அத்தியாயம் 17
முட்டை ஓட்டில் இருந்து வெளிவந்த குஞ்சுப் பறவை, சிறிது காலம் தன் தாய்ப்பறவையின் சிறகுகளின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கும். எப்பொழுது குஞ்சுப் பறவையால் தனித்து வாழ முடியும் எனத் தாய்ப்பறவை உணருகின்றதோ, அப்பொழுதே தன் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளும். குஞ்சுப் பறவையும் இந்த உலகத்தில் போராடி வாழப் பழகிக்கொள்ளும்.
ஆனால், ரத்னாவைப் பொறுத்தவரை எப்பொழுதும் முட்டை ஓட்டை விட்டு வெளிவராத குஞ்சுப் பறவையின் நிலைதான். வீட்டில் கடைசிப் பிள்ளை என்றாலே எல்லா வீட்டிலும் இருக்கும் அதிகப்படியான கவனிப்பு ரத்னாவின் விஷயத்திலும் இருக்கவே செய்தது. அதுவும் நல்ல விஷயங்களைக் கூறினால் அப்படியே ஏற்று நடக்கும் ரத்னாவை, குடும்பத்தினர் அனைவரும் உள்ளங்கையில் தாங்கினர் என்றே கூற வேண்டும்.
பாரபட்சமின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியாகப் பழகும் ரத்னாவை, ஊர் பெரியவர்கள் முதல் பண்ணையில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை ஒரு இளவரசியை நடத்துவது போலவே நடத்தினர். அதனால்தான் என்னவோ, ரத்னாவைப் பொறுத்தவரை ‘உலகம் என்பது நல்லவர்களால் மட்டுமே ஆனது’ என்ற மாயத் தோற்றம் அவளது மனதில் தங்கிவிட்டது.
உலகத்தில் எப்பொழுதும் நல்லவர்கள் மட்டும் இருப்பதில்லை, தீயவர்களும் இருப்பார்கள்; நாம் பிறரின் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்தாலும், நமக்கு எதிராகச் செயல்படுபவர்களும் உள்ளனர் என்பதை அறியாமலே அவள் இருந்துவிட்டாள்.
வீட்டாரின் அரவணைப்பில் இருந்து கல்லூரிப் படிப்பிற்காகக் கோவை வந்த பிறகும் அஜீத், பிரபு, ஸ்டெல்லாவின் நட்பு என்ற பாதுகாப்பு வளையம், உலகத்தின் கோர முகத்தைப் பற்றி ரத்னாவை அறியவிடாமல் தடுக்கும் கோட்டைச் சுவராக இருந்தது என்பதே உண்மை.
ரத்னாவின் மனதில் காதல் என்ற எண்ணம் துளியும் இருந்தது இல்லை. ஆனால், தன் திருமணப் பேச்சில் அஜீத்தின் பெயரும் இடம்பெற, அதில் ரத்னாவின் விருப்பமும் இருக்கவே செய்தது. தன்னைத் தாங்கும் குடும்பமும், தனது தேவையை அறிந்து செயல்படும் நண்பனே கணவனாக வருவதை ஏற்றுக்கொள்ள ரத்னாவின் மனதும் தயாராகவே இருந்தது.
ஆனால், இவை அனைத்தும் ரத்னாவின் கண்களில் ஸ்டெல்லாவும் அஜீத்தும் இணைந்து இருந்த போட்டோவைப் பார்க்கும் வரையிலேயே! அந்தப் போட்டோவைப் பார்த்த அடுத்த நொடியிலேயே, தன் தோழியின் காதலனைத் தன் கணவனாக மாற்ற நினைப்பது நட்புக்குச் செய்யும் துரோகமாக அவளுக்குத் தோன்றியது. அஜீத்திற்காக மனதில் தோன்றிய உணர்வும், இருவரின் நட்பும் மனதுக்குள் மௌனமாக ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. இது ஒருபுறமிருக்க, அஜீத் ரத்னாவிடம் ஜஸ்வந்தைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூற, அந்தப் பேச்சு ரத்னாவிற்கு ஏற்புடையதாக இல்லை.
அஜீத் மீது தனக்குத் தோன்றிய உணர்வு சரியா தவறா என்ற குழப்பத்திலேயே தவித்த ரத்னா, தெளிவான ஒரு முடிவுக்கு வந்த பின்னே அஜீத்தைப் போனில் அழைத்தாள். அழைப்பை ஏற்றதும், பெற்றோர் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கோபமும், ரத்னாவை மறுக்கும் தன் நிலையை எண்ணி மனதில் எழும் வலியும் அஜீத்தை ஆட்கொண்டிருக்க, அவன் காரணத்தைக் கூறாமலேயே கோபமாகப் பேசினான். அப்பொழுதும் தவறு முழுவதும் தன் மீதே என ரத்னா நினைத்துக்கொண்டாள்.
