அத்தியாயம் 2
அடுத்த நாளிலிருந்து அஜீத் தன்னை ஒரு புதிய மனிதனாக உணர்ந்தான். அன்றைய காலை நேரம் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. தெளிவான மனநிலையில் இருப்பதால் என்னவோ அவன் முகம் வழக்கத்தை விட வசீகரமாக இருந்தது.
துள்ளிக்குதித்துப் படியிறங்கி வரும் மகனைப் பார்த்த மைத்திலிக்கு மயக்கம் வராத குறைதான். புன்னகை மன்னனாய்த் தட்டில் இருந்த இட்லியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த அண்ணனின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த அர்சனாவை நிமிர்ந்துப் பார்த்த அஜீத், “என்ன?” என்று பார்வையால் வினவ,
“ஒண்ணும் இல்ல, எப்பொழுதும் பெட்ரூம் லைட் மாதிரி டல்லா இருக்கும் உங்க முகம் இன்னைக்கு ஹால்ல இருக்கும் சாண்ட்லியர் மாதிரி பிரைட்டா இருக்கு. அண்ட் ஆமை மாதிரி மெதுவா நடக்கிற நீங்க இப்போ புள்ளி மான் மாதிரி துள்ளித் துள்ளி வர்றீங்க, அதான் ஆச்சரியமா இருக்கு” என்று கூறினாள்.
அதற்கு மைத்திலி, “என் பையனைப் பார்த்து ஆமை, மான்னு சொல்லாத, அவன் சிங்கமாக்கும்” என்று சொல்ல, மைத்திலிக்கும் அமைதியாக உணவருந்தும் ஆர்த்திக்கும் கூட அதே சிந்தனைதான்.
அனைத்தையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தானே தவிர பதில் அளிக்கவில்லை. பதிலுக்குப் பதில் பேசுவது அஜீத்தின் குணமல்ல. வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை மெளனத்துடனும், உதட்டளவு சிரிப்புடனும் கடந்து விடுவான். இன்று தங்கையின் கேள்விக்கு ஒரு சிரிப்பைப் பதிலாக்கிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றுக் கல்லூரிக்குச் சென்றுவிட, ஆர்த்தி தம்பியின் மகிழ்ச்சியை மனதில் குறித்துக்கொண்டாள்.
அதே மகிழ்ச்சியான மனநிலையுடன் வகுப்பிற்குள் நுழைந்தவன் கண்கள் தன் பக்கத்து இருக்கையை நோக்கிச் செல்ல, அங்கு ரத்னா இல்லாமல் காலியாக இருந்தது.
அவளை எதிர்பார்த்து மனது ஏமாற்றமடைய, அதை அவன் முகமும் பிரதிபலித்தது. அஜீத்தின் முகபாவனைகளைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த பிரபு, “என்னடா எந்த நாட்டு கப்பல் கவுந்துட்டுன்னு இப்படிச் சோகமா புக்க வாசிக்காம, வயிலின் வாசிச்சுகிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“ம்ச்… ஒண்ணும் இல்லடா.”
“டேய் பொய் சொல்ல ட்ரை பண்ணாத. வீட்டுல ஏதாவது பிரச்சனையாடா?”
“இல்லடா.”
“பின்ன ஏன் டல்லா இருக்க?” – பதில் வரவில்லை என்றால் உன்னை விடமாட்டேன் என்ற ரீதியில் கேள்வி கேட்ட பிரபுவைப் பார்த்து,
“கொஞ்ச நேரம் கேள்வி கேட்காம சும்மா இருடா, அப்புறமா பேசலாம்” என்று எரிச்சலுடன் பேசுகின்ற நண்பனை வேற்றுக்கிரகவாசியைப் போலப் பார்த்து வைத்தான் பிரபு.
அஜீத் மென்மையான குணம் படைத்தவன். கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறை குணங்களைப் பிறரிடம் காட்டாதவன். தன் இயல்பிற்கு மாறாக இன்று தன்னிடம் எரிச்சல்படும் நண்பனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என கவலை கொண்டான்.
