அத்தியாயம் 11
ரத்னாவின் அழகான மாற்றத்தைப் பார்த்த அனைவரும் வியந்திருக்க, ஜஸ்வந்திற்கு மட்டும் இந்த மாற்றம் அஜீத் மூலம் நடந்தது துளியும் பிடிக்கவில்லை. ஜஸ்வந்தைத் தவிர ஆர்த்தியின் இரு விழிகள் ரத்னாவை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை.
ஆர்த்திக்குச் சிறுவயது முதல் ‘தான் மட்டுமே’ என்ற எண்ணம் அதிகம். ஆண் குழந்தை என்பதால் அஜீத்திடமும், கடைசிக் குழந்தை என்பதால் அர்ச்சனாவிடமும் தன் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதாக நினைப்பைத் தன்னுள் வளர்த்துக்கொண்ட ஆர்த்திக்கு, இருவரையும் பிடிப்பதில்லை.
அனைவரையும் விடத் தான் சிறந்தவள் என்று நிரூபித்து மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதில் மட்டுமே ஆர்த்திக்கு மகிழ்ச்சி. அதற்கான சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்வாள். அவளின் அதிர்ஷ்டம் இதுவரை யாரும் இந்த குணத்தைக் கண்டுகொண்டதில்லை.
தந்தையின் சொல் கேட்டு நடக்கும் பிரியமான பெண்ணாக இருக்க பல வருடம் கஷ்டப்பட, அதைச் சமீபகாலமாக அஜீத் தட்டிப்பறித்துவிட்டதாக உணர்ந்தாள். மேலும் அர்ச்சனா குறும்புத்தனம் செய்தாலும் படிப்பில் கவனம் அதிகம். எங்கே அவள் டாக்டர் ஆகித் தன்னை பின்னுக்குத் தள்ளிவிடுவாளோ என்ற பயம் தலைதூக்கியது. இந்தச் சூழ்நிலையில் தங்கமுத்துவுடன் திருமணப் பேச்சு நிச்சயமாக மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது.
டாக்டர், தங்கள் குடும்பத்தை விட வசதி, ஒரே ஆண் வாரிசு, முரட்டுத்தனமான அழகு – இது மட்டுமே இந்தச் சம்பந்தத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தது. திருமணத்திற்குப் பின் தான் மட்டுமே, தான் வைத்ததே சட்டம் என நினைத்திருக்க, அப்படி இருக்கப்போவது இல்லை எனத் தங்கமுத்துவின் பேச்சு வெளிப்படுத்தியது.
தன் குடும்பத்தைப் பற்றியும், அதிலும் குறிப்பாக ரத்னாவைப் பற்றியும் அதிகம் பேச, ரத்னாவிற்கு அந்த குடும்பத்தில் இருக்கும் முக்கியத்துவம் புரிய, அது ரத்னாவின் மீது பொறாமை என்னும் தீயை வளர்த்தது. ரத்னாவின் அழகு எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது.
ஜாதகம் இரண்டும் பொருந்திவர, அடுத்த மாதத்தில் நிச்சயதார்த்தம், ஆர்த்தியின் படிப்பு முடிந்ததும் திருமணம் என வீட்டுப் பெரியவர்கள் பேசி முடித்தனர்.
தான் நினைத்தது எதுவும் நடக்காத வருத்தத்தில் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த ஜஸ்வந்த் அருகில் வந்த ஹர்ஷத் “ஜஸ்வந்த், அடுத்த வாரம் நீ சிங்கப்பூர் போகணும். இந்த வேலையை நீ நல்லபடியா முடிச்சுட்டா நிறைய ஆர்டர்ஸ் கிடைக்கும்.”
“நிறைய ஆர்டர்ஸ் கிடைக்கும்… பட் எனக்கு என் ரத்னா கிடைக்க மாட்டா.”
“ஜஸ்வந்த், நான் உன்கிட்ட ஏழு வருஷத்திற்கு முன்னாடி சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். ரத்னாவுக்கு அவ குடும்பம் தான் முக்கியம். குடும்பமா, நீயான்னு ஒரு சூழ்நிலை வந்தா அவ குடும்பம்னு தான் முடிவு எடுப்பா. புரிஞ்சுக்கோ.”
