ஒவ்வொரு நாளும் நீலாம்பரியின் மேலுள்ள காதல் அவனது மனதிற்குள் வலுப்பெற்றிருக்க இன்று எப்படியாவது அவளிடம் தனது காதலை உரைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மிக துள்ளலாக சென்றான்.
விரைவாக படிக்கும் இடத்திற்கு சென்றவன் அவள் படித்து கொண்டிருக்கும் அறை நோக்கி சென்றான். அங்கு அவள் வகுப்பறையில் படித்து கொண்டிருக்க இவன் வெளியே நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
யாரோ தன்னை உற்று நோக்குவதை போல் இருக்க சுற்று முற்றும் பார்த்தாள். அவளது பார்வையை எதிர்பார்த்து காத்திருப்பவன் போல அவளது பார்வை தன் மேல் விழுந்தவுடன் கை அசைத்து “ஹாய்…” என்றான்.
அவளும் சிரித்து கொண்டே “ஹாய்…” என்று உதடசைத்து கூறினாள்.
“இப்ப தான் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காங்க… நீ போ…” என்று வாயசைத்து சத்தம் வராமல் கூறினாள்.
ஆனால் அவனோ தலையை இட வலமாக ஆட்டி முடியாது என்று கூறினான்.
அவனை பார்த்து முறைத்த நீலாம்பரியோ “போ..” எனும் விதமாக கை அசைத்தாள்.
அப்பொழுதும் அவன் முடியாது என்று கூறும் விதமாக தலையசைத்தானே தவிர அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவனுடைய பார்வையும் செய்கையும் இன்று ஏதோ புது விதமாக தோன்றியது நீலாம்பரிக்கு…
அவனுடைய பார்வை அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை உண்டு பண்ணியது. அவனது பார்வை தந்த அந்த உணர்வினாலயே அவளால் அந்த பாடத்தை கவனிக்க முடியாது போனது.
நிமிடத்திற்கு நிமிடம் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்து கொண்டே இருக்க அவளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தவரிடம் சொல்லி கொண்டு வெளியேறினாள்.
நேராக அவனின் முன்பு வந்து நின்று அவனை பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளின் கோபம் எதற்காக என்று அறிந்தாலும் ஏதையும் கண்டு கொள்ளாமல் சிரித்த முகமாகவே இருந்தான்.
அவனின் சிரிப்பை கண்டவளுக்கு கோபம் வர “ஏய்… லூசா நீ… இங்க வந்து என்னையே பார்த்துகிட்டு ஏன் நிக்கற?” என்றாள்.
“ஏன் நான் உன்னை பார்க்க கூடாதா? இத்தனை நாள் உன்னை பார்த்துட்டு தானே இருந்தேன்.”
“இத்தனை நாள் நீ என்னை பார்க்கறதுக்கும் இன்னைக்கு நீ என்னை பார்க்கறதுக்கும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது…”
“அப்படியா… எனக்கு அப்படி ஒன்னும் தோணலயே…”
“அப்புறம் எதுக்கு நீ கிளாஸ்க்கு போகாம இங்க நின்னுட்டு இருக்க…”
“ம்… உங்க பேட்ச்சுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துருக்குனு சொன்னாங்க.. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…”
அவனை மறுபடியும் முறைத்து பார்த்தவளோ “அப்படி எல்லாம் யாரும் வரல…” என்றாள்.
“எனக்கு கிடைச்ச நியூஸ் படி இன்னைக்கு வர்ராங்கனு சொன்னாங்க… அதான் அந்த பொண்ணாவது ஏதாவது தேறுமா என்னனு பார்க்க வந்தேன்..” என்று அவளை தாண்டி அவனது பார்வை அவளது வகுப்பிற்குள் அலைபாய்ந்து கொண்டே பக்கவாட்டில் அவளது முகம் போகும் போக்கை பார்த்து கொண்டே நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“இங்க பாரு எவளையாவது பார்க்கனும்னா வெளிய வருவாங்கல்ல அப்ப பாரு… அத விட்டுட்டு இங்க நின்னு என்னையே பார்த்துட்டு இருக்காத…”
“இப்பவும் சொல்றேன் உன்ன பார்க்க வரல…” என்று அவன் கூற அவனது பேச்சில் அவளது கோபம் பெருகியது.
“போடா…” என்று கூறி விட்டு அவனை கடந்து சென்று விட்டாள்.
செல்லும் அவளை சிரிப்புடன் பார்த்தவன் அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்திருந்தான்.
வெளியே அவளது வண்டி நிறுத்துமிடத்திற்கு சென்றவளை கை பிடித்து நிறுத்தியவன் “கொஞ்சம் வெளிய போகனும் வா…” என்றான்.
