அத்தியாயம் 19
மனஉறுதி என்பது சிறு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போன்றது. மனஉறுதி சிறிது ஆட்டம் கண்டாலும், அது அறுந்து விழப்போவது உறுதி இழந்தவர் மீதே என்பது பலரும் உணராத ஒன்றாகவே இருக்கின்றது.
அஜீத்தின் மனஉறுதி, ‘ரத்னாவின் நண்பன் மட்டுமே நீ’ என்ற ஜஸ்வந்த் கூற்றில் ஆட்டம் காண ஆரம்பித்தது. அதுவரை தெளிவாக இருந்த அஜீத்தின் மனம் குழம்ப ஆரம்பித்தது.
“சார், நீங்க உள்ளே போகலாம். உங்களைப் பாஸ் வரச் சொன்னாங்க.” அனுமதி கிடைத்ததும் ராபர்ட் அலுவலக அறைக்குள் நுழைந்த அஜீத்தைப் பார்த்த ராபர்ட்,
“ஹலோ அஜீத் வா, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்றார்.
“இட்ஸ் ஓகே அங்கிள்.”
“நீங்க சொன்ன தேதியில பில்டிங் வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாம். மத்த டீடைல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு. வேற ஏதாவது கேட்கணுமா?”
“அப்பாகிட்ட காட்டிட்டுச் சொல்றேன்.”
“ஆர் யூ ஓகே அஜீத்?”
“யா அங்கிள், ஐ ஆம் ஓகே.”
“பட் ஐ டோன்ட் திங்க் சோ. அஜீத், லாஸ்ட் டைம் உன்கிட்ட இருந்த உற்சாகம் இப்போ இல்லை.”
“ஒரு சின்ன கன்பியூஷன்.”
“உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அதை விட்டு விலகி இருந்து யோசிச்சுப் பாரு, பிரச்சனையை ஈஸியா சால்வ் பண்ணிடலாம். உனக்கு ஓகேன்னா என்கிட்ட சொல்லு, முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.”
அஜீத் அதுவரை தன் மனதில் இருந்த குழப்பத்தை ராபர்ட்டிடம் கூறிவிட்டு, அவரின் பதிலுக்காகக் காத்திருக்க, ராபர்ட் சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பேசினார்: “அஜீத், என்னைக் கேட்டா இந்த விஷயத்துல ஒன்னு நீ ரத்னாவுக்கு நல்ல நண்பனா இரு, இல்லை நல்ல காதலனா இரு. எதுவா நீ இருக்க நினைச்சாலும், முதல்ல ரத்னாவுக்கு உண்மையா இரு.”
ராபர்ட் கூறியவற்றைக் கேட்ட பின் குழப்பம் அதிகரிக்க, யோசனையுடன் தன் அறைக்கு வந்த அஜீத், குளிப்பதற்கு மாற்றுடை எடுக்க முற்பட்டான். அப்போது அவன் கண்ணில் பட்டது, பொங்கல் அன்று பிரபு எடுத்த போட்டோ. போட்டோவைக் கையில் எடுத்த அஜீத், அதில் தன்னை நோக்கிச் சிரித்த முகமாக நிற்கும் ரத்னாவைப் பார்த்துப் பேசினான்:
“ஐ லவ் யூ ரத்னா… நான் யாருன்னு யோசிக்க வச்சதுக்கு!
ஐ ஹேட் யூ ரத்னா… என்னைப்பைத்தியக்காரன் மாதிரி மாத்தினதுக்கு!
ஐ மிஸ் யூ ரத்னா… என் கூட நீ இல்லாம இருக்கிறதுக்கு!”
போட்டோவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த அஜீத்திற்கு, ரத்னா முதல் வருடம் தன் பிறந்தநாளுக்குத் தந்த பரிசும், அப்போது அவள் கூறிய வார்த்தைகளும் நினைவில் வந்தன.
“உனக்கு என் மேல எப்ப கோபம் அதிகமா வந்தாலும், இல்லை நீ என்னை அதிகமா மிஸ் பண்ணினாலும் இதைத் திறந்து பார்க்கலாம்.”