மறுநாள் திருமணப் பேச்சைத் தானே நிறுத்துவது என ரத்னா நினைத்திருக்க, நடந்த சூழ்நிலைகள் அனைத்தும் ஜஸ்வந்துடன் தன் திருமணம் என்னும் நிலைக்குத் தன்னைத் தள்ளியதைக் கண்டு மூச்சு முட்டுவது போல் உணர்ந்தாள்.
ஜஸ்வந்த் உடனான திருமண வாழ்க்கையைத் தன் மனதிலும் மூளையிலும் பதிய வைத்துக்கொள்ளத் தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தாள். இருந்தாலும், தன் மனதில் அஜீத் மீது தனக்கு ஏற்பட்ட சலனத்தை ஜஸ்வந்திடம் மறைக்கக் கூடாது, மறைத்தால் அது துரோகம் என நினைத்தாள். எனவே, முதலிரவு அன்று அனைத்தையும் மறைக்காமல் ஜஸ்வந்துடன் கூறினாள். அதைப் பொறுமையாகக் கேட்ட ஜஸ்வந்த்,
“ரதி, இது உன் கூடவே இருந்த அஜீத் மேல வந்த க்ரஷ் தான். கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும், அதுவரை நான் வெயிட் பண்றேன்” எனக் கூறிவிட, அனைத்தும் நன்றாகத்தான் செல்வதாக ரத்னா நினைத்துக் கொண்டிருந்தாள்.
அதன்பிறகு வந்த நாட்களில், சிறு விஷயத்திலும் ஜஸ்வந்த் தன்னிடம் விருப்பம் கேட்டு நடப்பது போன்று தோன்றினாலும், ஏதோ ஒரு ஒட்டாத தன்மை இருப்பது போலவே ரத்னா உணர்ந்தாள். இருவரும் அனைவரின் முன்பு சகஜமாக இருந்தாலும், அவர்களுக்குள் இருந்த விலகல் தன்மை வீட்டினரின் கண்ணிலும் பட்டது. அதனால் இருவரையும் முடிந்தவரை தனிமையில் தங்களுக்கான நேரத்தைச் செலவிடச் செய்ய அவர்கள் நினைத்தனர். இதற்கிடையில் ரத்னாவும் மேற்படிப்பிற்குச் சேர்ந்துவிட, நாட்களும் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன.
ஒருநாள் தேவராஜிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பேச்சின் நடுவே ரத்னா அஜீத்தைப் பற்றியும், தங்கள் நட்பைப் பற்றியும் பேசிக்கொண்டே திரும்பினாள். அப்போது அவள் பார்த்தது ஜஸ்வந்தின் கோபம் நிறைந்த முகத்தையே!
அடுத்து வந்த நாட்களில் ஜஸ்வந்த் உடலளவில் ரத்னாவை நெருங்க முயன்றபோது, ஏனோ அதை ரத்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதளவில் ஒட்டாத உறவு, உடலளவில் ஏற்படுவதை அவள் விரும்பவும் இல்லை.
ஆடி மாதத்தில் ரத்னாவின் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததும், ஏதோ ஒரு பந்தயத்தில் இருந்து விடுபடும் உணர்வே ரத்னாவின் மனதில் தோன்றியது. மீண்டும் தென்காசியில் இருந்து சென்னை புறப்படும் நாள், வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தங்கமுத்து ரத்னாவிடம் கேட்டார்,
“காலேஜ் எப்படிப் போகுது பாப்பா?”
“ஏதோ போகுதுப்பா, என்ன இருந்தாலும் கோயம்புத்தூர் காலேஜ் மாதிரி வராது.”
“ஏன் இப்படி சொல்ற? கோயம்புத்தூர் காலேஜை விட சென்னை காலேஜ்ல அப்படி என்ன குறை இருக்கப் போகுது?”
“கோயம்புத்தூர் காலேஜ்ல என் பிரண்ட்ஸ் எல்லாரும் இருந்தாங்க. அங்க இருக்கும்பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனால், சென்னை காலேஜ்ல என் பிரண்ட்ஸ் யாருமே இல்லையே.”
“இப்பதானே அங்க சேர்ந்து இருக்கீங்க, இன்னும் கொஞ்ச நாள் போனா இந்த காலேஜ்லயும் உங்களுக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைப்பாங்க.”