“அண்ணா, நான் சொல்லப் போற விஷயம் உனக்கு கஷ்டமாதான் இருக்கும், பட் நான் இதை உன்கிட்ட சொல்லித்தான் ஆகணும். நான் ரத்னாவுக்கு முக்கியமா இருக்கணும்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன். மத்தபடி நான் ஒன்னும் உன்னை மாதிரி குடும்பத்திலிருந்து ரத்னாவைப் பிரிச்சு என்கூடவே வச்சுக்கணும்னு நினைக்கல.
எனக்குக் காதல் வசனம் பேசத் தெரியாது. நான் இப்படித்தான். ரத்னாவைப் பிடிக்கும் என்பதற்காகக் கவிதை எழுதிக்கிட்டு, உருகி உருகிக் காதல் வசனம் பேசிக்கொண்டே திரிய முடியாது. ஜஸ்ட் லீவ் இட் அண்ணா, இனிமே நான் பார்த்துக்கிறேன்.”
தன் மனதில் நினைத்ததை அண்ணனிடம் கூறிவிட்டு கீழே இறங்கச் செல்ல நினைத்த ஜஸ்வந்த் கையைப் பிடித்த ஹர்ஷத், “நீ உன்னுடைய காதல்ல உறுதியா இருந்தன்னா, நீ சிங்கப்பூர்ல இருந்து வரும்போது ரத்னா உனக்காக உன்னுடைய வாழ்க்கையில வரத் தயாராக இருப்பா. கவலைப்படாமல் போயிட்டு வா” என்றார்.
காலமும் நேரமும் யாருக்கும் காத்திராமல் செல்ல, ஆர்த்தி – தங்கவேலுவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தேறியது. ரத்னா – அஜீத் நட்பும் நாளுக்கு நாள் வளர்பிறையாக இருந்தது.
இதற்கிடையில் ரத்னாவுக்கு ஹாஸ்டல் உணவு ஒத்துக்கொள்ளாமல் உடல்நலக்குறைவு ஏற்பட, பலவித விவாதங்களுக்குப் பின் ரத்னாவைக் கிருஷ்ணசந்திரன் தன் வீட்டிலேயே தங்கிக்கொள்ளட்டும் என அனைவரையும் சம்மதிக்க வைத்தார். வீட்டிற்கு வந்த ரத்னாவிடம் அர்ச்சனா:
“வா வா… இனிமேல் நீயும் எங்க ஜோதியிலே ஐக்கியமாகிட்ட. உன்னைப் பத்தி அண்ணன் என்கிட்ட நிறைய சொல்லியிருக்கான். இனிமேல் ஹாஸ்டல்ல இருந்த மாதிரி இங்க நீ சேட்டை பண்ண முடியாது. ஒழுங்கா படிக்கணும். சத்தமா சிரிக்கக்கூடாது. அமைதியா அடக்கமா இருக்கணும்.”
அர்ச்சனா கொடுத்த பில்டப்பை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ரத்னா, நேரடியாக கிருஷ்ணனிடம் சென்று, “மாமா, இந்த வீட்ல யாரும் சிரிக்கக் கூடாதா, விளையாடக் கூடாதா?” எனக் கேட்டாள்.
“அப்படி யாரு உன்கிட்ட சொன்னா?”
ரத்னா நேரடியாகத் தன் தந்தையிடம் இப்படிக் கேட்டு வைப்பாள் என்பதை எதிர்பார்க்காத அர்ச்சனா, பயத்தில் கையைப் பிசைந்தபடி தன் அண்ணனைப் பார்க்க, அஜீத் ‘எதையும் சொல்லி வைக்காதே’ என்பது போல ரத்னாவைப் பார்த்துச் சைகை செய்தான்.
“இல்ல மாமா… இங்க யாரும் என்கிட்ட அப்படிச் சொல்லல. நான் தான் உங்ககிட்ட கேட்டேன். நான் ரொம்பச் சேட்டை பண்ணுவேன், ஒருவேளை உங்களுக்கு அது பிடிக்கலைன்னா… அதான் முன்னாடியே ஜஸ்ட் கிளியர் பண்ணிக்கக் கேட்டேன்” என்றாள் ரத்னா.
