அத்தியாயம் 12(1)
தங்கமுத்து – ஆர்த்தி திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், ஆர்த்தி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கணவரிடம் அஜீத்தைப் பற்றித் தவறான எண்ணத்தை விதைக்கத் தவறவில்லை.
அஜீத் எப்போது தன் வாயால் ‘நான் உன்ன எப்போவும் மிஸ் பண்ண மாட்டேன்’ என்று சொன்னானோ, அப்போதே ஆர்த்தி முடிவு செய்துவிட்டாள்; ரத்னா அஜீத்தின் வாழ்க்கையில் இருக்கக்கூடாது என்று.
தலை தீபாவளிக்குத் தங்கமுத்து, ஆர்த்தி கோவை வருவதால் ரத்னாவும் இந்த வருடம் கோவையிலேயே இருப்பதாகத் தன் பெற்றோரிடம் கூறிவிட்டாள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாகவே இருவரும் வந்துவிட, ரத்னா புத்தகத்தைத் தூக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்பதால் அண்ணனுடன் ஒட்டிக்கொண்டே திரிய, அதைப் பொறுக்க முடியாத ஆர்த்தி ரத்னாவைத் தனியே அழைத்துச் சென்று,
“உனக்கு அறிவே கிடையாதா? நானும் கல்யாணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். நீ எப்போ பார்த்தாலும் ஏதாவது ஆம்பளை கூட ஒட்டிக்கிட்டே இருக்க. முதல்ல என் தம்பி, இப்போ என் புருஷனா?” எனக் கேட்டாள்.
பிறந்தது முதல் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டுப் பழக்கமில்லாத ரத்னா, தன் அண்ணியின் பேச்சினால் ஏற்பட்ட வலியில் துடித்துப் போனாள்.
“அக்கா!” என்ற சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்க்க, தன் தம்பியை எதிர்பார்க்காத ஆர்த்தி அதிர்ந்து நிற்க, அஜீத் அங்கே வந்தான்.
“நீ எப்போலிருந்து இப்படிப் பேச ஆரம்பிச்ச? ரத்னா உன் புருஷனுக்குத் தங்கச்சி, எனக்கு ஃப்ரெண்ட். எங்க ரெண்டு பேருக்கிட்டயும் ரத்னாவுக்கு எல்லா உரிமையும் இருக்கு.”
“அஜீத், நான் உன் அக்கா. அது உனக்கு ஞாபகம் இருக்கா? என்கிட்ட இப்படிப் பேசுறது உனக்கு நல்லது இல்ல.”
“நீ பேசினதை உன் புருஷன்கிட்டயும், நம்ம அப்பாகிட்டயும் சொன்னா யாருக்கு நல்லது இல்லன்னு தெரிஞ்சுடும்.”
“ஓ, உன்னை இந்த அளவு மயக்கி வச்சிருக்காளா? பார்க்கலாம் இவ ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு.”
“அக்கா, நீ ஏன் இப்படிப் பேசுற?”
“நான் இப்படித்தான் பேசுவேன். எனக்குச் சொந்தமானதை என்கிட்ட இருந்து தட்டிப் பறிக்க நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்” எனக் கூறிவிட்டு ஆர்த்தி உள்ளே சென்றுவிட, ரத்னா அமைதியாகக் கண்ணில் வழியும் நீருடன் நின்று கொண்டிருந்தாள். அஜீத் அவள் அருகில் வந்து,
“ரத்னா, கண்ணைத் துடை. ஆர்த்திக்கு ஏதோ பைத்தியம் பிடிச்சிருக்கு. அதான் இப்படிப் பேசிட்டுப் போறா, நீ எதுவும் நினைச்சுக்காதே.”
“அஜீத் அத்தான், எனக்கு ரொம்ப அழுகையா வருது. வீட்டுக்குள்ள போனா அண்ணா என்கிட்ட என்னன்னு கேட்பாங்க. ப்ளீஸ் என்னை எங்கயாவது கொஞ்ச நேரம் கூட்டிக்கிட்டுப் போறீங்களா?”
ரத்னா கேட்டதை மறுக்க முடியாத அஜீத், தான் அம்மாவிடம் கூறிவிட்டு அவளை நேராக ஸ்டெல்லாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஸ்டெல்லாவிடம் ரத்னாவைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டான். வீட்டில் ஆர்த்தி கிடைத்த சந்தர்ப்பத்தில் தங்கமுத்துவிடம் தன் விஷத்தைக் கக்கினாள்.