முதல் வகுப்பு இயந்திரங்களின் இயக்கவியல் (Theory of Machines) பற்றித் தீவிரமாகப் பேராசிரியர் எலிசபெத் (எலி) விளக்கிக்கொண்டிருக்க, தாமதமாக வந்த ரத்னாவிடம், “Why are you so late?” என வினவினார்.
“அது வந்து மேம்… ஹாஸ்டல்ல இருந்து வந்துட்டு இருந்தேனா, காலேஜுக்கு உள்ள வந்ததுக்கு பின்னாடி தான் பாத்தேன் உங்க பாடப் புக் இல்ல, அதான் திரும்ப ஹாஸ்டலுக்குப் போய் எடுத்துட்டு வர்றேன்” என மழலையர் பள்ளி மாணவர்கள் பாடம் படிப்பது மாதிரி அபிநயம் பிடித்து இழுத்து இழுத்து பேசினாள்.
பொறுமையைக் கயிறு கட்டிப் பிடித்துக்கொண்டு, “This is not your school. This is THE famous Engineering College… This will be the last warning for you. Hereafter don’t speak Tamil ok. Get in.” என்று ஆங்கிலத்தில் அறிவுரையை அள்ளி வழங்கினார்.
அமைதியாகக் கேட்டுவிட்டு “Okey mam” என்று கூறிவிட்டுத் தன் இடத்தில் அமர்ந்து பாடத்தைக் கவனித்தாள். எலி வெளியேறிய உடன், அவள் அருகில் இருந்த ஸ்டெல்லா, “ஏண்டி அந்த எலிசபெத் மேம் அட்வைஸ் பண்ணுறேன் என்கிற பெயருல அப்படித் திட்டிக்கிட்டு இருக்கு, உனக்கு வருத்தமா இல்லையா?” எனத் தனக்காக வருத்தப்படும் தோழியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு,
“வருத்தமா வர, எனக்கு அவங்க சொன்னது புரிஞ்சுருந்தாத்தானே? எனக்குத்தான் புரியலையே!”
“உன்னைப் பத்தி தெரிஞ்சும் உனக்குப் போய் வருத்தப்பட்டேன் பாரு என் புத்திய…” எனப் பற்களை நறநறவென்று கடித்தாள் ஸ்டெல்லா.
“உன் புத்திய?” என்று எடுத்துக் கொடுக்கும் தோழியை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள். “ப்ளீஸ் கோபப்படாத செல்லம், காலைல ரெடியாகிட்டு ஹாஸ்டலை விட்டு வரும்போது அந்த வார்டன் பெல் மணிமேகலைகிட்ட மாட்டிக்கிட்டேன், ஒரு வழியா தப்பிச்சு வந்தா எலிகிட்ட மாட்டிக்கிட்டேன்.”
“எல்லாருக்கும் பட்டப் பெயர் வைக்கிறது உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? அதுசரி எலி கடிச்சது ஓகே, மணி ஏன் அடிச்சுது? நீ என்ன சேட்டை செய்த?” என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கும் ஸ்டெல்லாவிடம் ஒரு அசட்டு சிரிப்புடன்,
“இல்ல, இன்னைக்கு வெள்ளிக்கிழமை நீ மஞ்சள் கலர் டிரஸ் போடுவேன்னு நேத்து சொன்னல்ல, அதான் மஞ்சள் கலர் ரோஜாவைப் பார்த்ததும் நியாபகம் வந்துச்சு. ஒரு பூ பறிச்சதுக்கு என்னமோ அவங்க சொத்தையே கொள்ளையடிச்ச மாதிரி திட்டுறாங்க” என்று தன் கதையைக் கூறிவிட்டு மஞ்சள் நிற ரோஜாவை நீட்டினாள். இதையெல்லாம் பார்த்து ஸ்டெல்லா தான் எப்படி உணருகின்றாள் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
ரத்னாவைப் பொறுத்தவரை தன் தோழிக்கு பிடித்த நிறத்தில் ஒரு பூ தந்ததும் அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஆனால் ஸ்டெல்லாவிற்கு அந்த மஞ்சள் ரோஜா, “என் லிட்டில் பிரின்சஸ் இந்த பூவைத் தலையில வைத்ததும் ரொம்ப அழகாயிட்டீங்க” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்ட தாய் நான்சியின் சிரித்த முகத்தைக் கண் முன் கொண்டு வந்தது.
