ஒரு காலத்தில் இந்த ஒரு வார்த்தையை தினமும் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டவள் தான். ஏனோ சில சம்பவங்கள் அவளுடைய நினைவலைகளில் வந்து மகிழ்ச்சிக்கு பதில் கோபத்தையே விளைவித்தது.
அதன் விளைவு அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.
அவள் அறைந்ததில் அவனது கன்னம் தகதகவென்று எரிந்தது. அதன் விளைவே அவனுக்கு இவ்வளவு நேரம் தான் செய்திருந்த காரியம் புரிந்தது.
அவன் அதற்காகவெல்லாம் வருத்தப்படுபவனில்லையே. அதற்காக அவள் அறைந்ததை அவன் வாங்கி கொண்டு அமைதியாய் சென்று விடும் ரகமும் இல்லையே…
உடனே அவளையும் அறைந்திருந்தான்.
ஆடவனுடைய அடியில் பால் போல் வெளிறி இருந்த அவளது கன்னம் சிவந்து விட்டது. அதே சமயம் அந்த வலியில் அவளது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய நின்றது. ஆனால் அதை இமை தட்டி மறைத்து அவனை முறைந்து பார்த்தாள்.
“இங்க பாரு… நான் உன்ன லவ் பண்றேனு சொன்னேன். அதுக்கு ஒன்னு ஆமானு சொல்லி இருக்கனும் அப்படி இல்லனா விருப்பம் இல்லனு சொல்லி இருக்கனும்… ஆனா ரெண்டுமே இல்லாம என்னை அடிச்சுட்ட… அதான் கோபம் வந்துருச்சு… நானும் திருப்பி அடிச்சுட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடுனு மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்… உனக்கு குழந்தை இருக்கு… கல்யாணம் ஆகிடுச்சோனு நினைச்சு தான் இத்தனை நாள் ஒதுங்கி இருந்தேன். ஆனா இப்ப உன் வாயாலயே உனக்கு கல்யாணம் ஆகலைனு வாக்கு மூலம் கொடுத்துட்ட… சோ… நானும் என்னோட காதலை சொல்லிட்டேன்… அவ்வளவு தான்… இதுக்கு மேல நீ என்னை வேலைய விட்டு நீக்கினாலும் பரவாயில்ல… அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்… இதுக்கு முன்னாடி உன் வாழ்க்கையில என்ன வேணா நடந்திருக்கலாம். அத பத்தி எனக்கு கவலை இல்ல… ஆனா இனி உன் வாழ்க்கை என்னோட தான்… எல்லாத்துக்கும் ரெடியா இரு பேபி… ஹா… இல்ல இல்ல ஜலஜா…” என்றவன் அவளது கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக கைகளில் பூவை திணித்து, “ஐ லவ் யூ…” என்றான்.
அதைக்கேட்டு அவளது உள்ளம் எரிமலை போல் குமுறியது.
அந்த அறையிலிருந்து வெளியே வந்த ஆதீரனோ நேராக சென்றது தனது நண்பனிடம் தான்.
“மாதேஷ்… மாதேஷ்… டேய்…” என்று அவன் கத்தியதில் கிட்டத்தட்ட அலுவலகத்திலிருந்த அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர்…
“டேய்… எதுக்கு இப்ப என் பேர ஏலம் விட்டுட்டே வர்ற?”
“டேய்… நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”
கணிணியின் திரையை பார்த்து கொண்டே, “எதுக்கு இப்படி ஒரு சந்தோஷம்…” என்றான்.
“அது… அது…” என்றவனுக்கு தற்பொழுது தான் அவனிடம் இதுவரை அவனது காதல் மனதை வெளிக்காட்டவில்லை என்பதே தெரிந்தது…
“அன்று ஐஸ்கிரீம் கடையில் வைத்து பார்த்தற்கே ஏதோ பெரிய தவறு செய்தது போல் என் மேல் அவ்வளவு கோபப்பட்டவன். இன்று அவளை காதலிப்பதாக கூறினால் என்ன சொல்வானோ… ம்ப்ச்… பரவாயில்லை அதான் தற்பொழுது அவளுக்கு திருமணமாகவில்லை என்பது தெரிந்து விட்டதே இனி இதில் கோபபட ஏதுமில்லையே…” என்று தனது மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டிருந்தான்.
