அத்தியாயம் 21
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ரத்னாவின் மனது முழுவதும் அஜீத்தைச் சுற்றியும், தன் வாழ்க்கையில் இனி என்ன நடக்கும் என்ற எண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.
ரத்னா இதுவரை எதிர்காலத்தைப் பற்றி நினைத்து எப்போழுதும் கவலை கொண்டது கிடையாது. அஜீத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்தது, ஜஸ்வந்துடன் தன் திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஜஸ்வந்தின் மரணம், அஜீத்துடன் நடந்த மறுமணம்… இப்படி அனைத்து சூழ்நிலைகளிலும் ரத்னா நடப்பதை ஏற்று வாழப் பழகிக்கொண்டாள்.
ஆனால் இப்பொழுது, மருத்துவமனையில் மருத்துவர் கேட்ட கேள்வியும், நடைபெற்ற பரிசோதனையும் அஜீத்துடனான தன் உறவைக் கேள்விக்குறியாக்கியதாகவே உணர்ந்தாள்.
தங்கள் இருவரின் உறவு எந்த இடத்தில் இருக்கின்றது? அஜீத்திற்குத் தன்னை பிடிக்கவில்லையோ? தான் இன்னும் அஜீத்துடன் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்ற உண்மை தெரிந்த மைதிலி இனி என்ன செய்யப் போகின்றார்? எனப் பல கேள்விகள் தன்முன் பூதகரமாக நிற்க, அனைத்தையும் இன்று அஜீத்திடம் பேசிவிடுவது என்ற முடிவுடன் வீடு வந்தாள்.
மருத்துவமனை சென்ற பெண்கள் வீடு வந்த போது, முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு அனைவரும் அறிந்திருந்ததால் யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. நாளை மறுநாள் நடைபெற இருக்கும் ரிசப்ஷன் ஏற்பாடுகளைக் கவனிப்பதிலும், பத்து நாட்களில் பயிற்சிக்காக அஜீத் செல்ல இருப்பதால் பிற ஏற்பாடுகளைக் கவனிப்பதிலும் பிஸியாகினர்.
“அஜீத், நான் உன்கிட்ட பேசணும்” என்றார் மைதிலி.
“அம்மா, அப்புறம் பேசலாம்மா. எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு” என்றான் அஜீத்.
“உன் முக்கியமான வேலையைத் தூக்கிக் குப்பையில போடு” என்ற தாயின் கோபத்தை உணர்ந்த அஜீத்,
“அம்மா, எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கிறீங்க?” எனக் கேட்டான்.
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல டாக்டர் என்ன சொல்லிருப்பாங்கன்னு உனக்கு நல்லா தெரியும். அப்புறம் நான் எதுக்குக் கோபமா இருக்கிறேன்னு தெரியாத மாதிரி கேட்கிற?”
“அம்மா, ரத்னாவுக்கு இப்போ 22, எனக்கு 24 தான் ஆகுது. இப்போ எங்களுக்குக் குழந்தை இல்லைன்னு நீங்க இவ்வளவு கோபப்படணுமா? இன்னும் காலம் இருக்குமா. டெல்லியில எங்க சூழ்நிலையில நாங்க குழந்தையைப் பற்றி யோசிச்சுப் பார்க்கலம்மா.”
“நீ குழந்தையைப் பற்றி மட்டுமில்லை, யாரைப் பத்தியும் யோசிக்கல! ரத்னாவைப் பத்தியும் யோசிக்கல!”
“அம்மா ப்ளீஸ், நடந்த கல்யாணத்துல உங்களுக்கு இன்னும் கோபம் போகலையாமா? அப்படியே கோபம் இருந்தாலும் அதுக்கு எல்லா காரணமும் நான் மட்டும்தான். தயவுசெய்து ரத்னாகிட்ட கோபத்தைக் காட்டாதீங்கம்மா, அவளால தாங்க முடியாது.”