“நீ சேட்டை பண்றது பத்தி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா அது மத்தவங்களைத் தொந்தரவு பண்ணாம இருக்கணும். அதேசமயம் உன்னோட படிப்பு பாதிக்காமல் இருக்கணும். இந்த வீட்ல எனக்குத் தெரியாமல் குறும்புத்தனம் பண்ற ஒரே ஆள் அர்ச்சனா தான், ஆனா இதுவரைக்கும் படிப்புல எப்போதும் முதல் இடத்தில தான் இருக்கா. அது மாதிரி இருக்கணும் புரிஞ்சுதா?” எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் கிருஷ்ணசந்திரன்.
அர்ச்சனாவின் புறம் திரும்பிய ரத்னா, “என்னமோ மிலிட்டரி ரூல்ஸ் மாதிரி நிறைய சொன்ன, ஆனா இதுவரைக்கும் அதை நீயே மதித்து நடக்கலன்னு உங்க அப்பா சொல்லிட்டுப் போறாரு” என்றாள். ரத்னாவின் தலையில் வலிக்காமல் ஒரு குட்டு வைத்த அஜீத்,
“அது மட்டும் தான் எங்க அப்பா சொன்னாரா? அர்ச்சனா மாதிரி நல்லா படிக்கணும்னு சொல்லிட்டுப் போறாரு” என்றான்.
“விடு நண்பா, அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றாள் ரத்னா.
அதன்பிறகு வந்த நாட்களில் கிருஷ்ணசந்திரனின் வீட்டில் ரத்னா இன்றியமையாதவளாக மாறிப் போனாள். காலையில் படிக்கும் அனைவரின் நடுவிலிருந்து தூங்கி வழிவது, சமைக்கும் நேரம் மைதிலியிடம் உதவி செய்கின்றேன் என்கிற பெயரில் உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிடுவது, சாப்பிடும் நேரம் அனைவரையும் சிரிக்க வைத்துப் பேசுவது, கல்லூரி முடிந்து வந்ததும் அங்கு நடந்த அனைத்தையும் கிருஷ்ணசந்திரனிடமோ அல்லது மைதிலியிடமோ கூறுவது என அனைத்து விதத்திலும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாகவே ஒன்றிப் போனாள்.
அந்த வருடம் வந்த அஜீத் பிறந்தநாளில் அஜீத்திடம் ஒரு பார்சலைத் தந்து, “என்னுடைய பிறந்தநாளுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கிப்ட்டா தந்த, அது மாதிரி இந்தக் கிப்ட் நிச்சயமாக உனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா இதை இப்போ நீ திறந்து பார்க்கக் கூடாது” என்றாள் ரத்னா.
“பிறந்தநாள் கிப்ட்டைப் பிறந்தநாள் அன்னைக்குத் திறந்து பார்க்காம வேற எப்போ பார்க்கணும்?”
“உனக்கு என் மேல எப்பக் கோபம் அதிகமா வந்தாலும், இல்ல நீ என்னை அதிகமா மிஸ் பண்ணாலும் இதைத் திறந்து பார்க்கலாம்.”
“வெறும் பெட்டியை உள்ள வச்சிட்டு அதை மறைக்க இப்படிக் காரணம் சொல்றியா?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி அலைஞ்சு இதை வாங்கினேன் தெரியுமா?” என ரத்னா கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர,
“சரி சரி கோபப்படாதே. இந்த கிப்ட் உன்கிட்டயே இருக்கட்டும். நீ என்ன பண்ணினாலும் எனக்கு உன் மேல கோபம் வராது. நான் உன்னை எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன்” என்றான் அஜீத்.
“இதை நான் உனக்காக வாங்கினேன். அதனால இது உன்கிட்ட தான் இருக்கணும். இதை நான் உன் ரூம்ல வச்சுடுறேன்” என்று கூறிவிட்டு அஜீத் அறையை நோக்கி ஓட, வழியில் நின்ற ஆர்த்தியை கவனிக்காமல் சென்றாள் ரத்னா.
ஆர்த்தி மனதுக்குள், ‘உன்னை மிஸ் பண்ண மாட்டானா? பார்க்கலாம்’ என நினைத்துக்கொண்டாள்.
