வெளியே வந்த ஆதியோ தனக்காக காத்து கொண்டிருந்த மாதேஷின் வண்டியில் அமர்ந்து சென்றான்.
“என்னடா உள்ள ஏதோ காரசாரமான விவாதம் போல இருக்கு…”
“ம்… நேத்து பேச முடியல… அதான் இன்னைக்கு எல்லாம் பேசிட்டு வந்துட்டேன்…”
“ம்… என் பேர் கூட ஏதோ அடி பட்ட மாதிரி தெரிஞ்சுது…”
“உங்கூட எல்லாம் சேர கூடாதுனு தடா போட்டாங்க…”
“ஏண்டா அப்படி என்னடா நீ ரொம்ப நல்லவன்… நான் ரொம்ப கெட்டவனா? ஆனா இந்த உலகம் இன்னும் உன்னை ரொம்ப நல்லவன்னு நம்புது பாரு… அவங்கள சொல்லனும்…”
“டேய்… ஏற்கனவே அவங்க பேசுன பேச்சுல ஏக கடுப்புல இருக்கேன்… நீயும் என்னை கடுப்பாக்கி பார்க்காத அப்புறம் ஏற்படற சேதாரத்திற்கு நான் பொருப்பல்ல… சொல்லிட்டேன்…”
“சரி மச்சி… சரி மச்சி… ரொம்ப கோபபடாத… புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்தலாமா… இல்ல தண்ணீ ஊத்தி அணைக்கலாமா… சொல்லு… சொல்லு…”
“எங்கம்மா சொன்னது கூட கரெக்ட்டுனூ இப்ப தான்டா தோணுது….”
“அப்படி என்ன நல்லது சொல்லிட்டாங்க உங்க மம்மி…”
“ம்… உன் கூட சேர்ந்தா நான் கெட்டு போய்டுவேனு சொன்னாங்க… கரெக்ட் தானே…”
“அப்படி என்ன நான் உன்னை கெடுத்துட்டேன்…”
“அதான் கேட்டயே இப்ப புகைய விட்டு ஆத்தறதா இல்ல தண்ணிய ஊத்தி அணைகலாமானு…”
“அடப்பாவி… சிகரெட்னா என்னனே தெரியாதவனா நீ? சிகரெட் பிடி மச்சி… அப்ப தான் கெத்தா இருக்கும்னு சொல்லி என்னை சிகரெட் பிடிக்க வச்சதே நீ தான்டா… முதல் முதலா ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லி அத அந்த பொண்ணு மறுத்திருச்சுனு உங்கிட்ட வந்து நின்னப்ப அதைய மறக்க வைக்கறேனு என்னைய தண்ணி அடிக்க வச்சது நீ… நல்லவனா இருந்த என்னைய இப்படி எல்லா தப்பும் பண்ண வச்சுட்டு நீ என்னமோ ஒன்னுமே தெரியாத பச்ச புள்ள மாதிரியும் நான் என்னமோ பொறந்ததுல இருந்தே கெட்டவன் மாதிரியும் எல்லாரும் பேசாறாங்க பாரு… அவங்கள எல்லாம் என்ன சொல்றது… கடவுளே உனக்கு கொஞ்சம் கூட என் மேல கருணையே இல்லையா… ஒருபச்ச புள்ளைய எப்படி எல்லாம் திட்டுறாங்க பாருங்க…” என்று கடவுளிடம் புலம்பி கொண்டே வந்தான்.
“எல்லாம் பேசி முடிச்சுட்டீனா கொஞ்சம் அந்த கடைக்கிட்ட ஓரமா நிறுத்து?”
“எதுக்குடா…” என்று கேட்டாலும் அவன் சொன்னதை செய்தான் மாதேஷ்.
“ம்… நீ சொன்னத நான் எப்ப செய்யாம இருந்திருக்கேன். அதான் புண்பட்ட நெஞ்சை புகைய விட்டு ஆத்த போறேன்…” என்றவன் அந்த கடைக்காரரிடம் சென்று சிகரெட்டை வாங்கினான்.