“டேய்… எதுக்கு இப்ப என்னை கூவிட்டே வந்த… இப்ப என்னடானா பேசாம நீ நின்னுட்டு இருக்க…”
“அது… இன்னைக்கு ஈவினிங்க் நம்ம வெளிய போய் பேசலாம்…”
“பரவாயில்ல… இப்பவே சொல்லு…”
“அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது… சாயங்காலம் வெளியே போய் பேசலாம்… இப்ப நீ உன் வேலைய பாரு… நான் என் வேலைய பார்க்க போறேன்…” என்றவன் துள்ளிக்குதித்து சென்றான்.
அவன் போகும் திசையையே பார்த்து கொண்டிருந்த மாதேஷிற்கு “எதற்கு இவன் இவ்வளவு சந்தோஷப்பட்டு குதிச்சுட்டு போறான்… சரி அதான் ஈவினிங்க் தெரிஞ்சுடுமே… பார்க்கலாம்… என்ன சொல்றானு…” என்றவன் தனது வேலையை தொடர்ந்தான்.
இங்கே அறைக்குள் துள்ளலுடன் நுழைந்த ஆதியை பார்த்த சதாசிவமோ “என்ன ஆதி எங்க போய்ட்டு வர்ற?” என்றார்.
“அது… நீலாம்பரி மேடம் கூப்பிட்டுருந்தாங்க… அதான் அவங்க ரூமுக்கு போய்ட்டு வந்தேன்.”
“ஓ… என்ன சொன்னாங்க மேடம்…”
“வேலை எல்லாம் எப்படி போகுது… உங்க ஹெல்த் இப்ப ஒகேவானு கேட்டாங்க சார்… வேற ஒன்னும் கேட்கல…”
அவன் கூறியதை புருவம் சுருக்கி பார்த்தார்.
“ஓ… ரியலி… ஒகே உங்க வேலையை கன்டினியூ பண்ணுங்க…”
மேற்கொண்டு அவனும் வேறு ஏதும் பேசாமல் அவனது வேலையை கவனிக்க சென்று விட்டான்.
ஆனால் அவனது முகத்தில் தெரிந்த துள்ளலும் சந்தோசமும் சதாசிவத்திற்கு தெரியாமல் இல்லை. ஆனால் அதற்கான காரணத்தை அவர் அறிந்து கொள்ள முயலவுமில்லை. என்னவாக இருந்தாலும் முடிவு தமக்கு தெரியாமல் போய் விடுமா? என்ற நினைவில் நின்று விட்டார்.
காதலை சொன்ன ஒருவனோ மிக சந்தோசமாக இருக்க அவன் யாரிடம் கூறினானோ அவளோ கோபம், கவலை, குழப்பம் என்று பல்வேறு மனநிலையில் இருந்தாள். அவளுக்கு என்ன தேவை என்பதை அவள் அறியவில்லை.
அவளது நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்றது.
ஆதிரன் இளநிலை படித்து கொண்டிருக்கும் பொழுது அவனது தந்தை இறந்து விட்டார். அவர் இறக்கும் பொழுது தான் ஆதி இளநிலை படிப்பிற்கான கடைசி தேர்வை எழுதி இருந்தான். மூவருக்கும் ஓர் ஆண்டு இடைவெளி தான். அனிதா பள்ளி படிப்புடன் முடித்து விட்டவள் அதன் பிறகு கல்லூரி எல்லாம் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டாள்.
அபினவ்வோ அப்பொழுது தான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தான்.
அவனது தந்தையின் இழப்பு ஆதிக்கு பெரும் கவலையை உண்டு பண்ணியது.
அவனுடைய வாழ்க்கையில் லட்சியமே கணக்காளராக வேண்டும் என்பது தான். அதற்காகவே இளநிலை வர்த்தக படிப்பில் சேர்ந்தான். கல்லூரி படிக்கும் பொழுது கோகுலத்து கண்ணனாகவே வலம் வந்தான்.
