உன் நிழல் நான் தொட ep 20

அத்தியாயம் 20

“என்ன நினைச்சுக்கிட்டு இவளைக் கூட்டிக்கிட்டு இங்க வந்துருக்க? என்னை மதிக்காதவங்களுக்கு என்கிட்ட எந்தப் பேச்சும் வச்சுக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தன் முன் நின்ற அஜீத்திடம் கோபமாகப் பேசினாள் ஆர்த்தி.

“அக்கா, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்றான் அஜீத்.

“நான் எதுக்குக் கேட்கணும்? நீ கேட்டியா நான் சொன்னதை? என் பேச்சைக் கேட்காத உன் பேச்சை மட்டும் நான் எதுக்குக் கேட்கணும்? என்கிட்ட இருந்து நீ எந்த உதவியும் கிடைக்கும்னு எதிர்பார்க்காதே”.

தான் இப்பொழுது எது கூறினாலும் சண்டையிடும் நோக்குடன் இருக்கும் தமக்கை, தனக்காகப் பெற்றோரிடம் பேசப்போவது இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, “அக்கா, நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது மன்னிப்பு மட்டும்தான்” எனக் கூறி கரம் கூப்பி நின்றான் அஜீத். அஜீத்தின் செயலில் ஆர்த்தி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், அதை மறைத்துக்கொண்டு பேசினாள்:

“இப்போ எதுக்கு இந்த மன்னிப்பு கேட்கிற நாடகம் அஜீத்?” ஒரு மனம் ஆர்த்தியினுடைய புத்தி கூர்மையை மெச்சிக் கொண்டாலும், இன்னொரு மனமோ, ‘இவ இந்தளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்; என்ன இருந்தாலும் என் அக்கா தானே, என்னைப் பத்தித் தெரியாமலா இருப்பா’ என்றே நினைத்தது.

“நாடகம் எதுவும் இல்லைக்கா. நான் அப்பா, அம்மாவைச் சமாதானப்படுத்த உன்னை யூஸ் பண்ணப்போறதா நீ நினைக்கலாம். அப்படி உன் மூலமா சமாதானப்படுத்த இத்தனை நாள் நான் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.”

“அப்புறம் எதுக்காக உன் மன்னிப்பு?”

“நான் பிறந்து உனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைத் தட்டிப்பறிச்சுட்டதா நீ நினைக்கிறதானே, அதுக்குத்தான் என் மன்னிப்பு. நான் என்னைக்குமே உன்னை ஒரு போட்டியா நினைச்சது இல்லைக்கா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த அளவுக்குன்னா, நான் காதலிச்ச ரத்னாவை உன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு விட்டுக்கொடுக்கிற அளவு. நீ கேட்கலாம், அப்படி விட்டுக்கொடுத்தவன் எதுக்காகத் திரும்ப ரத்னாவைக் கல்யாணம் பண்ணுனேன்னு. முடியலைக்கா… ரத்னாவை மறக்க முயற்சி பண்ண ஒவ்வொரு நிமிடமும் மனசளவில செத்துப் போயிட்டு இருந்தேன். ரத்னாவை இன்னும் பிரிஞ்சு இருந்தா ஒன்னு நான் செத்திருப்பேன், இல்லை பைத்தியம் பிடிச்சு அலைஞ்சிருப்பேன்” என அஜீத் கலங்கிய குரலில் கூற, ஆர்த்தியின் மனமும் முதல் முறையாகத் தம்பியின் புறம் சாயத் தொடங்கியது.

“இதை இப்போ எதுக்கு என்கிட்ட சொல்ற?”

“நான் ஐஏஎஸ் (IAS) பாஸ் ஆயிட்டேன்கா. அம்மா கிட்டகூட இன்னும் சொல்லல, உன்கிட்டதான் முதல்ல சொல்றேன். இனி ட்ரைனிங், போஸ்டிங், வேலைன்னு என் வாழ்க்கை மாறிடும். ரத்னாவுக்கும் காலேஜ் சேர எல்லா பார்மாலிட்டியும் முடியப்போகுது. படிச்சு முடிச்சதும் ரத்னாவும் வேலையில பிஸி ஆயிடுவா. இனி எந்த விதத்திலும் நானும் ரத்னாவும் உன் வாழ்க்கையில தலையிட மாட்டோம். ஒருவேளை மனந்திறந்து உன்கிட்ட நான் பேச இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போயிட்டா என்ன பண்றது, அதான் இப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன். நாளைக்கு நாங்க கிளம்புறோம்” என்றான் அஜீத்.

