அத்தியாயம்-10

இத்தனை நாட்களாய் நிம்மதியாக ஓய்வெடுத்தவன் அன்று முழுவதும் இருந்த வேலைச்சுமையாலும், காலை முதல் வேலை வேலை என்று அலைந்ததாலும் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ஆதி. 

இப்படி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அவனை எதிர் கொண்டது என்னவோ அவனது அன்னை தான். 

“ஏன்டா… மறுபடியும் அந்த மாதேஷ் கூட சேர்ந்து ஊர் சுத்த ஆரம்பிச்சுட்டயா? நைட் ரொம்ப நேரம் ஆனதுனால தான் வீட்டுக்கு வராம அவங்க வீட்டுல தங்கிட்டயா? கோமாவுக்கு முன்னாடி எப்படி இருந்தயோ மறுபடியும் பழைய மாதிரியே ஆகிட போறயோனு பயமா இருக்குடா… இனிமேலாவது ஒழுங்கா இருடா… குடும்பத்தை பார்த்துக்கோனும்… தம்பி தங்கைக்கு கல்யாணம் செய்யனும்னு உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு… அதெல்லாம் மறந்துட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்திட்டு இருக்காத…” என்று எப்பொழுதும் போல் புலம்ப ஆரம்பித்திருந்தார்.

அதை கேட்டவனோ மிகக்கடுப்பாகி “ம்மா… ஏற்கனவே ரொம்ப தலை வலிக்குது… நீங்க பேசி பேசி தலைவலிய அதிகமாக்காதீங்க… போங்க போய் ஸ்டாராங்கா கொஞ்சம் டீ கொண்டு வாங்க…” என்றான்.

அதை கேட்டவளுக்கோ கோபம் தலைக்கேறியது.

“நான் பேசினா தலைவலிக்குமோ உனக்கு… என்னோட கஷ்டத்தை சொன்னேன். உனக்கு ஆஸ்பத்திரி செலவு செஞ்சனால தான் இன்னும் உன் தங்கைக்கு கல்யாணம் ஆகாம வீட்டுல இருக்கா… அதை முதல்ல நினைவு வச்சுக்கோ… வயசு புள்ளைய வீட்டுல வச்சுகிட்டு இருக்கற எனக்கு தான் தெரியும் என்ன நிலைமனு… வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கற மாதிரி இருக்கு எனக்கு… அவள எவங்கிட்டயாவது பிடிச்சு கொடுக்கற வரைக்கும் என் புலம்பல் ஓயாது புரிஞ்சுக்கோ… ஒழுங்கா வேலைக்கு போனமா சம்பாதிச்சமா… வீட்டுக்கு கொடுத்தமானு இருக்கனும்… அத விட்டுட்டு அவன் கூட சேர்ந்து இன்னும் வயசு பையன் மாதிரி ஊர் சுத்திட்டு இருக்கற வேலை எல்லாம் வேண்டாம்…” என்று மறுபடியும் அவனது தலைவலியை ஏகத்துக்கும் அதிகமாக்கி கொண்டிருந்தார்.

சோபாவில் அமர்ந்திருந்த ஆதியோ தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

“இவர்களிடம் என்ன பேசினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைத்து கொண்டவனோ அடுத்த நிமிடம் தனது அறைக்கு சென்று கதவை அடித்து சாற்றி விட்டு அணிந்திருந்த துணியை கூட மாற்றாமல் படுத்து விட்டான்.

வெளியே இருந்த அவனது அன்னையோ மேலும் ஏதேதோ புலம்பி கொண்டே இரவு நேர உணவு செய்ய சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து வந்த தன் சின்ன மகனுக்கு வேண்டிய பணிவிடைகள் மிக கச்சிதமாக நடைபெற்றது. அவனுக்கு பிடித்த உணவே இரவு உணவாக செய்யப்பட்டது. 

மூவரும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த பொழுது “என்ன இன்னும் உங்க பெரிய மகன் வரலயா? நேத்து மாதிரியே இன்னைக்கும் அந்த மாதேஷ் வீட்டுல தங்கிட்டானா?” என்று சாப்பிட்டு கொண்டே கேட்டான் அபினவ். 