எப்பொழுதும் நண்பர்களுடன் அரட்டை, அவர்களுடன் சினிமா, கேளிக்கை விருந்து என்று இருப்பான். அவன் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதனாலயே அவனை மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு.
என்ன தான் வருடம் முழுவதும் இப்படி சந்தோஷமாக இருந்தாலும் தேர்வு நேரத்தின் பொழுது மிக கவனமாக படித்து முதல் மாணவனாக வந்து விடுவான்.
கணக்காளருக்கு படிக்க வேண்டும் என்றால் முழு நேரமும் அதை மட்டுமே எண்ணி இருக்க வேண்டும். என்ன தான் நன்றாக படித்தாலும் வீட்டில் இருப்பவர்களின் துணையும் வேண்டும்…
தந்தை இறந்திருக்க எப்படி இந்த படிப்பை படிக்க முடியும். ஆனால் தனது அன்னையிடம் பேசி பார்க்க வேண்டும் எப்படியாவது அவர்களது கால்களில் விழுந்தாவது படித்து விட வேண்டும் என்ற முனையத்தில் அன்னையிடம் பேசினான்.
முதலில் முடியவே முடியாது என்று மறுத்தார்கள் ஆனால் அவனோ விடாப்பிடியாக இந்த படிப்பின் முக்கியத்துவம், படித்து முடித்த பிறகு அந்த வேலைக்கான சம்பளத்தை கூறவும் தான் ஒத்துக்கொண்டார்.
வேலை செய்ய செய்ய படிக்கலாம் தான் ஆனாலும் அதற்கென்று தனியாக உள்ள பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தால் விரைவாக படித்து முடித்து வேலைக்கு சென்று விடலாம். ஒரு இரண்டு வருடங்கள் மட்டும் பொறுத்து கொண்டால் போதும் அதன் பிறகு நமது வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் உயர்ந்து விடும். என்று பலவாறு அவனது அன்னையை சமாதானப்படுத்திய பிறகு தான் ஒத்துக்கொண்டாள்.
ஆதியோ அதன் பிறகு காலம் தாழ்த்தினால் எங்கே தனது அன்னை மனம் மாறி விடுவாரோ என்று எண்ணி பயிற்சி பள்ளியில் சேர்ந்தான். மாதேஷிற்கு அதன் பிறகு படிக்க விருப்பமில்லாமல் இருந்ததால் அவன் படிக்க வரவில்லை.
எங்கு சென்றாலும் ஆதி கோகுலத்தின் கண்ணனாக தான் திகழ்ந்தான். ஆனாலும் வாழ்வின் லட்சியமான சி ஏவை முடிக்க வேணடும் என்பதில் தீர்மானத்துடன் இருந்ததால் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு படித்து கொண்டிருந்தான்.
அங்கு ஆதி சேர்ந்து முற்று முழுதாக ஒரு வருடம் கழித்து அங்கு படிக்க சேர்ந்தவள் நீலாம்பரி.
தனது தந்தையின் கம்பெனியின் முழுப்பொறுப்பை கையிலெடுத்துக்கவும், அந்த வேலையின் மீது இருந்த ஆர்வத்தினால் தான் அங்கு சேர்ந்தாள்.
அங்கு நீலாம்பரி சேர்ந்ததிலிருந்து எந்த பெண்ணின் வாயிலிருந்தும் வந்தது ஆதீரன் என்பது தான்.
பெண்களிடம் பேசி அவர்களை மயக்குவதில் ஆதீ பி.ஹெச் டி முடித்தவன் என்பது உலகறிந்த விசயம்.
எந்த ஒரு சந்தேகம் என்றாலும் “ஏய் ஆதி கிட்ட கேளுங்க… அவன் உடனே தீர்த்து வச்சுடுவான்…” என்று பெண்கள் கூற கேட்க கேட்க நீலாம்பரிக்கு அவனை பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது.
ஆனால் இருவரின் சந்திப்பும் மோதலில் தான் ஆரம்பித்தது.
