உன் நிழல் நான் தொட ep 18

அத்தியாயம் 18

காதல் என்பது அதன் பொருளை உணராதவர்களைப் பொறுத்தவரை மூன்றெழுத்து ஒரு வார்த்தையே; ஆனால், அதன் பொருளை உணர்ந்தவர்களுக்கு அது வார்த்தை அல்ல, வாழ்க்கை. உலகில் பலரை இயக்கும் சக்தியாகவும், சில சமயம் அழிக்கும் ஆற்றலாகவும், ஏதோ ஒரு விதத்தில் அனைவருள்ளும் காதல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஜஸ்வந்தும், அஜீத்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

பதினேழு வயது ஜஸ்வந்த், பதினோரு வயது ரத்னாவின் மீது கொண்டது நிச்சயம் உண்மைக் காதலே. ஆனால், அவனது இயற்கைக் குணம் அவனின் காதலைப் பிடிவாதமாகவே மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தியது. அன்று ஹர்ஷத் ஜஸ்வந்திடம் கூறிய, “ரத்னா சொல்லுவா நீ வேண்டான்னு, ரத்னாவுக்குக் குடும்பம்தான் முக்கியம், நீ இல்லை!” என்ற வார்த்தைகள் ஜஸ்வந்திடம் இருந்த பிடிவாத குணத்தைத் தலைதூக்கச் செய்தன.

ஜஸ்வந்தின் பிடிவாத குணம் அவன் ரத்னாவின் மீது கொண்ட காதலை அவனையே உணர விடாமல் செய்தது. தனக்கு ரத்னா மீது இருப்பது ஆசையே, அதுவும் வாழும் நாள் முழுதும் ரத்னாவைத் தன்னோடு வைத்துக்கொள்ளும் ஆசை எனத் தனக்குத் தானே காரணம் கற்பித்துக்கொண்டான். ரத்னா தனது பரிசை மறுத்தது அவனுள் இருந்த பிடிவாதத்தை வளரச் செய்தது. அன்றிலிருந்து வெறிபிடித்தவனாகத் தன் கவனம் முழுவதையும் படிப்பிலும், அது முடிந்ததும் தந்தையின் தொழிலிலும் செலுத்த ஆரம்பித்தான்.

தொழில் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே தந்தை மற்றும் தமையனின் பாராட்டப் பெறும் அளவுக்குத் தன் நிலையை உயர்த்திக் கொண்டான். இதற்கிடையில் தன் மனது ரத்னாவின் ஞாபகங்களை எழுப்பினாலும், அவற்றை ஜஸ்வந்த் தன் மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டான். தம்பதியின் பொறுப்புணர்வைப் பார்த்த ஹர்ஷத், ஜஸ்வந்த் ரத்னாவை மறந்துவிட்டான் என நினைத்திருக்க, ‘நான் மறக்கவில்லை’ என்பதைப் பல வருடங்களுக்குப் பின்பும் ஜஸ்வந்த் நிரூபித்தான்.

மீண்டும் ரத்னாவைச் சந்தித்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ரத்னாவைத் தன் வாழ்வில் கொண்டுவரவே முயற்சி செய்தான். ஜஸ்வந்த் செய்த முயற்சி தவறாகி, அது ரத்னாவின் காதலைப் பெறுவதற்குப் பதிலாக ஜஸ்வந்த் மீது ஒரு பயத்தை உருவாக்கியது என்பதைப் பாவம் அவன் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ரத்னா தன்னைவிட்டு விலகிச் செல்வதையும், அதேசமயம் அஜீத்துடன் நெருங்கிக் கொண்டே இருப்பதையும் உணர்ந்த ஜஸ்வந்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ரத்னா அஜீத்துடன் பழகுவதில் எனக்கு விருப்பமில்லை” என்பதை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த, அது ஹர்ஷத்தைப் பொறுத்தவரை ஜஸ்வந்த் ரத்னாவால் அஜீத் மீது பொறாமை கொண்டவனாகச் சித்தரித்தது. ரத்னாவைக் காரணமாகக் கொண்டு சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பல வாக்குவாதங்களும், சில சண்டைகளும் ஏற்பட, இறுதியில் ஜஸ்வந்தின் காதலையும், அவன் காதலின் ஆழத்தையும் புரிந்துகொண்ட ஹர்ஷத் மற்றும் அவனது வீட்டார், எப்படியாவது ரத்னாவை ஜஸ்வந்த் வாழ்க்கையில் இணைத்தே தீருவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