“ஆமா, தாங்க முடியாதுடா! ரத்னாவால மட்டும் இல்லடா, எந்த ஒரு பொண்ணாலயும் ‘இரக்கத்தால் மட்டும்தான் கணவன் நம்ம கூட இருக்கிறான்’ என்கிற விஷயத்தைத் தாங்க முடியாது.”
“அம்மா, நான் ஒன்னும் இரக்கப்பட்டு ரத்னாவை கல்யாணம் பண்ணல. இந்த விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. எனக்கு ரத்னாவைப் பிடிக்கும், பிடித்ததால் மட்டும்தான் கல்யாணம் பண்ணினேன்” என்றான் அஜீத் அழுத்தமாக.
“அப்படி உனக்கு பிடிச்சிருக்குன்னா, நாங்க சொல்லும்போதே எதுக்கு நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கல?”
“அம்மா, அன்னைக்கு இருந்த சூழ்நிலையில என்னால கல்யாணத்தைப் பற்றி நினைச்சுப் பார்க்க முடியலம்மா.”
“என்னடா பொல்லாத சூழ்நிலை! சூழ்நிலை மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டு நீ தப்பிக்கப் பார்க்கிறியா? அன்னைக்கு இருந்த சூழ்நிலையில உன்னால ரத்னாவைக் கல்யாணம் பண்றதைப் பற்றி யோசிச்சுப் பார்க்க முடியல, டெல்லியில இருந்த சூழ்நிலையில குழந்தையைப் பற்றி யோசித்து பார்க்க முடியல.
இப்படி நீ உன்னைத் பற்றி மட்டும்தான் யோசிச்சுப் பார்த்துகிட்டு இருக்க. இதுல எங்கயாவது நீ உன்னைச் சுத்தி இருக்கிறவங்களைப் பற்றி யோசிச்சுப் பார்த்தியா? நீ எடுக்கும் முடிவு எங்க எல்லாரையும் எந்த அளவு கஷ்டப்படுத்தியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தியா? அதெல்லாம் எங்க யோசித்திருக்கப் போற, உனக்கு உன்னுடைய சூழ்நிலை மட்டும்தான் பெருசு. மத்தவங்க யாரும் உன் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்க மாட்டாங்க. உன்னால மட்டும்தான் ரத்னா வாழ்க்கையில இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு” என்று மைதிலி பொரிந்து தள்ளினார்.
மைதிலி கேட்ட எந்தக் கேள்விக்கும் அஜீத்திடம் பதிலில்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருந்த அஜீத்தின் மனது, மைதிலியின் கேள்விகளால் மீண்டும் மீண்டும் காயப்பட்டது. எப்பொழுதும் தான் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியானதாக இருக்கும் என்ற கர்வம் ரத்னா விஷயத்தில் முற்றிலும் அடிபட்டுப் போனது.
“நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன்மா. ரத்னா வாழ்க்கையில நடந்தது எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் காரணம். நிச்சயமா எல்லாத்தையும் நான் சரி பண்ணுறேன்மா, தயவுசெய்து என்னை நம்புங்க.” அஜீத்தின் குரலில் இருந்த வேதனையை உணர்ந்த மைதிலி,
“அஜீத், நான் உன்னைக் கஷ்டப்படுத்த இதைச் சொல்லல. ஒரு பெண்ணா ரத்னா அந்த ஜஸ்வந்த் கிட்ட எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பான்னு நினைச்சாலே எனக்கு உன் மேல கோபம் கோபமா வருது” என்றார்.
ஜஸ்வந்த் மீது தாய் சொத்து சுமத்தும் குற்றச்சாட்டில் துணுக்குற்ற அஜீத், “அம்மா, ஜஸ்வந்த் ரத்னாவைக் கஷ்டப்படுத்தியதா உங்ககிட்ட யாரு சொன்னா?” எனக் கேட்டான்.