“அதெல்லாம் வந்துட்டான்… தலை வலிக்குதுனு படுத்து இருக்கான். “

‘ம்… ரொம்ப நாள் கழிச்சு வேலைக்கு போறானல்ல… கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்… அதுக்காக வேலைய விட்டுட வேண்டாம்னு சொல்லுங்க…  அந்த கம்பெனிய பத்தி நானும் கேள்விப்பட்டேன். நல்ல வளர்ந்து வர்ற கம்பெனி… இன்னும் கொஞ்ச நாள் போனா சம்பளம் எல்லாம் இப்ப வாங்குறத விட அதிகமாவே தருவாங்க… அதனால சிரமம் பார்க்காம செய்ய சொல்லுங்க…” என்று தனது அண்ணனுக்கே அறிவுரை கூறி கொண்டிருந்தான் அபினவ்.

“ம்… சரிடா… அவனெல்லாம் கரெக்டா போய்டுவான். நீ கவலைப்படாம சாப்பிடு..”

“எனக்கு என்ன கவலை… இனியும் ஏதாவனு ஒன்னுனா என்னால பார்த்துக்க முடியாது…”

சாரதாவோ அவன் கூறியதற்கு எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் ஒரு பெருமூச்சொன்றை மட்டுமே விட்டார். 

அனிதாவோ “நான் போய் அண்ணனை சாப்பிட கூப்பிட்டு வர்றேன்…” என்று கூறிவிட்டு எழுந்து சென்று ஆதியின் கதவை தட்டினாள்.

சில நிமிட மௌனத்திற்கு பின் எழுந்த ஆதியோ “யாரு?” என்றான்.

“அண்ணா… நான் தான் அனிதா… வா வந்து சாப்பிடு…” என்றாள்.

“நீ சாப்பிடு அனிதா… எனக்கு பசியில்லை இப்ப… கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்…” 

“ம்… சரி சீக்கிரம் வந்து சாப்பிடு…” என்று அவள் கூறிவிட்டு போய்விட்டாள்.

கட்டிலில் படுத்து கொண்டு மேலே இருந்த விட்டத்தையே பார்த்து கொண்டிருந்த ஆதிக்கோ இவ்வளவு நேரம் தனது தாயும் தம்பியும் பேசி கொண்டிருந்த வார்த்தைகள் அச்சு பிசகாமல் அவனது செவியில் விழுந்து தான் இருந்தது.

அவனை விட சிறியவன் அவனுக்கு புத்தி கூறுவது ஏனோ ஒரு மாதிரி இருந்தது. அப்படி என்ன நான் கெட்டவனாகி விட்டேனா? நான் என்ன இவர்களை பார்த்துக்க மாட்டேனா சொல்லிட்டேன்… எதுக்கு இப்படி பேசிட்டு இருக்காங்க… நான் வேலைக்கு போக மாட்டேனு சொன்னேனா?  இல்ல சம்பளம் கொடுக்க மாட்டேனு சொன்னேனா? என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? ஏன் அபினவ் மேல வச்சுருக்கற நம்பிக்கைல ஒரு பத்து பெர்ஷன்ட் கூடவா என் மேல நம்பிக்கை இல்ல… என்று தனது மனதிற்குள் வெந்து போனவன் கண்களை மூட அவனது மனக்கண்ணில் முன் வந்து நின்றாள் நீலாம்பரி.

“ஏய்.. ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்… நீ ஏன்டி என்னை மேலும் கடுப்பாக்குற?” என்று அவளை திட்டினான். அவனின் அவளோ மேலும் சிரித்து கொண்டே இருந்தாள்.

“ஐயோ…” என்று கத்தியவன் எழுந்தமர்ந்து தலையை பிடித்து கொண்டான். 

சிறிது நேரம் கழித்து அவனது வயிறு தனது இருப்பை காட்ட எழுந்து வெளியே வந்தான். உணவு மேசையில் அவனுக்கான உணவு இருக்க அமைதியாக உண்டான்.

மீண்டும் அறைக்குள் வந்தவனுக்கோ தூக்கம் வராமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்க உடனே போனை எடுத்து மாதேஷிற்கு அழைத்தான். 

மணி பணிரெண்டை கடந்திருக்க நல்ல தூக்கத்தில் இருந்த மாதேஷோ “யாருடா இந்த நேரத்துல கூப்பிடறது?” என்று கூறிக்கொண்டே தனது கண்களை அழுந்த துடைத்து கொண்டு கைப்பேசியை பார்த்தான். 

