உன் நிழல் நான் தொட ep 4

த்தியாயம் 4

ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக, படிப்பவர்களுக்கு விடுமுறை நாளாக, வீட்டிலேயே அடைந்து இருப்பவர்களுக்கு விடுதலை நாளாக எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்ட நாள். அன்று மட்டும் அலாரம் இல்லை, படிப்பு இல்லை, வேலை இல்லை, பரபரப்பு இல்லை. ஆனால் எதிர்பார்ப்புகள் மட்டும் உண்டு.

சர்ச்சிலிருந்து ஸ்டெல்லா வந்துகொண்டிருந்தாள். அவளுக்காக ரத்னா காத்திருக்க, அவள் அருகில் வந்த ஸ்டெல்லா, “எதுக்கு இப்படி வெளியே காத்துக்கிட்டு நிற்கிற? உள்ளே வந்து உட்கார வேண்டியதுதானே” என்றாள். அதற்கு ரத்னா,

“போடி… உள்ளே வந்தா ஒண்ணும் புரிய மாட்டேங்குது. வந்தோமா, சாமியைப் பார்த்தோமா, கிளம்பினோமானு இருக்கணும். அதை விட்டுட்டு நீங்க என்னடான்னா நின்னு, முட்டி போட்டு, விழுந்து கும்பிட்டு… முடியல. அதான் வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்” என்றாள்.

“சரி வா லைப்ரரி போகலாம். அடுத்து எங்க வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டுட்டு, அதுக்கப்புறமா உன்னை விட்டுறேன்.”

“ஸ்டெல்லா, நமக்குத்தான் காலேஜுக்குள்ளேயே லைப்ரரி இருக்குதானே? அப்புறம் எதுக்கு இந்த லைப்ரரிக்கு போகணும்?”

“நம்ம காலேஜுக்குள்ள இருக்குற லைப்ரரியில ஒரு ஐடி கார்டுக்கு  ஒரு புக்குதான் எடுக்க முடியும். ஆனா இந்த லைப்ரரியில எல்லா புக்கும் கிடைக்கும். இங்க மெம்பர்  ஆகிட்டா தேவைப்படும்போது புக்கு வாங்கிக்கலாம்” எனத் தோழி விளக்கினாள்.

“அது சரி, படிக்கிற பிள்ளைகளுக்கு நிறைய புக்கு தேவைப்படும். எனக்கு எதுக்கு? காலேஜ்ல கொடுக்குற புக்கையே இந்த வருஷம் முழுக்க வாசிச்சுப் பார்த்தாலும் புரியாது. இதுல எக்ஸ்ட்ரா வேற புக்கு எடுத்துப் படிக்கணுமா? போடி… இதுக்குத்தான் கூப்பிட்டேன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். நல்லா இழுத்துப் போத்தித் தூங்கியிருப்பேன்” எனப் புலம்பிய ரத்னா, ஸ்டெல்லாவின் முறைப்பைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினாள்.

“எதுக்கு என்னை இப்படிப் பார்க்கிற? நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?” எனக் கண்ணைச் சிமிட்டிய ரத்னாவைப் பார்த்துச் சிரித்த ஸ்டெல்லா, 

“இல்ல… மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மாமேதை ஒருத்தி, ‘தெரியாததைத் தெரிஞ்சுக்க வந்திருக்கேன், படிச்சு கிழித்து விடுவேன்’னு வசனம் பேசினாளே, அது யாருன்னு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“ஸ்டெல்லா பேபி, அது அப்படியே அந்த நேரத்துக்குப் பேசணும்னு தோணுச்சு பேசினேன். மத்தபடி இங்கிலீஷ்க்கும் எனக்கும் ஒத்து வராது.”

“நீ முதல்ல என்கூட லைப்ரரிக்கு வா. அப்புறமா ஒத்து வருமா வராதான்னு பார்க்கலாம்” எனத் தோழியைச் சரிகட்டி அழைத்துச் சென்றாள்.

ஸ்டெல்லாவின் வீடு ஒரு மிகப்பெரிய மாளிகை. அதில் இல்லாத வசதிகளே இல்லை எனும் விதமாக ராபர்ட் தன் மகளுக்காகப் பார்த்துப் பார்த்து கட்டியது அது. இருவரும் உள்ளே வந்த நேரம் வெளியே செல்ல தயாராகிக்கொண்டிருந்த ராபர்ட் ரத்னாவைப் பார்த்து, 

“ஹலோ ரத்னா, எப்படிமா இருக்க? முதல் தடவை வீட்டுக்கு வந்திருக்க, சாப்பிட்டுட்டுதான் போகணும். அப்புறம் ஸ்டெல்லா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வர்றேன், பாய்” எனக் கூறிச் சென்றார். அவர் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவை உலுக்கினாள் ரத்னா.