எனினும், ரூபா–ஹர்ஷத் திருமணத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் நீங்காதிருக்க, ரத்னா–ஜஸ்வந்த் திருமணத்தைப் பற்றிய பேச்சை ஆரம்பிக்கத் தேவராஜ், மேக்னா தம்பதியினர் தயக்கம் காட்டினர். ஆனால், ஹர்ஷத்–ரூபா தம்பதியினர் அந்த முயற்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, ரத்னாவை ஜஸ்வந்துக்குப் பெண் கேட்டனர். அவர்கள் எதிர்பாராத திருப்பமாக, முத்துவேல் திருமண முடிவை ரத்னாவின் கையிலேயே தந்தார். நாட்கள் அதன் போக்கில் செல்ல, ரத்னாவின் படிப்பு முடியும் சமயம் அஜீத்தின் பெற்றோரும் ரத்னாவைப் பெண் கேட்டது அனைவரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம்.

முதலில் ஜஸ்வந்துக்குச் சாதகமாக நின்ற தங்கவேலு, பின்னர் தங்கைக்கு ஆதரவாக மாறிவிட, ரத்னாவின் பெற்றோர் அஜீத்திற்குத் தங்கள் ஆதரவை அளிக்க, ஜஸ்வந்தின் புறம் கொஞ்சம் பலவீனமாகவே இருந்தது. இதை அனைத்தையும் அறிந்த ஜஸ்வந்த் வீட்டார், ஒருவர் அறியாமல் மற்றவர் என அனைவருமே அஜீத்தைச் சந்தித்தனர். தேவராஜ் அஜீத்தைச் சந்தித்து, “அஜீத், நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல. ரத்னாவுக்கும் உனக்கும் மேரேஜ் பண்றதைப் பற்றி உங்க வீட்டுல பேச்சு நடந்துகிட்டு இருக்கு. அதைப் பற்றி உன் கருத்து என்னன்னு நான் தெரிஞ்சுக்கத்தான் வந்து இருக்கேன்” என்றார்.

“ஆமா, நீங்க கேக்குற விஷயம் உண்மைதான் அங்கிள். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?”

“எனக்குத் தெரிய வேண்டியது உனக்கு இதுல விருப்பம் இருக்கா? இல்லையா? அது மட்டும்தான்.”

“அதை எதுக்கு நீங்க கேக்குறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ஓ எஸ், தாராளமா நீ தெரிஞ்சுக்கலாம். என்னோட பையன் ஜஸ்வந்த் ரத்னாவை லவ் பண்றான். அவனோட வழியில இருந்து நீ விலகிடணும். ஒருவேளை என்னால விலக முடியாதுன்னு நீ சொன்னா, உன்னை எப்படி என் பையன் வழியில இருந்து விலக்கணுமோ, அப்படி நானே விலகிடுவேன்” என மிரட்டினார் தேவராஜ்.

“ஓவர் கான்ஃபிடன்ஸ்-ஆ?”

“எஸ் அங்கிள், ரத்னா மேல எனக்கு இருக்குற கான்ஃபிடன்ஸ் ஓவர் தான். இந்த உலகத்திலேயே ரத்னாவை என்னை விட அதிகம் புரிஞ்சுக்கிட்டவங்க வேறு யாரும் இருக்க முடியாது. கல்யாணப் பேச்சு எடுத்தா ரத்னாவின் முடிவு ஒன்னு இந்த அஜீத்தா இருக்கும், இல்லைன்னா இந்த அஜீத் எடுக்குற முடிவா இருக்கும்.”

“அஜீத், நான் என் பையனுக்காக எந்த லெவலுக்கும் இறங்கத் தயாராக இருக்கேன்.”

“அதேமாதிரி ரத்னாவுக்காக உங்க அளவுக்கு வர நானும் தயாராக இருக்கிறேன். போங்க அங்கிள், இந்த வயசுல ரொம்ப கோபப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.”

அதன்பிறகு தேவராஜ் பலமுறை பல விதமாகப் பேசியும், அஜீத்தின் பதில் மட்டும் மாறாமல், ‘ரத்னா தன்னவள்’ என்பதாகவே இருந்தது. திருமண விஷயத்தில் தங்கவேலு அஜீத்தின் கருத்தை அறிந்துகொள்ள அஜீத்திடம் நேரடியாகவே கேட்டார், “உனக்கு ரத்னாவைப் பிடிக்குமா அஜீத்?”