அந்த கடை தங்களது அலுவலகத்திற்கு எதிர் புறத்திலேயே இருப்பதால் “சீக்கிரமா வந்து தொலை… நான் கிளம்புறேன்…” என்ற மாதேஷ் வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்.
இவன் சிகரெட்டை எடுத்து அதை பற்ற வைத்து சுருள் சுருளாக ஊதி கொண்டிருக்க அவனை பார்த்து கொண்டே தனது காரினை அலுவலக வளாகத்திற்குள் செலுத்தினாள் நீலாம்பரி.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
அவளது கண்களிலோ கோபம் கொந்தளித்தது. அவனோ அவளை கண்டு தனது உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்ட காதல் வெளிப்படாமல் இருக்க தன்னை கட்டுப்படுத்தி கொண்டே அவளது கண்களை பார்ப்பதை தவிர்த்தான்.
சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் நுழைந்தான் ஆதி. முதலில் எதிர் கொண்டது மதுவை தான். அவளிடம் ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு தான் உள்ளேயே சென்றான்.
இவை அனைத்தையும் நீலாம்பரி பார்த்து கொண்டு தான் இருந்தாள். அன்று முழுவதும் மதுவை தான் வாட்டி கொண்டிருந்தாள். மதிய உணவு இடைவேளையின் பொழுது சோகமாக அமர்ந்திருந்த மதுவை கண்டு அவளின் அருகே அமர்ந்தான்.
“ஹாய் டார்லிங் என்ன இது… எப்பவும் உன் முகம் அப்படியே காலைல பூத்த ரோஜா பூ மாதிரி ஃப்ரஷ்ஷா இருக்கும்… ஆனா இன்னைக்கு வாடி வதங்கி போய் இருக்கு…”
“என்னனே தெரியல ஆதி… நம்ம மேடம் ரெண்டு நாளா ரொம்ப கடுமையா நடந்துக்கறாங்க… ஏன்னு தெரியல… நானும் எந்த தப்பும் செஞ்ச மாதிரி தெரியல… ஆனாலும் சும்மா திட்டிகிட்டே இருக்காங்க… தப்பு செஞ்சு திட்டு வாங்குனா கூட பரவாயில்ல… தப்பே செய்யாம திட்டு வாங்கினா எப்படி இருக்கும்…”
“டார்லிங் வேலைக்குனு வந்துட்டா இதெல்லாம் தாங்கி தான் ஆகணும்… விடு… வீட்டுல இருக்கற கோபத்தை எல்லாம் இங்க வந்து கட்டுறது தானே அவங்க வழக்கம்… நம்ம குடும்ப சூழ்நிலைக்காக நம்ம இதெல்லாம் சகிச்சுக்கிட்டு தான் ஆகணும்… கொஞ்சம் பொறுத்துக்கோ…”
“அவங்க இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லை… எப்பவும் சிரிச்ச முகமா தான் இருப்பாங்க… வேலையில தப்பு செஞ்சா கூட பார்த்து பண்ணுங்கனு சொல்லுவாங்க… அதான் கவலையா இருக்கு…”
“சரி விடு… இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுட்டு… சோகமா இருந்தா உன் முகத்தை பார்க்க எப்படி இருக்கு தெரியுமா?”
“அதான் சொல்லிட்டயே… வாடி போன ரோஜா பூ மாதிரி இருக்குனு…”
“அது ஏதோ உன்னை சமாதானப்படுத்தனும்னு சொன்னது…”
“சரி இப்ப சொல்லு எப்படி இருக்கேனு…
“என்னை திரும்பி பாரு..” என்று சொன்னவுடன் அவளும் அவனது முகத்தை பார்க்க “ப்பா… யாருடா இந்த பொண்ணு…” என்று கூறினான்.
