அழகிய இளங்காலை பொழுது. நீண்ட கடற்கரை சாலையை ஒட்டிப் போடப்பட்டிருந்த நடைபாதையில் தந்தையும் மகனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே வெள்ளிக்கம்பிகளைப் போல் நீட்டிக் கொண்டிருந்த நரைமுடி மட்டும் ருத்ரனுக்கு இல்லாவிட்டால் இருவரையும் அண்ணன் தம்பி என்றே அழைக்கலாம்.
இருவரும் ஒரே உயரம் , அலையலையான கேசம், கட்டுமஸ்தான உடற்கட்டு , இறுகிய தாடையுடன் அமைந்த கம்பீரமான முகவெட்டு,
நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்ததினால் இருவரும் வியர்வையில் குளித்திருந்தனர்.
ஆர்ம்கட் பனியன் அணிந்திருந்ததால் புஜங்களின் தசைக்கோளங்கள் திமிறிக் கொண்டிருந்தது.
“ ஊப்…” என முழங்காலில் கையை ஊன்றி நிதானித்தான் ஆதவ் ஆத்ரேயன்.
“ என்னடா..அதுக்குள்ள டயர்டாகிட்டியா?” என்றபடி அவனது தோளைத் தட்டினான் ருத்ரேந்திரன்.
( தள்ளிக் தள்ளி நீ இருந்தால் கதையோட ஹீரோ தாங்க).
“ இதெல்லாம் ஓவரா தெரியலையா உங்களுக்கு? பிரேக்கேயில்லாம ஒரு மணி நேரமா ஜாக் பண்ணிட்டு இருக்கோம். தண்ணி வேணும் டாட்…பேக் எங்க? “ என்றபடி ஷார்ட்ஸில் வைத்திருந்த சிறிய கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்தான்.
“கார்ல இருக்கு ..வா..கார் வரைக்கும் ஜாக் பண்ணிட்டு போலாம்..” என்று சலித்துக்கொண்ட மகனை இழுத்துக் கொண்டு ஓடினான் ருத்ரேந்திரன்.
காரில் ஏறியவன் வேகமாக தண்ணீர் போத்தலை எடுப்பதற்குள்ளாக ருத்ரேந்திரன் எடுத்திருந்தான்.
“ டாட்…தண்ணீ தாகம் உயிர் போகுது…நீங்க என்னடான்னா என்னை குடிக்க விடாம முந்திகிட்டு எடுத்துக் குடிக்கிறீங்க…குடுங்க டாட்..” என தகப்பனது கையில் இருந்து வாங்க முயற்சிக்க அவனோ தண்ணீர் போத்தலை குடுக்காமல் மேலே கீழே என ஆட்டம் காட்டினான்.
“ என்ன டாட்..?சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கிறீங்க? வயசு ஆக ஆக… ரொம்ப விளையாட்டுத்தனமா நடந்துகிறீங்க…ம்ம்…கொடுங்க..” என்று வெடுக்கென்று தந்தையின் கைகளிலிருந்து பிடிங்கியவன் மளமளவென்று தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டான்.
“உன்னோட வேலைக்கு நீ சரிபட்டே வரமாட்ட டா. யாரு உனக்கு போஸ்டிங் கொடுத்ததுன்னு தெரியலை. இவ்வளவு வீக்கா இருக்க…ஆஃப்ட்ரால் ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து உன்னால ஜாக் பண்ண முடியல…புஸ்ஸூ…புஸ்ஸூன்னு மூச்சு வாங்குற…நீயெல்லாம் என்ன…” என ஆரம்பிக்க மகனது பார்வையில் தனது பார்வையை திருப்பிக் கொண்டான் ருத்ரன்.
தண்ணீர் போத்தலை ருத்ரனிடம் கொடுத்து விட்டு , காரை லாவகமாக பின்பக்கமாக எடுத்தவன் கடற்கரை சாலையில் காரை செலுத்தினான்.
