உன் நிழல் நான் தொட ep 7

அத்தியாயம் 7

 

அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது. மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் ரத்னாவிடம் வர, ரத்னா ஸ்டெல்லாவைப் பார்த்து, “ஸ்டெல்லா, இன்னைலிருந்து இவங்க ரெண்டு பேரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ், ஓகே?” என்று இருவரையும் ஸ்டெல்லாவுடன் நண்பர்களாக்கினாள்.

சுற்றி வளைக்காமல் அஜீத் நேரடியாக ரத்னாவிடம், “ஜஸ்வந்த் யாரு?” என்று கேட்டான். 

ரத்னா ஜஸ்வந்த் பற்றி விரிவாகக் கூறிய பின்பு, தனக்கும் பிரபுவிற்கும் ஜஸ்வந்த் மீது ஏற்பட்ட சந்தேகத்தைப் பற்றி அஜீத் கூறினான். 

“ரத்னா, நான் உன்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறதா தப்பா நினைக்காதே, உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன்” என்றான்.

தன் நன்மையைக் கருதி அஜீத் பேசுவதைப் புரிந்துகொண்ட ரத்னா, “ஓகே, நான் ஜஸ்வந்தை பார்க்க இன்னைக்கு போகல. 20 நாளுக்கு அப்புறம் ஜஸ்வந்த் சொன்னால் சொல்லட்டும், இல்லாட்டி எப்படியும் எங்க அக்கா என்னைப் பார்க்க வருவாங்க. சோ, வெயிட் பண்றது ஒன்னும் தப்பு இல்ல” என்றாள்.

“தேங்க்யூ ரத்னா, நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்காம புரிஞ்சுக்கிட்டதுக்கு. அப்போ உன்கிட்ட இன்னொன்று சொல்லணும்.”

“என்ன?”

“ஜஸ்வந்த் உங்க அக்காவைப் பத்தி உன்கிட்ட சொல்லாட்டி கூட, நீ உன் அக்காவைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்.”

“எப்படித் தெரிஞ்சுக்கலாம்?”

“ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு இப்படி நிறைய சோசியல் மீடியா இருக்கு. அதுல எதுலயாவது உங்க அக்கா இருக்கலாம் தானே?”

“அக்கா இருக்கலாம், ஆனா நான் இல்லையே.”

“இல்லையா? சரி விடு, நான் உனக்கு அக்கவுண்ட் கிரியேட் பண்ணித் தர்றேன். நாளைக்கே நீ உங்க அக்கா கிட்ட பேசலாம்.”

“அக்கவுண்ட் ஓபன் பண்ணிப் பேசலாம் அஜீத், ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.”

“ரத்னா, என்ன பிரச்சனை? உங்க வீட்ல தெரிஞ்சா உன்னைத் திட்டுவாங்கலா?”

“அது இல்ல… என்கிட்ட போன் இல்ல.”

“என்னது! போன் இல்லையா?”

“நீ எதுக்கு இவ்வளவு அதிர்ச்சியாகுற? என்கிட்ட போன் இல்ல, அவ்வளவுதான்.” 

இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபு அஜீத்திடம், “டேய் மச்சான், இதுக்கு உங்க அப்பா ‘தம்பி ராமையாவே’ பரவாயில்லைடா! உனக்கு போன், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கித் தந்திருக்காரு” என்றான்.

ரத்னா பிரபுவிடம், “அஜீத் அப்பாவை ஏன் தம்பி ராமையான்னு சொல்ற?” என்று கேட்க, பிரபு அஜீத்தின் தந்தையைப் பற்றியும் அவருடைய குணத்தைப் பற்றியும் கூறினான். அதைக் கேட்ட ரத்னா அஜீத்திடம், 

“எனக்கு உன்னுடைய ஃப்ரெண்ட்ஷிப் வேண்டாம்” என்றாள். ரத்னாவின் பேச்சில் பதறிய அஜீத், 

“என்னாச்சு ரத்னா? எதுக்காக இப்படிச் சொல்ற?” என்றான்.

“பின்ன என்ன? பிரபு உங்க அப்பாவைக் கிண்டல் பண்றான், நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற.”