“அத்தை, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப்” – கல்லூரி முடிந்து வந்ததும் தன் அத்தை மைதிலியின் தோளில் சாய்ந்து பேசிய ரத்னாவைப் பார்த்த ஆர்த்தி, கேலி செய்யும் நோக்குடன்:
“அம்மா, ரத்னாவுக்கு வழக்கமாச் சாப்பிடும் வடைக்குப் பதிலா பஜ்ஜி, போண்டா, முறுக்கு வேணும் போல. அது எப்படி ரத்னா, காலேஜ் முடிஞ்சதும் உனக்குச் சாப்பாடு மட்டும் தான் ஞாபகம் வருமா?” என்றாள்.
மகளின் பேச்சில் முகம் வாடிய ரத்னாவைக் கவனித்த மைதிலி, “ஆர்த்தி, இது என்ன பேச்சு? அடுத்தவங்க சாப்பிடும் விஷயத்துல கேலி பண்றது? போ… போய் மாடியில காயப்போட்ட துணியை எடுத்துட்டு வா” என மகளை அனுப்பிவிட்டு,
“அவ சொன்னதை மனசுல வச்சுக்காதேம்மா, தெரியாமச் சொல்லிருப்பா. உனக்கு என்ன வேணும்னு சொல்லு, அத்தை செய்து தர்றேன்” என்றார்.
“எனக்குச் சாப்பிட எதுவும் வேண்டாம், நான் அஜீத் அத்தான் மேல கோபமா இருக்கேன்.”
“ஏன்மா?”
“அடுத்த வாரம் எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேட் பண்ணப் போறாங்க. அதுக்கு கேர்ள்ஸ் எல்லாரும் சாரி கட்டணும்னு முடிவு பண்ணிட்டாங்க. என்கிட்ட தாவணி தான் இருக்கு, சாரி இல்ல.”
“சரி… இதுல அவன் மேல கோபப்பட என்ன இருக்கு?”
“அத்தை, உங்களுக்குத் தெரியும் தானே, நான் இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அஜீத் அத்தான் தான் செலக்ட் பண்ணித் தருவாங்க. இப்பவும் செலக்ட் பண்ணக் கூப்பிட்டா வேலை இருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.”
“இதுக்குத்தான் இவ்வளவு வருத்தமா? நீ போய் வேற டிரஸ் மாத்திட்டு கிளம்பி வா. நான் அவனை கூட்டிட்டுப் போகச் சொல்றேன். உன்னை கண்டிப்பா கூட்டிட்டுப் போவான்.”
ரத்னா கிளம்பி கீழே வரும் பொழுது அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்த அஜீத்தின் அருகில் வந்ததும், “என் மேல எப்பவும் கோபப்பட மாட்டேன்னு சொன்னீங்க, இப்ப பாருங்க என்னை முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க” என்றாள்.
“நீ என் முறைப் பொண்ணு தானே, அதான் உன்னை முறைச்சுப் பார்க்கிறேன்” என்றான் அஜீத்.
“அப்போ ஓகே… நீங்க அப்புறம் கூட முறைச்சுப் பாருங்க. இப்போ போகலாம்.”
கடையை அலசி ஆராய்ந்து, மயில் வண்ணப் பட்டில் இளஞ்சிவப்பு நிற பார்டர் இருக்கும் ஒன்றை அஜீத் தேர்வு செய்து, “இது உனக்கு ஓகே-யா?” எனக் கேட்க,
“உங்களுக்கு ஓகே-ன்னா எனக்கும் ஓகே” என்றாள் ரத்னா.
கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. ஒரு பக்கம் பொங்கல் வைப்பது, கோலமிடுவது என இருக்க, மறுபுறம் சிலம்பம், உரியடிப்பது என விளையாட்டுகளும் நடந்தன.
ரத்னா அஜீத் தேர்வு செய்த சேலையிலும், அஜீத் கிட்டத்தட்ட அதே வண்ணச் சட்டையிலும் வந்திருக்க, இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த நிமிடத்தைத் தன் போனில் சிறைபிடித்தான் பிரபு.
