அத்தியாயம்-1

அத்தியாயம் 1

பல அலுவலகங்களை உள்ளடக்கிய அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது வண்டியை கொண்டு வந்து நிறுத்தி நான் மாதேஷ்  பின்னே அவனது தோழன் ஆதிரன் அமர்ந்திருந்தான்.

வண்டியை நிறுத்திய பின்பு அதிலிருந்து இறங்கிய ஆதிரனோ அருகில் நின்றிருந்த வண்டியின் கண்ணாடியை பார்த்து தனது சிகையை வாறிக் கொண்டிருந்தான்.

“ஏண்டா உனக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியல நல்ல வேலையிலிருந்து என்னைய வேலையை விட்டு நிக்க வச்சு இப்படி கம்பெனி கம்பெனியா ஏற விடுறாயே… இது உனக்கே தப்பா தெரியல?” என்றான் மாதேஷ். 

தனது நண்பனை பார்த்துக்கொண்டே “பின்ன நான் மட்டும் பைலை எடுத்துட்டு லோ லோனு அலையனும் நீ மட்டும் சொகமா ஏசி ல உட்கார்ந்து வேலை செய்யணுமா?” என்றான்.

“டேய்  அதுக்காகத்தானே நான் வேலை செய்ற கம்பெனியில உனக்கும்  வேலை வாங்கி கொடுத்தேன். நீ தானே அந்த வேலையில நிக்காம வெளிய வந்த…” என்றான் மாதேஷ்.

“ஆமா நீ வேலை செஞ்சதெல்லாம் ஒரு கம்பெனி அதுல எல்லாம் வந்து நானும் வேலை செய்யணுமா? அந்த மேனேஜர் பார்த்தாலே எனக்கு அப்படியே கடுப்பா வருதுடா…”

“வருண்டா வரும்  ஏன் இப்படி சொல்ல மாட்ட… ஏதோ ஒரு வேலையில இருக்குறேனு சொல்லி எனக்கே இப்பதான் வீட்டுல  கல்யாணத்துக்கு  பொண்ணு பாத்துட்டு இருக்காங்க இப்ப வேலை இல்லைன்னு தெரிஞ்சா எவன்டா பொண்ணு தருவான். அதுமட்டுமல்ல இன்னும் எங்க அம்மாவுக்கு நான் வேலைய விட்ட விசயம் தெரியாது…  தெரிஞ்சது அவ்வளவுதான் விளக்கமாறு பிஞ்சிடும்…. கடவுளே இந்த இன்டர்வியூலையாவது எப்படியாவது எனக்கு வேலை கிடைச்சிடனும்.”

இப்படி புலம்பிக்கொண்டே அந்த கட்டிடத்தின் மின் தூக்கி நோக்கி சென்றனர் இருவரும்.

 அவன் கூறியதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டே வந்த ஆதீரனும் தனது நண்பனின் தோளின் மேல் கை போட்டுக்கொண்டு “இங்க பாரு மச்சி கடவுள் கிட்ட உனக்கு வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிறதுக்கு பதிலா எனக்கு கிடைக்கணும் வேண்டிக்கோ…. எனக்கு கிடைச்சாலே உனக்கு கிடைச்ச மாதிரி தான் சரியா… அப்புறம் என்ன சொன்ன பொண்ணு பாக்குறாங்களா  வேலையிலிருந்து தூக்கின எனக்கு கல்யாண ஆகாம தடுக்கிறது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கோ” என்று நக்கலாக கூறினான்.

“ஏண்டா இன்னும் கொஞ்ச நாள் நீ கோமாலயே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் அதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணி புள்ள பெத்து இருப்பேன். அப்ப நீ என்ன ஒன்னும் பண்ணியிருக்க முடியாது…”

“அப்பவும் வழி இருக்கு மச்சி உனக்கும் உன் பொண்டாட்டிக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்திருப்பேன். அப்புறம் எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி உன் பொண்டாட்டியும் சேர்த்து வச்சிருப்பேன்.” என்று தோள்களை குலுக்கி கூறிக் கொண்டான். 

 “அடப்பாவி நீ செஞ்சாலும் செய்வடா… கடவுளே என் மேல உனக்கு கருணையே இல்லையா இப்படி ஒரு ப்ரெண்ட தான் நீ எனக்கு கொடுப்பயா…” என்று மேலே பார்த்துக் கொண்டே கேட்டான் மாதேஷ்.