“அத்தான், எனக்கு ரத்னாவைப் பிடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?”

“என்னுடைய சந்தேகம் ரத்னாவை உனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு இல்லை, கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்குப் பிடிக்குமான்னுதான்.”

“எதுக்காக இந்தக் கேள்வி இன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் இப்போ இருக்கக்கூடிய ஒரே ஒரு குழப்பம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரிந்திருக்கும். அப்பா அதற்கான முடிவு எடுக்குற பொறுப்பை ரத்னாகிட்ட கொடுத்திருக்காங்க. ரத்னாவை என்றைக்கும் ‘இது வேணுமா இல்லை அது வேணுமா’ அப்படிங்கிற சூழ்நிலைக்குத் தள்ளுவதில் எனக்கு விருப்பமில்லை. அவளைக் குழப்பத்தில் விட எனக்கு விருப்பம் இல்லை.”

“அத்தான், கவலைப்படாதீங்க. இதைப் பற்றி நானே ரத்னாகிட்ட நேரடியாகப் பேசிக்கிறேன்.”

தங்கவேலுவைச் சமாதானப்படுத்தி அனுப்பிய அஜீத்தை, அடுத்த நாளில் சந்திக்க வந்தனர் ஹர்ஷத்தும் ரூபாவும். ஹர்ஷத் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் அஜீத் குறுக்கிட்டான்: “நீங்க என்ன சொல்லப்போறீங்க என்று எனக்கு நல்லாவே புரியுது. தயவுசெஞ்சு அதைப் பற்றிப் பேச வேண்டாம். பேசினாலும் உங்க அப்பாகிட்ட நான் சொன்ன அதே பதில்தான் உங்ககிட்டயும் சொல்ல வேண்டியதா இருக்கும்” என்றான். அஜீத்திடம் ஹர்ஷத், “அஜீத், நான் உன்கிட்ட ரத்னாவை ஜஸ்வந்துக்கு விட்டுக் கொடுன்னு கேட்க வரல. ரத்னாவை விட்டு விலகி இருன்னு சொல்ல வந்தேன்” என்றான்.

“நான் எதுக்காக ரத்னாவை விட்டு விலகி இருக்கணும்?” எனக் கூறிய அஜீத்தைப் பார்த்து ஒரு எள்ளல் நிறைந்த பார்வையைச் செலுத்திவிட்டு ஹர்ஷத் மேற்கொண்டு பேசும் முன், இடையில் புகுந்தாள் ரூபா:

“அஜீத், நீ விலகலன்னா உங்க அக்கா ஆர்த்தியால ரத்னாவின் சந்தோஷம் காணாமல் போயிடும். இப்போ ரத்னாவுக்குச் சாதகமா பேசுற உங்க அப்பாவும் அம்மாவும் நாளைக்கு அவங்க பொண்ணுக்குச் சாதகமா பேச ஆரம்பிக்கலாம். அதனால உங்க வீட்டுக்குள்ள பிரச்சனை வரலாம். உங்க வீட்டுல வர்ற பிரச்சனை அப்படியே தங்கவேலு–ஆர்த்தி வாழ்க்கையிலும் பிரச்சனைக் கொண்டு வரலாம்” எனக் கூறிக் கொண்டிருந்த ரூபாவைத் தடுத்து ஹர்ஷத் பேசினான்:

“ஒருவேளை இதெல்லாம் உன்னால சமாளிச்சு ரத்னாவை நீ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா, உன்னால உன்னோட கனவு… அதுதான் ஐஏஎஸ், அந்த மூன்றெழுத்தை உன் பேருக்குப் பின்னால சேர்க்கவே முடியாமல் போய்விடும். உன்னை ஐஏஎஸ் ஆக விடாமல் தடுக்கவும் எனக்குத் தெரியும், உங்க அப்பாவை ஆண்டியா மாற்றவும் எனக்குத் தெரியும்.”

“என்ன சார், மிரட்டிப் பார்க்கிறீங்களா?”

“இது மிரட்டல் இல்லை அஜீத், ஒரு அண்ணனா தம்பிக்கு என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். யோசிச்சு நல்ல முடிவா எடுப்பேன்னு நம்புறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றான் ஹர்ஷத்.