ஆதியின் நம்பரை பார்த்தவன் ஏனோ கலவரப்பட்டு அவசரமாக அதை எடுத்தவன், “என்னடா மச்சா… என்ன ஆச்சு… ஏதாவது பிரச்சனையா?” என்று பதறிக்கொண்டு கேட்டான்.

அவனின் பேச்சில் இருந்த அக்கறையை  உணர்ந்தவன் “டேய்… மாப்பிள்ள…” என்று ஒரு மாதிரி நெகிழ்ந்த குரலில் கூறவும் மாதேஷிற்கு மேலும் பதறியது அவனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று.

நேற்று நடந்த சம்பவங்கள் அவனை அப்படி நினைக்க வைத்தது. குடித்து விட்டு தனது தாய் தந்தை மற்றும் தம்பியே அவனை புரிந்து கொள்ளவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு அவன் வந்து படுத்த பின்பு மேலும் மேலும் அவன் பேசிய வார்த்தைகளால் மாதேஷிற்கு தான் தூக்கம் தூர போனது.

அன்றைய நினைவுகளில், 

மாதேஷின் தந்தை படுங்கள் என்று கூறி விட்டு வெளியேறிய பிறகு அவனும் சென்று ஆதியின் அருகே படுத்தான். 

“ஏய்… எதுக்குடி என் கண் முன்ன வந்த? நான் படிச்சுட்டு இருந்தப்ப எல்லாம் ஏன் எங்கிட்ட வரல நீ? இப்ப மட்டும் எதுக்கு வந்த? ஏற்கனவே என் வீட்டுல தான் என்னை புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்காங்க அதுவே ஒரு வலியா இருக்கு. இதுல நீ வேற என் முன்னாடி வந்து ஒவ்வொரு நிமிஷமும் என்னை கொன்னுட்டு இருக்கடி… நீ என்னோட முதல் காதல்டி… பார்த்த ஒரு நொடியிலேயே என்னோட மனசுக்குள்ள புகுந்து என்னை ஒரு வழி பண்ணிட்ட.. உன்ன பார்த்த அந்த நிமிசத்துல நான் நானா இல்லடி… நான் முதன் முதலா பார்த்தது உன் கண்ண மட்டும் தான். உன் கண்ணுல அப்படி என்னடி இருக்கு… ஒரே பார்வையில அப்படியே என்னை வீழ்த்திடுச்சு… இதுவரைக்கும் இப்படி ஒரு கண்ண பார்த்ததே இல்லடி… அந்த நிமிசம் நான் முடிவே பண்ணிட்டேன் நீ தான் என்னோட வாழ்க்கை முழுதும் கூட வர்றவன்னு…”

இவ்வாறு புலம்பிக் கொண்டே இருந்தவனை வினோதமாக பார்த்தான் மாதேஷ்.

இதுவரைக்கும் கல்லூரியில் படிக்கும் பொழுது கூட இவன் பார்க்காத பொண்ணுகளா? பேசாதா பொண்ணுகளா? ஆனா இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நினைச்சு இப்படி இவன் பேசுனது இல்லையே? இப்ப யார இவன் சொல்லிட்டு இருக்கான். ஒரு வேளை அந்த ரிஷப்ஷின்ஸ்ட் பொண்ணா இருக்குமோ? என்று யார் யாரையோ நினைத்து கொண்டிருந்தவனுக்கு ஆதியே பதிலளித்தான்.

“உன் ஆஃபிஸ்ல உனக்கு கீழ வேலை செய்யறதுனா கசக்குமா என்ன? ரொம்ப சந்தோஷப்பட்டேன்… ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்… ஆனா அந்த சந்தோஷத்துக்கு எல்லாம் ஆயுசு குறைவு போல… என் காதலை முழுசா அனுபவிக்க கூட முடியாம உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குதுனு தெரிஞ்சப்ப என்னால முடியலடி.. அப்படியே அந்த நிமஷமே என் உயிர் போயிட கூடாதான்னு இருந்துச்சு… இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் நான் இப்படி ஃபீல் பண்ணினது இல்லடி… ஏன்டி இத்தனை வருஷம் கழிச்சு என் கண் முன்னாடி வந்து இப்படி எனக்குள்ள காதலை விதைச்சு அது முளைச்சு வெளி வர்றதுக்கு முன்னாடியே அப்படியே மண்ணுக்குள்ள போட்டு புதைச்சுட்டயே… முடியலடி… வலிக்குதுடி… நான் ஏன் உயிரோட இருக்கனும்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் என்னை நினைக்க வச்சுட்டயே… என்னால இந்த வேலையை விடவும் முடியாது… ஏனா என் குடும்பத்தோட நிலைமை அப்படி… எனக்குனு நிறைய பொறுப்பு இருக்கு… என்ன பண்றது. இனி உன்னை பார்க்குற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட காதல் தோல்வி தானே நினைவு வரும். நான் எப்படி உன்னை கடந்து போவேன். தெரியலடி… ஆனா ஒன்னு மட்டும் உறுதி என் வாழ்க்கையில உன்னை தவிர வேற  ஒருத்தி இல்ல.“ என்று உள்ளே சென்ற மதுவின் உதவியால் அவனது மனதில் உள்ள பிணக்குகள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். 