 “டேய் அடங்குடா கடவுளுக்கு வேற வேலையே இல்ல பாரு உன்னோட புலம்பலை எல்லாம் கேக்குறதுக்கு மட்டும் தான் அவர் வேலையா?” என்று கூறிக்கொண்டு அவர்கள் இன்டர்வியூ நடக்கும் ஆறாவது தளத்தில் உள்ள அந்த அலுவலகத்தில் நுழைந்தனர்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணை கண்டதும் சிரித்துக் கொண்டே அவள் அருகே சென்ற ஆதிரன் “ஹாய் பியூட்டி…” என்றான் ஒற்றைக் கண்ணை அடித்துக் கொண்டே. 

அவனது அழகிலும் தன்னை அழகி என்று கூறியதிலும் தன் மனதை பறிகொடுத்த அந்த பெண்ணோ கூச்சத்தில் கன்னங்கள் சிவப்படைய தனது வெண்பற்கள் தெரிய சிரித்தாள். 

அதற்கு பின்னும் அடங்காதாவனோ “வாவ்…  உங்க கன்னம் திடீர்னு பிங்க் ஆயிருச்சு இதுக்கு பேரு தான் வெட்கத்துல சிவக்கறதோ  அச்சோ… நான் இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் இதை பார்த்ததே இல்லை…” என்று கூறிக் கொண்டே வரவேற்பறை மேசையின் மேல்  முழங்கையை ஊன்றி உள்ளங்கையில் தனது தாடையை பதித்து அவளைப் பார்த்தான்.

 மேலும் மேலும் தனது அழகை பார்த்து ஒருவன் பெருமையாக பேசினால் எந்த பெண்ணுக்கு தான் அவனை பிடிக்காது அதுவும் ஆணழகனாக இருந்தால்.

அவர்கள் இருவரையும் பார்த்துக்  கொண்டிருந்த மாதேஷ் ஆதிரனின் காதருகே குனிந்து “டேய் நாம இங்க வந்து இருக்கிறது இன்டர்வியூகாக இந்தப் பொண்ணுகளை சைட் அடிக்கிறதுக்கு இல்ல” என்றான்.

 “சோ வாட்… அதனால் என்ன அழகா ஆராதிக்கலாம் தப்பே இல்ல…” என்றான் இன்னும் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே. 

“வேலை கிடைச்ச பின்னாடி இன்னும் நல்லா ஆராதிக்கலாம்… இப்ப நம்ம வந்த வேலையை பார்க்கலாமா…” என்று கூறிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் “இங்க இன்டர்வியூ எங்க நடக்குது?” என்றான். 

“ஓஹ நீங்க இன்டர்வியூக்கு வந்திருக்கீங்களா?” என்றாள்.

அதற்கு மாதேஷ் பதில் கூறும் முன் ஆதிரன் “எஸ் பியூட்டி…” என்றான்.

அவள் சிரித்து கொண்டே “நேரா போய் லெஃப்ட் திரும்பனீங்கனா அங்க இருக்கற ஹால்ல தான் இன்டர்வியூ நடக்குது…” என்று கூறினாள். 

“தேங்க்ஸ் பியூட்டி…” என்று கூறி திரும்பி நடந்தவர்களுக்கு “ஆல் தெ பெஸ்ட்…” என்று கூறினாள். 

பின்னால் திரும்பி அவளை பார்த்து கொண்டே நடந்தவன்… “கண்டிப்பா வேலைக்கு சேர்ந்துடுவேன்… உனக்காக மட்டுமே…” என்று கூறி கண்ணடித்து விட்டு மீண்டும் திரும்பி நடந்தான்.

அதைக் கேட்ட பெண்ணவளுக்கு மறுபடியும் கன்ன சிவப்பு… 

பெண்களிடம் எப்படி பேசினால் அவர்கள் மயங்குவார்கள் என்பது அவனுக்கு அத்துப்படி அல்லவா… 

அதற்காக அவன் ஒன்றும் பெண் பித்தன் அல்ல… கல்லூரியில் பல பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்தவன். எப்பொழுதும் இவனை சுற்றி பெண்கள் இருப்பார்கள். 

“டேய்… கோமால இருந்துட்டு வெளிய வந்தாலும் இன்னும் காலேஜ் லைஃப்ல என்ன பண்ணுணயோ அதெல்லாம் மாறாமல் இருக்க…” என்றான் மாதேஷ்.