இவர்களை அடுத்து ஆர்த்தி வந்தாள், “அஜீத், எனக்கு நீ அந்த ரத்னாவைக் கல்யாணம் பண்றது சுத்தமா பிடிக்கல. ஒருவேளை ரத்னா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா, அவளுடைய நிம்மதி மொத்தமா அவளை விட்டுப் போய்விடும்” என்றாள்.

“எதுக்குக்கா ரத்னா மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு? ரத்னா உனக்கு அப்படி என்ன பண்ணுனா?”

“என் வெறுப்பு ரத்னா மேல மட்டும் இல்லை, உன் மேலும் சேர்த்துதான். நீ பிறந்ததுக்கு அப்புறம் எனக்கு இந்த வீட்டுல முக்கியத்துவம் இல்லாம போயிடுச்சு. நான் போன வீட்டுல அந்த ரத்னாவால என்னோட பேச்சுக்கு மரியாதையே இல்லாம போயிட்டு. இப்ப நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க.”

“அக்கா, அப்படிலாம் இல்லை.”

“நீ என்ன சொன்னாலும் சரி, நான் கேட்கப் போறது இல்லை. ஒருவேளை உனக்கு இந்த அக்கா மேலேயும் உன் குடும்பத்து மேலேயும் கொஞ்சமாவது பாசம் இருந்தா, நீ அந்த ரத்னாவும் வேண்டாம்னு சொல்லணும். அப்படி சொல்லிட்டா அப்போ ஒத்துக்கிறேன் உனக்கு இந்த அக்கா மேல பாசம் இருக்குன்னு.”

இப்படி ஐந்து நபர்களின் பேச்சைக் கேட்டு மலைத்துப் போய் இருந்த அஜீத்தைத் தொடர்பு கொண்டது மேக்னாவின் அழைப்பு.

“சொல்லுங்க ஆன்ட்டி, உங்க பங்குக்கு நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ சொல்லுங்க, அதையும் நான் கேட்டுக்குறேன்” என்றான் சோர்வாக.

“நான் ரத்னாவை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்.”

“ஏன், என்னால, எங்க அம்மாவால ரத்னாவை நல்லா பார்த்துக்க முடியாதா? ஒத்துக்குறேன் நீங்க எங்களை விட வசதியான குடும்பம்தான், ஆனா ரத்னாவை எங்களை விடச் சந்தோஷமா யாராலும் பார்க்க முடியாது.”

“என் குடும்பத்தையும், உங்க அக்காவையும் மறந்துட்டுப் பேசாதே.”

“ஆர்த்தியையும் மத்தவங்களையும் எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.”

“ஆர்த்தியை நீ சமாளிக்கலாம், ஆனால் வரப்போற பிரச்சனையை உன்னால சமாளிக்க முடியாது” என்று மேக்னா ஒரு வெடியைப் போட்டு வைத்தார்.

அடுத்து ஜஸ்வந்தின் நண்பன் கார்த்திக் தன் பங்கிற்குப் பேசிவிட்டுச் செல்ல, அனைத்தையும் யோசித்துக்கொண்டிருந்த அஜீத் செய்த முடிவு, ‘இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்’ என்பது மட்டுமே. முடிந்தவரை பிரச்சனைகளைச் சுமுகமாக முடித்துவிட்டு, அதன்பிறகு அனைவரின் சம்மதத்துடன் ரத்னாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதே அவன் ஆசையாக இருந்தது.

ஆனால், அவன் ஆசையை நடக்கவிடாது செய்யவே அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் எதற்கும் தளராத அஜீத்தின் மனதை அசைத்துப் பார்த்தது. ஒருபுறம் தன் தந்தையின் தொழில் அவருக்குத் தெரியாமலேயே அழியும் நிலையில் இருக்க, தங்கையின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்க, தமக்கையின் உறவு கேள்விக்குறியாக… இதற்கெல்லாம் மூலகாரணமான ஜஸ்வந்த் அடுத்த நாள் அவனைச் சந்தித்தான்.

“ஹலோ அஜீத், எப்படி இருக்க?”

“நான் எப்படி இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?”

“நான் எதிர்பார்த்தது இருக்கட்டும், நீ எதுக்காக இவ்வளவு கோபமா இருக்க?”