அதை கேட்டு கோபமடைந்த மதுவோ “ஏய்… என்னைய பார்த்தா அப்படியா தெரியுது?” என்றவள் அருகே இருந்த சாப்பாட்டு பையை எடுத்து அவனது முதுகில் அடித்து கொண்டிருந்தாள்.
“ஏய்… அடிக்காத ராட்சஸி…”
“மறுபடியும் ராட்சஸினு சொல்றயா என்னைய?” என்றவள் மறுபடியும் அடிக்க ஆரம்பிக்க அவளது கைகளை பிடித்து தடுத்து நிறுத்தியவன் “உன் சோகமான முகத்துக்கு இந்த கோபமான முகம் எவ்வளவோ பரவாயில்ல… நல்லா இருக்கு…” என்று சிரித்து கொண்டே கூறினான்.
அதை கேட்ட மதுவோ சிரித்து விட்டாள்.
“தேங்க்ஸ் ஆதி… நேத்துல இருந்து ஒரு மாதிரி இருந்தேன். உன் கூட பேசின பின்னாடி தான் கொஞ்சம் கவலை இல்லாம ரிலாக்ஸா இருக்கு…”
“ம்… டார்லிங்க் கவலை எப்பவுமே தான் இருந்துட்டு இருக்கும். அதெல்லாம் நினைச்சுகிட்டு கவலைப்பட்டுகிட்டே இருக்க கூடாது… உள்ளுக்குள்ள எவ்வளவு வலிச்சாலும் வெளிய சிரிச்சுகிட்டே இருக்கனும்… சரியா…”
“ம்…”
“ஓகே… நான் கிளம்புறேன்…” என்று அவன் எழுந்து சென்று விட செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மாது.
இதெயெல்லாம் கண்காணிப்பு கேமராவின் வாயிலாக பார்த்து கொண்டிருந்தாள் மற்றொரு மாது…
அவளும் அவனை கவனிக்க கூடாது என்று தான் நினைக்கிறாள். ஆனாலும் புத்தியும், மனதும் அதற்கு எதிர்பதமாக செயல்படுகிறதே… எப்பொழுது இருந்து ஆதீரன் இந்த அலுவலகத்தில் சேர்ந்தானோ அப்பொழுது இருந்தே அவளின் எண்ணம், மூளை, செயல் என அனைத்தையும் அவனே ஆக்கிரமித்து விட்டான்.
மதுவிடம் பேசிவிட்டு அவனது இடத்திற்கு வந்து அமர்ந்து தனது வேலையை கவனிக்க தொடங்கினான்.
நீலாம்பரியோ தனது காரியதரிசியை அழைத்து ஆதீரனை அழைத்து வரும்படி கூறினாள்.
அவளும் சென்று ஆதீரனிடம் நீலாம்பரி வர சொன்னதாக கூறினாள்.
அவள் வர சொன்னாள் என்பதை கேட்டவுடனேயே அவனுக்கு அவளை எப்படி தனியாக எதிர்கொள்வது என்ற நினைவு வந்தது.
இதுவரை எந்த பெண்ணிடமும் வராத ஒரு தயக்கம் இவளிடம் வந்தது. அவள் வெறும் அவனுடைய காதலியாகவோ, இல்லை வெறும் முதலாளியாகவோ மட்டுமே இருந்திருந்தால் அவள் அழைத்த மறுநிமிடம் அவளின் முன்பு பிரசன்னமாகி இருப்பான். ஆனால் எப்பொழுது தனது காதல் பொய்த்து போய் அவள் இன்னொருவனின் மனைவி என்று ஆனதோ அதன் பின்பு எப்படி அவளை எதிர்கொள்வது என்ற தயக்கம் அவனை ஆட்கொண்டு விட்டது. ஆனால் இதை தவிர்க்க முடியாதே… அவள் இந்த அலுவலகத்தின் முதலாளி… அவளின் கீழ் வேலை செய்யும் தான் அவளை பார்த்து பேசி தானே ஆக வேண்டும். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவள் மீதான தனது காதலை எந்த நிலையிலும் தான் வெளிப்படுத்த கூடாது…” என்று உறுதி கொண்ட பின்பே அவளது அறை நோக்கி சென்றான்.