இதுவரை அவனது பேச்சுக்கு பதிலுக்கு பதில் பேசி கொண்டு வந்தவன் இந்த கேள்விக்கு மட்டும் பதிலாக சிரிப்பையே தந்தான். அவனது ரகசியம் அவன் மட்டுமே அறிவான். 

அந்த அறையில் நுழைந்த இருவரும் இன்டர்வியூக்கு வந்து அமர்ந்திருந்தவர்களை பார்த்துக்கொண்டே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

“டேய் என்னடா இத்தனை பேர் வந்துருக்காங்க நம்மளுக்கு கிடைக்குமா வேலை?” என்றான் மாதேஷ்.

இதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை கைவிட்டு வந்தவனாக மிகவும் பொறுப்புடன் “பொறுடா பார்க்கலாம்…” என்று கூறினான்.

சிறிது நேரத்தில் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஆட்கள் நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தவர்களிடம் அவர்களைப் பற்றிய விபரங்களை வாங்கிக் கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் ஒவ்வொருவராக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர் வெறும் ஆறு பேருக்காக நடந்த அந்த போட்டி தேர்விற்கு சுமார் நாற்பது பேர் வந்திருந்தனர்.  மாதேஷுக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை ஆனாலும் வந்ததற்காக கலந்து கொள்ளலாம் என்று அமர்ந்திருந்தான் 

ஆதிரனும் அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த வேலைக்கான நேர்காணல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது மூன்றாவது கட்டமான இறுதித் தேர்வுக்கு 10 பேர் மட்டுமே தேர்வாகி இருந்தனர் அதில் மாதேஷும் ஆதிரனும் இருந்தனர்.

அதே சமயம் உள்ளே “மேடம்… இப்ப பத்து பேரை செலக்ட் பண்ணியிருக்கும் அதுல அஞ்சு பேர நீங்க தான் ஃபைனலைஸ் பண்ணனும்.” என்று ஒருவர் கூறி கொண்டிருந்தார். 

அதை கேட்டு கொண்டிருந்தாள் அந்த அலுவலகத்தின் முதலாளி நீலாம்பரி. அவளின் அருகே பின் ஐம்பதுகளில் இருந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் சதாசிவம். அவர் தான் இது வரை அந்த கம்பெனியின் முழு கணக்குகளையும் கண்காணித்து வந்தவர். அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக கூறியதும் தான் அந்த பதவிக்கும் சேர்த்து ஆள் எடுப்பதற்கு தான் இந்த நேர்காணல்.

“அங்கிள்… இப்பவும் சொல்றேன் நீங்க கண்டிப்பா இந்த கம்பெனிய விட்டு போய் தான் ஆகணுமா…” என்று கேட்டாள். 

“நீலாம்பரி எனக்கு வயசு ஐம்பதுக்கு மேல ஆச்சு… இந்த நெஞ்சு வலி வந்ததுல இருந்து என்னால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல. வீட்டுல வேற ரெஸ்ட் எடுக்க சொல்லி ரொம்ப கம்பெல் பண்றாங்க… அதனால் தான் வேற வழி எனக்கு தெரியலமா… நான் எங்கயும் போக போறது இல்ல… வீட்டுல தான் இருப்பேன். எப்ப வேணாலும் நீ வரலாம். என்ன ஹெல்ப் வேணும்னாலும் செய்யறதுக்கு நான் ரெடியா இருப்பேன். அதுவும் இல்லாம இப்ப எடுக்கற ஆள் எப்படி என்னனு பார்த்து அவங்களுக்கு எல்லாம் சொல்லி தந்துட்டு தான் போவேன். நீ எதுக்கும் கவலை படாதே…” என்று தனது மகளுக்கு ஆறுதல் கூறுவது போல் தேற்றி கொண்டிருந்தார்.

என்ன தான் நீலாம்பரி அவரை அங்கிள் என்று அழைத்தாலும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் தான் அவரை வைத்திருந்தாள். 

நீலாம்பரியின் தந்தை குணசீலன் சிறிது வசதி படைத்தவர். ஆதலால் அவரது தந்தையின் உதவியோடு ஒரு சிறிய ஆடிட்டிங்க் கம்பெனியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் வெறும் நான்கு பேர் மட்டுமே பணியமர்த்தி சில அலுவலகங்களுக்கு கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். அப்பொழுது அந்த நால்வரில் ஒருவராய் வந்தவர் தான் சதாசிவம்.