அரை மணி நேர பிரயாணம். செவ்ப்பொறியில் ஏதோ பேசிக் கொண்டு வந்தான் ஆதவ். பெரிய இரும்பு கேட்டின் முன்பு நிறுத்தி ஒலிப்பானை ஒலிக்க விட்டான்
காவலாளி வேகமாக கேட்டை திறந்து விட ருத்ரேந்திரனுடைய ஸ்விஃப்ட் டிசையர் உள்ளே நுழைந்தது. காரை வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் காரேஜில் நிறுத்தி விட்டு வந்தான் ஆதவ்.
தந்தையும் மகனும் உள்ளே நுழையும் போதே முல்லை மற்றும் சம்பங்கி பூவின் வாசனையோடு சாம்பிராணி வாசமும் மிதந்து வந்தது.
நெற்றியில் குங்குமமிட்டு சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி விட்டு வெளியே வந்தவள் கணவனையும் மகனையும் பார்த்து முறைத்தாள்.
“ என்ன ஜானு டார்லிங்…ஏன் அப்படி பாசமா பாக்குறீங்க? பக்தி பழமா அப்படியே நரசூஸ் காஃபி ஆட்ல வர்ற மாதிரி தெய்வீக அழகோட இருக்கீங்க? என் கண்ணே பட்டுடும் போலவே…! உங்க ஆம்படையான் தான் அழுக்கு மூட்டை மாதிரி நின்னுட்டு இருக்காரு…யாருக்கு தீபாராதனை கொண்டு வர்றீங்க…?” என நக்கலடித்த்தான்.
“ ஆதவ்…எத்தனை தடவை சொல்றது…ஷூ காலோட உள்ள வராதேன்னு.. போய் ரெண்டு பேரும் வெளியே ஷூவை கழட்டிட்டு காலை அலம்பிண்டு உள்ள வாங்கோ…” என்றபடி சூடம் ஏற்றிய தட்டை கையில் எடுத்துக்கொண்டு வாசலருகே சென்று சூரிய பகவானுக்கு காட்டி விட்டு உள்ளே வந்தாள் ஜானகி.
தந்தையும் மகனும் தாய் சொல்லை தட்டாமல் செய்து விட்டு உள்ளே வந்தனர்.
அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது ஷூ லேசை இறுகக் கட்டிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி..
அதைப் பார்த்து கடுப்பான ஆதவ் , “இதோ…உங்க பொண்ணு நடு ஹால்ல உக்காந்துண்டு ஷூ லேசை கட்டிண்டு இருக்காளே…அவளை சொல்றதாம்…சும்மா எங்களையை எப்ப பார்த்தாலும் திட்டிண்டு..” என்று தாயை கிண்டலடிக்க, “ டேய் ஆதவ்…” என ருத்ரேந்திரன் மகனை அடக்கினான்.
“ சும்மா இருங்கப்பா…இவ கிட்ட இந்த ஜானுவால ஏதாவது பேசமுடியுமா? முடியாதுல்ல…நம்ம கிட்ட தான் இந்த அதட்டல் உருட்டல் எல்லாம்….” என்றான் விடாமல்..
ஷூ லேசை கட்டி முடித்து விட்டு நிமிர்ந்து தமயனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள் கீதாஞ்சலி.
ஆதவ்வின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.
தீபாராதனை தட்டை கையில் எடுத்துக் கொண்டு மகளருகே சென்ற ஜானகி, “ஷூவை கழட்டி வச்சிட்டு கண்ணுல ஒத்திக்கோ டி..” என்றாள்.
அருகிலிருந்த கைக்கடிகாரத்தை கட்டிக்கொண்டவள்,” எத்தனை தடவை சொல்றது எனக்கு இதுலயெல்லாம் நம்பிக்கை இல்லைன்னு… டைம் ஆச்சு…நான் கிளம்பணும்..” என்றபடி தனது தொப்பியையும் அலைப்பேசியையம் எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
வெகு நேரம் தீபாராதனை தட்டை கையில் வைத்திருந்தால் கை சுட்டு விடவே , “ ஸ்ஸ்..ஆ..ஆ..” என்று லேசாக கையை உதற தீபாாதனை தட்டு கழே நழுவி விட வேக எட்டுக்களுடன் வந்த ஆதவ் அதனைப் பிடித்து கீழே வைத்து விட்டு கீதாஞ்சலியை பார்த்தான்.
அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“ ஏன் ம்மா..அவ தான் சாமி கும்பிட மாட்டான்னு தெரியுதுல்ல…தினமும் தீபாராதனை காமிச்சு..அவகிட்ட கொண்டு போற.. இப்படியே தான் திமும் செய்யுறா.. சொல்ற பேச்சை மட்டும் கேட்டுடாத…” என அலுத்துக் கொண்டான் மகன்.
அவனது கேள்விக்கு பதில் கூறாமல் விரல்களை ஊதியபடி ஜானகி அமர்ந்திருந்தாள்.
மகனது தோளைத் தட்டினான் ருத்ரேந்திரன்.
என்னவென்பது போல ஆதவ் நிமிர்ந்து பார்க்க, “கொஞ்சம் எந்திரிக்கிறியா? அவ கைக்கு ஆயிண்ட்மெண்ட் போடணும்…” என்றான்.
அதற்குள் குளிர்சாதன பெட்டியிலிருந்து ஐஸ்கட்டிகளை எடுத்து வந்த கீதாஞ்சலி , “இதைப் போடுங்க டாட்…போதும்… சரியாகிடும். இதுக்குப் போய் ஏன் ஆயின்மெண்ட்?சின்ன சூட்டுக்குப் போய் இப்படி ரொம்ப உருகி கரையாதீங்க .சோ…ஃபன்னி..” என உதட்டை சுளித்தாள்.
மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்
தினம் தினம் பல்வேறு குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை அடித்து அடித்து உணர்வுகளும் மரத்து தான் போய் விட்டது போலும் என நினைத்தனர். மூவரில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தாள் கீதாஞ்சலி.
“ அதில்லை கீதும்மா…” என்றபடி ருத்ரேந்திரன் வர “ சாரி…டாட் உங்க லவ் ஸ்டோரியை திரும்பச் திரும்பச் சொல்லி போரடிக்காதீங்க ப்ளீஸ்…” என்றவள் ஆதவின் புறம் திரும்பி, “ஆதவ்… சிலை கடத்தல்ல சம்பந்தப்பட்ட கும்பலை நீ தான பிடிச்ச? பத்து பேரை பிடிச்சதா இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட்ல இருந்து மெசேஜ் வந்தது. ஆனா எட்டு பேரை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்குறதா கேஸ் ஃபைல் ஆகியிருக்கு.. மீதி ரெண்டு பேர் எங்கே?” என்றாள் தனது பர்ஸை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்தபடியே.
பதில் கூறாமல் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான் ஆதவ்.
தமையனின் அலட்சியம் அவளுக்கு கோபமூட்டவே வேகமாக அவன் முன்னே வந்து நின்றவள், “ உன் கிட்ட தான் டா கேட்டுட்டு இருக்கேன்…பதில் சொல்லாம திமிர்த்தனம் பண்ணிட்டு இருக்க?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு..
“ கீதும்மா…இது ஆஃபிஸ் இல்ல டா.. வீட்டுல கூட கேஸ் விஷயமா தான் பேசணுமா?” என்றான் ருத்ரேந்திரன்.
“ டேட் இவனுக்கு ஹயர் அஃபிஷியல் நானு.. எனக்குத் தெரியாம என்னென்னவோ இவனிஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்கான். ஆஃபீஸ் ல வச்சி இவன் கூட என்னால மல்லு கட்ட முடியல…ரெண்டு தடவை சஸ்பென்ஷன் வாங்கியாச்சு…இப்பவும் சஸ்பென்ஷன் ல தான் இருக்கான். அடுத்த தடவை இப்படியே ஏதாவது பண்ணிட்டு இருந்தான்னா தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திட்டுவேன்..! “ என்று காய்ந்தாள்.