ஒரு நாள் நீலா தனது வண்டியை கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றாள். அதே சமயம் ஆதீயும் அவளது வண்டியின் அருகேயே தனது வண்டியை நிறுத்த வரும் பொழுது தன்னுடன் படிக்கும் ஒரு பெண் தோழி ஒருத்தியையும் அழைத்து கொண்டு வந்தான. ஏதோ அந்த பெண் கேட்க அவனும் திரும்பி பதில் அளிக்க நினைக்கையில் நீலாம்பரியின் வண்டியில் பின்பக்கத்தில் நேராக வந்து தனது வண்டியை மோதினான் ஆதி.
வண்டியின் பின்பக்கம் இருந்த பகுதிக்கு கொஞ்சம் சேதாரம் ஆகிவிட்டது. அவன் மோதியதில் சிறு சப்தம் எழுப்ப அப்பொழுது தான் அங்கே நிறுத்தி விட்ட சென்ற நீலாம்பரியின் செவிகளுக்கு அந்த சப்தம் தெளிவாக கேட்க அவள் திரும்பி பார்த்தாள்.
இடித்த ஆதியோ வண்டியை விட்டு கீழிறங்கி அந்த வண்டியை ஆராய்ந்தான்.
“என்ன ஆதி… இப்படி மோதிட்ட… இது நீலாம்பரியோட வண்டி… அவளுக்கு கொஞ்சம் இல்ல அதிகமாவே கோபம் வரும்…” என்று ஆதியின் பின்னே அமர்ந்திருந்த பெண்.
“அவங்கவங்க வண்டி மேல இடிச்சா கோபப்பட தான் செய்வாங்க… சரி விடு… நான் இதுக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அதை கொடுத்துடறேன்…” என்று சமாதானம் பேசி கொண்டிருந்தான்.
அதற்குள் அங்கே வந்த நீலாம்பரியோ தனது வண்டியை பார்த்து விட்டு, “ஏய் கொஞ்சம் கூட அறிவில்லை… கண்ண முன்னாடி வச்சுட்டு தானே ஒட்டுற… பின்னாடி பொண்ணு உட்கார்ந்து கூட்டிட்டு வந்தா முன்னாடி என்ன இருக்குதுனு மறந்துடுவீங்களோ…” என்றாள்.
அதை கேட்ட ஆதீக்கோ இவ்வளவு நேரம் அந்த வண்டிக்காரரின் மீதிருந்த இளக்கம் மாறி கோபம் வந்தது.
“இது உன்னோட வண்டியா?”
“அப்புறம் அடுத்தவங்க வண்டிக்கா நான் சண்டை போடுவேன்…”
“அதானே… பொண்ணுங்க எப்பவும் சுயநலவாதிக தானே…”
“ஏய்… நான் பேசினா நீ என்னை பத்தி மட்டும் பேசு… சும்மா பொதுவா பொண்ணுங்கனு சொல்லாத…”
“ஆமா… ஆமா… எல்லா பொண்ணுகளை பத்தி சொன்னதும் தப்பு தான்… உன்னை மாதிரி யாரும் பஜாரித்தனமா இப்படி சண்டை போட மாட்டாங்க…”
“ஏய்… முதல்ல சுயநலவாதினு சொன்ன இப்ப பஜாரிங்குற… என்ன நினைச்சுட்டு இப்படி பேசிட்டு இருக்க…”
அப்பொழுது அவன் பின்னே அமர்ந்து வந்த அந்த பெண்ணோ, “ஆதி சண்டை எல்லாம் வேண்டாம்… நீலா ஆதி தான் இத சரி பண்றதுக்கான காச தந்துடறேனு சொன்னார்.” என்று கூறினாள்.
“ஓ… இவர் தான் எப்பொழுதும் பெண்கள் புடை சூழ இருக்கும் ஆதியா? உனக்கு யாரு ஆதீனு பேர் வச்சது அதுக்கு பதிலா கண்ணனு பேர் வச்சுருக்க வேண்டியது தானே… எப்ப பார்த்தாலும் எந்த பொண்ணு வாய் திறந்தாலும் ஆதி… ஆதி… ஆதீ… தான்… படிப்புல சந்தேகமா ஆதிய கேளு… மேக்கப் நல்லா இருக்கா ஆதிய கேளு… கரெக்டா பதில் சொல்வான்… எக்ஸாம் எப்ப ஆதிய கேளு.. எல்லாத்துக்கும் ஆதிங்கற பெயர் தான் வருது… அப்படி என்ன தான் சொக்குப்பொடி போட்டு வச்சயோ…” என்று இத்தனை நாள் அவனை பற்றிய மனதிற்குள் ஏற்பட்ட ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்.