அவரது வேலைத்திறமை. நேர்மை, வேலையில் காட்டும் ஆர்வம் இவை எல்லாம் குணசீலனுக்கு பிடித்து போக தனக்கு கீழ் வேலை செய்பவர் என்பது போல் நினைக்காமல் தனது தோழனாக நினைத்து உறவு கொண்டாடினார் குணசீலன்.

ஒரு சமயத்தில் இருவரது மனைவிமார்களும் அவர்களாகவே நட்புறவை வளர்த்து கொண்டனர்.

குணசீலனுக்கு ஒரே பெண் நீலாம்பரி. அதே போல் சதாசிவத்திற்கும் ஒரே பையன். இருவரது குடும்பத்திற்கு  சம்பந்தி ஆக வேண்டும் என்பது ஆசை. 

ஆனால் அவர்கள் பெற்ற அந்த புதல்வர்களுக்கு இடையே வெறும் நட்பு மட்டும் தான் இருந்தது. அதே சமயம் நீலாம்பரியும் வேறு ஒருவரை விரும்புகிறேன் என்று கூறியதால் அவர்கள் அப்பேச்சை விட்டு விட்டனர். 

அதன் பின்பு ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களினால் மனமுடைந்த குணசீலன் அதை நினைத்து கொண்டே வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்தினால் அவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். 

தனது பெற்றோரை இழந்த நீலாம்பரியை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அரவணைத்து வழிநடத்தியவர் சதாசிவம் தான். 

இறுதி சுற்றுக்கு தகுதியானவர்கள் என்று அழைக்கப்பட்ட பத்து பேரும் வ்வொருவராக உள்ளே சென்று நீலாம்பரி மற்றும் சதாசிவத்தை சந்தித்து கொண்டிருந்தனர்.

“என்ன அங்கிள் இது ஒரு ஆள் கூட உங்க பொசிசனுக்கு ஏத்த குவாலிகேசனோட இல்ல… என்ன பண்றது? அக்கவுண்டன்டுக்கு தேவையான அஞ்சு பேர ஒன்பது பேர்ல இருந்து செலக்ட் பண்ணியாச்சு. இனி ஓரே ஆள் தான் பாக்கி… அதுவும் தேறலைனா நீங்க இந்த கம்பெனியிலிருந்து போக முடியாது அங்கிள்…” என்று கேலியாக கூறினாள் நீலாம்பரி.

“நம்பிக்கை இல்லாம பேசகூடாது நீலாம்பரி. பார்க்கலாம்.” என்றவர் கடைசி ஆளாக உள்ளே நுழைந்தான் ஆதிரன்.

ஆறடிக்கும் சிறிது உயரம் குறைந்து இருந்தவனை பார்வையால் அளவிட்டனர் இருவரும். தீட்சாண்யமான பார்வையை கொண்ட அந்த இருவிழிகளும் அவர்கள் இருவரையும் ஆராய்ந்து கொண்டிருப்பதை இருவருமே உணர்ந்தனர். அவனின் வாய் மொழி பேசுவதற்கு வழிவகை இல்லாமல் அவனது கண்களே பேசுவது போல் இருந்தது. பேசுவது என்ன எதிரில் இருப்பவர்களை தனது பார்வையாலயே அடக்கி ஆளும் திறமை அவனுக்கு உண்டு என்பதை இருவருமே சில நிமிடங்களில் உணர்ந்திருந்தனர். 

அவனது கருமை மிகு கேசமும், திடகாத்திரமான தேகமும் அழகிய முக வடிவும் அவனை சிறந்த ஆண்மகனாக காட்டியது.  அவனை பார்க்கும் எந்த பெண்ணும் மயங்கி விடுவாள் என்பதை கூறாமல் கூறியது அவனது அழகு. 

அவனை பற்றிய இத்தனை விதமான ஆராய்ச்சிகளும் உள்ளே நுழைந்து அந்த பெரிய அறையின் நடுவே நீலாம்பரி மற்றும் சதாசிவம் அமர்ந்திருந்த இருக்கைகளை நெருங்கும் முன்னரே சில நொடிகளில் நிகழ்ந்திருந்தது சதாசிவத்திற்கு.

அருகே வந்தவனை அமரும் படி கூறினார் சதாசிவம். 

“தேங்க்யூ சார்…” என்றவன் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான். 

“வெல்… மிஸ்டர்…” என்று கூறிய சதாசிவம் அவனை பற்றிய விவரங்கள் அடங்கிய அந்த காகிதத்தை பார்க்க சென்றார்.