“கீதுக்கா.இங்க பாரு..நீ என்ன பண்ணுனாலும் அவனுங்க வாயைத் திறக்க மாட்டாங்க… உன்னையே மாதிரி தடவிக் கொடுத்து உண்மையை வாங்குறதுக்கெல்லாம் எனக்கு பொறுமையில்ல. சங்குலயே நாலு மிதி…நகக்கண்ணுல ஊசி வைக்குறதெல்லாம் பழைய டெக்னிக்.. அடிக்குற அடியில சின்ன வயசுல அவன் குடிச்ச பால் வெளியே வந்துடணும்..” எனறான் கைகளை முறுக்கி சொடுக்கு எடுத்துக் கொண்டே..
“ யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட்ஸ் ஆதவ்..” என்று சீறினாள் கீதாஞ்சலி..
காதைக் குடைந்து கொண்டே, “ ஐ யம் நாட் க்ராஸிங் மை லிமிட்ஸ்…” என்று பதிலுக்கு சீறியவன் ஜானகியின் முகத்தை கண்டு சற்று நிதானித்தான்.
“கீதுக்கா…ப்ளீஸ்…இதை என் கிட்ட விட்டுடு… நான் பாத்துக்குறேன்… தட்டுற தட்டுல அந்த நல்லவரு கோஷ்டி கொத்தா சிக்கணும்… ஒன்னு வெளியேவே வர முடியாத அளவுக்கு அவங்களை உள்ளத் தள்ளி களித்திங்க வைக்கணும்… அப்படி முடியலைன்னா அந்த வஜ்ரவேலையும் மிருகேனையும் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்… பேசாம அதை பண்ணி மொத்தமா எல்லாத்தையும் முடிச்சி விட்டுடலாம்ன்னு பாக்குறேன்.. எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டேன். நீ என்ன கேஸ் வேணாலும் என் மேல போட்டுக்க.”என கண்கள் சிவந்து கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டு பேசினான்.
சலிப்பாக இருபுறமும் தலையை ஆட்டியவள் , “உன் கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்குறதுக்கு எனக்கு நேரமில்லை… பாக்கலாம்…இந்த கேஸை நீ எப்படி நடத்துறன்னு.. உனக்கு எங்க செக் வைக்கணும்னு . எனக்குத் தெரியும்…” என்றபடி நகர்ந்தவள் தந்தையிடம், “இவனால எப்ப பாரு குடைச்சலா தான் இருக்கு. மேல இருந்து ஏகப்பட்ட பிரஷர்…இந்த ஊர்ல ஒண்ணா இவன் இருக்கணும் இல்ல நானிருக்கணும்….அப்ப தான் என்னோட வேலை ஒழுங்கா நடக்கும்…கொஞ்சம் உங்க உத்தம புத்திரன் கிட்ட சொல்லி வைங்க…அப்பப்ப வீக்கெண்ட் ராயல் ஃபப்புக்கு போயிட்டு வந்துட்டு இருக்கான். அதையும் என்னன்னு கொஞ்சம் விசாரிச்சு வைங்க…* என்று பேகிறபோக்கில் தமையனை பற்றி குச்சி உரசிப் போட்டுவிட்டு போனாள்.
அலையடித்து ஓய்ந்து போலிருந்தது வீடு. இருவரும் முட்டிக் கொள்ளும் ஒரே விடயம் மிருகேந்திரன் தான்.
கீதாஞ்சலி சொன்னதைக் கேட்ட ஜானகி மகனை முறைத்தாள்.
“ என்ன ஆதவ்…? என்ன புதுசு புதுசா பழக்கம் பழகுற? “
‘ ம்ம்கூம்…இது புது விஷயமில்லை…பழகி போன விஷயம் தான்.” என் மனதினுள் நினைத்துக் கொண்டான் ருத்ரேந்திரன்.
ருத்ரேந்திரனுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதினால் அமைதியாக நின்றிருந்தான்.