ரத்னா கூறியது நினைவில் வந்ததும், அவள் தந்த பரிசைத் திறந்து பார்த்தவன் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். காரணம், பெட்டியின் உள்ளே இருந்தது டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை. அதுவும் ஒரு கையால் தோள் குலுக்கியபடி, முதுகுக்கு பின்னால் ஒரு கையில் டாம் சுத்தியலையும், ஜெர்ரி வெடிகுண்டையும் வைத்திருப்பது போல இருந்தது.
வாய்விட்டுச் சிரித்த அஜீத், பெட்டியின் உள்ளே இருந்த வாழ்த்து அட்டையையும், அதோடு இருந்த கடிதத்தையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். வாழ்த்து அட்டையில் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை இருக்க, அடுத்து இருந்த கடிதத்தைப் படிக்கப் படிக்க அஜீத்தின் முகத்தில் இருந்த புன்னகை மறைய ஆரம்பித்தது.
மை டியர் டியர் டியர் டியர்…… பிரெண்ட் அஜீத்,
என்ன என் கிஃப்ட்டைப் பார்த்துச் சிரிச்சு முடிச்சுட்டியா? எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் ரொம்ப பிடிக்கும். அது மாதிரி நம்ம பிரெண்ட்ஷிப் இருக்கணும்னு ஆசை.
‘என்னடா இவ எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்குற டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருக்கணும்னு சொல்றாளே’னு நினைக்கிறியா? டாம் அண்ட் ஜெர்ரி எவ்வளவு சண்டை போட்டாலும், இரண்டும் ஒன்னை விட்டு இன்னொன்னு தனியா இருக்காது.
டாம் கிட்ட வம்பு பண்ற ஜெர்ரி மாதிரி நான் உன்கிட்ட நிறைய வம்பு பண்ணுவேன். நீ என்னை அடிக்கணும்னு நினைச்சாலும் உன்னால முடியாது, என்னைத் திட்டக் கூட உன்னால முடியாது. பிகாஸ், எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமோ, அதை விட அதிகமா உனக்கு என்னைப் பிடிக்கும்.
நீ எனக்காக அன்னைக்கு பாட்டு பாடினாய் தானே, அதான் நான் இந்த லெட்டர்ல உனக்காக ஒரு கவிதை… இல்லை இல்லை, நம்ம நட்புக்காக ஒரு கவிதை எழுதியிருக்கேன்.
தோள் சாய்ந்து நடக்கும் பொழுதும்…
தொட்டுப் பேசிச் சிரிக்கும் பொழுதும்…
தொலைதூரம் நாம் இருவரும் பயணிக்கும் பொழுதும்…
தொடக்கத்தில் நாம் பேசத் தயங்கிய பொழுதும்…
சலனப்படாத நம் அழகிய நட்பு மலர்!
நான் பூப்பெய்திய பூவை என்றால்,
நீ என் காவல் முள் என்றறியாத மூடர் சொல்லால் வாடிவிடாது நண்பனே!
வா தோழா கை கோர்த்து நடப்போம்…
நட்பிற்கும் ஓர் காவியம் படைப்போம்!
என் கவிதை ஓகேவா? நீ எப்பவும் என் பிரெண்டா மட்டும் இருக்கணும். என்னை அறியாமல் நான் உன்னைக் கோபப்படுத்தினாலும், கஷ்டப்படுத்தினாலும் என்னை விட்டுப் போயிடாதே. நீ என்னைக்கும் என் கூடவே இருக்கணும். நல்ல நண்பனா இருப்பியா?
ஒருவேளை நீ தப்பு பண்ணி நாம பிரிஞ்சா கூட, என்னை நீ மிஸ் பண்ற மாதிரி ஃபீல் பண்ணா, என்னைப் பார்க்க வந்திடு. ‘ஐ மிஸ் யூ ரத்னா’னு மட்டும் சொல்லு, எனக்கு அது மட்டும் போதும்.
இப்படிக்கு,
கடிதம் வாசிக்கும் டாமிற்காக
கடவுள் படைத்த ஜெர்ரி.
அஜீத் ரத்னாவின் கடிதத்தை எத்தனை முறை படித்து இருப்பான் என்று அவனே அறியவில்லை. ஆனால், ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ‘தான் ரத்னாவின் நட்பிற்கு உண்மையானவனாக இல்லை’ என்ற எண்ணமே அவனுள் வலுப்பெற்றது.