அதற்குள் அவனை தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

“ஐ அம் ஆதிரன்…”

“ஓ… கிரேட்… நல்ல அழகான தமிழ் பெயர்.”

அதற்கு ஒரு புன்னகை மட்டுமே சிந்தினான். இதழ் பிரிக்காமல் அவன் புரிந்த அந்த புன்னகை ஆளை மயக்கும் விதமாக இருந்தது.

அவனது விவரங்களை பார்த்தவர் “நீங்க சிஏ படிச்சு இருக்கீங்க.. அப்புறம் எதுக்கு வெறும் அக்கவுண்டன்ட் ஜாப்புக்கு அப்ளை பண்ணி இருக்கீங்க…” என்றார் சதாசிவம்.

அவன் முகத்தில் மறுபடியும் அதே புன்னகை “நான் அஞ்சு வருசமா கோமால இருந்தேன். இப்ப தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி நினைவு திரும்புச்சு. ஒரு மாதிரி ரெக்கவர் ஆகி கொஞ்சம் பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கேன்.” என்றான். 

அதைக் கேட்டு அதிர்ந்த சதாசிவம் “ஆர் யூ ஆல்ரைட் நவ்?” என்றார்.

“எஸ் சார். ஐ அம் பர்ஃபக்ட்லி ஆல் ரைட். வேணும்னா இந்தாங்க மெடிக்கல் சர்டிபிகேட்…” என்று தனது படிப்புகள் வைத்திருக்கும் சான்றிதழ் அடங்கிய கோப்பினை அவரிடம் காண்பித்தான். 

அதை விரிவாக படித்தவரோ “உங்களுக்கு பழசு எல்லாம் மறந்திடுச்சுனு… போட்டுருக்காங்க…” என்றார்.

“ஸார்… பழசு எல்லாமே மறக்கல… ஒரு குறிப்பிட்ட சில வருசங்கள் மட்டுமே மறந்திருக்கு… காலேஜ் படிச்சது மட்டும் தான் நியாபகம் இருக்கு. சிஏ படிச்சது எல்லாம் மறந்திருச்சு. அதனால தான் இந்த வேலைக்கு இன்டர்வியூக்கு வந்துருக்கேன்.  வேலை செய்ய செய்ய எல்லாமே நியாபகம் வர வாய்ப்பிருக்குனு டாக்டர் சொல்றாங்க. இதுவரைக்கும் நிறைய இடத்துல இண்டர்வியூக்கு போய்ட்டேன். ஆனா யாரும் எனக்கு வேலை கொடுக்க முன் வரல… நான் எப்படி வேலை செய்வேன். என்ன திறமை இருக்குனு எனக்கு தெரியாது. அதை நிரூபிக்க நீங்க ஒரு வாய்ப்பு கொடுக்கனும்.” என்று தனது நிலையை கூறினான்.

அதை கேட்டு கண்கள் இடுங்க யோசித்தார் சதாசிவம். 

“சரி… உங்க நிலைமை நீங்க சொல்லிட்டீங்க… ஆனா நாங்களும் யோசிக்கனும். ஏனா வெறும் அக்கவுண்டன்ட் ஜாப்க்கு ஆளுகளைநாங்க தேர்ந்தெடுத்துட்டோம். இப்ப எடுக்கறது ஒரு மேனேஜர் லெவலுக்கு அதான் யோசிக்கறேன்…” என்று கூறி யோசித்தவர் “கொஞ்ச நேரம் வெளிய இருங்க நான் பேசிட்டு சொல்றேன்…” என்று கூறினார்.

அதை கேட்ட ஆதீரனின் முகத்தில் சட்டென்று ஒரு நிமிடம் வாடி அதன் பின்பு இயல்பாகியது. 

ஐந்து வருடங்களாக அவன் நினைவிழந்து இருந்ததே அவனுக்கு வேலை கிடைக்காததற்கு முக்கிய காரணம்.

அவன் உள்ளே சென்றதிலிருந்து படபடப்பாக அமர்ந்திருந்தது என்னவோ மாதேஷ் தான். ஏனெனில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. இந்த வேலை நிலைக்க வேண்டுமானால் ஆதிரனுக்கும் வேலை கிடைக்க வேண்டுமல்லவா… ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அமர்த்திருந்தான் மாதேஷ். அவனுக்கும வேலை கிடைத்து இவனது வேலை நிலைக்குமா?….

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top