அத்தியாயம் 15
அவனோ புருவங்களை உயர்த்தி தன் முன்னால் நின்றிருந்த பாவையை நோக்கியவன்,
“விஷ்வஜித்” என்று அலைபேசியில் இருந்த பெயரை சொல்ல,
அதை கேட்டவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘அட நாசமா போறவனே! இந்த நேரத்துலயா போன் பண்ணுவ? உன் டைமிங் சென்ஸுல தீய வைக்க!’ என்று வாய்க்குள்ளயே அடக்க முடியாமல் அவனை திட்டியவள்,
சிம்மனை சற்று பயத்துடனே ஏறிட்டு, “போன்” என்று இழுக்க,
அவனோ “யாரு இந்த விஷ்வஜித்? உன் பிரதரா?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
‘எது பிரதரா?’ என்று வெளியில் கேட்க வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு உள்ளே அனுப்பியவளுக்கு இப்போது என்ன சொல்வது என்றே புரியவில்லை.
ஒரு வேளை உண்மையை சொன்னால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு மேலும் சிக்கல்களை உருவாக்கி விடுவானோ என்று பயந்தவள், அப்போது தப்பிக்க வேறு வழி இல்லாமல் ஆம் என்பது போல தலையாட்டி விட்டாள்.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், “ம்ம்… பட் டியூட்டி நேரத்துல யார் கூடயும் பேச அலோட் இல்லை. ஸ்விச் ஆப் பண்ணிடு” என்று அவள் கையில் அலைபேசியை கொடுத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்ல,
அவன் போகும் வரை பயத்தில் மூச்சை இழுத்து பிடித்து கொண்டிருந்தவளுக்கு அவன் அங்கிருந்து போன பிறகு தான் சுவாசிக்கவே முடிந்தது.
‘ஐயோ! பயத்துல இவன் கிட்ட போய் பிரதர்ன்னு சொல்லிட்டேனே!’ என்று புலம்பியவள், விஷ்வஜித்துக்கு பிறகு அழைக்கிறேன் என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அலைபேசியை அணைத்து இருந்தாள்.
****
இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்த பிருந்தாவுக்கு அப்போது தான் அவள் தொலைபேசியை ஆப் செய்து வைத்து இன்னுமே அதை ஆன் செய்யவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
‘ஐயோ! விஷ்வா வேற போன் பண்ணி இருந்தாரே! மறந்தே போயிட்டேன்’ என்று தலையில் அடித்த படி,
அவசரமாக தனது பையில் இருந்த அலைபேசியை எடுத்து ஆன் செய்தவள்,
அதில் ‘வீட்டுக்கு போனதும் போன் பண்ணு’ என்று விஷ்வஜித் அனுப்பியிருந்த செய்தியை படித்தவளோ ‘ஓஹ் காட்’ என்று தன்னை தானே நொந்த படி அவனுக்கு அழைத்தாள்.
அந்த ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் தனது மடிக் கணினியில் தீவிரமாக வேலை பார்த்து கொண்டிருந்தான் விஷ்வஜித்.
அவன் சிந்தனையை மாற்றும் வகையில் அவனது தொலைபேசி அலற,
சற்று சலிப்பாக அதை எடுத்து பார்த்தவன் இதழ்களில் மறு முனையில் அழைப்பது பிருந்தா என்று அறிந்ததும் புன்னகையே அரும்பியது.
மடிக்கணினியை வைத்து விட்டு அவளது அழைப்பை ஏற்றவன், “ஹாய் பிந்து” என்றான் உரிமை கலந்த குரலில்.
ஆனால் அவளால் தான் அவ்வளவு இலகுவில் அவனோடு சகஜமாக பேச வரவில்லை.
“ஹாய் விஷ்வா… சாரி, இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல கொஞ்சம் பிஸி. அதான் நீங்க கூப்பிட்டப்போ போன் எடுக்க முடியல,” என்று சற்று தடுமாறிய படி சொல்ல,
அவனோ “ஐ நோவ் பிந்து. நீ பிஸியா இருப்பன்னு தெரிஞ்சி தான் நானும் உன்ன டிஸ்டப் பண்ணல” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.
தொலைபேசியை எடுக்காமல் போனதற்கு அவன் தன் மேல் கோப படுவானோ என்று பயத்தில் இருந்தவள், அவன் இந்த அளவுக்கு தன்மையாக பேசியதை கேட்டு சற்று திகைத்து தான் போனாள்.
