பிழை-8

அந்த பிரம்மாண்டமான தேக்கு மரக்கட்டிலில் உயர் ரக மெத்தையில் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் ஆருத்ரா. 

இளமை உணர்வுகளை தடுக்க இயலாமல் ,கொதிக்கும் மனதினை கட்டுக்குள் கொண்டு வர தலையணையை தன் மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். 

தன்னவனையே அணைத்துக் கொண்டிருப்பது போல் ஒரு மாயை. 

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த பிடிவாதம்.? பழியுணர்ச்சி? . தேவ்வின் மீது தவறில்லை என்பது‌ தெரியும். 

சூழ்நிலை கைதியாக மாறிப்போனதால் தான் தன்னை மணக்க முடியவில்லை என்று அவளுக்கு எப்போதோ புரிந்து விட்டது. என்ன செய்வது மனம் சொல்வதை புத்தி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதே…!

தான் செய்வது தவறு என அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. 

ஆனால் அந்த தவறு மட்டுமே இன்னும் அவளது ஜீவனை இழுத்துப் பிடித்துக்கொண்டு வைத்திருக்கின்றது. 

இல்லையெனில் அவனுடனான  கடந்த கால காதல் நினைவுகளால் என்றோ அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கும். 

அவனை எங்கும் செல்ல விடாமல் தன்னருகேயே வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டாள் ஆருத்ரா. 

அவனுடன்‌ மீண்டும் இணைவதெல்லாம் இயலாத காரியம். 

எனவே இருக்கும் காலம் வரை அவனது முகம் பார்த்து, அவனது அருகாமையை உணர்ந்து  வாழ ஆசைப்பட்டாள். 

அவனுடன் வாழ முடியாமல் போனதால் ஏற்பட்ட மனவலியானது அவனையும் சுட்டெரித்து வலியை கொடுத்துக் கொண்டே இருந்தது. 

அவளது மன அழுத்தத்தை குறைக்க மருத்துவர் பரிந்துரைத்த தூக்க மாத்திரை கூட பயனற்று தான் போனது. 

கல்லூரி நாட்களில் ஏற்பட்ட காதலானது அழகானதாக, ஆத்மார்த்தமாக இருந்தது. 

ஆனால் தற்போதோ அதே காதல் அவனை ஆழிப்பேரலையாக தாக்கி தன்னுள் சுருட்டிக்கொண்டு போக தயாராக இருந்தது. 

பகலில்  சுட்டெரிக்கும் சூரியனாக அவனை வதைத்துக் கொண்டிப்பவளை இரவில் குளுமையான நிலவும் எரிய வைத்துக் கொண்டு இருக்கின்றது அவளது மனதை போலவே. 

பல்வேறு‌ சிந்தனைகளில் சிக்குண்டு அர்த்த ஜாமத்தில் தான் உறங்கி போனாள். 

நாட்கள் அதன் போக்கில் சென்றது.

அன்று ‌மீட்டிங் ஹாலிற்கு அனைவரையும் அழைத்திருந்தாள்‌ ஆருத்ரா. 

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவளின் விழிகள் இறுதியில் வந்து நின்றது வாசுவின் வதனத்தில் . 

என்றும் போலில்லாமல் அவனது முகம் அழுத்தத்தையும் சோர்வையும் தாங்கியிருந்தது. அதனை அவள் மனம் குறித்துக் கொண்டது. 