அதன்பின்பு, தன் கல்லூரி சீனியர் ஒருவரின் உதவியுடன் ஜஸ்வந்த் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்தான். கிடைத்த தகவலின் படி, ஜஸ்வந்திற்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின்பு, ரத்னாவிடம் ஜஸ்வந்தை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினான்.
ஆனால், ரத்னா அதைப்பற்றி வீட்டில் பேசாமல் இருக்க, அஜீத்தின் குடும்பமும் ரத்னாவின் குடும்பமும் இருவருக்கும் நிச்சயம் செய்வது என்று பேசி முடித்தனர்.
மீண்டும் ஜஸ்வந்தைச் சந்தித்தபோது சுமுகமாகவே அனைத்தையும் கூறிவிட்டு விடைபெற, அஜீத்தின் மனது மட்டும் ஒருநிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டே இருந்தது. அந்த எரிச்சலுடன், அதனால் ஏற்பட்ட கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்த அஜீத்திற்காகக் காத்திருந்தது ரத்னா உடனான நிச்சயம் பற்றிய செய்தியே!
இப்படி ஒரு செய்தியைப் பத்து நாட்களுக்கு முன்பு தன் தாய் கூறியிருந்தால் நிச்சயம் மகிழ்ந்து இருப்பான். ஆனால், இப்பொழுது ரத்னாவின் கடிதத்தைப் படித்து, அதன்பின்பு ரத்னாவிடம் ஜஸ்வந்தை திருமணம் செய்யக் கூறிவிட்டு, நாளை ரத்னாவின் வீட்டிற்கு நிச்சயம் செய்யப்போவது மகிழ்ச்சிக்கு பதில் கோபத்தையே வரவழைத்தது. அந்தக் கோபத்தில்தான் ரத்னாவை போனில் அழைத்துத் திட்டினான்.
அதன் பிறகு நடந்த அனைத்து செயல்களும் அஜீத்தின் கையை மீறிய செயலாகவே இருந்தன. இனி தான் செய்வதற்கு எதுவுமில்லை என்று உணர்ந்த அஜீத், ஒரு பார்வையாளனாகவே தன்னை மாற்றிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தான். എത്രதான் நான் ‘இனி ரத்னா ஜஸ்வந்திற்குச் சொந்தமானவள்’ என்று தன் மனதிற்குப் புரிய வைக்க நினைத்தாலும், காதல் கொண்ட மனம் அதை ஏற்கவே மறுத்தது. தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அஜீத்தால், ரத்னா இன்னொருவனின் மனைவி ஆனதைப் பார்க்க முடியவில்லை.
அதுவரை தன்னையும் தன் காதலையும் பிறர் அறியாமல் அடக்கிக்கொண்டிருந்த அஜீத், மணக்கோலத்தில் இருந்த ரத்னாவைப் பார்த்து, வாய்விட்டு கதறத் துடித்த இதயத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். விருந்து முடிந்து ரத்னா மாலை வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, அஜீத் விமானத்தில் டெல்லியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான்.
மீண்டும் ரத்னாவைச் சந்தித்த சூழ்நிலையை இன்று நினைத்தாலும் அஜீத்தின் மனம் சமாதானமடைய மறுத்தது. ரத்னா என்ன கூறினாலும், என்ன நினைத்தாலும் இனி ரத்னாவை எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுடன் ரத்னாவைத் திருமணம் செய்து டெல்லிக்கு அழைத்து வந்தான்.
கடந்த கால நினைவுகளை யோசித்துக்கொண்டிருந்த அஜீத்தைத் தோள் தொட்டு அசைத்த ரத்னா, “என்னாச்சு அஜீத் அத்தான்? எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“கோட்டையைப் பிடிக்க நான் யோசிக்கல, கோயம்புத்தூர்ல இருக்குற என்னோட கோட்டைக்குள்ளே இந்த மஹாராணியை எப்படிக் கொண்டு போறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.”
“யோசிங்க யோசிங்க, சீக்கிரமா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க” என்றாள் புன்னகையுடன்.
—
தனிமை ஒரு மனிதனை யோசிக்க வைக்கும். அதுவும் தனக்கு பிடித்த, பிடிக்காத மனிதர்களைப் பற்றி அதிகம் யோசிக்க வைக்கும். அது ஜஸ்வந்தையும் யோசிக்க வைத்தது.