“எத்தனை பிரண்ட்ஸ் கிடைச்சாலும் அவங்க யாருமே அஜீத் அத்தான் மாதிரி வர முடியுமா? அவங்கதான் எனக்கு எப்பொழுதுமே குளோஸ்.” என ரத்னா கூறிக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்து அமர்ந்த ஜஸ்வந்த்,
“உனக்கு உங்க அஜீத் அத்தானை அவ்வளவு பிடிக்குமா?” எனக் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரத்னா யோசித்துக்கொண்டிருக்க, ஆர்த்தி குறுக்கிட்டாள்:
“ரத்னாவுக்கு அஜீத்தை ரொம்ப பிடிக்கும். கோயம்புத்தூர்ல இருக்குற வரைக்கும் அஜீத் இல்லாம எங்கேயும் போக மாட்டா. அவளுக்குச் சின்னதா ஒரு தேவை இருந்தாலும் அதை அஜீத் அத்தான்தான் செஞ்சு கொடுக்கணும். எப்படித்தான் இவ்வளவு நாளா அஜீத் இல்லாமல் இருக்காளோ தெரியல.”
ஆர்த்தி இவ்வாறு கூறவும், போன் பேச வேண்டும் என அறைக்குள் சென்ற ஜஸ்வந்த், அதன்பின்பு வெளியில் வராமலேயே இருந்தான். ரத்னா அவனைக் உணவருந்த அழைக்க அறைக்குள் வந்தாள்.
“ரத்னா, நாம இப்பவே ஊருக்குக் கிளம்பணும், சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வை” என்றான் ஜஸ்வந்த்.
“ரெண்டு நாளுக்கு அப்புறம்தானே போகப் போறோம்னு சொன்னீங்க, இப்போ உடனே கிளம்பச் சொன்னா எப்படி?”
“நான் சொன்னா மறுபேச்சு இல்லாமல் கேட்டுப் பழகு, அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது” என்றான் கடுமையாக.
“நான் அஜீத் அத்தான் பத்திப் பேசினதால நீங்க கோபமா இருக்கீங்களா? இனி நான் அவரைப் பற்றிப் பேசமாட்டேன்” என்றாள் ரத்னா.
“அஜீத், அஜீத், அஜீத்! அவனை விட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேறு எதுவும் இல்லாம போயிடுமா? இன்னொரு தடவை அவனை வச்சு இதே மாதிரி நீ பேசினே, நான் சும்மா இருக்க மாட்டேன்” என ஜஸ்வந்த் கோபமாகக் கத்தினான்.
“நீங்க என்னையும் அஜீத் அத்தானையும் சந்தேகப்படுறீங்களா?” எனக் கேட்ட அடுத்த நொடி, ரத்னாவின் குரல்வளையைப் பிடித்து நெரித்தபடி ஜஸ்வந்த் சீறினான்:
“ஏய்! உன் மரமண்டைக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? இன்னொரு தடவை அவனைப் பத்திப் பேசினா கொன்னுடுவேன்!” மூச்சுவிடச் சிரமப்படும் ரத்னாவின் மேலிருந்து கையை எடுத்த ஜஸ்வந்த்,
“என்னை மிருகமா மாத்தாதே” என்றான். ஜஸ்வந்தின் முன் மூச்சுவிடச் சிரமப்பட்டபடி நின்ற ரத்னா,
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் தப்பு பண்ணா, தப்பான முடிவு எடுத்தா, சேர்ந்து சரி பண்ணலாம்னு சொன்னீங்க. ஆனா கொடுத்த வார்த்தையைக் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் இல்லையா? இப்போ கூட நான் என்ன தப்பு பண்ணேன்னு நீங்க சொன்னா, நான் என்னை மாத்திக்க முயற்சி பண்றேன்” என்றாள் வேதனையுடன்.
பின்னர் அவசர அவசரமாகப் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு, ரத்னாவின் வீட்டினர் எவ்வளவு மறுத்தும், இரவு நேரத்திலேயே சென்னையை நோக்கி இருவரும் காரில் பயணப்பட்டனர்.
காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, களைப்போடு பிறந்த வீட்டாரைப் பிரிந்த சோகமும், ஜஸ்வந்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட மனச்சோர்வும் ரத்னாவின் இமைகளில் பாரத்தைத் தர, அவள் உறக்கத்திற்குச் சென்றாள். ஏதோ ஒரு உள்ளுணர்வில் விழித்துப் பார்த்த ரத்னா கண்டது, கோபத்தில் சிவந்த ஜஸ்வந்தின் விழிகளையே.