‘அதுவும் சரி தான் எல்லாரும் அந்த சனியன் பிடிச்ச டாக்டரை போல இருப்பாங்களா!’ என்று அப்போதும் சிம்மனை எண்ணி மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க,
விஷ்வஜித்தோ “ஹெலோ பிந்து…. ஹெலோ… இருக்கியா?” என்று மறு முனையில் எந்த பதிலும் வராததால் சற்று பதட்டமாக அவன் அழைக்க,
இங்கே சிம்மனின் நினைவுகளில் சுழன்று கொண்டிருந்தவள், விஷ்வஜித்தின் குரலில் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வர, “ஆ… இருக்கேன் விஷ்வா… சொல்லுங்க” என்று அவசரமாகப் பதிலளித்தாள்.
அவனோ “என்னாச்சு பிந்து? ஆர் யூ ஓகே?” என்று இன்னுமே பதட்டமாக கேட்க,
அவளோ “ஹாங்… ஐ அம் ஓகே விஷ்வா… இ…. இங்க கொஞ்சம் சிக்னல் ப்ரோப்லம்” என்று அநியாயத்துக்கு சமாளிக்க,
“ம்ம்” என்றவன், “அப்புறம் நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் பண்ணேன்.” என்க,
அவளோ “என்ன விஷயம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அவனும் நெற்றியை நீவிய படி, “நாளைக்கு நம்ம மீட் பண்ணலாமா பிந்து?” என்று திடீரென கேட்க,
அதை கேட்டதும் அவள் விழிகள் சற்று அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, “என்ன? நாளைக்கா?” என்று பதட்டமாக கேட்டவள்,
அடுத்த நொடி தன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே,
“ஆனா நீங்க சென்னையில இல்லையே! அப்புறம் எப்படி?” என்று அவசரமாக கேட்டாள்.
அவனோ புன்னகைத்த படி, “நான் சென்னையில தான் இருக்கேன் பிந்து. ஒரு பிஸ்னஸ் விஷயமா டூ டேஸ்க்கு முன்னாடி தான் சென்னைக்கு வந்தேன். நாளைக்கு தான் ரிட்டன் போறேன். பட் உன்ன பார்க்காம போக முடியாது.” என்று அவன் சொல்ல,
அவளுக்கோ பதட்டமாகி விட்டது.
இப்படி திடீரென நாளைக்கு சந்திக்கலாம் என்று அழைத்தால் எப்படி முடியும்?
அவளுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை.
முடியாது என்று சொல்லவும் இயலாது.
ஏதாவது தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம்.
விஷ்வஜித்தோ “பிந்து ஏன் சைலண்டா இருக்க? என்ன மீட் பண்ண பிடிக்கலையா?” என்று அவன் நேரடியாக கேட்டு விட,
அவளுக்கோ அவன் இப்படி வெளிப்படையாக கேட்டதும் ஒரு மாதிரி ஆகி விட்டது.
“இ… இல்லை விஷ்வா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு வேலை இருக்கு, அதான் யோசிச்சேன்…” என்று சமாளிக்க முயன்றாள்.
அவனும் “ரொம்ப நேரம் எல்லாம் வேண்டாம் பிந்து. ஜஸ்ட் ஒரு ஹாபனவர் போதும். நான் உன்ன பார்க்கணும். அவ்ளோ தான்” என்று அவன் சற்று உரிமை கலந்து சொல்ல,
அவளுக்கும் இதற்கு மேல் மறுக்கத் தோன்றவில்லை.
“ஓகே விஷ்வா நான் வரேன்” என்று அவள் சம்மதித்து விட,
விஷ்வஜித்தோ இதழ் பிரித்து புன்னகைத்தவன்,
“தேங்ஸ் பிந்து. நாளைக்கு நானே உன்ன ஹாஸ்பிடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று சொல்ல,
‘ஹாஸ்பிடல்லயா? அவன் பார்த்தா நான் செத்தேன்’ என்று அப்போதும் சிம்மனை எண்ணி பயந்தவள்,
“இல்லை இல்லை நீங்க இடத்தை மட்டும் சொல்லுங்க. நானே வந்துடுறேன்” என்று அவசரமாக மறுக்க,
அவனும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல்,
“யுவர் விஷ் பிந்து. நான் டைமையும், லொகேஷனையும் சென்ட் பண்ணுறேன்” என்றவன், இன்னும் சில வார்த்தைகள் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அலைபேசியை தூக்கி கட்டிலில் போட்ட பிருந்தாவுக்கோ தலை பாரமாக இருந்தது.
நாளை அவனை நேரில் சந்திக்க போகிறோம் என்ற எவ்வித ஆர்வமும் இருந்ததாக அவளுக்கு தெரியவில்லை.