“இது என்ன புதுசா இருக்கு…. நானெல்லாம் எங்கேயும் வரல…”
“இனி இப்படி தான் அடிக்கடி நடக்கும்… இப்ப இருந்தே பழகிக்கோ…” என்றவன் அவளது கைப்பிடித்து அவனது வாகனம் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
வண்டியை எடுத்தவன் அவளை அமருமாறு பார்வையாலயே கூறினான். அவளோ சலித்து கொண்டே அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். அவனும் வண்டியை எடுத்து கொண்டு காபி ஷாப்பிற்கு சென்றான்.
அங்கு வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்து அமர்ந்த பின்பு “காஃபி ஒகேவா…” என்றான்.
“ம்… அதுக்கு முன்னாடி எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த சொல்லு…” என்றாள்.
“இரு சொல்றேன்…” என்றவன் அங்கிருந்தவரை அழைத்து இரு காபி கொண்டு வருமாறு பணித்தான்.
வெளியே அவள் ஏதும் நடவாதது போல் காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு விதமான பதற்றம் இருந்தது… மனது படபடவென்று அடித்து கொண்டது. இதயத்துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாவதை போல் உணர்ந்தாள் அவன் என்ன கூறுவானோ என்று நினைத்து கொண்டு.
அவனுக்குள் அதை விட பதற்றம் இருந்தது. எப்படியாவது சொல்ல வேண்டும் என்று வந்துவிட்டான் ஆனால் அதை அவள் எப்படி எடுத்து கொள்வாள் என்ற எண்ணம் அவனுக்கு. செய் அல்லது செத்துமடி என்று எதற்கோ யாரோ கூறியது அந்த நிமிடம் அவனது நினைவுக்கு வர தன்னுள் மறைத்து வைத்திருந்த ஒரு ரோஜா மலரை அவளின் முன்பு நீட்டி “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.
அவள் எதை எதிர்பார்த்திருந்தாளோ அந்த தருணம் வந்து விட்டது. அவளது இதயத்துடிப்பு பல மடங்கு எகிறியது. அவனது இந்த கேள்விக்கு என்ன பதில் கூற போகிறேன்… என்று மனதிற்குள் தன்னையே அவள் கேட்டு கொண்டாள்.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி கொண்டிருந்தவள் தான் ஆனால் அந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று அவளுக்கு உண்மையில் தெரியவில்லை.
எதையோ கண்டு அஞ்சி கொண்டிருந்தவள் போல அவளது முகம் வெளித்திருக்க அதை கண்டவன் அவளது மனதில் என்ன ஓடி கொண்டிருக்கிறது என்று தெரியாமல் அதை அறிந்து கொள்வதற்காக மறுபடியும் வாய் திறந்தான்.
“ஹேய்… என்ன நீலா ஆச்சு… உன் மனசுல என்ன ஒடிட்டு இருக்குனு சத்தியமா எனக்கு தெரியல… ப்ளீஸ் எதா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு… நான் இதுவரைக்கும் எல்லா பொண்ணுக கூடவும் ஜாலியா பேசிட்டு இருப்பேனே தவிர அவங்க யார்கிட்டயும் வரம்பு மீறி பழகனது இல்ல. அதுவும் உன் கூட பேசி பழகுன பின்னாடி எல்லா பொண்ணுக கூடயும் பேசறது கூட நான் விட்டுட்டேன்… என்னை இந்த விசயத்துல நீ நம்பி தான் ஆகனும்..” என்பது போல் எங்கே தனது பழைய விசயங்களை பேசி அதற்காக மறுத்து விடுவாளோ என்று தோன்றியவுடன் படபடப்பாக தனக்குள் நடந்த மாற்றத்தை அவளிடம் தெளிவு படுத்தினான்.
இது எல்லாம் அவள் முன்னேயே அவனை கவனித்து அறிந்திருந்ததால் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்று கூறினாள்.
“ப்ளீஸ் நீலா… எங்கிட்ட ஏதாவது தப்பு இருந்தாலும் அதை சொல்லிடு நான் மாத்திக்குறேன்… நீ எவ்வளவு நாள் வேணாலும் எடுத்துக்கோ… நல்லா யோசி.. ஆனா நோ மட்டும் சொல்லிடாத…” என்று தனது காதலின் தவிப்பை அவளிடம் வார்த்தைகளில் வெளிப்படுத்தி கொண்டிருந்தான்.
அவனின் தவிப்பை நன்கு உள்வாங்கி கொண்டவளோ “சரி…” என்று கூறினாள்.
அதன் பின்பு ஒரு கணத்த அமைதி மட்டுமே நிலவியது. இதற்கிடையே அவர்களுக்கான காபியை அருந்தியவர்கள் எழுந்து வெளியே வர அவளின் முன்பு மறுபடியும் அந்த ரோஜாவை நீட்டினான். அதை மறுக்காமல் வாங்கி கொண்டவளை மறுபடியும் அழைத்து சென்று இன்ஷ்டிடியூட்லயே கொண்டு போய் விட்டான்.