“என்ன ஆச்சு?” என்று ரத்னா கேட்ட அடுத்த நொடி, ஜஸ்வந்த் ரத்னாவைக் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டிருந்தான்.
உணர்விழந்து கிடந்த ரத்னா, மீண்டும் சுயநினைவு அடைந்தது அஜீத்தைப் பார்த்த பின்னேதான். ஜஸ்வந்தின் மனைவியாக வாழ்ந்த தான், அஜீத்திற்கு ஏற்றவள் அல்ல என்ற எண்ணமே ரத்னாவை அஜீத்திடமிருந்து விலகத் தூண்டியது.
அஜீத்திடமிருந்து விலக நினைத்து ரத்னா செய்த செயலே, ஜஸ்வந்த் பற்றிய பயங்கரமான நினைவலைகளைக் கண்முன் காட்சிப்படுத்த, அவள் அஜீத்தை விட்டு விலகும் முயற்சியைக் கைவிட்டது மட்டுமின்றி, அவனுடன் நெருங்கவும் செய்தாள். தனிமை ஜஸ்வந்தின் நினைவால் பயமுறுத்த, அஜீத்தின் அருகாமை பாதுகாப்பு உணர்வுடன் கூடிய நிம்மதியை ரத்னாவிற்குத் தந்தது. பழைய நினைவுகளில் சிக்கித் தவித்த ரத்னாவை, ரோஜாவின் குரல் இவ்வுலகிற்கு மீட்டு வந்தது.
“ரத்னா, உங்க போன் அடிக்குதுமா” என்றதும் செல்போனை வாங்கிப் பார்த்தாள். அதில் ரூபாவின் பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றுத் தன் காதில் வைத்தாள்.
“ரத்னா, எப்படி இருக்க?” என்று கேட்டாள் ரூபா. “நல்லா இருக்கேன்கா” எனச் சுரமின்றிப் பதில் கூறினாள் ரத்னா.
“நல்லா இருக்கேன்னு உன்னோட வாய் மட்டும்தான் சொல்லுது, ஆனா உன்னோட குரல் நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய்னு காட்டிக் கொடுக்குது” என்றாள் ரூபா.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா.”
“ரத்னா, அஜீத் எதுவும் உன்னை கஷ்டப்படுத்தலதானே?”
“அக்கா, தயவுசெஞ்சு அஜீத் அத்தான் பத்தித் தப்பா எதுவும் நினைக்காதீங்க. உங்க எல்லாரை விடவும் அஜீத் அத்தான் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க.”
“அப்புறம் எதுக்கு உன்னுடைய குரல் டல்லா இருக்கு?”
“நான் வேற ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.”
“ஜஸ்வந்த் பத்தியா…” என்று ரூபா கேட்க,
“அக்கா, அது வந்து…” எனத் தயங்கினாள் ரத்னா.
“ரத்னா, நான் சொல்றதைச் சுலபமாகச் சொல்லிவிடலாம், ஆனால் உன்னால அதை ஏற்றுக்கொள்ளக் கூடியது கஷ்டம்தான். ஆனால் நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும். ஜஸ்வந்த் இப்போ உன்னோட வாழ்க்கையில இல்லை, அவனால உனக்கு எந்த ஆபத்தும் வரப்போறது இல்லை. நீ அன்னைக்கு என்கிட்ட சொன்னதை மறந்திடு. அஜீத் மட்டும்தான் இப்போ உன்னுடைய வாழ்க்கை, அதைப் புரிஞ்சுக்கோ. எந்தக் குழப்பத்தையும் மனசில் வச்சுக்காதே” எனத் தங்கைக்குப் புரிய வைக்க முயன்றாள் ரூபா.
“நீ சொல்றது எனக்குப் புரியுதுக்கா, இருந்தாலும் எனக்கு ஜஸ்வந்த் ஞாபகம் வரும்போதெல்லாம் பயமாயிருக்கு” என்றாள் ரத்னா.
“ரத்னா, நீ பேசாமல் அஜீத் கிட்ட ஜஸ்வந்த் கூட உன்னோட வாழ்க்கை எப்படி இருந்துச்சுன்னு சொல்லிடு” என்றாள் ரூபா.
“இல்லைக்கா, என்னால சொல்ல முடியாது. ஏற்கனவே அஜீத் அத்தான் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி குற்றவுணர்வில் இருக்காங்க. இப்போ நான் ஜஸ்வந்த் பத்தி உங்ககிட்ட சொன்னதை அத்தான் கிட்டயும் சொன்னேன்னா அவங்க ரொம்ப கவலைப்படுவாங்க” என அஜீத்திற்காக யோசித்தாள் ரத்னா.
