அத்தியாயம் 3
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு ஒன்றே மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றது.
எதிர்பார்ப்பின் முடிவில் அவர்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதை அவர்களின் விதியே நிர்ணயம் செய்கின்றது. மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி எதுவென்றாலும் அது அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கின்றது.
சனிக்கிழமை காலை அஜீத் எதிர்பார்ப்புடன் காலேஜ் கிரவுண்டிற்கு வர, தனக்கு முன் வந்து அங்கே ரத்னாவிடம் பிரபு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக அவர்கள் அருகில் சென்றான்.
பிரபு ரத்னாவிடம், “ரத்னா, நான் சொன்னேன் இல்ல… என் பெஸ்ட் பிரண்ட் அஜீத் சந்திரன், நம்ம கிளாஸ்தான்.” என அறிமுகம் செய்து வைக்க, ரத்னா இடைமறித்தாள்.
“இது ரொம்ப ஓவரா இல்ல? பெஸ்ட் பிரண்ட்னு சொன்னா ஓகே, ஆனா காலேஜ் ஆரம்பிச்சு பத்து நாளுக்கு அப்புறம், என் பக்கத்து பெஞ்ச்ல இருக்கிறவரை என்கிட்ட ‘நம்ம கிளாஸ்’னு அறிமுகப்படுத்துனா… ஒண்ணு நான் கஜினி படத்துல வர்ற சூர்யா மாதிரி நியாபக மறதி கேஸா இருக்கணும், இல்லன்னா நீ அதிமேதாவியா இருக்கணும். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் எனக்கு நியாபக மறதி இல்லை, அப்படின்னா ரெண்டாவது காரணம்தான் சரியா இருக்கணும். என்ன அஜீத் சார், உங்க பிரண்ட் மேதாவிதானே?”
“ஹேய் என்ன!.. ஐயோ பாவம் நம்ம கூட படிக்கிற பொண்ணு தனியா நிக்குதுன்னு வந்து பேசுனா, இந்த பிரபுவை பார்த்து மக்குன்னு சொல்லுற” என்ற பிரபுவிடம் ரத்னா,
“ஹலோ மிஸ்டர் பிரபு, நான் உங்களை அதிமேதாவினுதான் சொன்னேன், ஆனா உங்களை நீங்களே மக்குன்னு சொன்னா நானா பொறுப்பு?” எனத் கெத்தான பார்வையுடன் நிற்க, பிரபு தன் நண்பனை ரத்னாவிடம் பேச வைப்பதற்காக,
“டேய் இங்க ஒரு பொண்ணு உன் நண்பனை, உயிர் தோழனை, உன் தளபதியை மட்டம் தட்டி இமேஜை டேமேஜ் பண்றா… நீ இந்த அநியாயத்தைத் தட்டி கேட்க மாட்டியடா?” என இருவரையும் கோர்த்து விட, ரத்னா அஜீத் புறம் திரும்பிப் பேச வாய் திறக்கும் நேரம் அவர்களிடம் வந்தாள் ஸ்டெல்லா.
“சாரிடி ரத்து, கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
“போடி… நான் வந்து 20 நிமிஷம் ஆகிடுச்சு. நான் மட்டும் தனியா நின்னுட்டு இருந்தேன், பேசாம தனியா நிக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா?” தோழிகள் இருவரும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இரு ஜீவன்களை மறந்து தங்கள் உலகில் சஞ்சரிக்கத் தொடங்க, தோழர்கள் இருவரும் மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ரத்து டியர், நான் ஏன் லேட்டா வந்தேன்னு தெரியாம கோபப்படாத”
“எதனால லேட்?”
“இதனாலதான் லேட்” எனக் கூறி ஒரு பெட்டி நிறைய கேரட் அல்வாவைத் தர, ரத்னா தன் கோபத்தை மறந்து அல்வாவில் ஐக்கியமாகிவிட்டாள்.
“கோபம் போயிட்டா?”
“அது அல்வாவைப் பார்த்ததும் போயிட்டு. அல்வா சூப்பர், நீ செஞ்சியா?”
“இது மட்டும் நான் செய்ததா இருந்தா நீ இப்போ கடவுளைப் பார்க்கப் பயணிச்சுட்டு இருப்ப. மிச்சத்தை அப்புறம் சாப்பிடு, வா சீனியர்ஸ் கிட்ட போகலாம்” என்று ரத்னாவை அழைத்துச் சென்றுவிட்டாள்.