இவ்வளவு தூரம் அழைக்கிறான் போகாமல் இருந்தால் ஏதாவது தவறாகி விடும் என்பதால் தான் போகவே சம்மதித்து இருந்தாள்.
****
அடுத்த நாள் ஒரு முக்கிய சர்ஜரி இருக்க,
பிருந்தாவோ சற்று பதட்டமாக இருந்தாள்.
காரணம் விஷ்வஜித்துக்கு அதை பற்றி அவளால் கூற முடியாமல் போய் விட,
எங்கே அவள் வரவில்லை என்று அவன் மருத்துவமனைக்கே வந்து விடுவானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.
இங்கே சர்ஜரி நடந்து கொண்டிருக்க, அதை செய்வது என்னவோ சிம்மன் தான்.
ஆனால் பக்கத்தில் நின்று அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொடுத்து கொண்டிருந்தவளுக்கு கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
‘ஒரு வேளை அவரு வந்துட்டாருன்னா என்ன பண்ணுறது?’ என்று உள்ளுக்குள்ளே தவித்து கொண்டிருந்தாள்.
அவள் பயம் மொத்தமும் சிம்மனை பற்றி தான்.
தனது திருமணத்தை பற்றி அவனுக்கு தெரியக்கூடாது என்பதனால் தானே நேற்று அவன் அண்ணனா என்று கேட்ட போது, எதை பற்றியும் யோசிக்காமல் ஆம் என்று சொல்லியிருந்தாள்.
இனியும் அப்படியே அதை மறைக்க தான் முயன்றாள்.
அறுவை சிகிச்சை அறையின் குளுமையிலும் பிருந்தாவுக்கு வியர்த்து வழிந்தது.
விஷ்வஜித் தன்னை தேடி வந்திருப்பானோ என்ற எண்ணம் அவளை மீண்டும் மீண்டும் அரித்துக் கொண்டிருக்க,
அந்த பதட்டத்தில் சிம்மன் கேட்ட ஒரு முக்கிய கருவிக்கு பதிலாக வேறொன்றை அவசரத்தில் நீட்டி இருந்தாள்.
அவள் நீட்டிய கருவியைப் பார்த்த சிம்மனின் விழிகள் ஒரு நொடி விரிய,
அடுத்த கணம் அவன் முகம் கோபத்தில் சிவந்து போனது.
இப்படி அறுவை சிகிச்சை நடக்கும் போது ஒரு சிறிய தவறை கூட பொறுத்து கொள்ளாதவனுக்கு அவளின் இந்த கவனக்குறைவு கடும் சினத்தை தான் கொடுத்தது.
“வாட் தி ஹெல் ஈஸ் திஸ் பிருந்தா?” என்று அவன் கோபமாக கர்ஜிக்க,
அங்கிருந்த மற்ற வைத்தியர்கள் முதல் நர்ஸ்கள் வரை பயத்தில் நடுங்கி தான் போனர்.
அவர்களுக்கே அப்படி என்றால் பிருந்தாவை சொல்லவும் வேண்டுமா?
தான் செய்த தவறு அவள் மூளைக்கு அப்போதே உரைக்க, உடல் நடுங்கிய படியே, அவனது கோபத்தில் சிவந்த விழிகளை ஏறிட்டு பார்த்தவள்,
“ச… சாரி… சா.. ர்… அ…வசரத்து….ல….” என்று பயத்தில் அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வெளியே வர முடியாமல் தொண்டைக்குள்ளேயே சிக்கி விட,
அனல் தெறிக்கும் பார்வையுடன் அவளை முறைத்து பார்த்தவன், “ஆர் யூ இன் யுவர் சென்சஸ்? சர்ஜரி நடக்கும் போது இப்படி தான் கேர்லஸ்ஸா இருப்பியா?” என்று கடுகு போல வெடிக்க,
பெண்ணவளோ அவன் கோபத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களில் நீர் மல்க நின்று இருந்தாள்.
அவனுக்கோ அது இன்னுமே எரிச்சலை கொடுக்க,
“ஜஸ்ட் கெட் லாஸ்ட்” என்று கத்தி இருந்தான்.
பெண்ணவளும் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் அவமானத்தில் தலை குனிந்தபடி வெளியே ஓடினாள்.
சிம்மனோ அதை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த வேறு நர்ஸை அழைத்தவன், அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தான்.
அறையின் கதவைத் தாண்டியதும், இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் ஆறாகப் பெருகியது பாவைக்கு.