“சரி, எல்லாத்தையும் விடு. அஜீத்தை உனக்கு பிடிக்கும்தானே?” என ரூபா கேட்க,
“ரொம்ப பிடிக்கும்கா” என்றாள் ரத்னா.
“அப்படின்னா பழையபடி பேசு, பழகு. முடிஞ்சா நீ அஜீத் மனைவியா நடந்துக்கப் பாரு. எல்லாம் நல்லபடியா மாறும்” என்றாள் ரூபா.
அதன்பிறகு ரத்னா தன்னை முடிந்த அளவு மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டாள். ரத்னாவின் மகிழ்ச்சியான முகமே அஜீத்திற்கு முழு பலத்தைத் தர, அவன் தன்னைத் தேர்வுக்கு முழுமையாகத் தயாரித்துக்கொண்டான். தன் தாய், தந்தை தன் மீது கோபமாக இருந்தாலும், விரைவில் அவர்களைச் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையும், ரத்னாவுடன் தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், தங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை அறியவிடாமல் அஜீத்தை தேர்வுக்குத் தயாராகச் செய்தது.
அஜீத்தின் எதிர்பார்ப்பு பொய்யாகாமல், அவன் எழுத்துத் தேர்வில் வெற்றியடைந்திருந்தான். அதேபோல, நிச்சயமாகத் தான் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெறுவோம் என்ற உறுதி அவனுக்கு இருந்தது. அதன்பிறகு அடுத்த பிரச்சனையாக எழுந்தது, ரத்னாவை எங்கு விட்டுச் செல்வது என்பதே! தனது பயிற்சிக்காலம் முடியும் வரை ரத்னாவைத் தனியே, உறவுகள் நண்பர்கள் இல்லாத டெல்லியில் வைத்திருப்பது பாதுகாப்பல்ல. அதேசமயம், தங்கள் இருவர் வீட்டிலும் ரத்னாவை விட அஜீத்திற்கு மனமில்லை. வாய்ப்புக் கிடைத்தால் ஆர்த்தி தன் வார்த்தைகளால் ரத்னாவைக் காயப்படுத்தி விடுவாள். இப்போதுள்ள சூழ்நிலையில் மைதிலியும் அதையேதான் செய்வார்.
ஜஸ்வந்த் தங்கள் வாழ்க்கையை விட்டுச் சென்று எட்டு மாதங்கள் ஆன பிறகும், ரத்னாவிற்கு ரூபாவின் வீட்டைப் பற்றிய பேச்சு பயத்தையே கொடுத்தது.
தேவராஜ் “தங்களுடன் ரத்னா இருக்கட்டும்” எனக் கேட்டும், ரத்னாவின் பயத்தால் அஜீத் சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதியில் ரத்னா பிடிவாதமாக,
“அத்தான் ப்ளீஸ், நான் கோயம்புத்தூருக்கே போறேன்” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டவளை உற்றுப் பார்த்தான் அஜீத்.
“நாம போய் நின்னா ‘வா மகனே வா மருமகளே’னு வரவேற்பாங்கன்னு நினைச்சியா? கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க” என்றான் அஜீத்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க அத்தை, மாமா கையைப் பிடிப்பீங்களோ இல்லை கால்ல விழுவீங்களோ, என்னை மைதிலி அத்தை கூட விட்டுட்டுப் போங்க. இல்லைன்னா நான் தனியா இருந்துகிடுவேன்” என அடம் பிடித்தாள்.
“ரத்னா, அடம் பிடிக்காதே. அம்மா, அப்பா என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க, அங்க இப்போ போக முடியாது. என் கையில இன்னும் கொஞ்சம் பணம் இருக்கு. நீ திருநெல்வேலி காலேஜ்ல சேர்ந்து படி, உங்க வீட்டு ஆளுங்க அடிக்கடி உன்னை வந்து பார்த்துக்கலாம்” என்றான் அஜீத்.
“நான் படிக்கிறேன், ஆனா கோயம்புத்தூர்ல இருந்து படிக்கிறேன். நான் முன்னாடி இருந்த ரத்னா இல்லை, திட்டுனா வருத்தப்பட; நான் எல்லாத்தையும் சமாளிச்சுக்குவேன்” எனக் கூற, அஜீத்தால் இதற்கு மேல் மறுக்க முடியவில்லை.
“முடிவு பண்ணிட்ட, இனி நான் சொன்னா கேட்கவா போற?” எனக் கூறி அஜீத் சிரிக்க, ரத்னாவும் சேர்ந்து சிரித்தாள்; அவர்களுடன் ரோஜாவும் இணைந்துகொண்டார்.