“அவன் உண்மையைத்தானே சொன்னான். இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?”

“நீ சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லையா?”

“என்ன இருக்கு ரத்னா?”

“நிறைய இருக்கு அஜீத். உங்க அப்பா உன்னை ஒரு டாக்டராகவோ இல்லாட்டி ஒரு இஞ்சினியராவோ பார்க்கணும்னு ஆசைப்பட்டார். இதுல என்ன தப்பு இருக்கு? உன்னால முடியும்னா முடியும்னு சொல்லு, இல்லாட்டி முடியாதுன்னு சொல்லு. அதை விட்டுட்டு உங்க அப்பாவை எங்கேயும் விட்டுக்கொடுத்துப் பேசாதே.”

“முடியாதுன்னு சொன்னா மட்டும் எங்க அப்பா கேட்பாருன்னு நினைக்கிறாயா?”

“நான் நினைக்கிறது இருக்கட்டும், நீ என்னைக்காவது தைரியமா உங்க அப்பா முன்னாடி உனக்குப் பிடிச்சது, பிடிக்காததைச் சொல்லியிருக்கியா?”

இருவரின் உரையாடலில் இடையில் புகுந்த பிரபு, “ரத்னா, நீ என்ன பாட்டிமா மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு இருக்க?” என்றான்.

“அட்வைஸ் யாரு வேணாலும் யார்கிட்டயும் சொல்லலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அஜீத் எனக்குச் சொன்ன மாதிரி. பிடிச்சிருந்தா கேட்கிறது, பிடிக்காட்டி கேட்காம இருக்கிறது அவங்கவங்க விருப்பம்.”

“இப்போ கடைசியா நீ என்ன சொல்ல வர?”

“நான் ஒன்னும் சொல்லல. ஜஸ்ட் ஒரே ஒரு நாள் நீங்க எல்லாரும் உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறாரு அப்படிங்கறத கூடவே இருந்து பாருங்க. அதுக்கப்புறம் உங்க அப்பா கோபப்படுவது சரியா தப்பானு சொல்லுங்க.”

தந்தையைப் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அஜீத், “சரி ஓகே ரத்னா, இதைப்பத்தி நாம அப்புறம் பேசலாம். உனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் என்னோட போன்ல கிரியேட் பண்ணி, அதுல இருந்து உங்க அக்காவோட காண்டாக்ட் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன். நீ காலேஜ் முடிஞ்சதும் ஸ்டெல்லா கூட உன் ஹாஸ்டலுக்குப் போயிடு” என்றான்.

“பேச்சை மாத்தாதே அஜீத். நீ சொன்ன அட்வைஸ் எனக்குச் சரின்னு பட்டுச்சு, நான் அதைக் கேட்டுக்கிறேன். நீயும் யோசிச்சுப் பாரு.”

“பார்க்கலாம் ரத்னா.”

கல்லூரி முடிந்ததும் ரத்னா ஸ்டெல்லாவுடன் காரில் ஹாஸ்டல் சென்றுவிட, ஜஸ்வந்த் ரத்னாவிற்காக பார்க்கில் மாலை 6 மணி வரை காத்திருந்துவிட்டு, ரத்னா வராததால் ஏற்பட்ட கோபத்துடன் அடுத்த நாள் கல்லூரிக்கே வந்து காத்திருந்தான். 

வழக்கத்திற்கு மாறாக அன்று ரத்னா சீக்கிரம் வந்துவிட, அவள் அருகில் வந்த ஜஸ்வந்த், “நேத்து நீ ஏன் பார்க்கிற்கு வரல?” என்று கேட்டான்.

திடீரென்று தன் முன் நின்று கேள்வி கேட்ட ஜஸ்வந்தை எதிர்பார்க்காத ரத்னா, “நீங்க தானா? நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன். வலி இல்ல தான?” என்றாள்.

“ரத்னா, நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல.”

“ஜஸ்வந்த், நீங்க என்னை பார்க்கிற்கு வரச் சொன்னீங்க. ஆனா நான் உங்ககிட்ட வர்றேன்னு சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல.”