“குட் மார்னிங் எவிரிபடி…எதுக்கு உங்க எல்லாரையும் இங்க வரச்சொல்லிருக்கேன்னா நம்ம ப்ரீமியம் மென் செக்ஷனுக்கான ப்ரத்யேகமான ப்ராடெக்ட்ஸ்கான ஆர்டரை அந்த இட்டாலியன் க்ளையண்ட் ஓகே பண்ணுனது மட்டுமில்லாம அவங்களோட அவுஸ்திரேலியப் ஃப்ரான்ச்சுக்கும் சப்ளை பண்ணச் சொல்லி சொல்லிருக்காங்க. ரெண்டு மாசத்துக்குள்ள இதை நம்ம முடிச்சாகணும். முக்கியமா ஆண்களுக்கான பெர்ஃப்யூம், லெதர் ஷூஸ், ஃப்ளேசர், ஃபார்மல் ஷேர்ட்ஸ் இதை மட்டும் தான் ‌நாம கான்சென்ட்ரேட் பண்ணப்போறோம். சின்னச் சின்ன ப்ரோடக்ட்ஸான மென்ஸ் ஹேண்ட் கர்சீஃப், ப்ரீமியம் டை, கூலர்ஸ் இதையெல்லாம் அவுட்சோர்சிங் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன். சோ அடுத்த வாரத்துல இருந்து எல்லாருமே ஓவர் டைம் பாக்கற மாதிரி இருக்கும். அதுக்கு எல்லாரும் ப்ரீப்பேர் ஆகிக்கோங்க. வெர்க் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் வந்து ‘ என்னால முடியாது…குழந்தையை பாக்கணும், வெய்ஃபை பாக்கணும்ன்னு எக்ஸ்கியூஸஸ் கேட்டு நிக்கக் கூடாது. சம்டைம்ஸ் நைட் பத்து மணி கூட ஆகலாம். சோ அதுக்கு ஏத்த மாதிரி அரேன்ஜ்மெண்ட்ஸ் பண்ணிக்கோங்க.. அண்ட் தென் லாஸ்ட் பட்‌ நாட் லீஸ்ட் இந்த வீக்கெண்ட் ஈவினிங் பார்ட்டி ஒண்ணு பர்பிள் ரெசார்ட்ல அரேன்ஜ் பண்ணிருக்கேன். சோ எல்லாரும் கண்டிப்பா வந்துடுங்க. விரும்பினா ஃபேமிலியா கூட வரலாம். உங்க இஷ்டம். “ என்றவளின் பார்வை வாசுவை துளைத்தது.

அவனோ எனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை என்பது போல அமர்ந்திருந்தான். 

பார்வை மட்டுமே அவள் மீது ஆனால் அவனது சிந்தனை வேறொங்கோ இருந்தது. 

அதனை அவளால் உணர முடிந்தது. 

“ஹலோ..! மிஸ்டர் வாசுதேவன் என்ன யோசனை? நீங்க ஃபேமிலியா கூட வரலாம். ஆனா கண்டிப்பா வரணும்.” என்றாள் இகழ்ச்சி புன்னகையுடன்.

தனது இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளருகே வந்து நின்றான்.

அவளின் விழிகளை நேராக பார்த்தபடி “ சாரி மேடம்..எனக்கு இந்த பார்ட்டி ,செலிப்ரேஷன்.. இதெல்லாம் செட் ஆகாது. என்னால வர முடியாது.”என்றான் தீர்க்கமாக.

அவளோ அவனை விட உறுதியாக, “கண்டிப்பா வந்து தான் ஆகணும். வரணும்…..வரலைன்னா…! ” என்றவள் ஒரு எள்ளல் சிரிப்புடன், “கண்டிப்பா வருவீங்க…” என்று கூறி விட்டு நகர்ந்தாள்.

அவனுக்கோ சலிப்பாக இருந்தது. 

அவளை விட்டு விலகிச் செல்ல நினைக்கின்றான். ஆனால் அவளோ இன்னுமின்னும் அவனை நெருங்கிக் கொண்டல்லவா இருக்கின்றாள்.

அன்று காலையில் நடந்த சம்பவம் ..

“சந்தியா…சந்தியா…” என்றழைத்துக் கொண்டே வந்தான் வாசு. 

அடுப்பில் பாலை வைத்துக்கொண்டு அலைப்பேசியில் ஏதோ ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் சந்தியா.

பால் பொங்கி வருவதைக் கூட கவனிக்காமல் அலைப்பேசியில் மூழ்கியிருந்தாள்.

சட்டென்று அடுப்பினை‌ அணைத்து விட்டு, “ சந்தியா.. அடுப்படியில ஃபோனை யூஸ் பண்ணாத எத்தனை தடவை சொல்றது. பால் பொங்குறது கூடத் தெரிய்ம அப்படி என்ன எப்பப் பாரு பாத்துட்டே இருக்க..?” என வெடுக்கென்று அவளது கையிலிருந்து அலைப்பேசியை பிடிங்கினான்.

“ம்ம்ச்…என்ன வேணும் உங்களுக்கு? இப்ப ஏன் ஃபோனை பிடுங்குறீங்க..? கொஞ்சம் கூட மேனேர்ஸே இல்லையா உங்களுக்கு? எப்ப பாரு நான் என்ன பண்ணுறேன்னு வேவு பாத்துட்டே இருக்கணுமா..? நிம்மதியா ஃபோனை கூட பாக்க விட மாட்டேன்றீங்க.” என‌ எரிச்சலுடன் கூறினாள். 