அதை கேட்ட மாதேஷோ சில நிமிடங்கள் பேச வார்த்தைகளற்று இருந்தான். தன் மனதில் இருந்த அனைத்தையும் வெளிப்படுத்தி விட்டதாலோ என்னவோ ஆதி நிம்மதியாக உறங்கினான். 

“அடப்பாவி… அப்ப நீ அந்த ஐஸ்கிரீம் கடையில் உட்கார்ந்துட்டு இதுக்காக தான் அந்த நீலாம்பரி மேடத்த முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தயா? நானும் கூட ஏதோ சும்மா எப்பவும் பொண்ணுகள சைட் அடிக்கற மாதிரி பார்த்துட்டு இருந்தேனல்ல நான் நினைச்சேன்… இப்படி ஒரு நினைப்பு உனக்குள்ள இருந்துச்சுனு தெரியாம போச்சே எனக்கு… இத்தனை வருஷம் கழிச்சு வந்த உன் முதல் காதல் இப்படி தோல்வியில முடியற மாதிரி ஆகிடுச்சே.. ஆனா என்ன பண்றது நீ இதை கடந்து வந்து தான் ஆகணும்டா.. உன் கேரக்டருக்கு கண்டிப்பா நீ இதுல இருந்து வெளிய வந்துடுவேனு தெரியும்… ஆனாலும் கொஞ்ச நாளாவாது இந்த வலியை நீ அனுபவிச்சு தான் ஆகணும்.. அதுக்கு நான் கண்டிப்பா துணையா இருப்பேன்டா…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டே விடிய விடிய தூங்காமல் தனது நண்பனை நினைத்து கொண்டிருந்தான்.

அந்த நாளின் நினைவுகளிலிருந்து வெளி வந்தவன் இன்னமும் தனது நண்பன் கைப்பேசியில் இணைந்திருப்பதை நினைவில் கொண்டு “ஹலோ… ஹலோ… ஆதி… சொல்லுடா… என்ன ஆச்சு உனக்கு…” என்றான்.

“டேய்… இவ்வளவு நேரம் உயிர கொடுத்து பேசிட்டு இருந்தா நீ என்ன தூங்கிட்டயா? எரும மாடே…” என்று அவன் போக்கில் திட்டி கொண்டிருந்தான்.

இவனுக்காக நாம வருத்தப்பட்டா இவன் நம்மளையே திட்டுறான் பாரு… என்று மனதிற்குள் நினைத்த மாதேஷோ “டேய்… அறிவு கெட்டவனே… இப்படி அர்த்த ராத்திரியில போன் பண்ணி எழுப்பி தூங்க விடாம பண்ணினா நான் என்ன பண்றது சொல்லு…” என்றான்.

“அப்ப என்ன விட உனக்கு தூக்கம் தான் பெருசா போச்சா…”

“இப்ப என்ன விசயம்னு சொல்ல போறயா இல்ல நான் கால்ல கட் பண்ணிட்டு தூங்க போயிடுவேன்…”

“சரி. சரி டென்ஷன் ஆகாத சொல்றேன்…” என்றவன் இன்று வீட்டிற்கு வந்த பின்பு நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினான். 

