பிழை-7

காவல் நிலையத்தில் இருந்து சோர்ந்த நடையுடன் வந்தவன் அனுவை சுந்தரி அக்காவின் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு தங்களுடைய வீட்டில் நுழைந்தான்.

குளித்து விட்டு உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.

அரசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். 

அவரருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தவன் முகத்திலிருந்த சோர்வை மறைத்துக் கொண்டு, “அம்மா சாப்டீங்களா…? மாத்திரை போட்டீங்களா?” என அக்கறையுடன் கேட்டான்.

“சுந்தரி அதெல்லாம் நேரத்துக்கு கொண்டு வந்து கொடுத்துட்டா ப்பா..போன விஷயம் என்னாச்சு? உன்னை போலீஸ்காரங்க எதுவும் அடிக்கலையே..? என்ன விஷயமா உன்னை அழைச்சிட்டு போனாங்க வாசு..?” என அடுக்கடுக்காக கேள்விகள் அவரிடமிருந்து வந்தது.

“ம்மா….பதட்டப்படாதீங்க. ஒண்ணுமில்ல . சின்ன விஷயம் தான். என் மேல எந்த தப்பும் இல்லன்னு விட்டுட்டாங்க. பெருசா எந்த விசாரணையும் பண்ணல.” என்றான்.

அவரிடம் தேவையில்லாமல் ஆருத்ராவைப்‌ பற்றி பேசி குழப்ப விரும்பவில்லை. அது இன்னமும் அவருக்கு குற்றவுணர்வை தரும் என்பதால் அதனை மறைத்துவிட்டான்.

“ சரிம்மா…நான் ஃநைட் டின்னருக்கு ஏதாவது செய்யறேன். நீங்க ஹால்ல வந்து உக்காந்து உங்க பேத்தியோட பேசிட்டு இருங்க. நான் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்.” என்று கூறி மெதுவாக அவரை அழைத்து வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் அமர வைத்தான்.

அரசி அனுவிற்கு நீதிக்கதைகள் கூறிக்கொண்டு இருந்தார்.

வாசுவோ சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு தொட்டுக்கொள்ள குருமா தயாரித்தான்.

மணி ஏழரை ஆகியிருந்தது. 

கதவினை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சந்தியா.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்த அரசியை கண்டு முகத்தை சுளித்தாள்.

“இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்ட போலவே..?” என்றார் அரசி.

“ ஏன் வரவே மாட்டேன்னு நினைச்சிட்டு தான் எங்களோட சோஃபாவுல ஹாயா உக்காந்திருக்கீங்க போலவே…? உள்ளதான் உங்களுக்குன்னு கட்டில் மெத்தைன்னு சொகுசு பண்ணி கொடுத்திருக்குல்ல. அங்க அக்கடான்னு உக்காராம இங்க வந்து உக்காந்திருக்கீங்க. உங்களை பார்த்தா உடம்புக்கு முடியாத மாதிரி தெரியலையே…! நல்ல தானே இருக்கீங்க..? வீட்டு வேலையை கொஞ்சம் செஞ்சு வச்சிருக்க வாய்ல..? இப்படியே முடியல முடியாதுன்னு சொல்லிட்டு இருந்தா உண்மையிலேயே முடியாம தான் போகும். உண்மையை சொன்னா நா பொல்லாதவளாயிடுவேன்.” என சலித்துக் கொண்டவள் , “ ஏய் அனு…! போய் இன்னைக்கு என்ன ஹோம்வொர்க் இருக்கோ அதை பண்ணாம இங்க வந்து வெட்டியா பேசிட்டு இருக்க…? எல்லாம் முடிச்சிட்டியா..?” என்றாள் கூந்தலை அவிழ்த்து கொண்டை போட்டபடியே.

அவளது பேச்சினில் மிகவும் காயப்பட்டு போனவர் மெல்ல எழுந்து சுவற்றைப் பிடித்தபடி தனதறைக்குச் சென்றார்.

“இல்லம்மா…இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு போகல..” என்றாள் அனு.

“ ஏன்..ஏன்‌ போகல..?” என்றாள் புருவத்தை சுருக்கியவாறே…

“அனு போய் புக்ஸ் எல்லாம் எடுத்து வை. அப்பா  வந்து உனக்கு ஊட்டிவிடுறேன்…” என்றபடி சமையலறையிலிருந்து வந்தான் வாசு.

“ நான் அனு கிட்ட பேசிட்டு தானே இருக்கேன். நீங்க என்ன கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம அவளை உள்ள போகச் சொல்றீங்க..?” என்றாள்.

“ சந்தியா…. ப்ளீஸ்..! கொஞ்சமாவது என்னைய புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. என்ன நடந்ததுன்னு தெரியாம இஷ்டத்துக்கு பேசாதே . காலையில சின்ன என்கொய்ரிகாக போலீஸ் என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போனாங்க. இப்ப தான் வந்தேன்.” என அவன் கூறி முடிப்பதற்குள் பொறுமையின்றி, “அய்யயோ..! என்னப்‌ பண்ணித் தொலைச்சீங்க..? ஏதாவது பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டீங்களா..?என் தலையெழுத்து இப்படி ஒரு மனுஷனை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே போச்சு…. இன்னும் என்னென்ன நான் பாக்கணுமோ..?” என தலையிலடித்துக் கொண்டாள்.