“ நீ ஃபோனை பாரு…வேண்டாம்னே சொல்லல. அதுக்கு முன்னாடி உன் கிட்ட கொஞ்சம் பேசணும். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்றதை கேக்குறீயா..?” என்றான் . 

அவளோ  அலைப்பேசியை பார்க்க முடியாத சலிப்புடன், “சீக்கிரம் சொல்லுங்க. நான் கிளம்பணும்..” என்றாள். 

ஒரு‌ பெருமூச்சுடன்,” என்னால வீட்டு செலவை சமாளிக்க முடியல. மாசக் கடைசியில ரொம்பவே இடிக்குது.   திடீர்னு அம்மாவுக்கு உடம்பு முடியாம போனதுல வீட்டுக்கு இ எம் ஐ கட்ட வச்சிருந்த பணத்தை தான் எடுக்க வேண்டியதா போச்சு. இன்சூரன்ஸ் போட்டுருந்தாலும் பணம் பத்தல. ரெண்டு மாசம் இ எம் ஐ மொத்தமா தொன்னூராயிரம் கட்டணும். அவ்வளவு பணம்‌ புரட்டுறது கஷ்டம். அதனால் இந்த மாசம்‌ மட்டும் நீ கொஞ்சம் உன் சம்பள பணத்தை குடுத்தன்னா என்னால கொஞ்சம் சமாளிக்க முடியும். “ என்றான் தயக்கமாக. 

அவளிடம் கேட்பது சிறிது சங்கடமாக இருந்தாலும் வேறு வழியில்லை அவளின் உதவி தான் தேவைப்பட்டது.

“ அதெல்லாம் முடியாது என்னால. அடுத்த மாசம் எங்க அம்மாவுக்கு அறுபதாவது பிறந்தநாள் வருது. அதை கிராண்டா செலிப்ரேட் பண்ணனும். அப்பறம் எங்க ஆஃபிஸ் ஸ்டாப்ஸ் எல்லாம் குலு மணாலிக்கு ப்ளான் பண்ணிருக்காங்க. அதுக்கு வேற பணம்‌ தேவைப்படுது. நீங்களாச்சு லோன் ஆச்சு. இதையெல்லாம் சமாளிக்குற அளவுக்கு சம்பாதிக்க துப்பு இல்ல பொண்டாட்டியோட பணம்‌ மட்டும் வேணுமாம். நல்ல கதையா இருக்கே..! இதே மாதிரி அடுத்த மாசமும்‌ வேற ஒரு‌ நிலைமௌ வராதுன்னு என்ன நிச்சயம்? அதெல்லாம் என்னால குடுக்க முடியாது. வேணும்னா உங்க அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியை வச்சி கட்டுங்க.” என்றாள் கடுப்புடன்.

இந்த பதிலை அவன்‌ எதிர்பார்த்தது தான்.

ஒரு‌ பெருமூச்சுடன், “ ஆஃபிஸ்ல எனக்கு மேனேஜராக இருக்குறது ‌‌ஆருத்ரா‌ தான். நான்‌ அவளை க‌ல்யாணம்‌ பண்ணிக்கலன்னு ஆதங்கத்துல தினமும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குறா. உள்ளூர்ல வேற‌ வேலை தேடுனா அவ தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி அந்த வேலையை கிடைக்க விடாம பண்ணுறா. என்னால எதுவும் பண்ண‌ முடியாத சூழ்நிலை. அதான் துபாய்க்கு போகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஒரு நல்ல ஆஃபர்‌ வந்துருக்கு. ஒரு ரெண்டு வருஷம் கொஞ்சம் கஷ்ட்ப்பட்டா அதுக்கப்புறம் கொஞ்சம் செட்டில் ஆகிடலாம்ன்னு தோணுது சந்தியா. நீ என்ன சொல்ற? அம்மாவை பாத்துக்க ஆள் வைச்சிடலாம். நீ கொஞ்சம் அப்பப்ப அம்மாவை கவனிச்சுக்க . நல்ல சேலரின்னு சொல்லிருக்காங்க.” என்றான். 