அதைக்கேட்ட மாதேஷோ, “இதெல்லாம் ஒரு விசயம்னு சொல்ல தான் கூப்பிட்டயா? உன் தம்பியும், அம்மாவும் உன்ன மதிச்சு நல்லபடியா பேசி இருந்தா தான் அதிசயம்… இப்படி பேசறது எல்லாம் அதிசயமே இல்ல… இதெல்லாம் ஒரு விசயம்னு இதுக்கு போய் வருத்தப்பட்டுட்டு சாப்பிடாம இருந்து இந்த நேரம் வரைக்கும் நீயும் தூங்காம என்னையும் போன் போட்டு தூங்க விடாம இப்படி டார்ச்சர் பண்ற பார்த்தயா? உன்னை எல்லாம் எதை கொண்டு அடிச்சா தகும்… இப்ப போனை வைக்கல உன் வீட்டுக்கு வந்து உன்னை அடிப்பேன்.. ஒழுங்கா காலைல நேரத்துல எழுந்து கிளம்பு ஆஃபிஸ் போகனும்.. போய் தூங்கு முதல்ல..” என்று தனது நண்பனுக்கு கட்டளையிட்டு விட்டு தூங்கினான்.

ஆதி வீட்டில் நடந்த விசயத்தை மட்டும் தான் தனது நண்பனிடம் கூறி ஆறுதல் தேடினான். நீலாம்பரியை பற்றிக் கூற விளையவில்லை. அதை மட்டும் மறைத்தான். ஏனோ அவனிடம் கூறியதில் பாதி பாரம் குறைந்தது போல் இருக்க தூக்கம் அவனது கண்களை சுழற்றியது.

மறுநாள் காலை கதிரவன் செவ்வனே தனது வேலையை  தொடங்கி இருக்க ஆதியும் எழுந்து அலுவலகத்திற்கு கிளம்பி தனது அறையை விட்டு வெளியே வந்தான். 

“ஆதி… வா சாப்பிட்டு போவயாமா…” என்று அவனது அன்னை கூற மறுப்பேதும் பேசாமல் போய் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான். 

“மதிய சாப்பாடு எல்லாம் எப்படி கொண்டு போரயா? இல்ல அங்க ஆஃபிஸ்லயே கேன்டீன் இருக்குமா?” என்று சாரதா கேட்டார்.

“இப்பவாவது இதெல்லாம் உங்களுக்கு கேட்க தோணுச்சே… உங்கனால முடிஞ்சா எனக்கு மதியம் சாப்பாடு செஞ்சு கொடுங்க இல்லையா விடுங்க நான் பார்த்துக்கறேன்…” என்றவன் உணவு உண்பதில் மும்மரமாக இருந்தான்.

“இதென்ன பதில் ஆதி… உனக்கு செஞ்சு கொடுக்காம எனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை…” 

“உங்க சின்ன பையனுக்கு வேலை செய்யவே நேரம் சரியா இருக்கும் இதுல எனக்கு செய்யறதுக்கு எங்க உங்களுக்கு நேரம் இருக்கு… அதான் அப்படி சொன்னேன்.”

“ஆதி நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற… எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தான்… நேத்து ஏதோ அனிதாக்கு இன்னும் வரன் முடியலையேனு ஒரு ஆதங்கத்துல அப்படி பேசிட்டேன்… அதுக்குனு உன் மேல எனக்கு பாசம் இல்லாம இல்ல…”

“ம்மா… அனிதா மேல உங்களுக்கு இருக்கற பாசம் கூடப்பொறந்த அண்ணன் எனக்கு இருக்காதா என்ன? அவளை நல்ல இடத்துல கட்டி கொடுக்கனும்னு எனக்கும் ஆசை தான். அவளுக்காக கண்டிப்பா எல்லாமே செய்வேன். முதல்ல நான் குடும்பத்துக்காக் எல்லாம் செய்வேனு முதல்ல நீங்க நம்புங்க… எனக்கு நடந்தது ஒரு விபத்து… தெரியாம நடந்தது… நானே தெரிஞ்சு ஒன்னும் அந்த லாரி முன்னாடி போய் விழுகல… சும்மா எப்ப பார்த்தாலும் நீங்க எனக்கு செலவு செஞ்சத சொல்லி காமிச்சுட்டே இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு… நானும் உணர்வுள்ள ஒரு மனுஷன் தான்… நான் என்னமோ எப்ப பார்த்தாலும் தண்ணி அடிச்சுட்டு ஊதாரித்தனமா சுத்திட்டு இருந்த மாதிரி பேசறீங்க.. எனக்கும் குடும்ப பொறுப்பு இருக்கு…” என்றவன் கைகளை கழுவி விட்டு எழுந்து வெளியே செல்ல மாதேஷ் சரியாக வந்தான்.