“எங்க போகப் போறீங்க?”

“கோயம்புத்தூருக்குத் தான். ரத்னாவுக்கு அங்க உள்ள காலேஜ்ல தான் சீட் வாங்கிருக்கேன்”.

“காலேஜ் ஓபன் ஆக இன்னும் நாள் இருக்கே?”

“ம்ம்ம் நாள் இருக்கு. அதுவரைக்கும் ரத்னாவை உனக்கு பிரச்சனையா இங்க இருக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஸ்டெல்லா வீட்டுல ஒரு மாசம் இருந்துக்குவா. அப்புறம் ஹாஸ்டலுக்கு மாறிடுவா.”

அதன் பிறகு அஜீத்தும், ரத்னாவும் ஆர்த்தியிடம் சாதாரணமாகப் பேசினாலும், ஆர்த்தி மட்டும் ஏதோ ஒரு யோசனையிலேயே இருந்தாள். அனைவரும் இதைக் கவனித்தாலும் அஜீத்தின் திட்டப்படி யாரும் ஆர்த்தியிடம் எதுவும் கேட்கவில்லை. இரவு தன் அறைக்கு வந்த ஆர்த்தி, தங்கவேலு வழக்கம் போல உறங்கத் தயாராக இருக்கையில் அவரிடம் பேசினாள்:

“உங்களுக்கு என்கிட்ட ஏதாவது சொல்லணுமா? இல்லைன்னா கேட்கணுமா?”

“நான் என்ன சொல்லணும், இல்லை கேட்கணும்னு நீ எதிர்பார்க்கிற?”

“நான் எதைப் பற்றிக் கேட்கிறேன்னு தெரியாத மாதிரி பேசாதீங்க. நான் அஜீத், ரத்னா பத்திதான் கேட்கிறேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்” என்றாள் ஆர்த்தி.

“அவங்களைப் பற்றி நான் எதுக்காக உன்கிட்ட கேட்க என்ன இருக்கு?”

“கேட்க ஒண்ணுமே இல்லையா? என்னால அவங்களுக்காக அப்பா, அம்மாகிட்ட பேச முடியும்” என்றாள் ஆர்த்தி.

“நீ பேசாமல் கூட அவங்களை ஒன்னா சேர்க்க முடியும்” என்றார் தங்கவேலு.

“எப்படி முடியும்? எங்க வீட்டுல இவங்க ரெண்டு பேரு மேலயும் கோபமா இருக்காங்களே”.

“நீ சொல்லுறது உனக்கே சின்னப் பிள்ளைத்தனமா தெரியல? இதுதான் உன் வீடு, அது இல்லை. என்ன இருந்தாலும் அஜீத்தான் அந்த வீட்டு வாரிசு, அதை யாராலயும் மாத்த முடியாது. அது போதும் உங்க வீட்டுல சமாதானம் ஆக. உங்க அம்மா, அப்பா, அர்ச்சனா மூணு பேருக்கும் ரத்னாவை ரொம்ப பிடிக்கும். இப்போ ரத்னா படிக்கப் போற காலேஜ் உங்க அப்பா சூப்பர் மார்க்கெட் பக்கத்தில்தான் இருக்கு. அவரு ரத்னாவை அடிக்கடி பார்க்கிற வாய்ப்பு இருக்கு. அப்புறம் ராபர்ட் அங்கிள் ரத்னா, அஜீத் பற்றிப் பேச வாய்ப்பு இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல வயசான உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஐஏஎஸ் மகனைத் தங்க கூட வச்சுக்க ஆசை வர வாய்ப்பு இருக்கு. அப்புறம் ரத்னாவுக்குக் குழந்தை பிறந்துட்டா அதுவே போதும் அவங்களை ஒன்னு சேர்க்க. ஒருவேளை இது எதுவும் அவங்க மனசை மாத்தலைனாலும் கூட, நான் இருக்கேன் அவங்களைப் பார்த்துக்க. இந்தச் சொத்துல பாதி ரத்னாவுக்குச் சேர வேண்டியது, அதுவே உங்க அப்பா சொத்தை விட இரண்டு மடங்கு. இது போதாதா என் தங்கச்சிக்கு?” என்றார் தங்கவேலு பெருந்தன்மையாக.

