நேர்முகத் தேர்வில் தேர்வாகி இருந்த அனைவரும் இன்று வேலைக்கு வரும் படி உத்தரவு இருந்தது.
அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே “ஹாய்…” என்று முன்னே வரவேற்பறையில் இருந்த பெண் ஆதியை நோக்கி வேகமாக கைகளை ஆட்டினாள்.
“ஹாய்… டார்லிங்க்… எப்படி சொன்னபடியே இங்கேயே வேலைக்கு சேர்ந்துட்டேன் பார்த்தயா?” என்று கூறி சிரித்தான்.
“ரொம்ப ஹாப்பி… உங்க நேம்…”
“ஆதி… ஆதீரன்…”
“வாவ்… நைஸ் நேம்… நான் உங்கள ஸ்பெஷலா தீரன்னு கூப்பிடலாமா?”
“நோ… பேபி… எல்லாரையும் போல ஆதினே கூப்பிடேன்…”
“எல்லாரும் நானும் ஒன்னா?” என்று வெட்கப்பட்டு கொண்டே அந்த பெண்ணும் கேட்டாள்.
“அது என்னவோ இல்ல தான்… பட்… இந்த தீரன் மட்டும் வேண்டாமே…” என்றான்.
ஏனோ அந்த பெயர் தனக்கு மிக மிக நெருக்கமானவர்கள் அழைப்பது போல் ஒரு உணர்வு… அதை மற்றவர்கள் கூற அவன் மனம் விரும்பவில்லை. அந்த நெருக்கமானவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவும் அவன் முனையவில்லை.
“சரி… பேபி… இனி அடிக்கடி பார்க்கலாம்…” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான்.
“ஏன் ஆதி… வீட்டுல உன் அம்மாகிட்ட ஒரு மாதிரி இருக்க… எங்க வீட்டுல என் அம்மாகிட்டயும், அப்பாகிட்டயும் வேற மாதிரி இருக்க… இப்படி வெளியில அழகான பொண்ணுகள பார்த்தா இன்னும் டிஃபரண்டா பிஹேஃப் பண்ற… உண்மையிலேயே உன் கேரக்டர் தான் என்ன?” என்று கூறினான்.
அவன் கூறுவதை கேட்டு சத்தமாக சிரித்த ஆதியோ… “ஏன்டா இத்தனை வருஷம் என் கூட பழகியும் இன்னும் என்னை நீ புரிஞ்சுக்கவே இல்லையா?” என்றான்.
“புரிஞ்சா நான் ஏன் இப்படி கேட்கபோறேன்…”
“இன்னும் நீ வளரணும் தம்பி…” என்று அவனது தோள்களை தட்டி கொண்டே கூறினான்.
“ஆமா இதுக்கு மேல வளர்ந்து என்ன பண்ண போறேன்…”
“டேய் புத்திசாலி நான் வளரனும்னு சொன்னது உன் உயரத்துல இல்ல.. அறிவுல… இப்பவாவது புரிஞ்சுருக்குமே நான் சொன்னது சரிதான்னு…”
“டேய்… உன்னை…” என்று அவனது கழுத்தை நெறிக்க சென்றவன் தாங்கள் இருப்பது அலுவலகம் என்று கருதி ஒதுங்கி நின்றான்.
ஆதிரனை தவிர மற்ற அனைவரையும் என்ன வேலை, எப்படி அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துமாறு வேறு சிலருடன் அனுப்பி வைத்தார்.
“ஆதி… உட்காருங்க…” என்று தனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர வைத்தவர், “இங்க பாருங்க ஆதி… உங்களுக்கு கொடுத்திருக்கற இந்த பொறுப்பு கம்பெனியில ரொம்ப முக்கியமானது. நான் முதல்லயே சொன்னது தான் நீலா உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்கா… அதை காப்பாத்த வேண்டியது உங்க பொறுப்பு… கண்டிப்பா உங்க மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு…” என்றார்.