அவளின் மேல் முதலில் கோபம் இருந்தாலும் ஏனோ தன்னை பற்றி பேச பேச ஆதீக்கு அவளின் மேல் ஒரு சுவாரஸ்யம் பிறந்தது.
“இப்ப இவ என்ன அவ வண்டிய டேமேஜ் பண்ணினதுக்கு கோபப்படாம இப்படி நான் பொண்ணுக கூட பேசறதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கா? இப்ப இவளுக்கு என்ன பிரச்சனை?” என்று மனதிற்குள் பேசி கொண்டே அவளை பார்த்தான்.
“ஏய்… என்ன என்னை பார்த்துட்டே இருக்க?”
“ம்… இப்ப உனக்கு என்ன பிரச்சனை உன் வண்டியை இடிச்சதுக்கா, இல்ல நான் பொண்ணுக கூட பேசறதா?”
அவளோ தன்னையறியாமலேயே அவனுக்கு ஏதோ புரிய வைத்து கொண்டிருந்தாள் அவளது ஆழ்மனதில் ஆதியின் மீதான ஈர்ப்பை… அதற்கேற்றார் போல் இருந்தது அவளது பேச்சு…
“ரெண்டுக்கும் தான்…”
“முதல்ல சொன்னதுக்கு கோபப்பட்டா சரி தான்… ஆனா ரெண்டாவதுக்கு கோபப்பட்டா சம்திங்… சம்திங்… தான்…
“சம்திங்கா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… ஒழுங்கா என்னோட வண்டிய டேமேஜ் பண்ணினதுக்கு காசு கொடு…”
“தந்திடலாமே… தாராளமா தந்திடலாம்…. ஆனா பாரு… உங்க அப்பா வசதியானவர் மாதிரி தெரியுது..”
“அதுக்காக… தரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டயா?”
“ச்சா… ச்ச.. யாரோட காசும் எனக்கு வேண்டாம்… நீயும் இங்க தான் படிக்குற.. நானும் இங்க தான் படிக்குறேன்.. அதனால டெய்லியும் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தடறேன்….” என்றான்.
அவளோ யோசித்து விட்டு சரி என்று கூறினாள்.
“சரி… அப்ப நாளைல இருந்து பார்க்கலாம்…” என்று கூறிவிட்டு ஆதி கிளம்பினான்.
தினமும் அவன் இவளிடம் வந்து சிறிது சிறிதாக பணம் கொடுத்து கொண்டிருந்தான்.
நீலாம்பரி அவனுக்கு ஏதோ தண்டனை கொடுப்பது போல் பார்த்து கொண்டிருக்க அவனுக்கோ அவளிடம் பழகுவது மிக சுவாரஸ்யமாக இருந்தது.
இவ்வாறு அவர்களின் பேச்சு வார்த்தை சிறிது சிறிதாக நட்பாக மாறியது. அவளும் அவளை அறியாமல் அவனிடம் நட்பு வளர்க்க ஆரம்பித்திருந்தாள்.
அவளிற்கு பாடத்தில் என்ன சந்தேகம் இருந்தாலும் அதை அவளுக்கு எடுத்துரைத்து அவளது சந்தேகத்தை தீர்த்தான்.
ஆதீ மற்ற பெண்களிடம் பேசுவது வெகுவாக குறைந்திருந்தது.
தினமும் இருவரும் சந்திப்பதற்காகவே அங்கு வந்தனர்.
ஆதிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் மேல் உள்ளது சாதரணமாக மற்ற பெண்களிடம் பழகுவது போல் உள்ள ஓரு ஈர்ப்பு என்பதை தாண்டி அவளிடம் தான் முதன் முதலில் காதல் என்ற உணர்வை அடைந்தான்.
அவளை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் துடித்து விடுவான்.
அத்தோடு அவளுடன் செலவளிக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ பொக்கிஷம் போல இனிய நினைவுகளாக மாறியிருந்தது அவனுக்கு.