கதவை தட்டி விட்டு அவளது அனுமதிக்காக காத்திருந்தான்.
“கம்மின்…” என்று அவள் கூறிய பின்பு உள்ளே நுழைந்தவன் அவள் அமர்ந்திருந்த மேசையின் முன்னே நின்றான்.
அவனது கண்கள் எப்பொழுதும் போல் அவளை தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்தது.
“சாப்பிட்டாச்சா…” என்றாள் கோப்பில் பார்வை பார்த்து கொண்டே…
“இத கேட்கறதுக்கு தான் கூப்பிட்டீங்களா?”
“ஏன்… இத கேட்க தான் கூப்பிட்டேனா நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா?”
“அதெப்படி சொல்லாம இருக்க முடியும்… நீங்க முதலாளி நான் உங்களுக்கு கீழ வேலை செய்யறவன்… உங்க கேள்விக்கு பதில் சொல்லாம இருக்க முடியுமா?”
“ம்… அந்த நினைப்பு உங்க மனசுல இல்ல போல… அப்படியிருந்திருந்தா இந்நேரம் நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்திருப்பீங்க இப்படி திருப்பி கேள்வி கேட்டுட்டு இருக்க மாட்டீங்க…”
ஒரு பெருமூச்சு விட்டவன் “ம்… சாப்பிட்டாச்சு…” என்றான்.
“சாப்பிட்டா அந்த வேலையை மட்டும் தான் பார்க்கனும் அத விட்டுட்டு என்ன அரட்டை?”
“நான் யார் கூடவும் அரட்டை அடிக்கலையே…”
“அப்படியா? அப்ப நான் பார்த்தது பொய்யா? இல்ல இந்த சிசிடிவி கேமரா தான் பொய்யா காட்டுச்சா? உங்க பெர்ஷனல் வேலை எல்லாம் கொஞ்சம் ஆஃபிஸ்க்கு வெளிய வச்சுகிட்டா நல்ல இருக்கும்…”
“மேடம்… மது கொஞ்சம் டல்லா இருந்தாங்க… அதான் அவங்களிடம் கொஞ்சம் ஆறுதலா பேசிட்டு இருந்தேன்…”
“இங்க அக்கவுண்ட்ஸ் வேலைக்கு வந்தீங்களா? இல்ல யார் எல்லாம் மனசு சரி இல்லாம உட்கார்ந்து இருக்காங்கனு பார்த்து ஆறுதல் சொல்ல வந்தீங்களா?”
“மேடம்… அப்படியில்ல… எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க… இன்னைக்கு ரொம்ப சோர்ந்து போய் இருந்தாங்க…”
“அவங்களுக்கு பெர்ஷனலா என்ன பிரச்சனையோ? அத கொண்டு வந்து இங்க எல்லார் முன்னாடியும் காட்டி சிம்பதி கிரியேட் பண்றாங்களோ…”
“மேடம்… அவங்களுக்கு பெர்ஷனலா எந்த இஷ்யூவும் இல்ல… அவங்க இப்படி இருக்கறதுக்கு காரணமே நீங்க தான்…”
“வாட் நான்சென்ஸ்…”
“ஆமா தப்பு செஞ்சா திட்டு எவ்வளவு வேணாலும் வாங்கிக்கலாம்… தப்பே செய்யாம திட்டு வாங்கினா யாரா இருந்தாலும் வருத்தப்பட தான் செய்வாங்க…”
“அவங்க தப்பு செய்யலைனு உங்களுக்கு தெரியுமா?”