“பண்றதெல்லாம் பண்ணிட்டு, நான் எதுக்குக் கோபமா இருக்கிறேன்னு காரணம் தெரியாத மாதிரி கேட்கிறீங்களா?”

“சத்தியமா நீ ஏன் கோவமா இருக்குறன்னு எனக்குத் தெரியல. ஐ திங்க் நம்ம மீட் பண்ணி கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வருஷம் ஆகிவிட்டது. லாஸ்ட்டா ரெஸ்டாரன்ட்ல நடந்த பிரச்சனைக்காக இப்பவும் நீ கோவமா இருந்தா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.”

“நான் அதுக்குக் கோவமா இல்லைன்னு உனக்கு நல்லா தெரியும்.”

“அதுக்கப்புறம் நான் எதுவும் பண்ணல, அப்படி இருக்கும்போது எதுக்குக் கோவமா இருக்குற?”

“நீ எதுவும் பண்ணாமலா என் அப்பாவின் கடை அவர் கையை விட்டுப் போகப் பார்க்குது? நீ எதுவும் பண்ணாமல் என் தங்கச்சியை ரெண்டு பேரு ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க? நீங்க எதுவும் பண்ணாமலா உங்க வீட்டு ஆளுங்க தனித்தனியாக வந்து என்னை மிரட்டிட்டுப் போறாங்க?”

“அஜீத், என்னை நம்பு, நான் உண்மையாக எதுவும் பண்ணல. இப்பக்கூட நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்க மட்டும்தான் வந்து இருக்கேன்.”

“ரத்னா விஷயத்துல என்னால உனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது.”

“நான் பேசுறதை முழுசா கேட்டு முடிச்சுட்டு உன்னோட முடிவை நீ சொல்லு” எனத் தன் முன் பணிவாகப் பேசும் ஜஸ்வந்தை ஆச்சரியமாக அஜீத் பார்த்தான். அஜீத்தின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு ஜஸ்வந்த், ரத்னாவைத் தான் சந்தித்தது முதல் இன்றுவரை தன் மனதில் அழியாது நிற்கும் காதலைக் கூறிவிட்டுத் தொடர்ந்தான்:

“ஃபர்ஸ்ட் டைம் உன்னை மீட் பண்ணும்போது எனக்கு உன் மேல கோபமா இருந்துச்சு. காரணம் ரத்னா உனக்குக் கொடுத்த முக்கியத்துவம். ஆனா பாரு, ரத்னா உனக்கு ஏன் அந்த முக்கியத்துவம் கொடுத்தான்னு நான் யோசிக்க மறந்துட்டேன். ஒருவேளை நானும் ரத்னாகிட்ட பிரெண்ட்லியா மூவ் பண்ணி இருந்தா, எங்களுக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கும். நான் அதைச் செய்யாமல் விட்டுவிட்டேன். லாஸ்ட் டூ இயர்ஸ்ல அதை நல்லா புரிஞ்சுக்கிட்டேன். நீ எனக்காக ரத்னாகிட்ட பேசணும்.”

“குட் ஜோக்! நான் ரத்னாகிட்ட உங்களுக்காகப் பேசணுமா? நான் எப்படி அதை பண்ணுவேன்னு நீங்கள் எதிர்பார்க்கிறீங்க?”

“பிகாஸ் யூ ஆர் தி ஒன் அண்ட் ஒன்லி பிரெண்ட் ஃபார் ஹெர், தி பெஸ்ட் பிரெண்ட். ஜஸ்ட் திங்க் அபாட் இட், ஐ வில் கேட்ச் யூ லேட்டர்.”

அதுவரை அஜீத்தின் மனதில் இருந்த உறுதி, ஜஸ்வந்த் கூறிய “தி பெஸ்ட் பிரெண்ட்” என்ற வார்த்தையில் ஆட்டம் காண ஆரம்பித்தது.

‘நான் இதுவரை செய்தது அனைத்தும் சரிதானா?’

‘நான் நட்பு, காதல் இரண்டிற்கும் உண்மையாக இல்லையா?’

‘இந்தத் திருமணத்தால் ரத்னாவிற்குத் தன் அன்பின் மீது சந்தேகம் வந்துவிடுமா?’

அஜீத் ரத்னாவின் மீது கொண்ட அன்பே, அவனது மன உறுதியை ஆட்டம் காண வைத்தது விதியின் செயலாே!

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top