“ரத்னா அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது நான், அர்ச்சனா, அவங்க அம்மா பார்வதி மூணு பேரும்தான் பக்கத்துல இருந்தோம். அப்போ அவ அம்மா நர்ஸ் கிட்ட ஏதோ கேட்க வெளியே போயிருந்த சமயம், ரத்னா அலறிய அலறல் இன்னும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.”
‘ஜஸ்வந்த்… கிட்ட வராதே, போ என்கிட்ட இருந்து, கிட்ட வராதே! நான் இனி அஜீத் பத்திப் பேசமாட்டேன். கிட்ட வராதே, ஐயோ எனக்கு பயமாயிருக்கு… என்னை ஒன்னும் பண்ணாதீங்க, இங்கிருந்து போயிடு. அம்மா, அப்பா யாராச்சும் வாங்க… எனக்கு பயமாயிருக்கு என்னைக்காப்பாத்துங்க…’ என்ற ரத்னாவின் அலறலை நினைத்து பார்த்த போதே அவர் தேகம் நடுங்கியது.
“ரத்னாவை அவன் எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தியிருந்தா, சுயநினைவு இல்லாத நேரத்துல ரத்னா இப்படி அலறித் துடிச்சிருப்பா? உனக்கும் ஜஸ்வந்துக்கும் இடையில என்ன பிரச்சனை நடந்ததுன்னு நான் கேட்கப் போறது இல்லை. ஆனால், இனிமேல் ரத்னா வாழ்க்கையில சின்னதா ஒரு கஷ்டம் வந்தாலும், நீ ‘அம்மா’னு ஒருத்தி இருந்ததை மறந்திடு” எனக் கூறிவிட்டு மைதிலி சென்றார்.
தன்னிடம் கோபமாகப் பேசிச் சென்ற அம்மாவின் வார்த்தைகளில் இருந்த வலியை அஜீத் உணர்ந்தே இருந்தான். தான் அவசரத்தினால் எடுத்த முடிவால் நடந்த விபரீதத்தை மாற்ற முடியாது எனினும், நடக்கப்போவதை மாற்ற முடியும் என்று எண்ணினான். யோசனையில் அமர்ந்திருந்த அஜீத்திடம் வந்த தங்கவேலு, “அஜீத், ரத்னாகிட்ட ஜஸ்வந்த் மர்டர் பத்திக் கேட்டியா? ஏதாவது தகவல் கிடைச்சதா?” என்றார்.
“இல்லை அத்தான்.”
“அஜீத், இன்னும் பத்து நாள்ல நீ ட்ரைனிங் கிளம்பிடுவ. அதுக்கு முன்னாடி ஜஸ்வந்தை கொலை பண்ணது யாருன்னு கண்டுபிடிக்கணும். அவங்களால ரத்னாவுக்கு ஆபத்து வர்றதுக்கு முன்னாடி அதைத் தடுக்கணும்.”
“புரியுது அத்தான், இப்பவே ரத்னாகிட்ட இதப் பத்திப் பேசிட்டு காலையில சொல்றேன்.”
—
இரவு உணவு முடிந்து தன் அறைக்கு வந்த அஜீத், ரத்னாவிடம் எவ்வாறு இதைப் பற்றிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனிடம் வந்த ரத்னா,
“அஜீத் அத்தான், நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“நானும் உன்கிட்ட பேசணும் ரத்னா.”
“சொல்லுங்க அத்தான்.”
“முதலில் ஆரம்பித்தது நீதானே, நீயே சொல்லு.”
“இல்லை நீங்களே சொல்லுங்க. நான் ரொம்ப பேசணும், நேரம் ஆயிட்டா நான் தூங்கிடுவேன். இதுவே நான் பேசினா எனக்குத் தூக்கம் வராது.”
“ரத்னா, நான் உன்கிட்ட கேட்கப்போற விஷயம் கொஞ்சம் சீரியஸான விஷயம், சோ நீயே முதல்ல சொல்லு.”