“அஜீத் செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல.”
“என்ன பண்ணான்?”
“அவன் ரத்னா அவனோட கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைக்கிறான். நாம வந்ததுக்கு அப்புறம் ரத்னா அதிக நேரம் உங்க கூட இருக்குறது அஜீத்துக்குப் பிடிக்கல. அதான் ரத்னாவை ஏதோ சொல்லி வெளியே கூட்டிக்கிட்டுப் போயிட்டான்.”
“எங்கே போயிருக்காங்க?”
“தெரியல. கேட்டாலும் சொல்ல மாட்டான். ரத்னா இங்க வந்த நாள்ல இருந்து அடிக்கடி இப்படி கூட்டிக்கிட்டுப் போவான். அப்பா அம்மா கேட்டா ஏதாவது காரணம் சொல்லிச் சமாளிச்சுடுவான். எனக்குப் பயமா இருக்கு. ரத்னா சின்னப் பொண்ணு, இவனும் இவன் ஃப்ரெண்ட்ஸும் நடந்துக்கிற விதம் கொஞ்சம் கூடச் சரி இல்ல. என்னால இதுல ஒன்னும் பண்ண முடியாது. பட் நீங்க ரத்னாகிட்ட சொல்லி வைக்கலாம்.”
“நீ இதைப் பற்றிக் கவலைப்படாதே, நான் பார்த்துக்கிறேன்.”
இரவு கடையிலிருந்து வரும்போது அஜீத் ரத்னாவை அழைத்து வர, தங்கமுத்து “ரத்னா மா, சாப்பிட வாங்க” என அழைத்தார்.
“நான் அஜீத் அத்தான் கூட வரும்போதே சாப்பிட்டுட்டேன் அண்ணா.”
“சரி சீக்கிரம் போய் தூங்குமா.” என்று கூறி விட்டு சென்று விட்டான்.
மனைவி கூறியதை நினைத்து இரவு தூக்கம் வராமல் மொட்டை மாடிக்கு வந்த தங்கமுத்து பார்த்தது ரத்னாவை அணைத்தபடி நின்ற அஜீத்தைத் தான்.
கோபம் தலைக்கு ஏற அவர்களின் அருகில் சென்று ரத்னாவை இழுத்து ஓங்கி அடித்த அடியில் ரத்னா ஒரு ஓரத்தில் சுருண்டு விழ, அஜீத்திடம், “உங்களை நம்பி என் தங்கச்சியை இங்க தங்கிப் படிக்க வச்சா, ஒண்ணும் தெரியாத என் தங்கச்சி மனசில காதலை விதைக்கப் பார்க்கிறியா? கொன்னு புதைச்சுடுவேன்” என எகிறினார்.
உண்மையில், ஆர்த்தி பேசியதை நினைத்துத் தூக்கம் வராமல் இருந்த ரத்னாவை அஜீத் சமாதானம் செய்யும்போது, காலில் ஏதோ உரச பயந்து துள்ளிய ரத்னா கீழே விழாமல் இருக்க அஜீத்தைப் பிடிக்க, திடீரென ரத்னா பிடித்ததில் நிலை தடுமாறி விழாமல் இருக்க ஒரு கையால் ஊஞ்சல் சங்கிலியையும் மறு கையால் ரத்னாவையும் பிடித்தான் அஜீத். இந்தச் சூழ்நிலையைக் கண்ட தங்கமுத்து இருவரும் அணைத்துக்கொண்டு நிற்பதாக நினைத்துக் கோபத்தில் ரத்னாவை அடித்தான்.
தன் அண்ணன் தன்னை அடித்ததையே தாங்க முடியாத ரத்னா, அடுத்து அவர் கூறிய விஷயத்தில் மனதளவில் செத்துப்போனாள். தங்கமுத்து பேசியதில் அதிர்ந்த அஜீத், அடுத்த நொடி அதன் காரணத்தைப் புரிந்துகொண்டு, விழுந்து கிடந்த ரத்னாவைத் தூக்கி நிறுத்தித் தங்களை விளக்க முற்பட,
“ஏய்! முதல்ல என் தங்கச்சி மேல இருந்து கையை எடுடா. உன்னை மாதிரி கேடுகெட்டவனுக்கு ரத்னா கேட்குதோ?” என்றார் தங்கமுத்து.
“அத்தான், நீங்க தப்பா புரிஞ்சுகிட்டுப் பேசாதீங்க.”