“உனக்கு உங்க அக்காவைப் பார்க்கணும்னு ஆசை இல்லையா?”

“கண்டிப்பா ஆசை இருக்கு. அதுக்காக எனக்குப் பிடிக்காததைச் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல.”

“உனக்கு என்கூடப் பேசப் பிடிக்கலையா?”

ரத்னாவிற்கு ஜஸ்வந்தின் கேள்வியில் உள்ளர்த்தம் புரியாமல், “எனக்கு உங்கூடப் பேசப் பிடிக்கலன்னு நான் சொல்லவே இல்ல. ஆனா நீங்க சொன்ன நேரத்தில, சொன்ன இடத்தில பேசப் பிடிக்கல” என்றாள்.

ரத்னா – ஜஸ்வந்த் உரையாடலைத் தூரத்திலிருந்து பார்த்த முத்து அவர்களின் அருகில் வந்து, “ரத்னா மா, ஏதாவது பிரச்சனையாமா?” என்று கேட்டான்.

“ஹாய் முத்து மச்சான்! நீங்க இருக்கும்போது உங்க மரிக்கொழுந்து கிட்ட யாராவது பிரச்சனை பண்ண முடியுமா? இவரு எனக்குத் தெரிஞ்சவருதான்” என்றாள் ரத்னா.

“ஓ அப்படியா!” 

ரத்னா தன்னிடம் மூன்றாம் நபரிடம் பேசுவது போலப் பேசிவிட்டு, முத்துவை ‘மச்சான்’ என்று அழைத்துச் சிரித்துப் பேசுவதைப் பார்த்து எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ரத்னா, நான் உன்கிட்ட தனியாப் பேசணும்” என்று ஜஸ்வந்த் வார்த்தைகளை அழுத்தத்துடன் கூறினான். 

அதில் ‘நீ இங்கிருந்து போ’ என்னும் செய்தி இருப்பதை உணர்ந்து கொண்ட முத்து, “ரத்னா மா, நான் அந்த மரத்தடியில இருக்கிற பெஞ்ச்லதான் இருப்பேன், ஏதாவது தேவைன்னா கூப்பிடுமா. பாய்” என்று கூறிச் சென்றுவிட்டான்.

“What is this ரத்னா? உனக்கு யாரும் செல்லமா கூப்பிட்டா பிடிக்காதுன்னு சொல்லுவே, இப்ப என்னடான்னா அவன் உன்னை ‘ரத்னாமா ரத்னாமா’ன்னு செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கான்? நீயும் கோபப்படாம ‘மச்சான்’னு சொல்லிச் சிரிச்சுப் பேசிட்டு இருக்க.”

“ஜஸ்வந்த், இதுல கோபப்பட என்ன இருக்கு? முத்து சீனியர் என்னை மட்டும் இல்ல, எல்லா பொண்ணுங்களுக்கும் மரியாதை கொடுத்து ‘வாம்மா, போம்மா’ன்னு தான் பேசுவார். அப்புறம் காலேஜ் வாழ்க்கையில மாமா, மாப்ள, மச்சான் என்று சொல்றது சாதாரண விஷயம்” என்று ரத்னா எதார்த்தமாகப் பேச, ஜஸ்வந்த் பேச்சு திசை மாறுவதை உணர்ந்தான்.

“ரத்னா, நான் உன் நல்லதுக்காகத்தான் சொன்னேன். It’s okay, leave it. நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணும். உன் பிரண்ட்ஸ் இருந்ததால ஹாஸ்பிட்டல்ல வச்சுப் பேச முடியல. உனக்கு பார்க்கிற்குத்தானே வர முடியாது? சோ, இன்னைக்கு ஈவினிங் உங்க காலேஜுக்கு வெளிய இருக்கிற காபி ஷாப்ல வச்சுப் பேசலாம். ஜஸ்ட் கொஞ்ச நேரம் ரதி… உன்கிட்ட பேசணும் என்கிற ஒரே காரணத்துக்காக எனக்கு இருக்கிற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வச்சுட்டு வந்திருக்கேன். நாளைக்கு ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணச் சிங்கப்பூர் போறேன். வர ஒரு வாரம் ஆகும். அப்புறம் வேலை ஆரம்பிச்சுட்டா ரெண்டு வருஷம் வர முடியாது” என்று ஜஸ்வந்த் தன் நிலையைத் கூறினான்.