“சார்… நீங்க கவலைப்பட வேண்டாம்… கண்டிப்பா உங்க ரெண்டு பேரோட நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். அதோட இந்த கம்பெனி இன்னும் வளர்ச்சி பெற என்னாலான முழு ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நான் தருவேன்…”
“குட்… இந்த வார்த்தையை தான் உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்த்தேன். நீங்களும் என்னுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காம உங்க வாக்கை கொடுத்திட்டீங்க…” என்றவர் அவனது தோளை தட்டி கொடுத்தார்.
அதற்கு பதிலாக அவனும் சிரித்தான். அவனின் புன்னகையை கண்ட அவர் “சிரிச்சே எல்லா பொண்ணுகளையும் கவுத்துடுவான் போலயே…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டே அவனை கண்டார்.
“என்ன சார்.. என்னையே பார்த்துட்டு இருக்கீங்க…”
“உங்க சிரிப்ப பார்த்தா யாரா இருந்தாலும் மயங்கிருவாங்க… அதுவும் குறிப்பா பெண்கள்…”
அதற்கும் ஒரு சிரிப்பையே பதிலளித்தான்.
“சரி… சரி… ஆதி நம்ம கம்பெனிக்கு யாரெல்லாம் கிளைண்ட், என்னென்ன வேலை எல்லாம் செய்யறாங்க எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு… பொறுமையா உட்கார்ந்து எல்லாத்தையும் புரிஞ்சுக்கோங்க… நாளைல இருந்து உங்களோட வேலை என்னனு பார்க்கலாம்…” என்று தனக்கு முன்னே இருந்த கோப்புகளை அவனிடம் நீட்டினார்.
அதை வாங்கியவன் பொறுமையாக அமர்ந்து அனைத்தையும் கவனிக்க தொடங்கினான்.
அவன் வேலையில் இறங்கியதை பார்த்ததுமே அவர் நீலாம்பரியை சந்திக்க சென்றார்.
நீலாம்பரியின் கதவை தட்டி விட்டு அவளுடைய அனுமதிக்காக காத்திருந்தார்.
“எஸ்… கம்மின்…” என்று அவள் அனுமதி அளித்த பின்னே அவர் உள்லே நுழைந்தார்.
“அங்கிள்… நீங்க உள்ளே வர்றதுக்கு அனுமதி கேட்க வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அப்புறமும் எதுக்கு கதவை தட்டிட்டு இருக்கீங்க…”
“நீலா… நீ என்ன தான் நான் பார்த்து வளர்ந்த பொண்ணுனாலும் உன்னோட பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கனும்… நானே அதை செய்யலைனா மத்தவங்களும் எப்படி அதை செய்வாங்க… சோ… லீவ் இட்… அப்புறம் நேத்து வேலைக்கு எடுத்த எல்லாரும் இன்னைக்கு ஜாயின் பண்ணிட்டாங்க…”
அவரின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவள் “ஓ… அப்படியா… எல்லாரும் வந்துட்டாங்களா…” என்றாள்.
“ம்…. எல்லாரும் வந்தாச்சு…” என்றவர் அவளுடையே முகத்தையே கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.
“உங்க போஸ்டிங்குக்கு ஒருத்தர அப்பாய்ன்மென்ட் பண்ணி இருந்தோமே… அவரு…” என்று இழுத்தாள்.
“ம்… ஆதி… ஆதீரன்… அவரும் வந்தாச்சு… அப்பாய்ன்மென்ட் ஆர்டர் கொடுக்காதவங்களே வந்திருக்கும் பொழுது அவருக்கு தான் நேத்தே வேலைக்கான ஆர்டர் கொடுத்தாச்சே… அப்புறம் அவர் வராம இருப்பாரா?”