“ லூசு மாதிரி பேசாத சந்தியா. நான் போய் பொண்ணு கிட்ட தப்பா நடந்துப்பேனா..? எப்படி உனக்கு இந்த மாதிரியெல்லாம் தோணுது..? எங்க மேடத்தை கொஞ்சம் மரியாதை குறைவா பேசிட்டேன். அவங்க கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்க. அதுக்கு தான் விசாரணை. இனி இப்படி நடக்கக்ஊடாதுன்னு வார்ன் பண்ணி அனுப்பிட்டாங்க.” என்றான் கூமறிய குரலில்.

“ அதானே பாத்தேன். வீட்ல பொண்டாட்டியை தான் கை நீட்டி அடிச்சீங்கன்னா…வேலை கொடுத்த முதலாளியம்மாவையே தரக்குறைவா பேசி விரோதத்தை சம்பாதிச்சு வச்சிருக்கீங்க. இந்த வேலையும் போச்சுன்னா நடு வீதியில தான் நிக்கணும். கொஞ்சம் கூட அறிவில்லை உங்களுக்கு. காசு இல்லாம ஒரு நாள் கூட வாழ்க்கையை தள்ள‌ முடியாது. என் ஒருத்தி சம்பாத்தியம்‌ எனக்கும் எங்க அம்மாவுக்கும் தான் சரியா இருக்குது. உங்க ஒருத்தர் சம்பளத்தை நம்பி தான் வீடு இருக்குது. கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோங்க. அவங்க என்ன சொன்னாலும் மறு‌பேச்சு பேசாம உடனே அதை செஞ்சு பழகுங்க. வீராப்பா பேசி வேலைக்கு ஓலை வச்சிக்காதீங்க…” என்றவள் , “நகருங்க எனக்கு பசிக்குது. என்ன சமைச்சி வைச்சிருக்கீங்க..?” என்றபடி சமையலறைக்குள் சென்று சப்பாத்தியுடன் குருமாவை வைத்துக் கொண்டு அலைப்பேசியை‌ நோண்ட ஆரம்பித்து விட்டாள்.

‘அவள் கேக்குறது என்னை தான்‌ டி…’என மனதினுள் நினைத்தவன் விரக்தியான சிரிப்புடன் தனது தாயிற்கும் அனுவிற்கும் உணவை கொடுத்து முடித்து விட்டு தான் உணவு உண்ண அமரந்தான்.

காவல் நிலையத்தில் ஒரு நாள் இருந்ததே அவனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. 

ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்கவில்லை. 

அப்படியே உணவினை குப்பையில் கொட்டிவிட்டு பாத்திரத்தை கழுவி சமையலறையை சுத்தம் செய்து விட்டு அறைக்குள் நுழைந்தான்.

அனு உறங்கியிருந்தாள்.

சந்தியா அலைப்பேசியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாள். 

கணவனைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் சிறிதும் கவலையில்லாமல் அலைப்பேசியில் மூழ்கியிருந்தாள்.

மீறி ஏதாவது கேட்டால் இரவு நேரம் ‌என்று‌கூட பாராமல் எகிற ஆரம்பித்து விடுவாள்.

ஏற்கனவே அனுவின் மனதில் சந்தியாவை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 

இதில் மேலும் அவளுடன் குழந்தை முன்பு வாதிட்டு அவளை இன்னமும் தாயென்ற அன்புத் தாரசியிலுந்து கீழிரக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டான். 

ஒரு பெருமூச்சுடன் விளக்கை அணைத்து விட்டு அனுவின்‌ மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டான்.

கைகளை நெற்றியில் வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்தான்.

மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்தது. தாயின் வயதிற்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் எடுத்தெறிந்து பேசியது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

ஏன் பேசுகிறாய் என்று கேட்டால், “நான் பேசுனாலே தப்பு கண்டுப்பிடிக்கிறீங்க..? அப்ப‌ இந்த வீட்ல நான் எதுவும் பேசக்கூடாது அப்படித்தானே..? உங்கம்மாவை நான் ஒண்ணும் சொல்லல சாமி…நீங்களாச்சு…உங்க அம்மாவாச்சு…இப்படியே அப்பாவி மாதிரி முகத்தை வச்சிகிட்டு புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல சண்டை மூட்டி விட்டுட்டு அமைதியா போய்‌ ரூம்ல உக்காந்துக்குறது. என்ன ஜென்மமோ…!’ எனப் பேசி ‌மேலும் அவரது மனதை காயப்படுத்துவாள் என்று அமைதியாக இருந்தான். 

காதிருந்தும் ‌செவிடனாக, கண்ணிருந்தும் குருடனாக இருப்பதே அவனது வாழ்க்கையின் சாபமாக அமைந்துவிட்டது.

பலவாறு யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு உறக்கம் வருவேனா என்றது. அனு மெல்ல நகர்ந்து வந்து அவன் மேல் காலைப் போட்டுக்கொண்டாள்.

அவள் புறம் மெதுவாக திரும்பி படுத்தவன் அவளது பிஞ்சுக் கைகளை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான். 

அவனது மனம் சற்று சமன்பட்டது. 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top