அவர்கள் இருவரையும் இரு ஜோடி கண்கள் தொடர்ந்ததை இருவருமே அறியவில்லை.
வீடு வந்த பிறகும் நீலாம்பரி பல முறை யோசித்தாள். அவனை வேண்டாம் என்பதற்கான காரணம் எதுவுமே இல்லாததால் சில நாட்களிலேயே அவள் அவனுடைய காதலிற்கு பச்சை கொடி காட்ட அவர்களின் காதல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வந்தது. அவர்களின் காதல் அந்த இன்ஷ்டிடியூட் முழுவதும் பரவியது.
அதே போல் இருவருக்கும் அவர்கள் படிக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருக்க அதற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஆதி அவனது படிப்பின் இறுதி நிலையை எட்டியிருக்க நீலாம்பரியோ அதில் முதல் நிலையை மட்டுமே கடந்திருந்தாள். எப்படியும் வரவிருக்கும் இறுதி நிலை தேர்வில் வெற்றி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் அதன் பிறகு அனிதாவை திருமணம் செய்து கொடுத்து விட்டு பின்பு நீலாம்பரியின் வீட்டிற்கு சென்று பேச வேண்டும் என்று அவனது எண்ணம் எதிர்கால திட்டமிடலில் இருந்தது.
படிப்பு முடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் மட்டுமே நிறைவேறி இருந்தது. ஒரு நாள் திடீரென்று நீலாம்பரி ஒரு மருத்துவமனைக்கு வருமாறு அழைக்க, “அவன் என்ன அவசரம்னு தெரியல ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்றா…” என்று அவனது எண்ணம் முழுவதும் அவளிடமே நிலைத்திருக்க ஏதிரே வந்து கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது மோத லாரியும் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ஆதியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆதி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தான். தலையில் பலத்த அடிபட்டு தலையிலிருந்து ரத்தம் வழிய சாலையில் கிடந்தவனை அருகே இருந்தவர்கள் ஆம்புலன்சிற்கு அழைத்து சொல்ல அடுத்த சில மணி நேரங்களில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
இங்கே அவனை காண ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்த விழிகளில் கண்ணீர் வழிந்தபடியே மருத்துவமனையின் வாசலை பார்த்து கொண்டிருந்தாள் நீலாம்பரி அவனின் நிலை தெரியாமல்.
அதன் பின்பு அவன் கோமா நிலைக்கு சென்றதெல்லாம் அவள் அறியவில்லை. அவளை பொறுத்தவரை ஆதி தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டான் என்பது மட்டுமே. ஏனோ அதன் பிறகு அவனை பற்றி தெரிந்து கொள்ள முயலவில்லை. அப்படி சென்று எதற்காக அவனிடம் நியாயம் கேட்க வேண்டும். அப்படி ஒரு தேவையும் இல்லை. ஆனால் வாழ்வில் என்றாவது ஒரு நாள் அவனை சந்திப்பேன். அன்று தான் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் சேர்த்து வைத்து அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளுள் ஆழமாக புதைந்திருந்தது.
முதன் முதலில் தன்னுடைய அலுவலகத்தில் வேலைக்கான நேர்முக காணலுக்கு வந்திருந்த பொழுது பெரிதும் அதிர்ச்சி அடைந்தாள். அதன் பின்பு அவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே அதை எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்க அவனின் கடந்த கால வாழ்க்கையை அவன் வாயிலாக கேட்ட பின்பும் ஏனோ அவனை நம்ப மறுத்தது அவளது அடிப்பட்ட மனம்.
அதன் பிறகு அவனுக்கே தெரியாமல் அவனை பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கினாள் பெண்ணவள். அதன் பிறகே அவன் கூறியது அனைத்தும் உண்மை என்று உணர்ந்து கொண்டாள். ஆனாலும் ஏதோ ஒரு சிறு கோபம் அவன் மீது இருந்து கொண்டு தான் இருந்தது. தன்னை யார் என்றே தெரியாதவனிடம் தங்களுடைய கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பற்றி எல்லாம் கூறிட அவளுக்கு விருப்பமில்லை. அவளை பொறுத்தவரை அவனுடைய அத்தியாயம் அவளுடைய வாழ்க்கையில் முடிந்து போன ஒன்று. அது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்தாள்.
ஆனால் அவளின் அவனவனோ முன் நியாபகங்கள் மறைந்தால் என்ன எப்பொழுதும் நீ எனக்கு தான் என்பது போல் தற்பொழுது வந்து அவனுடைய காதலை தெரிவித்து விட்டு சென்று விட்டான். இதற்கு பெயர் தான் கடவுள் போட்ட முடிச்சு என்று பெரியவர்கள் கூறுவார்களோ. அவனின் மீது தற்பொழுதும் காதல் உள்ளதா என்று கேட்டால் அவள் ஆமாம் என்று தான் கூறுவாள் அதற்கு சாட்சி அவன் மீதான உரிமை பிரச்சனையில் தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் தேவை இல்லாமல் கோபப்பட்டு அவளை திட்டியதே.