“என்னடி நீ இப்படி சொல்ற?” தன் தோழி கூறியதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருந்த ஆர்த்தியிடம்,

“உண்மையாத்தான் சொல்றேன் ஆர்த்தி, ப்ளீஸ் அதிர்ச்சி ஆகாம தயவுசெஞ்சு எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கப் பாரு. இப்போ நீ போய் சமாதானப்படுத்தலைனா கூட, சீக்கிரமே உங்க அப்பா, அம்மா அஜீத்தையும் ரத்னாவையும் ஏத்துக்க வாய்ப்பு இருக்கு. அப்படி மட்டும் நடந்துட்டா உன்னை யாரும் மதிக்கவே மாட்டாங்க. இதுவே நீ போய் சமாதானப்படுத்திச் சேர்த்து வச்சேன்னா, உன் மாமியார் வீட்டுல உனக்கு மரியாதை அதிகமாகும். நம்ம தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதுக்கு நீதான் காரணம்னு தெரிஞ்சா, உன் புருஷனால இதுக்கு அப்புறம் உன்னை எதுவும் சொல்ல முடியாது. உன்னை ஏதாவது சொன்னா தங்கச்சி வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை வருமோங்கிற சின்ன பயம் அவருக்கு இருந்துகிட்டே இருக்கும்.”

“நீ சொல்லித் தான் எல்லாம் நடக்குதுன்னு அந்த ரத்னா புரிஞ்சுகிட்டா, உன்னை எதிர்த்துப் பேசுறதுக்கு ஏன், நினைக்கக் கூட பயப்படுவா. ரெண்டு வீட்டுலயும் உன்னுடைய ராஜ்ஜியம்தான் நடக்கும். என்ன ஒண்ணு, நீ அதுக்குக் கிடைத்திருக்க இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கணும். இதுல இன்னொரு விஷயமும் இருக்கு” என்றாள் ஜானகி.

“என்ன இருக்கு? அதையும் சொல்லு.”

“இந்த பெத்தவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு சின்னக் காரணம் இருந்தா போதும், உடனே போய் அவங்க பிள்ளைங்க கூட சேர்ந்துடுவாங்க. அந்த அஜீத், ரத்னாவைச் சேர்க்கிற காரணம் நீயா இருந்தா உனக்குத்தான் நல்லது.”

ஜானகி கூறியதிலிருந்து உண்மையையும், இதனால் தனக்கு வரப்போகும் சாதகமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தெளிவான ஒரு முடிவிற்கு வந்த ஆர்த்தி, தன் பெற்றோரைச் சந்திக்கத் தங்கவேலுடன் கோவை நோக்கிப் புறப்பட்டாள்.

அஜீத் போட்ட திட்டத்தின்படி அனைத்துமே சரியாக நடந்தது. அவனது பெற்றோரும் ரத்னாவைத் தங்கள் மருமகளாக ஏற்கத் தயாராகவே இருந்தனர். ஆர்த்தி பேசி முடித்துச் சென்றதும் தென்றல் இல்லத்திற்கு வந்த அஜீத்தின் பெற்றோர் பேசினர்:

“நடந்ததெல்லாம் நடந்து போச்சு, அதையெல்லாம் நாம் மறந்து விடுவோம். ரத்னா எங்க வீட்டுக்கு வரும்போது அஜீத்தோட மனைவியாகவும், எங்க வீட்டு மருமகளாகவும் தான் வரணும். நீங்க கேட்கலாம், இப்பவும் ரத்னா அஜீத்துடைய மனைவிதானேன்னு. ஆனால், சட்டப்படி இன்னும் ரத்னா ஜஸ்வந்த் மனைவியாத்தான் இருக்கா. நாளைக்கு என்னுடைய பையன் ஐஏஎஸ் அதிகாரியாக வரும்பொழுது இதனால எந்தப் பிரச்சினையும் வர நான் விரும்பல” என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் கூறுவதில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட முத்துவேல், “சரி, அதுக்கு இப்போ நாங்க என்ன பண்ணனும்னு சொன்னா செஞ்சிடுவேன்” என்றார்.