“அது வந்து….. எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. அதனால நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க.”
“ரத்னா, நான் கேட்கப்போற கேள்விக்குக் கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பதில் சொல்லு.”
“ம்ம்ம் கேளுங்க.”
“ஜஸ்வந்துக்கு உன்னைப் பிடிக்குமா ரத்னா? உன்னை நல்லபடியா பார்த்துக்கிட்டாரா?”
அஜீத்தின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த ரத்னாவின் பார்வையில், ‘நீயா என்கிட்ட இதைக் கேட்டாய்?’ என்ற கேள்வியே எழும்பியது. அஜீத்திற்கு அது புரிந்தாலும் ரத்னாவின் பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தான்.
அஜீத் மட்டுமின்றி, ஜஸ்வந்தின் அரூபமும் ரத்னாவின் பதிலுக்காகக் காத்திருந்ததை இருவரும் அறியவில்லை. அஜீத் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்த ரத்னாவின் காதுகளில், முன்பு யாரோ சொன்ன அறிவுரை ஒலித்தது:
‘ஆம்பளைங்களுக்கு எப்பவும் தன் பொண்டாட்டிக்குத் தன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கக் கூடாதுன்னு ஒரு நினைப்பு இருந்துகிட்டே தான் இருக்கும். அவங்களுக்கு வரக்கூடிய முதல் காதல், முதல் ஈர்ப்பு எல்லாத்தையும் பொண்ணுங்க சாதாரண காமெடியா நினைச்சு மறந்திடணும். அதே மாதிரி நமக்கு வந்த, மனசுல இருக்கிற காதலை, ஈர்ப்பை மறைச்சிடணும். இல்லை, நான் புருஷனுக்கு உண்மையா இருக்கப் போறேன்னு எல்லாத்தையும் சொன்னா வாழ்க்கை நரகமாகிடும்.’
நெடுநேர மௌனத்திற்குப் பின் ரத்னா பேசினாள்: “இந்தக் கேள்வியை ஒரு பத்து மாதத்திற்கு முன்னாடி நீங்க கேட்டிருந்தா நான் பதில் சொல்லிருப்பேன். இப்போ என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல.”
“ரத்னா, நான் ஒரு முக்கியமான காரணத்திற்காகத்தான் கேட்கிறேன். நீ சொல்லப்போற பதில்ல.தான் நம்ம வாழ்க்கையே இருக்கு” என்றான் அஜீத்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அத்தான். ஒரு தடவை நான் சொன்ன உண்மை, என் வாழ்க்கையை இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு. இன்னொரு தடவை அதே தப்பை நான் எப்படிப் பண்ணுவேன்? என் மூளை உண்மையைச் சொல்லாதேன்னு சொன்னாலும், என் மனசுல உங்க மேல இருக்கிற நம்பிக்கை பதில் சொல்லச் சொல்லுது.”
“ஜஸ்வந்துக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்காக எல்லாமே செய்கின்ற அளவுக்கு, எனக்காகத் தனக்கு பிடிச்சதை இழக்கிற அளவு, எனக்குப் பிடிச்ச சின்ன விஷயம் கூட நான் சொல்லாமலே என் கண் பார்வையை வச்சுத் தெரிஞ்சுக்கிற அளவுக்குப் பிடிக்கும். என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. என் நினைப்பை மட்டுமே அவங்க மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்தாங்க. எனக்காக மட்டுமே இருந்தாங்க” என்றாள் ரத்னா.
இதை யெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜஸ்வந்தின் ஆன்மா, ‘ரதி பேபி, இது போதும் எனக்கு! நீ என் அன்பைப் புரிஞ்சுக்கலையோன்னு நினைச்சுத் தவித்த எனக்கு, நீ இப்போ சொன்ன இந்த வார்த்தை போதும்’ என்று நெகிழ்ந்தது.