அதற்காக உடனே சென்று அவனிடம் தனது காதலை உரைத்து விடுவாளா என்று கேட்டாள் அதுவும் அவளால் முடியாது. அது அவளுடைய தன்மான பிரச்சனை. அவளுடைய தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் என்ன நிகழ்ந்ததோ.
பழையதை நினைத்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. வெகு நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பிய போது தான் அங்கே எதிரே அமர்ந்திருந்தார் சதாசிவம்.
“அங்கிள்.. நீங்க எப்ப வந்தீங்க?”
“நான் வந்து அரை மணி நேரமாச்சு நீலா… நானும் வந்ததுல இருந்து உன்னை கூப்பிட்டு இருக்கேன் ஆனா நீ தான் இந்த உலகத்துலயே இல்லை… சரினு நானும் விட்டுட்டேன்…”
“சாரி அங்கிள்… அம்மா, அப்பா நியாபகம் வந்திருச்சு அதான்…”
“ம்.. அவங்க இந்நேரம் உயிரோட இருந்திருந்தா உன்னை இப்படி விட்டுருப்பாங்களா நீலா? எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியாவே இருக்கறதா உத்தேசம்… ஒரு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா அதுவும் மாட்டேங்குற… உனக்கும் ஆதினிக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டாமா…”
“ஆம்பளைங்க கூட இருந்தா தான் பாதுகாப்புனா அப்பாவா நீங்க இருக்கீங்க… ஒரு நல்ல நண்பனா எனக்கு எப்பவுமே விக்கி இருப்பான். நீங்க ரெண்டு பேரும் எனக்காக இருக்க மாட்டீங்களா என்ன?” என்றாள் ஒரு விரக்தியான சிரிப்புடன்.
“நீலா… நாங்க எப்பவும் உன் கூட தான் இருப்போம்… ஆனா ஒரளவுக்கு மேல எங்கனால உன்னை நெருங்கி வந்து ஆறுதல் படுத்த முடியாது எந்த ஒரு சூழ்நிலையிலயும்… ஆனா கணவன் ஒருத்தன் வந்தா உனக்கு நல்ல நண்பனா, ஆசானா, தகப்பனா, உனக்கு எல்லாமுமா அவன் இருப்பான். உன்னோட எல்லா சுமையையும் அவனும் சேர்ந்து சுமப்பான். இப்ப நீ சின்ன பொண்ணு அதனால யாரும் வேண்டாம்னு சொல்லும் உன் மனசு… ஆனா இதே வயசான பின்னாடி உனக்குனு யாருமே இல்லைனு மனசு ஏங்கும்… அந்த ஏக்கம் உனக்கு வரவேண்டாம்னு தான் நான் இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..”
அவர் கூற கூற அவள் மனக்கண்ணில் ஆதியின் உருவம் தான் தோன்றியது. “ஏன்டா என்னை விட்டு போன? அன்னைக்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் நீ வந்திருந்தா நம்மளோட வாழ்க்கை மாறி இருக்குமே… இப்படி இருந்து கஷ்டப்பட வேண்டாமே …” என்று மனதிற்குள் கதறி கொண்டிருந்தாள் நீலா…
“பார்க்கலாம் அங்கிள்… யோசிச்சு சொல்றேன்…” என்றாள்.
“சரி மா… நான் கிளம்புறேன்… லேட்டாச்சு… ஆதினிய நீ கூப்பிட போகலயா?”
“அச்சோ மறந்துட்டேன்… போகனும் அங்கிள்… இப்பவே லேட் ஆகிடுச்சு… அங்க ரொம்ப கலாட்டா பண்ணிட்டு இருப்பா…” என்று கிளம்ப ஆயத்தமானாள்.
“ஆதினி இப்ப கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிக்கறாளா?”
“ஏதோ கொஞ்சம் கொஞ்சமா தான் வார்த்தை வருது அங்கிள்… நிறைய பேச்சு கொடுக்கனும்னு சொல்லி இருக்காங்க…”
“ம்… இங்க கூட்டிட்டு வாமா… எல்லாரும் பேச ஆரம்பிச்சா ஆட்டோமேட்டிக்கா அவளும் சீக்கிரம் பேசிடுவா…”
“கண்டிப்பா அங்கிள்… அவங்க டீச்சரும் அப்படித்தான் சொன்னாங்க… சரி அங்கிள் நான் கிளம்புறேன்…” என்றவள் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்திருந்தாள்.