அவரின் பேச்சில் தன்னை கண்டு கொண்டார் என்பதை உணர்ந்த நீலாம்பரியோ பதறி தன்னுடைய தவறை மறைப்பதற்காக, “ஐயோ… அங்கிள் தப்பா எடுத்துக்காதீங்க… அந்த ஆர்டர்ல கொஞ்சம் மாறுதல் செய்ய வேண்டி இருந்துச்சு… அதனால தான் போறதுக்கு முன்னாடி அவருக்கு மட்டும் நானே அடிச்சு கொடுத்தேன்… நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க..” என்றாள் அவசரமாக.
அதை கேட்ட சதாசிவமோ தலையை ஆட்டி கொண்டே சிரித்து “நீலா நான் ஒன்னும் உன்னை தவறா நினைக்கல… நீ ஒன்னும் இவ்வளவு விளக்கம் கொடுக்கனும்னு அவசியமும் இல்ல… சரியா… நானும் படிச்சு பார்த்தேன். நீ என்ன மாறுதல் பண்ணி இருக்கேனு… இனிமேல் அடிக்கற எல்லா ஆர்டர்லையும் நீ சொன்ன மாதிரியே செஞ்சுடலாம் இல்லையா?” என்றார்.
“ஆமா அங்கிள்… எல்லாருக்கும் அப்படியே அடிச்சு கொடுத்திடுங்க… நான் கையெழுத்து போட்டு அனுப்பறேன்…” என்றவள் வேற வேலை விசயங்களை பற்றி சதாசிவத்திடம் பேசி கொண்டிருந்தார்.
கடைசியா “அப்புறம் அங்கிள்…” என்றாள்.
அவளுடைய மனதில் ஆதியை பற்றி ஏதாவது கூறுவாரோ என்று நினைத்து பேச்சை வளர்க்க ஆரம்பித்தாள்.
அவரோ “வேற ஒன்னுமில்ல நிலா…” என்றவர் “சரி நீலா கிளம்புறேன்…” என்றவர் எழுந்து நிற்க,
“அங்கிள்… ஆதி… ஐ மீன் ஆதீரன் புதுசா ஜாயின் பண்ணி இருக்காரே அவர் எப்படி வேலை செய்யறாரு..” என்று இதுவரை கேட்க தயங்கியதை கேட்டு விட்டு அவரின் முகம் பார்த்தாள்.
“இன்னைக்கு தானே ஜாயின் பண்ணியிருக்கான்… ஒரு வாரம் போகட்டும்… பார்க்கலாம். எப்படி செய்யறானு…” என்று கூறினார்.
“அங்கிள்… பார்த்தா புத்திசாலியா தான் தெரியறாரு.. சோ… கொஞ்சம் அவருக்கு எல்லாம் சொல்லி கொடுங்க…”
“கத்துக்க அவர் ரெடினா சொல்லி கொடுக்க நானும் ரெடி… சரிமா வர்ரேன்.. ஆதி என்ன செய்யறாருனு பார்க்கலாம். முதல் நாள் தானேனு சொல்லிட்டு நம்மளோட கிளைண்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டும்னு அது சம்பந்தமான எல்லா ஃபைல்ஸையும் கொடுத்துட்டு வந்திருக்கேன்… பையன் என்ன பண்றானு போய் பார்க்கலாம்…” என்று கிளம்பினார்…
“அங்கிள்… அவருக்கே உடம்பு சரியில்லைனு சொன்னாரு… சோ கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சுகிட்டும்… ரொம்ப வேலை கொடுத்து அவரை மறுபடியும் நோயாளி ஆக்கிடாதீங்க…” என்றாள்.
அவள் கூறியதை கேட்டு சிரித்த சதாசிவமோ… “ரொம்ப தான் அக்கறை படற மாதிரி தெரியுது…” என்றார்.
“அங்கிள்… எல்லாம் ஒரு மனிதாபிமானம் தான்… நீங்க தவறா ஏதும் நினைச்சுக்காதீங்க…” என்றாள்.
