அத்தியாயம்-9

கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. 

“டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு பேசிட்டு போறாங்க… நம்ம எல்லாம் அவ்வளவு ஒர்த் இல்லைனு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கறது…” என்றான் மாதேஷ்.

“இங்க அவங்க பேசுன ஒவ்வொரு வார்த்தையும் உனக்கானது இல்ல… எனக்கானது… அது கூட புரியலையாடா… அது மட்டுமில்ல இன்னொரு விசயத்தை கவனிச்சயா நீ…” என்றான் ஆதி.

“என்னடா?”

“காலைல இருந்து உன்னையும் என்னையும் பார்த்தவங்க எல்லாம் என்ன சொன்னாங்க?”

“என்ன சொன்னாங்க..” என்று திரும்பவும் அவனிடமே கேட்டு இருந்தான் மாதேஷ்.

மாதேஷை பார்த்து முறைத்த ஆதியோ, “இன்னைக்கு பார்த்த எல்லாரும் உன் கண்ணு சிவந்துருக்கறத பார்த்து நீ தான் தண்ணி அடிச்சேனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இந்த நீலா மட்டும் என்னைய பார்த்து ராத்திரி மப்பு அதிகமாகிடுச்சானு கேட்டுட்டு போறா? இதுக்கு என்னடா அர்த்தம்..” என்றான்.

“அட ஆமால்ல… இவளுக்கு எப்படி தெரிஞ்சுது…”

“இவளா? அவங்க நம்ம முதலாளி… கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசு…” 

“அத விடு… அவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது.. நீ தண்ணி அடிச்ச விசயம் உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும்… நீ ஏதாவது சொன்னியா?”

“டேய்… நேத்து இண்டர்வியூ நடக்குறப்ப பார்த்தது அதுக்கு பின்னாடி இப்ப தான் பார்க்குறேன் அவள… அதுவும் இல்லாம இதெல்லாம் சொல்ற அளவுக்கு அவ கூட நான் இன்னும் நெருங்கி பழகுல…”

“ஓ… உன் ஆசையும் அது தான் போல…” என்று சத்தம் வெளியே கேட்காத அளவிற்கு வாய்க்குள் முணங்கினான்.

ஆதி வேறு யோசனையில் இருந்ததால் அவனால் தனது நண்பனின் பேச்சினை கவனிக்க முடியவில்லை. 

“எப்படி என்னோட முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சா… யாருக்கும் தெரியாதே…” என்று தனக்குள்ளேயே பேசி கொண்டிருந்தான்.

“சரி வாடா போகலாம். அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா உன்னை பத்தி தெரிஞ்சுருக்கும்… வா வண்டியில ஏறு…. உங்க அம்மா ரொம்ப காத்திருப்பாங்க… நேத்தும் நீ வீட்டுக்கு போகல…” 

அம்மா என்றவுடன் அனைத்தையும் மறந்தவன் பேசாமல் ஏறி மாதேஷின் பின்னே அமர்ந்தான். 

அங்கே வண்டியில் சென்று கொண்டிருந்த பாவையவளுக்கோ பழைய நினைவுகள் அவளை ஆட்டி படைத்து கொண்டிருந்தது. 

“ஹேய்.. தீரா… எங்கிட்ட தண்ணி அடிக்க மாட்டேனு சத்தியம் எல்லாம் பண்ணிட்டு அப்புறம் எதுக்கு நேத்து தண்ணி அடிச்சுருக்க?”

“ஏய்… நான் தண்ணி அடிக்கலடி…”

“பொய் சொல்லாதடா… உன்னை பத்தி எனக்கு தெரியாது?” 

“உன் முகம் எப்ப எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்… உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி…”

“அவ்வளவு தெரியுமாடி என்னை உனக்கு…”

“கண்டிப்பா…”

“நான் என்ன மனசுக்குள்ளே நினைச்சுகிட்டு இருக்கேனு முதற் கொண்டு எல்லாம் தெரியுமா?”

“ஓ… தெரியாம என்ன?”