“ஜஸ்வந்த் டெத் சர்டிபிகேட் (Death Certificate) வாங்கி எல்லா பார்மாலிட்டியும் முடிச்சுட்டு, அஜீத்–ரத்னாவுக்கு முறைப்படி இன்னும் ரெண்டு நாள்ல ரிஜிஸ்டர் மேரேஜ் (Register Marriage) செஞ்சிடலாம். அப்புறமா கோயம்புத்தூர்ல என்னுடைய பையன் கல்யாணத்துக்கு ஒரு ரிசப்ஷன் (Reception) அரேஞ்ச் பண்ணனும். அப்பத்தான் இந்தத் கல்யாணம் எல்லாருடைய மனசுலயும் பதியும். தேவையில்லாத எந்தப் பேச்சும் வராது” என்று கிருஷ்ணன் கூற, அனைவரும் அவரது முடிவிற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் அஜீத் மட்டும், “அப்பா, இப்போ இதெல்லாம் அவசியமா? ரிஜிஸ்டர் மேரேஜ் ஓகே, பட் ரிசப்ஷன் இப்போ வேண்டாமே” என்றான். அஜீத் பேசியதும் கோபமடைந்த கிருஷ்ணன், “நீ உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற அஜீத்? நீ எது சொன்னாலும் நாங்க தலையாட்டணுமா? நீயும் ரத்னாவும் பழகுவதைப் பார்த்து காதல்னு நினைச்சுக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனோம், அப்போ நீ வேண்டாம்னு முடிவு பண்ணுன. அதுக்கப்புறம் நாங்க அதைப் பற்றிப் பெருசா எதுவும் யோசிக்கல. திரும்பவும் நீ ரத்னாவைத் கல்யாணம் பண்ணும் போதும் எங்களை யாரையும் கலந்து பேசல, நீயாத்தான் முடிவு எடுத்த. இப்படி உன் வாழ்க்கையில நீயே எல்லா முடிவும் எடுத்தா பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்?” என்றார்.

“இல்லை அப்பா, நான் எதுக்காக ரிசப்ஷன் வேண்டாம்னு சொல்ல வந்தேன்னா…” என்று அஜீத் இழுக்க, “நீ என்ன சொல்லப் போற? ரிசப்ஷன் வச்சா அது ரத்னாவின் மனதைக் காயப்படுத்தும், அதனால வேண்டாம்னு சொல்லப் போற, அதானே?” என அஜீத்தின் காரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட கிருஷ்ண சந்திரன் ரத்னாவிடம் திரும்பினார்:

“நீ சொல்லும்மா, பெத்தவங்களைக் கேட்காமல் பிள்ளைங்க எடுக்குற முடிவு பெத்தவங்களைக் காயப்படுத்துமா இல்லையா? ரத்னா, எனக்கு உன் மேல எந்தக் கோபமும் கிடையாது. அதே மாதிரி உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்லை. இதுவரைக்கும் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் என்னுடைய பையன் டெல்லியில படிச்சுக்கிட்டு இருக்கிறதா மட்டும்தான் சொல்லியிருக்கேன். திடீர்னு உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி எல்லாருக்கும் தனித்தனியா பதில் சொல்ல முடியாது. எங்களோட நிலைமையையும் நீ புரிஞ்சுக்கோ, அப்படியே உன் முட்டாள் புருஷனுக்கும் புரிய வை” என்றார்.

“சரி மாமா, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை மாமா” எனக் கூறிவிட்டு, அஜீத்தின் காதின் அருகில் சென்று, ‘என் முட்டாள் புருஷனுக்குப் புரிய வைக்கிறேன்’ என ரத்னா கிசுகிசுக்க, அஜீத் ரத்னாவைத் திரும்பிப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.

“அப்பா, ரிஜிஸ்டர் மேரேஜுக்கு நிறைய பார்மாலிட்டி இருக்கு, எப்படி இரண்டு நாள்ல பண்ண முடியும்?” என்று அஜீத் கேட்க, “நீ எக்ஸாம்ல பாஸ் ஆனதை ரத்னா போன் பண்ணிச் சொன்னதுமே எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன்” என்றார் கிருஷ்ணன்.

“இது எப்போ நடந்துச்சு?” என அஜீத் ஆச்சரியமாகக் கேட்க, “நீ வருவன்னு எனக்குத் தெரியும்” என்றவர் விறைப்பாகவே கூறிவிட்டு எழுந்து கொண்டார்.

அதன்பிறகு இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். அஜீத் மீண்டும் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, ஆர்த்தியிடமே தான் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை அளித்தான்.