யார் எப்படி இருந்தாலும் ரத்னாவின் மனதில் எந்தவித தப்பான எண்ணமும் ஒருபொழுதும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் தன் மனதிற்குள் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டான். ரத்னா எப்பொழுதும் தனக்கு பிரியமானவர்களின் பேச்சை கேட்பாள் என்பதை ஜஸ்வந்த் அறிந்திருந்தான். எனவேதான், தன் காதலுக்கு ரூபா மற்றும் தங்கவேலுவின் உதவியை எதிர்பார்த்தான்.
ஆனால் இப்பொழுது, அவர்களை விட அஜீத் கூறினால் ரத்னா தன்னை ஏற்றுக் கொள்வாள் என்ற எண்ணமே வலுப்பெற்றது. இப்பொழுது இருக்கும் ஜஸ்வந்திற்கு அஜீத் மீது எந்தப் பொறாமையும் இல்லை. ஜஸ்வந்த் ரத்னாவின் காதலைப் பெற தன் இயற்கைக் குணமான பிடிவாதம், ஈகோ அனைத்தையும் விட்டு இறங்கிச் சென்றே அஜீத்திடம் பேசினான்.
ஆனால், ஜஸ்வந்த் அறியாத ஒன்று… தனக்கு எதிராக, தன்னைத் தூண்டிலாக வைத்து நடைபெறும் அந்தச் சதித்திட்டம்! தெரிந்திருந்தால் அவன் ரத்னாவை விட்டு விலகி இருந்திருப்பான். தன்னுடைய காதல் திருமணத்தில் முடியப் போகின்றது என்ற சந்தோஷமே புது உற்சாகத்தைத் தர, தன்னைச் சுற்றி நடக்கும் சதிகளைப் பற்றி உணர்ந்துகொள்ளாமல் விட்டுவிட்டான்.
ரத்னா தனக்கு அஜீத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாகக் கூறியபோது, ஜஸ்வந்திற்கு அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. எப்போதும் கூடவே இருந்த ஒரு நபரின் மீது இயற்கையாகவே ஏற்படும் ஒரு ஈர்ப்பு என்றுதான் அவன் நினைத்தான். தன் காதலை முழுமையாக ரத்னா உணர்ந்து கொள்ளும் பொழுது, அஜீத்தின் மீதான ஈர்ப்பு தானாக மறைந்துவிடும் என்று நம்பினான்.
திருமணம் முடிந்த சில வாரங்களுக்குப் பின்பு, தன்னைச் சுற்றி நடக்கும் சதிகளை அறிந்துகொண்ட ஜஸ்வந்த் வீட்டிற்குள் கோபமாக நுழைய, அந்த முகத்தையே ரத்னா கண்டாள். அஜீத் பற்றி ஜஸ்வந்திடம் கூறியிருக்கக் கூடாதோ என்று நினைத்துக்கொண்டிருந்த ரத்னா, தான் அஜீத்தைப் பற்றிப் பேசியதற்காகவே ஜஸ்வந்த் கோபமாக இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொண்டாள். அதன் பிறகும் அவன் முன்பும், வீட்டாரிடமும் அஜீத் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.
தனக்கு எதிராக நடக்கும் சதியால் மனமுடைந்த ஜஸ்வந்த், ரத்னா தன் அருகிலேயே இருக்க வேண்டும் என நினைத்தான். தன் மனதில் நினைத்ததை ரத்னாவிடம் தெளிவாகக் கூறியிருக்கலாம்; ஆனால், கூறாமலேயே ரத்னாவிடம் நெருக்கம் காட்ட முயல, அது ரத்னாவிற்கு ஜஸ்வந்த் மீது இருந்த பயத்தை அதிகரிக்கவே செய்தது.
ஆடி மாதம் முடிந்து வீடு திரும்பும் நாள், மீண்டும் அஜீத் பற்றிப் பேச்சு வர, ரத்னா ஜஸ்வந்தை நினைத்துப் பயம் கொண்டாள். ஆனால், ஜஸ்வந்த் நிச்சயம் அவ்வாறு நினைக்கவில்லை. ரத்னாவின் அறைக்குள் வந்த ஜஸ்வந்திற்கு ஒரு அழைப்பு வர, அதில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டு கோபத்தில் சிவந்த விழிகளுடன் நின்றான். அதைப்பார்த்த ரத்னா, தன்னைத் தெளிவுபடுத்திவிடும் நோக்கத்தில் ஜஸ்வந்திடம் பேசினாள்.