“சரி… அப்படியே நினைச்சுக்கறேன்… போதுமா…” என்றவர் கிளம்பி சென்றார்.
செல்லும் அவரின் முதுகையே வெறித்து பார்ப்பது போல் நீலாவின் பார்வை இருந்தாலும் அவளின் நினைவுகள் முழுவதும் நிறைந்திருப்பது அவன் மட்டுமே.
அவர் வெளியேறிய அடுத்த நிமிடம் அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவியின் மூலம் ஒவ்வொரு அறையையும் ஆராய்ந்தாள்.
சரியாக ஆதி அமர்ந்திருக்கும் சதாசிவத்தின் அறையை மட்டும் பெரிதாக்கி தனது கணிணியின் திரையில் பார்த்தாள்.
ஆதி அமர்ந்து ஒவ்வொரு கோப்பினையும் பார்த்து கொண்டிருந்தான்.
அவளின் பார்வையோ அவனை முழுவதுமாக அலசி ஆராய்ந்தது.
கோப்பினுள் மூழ்கி இருந்தவன் சட்டென்று திரும்பி அறையினை சுற்றும் முற்றும் பார்த்தான்.
“யாரோ நம்மள உத்து பார்க்கறது போல தெரியுதே… ஆனா என்னை தவிர யாருமே இங்க இல்லையே…” என்று வெளிப்படையாகவே பேசினான்.
“இவன் என்ன… தனியாவே பேசிகிட்டு இருக்கான். ஒரு வேளை விபத்து நடந்ததுல மண்டைல அடிபட்டதுல பைத்தியம் ஏதாவது பிடிச்சுருச்சா…” என்று இவளும் வெளிப்படையாகவே பேசி கொண்டிருந்தாள்.
“இங்க பாரு அவனை இப்படி பார்க்கறதே தப்பு… அப்புறம் அவனுக்கு பைத்தியம் பிடிச்சா என்ன பிடிக்கலைனா உனக்கென்ன?? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…” என்று அவளது மனசாட்சி அவளை மிரட்டியது.
“அதெப்படி விட முடியும்.. இப்ப அவன் எனக்கு கீழ வேலை செய்யறவன் அவனுக்கு ஏதாவது ஒன்னுனா எனக்கு தானே நஷ்டம்.”
அவள் கூறியதை கேட்டு அவளது மனசாட்சி சத்தமாக சிரித்து, “அவன் என்ன பத்து வருஷமாவா உனக்கு கீழ வேலை செய்யறான். அவன் இன்னைக்கு தான் வேலையில சேர்ந்து இருக்கான்… அப்புறம் என்ன நஷ்டம்… ஒரு வேலை வேலையில இல்லாம அவனுக்கு ஏதாவதுனா உனக்கு தனிப்பட்ட முறையில ஏதாவது நஷ்டம் ஆகுமோ…” என்று கூறியது.
“அவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல…” என்றாள் எரிச்சலுடனேயே..
அதைக்கேட்டு இன்னும் சிரித்த அவளது மனசாட்சியோ “ஏய்… என்னை யாருனு நினைச்ச… நான் உன்னோட மனசாட்சி… உனக்கும் அவனுக்கும் ஒரு டேஷும் இல்லைனு மூணாவது மனுஷங்க ஒத்துக்கலாம்… ஆனா நான் இல்ல… புரிஞ்சுதா… ஒழுங்கா நான் சொல்றத கேளு… அவன நீ வேலைக்கு எடுத்ததே முதல் தப்பு… அவன் ஒரு துரோகி… அவன் உனக்கு செஞ்ச எதையும் மறந்துடாத…” என்று மிகக்கடுமையான குரலில் எச்சரித்தது.
அதை கேட்டு ஒரு பெருமூச்சொன்றை விட்டாளொலிய ஏதும் பேசவில்லை.
மனம் ஒன்று கூற மூளை ஒன்று கூறி அவளை செயல்படுத்தியது.