“தெரியாது…”
“அப்ப தெரியாத விசயத்துக்குள்ள மூக்க நுழைச்சு ஆறுதல் சொல்றேனு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க கூடாது…”
“அது உங்களுக்கு தேவை இல்லாத விசயம்…”
“எது தேவை இல்லாத விசயம்…”
“நான் யாருக்கு வேணாலும் ஆறுதல் கூறுவேன்… அத கேட்க உங்களுக்கு உரிமை இல்லை…”
“நீங்க ஆறுதல் சொல்லுங்க… இல்ல கதா காலட்சேபம் பண்ணுங்க அத பத்தி எனக்கு கவலை இல்ல… ஆனா அதெல்லாம் ஆஃபிஸ்க்கு வெளிய…”
“நான் ஒன்னும் உங்களோட வேலை நேரத்துல செய்யல… சாப்பாட்டு நேரத்துல தான் அதுவும் ஒரு பத்து நிமிஷம் தான் அவங்க கூட பேசிட்டு இருந்தேன்… இதுக்கு ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க…”
“நான் ஓவரா ரியாக்ட் பண்றேனா இல்லையானு நீங்க சொல்ல கூடாது… இது என்னோட ஆஃபிஸ்… நான் இப்படி தான் இருப்பேன்.”
“ரொம்ப தான் திமிர் பிடிச்சவளா இருப்பா போலயே…” என்று மிக மெல்லிய குரலில் பேசினான்.
அது அச்சு பிசகாமல் அவளுடைய காதுகளில் விழுந்தது.
“வாட்…” என்றாள் கோபத்தின் சாயல் அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது .
“நத்திங்க் மேடம்.. இனிமேல் இப்படி நடக்காது…” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.
கதவு வரை சென்றவன் மீண்டும் அவளது அருகே வந்து “மேடம்… மது சொன்னா அவ தப்பே செஞ்சுருந்தாலும் நீங்க தட்டி கொடுத்து தான் வேலை வாங்குவீங்க… அதட்டி கூட பேச மாட்டீங்கனு… ஆனா ரெண்டு நாளா தப்பே செய்யாம திட்டு வாங்குறாளாம். ப்ளீஸ் உங்க புருஷன் கூட ஏதாவது பிரச்சனைனா அத வீட்டுலயே சால்வ் பண்ணிட்டு வாங்க… இங்க வந்து எங்க மேல உங்க கோபத்த காட்டாதீங்க… இது என்னோட ஒரு சின்ன அட்வைஸ்..” என்றான்.
தண்ணீர் குடித்து கொண்டே அதை கேட்டு கொண்டிருந்தவளுக்கோ புரையேறியது.
“வாட்… என் புருஷனா… அது யாரு?”
“மேடம்… நீங்க தமிழ்நாட்டு பொண்ணு… புருஷன் கூட சண்டைனா அதுக்காக அது யாருனு கேட்பீங்களா?”
“ஹேய்… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல… அதுக்குள்ள புருஷன் அது இதுனு சொல்லிட்டு இருக்க? உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுருச்சா?”
“கல்யாணம் ஆகலயா? ஆனா… ஆனா… உங்களுக்கு குழந்தை இருக்குதுனு சொன்னாங்க…”
“உன் பிறந்த வருஷம் என்ன 90ஆ…”
ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனுக்கு அவளின் சம்பந்தமே இல்லாத இந்த பேச்சு எரிச்சலை கொடுக்க…
“இப்ப அது ரொம்ப முக்கியமா?” என்றான்.
“ஆமா… தொண்ணூறுல பிறந்தவங்க தான் ரெண்டு பேரும் முத்த வச்ச குழந்தை பொறந்துரும்னு நினைச்சுட்டு இருப்பாங்க… அப்படி தான் இருக்கு உன் பேச்சு… கல்யாணம் பண்ணினா தான் குழந்தை பிறக்கும்னு யாரு சொன்னாங்க?”
அவளின் பேச்சை புரிந்து கொண்டவனோ எரிச்சலாக அவளது முகத்தை பார்த்தான்.