“என்னடி?” என கேட்க,

“என்ன என்னடி? இப்போ எதுக்கு மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி நிக்கிற?” 

“ஐ மிஸ் மை டேட் பேட்லி.”

“சம்பந்தம் இல்லாம லூசு மாதிரி பேசாத. அப்பா உன் கூடத்தானே இருக்காங்க, பின்ன ஏன் மிஸ் பண்ணுறேன்னு சொல்ற?” என்ற ரத்னாவைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்த ஸ்டெல்லா, 

“என் கூடத்தான் இருக்கிறார்கள், ஆனால் என்னை விட்டு ரொம்பத் தூரமா இருக்கிறார்” என்றாள்.

“சத்தியமா நீ பேசுவது எனக்குப் புரியல.”

“எங்க அப்பா என்கிட்ட நல்லா பேசி எவ்வளவு நாளாகுதுன்னு உனக்குத் தெரியுமா? அவருக்கு என்னை விடப் பணம் தான் பெருசு. ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காகச் செலவு செய்ய முடியாதவர் தான் என் அப்பா. வி ஆர் ஜஸ்ட் லிவிங் அண்டர் ஒன் ரூஃப், தட்ஸ் ஆல்.”

ரத்னா சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ஸ்டெல்லா, நீ உங்க அப்பாவைப் பத்தித் தப்பா நினைக்காதே. உங்க அப்பாவுக்கு உன் மேல நிறைய பாசம் இருக்கு, ஆனா அதை அவரு காட்டுகிற விதம் உனக்குத் தெரியல. நாம ரெண்டு பேரும் உள்ள வரும்போதே நீ என்னை அறிமுகப்படுத்தி வைக்கிறதுக்கு முன்னாடி உங்க அப்பா என் பெயரைச் சொல்லி தான் கூப்பிட்டார். எப்படினு யோசிச்சுப் பார்த்தியா? நீ சொல்லாமலே என்னைப்பற்றி உங்க அப்பா தெரிஞ்சு வைச்சுருக்காரு. தூரமா இருந்தாலும் உன் பக்கத்துல என்ன நடக்குதுனு பார்த்துக்கிட்டுதான் இருக்காரு. நீயும் அவரைப் புரிஞ்சுக்கோ, உன்னையும் அவருக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணு. நான் போயிட்டு வர்றேன், நாளைக்கு பார்க்கலாம்” என விடைபெற்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.

அதே நேரம் அஜீத் சந்திரன் வீட்டில் கிருஷ்ண சந்திரன் வேலை விஷயமாகக் காலையிலேயே கிளம்பிவிட, அர்ச்சனா பாடலைச் சத்தமாக ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தாள். 

“பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி… படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…”

அர்ச்சனா ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்துக் கொண்டே வந்த மைதிலியிடம், அர்ச்சனா பாடலோடு இணைந்து பாடிக்கொண்டே நடனத்தைத் தொடர்ந்தாள். 

“அம்மாவே அம்மாவே அட்வைஸ் பண்ணிக் கொல்லாதே… சேலை போனது ஜீன்ஸ் வந்தது காலத்தின் மாற்றம்…”

சத்தம் கேட்டு கீழே வந்த தன் அண்ணனைப் பார்த்த அர்ச்சனா அவன் புறம் திரும்பி, 

“கண்டாங்கி கண்டாங்கி சல்வார் ஆகிப் போனாலும், தென்காசியில் தமிழ் பண்பு மாறாது… ஐஸ்வர்யா ராய் அழகை வாங்கு… ஜான்சி ராணி வீரம் வாங்கு…”

“ஹேய்!” என்ற சத்தத்துடன் திரும்பிய அர்ச்சனா, வாசலில் கோபமாக நின்று கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

“நான் வீட்ல இல்லாட்டி இப்படித்தான் ஆடிக்கிட்டு இருக்கியா? +2 படிக்கிறது கொஞ்சமாவது ஞாபகத்துல இருக்கா? ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு போ” என மகளைத் திட்டிவிட்டு மனைவியின் புறம் திரும்பினார். 