ராபர்ட் – நான்சி தம்பதியின் செல்ல மகள் ஸ்டெல்லா. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களின் வாழ்வின் வசந்த காலத்தில் மலர்ந்த மலர்தான் அவள்.
ஒரு விபத்தில் நான்சி உயிருக்குப்போராடிக்கொண்டிருக்க, பணம் இல்லாத காரணத்தினால் அவரின் உயிர் பிரிந்துவிட, அன்றிலிருந்து பணத்தின் பின்னால் தன் ஓட்டத்தை ஆரம்பித்த ராபர்ட், தன் மகளுக்குப் பணத்தை வழங்கிய அளவு பாசத்தை வழங்கத் தவறிவிட்டார்.
ஸ்டெல்லாவின் கடந்த கால நினைவுகள் அடுத்த வகுப்பு ஆரம்பித்தவுடன் பேராசிரியருடன் வந்த மூத்த மாணவர்கள் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தவர்களால் தடைபட்டது. வந்தவர்களில் தலைவன் ஒருவன் தங்கள் இளவல் மாணவர்களிடம், “ஹலோ ப்ரெண்ட்ஸ், நான் உங்க சீனியர் பிரகாஷ். இப்போ நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னா உங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் இருக்கிற தனித்திறமையைத் தெரிஞ்சுக்கத்தான்.”
“அடுத்த இரண்டு மாசத்துல நம்ம காலேஜ்ல துறைகளுக்கிடையிலான ஸ்போர்ஸ் டேவும், அதுக்கு அடுத்த மாசம் கல்சுரல்ஸ் டேவும் வருது. அதுல இந்த வருஷம் நம்ம காலேஜ் தான் ஜெயிக்கணும். சோ, நாம எல்லாரும் சேர்ந்து கலந்துக்கிட்டு கலக்குவோம்.”
“திறமை இருக்கிறவங்க போட்டியில கலந்துக்கலாம், விருப்பம் இருக்கிறவங்க உங்க ப்ரெண்ட்ஸ் ஜெயிக்க உதவி பண்ணுங்க. ஈவினிங் லாஸ்ட் ஹவர் கம்யூட்டர் லேப்க்கு போட்டிக்கு ரெடியா இருக்கிறவங்க வாங்க” என்று கூறிவிட்டுச் சென்றனர்.
மாலையில் சீனியர் பிரகாஷ் ஒவ்வொரு போட்டியின் பெயர்களைக் கூறி, விருப்பம் உள்ளவர்கள் எந்த மூத்த மாணவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, “OK friends, இனி இதுதான் உங்க டீம். எப்போ பிராக்டிஸ் இருந்தாலும் வந்திடுங்க. இதுல பெஸ்ட்டா வர்றவங்க போட்டிக்குக் கலந்துக்கலாம்.”
“ஸ்போர்ட்ஸ்ல பெயர் கொடுத்தவங்க சனிக்கிழமை காலைல கிரவுண்டுக்கு வந்துடுங்க. கல்ச்சுரல் ஈவென்ட்ல இருக்க விரும்புறவங்க பத்து மணிக்கு இங்க வந்திடுங்க” என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
ரத்னாவிற்கு நடனம், விளையாட்டு இரண்டிலும் ஆர்வம் அதிகம் என்பதால் அதில் சேர்ந்துவிட, ஸ்டெல்லாவிற்கு ஓவியம் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் ஆர்வம் இருந்ததால் அதில் பெயர் கொடுத்தாள். அஜீத் தனித்திறமைகள் அதிகம் கொண்டவன் என்பதால் பல போட்டிகளில் பெயர் தந்திருக்க, பிரபு நடனம் மற்றும் நாடகத்தில் பெயரை கொடுத்தான்.