அஜீத்தின் சட்டையைப் பிடித்து, “நான் சரியாதான் புரிஞ்சு பேசுறேன். படிக்கிற வயசுல உடம்பு பொண்ணு தேடுதோ?” எனத் தரம் தாழ்ந்து பேசினார்.
தன் வார்த்தைகளால் காயப்படுவது தன் செல்லத் தங்கை என்பதை அறியாமல் தங்கம் பேச, அதற்கு மேல் இருந்தால் இன்னும் என்னென்ன பேசி இருப்பாரோ என்ற அச்சத்தில் அஜீத் தடுக்க நினைக்க, கையை உயர்த்தித் தடுத்த ரத்னா கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தங்கமுத்துவிடம், “என்னை அடிக்கிறதுக்கு, திட்டுறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆனா அஜீத் அத்தானைத் திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல” என்றாள்.
“நேத்து பார்த்த ஒரு பொறுக்கிக்காக என்னை எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டியா?”
“மரியாதை கொடுத்துப் பேசினா ரொம்ப நல்லது. அத்தான் ஒன்னும் ரோட்டுல போற யாரோ இல்ல. உங்களுக்கு மச்சான் ஆகுறதுக்கு முன்னாடி இருந்து எனக்கு ஃப்ரெண்டு.”
இருவரின் விவாதத்தில் இடை புகுந்த அஜீத், “ரத்னா ப்ளீஸ் நீ கீழே போ, நான் அத்தான்கிட்ட பேசிக்கிறேன்” என்றான்.
“ஓ, தாராளமாப் பேசுங்க. ஆனா நான் போறதுக்கு முன்னாடி உங்க அத்தான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கு உங்க ஃப்ரெண்டா நான் பதில் சொல்லிட்டுப் போறேன்.”
ஃப்ரெண்டு என்ற வார்த்தையில் மட்டும் அழுத்தம் தந்து தங்கமுத்துவிடம் திரும்பிய ரத்னா, “என் ஃப்ரெண்டு கிட்ட ‘படிக்கிற வயசுல உன் உடம்பு பொண்ணு தேடுதோ’ன்னு நீங்க கேட்ட கேள்வி என்னையும் காயப்படுத்தும்னு நீங்க மறந்துட்டீங்க. ஓகே, பட் கேள்வின்னு வந்தா பதில் தெரியணும் தானே. அஜீத் வயசுல ஹர்ஷத் அத்தானுக்கு என் வயசுல இருந்த ரூபா அக்காகிட்ட என்ன தேடல் இருந்துச்சோ, அதே தேடல் ஒருவேளை எங்ககிட்டயும் வந்தா நிச்சயம் தப்பு இல்ல. நீங்கதான் தேடலைக் கல்யாணத்துல முடிச்சு வைக்கிறவராச்சே!” என்றாள்.
ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்திய ரத்னா யோசிப்பது போல் பாவனை செய்ய, அடுத்து அவள் எது பேசினாலும் அது எதிரில் இருப்பவரைத் திருத்த முடியாதபடி காயப்படுத்தும் என்பதை அறிந்து வைத்திருந்த அஜீத் ரத்னாவைத் தடுக்க நினைக்க, அவனை முந்திக்கொண்டு,
“அச்சச்சோ, நான் மறந்து போயிட்டேன். ரூபா அக்கா உங்க கூடப் பிறந்த அக்கா, என்ன இருந்தாலும் நான் சித்தப்பா பொண்ணு தானே” என்றாள்.
“ரத்னா மா, நான் அப்படியா பிரிச்சுப் பார்க்க நினைப்பேனா? நான் ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுமா.”
“இந்தக் கோபம் ஏன் 8 வருஷத்துக்கு முன்னாடி ரூபா அக்கா விசயத்தில வரல? என்னைப் பற்றி நல்லா தெரிஞ்ச நீங்களே இப்படி நடந்துகிட்டதை என்னால ஏத்துக்க முடியல.”
அதன் பிறகு அங்கு நிற்காமல் தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொள்ள, காலை முதல் இப்போது வரை நடந்த அனைத்தையும் அஜீத் சொல்லி முடித்துவிட்டு, “என் அக்கா என்னைப் பற்றி உங்ககிட்ட என்ன சொன்னான்னு எனக்குத் தெரியாது. பட் உங்களுக்கு உங்க தங்கச்சியப் பற்றி நல்லா தெரியும்னு நினைக்கிறேன்” என்றான்.