‘எல்லார் முன்னாடியும் இப்படி கேவலப்படுத்திட்டானே! நான் பண்ணது தப்பு தான். ஆனா அதுக்காக இப்படி வெளியில அனுப்புறதா! சரியான ராட்சசன்’ என்று மூக்கை உறிஞ்சிய படி அவனை திட்டிக் கொண்டிருந்தவளுக்கு,
அப்போது தான் விஷ்வஜித்தின் நினைவே வந்தது.
ஏற்கனவே தாமதமாகி விட்டது.
‘ஐயோ!’ என்று தலையில் அடித்தவள், வழிந்த கண்ணீரை கூட துடைக்க நேரமில்லாமல் அவசரமாக தனது அலைபேசியை எடுக்க ஓடினாள்.
லாக்கரில் இருந்த அலைபேசியை சற்று பதட்டமாக எடுத்து ஆராய, கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் விஷ்வஜித்திடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
அதை படித்து பார்த்தவளுக்கோ மேலும் பதட்டம் ஏறியது.
ஆம்.
அவள் வெகு நேரமாக வராததால் அவன் வைத்தியசாலைக்கே வந்து விட்டான் போலும்.
இப்போது அவளின் அப்பாவின் கேபினில் காத்து கொண்டிருப்பதாக செய்தி அனுப்பியிருக்க,
‘அடக் கடவுளே! இவரால கொஞ்ச நேரம் கூட வைட் பண்ண முடியாது போல! அதுக்குள்ள இங்கயே வந்துட்டாரு’ என்று மனதுக்குள் அவனை திட்டினாலும்,
இதற்கு எல்லாம் காரணமான சிம்மன் மீது கொலை வெறி தான் வந்தது.
தன் திருமண விடயத்தை பற்றி அவனிடம் மறைத்ததால் இப்போது எப்படி எல்லாம் பயந்து சாக வேண்டி இருக்கிறது.
அவளும் பாவம் என்ன தான் செய்வாள்.
எற்கனவே அவனால் தினமும் அவஸ்த்தையை அனுபவித்து கொண்டிருக்கிறாள்.
இப்போது இந்த விடயமும் தெரிந்தால் அதை வைத்து ஏதாவது பிரச்சனையை ஆரம்பித்து விடுவானோ என்ற அச்சம் தான் அவளுக்குள்.
ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவள், முகத்தை கழுவி விட்டு, தான் எற்கனவே கொண்டு வந்த நீல நிற சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு அவசரமாக விஷ்வஜித்தை காண ஓடினாள்.
இங்கே அவளது தந்தையின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் விஷ்வஜித்.
பிருந்தாவும் தடால் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய,
அவளின் தந்தையோ “வாம்மா… விஷ்வா உனக்காக தான் ரொம்ப நேரமா வைட் பண்ணிட்டு இருக்கார்” என்று சொல்ல,
அவளோ சற்று தயங்கிய படி, “சாரி விஷ்வா ஒரு எமெர்ஜென்சி அதான். உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியாம போயிடுச்சு” என்று மூச்சு வாங்களோடு சொல்ல,
அவனோ “ரிலேக்ஸ் பிந்து. இட்ஸ் ஓகே. நீ வந்துட்டல்ல அதுவே போதும்” என்றவன்,
அவனின் மாமனாரிடம் திரும்பி, “ஓகே அங்கிள் நாங்க கிளம்புறேன்.” என்று சொல்ல,
அவரும் சிறு தலையசைப்புடன் அவர்களை அனுப்பி வைத்திருந்தார்.
பிருந்தாவோ இன்னுமே சற்று பதட்டத்தோடு தான் இருந்தாள்.
விஷ்வாவோ அதை கவனித்த படி, “பிந்து ஆர் யூ ஓகே? ரொம்ப டயர்டா இருக்கா?” என்று அக்கறையோடு கேட்க,
அவளோ வற்புறுத்தி புன்னகையை வரவழைத்துக் கொண்டவள்,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை விஷ்வா” என்று சமாளித்தவள்,
‘சீக்கிரம் இங்கிருந்து போயாகணும்’ என்று தான் மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
இருவரும் கீழ் தளத்துக்கு செல்லுவதற்காக லிஃப்ட் நோக்கிச் சென்றனர்.
சில நொடிகளில் லிப்ட் கதவும் திறக்கப்பட, உள்ளே இருந்தவனை கண்ட பிருந்தாவின் இதயமோ அப்படியே வெளியே குதித்து விடும் அளவுக்கு தாறு மாறாக துடிக்க ஆரம்பித்தது.