மீண்டும் அவளது பார்வை கணிணியில் இருந்த அவனது உருவத்தை மொய்த்தது.
அங்கே சதாசிவம் வந்திருக்க அவரிடம் ஏதோ பேசி கொண்டிருந்தான்.
அதை பார்த்த அவளோ “ஏன் தீரா… அன்னைக்கு நீ அப்படி பண்ணுன… உன்னால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உன் மேல எனக்கு கோபம் இருந்துச்சு அதான் உன்னை தேடி வராம இருந்தேன். ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சு… இப்ப அதெல்லாம் நினைக்கும் பொழுது நீ வராததற்கு காரணம் இருக்கும்னு தோணுது… ஆனாலும் அதை கேட்க நான் விரும்பல… திரும்பவும் நீ என் வாழ்க்கைல வர வேண்டாம். நீ எனக்கு வேண்டாம். எனக்கு ஆதி இருக்கா… அவளுக்கு நான் இருக்கேன். இது போதும் எனக்கு… உனக்கும் பழசு எல்லாம் மறந்ததும் நல்லதா போச்சு… என் நினைவே உனக்கு வேண்டாம்.” என்று நினைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“ஆனாலும் நீ இப்ப என்னை யாரோ போல பார்க்கறது ரொம்ப கஷ்டமா இருக்குடா… நான் உனக்கு மூணாம் மனுஷியா… இப்படி நினைக்கும் பொழுதே என்னுடைய உயிரை யாரோ உள்ளிருந்து உருவிட்டு போறது போல இருக்கே… இவ்வளவு நாள் நான் உன்னை பார்க்காத வரை எதுவும் தோணலை.. ஆனா இப்ப உன்னை பார்த்து உன்னோட நிலைமைய பார்க்கும் பொழுது எனக்கு என்னவோ போல இருக்கே… நான் அந்த நேரம் கொஞ்சம் நிதானிச்சு யோசிச்சு இருந்திருக்கனுமோனு எனக்கு இப்ப தோணுது… எல்லாம் முடிஞ்சுருச்சு தீரா. இனி எனக்கு நீ வேண்டாம்… உனக்கு நானும் வேண்டாம். போதும்.. நமக்குள்ள எதுவும் இல்ல…” என்று தனக்கு தானே பேசி கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் அவளது கன்னம் தாண்டி கீழே விழுந்தது.
சட்டென அதை துடைத்தவள், “இல்ல… நான் அழ மாட்டேன்… அழ கூடாது… நான் அழுதா உனக்கு பிடிக்காதல்ல… நான் கெத்தா திமிரோட கெத்தா இருந்தா தானே உனக்கு பிடிக்கும்…” என்றவள் கண்ணீரை அழுத்தி துடைத்து கொண்டே, “இனி அழ மாட்டேன் தீரா…” என்று அழுந்த துடைத்து கொண்டே இருந்தாள். அவள் அவளாகவே இல்லை. மனதில் ஏதேதோ நினைவுகள் எதை எதையோ நினைத்து மருகி கொண்டிருந்தாள்.
தனது தந்தை இறந்த பின் தனி ஒருத்தியாக நின்று அந்த கம்பெனியின் முழு பொறுப்பையும் தனது கைகளில் ஏந்தி அவளது தந்தை வழிநடத்திய பொழுது இருந்த வளர்ச்சியை விட பல மடங்கு வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறாள் நீலாம்பரி.
ஆனால் தற்பொழுது அவனை நினைத்து இவ்வாறு அழுது கொண்டிருப்பதை பார்த்தால் இவளுக்கு அழுக கூட தெரியுமா என்று தான் நினைப்பர்.