“போட்டோ எடுக்கும் போது சொல்லிட்டு எடுக்க மாட்டியா? பாரு, நான் அஜீத்தைப் பார்த்த மாதிரி இருக்கேன். சரி இதை விடு, நீங்க எல்லாரும் பொங்கலுக்கு வர்றீங்க தானே?”
“என்னால வர முடியாது” எனப் பிரபுவும் ஸ்டெல்லாவும் ஒரே நேரத்தில் கூற, ரத்னா கோபமாக,
“எல்லாரும் சேர்ந்து தானே ஸ்டெல்லா வீட்ல கிறிஸ்மஸும், பிரபு வீட்ல நியூ இயரும், எங்க வீட்ல பொங்கலும் கொண்டாடலாம்னு முடிவு பண்ணினோம்? இப்போ வர முடியாதுன்னு சொன்னா எப்படி? உங்க அப்பா அம்மா கிட்ட நான் பேசுறேன்” என்றாள்.
“சும்மா உன்னை டென்ஷன் பண்றதுக்காகச் சொன்னேன். நாளைக்கு மூணு மணிக்கு நாங்க அஜீத் வீட்டுக்கு வந்துடுவோம்” என்றான் பிரபு.
மறுநாள் மாலை, அஜீத்தின் பெற்றோர் மற்றும் ஆர்த்தி ஒரு காரிலும், நண்பர்கள் நால்வருடன் அர்ச்சனா ஒரு காரிலும் தேனூற்று நோக்கிப் பயணித்தனர். இரவு ரத்னாவின் வீட்டை அடைந்தனர்.
மறுநாள் காலை பொங்கலிட்டுச் சாமிக்குத் தரிசனம் செய்த பின் அனைவரும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே ரத்னா ஆர்வமாகத் தன் பெரியப்பாவிடம் கோவில் கதையைக் கேட்டாள். முத்துவேல் தென்காசி கோவிலின் சிறப்பை அவர்களுக்கு விளக்கினார்:
“பரக்கிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் வந்து பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் இருப்பதாகவும், எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அதைக் காணலாம் என்றும் கூறினார். வடக்கே உள்ள காசிக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்காகத் தெற்கில் கட்டப்பட்டதே இந்தத் தென்காசி கோபுரம்.”
அடுத்தடுத்த நாட்களில் குற்றாலம் அருவிகளில் குளிப்பது, அருகில் உள்ள பூங்காக்களில் விளையாடுவது எனச் சிறியவர்கள் மகிழ்ச்சியாகக் கழிக்க, பெரியவர்கள் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அனைவரும் ஊருக்குச் செல்லும் முன்தினம் இரவு, ஹர்ஷத் ரத்னாவின் பெற்றோரிடம் தன் தம்பி ஜஸ்வந்த்-திற்காகப் பெண் கேட்டான். ரத்னாவின் பெற்றோர் இதைப் பற்றி முத்துவேலிடம் ஆலோசித்தனர்.
முத்துவேல் தெளிவாகச் சொன்னார்: “ரத்னா இப்பதான் முதல் வருஷம் படிக்கிறா. படிப்பு முடியட்டும். அதுக்கப்புறம் கல்யாணமா, வேலையா என்பதை ரத்னாவே முடிவு பண்ணட்டும். ஜஸ்வந்த் காத்திருக்கத் தயார்னா அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ யாரும் இதைப் பற்றி ரத்னாகிட்ட பேசக் கூடாது.”
தங்கவேலுவின் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜஸ்வந்த், “பெரியப்பா எதிர்மறையாக எதுவும் சொல்லலையே… படிப்பு முடியட்டும், பார்த்துக்கலாம்” என அமைதி காத்தான்.
தங்கவேலு – ஆர்த்தியின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு வந்த முத்துவேலின் மாமனார் அஜீத்தைப் பார்த்துவிட்டு, “நல்ல பையனாத் தெரியுறான், ரத்னாவுக்குப் பார்த்தா என்ன?” எனக் கேட்டார்.
அதே நேரம் மைதிலியின் தோழியும், “ரத்னா நல்ல பொண்ணாத் தெரியுறா, அஜீத்திற்குப் பார்த்தா என்ன?” எனக் கேட்டாள். இரு வீட்டாரும் இதைப் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினர்.