இதுவரை ஜஸ்வந்தின் இறப்புச் சான்றிதழைப் பற்றி அனைவரும் மறந்திருக்க, இந்தத் திருமண ஏற்பாட்டிற்காக அஜீத்தும் தங்கவேலும் அதைப்பெறச் சென்றனர். பெறச் சென்ற இடத்தில் மருத்துவர் ஒருவர் இருவரையும் தனியாக அழைத்துச் சென்று பேசினார்:

“இது பற்றி நான் முன்னமே உங்ககிட்டப் பேசி இருக்கணும். அப்போ இருந்த சூழ்நிலையில என்னால இதைப் பத்திச் சொல்ல முடியல. சொல்ல முயற்சி பண்ணுன போது யாரோ எனக்குப் போன் பண்ணி மிரட்டினாங்க.”

“சார், நீங்க எங்ககிட்ட என்ன சொல்லணும்னு நினைச்சீங்க? எதுக்காக உங்களை மிரட்டினாங்க? தயவுசெய்து புரியிற மாதிரி சொல்றீங்களா?” என்று அஜீத் கேட்டான்.

“ஜஸ்வந்த் ஸ்பாட் டெட் (Spot Dead) அப்படின்னு ரிப்போர்ட் கொடுத்தது நான் தான்.”

“சரி, அதுல என்ன இருக்கு?” என்று தங்கவேலு கேட்டார்.

“நீங்க நினைக்கிற மாதிரி ஜஸ்வந்த் ஆக்சிடென்ட் (Accident) ஆகி சாகலை.” இதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

“நீங்க என்ன சொல்றீங்க? ஆக்சிடென்ட்ல ஜஸ்வந்த் சாகலை அப்படின்னா, எப்படி நடந்திருக்கும்?”

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் (Postmortem Report) படி உடம்பில் ஏற்பட்ட காயமும், குரல்வளை எலும்பு முறிவும் மட்டும்தான் அவருடைய மரணத்திற்கு காரணம். இந்த ரெண்டும் ஜஸ்வந்திற்கு இயற்கையான முறையில் ஏற்படவே இல்லை. யாரோ வேணும்னு செஞ்சிருக்காங்க.”

“அந்த ரிப்போர்ட்டை இப்போ நீங்க தர முடியுமா?”

“அது என்கிட்ட இல்லை. நான் ரெடி பண்ணுன அன்னைக்கு என்னுடைய குழந்தையை யாரோ கொன்னுடுவேன்னு மிரட்டினாங்க. எனக்கு வேற வழி தெரியல, அதனால ரிப்போர்ட்டை மாத்திக் கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் உங்ககிட்ட உண்மையைச் சொல்லணும்னு முயற்சி பண்ணுனேன், என்னால முடியல. இப்பக்கூட உங்களை எச்சரிக்கை பண்றதுக்காக மட்டும்தான் இதை உங்ககிட்ட சொல்றேன். தயவுசெய்து என்னால்தான் இது உங்களுக்குத் தெரியும்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க” எனக் கூறிவிட்டு அந்த மருத்துவர் அவசரமாக அங்கிருந்து சென்றுவிட, தங்கவேலு அதிர்ச்சியுடன் பேசினார்:

“யார் இப்படி எல்லாம் பண்ணியிருப்பாங்க? ஜஸ்வந்தை கொலை பண்ற அளவுக்கு யாரு இருக்கா?”

“எனக்கும் அதுதான் புரியல அத்தான்” என்றான் அஜீத்.

“ஜஸ்வந்த் படிச்சது, வேலை பார்த்தது எல்லாமே வெளிநாட்டுல தான். அப்பப்போ ஏதாவது மீட்டிங்காக மட்டும்தான் இந்தியா வருவான். அவனுக்கு யாரு எதிரி இருக்கப் போறாங்க?”

“அத்தான், இதப் பற்றி நாம இப்பப் பேச வேண்டாம். கண்டுபிடிப்போம், யாரு ஜஸ்வந்தை கொலை பண்ணிருப்பாங்கன்னு.”

“அஜீத், இது எதுவும் எப்படி ரத்னாவுக்குத் தெரியாமல் நடந்திருக்கும்?”