“இங்க பாருங்க மிஸ்டர் எனக்கு கல்யாணமும் ஆகல ஒரு மண்ணும் ஆகல… ஆனா எனக்கு ஒரு குழந்தை இருக்கறது உண்மை தான். அது ஏன் எப்படினு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல… உங்க எல்லைக்குள்ள இருந்தா போதும்… தேவையில்லாம என்னை பத்தின ஆராய்ச்சிய விட்டுட்டு ஒழுங்கா வேலைல கவனம் வச்சு எப்படி முன்னேறலாம்னு யோசிங்க…” என்றாள்.
அவனுக்கோ அவள் பேசிய முதல் வரி மட்டுமே மனதிலும் மூளையிலும் ஏறியது… மற்றவை எல்லாம் அவன் தூசி போல் ஒதுக்கி விட்டான்.
அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது மட்டுமே அவனது காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க மனதிற்குள் ஜி.வி.பிரகாஷின் குரல் ஒலித்தது.
“ஒத்த சொல்லால என் உசிர எடுத்து வச்சுகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்னி போல் என்ன சொம்புக்குள்ள ஊத்தி வச்சு…
நித்தம் குடிச்சே என்னை கொன்னாடா…
ஏய் பொட்டகாட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு ஆறு ஒன்னு ஓடுறத பாரு..”
அந்த வரிகளுக்கு ஏற்ப அவன் கற்பனையில் தனுஷை போல் லுங்கி கட்டி கொண்டு ஆடிக் கொண்டிருந்தான்.
“ஹேய்… ஹேய்… மேன்…” என்று அவனை கூப்பிட்டு பார்த்தாள் எங்கே அவன் தான் கனவுலகில் அவளுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தானே பிறகு எங்கே கேட்பது…
எழுந்து அவனது அருகில் வந்தவள் அவனது தோள்களை உலுக்கினாள். அதற்கு அசையாதவனை முதுகில் ஒர் அடி அடித்தாள்.
அந்த அடியில் தான அவன் நிஜ உலகிற்கு திரும்பினான். அடித்த அவளுக்கு கை வலித்தது. ஆனால் அடி வாங்கிய அவனோ சிரித்து கொண்டே மறுபடியும் கேட்டானே அதே கேள்வியை…
“உங்களுக்கு நிஜமாவே கல்யாணாம் ஆகலயா?”
“அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?”
“ப்ளீஸ் மேடம் சொல்லுங்க…”
அவனை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே இல்லை என்றாள்.
“எனக்கு கல்யாணம் ஆகலைனா உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்…”
“அது அப்படித்தான்…” என்றவன் அருகே அழகுக்காக அவளது மேசையில் வைத்திருந்த பூஞ்சாடியில் இருந்த ஒரு பூவை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவளோ புரியாமல் அவனையும் அந்த பூவையும் பார்த்திருக்க…
“ஐ லவ் யூ ஜலஜா…”
அவனுடைய வார்த்தைகள் அவளுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.
மறுபடியும் ஒரு முறை அவனை சந்திப்போமென்று அவள் நினைக்கவில்லை. ஆனால் நடந்தது. அவள் யாரென்பதையே மறந்து அவளுடன் பழகிய நாட்கள், அவளுடன் பேசிய பேச்சுக்கள், ஏன் அவளுடைய தேகத்தின் மென்மையை மறந்து அவளுடைய இதழின் சுவையை மறந்தவனுக்கு இதெல்லாம் நியாபகம் வருமா என்று அவள் நினைத்திருக்க இவை அனைத்திற்கும் மறுபடியும் தொடக்கப்புள்ளி வைப்பது போல் கூறினானே ஒரு வார்த்தை. அவன் தொடங்கிய தொடக்கப்புள்ளியை அவளும் சேர்ந்து அழகிய கோலம் ஆக்குவாளா இல்லை முற்று புள்ளியாய் அதை முடித்து வைப்பாளா? அவளே முடிவெடுப்பாள்.