“சரி… இப்ப என்ன நினைக்கறேனு சொல்லு…”

“இவ எப்படியும் தப்பா தான் சொல்ல போறா…” என்று அவன் நினைக்க, அவனது முகத்தினை பார்த்து கொண்டிருந்த நீலாவோ “நான் எப்படியும் தப்பா தானே சொல்லுவேனு நினைச்ச…” என்றாள்.

அவனின் விழிகள் மீன் குஞ்சுகள் வாயினை விரிப்பது போல் விரிந்தது.

“இப்ப நாம இந்த விசயத்தை பத்தி பேசுனதால நான் நினைச்சத கரெக்டா சொல்லிட்ட… சரி… நான் ஒரு பாட்டு நினைச்சுக்கறேன்… அது என்னனு சொல்லு பார்க்கலாம்?” என்றவன் மனதிற்குள் ஒரு பாட்டினை நினைத்து கொண்டான்.

அவளோ தனது குரலின் மூலம் அழகாக பாடிக்காட்டி கொண்டிருந்தாள்.

“தாஜ்மஹால் ஓவிய காதல்… தேவதாஸ் பாடிய காதல்…” 

அவளது குரலின் மூலம் அந்த பாடல் அழகாக தான் இருந்தது. ஆனால் அவனுக்கு மட்டும் ஏனோ அந்த பாடல் என்றுமே பிடிக்காது. 

“ஏய்… எப்படிடி…”

“ஹ்ம்ம்… பாட்டுன உடனேயே பிடிச்ச பாட்டா தான் நீ நினைப்ப அதனால உனக்கு பிடிச்ச பாட்டை தான் நான் சொல்லுவேனு தப்பு கணக்கு போட்டுட்டயே தீரா…” என்றவள் அவனது சட்டை காலரினை பிடித்து இழுத்து அவனது முக்கோடு தனது மூக்கினை உரசி… “உன் மனதினை நான் அறிவேன். ஏனென்றால் நான் என்பது நீ… நீ என்பது நான்… எப்பொழுதும் நீ நினைப்பதை செய்து முடிப்பவள் நான்… உனக்காக நான்… உன்னோடு நான்.. உனக்கு மட்டுமே நான்…” என்று தனது மனதில் அவன் மீதான காதலின் ஆழத்தினை அவனுக்கு காட்டி கொண்டிருந்தாள் நீலா… 

அதை கேட்டு பிரமித்து நின்ற ஆதியோ அவளது இடையினை தழுவி தன்னோடு அவளை மேலும் நெருக்கியவன் “சத்தியமா சொல்றேன்டி உன் அளவுக்கு என் காதல் இருக்குமா என்னனு எனக்கு தெரியல… ஆனா உன் காதலை நான் அனுபவிக்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும். இந்த உலகத்துலயே நான் ரொம்ப ரொம்ப அதிர்ஷடசாலி. காதலிக்கறத விட காதலிக்கப்படறது சுகம்னு சொல்லுவாங்க அப்படி பார்த்தா இந்த உலகத்துலயே நான் தான் ரொம்ப சுகவாசி… பல கோடி சம்பாரிச்சதனால கிடைக்கற சுகத்த விட இந்த சுகம் ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் இன்னும் இந்த சுகத்த அனுபவிச்சுகிட்டே இருக்கனும் போல தோணுது. எனக்கு வாழ்நாள் முழுவதும் இத கொடுப்பியா?” என்று அவளது கழுத்து வளைவினுள் முகத்தினை புதைத்து  கொண்டு மென்மையான குரலில் அவன் கேட்டு கொண்டிருந்தான்.

அவனது பேச்சினை அவள் உணர்ந்தாலும் பேதையின் பேச்சுகள் தான் வெளிவர மறுத்தது. அந்த ஒரு நிலைமையில் அவளை வைத்திருந்தான் ஆடவன் அவன்.

பழைய நினைவுகள் தன்னை ஆட்கொண்டிருக்க அதிலிருந்து வெளியே  வரும் நிலை தெரியாமல் தள்ளாடி கொண்டிருந்தாள் பாவையவள்.