ரத்னா, “சரி, ஆனா கொஞ்ச நேரம் தான். இப்போ க்ளாஸ்ற்குப் போகணும், பாய்” என்று விடை பெற்று முத்துவிடமும், “பாய் முத்து மச்சான்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

செல்லும் ரத்னாவைப் பார்த்துக் கொண்டு நின்ற ஜஸ்வந்த் அருகில் வந்த கார்த்திக், “ஜஸ்வந்த், நீ நாளைக்குச் சிங்கப்பூர் போகணும், உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றான்.

“ம்ம்…”

“என்னடா உனக்கு இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு ஒரு சின்னப் பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க? இந்த ரத்னா ஒன்னும் பேரழகி இல்ல, பின்ன எதுக்குடா?”

“Yes Karthik, I know she is not beautiful, her appearance will not tempt anyone. But I want her as mine.” (ஆம் கார்த்திக், அவள் அழகில்லை என்பதும், அவளது தோற்றம் யாரையும் கவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அவள் எனக்குச் சொந்தமாக வேண்டும்.)

“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியலடா. யூஸ் பண்ற எல்லாப் பொருளும் வேர்ல்ட் லெவல்ல இருக்கணும்னு நினைக்கிறவன் நீ, ஆனா இப்போ ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணை லவ் பண்ற. ஓகே, பட் இந்த காலேஜ்ல ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சா என் அப்பா என்னை வெட்டிப் புதைச்சுடுவாரு, பாத்துக்கோ.”

மதிய உணவு நேரத்தில் ரத்னா அஜீத்திடம் ஜஸ்வந்த் தன்னிடம் பேச விரும்புவதையும், தான் அதற்குச் சம்மதம் கூறிவிட்டதையும் கூறினாள். இடையில் பேச நினைத்த பிரபுவைப் பார்வையால் அடக்கிய அஜீத், ரத்னாவிடம்:

“ஓகே ரத்னா, நீ போய்ப் பேசு. நாங்க காலேஜ் கார்டன்ல வெயிட் பண்றோம். அப்புறம் உங்க அக்காவுக்கு ஃபேஸ்புக்ல உனக்கு நான் ஓபன் பண்ண அக்கவுண்ட்ல இருந்து ரிக்வஸ்ட் கொடுத்திருக்கேன். பார்த்துட்டா கால் பண்ணுவாங்க. சோ, என் போனை இன்னைக்கு நீ வச்சுக்கோ.”

“போன் உனக்கு வேண்டாமா?”

“இன்னைக்கு மட்டும் தான் உன்னை வச்சுக்கச் சொன்னேன். உங்க அக்காகிட்ட ஹாஸ்டல் நம்பர் கொடுத்திட்டுப் போனை நாளைக்குத் தந்திடு. எனக்கும் பிரச்சனை இல்லை. அப்புறம் உனக்கு போன் யூஸ் பண்ணத் தெரியுமா?”

“அது எல்லாம் தெரியும். என் அப்பா, பெரியப்பா, அண்ணா எல்லாரும் ஸ்மார்ட் போன் தான் வச்சிருக்காங்க. நான் அதுல தான் விளையாடுவேன். உன் போன்ல என்ன கேம் இருக்கு?”

“கேம் விளையாட நான் என்ன பாப்பாவா? அது எல்லாம் இல்ல. சரி, நீ ஸ்டெல்லா கூட கிளாஸிற்குப் போ, நாங்க பின்னாடி வரோம்.”

ரத்னா, ஸ்டெல்லா இருவரும் சென்ற பிறகு பிரபு அஜீத்திடம், “எதுக்குடா ரத்னா அந்த ஜஸ்வந்த் கிட்ட தனியாப் பேச ஒத்துக்கிட்ட?” என்று கேட்டான்.