“அவதான் சின்னப் பொண்ணு ஆடிக்கிட்டு இருக்கான்னா, நீயும் பார்த்துக்கிட்டு சும்மா நிக்கிற? பிள்ளைகளை நல்லபடியா வளர்க்கணும் புரியுதா!” 

கிருஷ்ண சந்திரன் முக்கியமான கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறிய உடனே அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மைதிலி மகளைச் சமாதானப்படுத்திவிட்டு மகன் அஜீத்திடம், 

“நீ எங்கயாவது வெளியே கிளம்பிட்டியாடா?” எனக் கேட்டார்.

“ஆமாம்மா, பிரபு வீட்டுக்கு போயிட்டு வர்றேன்.”

“சீக்கிரம் அப்பா வர்றதுக்கு முன்னாடி வந்துடு” என்றார் மைதிலி. வெளியே வந்த அஜீத் பிரபுவை அழைத்து, 

“பிரபு, நான் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுவேன், அங்க வந்து என்னைப் பிக்கப் பண்ணிக்கோ” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

அதே சமயம் வேறொரு இடத்தில் கண்ணாடி முன் நின்று தன்னைச் சரி பார்த்துக்கொண்டிருந்தவனிடம், ஒருவன் கோபமாக வந்து, “நீ உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? நீ என்னடான்னா அந்த ரத்னா பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க” என்றான்.

அதற்கு அந்த மர்ம மனிதன் புன்னகையுடன், “உன் கேள்விக்கான பதிலைத் திரும்ப வந்து சொல்லுறேன். இப்போ நான் என் ரதி பேபியை மீட்  பண்ணப் போறேன். என் பேபி இன்னைக்கு ஸ்டெல்லாவைப் பார்க்கப் போயிருக்கா, எப்படியும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்குத்தான் வருவா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரத்னா பேருந்திற்காகக் காத்திருக்க, தூரத்தில் பிரபுவிற்காகக் காத்திருந்த அஜீத் ரத்னாவைப் பார்த்துவிட்டான். அவளிடம் செல்ல அஜீத் முன்னேற, அதே சமயம் அந்த மர்ம மனிதனும் அவளை நோக்கி வந்தான். அந்நேரம் அந்த மர்ம மனிதன் மீது ஒரு கார் மோத, இருவரும் விரைந்து அவனருகில் சென்றனர். பெரிதாக அடி இல்லை என்றாலும் அவன் மயங்கியிருந்தான். 

ரத்னா அஜீத்திடம், “சீக்கிரம் ஆட்டோ பிடிங்க, இவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகலாம்” என்றாள். 

மருத்துவமனையில் சேர்த்த பிறகு அந்த நபரின் கைபேசியைப் பார்க்க, அது பாஸ்வேர்ட்  கேட்டது. சிறிது நேரத்தில் அஜீத் மருந்து வாங்கி வர, ரத்னா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தாள்.

அஜீத் வந்து ரத்னாவிடம் அமர்ந்தான். “தேங்க்ஸ் அஜீத், என்கிட்ட பஸ்ஸுக்கு மட்டும்தான் காசு இருந்துச்சு. நாளைக்கு பணத்தைத் திருப்பித் தந்திடுவேன்” என்றாள் ரத்னா.

“பணம் ஒரு பிரச்சனை இல்லை ரத்னா. நீ அவருக்கு உதவி பண்ணணும்னு நினைச்ச, நானும் உதவி பண்றதுக்காகத்தான் மருந்து வாங்கி கொடுத்தேன்” என அஜீத் கூறினான். இருவரும் பேசத் தொடங்கினர்.

“நீ இவ்வளவு பேசுவியா அஜீத்? காலேஜ்ல புக்கைத் தவிர எதையும் பார்க்க மாட்டேன்னு இருப்பியே” என்றாள் ரத்னா.

“தேவைப்பட்டா பேசுவேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ரத்னா. எனக்குப் பாரதியார் பாட்டெல்லாம் பிடிக்காது, உனக்காகத்தான் பாடினேன்.”

“எனக்காகவா?”

“ஆமா… ஐ நீட் யுவர் பிரண்ட்ஷிப்  ஒன்லி. உன் கையிலிருந்த பாரதியார் புக்கைப் பார்த்து உனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்தப் பாட்டைப் பாடினேன். என்னை உன் பிரண்டா ஏத்துக்கிறியா?”