“அப்புறம் மாதேஷ் என்னோட ஃப்ரண்ட்… சின்ன வயசுல இருந்தே… அது உங்களுக்கே நல்லா தெரியும்… அப்படி என்ன அவன் மேல கோபம் உங்களுக்கு… எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்கீங்க? எனக்கு ஏதாவது ஒன்னுனா முதல்ல துடிக்கறது அவன் மட்டும் தான் இனிமேல் அவன தப்பா பேசாதீங்க… நான் எப்பவும் ஒரே மாதிரி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்… எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அவனும் முக்கியம்… இனி அனிதாவோட கல்யாணம் என்னோட பொறுப்பு… அவளுக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பேன். நீங்க இனி அதை பத்தி கவலைப்பட வேண்டாம்…” என்று அங்க நின்றிருந்த அனிதா மற்றும் அபினவ்வை பார்த்து கொண்டே கூறி விட்டு வெளியேறினான். 

“பாருடா… உன் அண்ணா எப்படி பேசிட்டு போறானு… நான் என்ன சொன்னாலும் தப்பாவே புரிஞ்சுக்கறான்… எல்லாம் அந்த மாதேஷோட அம்மாவும், அப்பாவும் சொல்லி கொடுத்து இவன ஏத்தி விடுறாங்க போல…”

“ம்மா… விடுங்க… பார்க்கலாம் அதான் சொல்லிட்டானே அனிதா கல்யாணம் அவன் பொறுப்புனு என்ன செய்யறானு பார்க்கலாம்… நீங்க எனக்கு டிஃபன் எடுத்து வைங்க… நான் குளிச்சுட்டு வர்ரேன்…” என்றவன் உள்ளே சென்று விட்டான்.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அனிதாவோ “ம்மா… நீ எப்பவுமே ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் வைக்குற… அண்ணன் இப்ப பேசுனதுல என்ன தப்பு இருக்கு… அதோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டிட்டு போகுது. நீ கொஞ்சமாவது உன் பெரிய மகனையும் புரிஞ்சுகிட்டு நடக்க முயற்சி பண்ணு…” என்றாள்.

“நீ எனக்கு ஒன்னும் பாடம் சொல்லி கொடுக்க வேண்டாம். யார் கிட்ட எப்படி நடந்துக்கனும்னு எனக்கு தெரியும்… நீ போய் சின்னவனுக்கு தோசை சுடு…” என்றார் சாரதா…

“என்னமோ பண்ணுங்க… இப்ப அண்ணன் மனசுல இருக்கறதுல பாதியை தான் கொட்டிட்டு போயிருக்கு… அது கோமாவுல இருந்தப்ப நீங்க எடுத்த சில முடிவுகளை கேட்ட இன்னும் உடைஞ்சு போய் என்னவெல்லாம் பேசுமோ தெரியல… எல்லாத்தையும் எதிர்பார்த்து ஒரு நாள் காத்திருங்க…” என்று கூறிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.

இதைக்கேட்ட சாரதாவின் மனம் தான் திக்கென்று ஆனது. 

சாப்பிட வந்து அமர்ந்த சின்ன மகனிடம் அதை பற்றி கேட்க “ம்மா.. இந்த விசயம் நம்ம மூணு பேரு அப்புறம் வெளியில ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்… அவங்கள எல்லாம் உன் பையன் சந்திக்க வாய்ப்பு இல்ல… அப்புறம் நீயும் நானும் சொல்ல மாட்டோம்… சொன்னா உன் பொண்ணு தான் சொல்லுவா… எதுக்கும் அவள கொஞ்சம் மிரட்டி வை… கல்யாணம் எல்லாம் அவன் தான் செஞ்சு வைக்க போறாங்கற விசுவாசத்துல எல்லாத்தையும் உளறி கொட்டிட போறா…” என்று கூறிவிட்டு சென்றான். 

அவன் கூறியது சாரதாவிற்கு சரியென்று பட உடனே இது பற்றி பேச அனிதாவிடம் சென்றார்.

அப்படி என்ன விசயத்தை இவர்கள் ஆதியிடம் இருந்து மறைக்கிறார்கள். அந்த விசயம் அவனுக்கு தெரிய வந்தால் அவன் எப்படி எல்லாம் துடிப்பான்…

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top