“ இது எவ்வளவு நாளாக நடக்குது? அவ கூட கொஞ்சி கூத்தடிச்சிடிச்சிட்டு இப்ப வந்து ஒண்ணுமே தெரியாத பச்சைப்புள்ள மாதிரி பேசுறீங்க? என்னைய பார்த்தா உங்களுக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?  பழைய காதலை மனசுல வச்சிட்டு ஒரு தடவை கூட அவ கூட படுத்திருக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? பண்ணுற அயோக்கியத்தனமெல்லாம் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடுறது…ச்சை..! நீங்க துபாய்க்கு போங்க இல்ல வேற எங்கேயும் போங்க. அதை பத்தி எனக்கென்னும் இல்லை. ஆனா உங்கம்மாவை  பாத்துக்க என்னால முடியாது. ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு போங்க. எனக்கு காலையில குளிச்சி கிளம்பவே நேரம் சரியா இருக்கும்.இதுல அவங்களுக்கு தேவையானதை ஒவ்வொன்னையும்‌ பாத்து பாத்து பாத்து செஞ்சிட்டு போக முடியாது. என்ன முடிவு பண்ணனுமோ பண்ணிக்கோங்க. என் தலையில எல்லாத்தையும் கட்டிட்டு போகாதீங்க அவ்வளவு தான். “ என்று கூறி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிக் தாயாரானாள். 

“சந்தியா…ப்ளீஸ்..! நான் சொல்றதை கேளு. அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.சத்தியமா நீ நினைக்கிற மாதிரி தப்பான உறவு இல்ல‌ டி.” என்றான். 

“நீங்க சொல்ற பொய்யை நான் நம்பத் தயாரா இல்லை. எங்க அனு மேல சத்தியம் பண்ணுங்க பாப்போம்…” 

“ ஏய்…அவ குழந்தை. அவ மேல சத்தியம் பண்ணச் சொல்ற. உன் கிட்ட மறைக்கனும்னா எப்படி வேணா மறைச்சிருக்கலாம் சந்தியா. ஆனா உனக்கு நான் உண்மையா தான்‌ இருக்கணும்னு நினைக்கிறேன். புரிஞ்சிக்க டி. தப்பா பேசாத.” என்றான் வலி மிகுந்த குரலில். 

“என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீங்க அவ கூட ஒண்ணா இருந்துட்டு தான் வந்துருப்பீங்க. ஒண்ணா ஒரே ஆபிஸ்ல இருக்குறீங்க தப்பு பண்ணாமலா இருப்பீங்க ? நான் கிளம்புறேன் . ஹான்…அப்பறம் நீங்க துபாய்க்கு போறதா இருந்தா நல்ல முதியோர் இல்லமா பாத்து உங்கம்மா வை சேர்த்துட்டு போங்க. என் தலையில எந்த பொறுப்பும் விடக்கூடாது…” என கறாரான குரலில் பேசி விட்டு கிளம்பினாள். 

குழப்பமான மனநிலையில் அலுவலகத்திற்கு வந்தவனுக்கு மேலும் தலைவலி தான் அதிகரித்திருந்தது. 

ஏதோ ஒரு தைரியத்தில் துபாய் செல்வதற்காக வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருந்தான். 

ஆனால் எவ்வாறு அதை செயல்படுத்துவது எனப் புரியவில்லை. 

நட்சத்திர விடுதியில் நடக்கும் கேளிக்கை  விருந்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தான் வாசு. 

அடித்து பிடித்து மாலையில் விரைவாக கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு சோதனையாக வந்தமர்ந்தது அதிகப்படியான வேலைகள்.

மாலை ஐந்தரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது கிளம்புவதற்கு‌ள் மாலை மணி ஏழைத் தாண்டியது. 

ஓரளவிற்கு இதை எதிர்பார்த்திருந்தவன் அனுவிற்கு மாலையிலும் ஆட்டோவை ஏற்பாடு செய்து விட்டான். 

சுந்தரி அக்காவிடம் கொஞ்சம் பார்த்துக் கொள்ள கூறிவிட்டு வந்திருந்தான். 

அன்று கேளிக்கை விருந்தை ஏற்பாடு செய்ய வேண்டியதன் காரணமாக  நேரில் சென்று ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியிருந்தது. 

போகும் வழியில் தான் சந்தியாவின் வேலை செய்யும் அலுவலகம் இருக்கின்றது என்பதால் அவளை பார்த்து விட்டு செல்லலாம் என நினைத்து அலுவலகத்திற்கு முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நுழைந்தான்‌. 

அங்குள்ள வரவேற்பில் தான் எப்போதும் சந்தியா அமர்ந்திருப்பாள் 

ஆனால் சந்தியாவிற்கு பதிலாக வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். 