“தெரியல அத்தான், ஆனா நாம ரத்னாகிட்ட எதையும் இப்போ கேட்க முடியாது. நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் ரத்னாகிட்ட பேசுறேன். பார்க்கலாம், கொலைகாரன் எப்படித் தப்பிக்கிறான்னு.”

பதிவுத் திருமணம் எளிமையாக முடிந்ததும், ரத்னாவை அழைத்துக்கொண்டு கோவை வந்து சேர்ந்தனர். வீட்டிற்குள் வந்ததும் ரத்னாவைக் கட்டிப் பிடித்துக் கொண்ட அர்ச்சனா, “எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் இப்ப எனக்கு அண்ணியா வந்திருக்கா. அதுக்காக உனக்கு மரியாதை கொடுப்பேன்னு நீ எதிர்பார்க்காதே. எப்பவுமே நீ எனக்கு என்னுடைய ரத்னாதான். சரி சரி வா, நாம நம்ம ரூமுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்” என அழைத்துக்கொண்டு செல்ல முயற்சிக்க, ஆர்த்தி குறுக்கிட்டாள்:

“அது என்ன நம்ம ரூம்? இனி அது உன்னுடைய ரூம் மட்டும்தான். அஜீத் ரூம்தான் இனி ரத்னா ரூம்.”

“ஓகே அக்கா சொல்லிட்டா அதுக்கு அப்பீல் ஏது” என்றாள் அர்ச்சனா சிரித்தபடி.

“ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்ததுல ரத்னா கொஞ்சம் டயர்டா இருப்பா. நீ அப்புறமா ரத்னாகிட்ட பேசு. இப்ப ரத்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு ரிசப்ஷனுக்கு ஷாப்பிங் வேற போகணும்” என்றாள் ஆர்த்தி பொறுப்பாக.

ஆர்த்தியின் பேச்சிற்கு மறுபேச்சின்றி அஜீத்தின் அறைக்கு வந்த ரத்னா, அஜீத்தின் அறை பல மாதத்திற்குப் பின்பும் கூட அதே மாதிரி எந்தப் பொருட்களும் மாறாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, ஓசை எழுப்பாமல் உள்ளே வந்தான் அஜீத்.

“என்ன ரத்னா, என்னோட ரூம் உனக்கு புடிச்சிருக்கா?”

“ரொம்ப புடிச்சிருக்கு.”

“ரூம் மட்டும் தான் உனக்கு புடிச்சிருக்கா?” அஜீத்தின் கேள்வியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ரத்னா கூறினாள்:

“ரூம்ல இருக்கிற எல்லாமே புடிச்சிருக்கு.”

“இந்த ரூம்ல தான் நானும் இருக்கிறேன். என்னை உனக்கு புடிச்சிருக்கா?” அஜீத்தின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் ரத்னா மௌனம் சாதிக்க, அஜீத் தொடர்ந்தான்: “ரத்னா, உனக்கு ஏதாவது பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் நீ வெளிப்படையா என்கிட்ட சொல்லலாம். உனக்கு பிடிக்காத எதையும் நான் நடக்க விடமாட்டேன்.”

“அத்தான், நீங்க எதை மனசுல வச்சுக்கிட்டு பேசுறீங்கன்னு எனக்குப் புரியல. எனக்கு உங்களைப் பிடிக்கும். இப்போ எனக்குப் பிடிக்காத எதுவும் இங்க நடக்கல. தயவுசெய்து உங்களை நீங்களே குழப்பிக்கிட்டு என்னையும் குழப்பாதீர்கள்.”

“ரத்னா, எனக்கு உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்.”

“சரி பேசுங்க, உங்களைப் பேச வேண்டாம்னு யார் சொன்னா?” என்று ரத்னா கேட்க, அஜீத் ஆரம்பிப்பதற்கு முன் அங்கு வந்தாள் மைதிலி.

“அஜீத், ரத்னா ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்து பேசுங்க. எல்லாரும் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க.”

“சரிம்மா வர்றோம்” எனக் கூறிவிட்டு அஜீத் கீழே செல்ல, ரத்னாவும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது, சாப்பிட்ட உணவு அனைத்தையும் ரத்னா திடீரென வாந்தி எடுக்க, வீட்டில் உள்ள அனைவரும் பதறினர். மைதிலி பதற்றத்துடன், “ரத்னா என்ன ஆச்சும்மா? என்ன பண்ணுது?” எனக் கேட்டார்.