வெளியே வந்த பிரபு மீண்டும் நண்பனை நினைத்து யோசனையில் ஆழ்ந்தான். காலையில் எரிச்சலுடன் இருந்த அஜீத்தின் முகம் ரத்னாவைப் பார்த்ததும் அமைதியானதைப் பார்த்து, நண்பனின் மனதில் காதல் வந்திருக்குமோ என்று தோன்றியது. யோசனையில் இருந்த நண்பனின் அருகில் அமர்ந்த அஜீத், “சாரிடா, காலைல உன்கிட்ட கோபமா பேசிட்டேன்” என்றான்.
“அதை விடுடா, நான் அதை மறந்துட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம், அதுக்கு மட்டும் உண்மையான பதில் சொல்லுடா. உன் மாற்றத்திற்குக் காரணம் ரத்னாவா?” எனக் கேட்டான் பிரபு.
ஒரு நிமிட மெளனத்திற்குப் பின் அஜீத், “ஆமாடா, ரத்னா தான் காரணம். உனக்கு என்னைப் பற்றி நல்லா தெரியும், பிடிக்காமத்தான் இங்க படிக்க வந்தேன். ஆனா நேத்து ரத்னா பேசுனத கேட்டதுக்கு அப்புறம், பிடிக்காததைப் படிச்சாலும் பிடிச்ச மாதிரி என் வாழ்க்கையை மாத்தணும்னு முடிவு எடுத்துட்டேன்டா. அதான் ரத்னாகிட்ட பேசனும்னு தோணுது, ஆனா எப்படிப் பேசணும்னு தெரியல” என்றான்.
முதல்முறை எதிர்பார்ப்புடன் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசும் தோழனுக்கு உதவ வேண்டும் என பிரபு தீர்மானித்தான்.
“கவலைப்படாத அஜீத், ரத்னாவுக்குப் பிடிச்ச ஏதாவது செய், அவளே உன்கிட்ட பேசுவா” என்றான் பிரபு. சில நிமிடம் யோசித்துவிட்டு மலர்ந்த முகத்துடன்,
“தேங்க்ஸ்டா, ஐடியா கிடைச்சிடுச்சு” என்றான் அஜீத்.
“என்ன ஐடியா?”
“அதைச் சனிக்கிழமை பாரு… இல்ல இல்ல… கேளு!”
“சரி கேக்கலாம். ஓகே லேட் ஆயிடுச்சு, நாளைக்கு பார்க்கலாம் பை டா” என்று விடைபெற்றான் அஜீத்.
தன் தீர்மானத்தால் நண்பனின் மனதில் தீராத வலியைத் தரப்போவது தெரிந்திருந்தால் பிரபு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானோ? விதி தனது விளையாட்டைப் பிரபுவின் வழியாகத் தொடங்கிவிட்டதை அவன் அறியவில்லை.
அதே நேரம் தன் மடிக்கணினியை அணைத்துவிட்டு நிமிர்ந்த இரு விழிகளில் ரத்னாவின் நினைவுகள் குடிகொள்ள, இதழ்கள் புன்னகையால் விரிந்தன. மேசை மேல் இருந்த ரத்தினக் கற்கள் பதித்த வளையல்களைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, “ரதி (ரத்னாவதி) பேபி, மை லவ்… நானும் இந்த வளையல் மாதிரி உன்கிட்ட வரக் காத்துக்கிட்டு இருக்கேன். நாங்க சீக்கிரம் உன்கிட்ட வந்துடுவோம்” என்று முணுமுணுத்தது அந்த உருவம்.
விதி தனது ஆட்டத்திற்கான அடுத்த நபரைத் தேர்ந்தெடுத்துவிட்ட மகிழ்ச்சியில் ரத்னாவைப் பார்த்துச் சிரிக்க, தன்னை நிழலாகப் பின்தொடரும் எதையும் அறியாமல் ரத்னா தன் தோழியர் கூட்டத்தைச் சிரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தாள்.