யோசனையுடன் வந்தவன் அப்பெண்ணிடம் சந்தியாவைப் பார்க்க வேண்டும் என விசாரித்தான். 

“ அவங்க இன்னைக்கு காலையில வந்துட்டு உடம்பு சரியில்லைன்னு உடனே கிளம்பி போயிட்டாங்க சார். அது மட்டுமில்ல மாசம் ஒருமுறை இப்படி தான் உடம்பு முடியலைன்னு லீவ் எடுத்துட்டு போயிடுறாங்க” எனக் கூறினாள். 

“ ஓகே தேங்க்ஸ்…” என்று கூறி விட்டு வெளியே வந்தவன் உடனடியாக சந்தியாவிற்கு அழைத்தான். 

வழக்கம் போல அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை. 

“ம்ம்ச்…எடுக்கவே மாட்டா…” என‌ முணுமுணுத்துக் கொண்டே வாகனத்தை கிளப்பினான். 

நட்சத்திர விடுதியை நேரில் பார்த்து ஆய்வு செய்து விட்டு வீட்டிற்கு திரும்பும் போது இரவு எட்டு மணி ஆகியிருந்தது. 

எப்படியும் சந்தியா வீட்டில் தான்‌ இருப்பாள் என நினைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். 

“அப்பா…” என்று ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அனுவை தூக்கினான். 

“ அப்பா அழுக்கா இருக்கேன் கண்ணம்மா…ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். நீ அம்மா கிட்ட இரு…” என்று கூறி இறக்கி விட்டான். 

“அம்மாவா?… அவங்க இன்னும் வீட்டுக்கு வரலையே?”என்று கூறினாள் 

மகள் கூறியதைக் கேட்டு ஒரு கணம் திகைத்தவன்,’ வீட்டுக்கு வரலன்னா எங்க போயிருப்பா…?’ என யோசித்துக்கொண்டே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர அப்போது தான் வெளி கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் சந்தியா. 

வாசு ஒன்றும் பேசாமல் இரவு 

உணவிற்கு தயார் செய்ய ஆரம்பித்திருந்தான். 

அனு வீட்டுப் பாடத்தை முடித்து விட்டு வாசுவிடம் வந்தாள்.

“ அப்பா ஹோம்வெர்க் எல்லாம் முடிச்சிட்டேன் ப்பா. பசிக்குது‌ பா.” என்றாள். 

“ டென் மினிட்ஸ் டா குட்டி. அப்பா இப்ப ரெடி‌ பண்ணிடுவேன். இந்தா இந்த பிஸ்கட் சாப்பிட்டுட்டு இரு. அப்பா ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்” என்றான். 

அதனை கவனித்துக் கொண்டு உள்ளே வந்த சந்தியா, “ சாப்பிடற நேரத்துல அவளுக்கு எதுக்கு பிஸ்கட் கொடுக்குறீங்க?. அப்பறம் எப்படி சாப்பிடுவா?மணி எட்டரை ஆகப் போகுது. இன்னும் நீங்க டின்னர் ரெடி பண்ணலயா? இது தெரிஞ்சிருந்தா நா வெளியவே சாப்பிட்டுட்டு வந்துருப்பேனே? எனக்கும் ரொம்ப பசிக்குது. நான் எனக்கும்‌ அனுவுக்கும் சிக்கன் நூடில்ஸ் ஆர்டர் போட்டுக்குறேன். நீங்களும் உங்க அம்மாவும் இதை சாப்பிடுங்க.” என்றாள் எஈள்ளலாக். 

“ அய்…! சிக்கன் நூடில்ஸ்…! சிக்கன் நூடில்ஸ்..! அம்மா சீக்கிரம் ஆர்டர்‌ பண்ணுங்க மா…” என ஆர்பரித்தது அந்த சின்ன வாண்டு. 

“உனக்கு வேணும்னா நீ ஆர்டர் போட்டுக்க சந்தியா. அனுவுக்கு இப்ப வேணாம் காலை நேரத்துல வாங்கி கொடுத்துக்கலாம். நைட் நேரத்துல ஹவியா கொடுத்தா அவளுக்கு ஒத்துக்காது. “ என்றான்‌ தோசைக்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னியை தயார் செய்து கொண்டே. 

அதைக் கேட்ட அனுவின் முகமோ சுருங்கிப் போனது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top