“ஒன்னுமில்லை அத்தை, டிராவல் பண்ணி வந்த உடனேயே சாப்பிட்டது எனக்கு ஒத்துக்கவில்லை போல. லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு.” ரத்னா கூறிய உடனே அர்ச்சனா பேசினாள்:

“நீ போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு அண்ணி, அப்படின்னா நல்லா பிரெஷ் ஆகிடுவ.” என கூற, தங்கவேலு குறுக்கிட்டு, “ரெண்டு நாளா சரியா தூங்காம இருந்தா, அதனால கூட வாந்தி, தலைசுற்றல் இருக்கலாம். தூங்கினால் எல்லாம் சரியா போயிடும்” என்றார்.

அப்போது ரத்னாவின் பாட்டி, “நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே டாக்டர் தானா? இல்லை எங்களை எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கீங்களா?” என்றார் கோபமாக.

“எதுக்கு பாட்டி உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?” என்று தங்கவேலு கேட்க, “பிள்ளைக்குத் தலைசுற்றல் இருக்கு, வாந்தி எடுக்குது… இதுகூட புரிஞ்சுக்க முடியல? நீங்க எல்லாம் என்னத்துக்கு டாக்டருக்குப் படிச்சீங்களோ! மைதிலி, உனக்குத் தெரிஞ்ச நல்லா படிச்ச பொம்பளையா இருந்தா டாக்டர் யாராவது இருந்தா அவங்களை போய் பார்த்துட்டு வரலாம்” என்றார் பாட்டி விபரம் தெரிந்தவராக.

“பாட்டி, எனக்கு ரத்னாவைப் பற்றித் தெரியாதா? சின்ன வயசுல இருந்து சரியா தூங்கலைனா ரத்னாவுக்கு வாந்தி வரத்தான் செய்யும்” எனத் தங்கவேலு நிலைமையைச் சமாளிக்க முயல, “போடா கூறுகெட்டவனே, இதெல்லாம் போய் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு” என்றார் பாட்டி சலிப்புடன்.

அனைவர் முகத்திலும் ஒருவித மகிழ்ச்சி இருக்க, நடப்பது புரியாமல் குழம்பியது அஜீத் மட்டுமே. ரத்னாவை அழைத்துக் கொண்டு மைதிலி, பார்வதி என நால்வரும் மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாகினர். அஜீத் தங்கவேலுவிடம், “என்ன அத்தான், உங்க பாட்டி கூட உங்களை டாக்டர்னு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க?” என்றான் கிண்டலாக.

“எனக்கும் தான் புரியல, எதுக்காக எங்க பாட்டி இப்படிப் பேசுறாங்கன்னு” எனத் தங்கவேலு கூற, கணவனின் குழப்பத்தைப் பார்த்த ஆர்த்தி பேசினாள்:

“இன்னுமா உங்களுக்குப் புரியலை? உங்க பாட்டி சொன்னது சரிதான், உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை.”

“என்னது, எனக்கு அறிவில்லையா! ஆமாண்டி, உன்னைக் கல்யாணம் பண்ணும் போதே தெரிய வேண்டாமா எனக்கு அறிவு இல்லைன்னு” என்றார் தங்கவேலு.

“உங்ககிட்ட மனுஷங்க பேச முடியுமா? அஜீத், நீ போயி நல்ல ஸ்வீட்டா (Sweet) பார்த்து வாங்கிட்டு வா” என்றாள் ஆர்த்தி.

“இப்ப எதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்ற?” என்று அஜீத் கேட்க, “இன்னுமாடா உனக்கு புரியல? நீ அப்பாவாகப் போற” என்றாள் ஆர்த்தி புன்னகையுடன்.

“என்னது… நானா!!!” அஜீத் அதிர்ச்சியில் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட, “இப்ப எதுக்குடா இப்படி தலையில கையை வச்சு உட்கார்ந்து இருக்க?” என்றாள் ஆர்த்தி.