“இதுல என்ன இருக்கு? அவங்க சொந்தக்காரங்க. ரத்னா யாரையாவது தனியாக அன்-டைமில்  மீட் பண்ணப் போனா தடுக்கலாம். இது காலேஜிற்கு பக்கத்துலதானே, பார்த்துக்கலாம். நீ இன்னொரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும், எந்த ஒரு ரிலேஷன்ஷிப்லயும் டாமினேஷன் இருக்கக் கூடாது. டாமினேஷன் இருந்தா அந்த உறவு உடைஞ்சுடும். நான் ரத்னாவை டாமினேட் பண்ண விரும்பல, புரொடெக்ட் பண்ணத்தான் விரும்புறேன். அவள் பாதுகாப்பாக இருந்தா, எனக்கு அது போதும். நானும் ரத்னா கூட காபி ஷாப்க்கு வர்றேன், ஓகேவா?”

மாலை காலேஜ் அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு ரத்னா அஜீத்துடன் வர, அவளுக்கு முன்பே காத்திருந்தான் ஜஸ்வந்த். அருகில் வந்ததும் அஜீத், “நீ பேசிட்டு வா, நான் வெளிய வெயிட் பண்றேன்” என்று கூறிச் சென்றான்.

அஜீத் வெளியேறியதும் ஜஸ்வந்த், “தேங்க்ஸ் ரத்னா, ஏமாத்தாம வந்ததுக்கு” என்றான்.

“என்கிட்ட என்ன சொல்லணும்? சீக்கிரம் சொல்லுங்க, என் பிரண்ட்ஸ் எனக்காகக் கார்டன்ல காத்துக்கிட்டு இருப்பாங்க.”

“நீ பாடிகார்ட்ஸ் இல்லாம என்கிட்ட பேச வர மாட்டியா ரத்னா?”

“இதைக் கேட்கத்தான் வரச் சொன்னீங்களா?”

“இல்ல. ரத்னா, நான் பேச வேண்டியதைப் பேசி முடிக்கிற வரை நீ இடையில பேசக் கூடாது, ஓகேவா?”

“ஓகே, சொல்லுங்க.”

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் ரத்னா. நாம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போதுல இருந்தே பிடிக்கும். உன்னை என்கூடவே வச்சுப் பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேன். பட், என்னுடைய ஆசையை என் அண்ணனும் புரிஞ்சுக்கல, நீயும் புரிஞ்சுக்கல. என்னுடைய ஞாபகமாவது உனக்கு இருக்கணும்னு வளையல் வாங்கித் தந்தேன் 

நீ மறுத்துட்ட. அப்போ நீ ஒரு காரணம் சொன்ன: ‘சம்பாதிக்கிறவங்க மட்டும்தான் செலவு பண்ணனும்னு. நீங்கதான் சம்பாதிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி எனக்குப் பரிசு வாங்கித் தரலாம்?’ இப்போ நான் சின்னப் பையன் இல்ல ரத்னா. என்னால உன்னைப் பார்த்துக்க முடியும். இப்போ நான் கோடிக்கணக்குல சம்பாதிக்கிறேன். 

என்னுடைய ஃபர்ஸ்ட் இன்கம்ல நான் வாங்குனது நீ மறுத்த அதே மாதிரி வளையல்தான். இந்த வளையலை உன் கையில ‘காதலன்’ என்கிற உரிமையோடவே போட்டு விடணும். நீ மறுத்த அந்த வளையலை நம்ம குழந்தைக்கு நீ போட்டு விடணும். உன்னை நான் மட்டும்தான் ‘ரதி பேபி’னு கூப்பிடணும். நீ சாயும் தோள் என்னுடையதா இருக்கணும். உனக்குப் பிடிச்ச முதல் நபர் நானா இருக்கணும். மொத்தத்தில் ரத்னா ஜஸ்வந்த் பக்கத்துல இருக்கணும், அதுவும் ஜஸ்வந்திற்காக இருக்கணும்” என ஜஸ்வந்த் தன் ஆறு வருட காத்திருப்பைக் வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட்டு, பதிலுக்காக ரத்னாவின் முகத்தைப் பார்த்தான்.

ரத்னாவோ இப்படி ஒன்றை நான் எதிர்பார்க்கவில்லை என்னும் விதத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top