தன் காதலியை, தன் மனைவியை மற்றொருவன் அதீத உரிமையுடன் அன்புடன் கவனித்துக்கொண்டான் என்ற விஷயம் உலகில் எந்த ஒரு மனிதனுக்கும் பிடிக்காது. அஜீத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. இருந்தும் தான் இந்த நிலையில் இருப்பதற்குத் தான் மட்டுமே காரணம் என்று தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அப்புறம் ஏன் ஜஸ்வந்த் உன்னைக் கொடுமைப்படுத்தணும்?” எனக் கேட்டான்.
“நீங்க எதனால இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா நான் ஜஸ்வந்த் பத்தி இதுவரைக்கும் யாருகிட்டயும் பேசுனது இல்லை. அப்படி இருக்கும்போது, எதை வச்சு அவர் என்னைக் கொடுமை பண்ணியதா நீங்க முடிவு பண்ணீங்க?”
“நீ எங்ககிட்ட ஜஸ்வந்த் பத்திச் சொன்னது இல்லை. ஆனால், நம்ம டெல்லி போன அன்னைக்கு உன்னுடைய அலறல் இன்னும் கூட என் காதில் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்?”
“அத்தான், நீங்க எதைப் பத்திச் சொல்லுறீங்கன்னு எனக்குப் புரியல. நான் எப்போ அப்படி எல்லாம் அலறினேன்? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை” என்றாள் ரத்னா குழப்பத்துடன்.
ரத்னா தன் சுய நினைவில் இல்லாத போதே இவை நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட அஜீத்திற்கு, ஜஸ்வந்த் ரத்னாவைக் கொடுமைப்படுத்தவில்லை என்றால், எதற்காகத் தன்னை மறந்த நிலையிலும் ஜஸ்வந்தை நினைத்து ரத்னா பயப்பட வேண்டும் என்ற புதிய குழப்பம் எழுந்தது.
“ஓகே ரத்னா, லீவ் இட். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்துச்சு?”
“நாங்க ஊருக்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தோம். எனக்குத் தூக்கம் வந்ததால் நான் தூங்கிட்டேன். திடீர்னு எது மேலயோ மோதின மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.”
“நல்லா யோசிச்சுப் பாரு, உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?”
“இல்லை, எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.”
ரத்னாவிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காமல் போகவே அஜீத்திற்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. “சரி நீ தூங்கு, ரிசப்ஷனுக்குத் தேவையானது பத்தி அத்தான் கிட்ட பேசிட்டு வர்றேன்” என்று கூறி அறையை விட்டு வெளியேறச் சென்ற அஜீத், கதவருகே நின்று மீண்டும் ரத்னாவை நோக்கித் திரும்பி,
“உனக்கு ஜஸ்வந்தைப் பிடிக்குமா?” எனக் கேட்டான்.
இந்தக் கேள்வியை அஜீத், ரத்னாவின் மனதை முழுமையாக அறிந்துகொள்ளவே கேட்டான். இதற்குப் பதிலாக அஜீத் தன் காதலை ரத்னாவிடம் நேரடியாகக் கூறியிருக்கலாம். ஆனால், ரத்னா பதில் கூறாது அஜீத்தை வெறித்துப் பார்த்துவிட்டுப் பேசினாள்:
“இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. இதுக்கு நான் பதில் சொன்னாத்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னா, அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த உலகத்திலேயே எனக்கு அதிகமா உங்களைத்தான் பிடிக்கும், ஆனா நீங்கதான் என்னை அதிகமா காயப்படுத்துறீங்க.” அஜீத்திடம் ஏதோ ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்த ரத்னா, அஜீத் அசையாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு,
“நீங்க கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை, ஆனா நீங்க கேட்கணும்னு நான் எதிர்பார்த்த கேள்விக்கான பதிலை மட்டும் சொல்ல விரும்புறேன்” என்றாள்.