பிரபு நண்பனிடம், “பாத்தியாடா… என்னமோ இங்க யாருமே இல்லாத மாதிரி பேசுனா, அல்வா சாப்பிட்டா, ஒரு பாய் கூட சொல்லாம போயிட்டா” என்றான். அதற்கு அஜீத்,
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீ அவங்க கண்டுக்கிடாம போனதுக்கு வருத்தப்படல, அல்வா உனக்குத் தராம ரத்னா மட்டும் சாப்பிட்டதுதான் உன் கவலை. விடுடா நான் உனக்கு வாங்கித் தரேன்” என அஜீத் சமாதானப்படுத்த முயல, பிரபுவோ,
“அதை விடு… நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ரத்னாகிட்ட பேசி உனக்கு அறிமுகப்படுத்தினா நீ பேசாம பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நிக்கிற, உன்னை வச்சு நான் என்ன பண்ண?”
“எங்கடா பேச விட்டீங்க? கேப்பே விடாம மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தீங்க. கடைசியா வாயே திறக்குறதுக்கு முன்னாடி அவ பிரண்ட் வந்துட்டாங்க. சரி வா நாமளும் போகலாம். இன்னைக்கு எப்படியும் ரத்னாவே வந்து என்கிட்ட பேசுவா பாரு” என்று உறுதியான குரலில் கூறினான்.
அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் வந்துவிட, மூத்த மாணவர்களின் முன்பு தங்கள் திறமையைக் காட்ட அன்றைய நாயகன் அஜீத் தான். தனிநபர் விளையாட்டுகள் பலவற்றில் அவனுக்கு இருந்த திறமையைப் பார்த்து அனைவரும் பாராட்டினர். பெண்களுக்கான பிரிவில் ரத்னா ஓட்டம், ஈட்டி.எறிதல் இரண்டில் திறமையைக் காட்டினாள். ஒரு வழியாக விளையாட்டுப் போட்டிகள் முடிந்ததும் கலை நிகழ்ச்சித் தேர்வுகள் தொடங்கின. இறுதியாக வந்த அஜீத் ஒரு நொடி ரத்னா மீது தன் பார்வையைச் செலுத்திவிட்டுப் பாட ஆரம்பித்தான்.
“நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!”
அதுவரை தன் தோழியுடன் அரட்டையடித்துக்கொண்டும், மீதம் இருந்த அல்வாவைச் சாப்பிட்டுக்கொண்டும் இருந்த ரத்னா, அனைத்தையும் மறந்து பாட்டுடன் கலந்துவிட்டாள்.
“பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்!”
அஜீத் பாடிய பாடலின் இனிமையைக் கேட்ட பிரபுவிற்கு, “இவன் இவ்வளவு அருமையா பாடுவான்னு நமக்குத் தெரியாமப் போச்சே!” என வியப்பு ஏற்பட்டது.
நேற்றிலிருந்து நண்பனிடம் தெரியும் மாற்றத்தைப் பார்த்து அவன் மனதில் தோன்றிய கேள்வி ஒன்றுதான், “உண்மையிலேயே இது என் பிரண்ட் அஜீத் தானா? இல்ல ஆவி ஏதாவது உள்ள வந்துடுச்சா?”.
அங்கு ரத்னாவோ அஜீத்தின் பாடலில் தன்னை மறந்து ஒன்றிப்போயிருந்தாள். அஜீத் பாடிய அந்தப் பாடல் வரிகள் தனக்காகவே பாடப்பட்டது போல ரத்னா உணர, இதைக் கவனித்த பிரபு நண்பனின் திட்டத்தை நினைத்து வியந்தான். அதே நேரம் ரத்னாவுக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வியும் அவன் மனதில் எழுந்தது.
அஜீத் பாட்டு பாடி முடித்தும் அந்த வரிகளின் தாக்கத்தில் இருந்து வெளிவராமல் இருந்தவள், அனைவரின் கைதட்டல் ஓசையில் சுய உணர்வு பெற்றாள். அனைவரும் அஜீத்தைப் பாராட்டிவிட்டுச் செல்ல, இறுதியாக ரத்னாவும் தன் தோழி ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு அவனருகில் சென்றாள்.