தினமும் வீட்டிற்கு சென்றவுடன் அவளுடன் இன்று என்ன பேசினோம், அவளுடைய சின்ன சின்ன செய்கைகள் என அனைத்தையும் நினைவுபடுத்தி சிரித்து கொண்டிருப்பான்.
ஒரு நாள் நீலாம்பரியுடன் படிக்கும் பெண் ஒருத்தி அவளுடைய மனதை அவளுக்கு தெளிவுபடுத்தினாள்.
“என்னடி… இப்ப எல்லாம் ஆதியும் நீயும் ரொம்ப க்ளோஸா இருக்கற மாதிரி தெரியுது?”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்ல… அவன் என்ன மத்த பொண்ணுக கூட பேசாத மாதிரி சொல்ற?”
“மத்த பொண்ணுக கூட பேசறான்… ஆனா முன்ன மாதிரி இல்ல… அவன் இங்க வந்த உடனே முதல்ல நீ எங்க இருக்கனு தேடி கண்டு பிடிச்சு அங்க வந்து பேசிட்டு இருக்கான். ரொம்ப நேரமா பேசறீங்களே அப்படி என்னடி பேசறீங்க? கிளாஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியும் சரி முடிஞ்ச பின்னாடியும் சரி அவன் வந்து பேசாம போறது இல்ல… மேடமும் அவனுக்காகவே காத்திருக்கறது போல ஆதி முகத்தை பார்த்தா மட்டும் தான் ஏதோ பல்பு எரியறது போல பிரகாசமாகுது. என்னடி நடக்குது ரெண்டு பேத்துக்குள்ளயும்? ஒன்னுமில்ல ரெண்டு பேரும் சும்மா நண்பர்களா தான் பேசிட்டு இருக்கோம்னு பொய் சொல்லாத… ஏனா இன்ஸ்டிடியூட் முழுக்க உங்க பேச்சு தான் போய்கிட்டு இருக்கு… சில பொண்ணுகளுக்கு உன்ன பார்த்தா கொஞ்சம் பொறாமையா கூட இருக்குதாம்… அப்படி என்ன உங்கிட்ட இருக்குதுனு அவன் உன்னையே சுத்தி சுத்தி வர்றானு எல்லாம் பேசிக்கறாளுக…” என்று அவள் கூறி சென்றதில் இருந்து அவனின் நினைவாகவே இருந்தாள்.
மறுநாள் முதல் அவள் அவனை கவனிக்க ஆரம்பித்திருந்தாள். இவளை சந்திக்கும் முன்பு வரை தினமும் யாராவது ஒருவரை தன்னுடைய வண்டியில் கூட்டி கொண்டு வருவான். அவளுடன் பழக ஆரம்பித்த சில நாட்களில் கூட இது தொடர்ந்து இருக்கின்றது அவளும் அவனை கவனித்து கொண்டு தான் இருந்தான்.
ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி ஏதும் செய்வது இல்லை. தனித்து வருகிறான். அவ்வாறு வந்த பின்பு கூட அவன் முதலில் வருவது அவளை தேடி தான். பிறகு வகுப்பு முடிந்த பின்பும் கூட அவளுடன் சிறிது நேரம் செலவிட்ட பின்பு தான் செல்கிறான்.
அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? ஒரு வேளை அவன் என்னை லவ் பண்றானோ? ஆனா எப்படி இவனோட காதலை எல்லாம் ஏத்துக்கறது? இவனே ஒரு ப்ளே பாய் ரேஞ்சுக்கு சுத்திட்டு இருந்தவன் தானே… என்று தனது மனதிற்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
“அவன் ஏதோ காதலை சொன்ன மாதிரி உனக்கு ஏன் இப்படி ஒரு நினைப்பு? அப்படி அவன் வந்து சொன்னாலும் நீ என்ன ஒகே சொல்லிடுவயா?” என்று அவளது மனசாட்சி திருப்பி அவளிடம் கேட்டு கேலி செய்தது…
அவளது மனசாட்சி கூறிய அனைத்தும் உண்மையாகும் நாளும் வந்தது ஒரு நாள்.