வெறும் நினைவுகள் மட்டுமே என்றால் அதை மறந்து வெளியே வந்து விடலாம். ஆனால் ஆடவனவன் அவளுடைய உணர்வுகளோடு பிண்ணி பிணைந்திருப்பவன் அல்லவா… 

நினைவுகள் இனிமையோ, துன்பமோ அதிலிருந்து ஒருவர் வெளிவருவது இயல்பு. ஆனால் உணர்வுகள் அப்படியல்லவே… 

எப்படியோ வண்டியை ஓட்டி கொண்டு வந்து விட்டாள் தனது உயிரான குழந்தை படிக்கும் பள்ளியின் அருகே…

வண்டியை நிறுத்தியவள் உள்ளே செல்ல “ம்மா…” என்று கத்தி கொண்டு வந்து அவளது காலினை கட்டி கொண்டாள் ஆதினி.

 “வந்துட்டீங்களா மேடம்… இப்ப தான் ஆதினி உங்களை கேட்டு அடம் பிடிக்க ஆரம்பிச்சிருந்தா… அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க…”

“ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலை அதான் வர லேட் ஆகிடுச்சு…” என்றவள் ஆதினியின் பக்கம் திரும்பி, “பட்டுக்குட்டி அம்மாவ ரொம்ப மிஸ் பண்ணுனீங்களா? சாரிடா… இனி லேட் ஆகாம பார்த்துக்கறேன்…” என்றாள்.

“மேடம் ஆதினி சீக்கிரம் மத்த குழந்தைக மாதிரி பேசிடுவாளல்ல…”

“கண்டிப்பா பேசிடுவா… ஆனா அவ கூட நீங்களும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்… நிறைய பேர் கூட பேசி பழகுனா கண்டிப்பா சீக்கிரமே அவளும் மத்த குழந்தைக மாதிரி பேச ஆரம்பிப்பா… இப்ப இருக்கற பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதுக்கு  முக்கிய காரணமே பெற்றோர்கள் பணம் பணம்னு அதுக்கு பின்னாடி ஒடறது தான்.  சம்பாரிச்ச்சு அந்த பணத்தை எங்கள மாதிரி இருக்கறவங்க கிட்ட கொடுத்துட்டு என் குழந்தைக்கு சீக்கிரம் பேச்சு வர வைங்கனு சொல்றாங்க… அவங்க கொஞ்சமாவது தன்னோட குழந்தைக கூட பேசி சிரிச்சு அவங்க சொல்றத கேட்டாங்கனா கண்டிப்பா எந்த குழந்தைய்ம் இப்படி இருக்க மாட்டாங்க…”

“மேடம் நான் அப்படி இல்ல…”

“நீங்க அப்படி இல்ல ஒகே… ஆனா பெரும்பாலும் இப்ப இருக்கற பெற்றோர்கள் தங்களோட வேலை கெட கூடாது எந்த வித இடையூறும் இருக்க கூடாதுனு நினைச்சு மொபைல அவங்க கைல கொடுத்திடறாங்க… இது தான் எல்லா தப்புக்கும் முதல் படியே.. சாரி மேடம் ரொம்ப நேரம் பேசிட்டேன்… நிங்க கிளம்புங்க… வீட்டுல அவ கூட பேசுங்க… அவளையும் பேச வைங்க… அப்புறம் நிறைய ஆட்களோட பழக விடுங்க.. கண்டிப்பா அவ சீக்கிரம் பேச ஆரம்பிப்பா…”

“ஓகே. தேங்க்யூ…” என்றவள் ஆதினியை தூக்கி கொண்டு காரின் அருகே சென்றாள்.

ஒருவனின் பிரிவினால் தனது வாழ்க்கையினை இழந்தவள் சிறு குழந்தையின் வரவினால் தனது வாழ்க்கைக்கு வசந்தத்தை ஏற்படுத்தி கொண்டாள்.  மறுபடியும் இழந்த வசந்தம் அவள் கைவந்து சேருமோ…

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top