“அக்கா… நான் டெல்லிக்கு ரத்னாவை கூட்டிட்டு ஹனிமூனுக்கு (Honeymoon) போகல, படிக்கப் போனேன். கிட்டத்தட்ட என்னோட கல்யாணம் வீட்டை எதிர்த்து, அப்பா, அம்மாகிட்ட சம்மதம் கேட்காமல், ஏன் ரத்னாகிட்டயே சம்மதம் கேட்காமல் நடந்த கல்யாணம். இதுல வர்ற பிரச்சினையெல்லாம் சமாளித்து எப்படிக் குடும்பத்தை ஒன்று சேர்க்கிறது, எப்படி நான் படிச்சு ஐஏஎஸ் (IAS) ஆகிறது, கையில இருக்கிற பணத்தை வச்சுச் சிக்கனமா குடும்பத்தை எப்படி நடத்துறதுன்னு எனக்கு ஆயிரத்தெட்டு கவலை இருந்துச்சு. இதுல குழந்தையைப் பற்றி நாங்க ரெண்டு பேருமே யோசிக்கல” என்றான் அஜீத் குழப்பத்துடன்.

மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து முடிவிற்காகக் காத்திருக்க, ரிப்போர்ட் (Report) அனைத்தையும் பார்த்த பெண் டாக்டர், மைதிலியைத் தனியே அழைத்து வினவினார்:

“மைதிலி, எனக்கு உங்க குடும்பத்தைப் பர்சனலா நல்லா தெரியும். அதனாலதான் கேட்கிறேன், உன் பையன் புடிச்சுதான் இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினானா?”

“எதுக்காக இப்படி கேட்கிறீங்க? என் பையனுக்கு ரத்னாவை ரொம்ப பிடிக்கும். உண்மையைச் சொல்லணும்னா எங்க எல்லாரையும் எதிர்த்துதான் ரத்னாவை கல்யாணம் பண்ணுனான்” என்றார் மைதிலி.

“அந்தப் பொண்ணுக்கு டிராவல் பண்ணது ஒத்துக்காமதான் வாமிட், தலைசுற்றல் வந்திருந்திருக்கு. அது இப்போ பிரச்சனை இல்லை. உன் பையனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்தால் பேசிச் சரி பண்ணப் பாருங்க.”

“ரெண்டு பேருக்கும் இடையில அப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட ரத்னா கஷ்டப்படக்கூடாதுன்னு என் பையன் நினைப்பான். அதே மாதிரி அஜீத் என்ன சொன்னாலும் அதை அப்படியே ரத்னா கேட்டு நடப்பா. அப்படியிருக்கும்போது இவங்களுக்குள்ள என்ன பிரச்சனை வரப்போகுது? இப்ப என்ன கல்யாணம் ஆகி ஒன்பது மாசம் தானே ஆகுது, பார்த்துக்கலாம்” என்றார் மைதிலி.

“பிரச்சனை இல்லைன்னா ஓகே, உன்னுடைய டாட்டர்-இன்-லா இன்னும் வெர்ஜின் தான்” என்றார் டாக்டர் அதிரடியாக.

“என்ன சொல்றீங்க!” என மைதிலி அதிர்ந்தார்.

“எஸ், ரத்னா இன்னும் கன்னிப் பொண்ணுதான்.”

டாக்டர் கூறியது மைதிலிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் அஜீத் இரக்கப்பட்டு ரத்னாவைத் திருமணம் செய்து அவளின் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கின்றானோ என்ற பயம் வர ஆரம்பித்தது.

ரத்னாவை விரும்பி மணந்த ஜஸ்வந்த், ரத்னாவை நெருங்க முயற்சி செய்தாலும், கட்டாயத்தினால் ரத்னாவின் உடலை வெல்ல நினைக்கவில்லை. தான் தந்த முத்தமே ரத்னாவின் விருப்பமின்மையை உணர்த்திவிட, ஜஸ்வந்த் அதற்கு மேல் முன்னேற முயற்சி செய்யவில்லை.

ரத்னாவைத் திருமணம் செய்யப் பிடிக்காத அஜீத், இரக்கத்தினால் மட்டுமே திருமணம் செய்து கொள்கிறானோ என்று மைதிலிக்கு அன்று பிடிக்காமல்தான் திட்டினாள். தாங்கள் ரத்னாவை விலக்கி வைத்தால் அஜீத்துடன் ரத்னாவின் உறவு பலப்படும் என்று நினைத்தாள். ஆனால், அவர் எதை நினைத்து அன்று அப்படிப் பேசினாரோ, அதே நடக்காதபோது மைதிலிக்கு ஒரு பெண்ணாக அஜீத்தின் மீது கோபம் வந்தது. தான் எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முடிவுடனே மைதிலி வீட்டிற்குப் புறப்பட்டார்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top