ஆனால் ஜஸ்வந்திற்கோ, ரத்னா தன் காதலையும், தான் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் புரிந்து கொள்ளாமல் பேசுவது மிகுந்த வேதனையைக் கொடுத்தது. அதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் ரத்னாவின் கழுத்தைத் தன் கைகளால் நெரித்தான். ரத்னா அறையை விட்டு வெளியேறிய பின்பு, அவள் மீது கோபம் கொண்ட தன் முட்டாள்தனத்திற்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
சென்னையை நோக்கி இருவரும் காரில் பயணிக்கும் பொழுது, எப்படியாவது தன்னைப் பற்றி ரத்தினத்திற்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்று ஜஸ்வந்த் நினைத்திருந்தான். ஆனால் ரத்னாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் உறக்கத்தைப் பார்த்த ஜஸ்வந்த், “என்னை மன்னிச்சிடு ரதி பேபி, நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல? இனி உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன். உன்னை நான் இனி பத்திரமாகப் பார்த்துக்கிறேன்” என மனதிற்குள் பேசிக்கொண்டே வந்தான்.
அப்போதுதான், ஜஸ்வந்த் தாமதமாகத் தங்களைப் பின்தொடர்ந்து வரும் லாரி ஒன்றை கவனித்தான். எவ்வளவு வேகமாகச் சென்றாலும், வழிவிட்டாலும் அது தங்களையே தொடர்ந்து வருவதை உணர்ந்த ஜஸ்வந்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது ஜஸ்வந்திற்கு ஒரு போன் கால் வந்தது.
“என்ன ஜஸ்வந்த், புது பொண்டாட்டி கூட ரொம்ப ஜாலியா சென்னையை நோக்கி வந்துகிட்டு இருக்கிற போல?”
“உனக்கு இப்போ என்ன வேணும்?” கோபம் நிறைந்த குரலில் கேட்டான் ஜஸ்வந்த்.
“உனக்கா…! என்ன ஜஸ்வந்த், ரொம்ப மரியாதை குறையுற மாதிரி இருக்கு.”
“உனக்கெல்லாம் என்ன மரியாதை? நீ மட்டும் என் கையில கிடைச்சா…”
“அச்சச்சோ, நீ நினைப்பதெல்லாம் நடந்திருமா? நீங்க சென்னைக்கு வர்றதுக்கு முன்னாடி அந்தக் கடவுளைப் பார்க்கப் போகப் போறீங்க. நீ தனியா போனா உனக்கு இத்தனை வருஷம் பாசத்தைக் காட்டின எனக்குக் கஷ்டமா இருக்காதா? அதான் உன் கூடவே உனக்குத் துணைக்கு உன்னுடைய காதல் மனைவியையும் அனுப்பி வைக்கிறேன்.” அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அருகிலிருந்த ரத்னாவைப் பார்க்க, அவளோ நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள். பின்தொடரும் லாரி இடிப்பது போல் அருகில் வர, முன்புறமும் வேறு ஒரு லாரி அவன் வழியை மறைத்துக் கொண்டு வந்தது. இனி தப்பிக்க முடியாது என்பதை அறிந்த ஜஸ்வந்த், ஒரு நிமிடம் யோசித்து, ரத்னாவின் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அவளைக் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டான்.
மறுநொடி தன்னுடைய சீட் பெல்ட்டையும் கழற்றிவிட்டு வெளியில் குதிக்க, கூரிய கல் ஒன்று ஜஸ்வந்தின் நெற்றியைப் பதம் பார்த்தது. மயக்க நிலைக்கு ஜஸ்வந்த் சென்று கொண்டிருந்தானே தவிர, உடலில் பெரிதாகக் காயங்கள் எதுவும் இல்லை. தள்ளாடியபடி எழுந்து நின்ற ஜஸ்வந்த், ரத்னாவைத் தன் பார்வையால் தேடினான். ரத்னாவைக் கண்டு அருகில் சென்று பார்க்க, அவளோ உடலில் காயங்களுடன் முனகிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் தூரத்தில் சில உருவங்கள் வருவது தெரிய, ரத்னாவைச் சாலைக்கு அருகில் கிடத்திவிட்டு, அவர்களைத் திசைதிருப்ப எதிர்புறம் ஓட ஆரம்பித்தான். ஆனால், அவர்கள் அவனை விரட்டிப் பிடித்தனர்.