“உங்களுக்குப் பாரதியார் பாட்டுன்னா பிடிக்குமா? எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதுவும் இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க அக்கா இந்த பாட்டை அடிக்கடி பாடி காட்டுவா. தேங்க்யூ சோ மச் இந்த பாட்டைப் பாடியதற்கு” எனத் தன் மகிழ்ச்சியை ரத்னா வெளிப்படுத்த, பதிலுக்கு அஜீத்தும்,
“நீங்க கூட நல்லா டான்ஸ் பண்ணீங்க, சூப்பரா இருந்துச்சு” என ரத்னாவின் நடனத்தைப் பாராட்டினான்.
“தேங்க்யூ” கூறிவிட்டு மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்கு முன் அருகிலிருந்த ஸ்டெல்லா, “ரத்து, அப்பா கால் பண்றாங்க சோ நான் வீட்டுக்குப் போகணும், வாடி உன்னையும் உங்க ஹாஸ்டல்ல விட்டுட்டுப் போறேன்” என அழைக்க, ரத்னாவும் கிளம்பினாள். இம்முறை மறக்காமல் அஜீத் புறம் திரும்பி,
“சாரி பிரண்ட்ஸ், நான் இப்போ கிளம்புறேன். திங்கட்கிழமை கிளாஸ்ல பார்க்கலாம் பாய். அப்புறம் மிஸ்டர் பிரபு, உங்களுக்குக் கொடுக்காம கேரட் அல்வா சாப்பிட்டதுக்குக் கோபப்படாதீங்க, அது என் பிரண்ட் எனக்காகக் கொண்டு வந்தது, சோ அதை ஷேர் பண்ண முடியாது. நெக்ஸ்ட் டைம் நான் வாங்கிட்டு வந்து உங்களுக்குத் தரேன் பாய்” என்று கூறி விடைபெற்றாள்.
தனித்துவிடப்பட்ட இரு நண்பர்களும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். “உனக்கு எப்படிடா ரத்னாவுக்குப் பாரதியார் பாட்டு பிடிக்குமுன்னு தெரியும்? சீக்கிரம் சொல்லு இல்லாட்டி என் மண்டை வெடிச்சிடும்” எனப் பிரபு கேட்க, அஜீத் சிரித்துக்கொண்டே,
“அன்னைக்கு ரத்னா கையில பாரதியார் கவிதைகள் புக்க பார்த்தேன், சோ அவளுக்குப் பாரதியார் பாட்டுன்னா பிடிக்கும்னு ஒரு சின்ன கெஸ் பண்ணுனேன், அது கரெக்டா முடிஞ்சிருக்கு. பார்த்தியா… ரத்னாவை என்கிட்ட பேச வச்சுட்டேன். நவ் ஐ அம் சோ ஹேப்பி டா!”
விடுதி வாசல் வரை வந்து தோழியை அனுப்பிவிட்டு ஸ்டெல்லா வீடு திரும்ப, ரத்னா தன் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு தனக்காகத் தன் அம்மாவும் அப்பாவும் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அவர்களிடம் சென்றாள்.
“ம்மா… ப்பா… எப்படி இருக்கீங்க? நான் இல்லாட்டி ரொம்ப சந்தோஷமா இருப்பீங்கன்னு பார்த்தா, அனுப்பிவிட்டு பத்து நாள்லயே வந்து நிக்கிறீங்க? என்ன பொண்ணு மேல அவ்ளோ பாசமா?” என்று தன் பெற்றோருக்கு வாய்ப்பே தராமல் பேசிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அவளுடைய தாய் பார்வதி,
“மெதுவா மெதுவா… ஒவ்வொரு கேள்வியா கேளுடி. எப்ப தான் திருந்தப் போறியோ? இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, நீ போற வீட்டுல உன் மாமியார் எங்களைத்தான் குறை சொல்லுவாங்க” என்று மகளைக் கண்டிக்க, தந்தை மாணிக்கம் குறுக்கிட்டார்.
“பார்வதி, இப்போ எதுக்கு புள்ளையைத் திட்டிக்கிட்டு இருக்க? அதெல்லாம் நம்ம பொண்ணு விவரமானவள். நம்மகிட்ட மட்டும்தான் இப்படிப் பேசுவா” என்று மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு மகளிடம்,
“நாங்க இங்க ஒரு முக்கியமான வேலையாத்தான் வந்தோம், அப்படியே உன்னையும் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என்றார்.
“என்னப்பா அந்த முக்கியமான வேலை?”