ரத்னா சிரித்துக்கொண்டே, “ஓகே! ஆனா நிறைய கண்டிஷன் இருக்கு. நான் நிறைய பேசுவேன், வாயை மூடுனு சொல்லக்கூடாது. நான் பண்ற சேட்டைக்குத் திட்டக்கூடாது. உங்க வீட்டுச் சாப்பாடு பிடிச்சிருந்தா எனக்குக் கொடுத்துடணும்” என்றாள்.

“ஓகே! அவ்வளவுதானே?” என அஜீத் கேட்க, 

“இப்போதைக்கு அவ்வளவுதான்” என ரத்னா கூற, இருவரும் கைகுலுக்கி நண்பர்களாயினர். அப்போது அங்கு வந்த பிரபு இதைப் பார்த்து வியந்தான். 

“என்னடா நடக்குது இங்க?” எனப் பிரபு கேட்க, நர்ஸ் வந்து அந்த நபருக்கு மயக்கம் தெளிந்துவிட்டதாகக் கூறினார். மூவரும் உள்ளே சென்றனர். 

அஜீத் அந்த நபரிடம், “சார், இப்போ ஓகேவா? உங்க வீட்டு அட்ரஸ் இல்லன்னா போன் நம்பர் கொடுத்தீங்கன்னா தகவல் சொல்லிடுவோம்” என்றான். ஆனால் அந்த நபர் ரத்னாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

பிரபு, “ரத்னா நீ அஜீத் கூட கிளம்பு, நான் இவரைப் பார்த்துக்கிறேன்” என அவளை அனுப்ப முயல, அந்த நபர் பிரபுவைப்பார்த்து, 

“என் வீட்டுக்கு போன் பண்ண வேண்டாம். ஏன் ரதி பேபி… நீ என்னைப் பார்த்துக்க மாட்டியா?” என்று உரிமையுடன் கேட்டான்.

“ரத்னா, உனக்கு இவரை முன்னாடியே தெரியுமா?” என அஜீத்தும் பிரபுவும் ஒரே நேரத்தில் கேட்டனர். 

“எனக்கு இவரைத் தெரியாது” என்றாள் ரத்னா. 

அதற்கு அந்த நபர், “என்ன ரதி பேபி, அத்தானோட மனசை இப்படி உடைச்சிட்டியே” என வருத்தப்பட்டான்.

“யோவ் இம்சை… அதான் தெரியலன்னு சொல்றேன்ல. மண்டையில அடிபட்டதுல மூளை எதுவும் குழம்பிடுச்சா? நான் ரத்னா, ரதி இல்ல. அத்தான், பேபினு சொன்ன மண்டையை ஒடைச்சிடுவேன்” என ரத்னா பொரிந்து தள்ளினாள்.

அஜீத் அவளை அழைத்துச் செல்ல முயன்றபோது, அந்த நபர், “இந்த ஜெம்ஸ் (ரத்தினம்) மிட்டாயைப் பார்க்கிறதுக்குச் சிவப்புக் கல்லு (ரூபி) ஒண்ணு காத்துக்கிட்டு இருக்கு. விருப்பம் இல்லன்னா நீ போகலாம்” என்றான். 

உடனே ரத்னா அவன் அருகில் வந்து அவன் கையில் இருந்த தழும்பைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன், “ஜஸ்வந்த் ரூபா அக்கா எப்படி இருக்கா? எங்க இருக்கா?” எனக் கேட்டாள்.

“தெரியாத ஆளுகூட உனக்கு என்ன பேச்சு? போ… உன் பிரண்டு கூப்பிடுறான் இல்ல, ஹாஸ்டலுக்குப் போ” என ஜஸ்வந்த் அவளை விரட்ட, ரத்னா குழப்பத்துடன் நின்றாள். 

அஜீத், “இவரைத் தெரியாதுன்னு சொன்ன, ஆனா இப்போ ஜஸ்வந்த்னு பேர் சொல்லி கூப்பிடுற? அப்படின்னா இவரை உனக்குத் தெரியுமா?” எனக் கேட்க, 

“எனக்குத் தெரியும், ஆனா இப்போ எனக்குத் தெரியல” என்றாள் ரத்னா. 

“குழப்பாம சொல்லு” எனப் பிரபு கேட்க, 

“நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பார்த்து இருக்கேன். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்” என ரத்னா பழைய நினைவுகளில் மூழ்க, ஜஸ்வந்த் தன் காதல் நினைவுகளில் கலந்தான்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top