அனைவரும் அவளின் தாய் தந்தையர் உட்பட அனைவரும் அவளது மகிழ்ச்சியையும், கோபத்தையும் மட்டுமே அறிந்திருக்க ஒருவன் மட்டுமே அவளது துன்பத்தையும், அழுகையும் கண்டிருக்கிறான். அவனின் முன்னிலையில் மட்டுமே தனது உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறாள். அதுவும் அவளது வாழ்வில் சில இழப்புகளுக்கு பிறகு தனது கோபத்தை மட்டுமே காட்டுவாள். தனது மகளின் முகத்தினை கண்டால் மட்டுமே அவளது முகம் மலரும். அந்த சிறுக்குருத்தின் அருகே இருக்கும் பொழுது மட்டுமே அவளது முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்திடும்,
அவள் என்ன மனநிலைமையில் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவன் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் வேண்டும் என்று ஒரு மனம் கூறினாலும் மற்றொரு மனமோ வேண்டவே வேண்டாம் என்று எடுத்துரைக்கும். விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே அல்லாடி கொண்டிருக்கிறாள்.
உள்ளுக்குள் உள்ள ஆசைகளை எல்லாம் திரை போட்டு மறைக்கிறாள். ஆனால் அது யாருக்காக என்று தான் தெரியவில்லை. திரையை அவளே விளக்குவாளா இல்லை அவன் சிரத்தை எடுத்து திறக்க வைப்பானா? யார் அறிவாரோ?
இவ்வாறு பல யோசனைகளின் நடுவே அவள் இருந்தாலும் அவளின் பார்வை அவனை தொடர்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
சதாசிவத்தின் அறையில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை பார்க்க தனது கணிணியின் திரையை அவள் பார்க்க அங்கே சதாசிவம் மட்டுமே அமர்ந்திருந்தார்.
மனதிற்குள் ஏதோ ஒரு பதற்றம். உடனே அலுவலகத்தின் அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவையும் ஒருங்கே இணைத்து பார்த்து கொண்டிருந்தாள். கண்களின் அலைப்புறுதலில் ஒரு வழியாக அவன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டறிந்து கொண்டவளின் முகத்தில் இவ்வளவு நேரம் அவளது தேடலுக்கான தீர்வு கிடைத்தாலும் அதில் நிம்மதிக்கு பதிலாக அனல் காற்று வீசியது.
உடனே தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள். நேரம் பதினொன்றை கடந்து இருந்தது. அவனின் நினைவுகள் ஒன்று போதுமே அவளது நேரத்தை களவாட. இவ்வளவு நேரமா தான் அவனை மட்டுமே நினைத்து கொண்டே அமர்ந்திருந்தேன். நேரம் தான் போச்சே தவிர வேலை எதுவும் நடக்கவேயில்லை என்று தன்னையே நினைத்து நொந்து கொண்டவள் மறுபடியும் திரையினை கண்டாள்.
மறுபடியும் அவளது முகம் தீப்பிழம்பாக மாறியது போல் சிவந்திருந்தது.
உடனே அங்கிருந்த தொலைப்பேசியை எடுத்தவள் ஒரு நம்பரை அழைத்து ஏதேதோ சில கட்டளைகளை பிறப்பித்து வைத்தாள். இத்தனையும் அவள் தனது கணிணி திரையை பார்த்து கொண்டே செய்தாள். சிறிது நேரத்தில் அவளது முகத்தில் கோபத்திற்கான சாயல் மறைந்து எதையோ சாதித்த உணர்வு அவளுக்கு தெரிந்தது.
சில நிமிடங்கள் கழித்து அவள் இருந்த அறைக்கதவு தட்டப்பட “எஸ்… கம்மின்..” என்று கம்பீரமாக ஒலித்தது அவளது குரல்.
இத்துணை நேரமும் சிறு குழந்தை போல் அழுதது இவள் தானா என்று எண்ணுமளவிற்கு அவளது முகம் கம்பீரத்தை கொண்டிருந்தது.
அன்றைய நாள் முழுவதும் அவனுடைய வேலை சதாசிவத்துடனேயே கழிந்தது.