“நம்ம தங்கவேலுக்குப் பொண்ணு பார்க்க வந்தோம்” எனத் தந்தை கூறியதைக் கேட்டு,
“போங்கப்பா என்கிட்ட யாருமே இதைப் பத்திப் பேசவே இல்ல, அண்ணன்கூட இனிமேல் பேசமாட்டேன் சொல்லிருங்க” எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். மாணிக்கம் சிரித்துக்கொண்டே,
“பாப்பா, இதெல்லாம் நேத்து சாயங்காலம்தான் முடிவாச்சு, அதான் சொல்ல முடியல. பெரியப்பா சொன்னாருன்னு வந்தோம்” என்றார். ‘பெரியப்பா’ என்ற பெயரைக் கேட்டவுடனேயே ரத்னா அடங்கிவிட்டாள்.
ரத்னாவின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். வைரவேல் – பூவரசி தம்பதியினருக்கு இரு மகன்கள்; மூத்தவர் முத்துவேல், இளையவர் மாணிக்கவேல். முத்துவேலுக்கு ரூபவதி, தங்கவேல் என இரு பிள்ளைகள். மாணிக்கவேலுக்கு ரத்னா மட்டுமே. முத்துவேலின் மனைவி மலர்க்கொடி இறந்த பிறகு, பார்வதிதான் மூன்று பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து கவனித்து கொண்டார்.
பெரியவள் ரூபவதி கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, குடும்பத்தினர் அவளுடனான உறவை முறித்துக்கொண்டனர். இதன் காரணமாகவே ரத்னாவிற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ரூபவதியைத் தாயாகவே பார்த்து வழர்ந்த ரத்னாவிற்கு அவள் இல்லாதது பெரும் வருத்தமே. எங்கே ரூபவதி போல ரத்னாவும் காதலித்து விடுவாளோ என்பதற்காகவே அவளைக் கல்லூரிக்கு அனுப்ப முதலில் மறுத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் கோயம்புத்தூரில் படிக்க அனுமதி கிடைத்தது.
பெற்றோர்கள் விடைபெற்றுச் சென்றதும், ரத்னா தன் அறைக்குச் சென்று தன் அக்கா ரூபவதியைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். அக்கா பற்றிய தகவல் இல்லாததால், அவளிடம் பேசுவதாக நினைத்து அனைத்தையும் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்தாள்.
அதே நேரம் சென்னையில் ஒரு பெரிய வீட்டில் தங்கை ரத்னாவை நினைத்துத் தூக்கத்தைத் தொலைத்த ரூபவதி நடைபயின்று கொண்டிருந்தாள். தன் மகள் ராதிகாவைப் பார்க்கும்போதெல்லாம் தங்கையின் நினைவு அவளுக்கு வரும். எப்படியாவது ஒருமுறை ரத்னாவைச் சந்தித்துத் தன் பக்க நியாயத்தைக் கூறிவிட வேண்டும் என அவள் ஏங்கிக்கொண்டிருந்தாள்.
சகோதரிகள் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் மூழ்கியிருந்த வேளையில், மர்மமான இரு விழிகள் ரத்னா – ரூபவதி இணைந்திருந்த புகைப்படத்தைப் பார்த்து,
“ரூபி டோன்ட் வொரி, சீக்கிரம் நான் என் ரதி பேபியோட வருவேன். ஜூலை 17 உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கிறேன்” என்று மானசீகமாகப் பேசிக்கொண்டிருந்தான் ஒருவன். அப்போது அவனுடைய கைபேசி ஒலிக்க, திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் புன்னகையுடன் பேச ஆரம்பித்தான்.
“நீ எப்போ இங்க வர? அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என மறுமுனையில் கேட்க,
“ஜூலை 17 வரேன்னு ரூபிகிட்ட சொல்லு, ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் அவளுக்குக் காத்துக்கிட்டு இருக்குன்னு” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
மீண்டும் ரத்னாவின் புகைப்படத்தைப் பார்த்து, “நாளைக்கு நாம மீட் பண்ணலாம் பேபி… உன் நிழல் கூட மட்டும் பேசிக்கிட்டு இருக்கிற நான் கூடிய சீக்கிரம் நிஜமான உன்னை என்னோட பக்கத்துல கொண்டு வரப்போறேன்” என்று கனவுலகில் சஞ்சரித்தான் அவன்.