“ ஆதவ்..உன் கிட்ட தான் கேட்டுண்டு இருக்கேன்…” என்று பேசிக்கொண்டே திரும்பியவள் அமைதியாக நின்றிருந்த கணவனைப் பார்த்து விழி சுருக்கினாள்.
ருத்ரேந்திரனருகே வந்தவள் ,” ஆக…அவன் ஃபப்புக்கு போறது உங்களுக்கு தெரியும் ம்ம்..?”என்றாள்.
“ ஜானு டார்லிங்…ஒன்லி வீக்கெண்டு மட்டும் தான். அதுவும் எப்பவாவது தானே? வெர்க் பிரஷர்….அதுவும் உங்க பொண்ணு குடுக்குற குடைச்சலுக்கு நாலு பாட்டிலை உள்ளத் தள்ளணும்…” என்றான் சலிப்பாக.
“ டேய்…அவ உன்னோட அக்கா…மரியாதையா பேசு..” என்றான் ருத்ரேந்திரன்.
“ ம்ம்கூம்…” என நொடித்துக் கொண்டவன் ஜானகியின் தோள் மீது கையைப் போட்டபடி, “டோண்ட் வொர்ரி ஜானு. என்னோட லிமிட்டை நான் க்ராஸ் பண்ண மாட்டேன்…ஐ ப்ராமிஸ் யூ…ஆமா…இன்னைக்கு மார்னிங் என்ன பிரேக்பாஸ்ட்?”
“ இட்லியும் சாம்பாரும் தான்…முதல்ல ரெண்டு பேரும் போய் ஸ்னானம் பண்ணிண்டு வாங்கோ…”
“ சரி ஜானு …மதியம் என்ன சிக்கன் ரைஸ் தானே? உங்காத்துக்காரருக்கு அது ரொம்பபீ பிடிக்குமே..” என ஜானகியிடம் வம்பிளுத்து விட்டே குளிக்கப் சென்றான் ஆதவ்.
“ போடா…முதல்ல போய் குளி…” என்றவள் சமயலறை திண்டை துடைத்துக் கொண்டிருக்க பின்னோடு அவளை உரசிக் கொண்டு வந்து நின்றான் ருத்ரேந்திரன்.
பதறி விலகியவளை திண்டோடு சிறை செய்தான்.
“ சிக்கன் தானே இன்னைக்கு?” என்றான் அவளது முகத்தில் வழிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டே
“ தள்ளி நில்லுங்கோ…தலைமுடி நரைச்சு போன காலத்துல என்னது இது”
“ வயசான என்ன டி இப்போ…பொண்டாட்டிய கொஞ்சக்கூடாதுனு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன? எப்பவும் போல இந்த பச்சை புடவையில அவ்வளவு அழகு நீ..” என்று கூறி அவளது மூக்கை பிடித்து ஆட்ட , “உங்க ரொமான்ஸ் முடிஞ்சிடுச்சின்னா கொஞ்சம் தள்ளுங்க. என்னோட ஃபோனை நான் எடுத்துக்குறேன்…” என்று பேசிக் கொண்டே வந்தவன் திரும்பி நின்று கொண்டு கையை மட்டும் நீட்ட , அவனது கையில் அடித்தவன் , “ போடா ராஸ்கல்…” என்று கூறி ஜானகியை விட்டு விலகி நின்றான் .
“ ம்ம்…நீங்க நடத்துங்க…நடத்துங்க..” என்று விஷமமாக கூறி விட்டு நகர்ந்தான் மகன்.
“ இதுக்கு தான் சொன்னேன்…அவன் முன்னே போய்… ம்மச்..என்ன நினைச்சிருப்பான் அவன்? போங்கோ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்கோ..” என்றாள்.
“ சரி தான்…என் பொண்டாட்டி கிட்ட தானே நான் பேசிட்டு இருந்தேன்…ஓவரா தான் போறீங்க..” என்றபடி தங்களுடைய அறைக்குள் நுழைந்தான் ருத்ரேந்திரன் .