“என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு நினைச்சியா? உன்னை அவ்வளவு சுலபமா விட்டுட்டுப் போக முடியுமா? இருந்தாலும் நான் உன்னோட பாசத்துக்குரிய…..” என அந்த உருவம் கூறும் போதே, “இதுக்கு மேல எதுவும் பேசாதே. பாசம்னா உனக்கு என்னன்னு தெரியுமா?” என்றான் ஜஸ்வந்த்.
“நீ சொல்றது சரிதான், எனக்குப் பாசம்னா என்னன்னு தெரியாது. ஆனால், பணத்தின் மதிப்பு நல்லா தெரியும்.”
“உனக்கு பணம்தானே வேணும்? என்னோட சொத்து முழுக்க உனக்கு எழுதிக் கொடுக்கிறேன். தயவுசெஞ்சு ரத்னாவை ஒன்னும் பண்ணாதே. என்னோட உயிரைக்கூட எடுத்துக்கோ.”
“இந்த டீலிங் நல்லாத்தான் இருக்கு. பட், நெருப்பையும் பகையையும் எப்பவும் மிச்சம் வைக்கக் கூடாது. மிச்சம் வச்சா அது நம்மை அழிச்சிடும்” எனக் கூறிவிட்டு, “என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க? அவனைப் போட்டுத் தள்ளுங்க” எனப் பக்கத்தில் இருந்த அடியார்களைப் பார்த்து உத்தரவிட்டான்.
அந்த மூவரும் கட்டையால் ஜஸ்வந்தைச் சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர். மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்த ஜஸ்வந்தால் தன்னைத் தாக்குபவர்களைத் தடுக்க முடியவில்லை. உயிர் பிரியும் நேரம் தன் எதிரே நின்றவரிடம், “என் மேல கொஞ்சம் கூட உங்களுக்குப் பாசம் இல்லையா?” எனக் கேட்டான் வேதனையுடன்.
“என்ன ஜஸ்வந்த் இப்படி கேட்டுட்ட? உன் மேல எனக்கு எவ்வளவு பாசம் இருந்தா உன்னை ரத்னா கூடச் சேர்த்து வைத்திருப்பேன்? இப்பக்கூட சீக்கிரமே ரத்னாவை உன் கூட அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறிவிட்டு, ஜஸ்வந்தின் கழுத்தைத் தன் காலால் மிதித்து அவன் உயிர் போகும் வரை வேடிக்கை பார்த்தான் அந்தத் துரோகி.
பின்னர் சுற்றியிருந்த அடியார்களின் புறம் திரும்பி, “போங்கடா, இந்த ஜஸ்வந்தை தூக்கி மரத்துல மோதி நிக்கிற கார்ல போட்டுட்டு, அந்த ரத்னா எங்க விழுந்து கிடக்கclearனு போய் பாருங்க” என்றான். ஜஸ்வந்தை காரில் போட்டுவிட்டு ரத்னாவைத் தேடச் சென்றனர். அதற்குள் அங்குச் சிலரின் நடமாட்டம் தெரியவே, ரத்னாவை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
கடந்த காலத்தை நினைத்துப் பார்த்த அந்த அரூபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டது: ‘நீங்க வேணா என் மேல பாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனா நான் உங்க மேல வச்ச பாசம் உண்மையானது. அதே மாதிரி ரத்னா மேல வச்ச காதலும் உண்மையானது. என்னைக்கொலை பண்ணினதை என்னால மன்னிக்க முடியும், ஆனால் ரத்னாவுக்கு உங்களால ஏதாவது ஆபத்து வந்தா என்னால மன்னிக்க முடியாது. நான் எப்பவும் நிழலா ரத்னாவைத் தொடர்ந்து கொண்டே தான் இருப்பேன்.’