ட்டும் அதிர்ந்து நின்றனர்.
தன்னைப்பற்றி அஜீத்திற்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டெல்லா, பயத்துடன் தலைகுனிந்து நின்றாள்.